சுதந்திரத்துக்கு முந்தைய, கட்டபொம்முவின்
காலத்துக்கும் முந்தைய எட்டயபுரம் சமஸ்தான
அரசுக்குக் கட்டுப்பட்ட உருளைக்குடியைச் சேர்ந்த கண்மாய் படிப்படியாக அதன் மதிப்பை இழந்து, இறுதியில் மக்களாட்சியில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் வறண்டு பராமரிக்கப்படாமல்
முள்ளடர்ந்த காடாக மாறுவதுதான் இந்நாவலின் கதைக்களம். தம் வாழ்நாளில் அற உணர்ச்சியால்
மட்டுமே வழிநடத்தப்பட்ட ஆறேழு நீர்ப்பாய்ச்சிகளைக் கண்ட கண்மாய் அற உணர்ச்சியே அற்ற
மக்களாட்சிப் பிரதிநிதியின் நிர்வாகத்துடைய சுயநலத்தால் ஒரே தலைமுறையில் அழிந்துபோகிறது.
ஆட்சி செய்யும் ஒரு நிர்வாகம் அற உணர்வை கைவிடும்போது, இயற்கை நீர்நிலைகளைக் கைவிட்டுவிடுகிறது.
இந்த நாவல் வழியாக சமஸ்தானத்து
அரசின் காலத்திற்கு முன்பும் பின்பும் மக்களிடையே புழங்கிய நம்பிக்கைகளின் தொகுப்பை
விரிவான சித்திரங்களாக வழங்குகிறார் சோ.தருமன். “ஊருக்கு ஒத்தக் கண்ணு. அரண்மனைக்கு
ஆயிரம் கண்ணு” என்பது அவர்களிடையே வாழும் சொலவடை. எங்கோ வெகுதொலைவில் இருக்கிற அரண்மனையின்
கண்களுக்கு அஞ்சி, அதன் சட்டதிட்டங்களை மதித்து வாழ்கிறார்கள் மக்கள். அந்தக் காலகட்டத்தை
சமூகவியலின் சொற்களில் நிலப்பிரபுத்துவ காலகட்டம் என்று குறிப்பிடலாம்.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கிராமங்கள்
இயங்குவதற்கென குடிமக்களிடையே ஒரு சமூக ஒப்பந்தம் இருந்தது. குடியிருப்புகள், நிலங்கள்,
தோப்புகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள், கோவில்கள் ஆகியவை ஒவ்வொரு கிராமத்திலும்
நிரம்பியிருந்தன. ஒவ்வொரு தொழிலையும் ஒரு குடும்பம் செய்தது. மரவேலை செய்யும் ஆசாரி
உழவர்களின் கருவிகளான ஏர்க்கலப்பைகளையும் கொழுவையும் சரிப்படுத்திக் கொடுத்தார். உலைக்களம்
வைத்திருக்கும் கொல்லாசாரி மண்வெட்டி, கடப்பாறை, கவலை போன்ற மற்ற பொருட்களைச் சரிப்படுத்திக்
கொடுத்தார். இப்படி உழவுத் தொழிலுக்குத் தேவையான உபதொழில்களைச் செய்ய, அந்தந்தத் தொழிலில்
நிபுணத்துவம் பெற்ற பிற தொழிலாளர்களும் கிராமத்தில் நிறைந்திருந்தார்கள். நிலத்தில்
உழுது பயிரிடும் உரிமை ஒரு சில பிரிவினரிடமே இருந்தன. தம் நிலங்களில் அறுவடை செய்யும்
விளைச்சலில் தம்மிடம் பணிபுரியும் எல்லாத் தொழிலாளிகளுக்கும் பங்கு தர கடமைப்பட்டவர்.
தொழிலின் அடையாளமே சாதியாக மாறியபிறகு, எல்லா சாதியினரும் சேர்ந்து வாழ்கிற இடமாக கிராமம்
இருந்தது. அது ஒரு சமூக ஒப்பந்தம். கிராமங்களில் அதுபோல பல ஒப்பந்தங்கள். இந்தச் சமூக
ஒப்பந்தங்களை எவ்வகையிலும் மீறாதபடி நிர்வகிக்கும் பொறுப்பை கிராமத்தில் தகுதி மிக்க
ஒருவர் பார்த்துக்கொள்கிறார். எல்லாக் கிராமங்களையும் ஒன்றிணைத்த நிர்வாகம் அரசனின்
கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. நிலப்பிரபுத்துவம் இயங்கும் விதத்தைச் சித்தரிக்கும்
மேலோட்டமான ஓர் எளிய சித்திரம் இது.
நிலப்பிரபுத்துவத்தில் நன்மைகளும்
இருந்தன, தீமைகளும் இருந்தன. சாதிமுறை இறுகி உறுதி பெற நிலப்பிரபுத்துவம் உதவியது.
சாதிமுறையின் அடித்தட்டில் இருந்தவர்களுக்கு நில உரிமை இல்லை. அவர்கள் நில உரிமையுள்ளவர்களின்
நிலங்களில் பாடுபட்டு ஊதியம் பெற்று பிழைக்கவேண்டியவர்களாக வைக்கப்பட்டிருந்தார்கள்.
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சிரித்தார்கள். பழகினார்கள். ஆயினும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள்
அப்படியே இருந்தன. இவை அனைத்தும் தீமைகள். பொதுச் சொத்துகள் பாதுகாக்கப்பட்டன. உழைப்புக்கான
பங்கு அனைவரும் பெறும் வகையில் நீதியுணர்ச்சியுடன் நிர்வாகம் நடந்துகொண்டது. இவை நன்மைகள்.
நிலப்பிரபுத்துவம் இந்த மண்ணில்
எண்ணற்ற ஆண்டுகள் எப்படி நிலைத்திருந்தது என்பது ஒரு முக்கியமான ஆய்வு. ஒருபுறம் அரசன்.
மறுபுறம் மக்கள். தராசின் இரு தட்டுகள்போல. நெறிமுறைகளே இரு தட்டுகளையும் சமநிலையில்
நிற்கவைத்தபடி இருந்தன. எப்படிப்பட்ட தருணத்திலும் ஒரு தட்டு உயர்ந்து மற்றொரு தட்டு
தாழாமல் அந்த நெறிமுறைகள் விழிப்புணர்வுடன் அவர்களைக் காத்தன. முறைசெய்து காப்பாற்றுவது
அரசருக்குரிய நெறிமுறை. தன்னை வஞ்சித்து தீய வழிகளில் செலுத்தும் பேராசைகளிலிருந்து
விடுபட்டு அறத்தின் நிழலில் நிற்பது மக்களுக்குரிய நெறிமுறை. ஒருநாளும் ஒருவரும் தத்தம்
அறநிலைகளிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து
நழுவமுடியாது. இரு தரப்பினரின் நெஞ்சிலும் இந்தப் பொறுப்புகளை நிலப்பிரபுத்துவம் கல்மேல்
எழுத்தாகப் பதியவைத்துக் காப்பாற்றியது.
நாடு சுதந்திரம் பெற்று மக்களாட்சி
மலர்ந்தபோது, நிலப்பிரபுத்துவம் முடிவுக்கு வந்தது. ஆனால், நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள்
மறையவில்லை. ஒரு நாடு பல மாநிலங்களாகவும் பிறகு
மாவட்டங்களாகவும் வட்டங்களாகவும் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆட்சி நிர்வாகத்தில்
பங்கேற்பதற்குத் தகுதியான உறுப்பினர்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அரசு நிர்வாகத்தில் பல படிநிலைகள் உருவாக்கப்பட்டன. பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள்,
சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலவிதமான பொறுப்புகளும் பதவிகளும்
உருவாக்கப்பட்டன. நிலப்பிரபுத்துவ நிர்வாகத்தைவிட மக்களாட்சி நிர்வாகம் தன்னளவில் பல
மடங்கு ஆற்றல் மிக்க ஒன்றாகும். இப்போது நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தைவிட பல
மடங்கு முன்னேற்றங்களை அது சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். ஆயினும் துரதிருஷ்டவசமாக
அப்படி நிகழவில்லை. அதற்கு என்ன காரணம்? முறைசெய்து காப்பாற்றும் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களில் ஏராளமானோர் நேர்மையாக இல்லை. பேராசையிலிருந்து விடுபட்டு நிற்கவேண்டிய
அறத்துக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களாக இல்லை. முக்கியமாக நீதியுணர்ச்சி என்பதே இல்லை.
இதன் விளைவாக, பொதுச்சொத்துகள்
தகுந்த பராமரிப்பின்றி பாழடைந்துபோக விடப்படுகின்றன. பிறகு மெல்ல மெல்ல சூறையாடப்படுகின்றன.
சட்டத்தை வளைக்கும் சக்தி உள்ளவர்கள் தமக்குச் சாதகமாக வளைத்து வெற்றியடைகிறார்கள்.
வளைக்க வசதியில்லாதவர்கள் அடங்கி ஒடுங்கி விரக்தியும் வெறுப்பும் இணைந்த மனநிலையில்
அமிழ்ந்திருக்கிறார்கள். என்ன குறை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆயினும் அந்தக்
குறைகளுக்குக் காரணமானவர்களே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நிர்வாகத்தைக்
கைப்பற்றுகிறார்கள். மக்களாட்சிக்கு நாம் மாறி பல ஆண்டுகள் ஆனபோதும், நம் மனம் இன்னும்
நிலப்பிரபுத்துவ ஆட்சிக்குரிய மதிப்பீடுகளிலேயே மூழ்கியிருக்கிறது. அவற்றைத் துறந்து
புதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதிலும் பின்பற்றுவதிலும் நாம் தயங்குகிறோம் அல்லது
அஞ்சுகிறோம்.
வரலாற்றில் இருநூறு முன்னூறு
ஆண்டுகளைத் தொகுத்தும் பகுத்தும் எழுதும் படைப்புகளுக்கு
’அன்றுமுதல் இன்றுவரை’ என்னும் வகையில் ஒரு பொதுச்சட்டகம் உருவாகிவிடுகிறது. அந்த
’அன்று’ம் ’இன்று’ம் நிலப்பிரபுத்துவ காலகட்டத்திலேயே இருக்கும்போது, படைப்பாக்கமாக
அதை மாற்றுவதில் எவ்விதமான சிக்கலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒரு கோவில் உருவான கதை,
ஓர் ஏரி வெட்டப்பட்ட கதை, ஓர் ஊர் உருவான கதை, ஒரு துறைமுகமோ அல்லது சந்தையோ உருவான
கதை என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எல்லா உருவாக்கங்களுக்கும் பின்னாலும்
உணர்ச்சிகரமான சம்பவங்கள் இருக்கும். அவற்றைப்பற்றிய பதிவுகள் ஏட்டில் காணப்படலாம்
அல்லது மக்கள் நாவில் புழங்கும் பாடல்களிலும் கதைகளிலும் கூட காணப்படலாம். ஒரு நல்ல
படைப்பாளி அவற்றைத் தொகுத்து, அவற்றின் மையத்தை தன் கற்பனையால் விரித்தெடுத்து, தன்
பார்வைக்குரிய ஒரு கோணத்தை அதற்கு வழங்கி ஒரு புதிய வடிவத்தை வழங்கமுடியும்.
அதே சமயத்தில் இப்போது நம் கண்
முன்னால் உருவாகி நிற்கும் ஒரு புதிய நகரைப்பற்றியோ, ஒரு கோவிலைப்பற்றியோ, ஓர் அணைக்கட்டைப்பற்றியோ
அல்லது ஒரு சாலையைப்பற்றியோ நம்மால் முற்றிலும் எழுதிவிடமுடியாது. அந்த மையத்தைச் சார்ந்து
நாம் திரட்டியெடுக்கும் தகவல்கள் முழுமை பெற்றவை என அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதுதான்
காரணம். நாம் உருவாக்கும் கோணத்தைத் தாண்டி அதற்கு மற்றும் பல கோணங்கள் இருப்பதைத்
தவிர்க்கவே முடியாது. எப்போதும் நம் பாத்திரத்தில் சேகரித்து எடுத்ததுபோக எஞ்சியவை
சிதறியிருக்கும். நாம் சேகரித்து எடுத்ததும் சிதறிப்போனதும் சேர்ந்ததே முழுமை. ’அன்று’
என்பது திரைச்சீலையில் தீட்டப்பட்ட நிலவின் சித்திரம். ‘இன்று’ என்பது உடைந்துபோன கண்ணாடித்
துண்டுகளில் தெரியும் எண்னற்ற நிலாக்களின் சித்திரம். ஒரு துண்டில் இருக்கும் நிலாவை
நாம் அள்ளியெடுக்கும்போது, நம்மால் அள்ளமுடியாத எண்ணற்ற துண்டுநிலாக்கள் அப்படியே இருக்கும்.
சோ.தருமனின் நாவல் ‘சூல்’ ’அன்று’ தொடங்கி ’இன்று’ முடிவடையும்
ஒரு படைப்பு. மானுட அற உணர்வின் காட்சிகளை அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றிலிருந்து
அள்ளியெடுத்துத் தொகுத்து தன் படைப்பில் முன்வைத்திருக்கிறார்
சோ.தருமன்.
அய்யனார் கோவில் வாசலில் கோவில் பூசாரி அரண்மனை
மண்வெட்டியை மடைக்குடும்பனிடம் கொடுப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அந்தச் சடங்கின்
மூலம் ஊர்ப் கண்மாயின் மேற்பார்வைப் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்கிறான். கண்மாய்க் கரையைப்
பாதுகாத்தல், மதகுகளைப் பாதுகாத்தல், ஊரைச் சுற்றியுள்ள அனைத்து நன்செய் நிலங்களுக்கும்
தண்ணீர் சென்று சேரும் வண்ணம் மதகைத் திறந்துவிடுதல், இரவும் பகலும் காவல் காத்தல்,
கோடையில் நீர் வற்றும் காலத்தில் கண்மாயில் நிறைந்திருக்கும் கரம்பை மண்ணை அகற்றுதல்,
மழைக்காலத்தில் நீர் நிரம்பும்வண்ணம் கரைகளை உயர்த்திக் கட்டி பாதுகாத்தல் என எண்ணற்ற
பொறுப்புகள் அவனிடம் வந்து சேர்கின்றன. அனைத்தையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான் அவன்.
கரம்பை மண் அகற்றப்பட்ட கண்மாய்
கருவுறக் காத்திருக்கும் புதுமணப்பெண்ணின் வயிறென திறந்திருக்கிறது. பருவ மழை பொழியத்
தொடங்கியதும் கண்மாய் மெல்ல மெல்ல நிரம்பத் தொடங்குகிறது. மதகுகள் வழியே தண்ணீர் வெளியேறிவிடாமல்
கதவுகளை அடைத்துவைத்து பாதுகாக்கிறான் நீர்ப்பாய்ச்சி. அல்லும் பகலும் பெய்த மழையால்
கண்மாய் நிரம்பித் தளும்புகிறது. அதிகமான மழையால் அழிவு நேர்ந்துவிடக் கூடாது என்று
அஞ்சி தெய்வத்திடம் கோரிக்கை வைத்து பூசை செய்து வழிபட்டு ‘போய் வா மழையே’ என அனுப்பி்வைக்கிறார்கள்.
அவர்கள் காணிக்கையாகச் செலுத்தும் மாவு காற்றில் மிதந்து மேகங்களைக் கலைத்து வேறு திசை
நோக்கிச் செலுத்தி ஊரைக் காப்பாற்றுகிறது. ஊராரின் கோரிக்கைக்கு தெய்வமும் தெய்வத்தின்
நிபந்தனைகளுக்கு ஊராரும் கட்டுப்பட்டு ஒருவருக்கொருவர் காவலாகவும் துணையாகவும் விளங்குகிறார்கள்.
நிலத்தை உழுது விதைக்கவும் நாற்று
நடவும் முனைகிறார்கள் விவசாயிகள். கலப்பையைச் சரிசெய்யும் ஆசாரியின் வீடும் கொழுவைச்
சரிசெய்யும் கொல்லரின் உலைக்களமும் விடிந்ததுமுதல் இரவு கவிவதுவரைக்கும் ஓய்வின்றி
இயங்கியபடியே இருக்கின்றன. விளைந்த விளைச்சலில் உழைத்தவர்களுக்குரிய பங்குகள், களத்தில்
வைத்தே அளிக்கப்படுகின்றன. மடிகளிலும் கூடைகளிலும்
சாக்குகளிலும் தமக்குரிய பங்கைப் பெறுபவர்கள் வழங்குபவர்களை வாழ்த்தியபடியே மகிழ்ச்சியுடன்
வீட்டுக்குச் செல்கிறார்கள். கண்மாய் அனைவரையும் காக்கும் தெய்வமாக இருக்கிறது. கண்மாயைக்
காக்கும் தெய்வமாக ஐயனார் கண்மாய்க்கு அருகிலேயே காவலுக்கு நிற்கிறார்.
கண்மாயைப்பற்றி மக்களிடம் ஏராளமான
நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை தெய்வத்துக்கு
நிகராக மக்களிடம் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின்னாலும் ஓர் ஐதிகம்
மறைந்திருக்கிறது. அதனால் கண்மாயைப்பற்றிச் சொல்ல முனையும் நாவல் கண்மாயைப்பற்றியதும்
கண்மாயைக் காக்கும் தெய்வங்களைப்பற்றியதுமான ஐதிகங்களில் இருந்து தொடங்குகிறது.
ஒரு நாள் மூன்று மடைகளில் இரண்டு
மடைகளில் தண்ணீர் தடையின்றிச் செல்ல, நடுமடை அடைபட்டு விடுகிறது. கதவு திறக்கப்பட்டிருந்தும்
தண்ணீர் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குச் செல்லவில்லை. செய்வதறியாமல் தவிக்கிறான்
மடைக்குடும்பன் கருப்பன். அந்த மடைநீர்க் கால்வாய்க்காக காத்திருக்கும் கூட்டம் அவன்மீது
ஆத்திரத்தில் பழி சுமத்துகிறது. மடைக்குரிய பராமரிப்புப் பொறுப்பில் இருக்கும் அவனே
ஏதோ செய்துவிட்டான் என்று குற்றம் சுமத்துகிறார்கள். பலவிதமான கம்பிகளின் கூட்டியக்கத்தால்
ஆன மதகுக்குள் மூச்சடக்கி நுழைவது ஆபத்தான
செயல் என்றாலும் தன் மீது சொல்லப்பட்ட பழியின் வெப்பம் தாளாமல் கண்மாய்க்குள் இறங்கி
தடை உருவானதற்கான காரணத்தை ஆய்வு செய்கிறான் கருப்பன். கரம்பை மண் எடுத்த சமயத்தில்
யாரோ வீசிவிட்டுப் போன ஆவரங்குழைக்கட்டு தன் தழைபாரத்தால் எப்படியோ மூழ்கி நீருக்குள்ளேயே
ஒதுங்கி ஒதுங்கிச் சென்று மடைவாயை அடைத்திருப்பதை அறிந்து விலக்கியெடுக்க முற்படுகிறான்.
நீரின் அழுத்தம் அவன் முயற்சிக்கு தடையாக இருக்கிறது. ஒரு வழியாக மூச்சை அடக்கி, தழைக்கட்டை
அகற்றியெடுக்கும் கருப்பன் அதற்கும் மேல் மூச்சை அடக்கமுடியாமல் நீர்ப்போக்கின் வாயிலிருந்து
ஒதுங்கிச் சென்று தழைக்கட்டை அணைத்த நிலையில் இறந்துபோகிறான். அடைபட்ட மதகிலிருந்து
நீர் பெருகி வருவதைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், கருப்பனின் மரணம் ஆழ்ந்த
துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் ஆழ்த்திவிடுகிறது. மடை காத்த கருப்பனை வழிபடும்
தெய்வமாக்கி, அவனை ஐயனாருக்கு அருகில் நிற்கவைத்து வணங்கத் தொடங்குகிறார்கள்.
கண்மாயில் தண்ணீர் வற்றும்போதெல்லாம்
ஊர் சாற்றி மீன் பிடிக்க ஊராரை அனுமதிப்பது என்பது பொதுவழக்கம். மூன்று ஆண்டுகளாக தண்ணீர்
வற்றத் தொடங்கும் காலத்திலேயே கோடைமழை பெய்யத் தொடங்கியதால் கண்மாய் நிரம்பிவிட்டது.
மீன் பிடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன் பிடிப்பதற்காக
ஊர் சாற்றப்பட்ட ஒரு கோடை நாளில் உருளைக்குடியைச் சேர்ந்த தூங்கன் மீன் பிடிக்கும்
ஆசையால் கண்மாய்க்குள் இறங்கி வலை வீசினான். தூங்கனைப்போலவே ஏராளமானவர்கள் கண்மாய்க்குள்
இறங்கி நின்றதில் கண்மாயே போர்க்களம்போல காட்சியளித்தது. கைவலைகளும் வீச்சுவலைகளும்
மீன்களை அரித்துத் தட்டியும் மீன்கள் குறையாமல் கிடைத்தது. மீன்பிடிப்பதில் முனைப்பாக
இருந்த தூங்கன் நிரம்பிய வலையை கரையில் தட்டுவதற்காக தண்ணீரிலிருந்து வேகமாக கரையேறி
வந்தான். கண்ணெதிரில் ஒரு பெரிய குரவை மீன்
மிதப்பதைப் பார்த்தான். இடதுகையால் வலையைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு வலதுகையால்
குரவை மீனைத் தாவிப் பிடித்து வைத்துக்கொண்டான்.
நாலெட்டுதான் வைத்திருப்பான். அதேபோல இன்னொரு குரவை மீன் கண்ணில் பட்டது. அவனுக்கு
ஆசையை அடக்கமுடியவில்லை. கையில் வைத்திருந்த மீனின் தலையை வாயால் கவ்விக்கொண்டு அந்த
மீனையும் பிடித்துக்கொண்டான். அவன் கரையேறி வரும் கோலத்தைக் கண்டு அனைவரும் சிரித்தார்கள்.
அவனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பதற்காக வாயைத் திறந்த கணத்தில் மீன் வாய்க்குள்
துள்ளி மூச்சுக்குழலை அடைத்துவிட்டது. அஞ்சிய தூங்கன் வேகவேகமாக எட்டுவைத்து கரையை
அடைந்து கீழே விழுந்து புரண்டான். வலையில் இருந்த மீன்கள் வெளியேறிச் சிதறி துள்ளின.
இரு கண்களும் அகலத் திறந்திருக்க மூச்சுவிட முடியாத தூங்கன் அப்படியே இறந்துபோனான்.
அடுத்த ஆண்டில் காரணமே இல்லாமல்
மீன்கள் செத்து மிதந்தன. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் யாராலும் மீன் பிடிக்க முடியவில்லை.
காரிருளில் பிரகாசிக்கும் நட்சத்திரக்கூட்டங்களைப்போல வெள்ளைவெளேரென்று தண்ணீரே தெரியாமல்
செத்து மிதந்தன மீன்கள். முதல் முறையாக அது தெய்வக்குற்றமாக இருக்கலாம் என நினைத்தார்கள்
மக்கள். அய்யனார் கோவில் பூசாரி சாமியாடி, செத்துப்போன தூங்கன் ஆவியாக கண்மாய்க்குள்
வாழ்ந்து மீன்களையெல்லாம் சாகடிக்கிறான் என்றான். அமைதிப்பட்டு மீன்கள் எல்லாம் உயிர்த்திருக்க
வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் அவனை வணங்கவேண்டும் என்று சொல்வதாக சாமியாடி தெரிவிக்கிறான்.
அதன்படி அவனையும் தெய்வமாக வணங்குகிறார்கள் மக்கள். ஐயனாருக்கும் கருப்பனுக்கும் எதிரில்
அவன் குரவைச்சாமியாக இருந்து கண்மாயில் உயிர்வாழும் மீன்களுக்குக் காவலாக நிற்கிறான்.
நங்கிரியான் மகளான மாதாயியை
அவள் கருவுற்றதற்குக் காரணமாக கருப்பனுக்கு மணம்முடித்து வைக்கும்படி கூட்டப்பட்ட பஞ்சாயத்தில்,
அவள் கருவுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனச் சொல்லி மணம் புரிந்துகொள்ள மறுக்கிறான்
கருப்பன். ‘அப்பன் யாராக இருந்தாலும் தாத்தா நானே என்பதை யாரும் மறுக்கமுடியாது’ என்று
சொல்லும் நங்கிரியான் தன் மகளின் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்கிறான். பிரசவத்துக்கு நாள்
நெருங்கும் சமயத்தில் மாதாயி இருளில் மறைந்திருந்து ஓர் உளியால் கருப்பனைக் கொன்று
பழிதீர்த்துக்கொள்கிறாள். பிறகு அதே உளியால்
தன் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து அவன் முகத்தில் வீசிவிட்டு உயிரையும் விடுகிறாள்.
அவமானத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட அவள் மனம் அமைதியுறும் வண்ணம் அவளைத் தெய்வமாக்கி
வணங்குகின்றனர் மக்கள். கண்மாய்க்கு அருகில் உளிக்கருப்பன் கோவில் எழுகிறது. கருவறையில்
உளியை நட்டு வைத்த கற்சிலை. சுமைதாங்கியாய் நிறைசூலி மாதாயி. தெய்வமான மாதாயி, கன்னிப்பெண்கள்
தாலியில்லாமல் கருத்தரித்துவிடக் கூடாது என்பதற்காக கேட்டவுடன் தாலிவரம் தருகிறாள்.
பிள்ளையில்லாத கொப்புளாயி தன்
தங்கையையே தன் கணவனுக்கு மறுதாரமாக மணம் முடித்துவைத்துவிட்டு, வீட்டு எருமைகளைப் பராமரிப்பதில்
மூழ்கிவிடுகிறாள். எருமைகளை ஒரு தாயாகக் கவனித்துக்கொள்ளும்போது அவள் தாய்மை மதிப்புக்குரியதாகிறது.
மொடாக்களில் மோர் நிறைத்து வழிப்போக்கர்களுக்கு வழங்குவதற்காக அவள் எடுத்துச் செல்லும்போது
அந்தத் தாய்மை மேலும் விரிவு கொள்கிறது. மனிதர்களும்
விலங்குகளும் தங்கி உறங்கி ஓய்வெடுப்பதற்காக கண்மாயை ஒட்டி ஒரு பெரிய நந்தவனத்தை உருவாக்கும்போது
அவள் தெய்வத்துக்கு நிகரானவளாக மாறிவிடுகிறாள். செய்த பாவங்களுக்கு பரிகாரமாக மரக்கன்றுகளை
நடும்படியும் குளம் வெட்டிப் பராமரிக்கும்படியும் சொல்லும் கீழ்நாட்டுக் குறிச்சி ஐயரின்
சொற்களால் கண்மாயை ஒட்டிய நந்தவனம் மேலும் விரிவடைந்தபடி செல்கிறது.
உருளைக்குடி பயனாரெட்டியார்
பட்டாளத்துக்காரர். விடுப்புக்கு வந்திருந்த சமயத்தில் தன் தோட்டத்தில் புகுந்து வாயை
வைத்தது என்பதற்காக ஆட்டுக்குட்டியைச் சுட்டு சாகடிக்கிறார். நியாயம் கேட்பதற்காக பஞ்சாயத்தைக்
கூட்டிய அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். அதே அவையில் அவர்கள் இதுவரை பயன்படுத்திவந்த
குறுக்குப்பாதையை அவர்கள் இனி பயன்படுத்தக்கூடாது என்றும் அந்தப் பாதை தனக்குரிய நிலத்தில்
செல்கிறது என்றும் சொல்லி அவர்களை ஊரைச் சுற்றி அலையவிடுகிறார். சில மாதங்களிலேயே அவர்
பட்டாளத்தில் குண்டடி பட்டு செத்துப்போன செய்தி வருகிறது. ஊர்ப்பழியும் சாபமும் தன்
குடும்பத்தின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவருடைய அப்பா குமாரசாமி ரெட்டியார்
அவர்கள் இருக்குமிடம் தேடி வந்து மன்னிப்பு கேட்கிறார். சுற்றுவழியைத் துறந்து தன்
நிலத்தின் ஊடாகச் செல்லும் குறுக்குவழியையே பயன்படுத்தும்படி கேட்கிறார். இரக்கத்தைத்
தூண்டும் அவருடைய சொற்களுக்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள்.
கண்மாயைச் சுற்றி இப்படி ஏராளமான
நம்பிக்கைகள். எண்ணற்ற தெய்வங்கள். நட்பார்ந்த உறவுகள்.
ஒருமுறை கோட்டையை இழந்து தலைமறைவாக
சுற்றித் திரிந்த கட்டபொம்மு கோல்வார்ப்பட்டிக்குச்
செல்லும் வழியில் உருளைக்குடி கண்மாயை ஒட்டிய காட்டுக்குள் மறைந்து தங்கியிருக்கிறார்.
பனையேறி எலியன் தன் பார்வையில் பட்ட குதிரையைத் தேடி வந்து, அங்கே கிணற்றுக்குள் கட்டபொம்மு
ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறான். இரவுப்பயணத்தில்
குதிரையின் குளம்பில் சிக்கிக்கொண்ட சோளத்தட்டையை அகற்றவும் புதிதாக லாடம் அடிக்கவும்
ஆளை அழைத்துவரும்படி கேட்டுக்கொள்கிறான் கட்டபொம்மு. ஊருக்குள் சென்று பிச்சை ஆசாரியை அழைத்து வந்து தேவையான உதவியைச் செய்து கட்டபொம்மு தப்பித்துச்
செல்ல உதவி செய்கிறான். கட்டபொம்மு போன பின்னர், தாம் செய்த உதவி ஊருக்கும் அரண்மனைக்கும்
தெரிந்து துன்பத்துக்கு ஆளாகிவிடுமோ என ஒவ்வொரு நொடியும் இருவரும் செத்துச்செத்து பிழைக்கிறார்கள்.
அவர்களுடைய உதவியால் தப்பித்துச் சென்றாலும் ஆங்கிலேயர்களின் வலையில் கட்டபொம்மு சிக்கிவிடுகிறான்.
பிறகு கயத்தாறில் அவன் தூக்கிலிடப்படுகிறான். அவனையடுத்து ஊமைத்துரையும் கண்டுபிடிக்கப்பட்டு
கொல்லப்படுகிறான்.
எலியனுக்கும் ஆசாரிக்கும் கட்டபொம்மு
கொடுத்தனுப்பிய அன்பளிப்புகள் கோல்வார்பட்டியைச் சேர்ந்த ஒருவனால் கொண்டுவந்து தரப்படுகின்றன.
இருபத்தைந்துவிதமான தங்கநகைகளைக் கொண்ட அந்தப்
புதையலை அவர்கள் வீட்டுக்குள்ளேயே புதைத்துவைத்து காவல் காக்கிறார்கள். ஒவ்வொரு கணமும்
ராஜதுரோகக் குற்றத்துக்கான தண்டனை அவர்களை நடுங்கவைக்கிறது. தமக்கென இல்லாவிட்டாலும்
எதிர்காலத்தில் தம் வாரிசுகள் சுதந்திரமான தேசத்தில் எடுத்து அணிந்துகொள்வார்கள் என
நினைத்து புதையலைக் காக்கிறார்கள். புதையலைத் தேடியெடுக்க முனையும் நாலாவது ஐந்தாவது
தலைமுறையின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன.
கிழக்கிந்தியக் கம்பெனியின்
நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டதாக சிறுகச்சிறுக எல்லா அரண்மனைகளும் மாறிவிடுகின்றன.
ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அங்கங்கே நடைபெறுகின்றன.
அனைத்தும் முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றன. அல்லது வேறு வகைகளில் அடக்கப்படுகின்றன.
வெள்ளைச்சாமித் தேவர் என்னும் பாஸ்கரதாஸ் பாடல்கள்
வழியாக தேசபக்தியைப் பரப்புகிறார். வேலு முதலியாரும் வெயிலுகந்த முதலியாரும் கூட்டம்
போட்டு மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டுகிறார்கள். அதனாலேயே சிறைக்குச் செல்கிறார்கள்.
பருத்தி வத்தல், ஆமணக்கு முத்து,
நவதானியங்கள் வாங்கிக்கொண்டு பண்டங்களை விற்கும் வெயிலாம் பிள்ளை வழியாக உருளைக்குடிக்குள்
வணிகம் ஊடுருவுகிறது. அவரைத் தொடர்ந்து நாடார்கள் வருகிறார்கள். அவர்கள் முட்டைகளைப்
பெற்றுக்கொண்டு எல்லோருக்கும் நாணயங்கள் தருகிறார். அந்த நாணயங்களைக் கொடுத்து ஊருக்குள்
வந்திருக்கும் கடையில் நாக்கில் வைத்தால் கரையும் மிட்டாய்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்
பிள்ளைகள். ஊருக்குள் பள்ளிக்கூடமும் வேதக்கோவிலும் ஒரே சமயத்தில் வருகின்றன. இச்சியானும்
அவன் குடும்பமும் உடனே மதம் மாறி, கோவிலில் ஊழியம் பார்த்து ஊதியம் பெறுகிறார்கள்.
சுதந்திரம் கிடைத்த பிறகு ஆட்சி
நிர்வாகம் கைமாறுகிறது. கிராம நிர்வாகத்துக்கு பஞ்சாயத்துகள் உருவாகின்றன. ஒற்றையடிப்பாதைக்கும்
வண்டிப்பாதைக்கும் பதிலாக ஊர்களை இணைக்கும் விதமாக கார்கல் செல்லும் சாலைகள் போடப்படுகின்றன.
அவற்றுக்காக சாலையோரத்து மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றை வெட்டி ஒழுங்குபடுத்துவதற்காக
ஒப்பந்தக்காரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். சுச்சி நாயக்கரிடம் எடுபிடியாக இருந்த சின்னாத்துரை
பஞ்சாயத்துத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். நிழலுக்காக நின்றிருந்த
மரங்கள் வெட்டப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது. அவன் கையில் பணமும் அதிகாரமும்
புழங்கப்புழங்க அவன் பழக்கவழக்கமும் மாறிப் போய்விடுகிறது. ஊருக்கு வெளியே எல்லோருக்கும்
தெரியும் வகையில் ஒரு கரகாட்டக்காரியுடன் கள்ளத்தொடர்பு வைக்கத் தொடங்குகிறான். மதுவிருந்துகளில்
கலந்துகொண்டு வெளியூர்களில் தங்குகிறான். கண்மாய் ஓரமாக விரிந்திருந்த புறம்போக்கு
நிலங்களை வளைத்து தனது பெயரில் கிரயம் செய்துகொண்டு, அப்பகுதிக்கும் மதகுநீரைப் பாய்ச்ச
வேண்டுமென நீர்பாய்ச்சியிடம் ஆணையிடுகிறான். புறம்போக்கு நிலத்துக்கு கண்மாய் நீரைப்
பெறும் உரிமையில்லை என்று எடுத்துச் சொல்லி அந்த ஆணையை மறுக்கிறார் நீர்ப்பாய்ச்சி.
அவனுடைய பதவிப்பொறுப்பையே பறிக்கிறான் அவன். மறுநாள் காலையில் குளித்துக் கரையேறிய
நீர்ப்பாய்ச்சி பல தலைமுறைகளுக்கு முன்னால் தம் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட மண்வெட்டியை ஐயனார் சிலையின் முன்னிலையில் வைத்துவிட்டு
வெளியேறிவிடுகிறான்.
கண்மாயை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட
பஞ்சாயத்தால் அதை சரியான முறையில் நிர்வகிக்கத் தெரியவில்லை. தனக்கு வேண்டிய கரகாட்டக்காரியின்
தம்பிக்கு காவல் காக்கும் வேலையை பெற்றுத் தருகிறான் சின்னாத்துரை. புதிய காவல்காரனுக்கு
கண்மாயைப்பற்றிய மரபான அறமுறைகள் எதுவும் தெரியவில்லை. . ஒரு முழு ஆண்டுக்கு வரவேண்டிய
தண்ணீர் ஒன்பது மாதங்களிலேயே வடிந்து வற்றிவிடுகிறது. கோடை பிறந்தும் கூட, கரம்பை மண்ணை
அள்ளாததால் கண்மாய்க்குள் மேடு விழுகிறது. மேட்டுப்பாங்கான இடமாக மாறியதும் மழைபெய்தும்
பயனற்ற வகையில் நீர் நிற்காமல் ஓடிவிடுகிறது. எல்லா ஓடைகளையும் கருவேலமரங்கள் அடைத்துக்கொள்கின்றன.
கண்மாய் வற்றி பொட்டல்காடாக வெடிப்பேறிக் கிடக்கிறது. கரிமூட்டத்துக்கு கருவேலமரங்களை
வெட்டும் கூலிக்காரர்களாக வேலை செய்கிறார்கள் விவசாயிகள்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு கோடையிலும்
கரம்பைமண்ணை அகற்றிச் சீர்செய்யப்பட்டு கருவுறுவதற்குக் காத்திருக்கும் புதுமணப்பெண்ணாகக்
காட்சியளித்த கண்மாய் பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத மலட்டுப்பெண்ணாகக் காட்சியளிக்கிறது.
சின்னாத்துரையின் மறைவைத் தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மூக்கனின் நிர்வாகம்
சின்னாத்துரையின் நிர்வாகத்தைவிடவும் தாழ்ந்த
தரத்துடன் செயல்படுகிறது. கண்மாயை மறந்து கரகாட்டக்காரிக்கும் சின்னாத்துரைக்கும் ஊர்
எல்லையில் சிலைவைத்தும் வாசகங்கள் எழுதியும் களியாட்டம் போடுகிறது.
எங்கோ
ஓர் ஐதிகத்திலிருந்து ஆரம்பிப்பதைப்போல நாவலை ஆரம்பிக்கிறார் சோ.தருமன். எவ்விதமான
விறுவிறுப்புக்கும் இடமின்றி, ஆர்வமூட்டுவதற்காக இணைக்கப்படும் செயற்கையான
திருப்பங்களுக்கும் இடமின்றி மிகவும் பொறுமையாக கதையைச் சொல்கிறார். எங்கோ ஒரு
பகுதியில் மக்கள் மனத்தில் காலம்காலமாக ஊறிக் கிடந்த நம்பிக்கையை அவர்
முன்வைக்கும்போது, அவற்றின்மீது நமக்கும் ஒருவித ஈர்ப்பும் நம்பிக்கையும்
பிறந்துவிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இவ்விதமாக நம் நம்பிக்கையைப் பெற்றபடி,
கதை மிகவும் நிதானமாகவே முன்னேறுகிறது. இந்த சாதாரணத்தன்மையையே சோ.தருமன் தன்
பலமாக மாற்றிக்கொள்கிறார்.
ஒரு கண்மாயின் வரலாறுதான் இந்த நாவல். வாசித்து முடித்த
பிறகு, அன்று கடல்போல காட்சியளித்த கண்மாய் இன்று வறண்ட பூமியாய் பாளம்பாளமாக வெடித்துக்
காணப்படும் நிலைமை ஏன் வந்தது என்பது ஒரு கேள்வியாக மனத்தில் எஞ்சி நிற்கிறது. அந்தக்
கேள்வி அழுத்தம் திருத்தமாக எழும் வண்ணம் மிகவும் நம்பகத்தன்மையோடு நாவலை எழுதியிருக்கிறார்
சோ.தருமன். அது மிகப்பெரிய வெற்றி. கண்மாய் என்பதை வெறும் நீர்நிலை என்று பார்க்காமல்
மானுட வாழ்க்கையின் நெறிகளை தண்ணீரில் உறைந்து செயல்படுத்தும் தெய்வங்களின் உறைவிடம்
என்றும் மானுட நம்பிக்கைகளின் களம் என்றும் பார்த்த காலம் இன்றில்லை. அது கடந்து போய்விட்டது.
இது சுதந்திரமடைந்த நாடு. நவீன யுகம். நிரூபணங்களைக் கேட்கும் யுகம். கண்பார்வையில்
படும் மதிப்பைக் கடந்து ஒரு பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதன் நோக்கில் ஒரு கண்மாய்
என்பது மழைநீரைத் தேக்கிவைக்க உருவான ஒரு ஏற்பாடு மட்டுமே. அதற்கு மேல் அதற்கு பயன்மதிப்பு
என எதுவும் இல்லை. பழைய யுகத்தில் அதற்கு இருந்த உயர்வும் மதிப்பும் இந்த யுகத்தில்
சீர்குலைந்துவிட்டன.
இது சோ.தருமனின் ஆதங்கம். அந்த
ஆதங்கத்தையே குப்பாண்டிச்சாமியின் சாபங்களிலும்
நீர்ப்பாய்ச்சியின் மனக்குமுறல்களிலும் நாம் காண்கிறோம். இருவருடைய குரல்கள் வழியாகவும்
பேசுவது அவரே. குப்பாண்டிச்சாமி தன் மரணத்துக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவேண்டிய
இடமென ஒரு சமாதி கட்டிக்கொண்டு, மரணத்துக்காகக் காத்திருக்கும் பற்றற்ற ஒரு ஆள். நீர்ப்பாய்ச்சியோ
பொறுப்புகளைச் சுமந்துகொண்டு அல்லும்பகலும் கண்மாயைப் பாதுகாப்பவன். தனக்கென ஒரு துண்டு
நிலமில்லாதவன். இவ்விருவரும்தான் கண்மாயின் கோலம் கண்டு குமுறுகிறார்கள். கண்மாயின்
நீரைப் பயன்படுத்தி காலமெல்லாம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நிலஉடமையாளர்களும் சம்சாரிகளும்
மெளனமாக இருக்கிறார்கள். அந்த மெளனம் விசித்திரமாக இருக்கிறது. ஒரே ஒரு முறை கோபத்தோடு
பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கேள்விகேட்க ஒன்று சேர்ந்து போனதோடு சரி. அதற்குப் பிறகு
அவர்கள் அந்த விவகாரத்தில் தலையிடவே இல்லை.
ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஐதிகங்களை விவரித்தெழுதும்போது
தருமனின் எழுத்தில் தென்படும் சமநிலை சமகால வரலாற்றை எழுதத் தொடங்கும்போது சற்றே நிலைகுலைந்துவிடுகிறது.
இது நாவலின் ஒரு பகுதியைப் பலவீனமாக்கிவிடுகிறது.
நாவலில் முக்கியமானதொரு நிகழ்ச்சியாக கட்டபொம்முவின்
அன்பளிப்பாகக் கிடைத்த தங்கநகைகளை எலியனும் பிச்சையும் தம் வீட்டுக்குள்ளேயே புதைத்துவிட்டு,
அதை எடுப்பதற்காக காலமெல்லாம் காத்திருக்கும் நிகழ்ச்சியைச் சொல்லவேண்டும். அவர்களால்
அந்தத் தங்க ஆபரணங்களை வெளிப்படையாக எடுத்து அணிந்துகொள்ளவும் முடியவில்லை. விற்று
பணமாக்கவும் முடியவில்லை. மண்ணுக்கடியிலேயே அவை புதையலாகக் கிடக்கின்றன. பல தலைமுறைகளுக்குப்
பிறகு அதை எடுப்பதற்காக வீட்டையே தோண்டியெடுத்து பள்ளமாக்கியும் கூட அவற்றை அவர்களால்
கண்டெடுக்க முடியவில்லை. இந்த நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரமும் கூட அவர்களைப் பொறுத்தவரையில்
கிடைத்தும் கிட்டாத புதையலைப் போன்றதென்றே சொல்லவேண்டும்.
சுதந்திரம் பெற்றதும் மழைவளத்துக்காக
காடுகளை உருவாக்கவேண்டும் என்று நம்பிய அரசு ஆணைக்கிணங்க கிராம நிர்வாக அலுவலகம் எல்லா
விவசாயிகளையும் வரவழைத்து ஆளுக்கு பத்து சீமைக்கருவேல விதைகளையும் ஜிலேபி கெண்டைக்
குஞ்சுகளையும் கொடுத்தனுப்பும் காட்சியும் முக்கியமானதொரு காட்சி. அப்போது அவர்களுக்கே
அவற்றின் தீமைகள் தெரியவில்லை. ஈரப்பசையையே உணவாகக் கொண்டு அவ்விதை உயிர்கொண்டு வளர்கிறது.
ஒரு பறவை கூட அண்டாத மரமாக வளர்ந்து ஓங்கி நிற்கிறது. இது ஒரு பக்கம். மறுபக்கத்தில்
நீர்நிலைகளில் உள்ள அழுக்கை மட்டுமின்றி, பலவிதமான சின்னச்சின்ன மீன்களையும் உணவாக உட்கொண்டு ஜிலேபி கெண்டை மட்டுமே கொழுத்துத்
திரியத் தொடங்குகின்றன. மக்களாட்சியில் உருவான பல நிர்வாக அமைப்புகள் ஜிலேபி கெண்டைகளாகவும்
கருவேல மரங்களாகவும் மாறி தாம் நிற்கிற மண்ணையே சுரண்டுபவையாக மாறுவது என்பது ஒரு மாபெரும்
வரலாற்று அவலம்.
சோ.தருமன் இத்தகையதொரு அவலத்தையே
இந்த நாவலில் சுட்டிக் காட்ட விரும்பியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் அதை அத்தகையதொரு
எளிய வாய்ப்பாட்டுக் கணக்காக கட்டியெழுப்ப முடியாது என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக,
மக்களாட்சியில் ஒரு நிர்வாகம் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்னும் கேள்வியிலிருந்து
நாம் தொடங்கலாம். மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
நேரடி உறுப்பினர்கள் பலரைக் கொண்டதுதான் நிர்வாகம். சின்னாத்துரையை உருளைக்குடியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தவர்கள் யார்? அந்த ஊர் மக்களே. எவ்விதமான போட்டிக்கும்
இடமில்லாமல் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் உடல்வளைத்து வேலை செய்யும் உழைப்பாளியல்ல.
ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துபவன். தந்திரங்கள் நிறைந்தவன். தலைமைக்கு பத்து குலைகளை கொடையாக
அளித்துவிட்டு தனக்கு மூன்று குலைகளை ஒதுக்கிக்கொள்பவன். சாலை போடுவது என்னும் பெயரில்
காலம்காலமாக தம் ஊருக்கு நிழலளித்து வந்த மரங்களை இரக்கமே இல்லாமல் வெட்டி வீழ்த்தத்
துணையிருப்பவன். அதைத் தட்டிக் கேட்பவர்களை முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள் என
வசைபாடத் தயங்காதவன். எல்லாம் தெரிந்திருந்தும் அவனை ஏன் அந்த ஊர் தேர்ந்தெடுத்தது?
அவனுக்குப் போட்டியாக கண்மாயை கண்போலக் காப்பாற்றுகிற, ஊர்ச் செல்வத்தை உயிர்போலக்
காப்பாற்றுகிற ஒருவர் கூடவா அந்த ஊரில் இல்லாமல் போனார்கள்? தனது மரணத்துக்குப் பிறகு
தன்னை அடக்கம் செய்வதற்கான இடத்தை தானே தேர்ந்தெடுத்து கல்லறையைக் கட்டிவிட்டுக் காத்திருக்கும்
குப்பாண்டிச்சாமியை “நீ எப்ப சாவப் போற?” என்று நித்தமும் சீண்டிப் பார்க்கவும் அவர்
வீட்டைச் சூழ்ந்து நின்றுகொண்டு கேலி பேசவும் தயங்காத மக்கள் சின்னாத்துரையையோ மூக்காண்டியையோ
வழிமறித்து, கேள்வி கேட்டு கண்மாயைச் செப்பனிட்டுக்கொள்ள முனையாமல் மெளனமாக இருந்தது
ஏன்? அந்த மெளனத்துக்கு என்ன காரணம்? ஏதோ ஒரு விதத்தில் உருளைக்குடிக்காரர்களும் அவர்கள்
நடவடிக்கைகளுடன் உள்ளூர உடன்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல
முடியும்?.
சின்னாத்துரை இழிவை வெளிப்படையாகச்
செய்யத் தயங்காதவனாக இருக்கிறான். மற்றவர்கள் அந்த இழிவை ஆழ்மனத்தில் விழைகிறவர்களாக
இருக்கிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. அதற்குக் காரனம் எதிர்ப்பே இல்லாத அவர்களுடைய
ஆழ்ந்த மெளனம். முதல் முறை அவன் தேர்ந்தெடுக்கப்பட்டதை வேண்டுமானால் விதிவசம் என்றோ
அல்லது உருளைக்குடிக்காரர்கள் தெரியாமல் செய்த பிழையென்றோ சொல்லிவிடலாம். இரண்டாம்
முறை நடைபெற்ற தேர்தலிலும் அவனையே போட்டியின்றித் தேர்வு செய்வதற்கு என்ன காரணம்? அவனுடைய
மரணத்துக்குப் பிறகு அவனுடைய நிழலாக அலைந்ததைத் தவிர வேறு எவ்விதமான தகுதியும் இல்லாத
மூக்கனையும் போட்டியின்றி ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? கண்மாய் மீதும் கண்மாய் மீதிருந்த
தொன்மங்கள் மீதும் நம்பிக்கைகள் மீதும் அவர்களும் பற்றில்லாதவர்களாக இருந்தார்கள் என்பதைத்
தவிர வேறென்ன காரணம் சொல்லமுடியும்? ஆனால் அந்த மெளனத்துக்குள் சோ.தருமன் ஊடுருவிச்
செல்லவில்லை. அதனாலேயே அவர் கட்டியெழுப்ப நினைக்கும் அவலச்சித்திரம் சற்றே குறைபட்டு
நிற்கிறது. மேலும், ஒளிமிக்க பழைய யுகத்திலிருந்து இருண்ட நிகழ்காலத்தை நோக்கிய பாய்ச்சலாகவும்
அச்சித்திரம் வாழ்க்கையை கட்டமைத்துக் காட்டுகிறது.
இதிலிருந்து மீட்சியே இல்லையா
என்றொரு பெருமூச்சு எழுவது இயல்புதான். மீட்சி இருக்கிறது என்பதே நாவல் விடுக்கும்
செய்தி. அது நாவலுக்குள்ளேயே ஊடுபாவாக இருக்கிறது.
நாவலுக்குள் கொப்புளாயியும் கீழ்நாட்டுக்குறிச்சி ஐயரும் வழங்கிய ஆலோசனைகளையே நமக்கு
வழங்கப்பட்ட ஒரு மறைமுகமான ஆலோசனைகளாக எடுத்துக்கொண்டு,
ஊரெங்கும் மரம் வளர்த்தும் குளம்வெட்டியும் தாகம் தணித்தும் வாழும் விழைவினால் நம்
மனத்தைப் பண்படுத்த வேண்டும். அக்கணத்தில்
கண்மாயோ அல்லது கண்மாயைப் போன்ற வேறொன்றோ சூல் பெறும்.
பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய ’கிணறு’ என்னும் சிறுகதையை இவ்விடத்தில் நினைத்துக்கொள்ளத்
தோன்றுகிறது. பதினைந்து இருபது வீடுகளை ஒரே வளாகத்தில் கொண்ட ஒரு குடியிருப்பில் ஒரு
கிணறு இருக்கிறது. மழைக்காலத்தில் தளும்பி நிற்கக்கூடிய கிணறு அது. அப்படியே வாளியை
விட்டு முகர்ந்துவிடலாம். குடியிருப்பில் உள்ள எல்லாக் குடும்பங்களுக்கும் அதுவே பெரிய நீராதாரம். காலம் மெல்ல மாறுகிறது.
வீடுகளில் மின்சாரம் ஒரு முக்கிய அங்கமாக மாறியதும்,
வீடுகளின் மேல்தளத்தில் ஒரு நீர்த்தேக்கத் தொட்டியைக் கட்டுவதும், தேக்கத்தையும் கிணற்றையும்
குழாய்கள் வழியாக இணைத்து, மோட்டார் மூலம் கிணற்றுத் தண்ணீரை தொட்டியில் நிரப்பி, மறுபக்கத்தில்
தொட்டியிலிருந்து பிரியும் வேறு குழாய்கள் வழியாக ஒவ்வொரு வீட்டுக்கும் நேரிடையாக தண்ணீர்
கிடைக்கும்படி செய்வதும் ஒரு தேவையாக மாறிவிடுகிறது. இது வேலையையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
குடியிருப்புவாசிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு
மோட்டார் பொருத்தப்படுகிறது. காலம் மேலும் முன்னகர்ந்து செல்கிறது. பல வீடுகள் இருக்கும்
சூழலில் மோட்டார் போட்டு நீரேற்றும் பொறுப்பை ஏன் ஒருவனே வகிக்கவேண்டும் என்னும் அலுப்பும்
பங்குப்பணத்தை வசூல் செய்வதில் நேரும் கசப்பும் எரிச்சலைத் தருகிறது. அந்தக் குடியிருப்பே
அமைதியற்ற சூழலில் கொந்தளிக்கிறது. அப்போது தற்செயலாக ஊர்நெடுக தண்ணீருக்காக குழாய்
புதைக்கிறார்கள். அதிலிருந்து ஓர் இணைப்பைப் பெற்று ஒவ்வொருவரும் நேரடியாக வீடுவரைக்கும்
கிளைக்குழாய்களைப் பதித்துக்கொள்கிறார்கள். வீட்டுக்கு வீடு இணைப்பு. வீட்டுக்குள்ளேயே
தண்ணீர். ஒருநாள் யாருக்குமே கிணறும் நீர்த்தொட்டியும் தேவையற்ற பொருட்களாக மாறிவிடுகின்றன.
நடமாட்டம் இல்லாத கிணற்றங்கரை புதர் மண்டியதாகவும் தொட்டியின் நிழல் சீட்டாட்டத்துக்கான
இடமாகவும் மாறிவிடுகிறது. முணுமுணுப்புகள் எழுகின்றன. கிணறு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு
மூடப்படுகிறது. பாதுகாக்க வேண்டிய கிணற்றை இடித்து மூடுவதற்கு மனிதர்களின் கண்களையும்
மனத்தையும் தன்னலம் மூடி மறைத்ததல்லவா அடிப்படைக் காரணம்? அதே அடிப்படைக்காரணம்தான்
உருளைக்குடி கண்மாயையும் வற்றவைத்தது. தன்னலப்பேய்களாக மனிதர்கள் ஒவ்வொருவரும் மாறிக்
கொண்டிருக்கும் அவலத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேகமே சூல் எழுதுவதற்கான உத்வேகத்தை சோ.தருமனுக்கு வழங்கியிருக்கலாம்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த சுந்தர
ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலை
ஒருகணம் நினைத்துப் பார்க்கலாம். அதுவும் மனிதமனத்தில் உறையும் தன்னலத்தால் விளையும்
அழிவின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டிய நாவல். நகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டத்தில்
கலந்துகொள்ளும் கடலைத்தாத்தா அதன் இறுக்கத்தைத் தாங்கமுடியாமலும் பேரக்குழந்தைகளின்
பசிக்கதறலைக் கேட்க முடியாமலும் பழையபடி கடலை மிட்டாய் பெட்டியைச் சுமந்துகொண்டு பள்ளிக்கூட
வாசலுக்கு வியாபாரம் செய்ய வந்துவிடுகிறார். மொத்த அமைப்பிலிருந்தும் வெளியேறி வருபவர்
அவர் ஒருவரே. சூல் நாவலிலும் சின்னாத்துரையின்
நிர்வாகத்தையும் தன்னலப்போக்கையும் சகித்துக்கொள்ள முடியாமல் அரண்மனை மண்வெட்டியை ஐயனார்
கோவில் வாசலில் வைத்துவிட்டு அமைப்பிலிருந்து வெளியேறி வருகிறார் நீர்ப்பாய்ச்சி. சுந்தர
ராமசாமியின் நாவலில் கடலைத்தாத்தா. சோ.தருமனின் நாவலில் நீர்ப்பாய்ச்சி. புளியமரமாக
இருந்தாலும் சரி, கண்மாயாக இருந்தாலும் சரி எல்லாமே இலக்கியப்படைப்பில் ஒருவகையில்
இந்த நாட்டையும் நாட்டின் பண்பையும் படிமமாகப் புனைந்து சொல்ல உதவிய கருவிகளே. ஒரு
புளிய மரத்தின் கதை வெளிவந்து ஐம்பதாண்டுகள் கழித்து சூல் நாவல் வெளிவந்திருக்கிறது.
தன்னலத்தைத் துறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒன்றைத் தாண்டவில்லை என்பது சற்றே அவநம்பிக்கையை
அளிக்கக்கூடும். அதற்கு மாறாக தன்னலத்துக்கு மாறான ஒரு தரப்பு ஒரே ஒரு எண்ணிக்கை என்ற
அளவிலேனும் என்றென்றும் இந்த மண்ணில் ஒலித்தபடியிருக்கும் என அதை மாற்றி நினைத்துப்
பார்த்தால் நம் மனம் விம்முவதை நம்மால் உணரமுடியும். இந்த மண்ணில் நன்மைக்கு அழிவே
இல்லை என்னும் குரலுக்கான விதையும் உரமுமாக அந்த ஒற்றை எண்ணிக்கையை நினைத்துக்கொள்ளலாம்.
மக்களாட்சியில் சில நல்ல மாற்றங்கள் அப்படித்தான் மிகமிக நிதானமாகவே உருவாகிவரும்.
(2016 செப்டம்பர் மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுமையான வடிவம்)