காலை நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றிருக்கும்போது தினந்தோறும் ஒரு பெரியவரைப் பார்ப்பேன். இரண்டடிக்கு மூன்றடி அளவுள்ள பைகளை கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மிகமிக மெதுவாக நடந்து வருவார். இரண்டு பைகளிலும் எலுமிச்சை, தயிர்ச்சோறுப் பொட்டலங்கள். சுமை தாங்கமுடியாமல் இருபது முப்பது அடிகளுக்கு ஒருமுறை பைகளைத் தரையில் வைத்துவிட்டு சிறிதுநேரம் நிற்பார். இறுகிவிடும் கைவிரல்களைத் தளர்த்தி ஊதிவிட்டுக்கொள்வார். வலது கையால் இடதுதோளையும் இடதுகையால் வலதுதோளையும் மாறிமாறிப் பிடித்துக்கொள்வார். இரண்டு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் அழுத்தியபடி கழுத்தை அண்ணாந்து மடக்குவார். ஆசுவாசமடைந்த பிறகு மீண்டும் பைகளை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குவார். இரண்டுமூன்று கட்ட ஓய்வுகளுக்குப் பிறகு நிறுத்தத்துக்கு வந்து சேர்வார். நெற்றியில் முத்துமுத்தாகத் தேங்கி நிற்கும் வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தபிறகு வலிக்கும் கைகளை உதறித் தளர்த்திக்கொள்வார். இப்படி கைகளை உதறியும் கால்களை நீவிவிட்டுக்கொண்டும் கழுத்தை நிமிர்த்தித் திருப்பியும் சுமைவலியிலிருந்து சற்றே நிவாரணமடைந்து மீண்டும் சுமந்துசெல்ல முயற்சி செய்யும் முதியவர்களும் பெண்களும் சிறுவர்களும் நகரத்தில் பல இடங்களில் பார்வையில் தினந்தோறும் பட்டபடி இருக்கிறார்கள். சுமைவலி என்பது ஒருவகையில் வாழும் வலி. அது அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. வாழும் வலியால் தவிப்பவர்கள் காலம்காலமாக நகரின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெரிய வெற்றியையும் பற்றிய கனவுகள் அவர்கள் நெஞ்சில் இல்லை. நிம்மதியாக ஒருநாள் பொழுது கழிந்தால் போதும் என்று இருப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு கணமும் வலியோடு வாழ்ந்து மறைபவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டக்கூடும். நகரத்துக்கோ அல்லது உலகத்துக்கோ, ஒருபோதும் அவர்கள் முகங்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் அவர்களுடைய தடங்கள் எழுத்துலகில் காணக்கிடைக்கின்றன. முக்கியமாக வண்ணநிலவனின் கதைகளில்.
அறுபதுகளின் இறுதிப்பகுதியில் விலைவாசி ஏற்றத்தாலும் தொடர்ச்சியாக மழைபொய்த்fதுப் போனதாலும் தமிழ்ச்சமூகம் உள்ளொடுங்கித் தவித்தது. விவசாயம் செய்ய முடியாதவர்கள் வந்த விலைக்கு நிலத்தை விற்று பிழைப்பதற்கு வழிதேடி பிறந்த ஊரைவிட்டு வெளியேறினார்கள். உழைப்புக்கூலிகளாக இருந்தவர்கள் ஊர்மாறி, இடம்மாறி, கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைப்பதற்கு ஏற்றபடி தம்மைத்தாமே தகவமைத்துக்கொண்டார்கள். வெளியேற மனமில்லாதவர்கள் செய்யத்தகாத வேலைகளையெல்லாம் செய்து சிறுமைப்பட்டு அவமானத்தால் குன்றிப் போனார்கள். கிராமப் பள்ளிப்படிப்புமட்டுமே மிகப்பெரிய படிப்பாகத் தோன்றிய காலம் அது. தொடர்ந்து படிக்கவும் வழியில்லாமல் உழைப்புக்கூலிகளோடும் ஒன்றவும் முடியாமல் அவர்கள் அடைந்த திரிசங்கு வேதனைகள் ஓராயிரம் பக்கங்களில் எழுதினாலும் தீராத கதைகள். பஞ்சத்தையும் பசியையும் சுட்டிக்காட்டி "அரிசிவிலை என்னாச்சி?", "பருப்புவிலை என்னாச்சி?" என்று முழக்கமிட்டு, பொய்நம்பிக்கை ஊட்டி ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர்களால் எவ்விதமான மாறுதல்களும் பெரிய அளவில் நிகழாதது ஒருவித வரலாற்று ஏமாற்றம். இந்த இருட்டிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் இடிபாடுகளிலிருந்தும் குகையிலிருந்தும் சரிவிலிருந்தும் சகதியிலிருந்தும் முட்காடுகளிலிருந்தும் வண்ணநிலவனின் மனிதர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள்.
"சாமி, எங்கஷ்டத்த தீருமையா..." என்று சுடலைமாடன் முன் நின்று சங்கெடுத்து ஊதி நிற்கும் செல்லையா பண்டிதனின் பாத்திரம் வண்ணநிலவன் கதைகள் முன்வைத்த பாத்திரங்களில் முக்கியமான ஒன்று. பண்டிதனுக்கு நாவிதம் மட்டுமல்ல, வெட்டியான் தொழிலும் கிராமத்தில் உண்டு. இரண்டு வாரங்களாக, ஊரில் எந்தப் பிணமும் விழவில்லை. தொழிலும் நடக்கவில்லை. அதனால் வருமானமும் இல்லை. கையில் இருந்த சில்லறைகள் கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்துவிட்டன. பசியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஊரைப் பார்த்து அவன் நேரிடையாக முறையிடமுடியாது. மரபு அதற்குத் தடையாக நிற்கிறது. பண்டிதனுக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது இந்த மாதிரி கஷ்டம் வந்து, இதே சுடலைமாடன் சாமியின் முன்னால் நின்று அவன் தகப்பன் ஊதியதை நினைத்துக்கொள்கிறான். அதன்பின் அவன் தந்தை சாகும்வரை இப்படி முறையீடு செய்ததில்லை. இந்த முறையீடு, தெய்வத்தைநோக்கிமட்டுமல்ல, மறைமுகமாக ஊராரைநோக்கி விடுக்கும் முறையீடாகும். தனித்தனி மனிதர்களாக இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஊரைநோக்கி முன்வைக்கும் முறையீடு. மறுநாள் காலை, ஊர்ப்பெரிய மனிதர்கள் எல்லாரும் அவன் வீட்டுக்கு வந்து ஏதாவது பணமோ தானியமோ கொடுத்து உதவுவதற்கு அந்த சங்கொலி தூண்டுதலாக இருக்கும். தம்மையும் தம் கிராமத்தையும் அண்டி இருப்பவனை ஆதரிப்பதைத் தன் கடமையாக நினைத்த மனிதர்கள் தேடிவந்து உதவிகளை வழங்குவார்கள். அப்பாவின் காலத்தில் ஒரேஒருமுறை ஊதி முறையீடு வைத்ததோடு சரி, அதற்குப் பிறகான காலங்களில் அப்படி ஒரு அவசியம் நேரவில்லை. சில்லறைக்கஷ்டங்கள் வருவதுண்டு, போவதுண்டு என்றாலும் ஒருநாளும் இப்படி ஒரு யோசனை உதித்ததில்லை. இரண்டுவாரமாக தொழிலில்லாத சோகமும் மூன்றுநாள் பட்டினியும் சேர்ந்து பண்டிதனுக்குள் அந்த எண்ணத்தை விதைத்துவிட்டன. இருட்டு இறங்கிய பிறகு, பம்பரக் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருந்த இரட்டைச்சங்கை எடுத்துக்கொண்டு சுடலைமாடன் கோயிலுக்குச் செல்கிறான். சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிறமாதிரி கத்திவிட்டு, சங்கை வாயில் வைத்து மூச்செடுத்து ஊதுகிறான். வயிற்றுப்பசியையெல்லாம் வாய்வழியே காற்றாக்கி ஊதுகிறான். அவன் சங்கொலி ஆற்றங்கரை மணல், ஆற்றுத் தண்ணீர், பச்சைவயல்கள், வண்டிப்பாதை, வெள்ளிமலைக்குன்று எல்லாவற்றையும் தொட்டுத்தொட்டு போய்க்கொண்டே இருக்கிறது. மனசில் கொட்டிக்கிடந்த ஆவேசம் தீரும்மட்டும் ஊதிவிட்டு நிறுத்துகிறான். சிறிது நேரம் அவன் கண்கள் சுடலைமாடனையே வெறித்துப் பார்க்கின்றன. சட்டென்று சாமிமுன்னால் நகர்ந்துபோய் ஆலமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த தகர உண்டியலைப் பிடுங்கியெடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறான். கதையின் இந்த இறுதிப்புள்ளி கவித்துவம் நிறைந்தது. தொடக்கத்தில் அவன் சாமியைப் பார்க்கும்போது, சாமியின் முன்னால் உள்ள உண்டியலைத் தொட அவன் நினைக்கவேயில்லை. அவன் நோக்கமெல்லாம் முறையிடுவதுமட்டுமே. முறையிட்டு மனபாரத்தை இறக்கிவைத்த பிறகுதான் அவன் பார்வை உண்டியலின்பக்கம் செல்கிறது. நெஞ்சையே நடுங்கவைக்கிற முறையீடு, தெய்வத்தையும் கண்டிப்பாக நடுங்கவைத்திருக்கும். அந்தத் தெய்வமே, தன்னை உற்றுப் பார்ப்பவனுடைய பார்வையை உண்டியலின் திசையில் செலுத்தியிருக்கும் என்று நினைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அது ஒருவகையில் தெய்வம் காட்டிய வழி. தெய்வம் தன் மடியில் சேகரித்துவைத்திருப்பதை, ஆபத்துச் சமயத்தில் தன் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் தவறென்ன இருக்கமுடியும்? மக்களின் உதவிகள் மறுநாள் காலை கிடைத்தாலும் கிடைக்கலாம். ஒருவேளை கிட்டாமல் போனாலும் போகலாம். தெய்வம் விடியும்வரை காத்திருக்கவில்லை. உடனடியாக உதவுகிறது.
"மயான காண்டம்" என்னும் தலைப்புடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புகொண்ட ஒரு பெயர் அரிச்சந்திரன். அரசனாக இருந்தாலும் விதிப்பயனால் மயானத்தில் வெட்டியானாக வேலை செய்யும் நெருக்கடிக்கு ஆளானவன். எவ்வளவோ இடர்ப்பாடுகள் நேர்ந்தாலும் தன் மனம் கொண்ட உறுதியிலிருந்து பின்வாங்காதவனாக இருந்தவன். இறுதிக்கட்டத்தில், தன் மனைவியையே வெட்டுவதற்கு ஓங்கிய அவன் வாள், பூமாலையாக அவள் கழுத்தில் விழுந்தது. செல்லையா பண்டிதனுடைய கை மாலைக்குப் பதிலாக உண்டியலை எடுத்துக்கொள்கிறது. சத்தியமான ஆவேசத்தின் உச்சத்தில் பண்டிதன் தெய்வத்துக்கு நெருக்கமாக சில கணங்கள் நின்று பிறகு மெல்லமெல்ல தரைக்கு இறங்கிவருகிறான். மயான காண்டம் கதையின் மையம் மிக எளிமையானது. கிராமமோ, நகரமோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் உருவகிக்கப்பட்டிருக்கிறது. எல்லாப் பாத்திரங்களுக்கும் அடியில் அது வாழும் வலி படர்ந்திருக்கிறது. அடர்த்தியான முள்பரப்பைப்போல.
இல்லாத கொடுமையால் தவிக்கும் பண்டிதனையும் முறையீட்டின் நியாயத்தை உணரும் தெய்வத்தையும் இருவேறு புள்ளிகளாக இடம்பெற்ற மயானகாண்டம் சிறுகதைக்கு நேர்மாறாக, இரண்டு குணங்களும் ஒருங்கே ஒரே மனிதரிடம் இயங்கும் அற்புதக்கணத்தைச் சித்தரிக்கும் சிறுகதை யுகதர்மம். அக்கதையில் இடம்பெறும் குமாஸ்தாப்பிள்ளையின் தவிப்புகளுக்கு முடிவே இல்லை. முப்பது வருட குமாஸ்தா வாழ்வில் பசிக்கு உணவைத் தேடமுடிந்ததைத் தவிர வேறெதையும் செய்ததில்லை. தாயில்லாத பிள்ளைகளுக்கு சரியான உணவு இல்லை. திருமணவயதைத் தாண்டும் பெரியவளுக்கு ஒரு வழியைக் காட்ட இயலவில்லை. ஒருநாள் வருமானத்தில் எஞ்சிய சில்லறையில் மூத்தவளுக்கு ரிப்பன் வாங்கிக்கொண்டு திரும்பியபோது, அவள் தன் மனத்துக்குப் பிடித்தவனோடு வீட்டைவிட்டு வெளியேறிப்போன செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சியாக இருந்தாலும் அவர் நிலைகுலையவில்லை. குத்துக்கல்லாக சிறிதுநேரம் நிற்கிறார். பிறகு, இதைத்தவிர வேறென்ன வழி அவளுக்கு இருக்கிறது என்று அவளுடைய கோணத்திலிருந்து யோசித்து உணர்மையை உணர முயற்சி செய்கிறார். "கொஞ்ச நாளைக்கி சந்தி சிரிக்கும்.... பரவாயில்ல..." என்று தன்னையே தேற்றிக்கொள்கிறார். தனக்கு அவள் இரண்டாம் தாரமாகவாவது கிடைக்கமாட்டாளா என்று ஏக்கத்துடன் காத்துக்கிடந்தவன் துக்கம் விசாரிக்கிற சாக்கில் உலகதர்மத்தைப்பற்றிப் பேசத் தொடங்கியதும் ஆத்திரம் தாங்கமுடியாமல் வெடிக்கிறார். அவள் செய்கையில் உள்ள நியாயத்தை அழுத்தமாகச் சொல்லி கடைக்காரப்பிள்ளையின் வாயை அடைக்கிறார். யுகதர்மம் என்பது எழுதிவைக்கப்பட்ட நிரந்தர விதியல்ல. சங்கடத்தைத் தாண்டிச் செல்ல உதவுகிற ஒரு பற்றுக்கோல். அவ்வளவுதான். ஒவ்வொரு தருணத்திலும் அதன் கோலமும் வெளிப்பாடும் மாறிக்கொண்டே இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கில் உருவான கோலங்களைக் கொண்டதுதான் யுகதர்மம். ஓங்கிய குரலில் பேசும் குமாஸ்தாப்பிள்ளை தன் மகளுக்காக மட்டும் பேசவில்லை, ஒரு தரப்பின் குரலாக நின்று பேசுகிறார் என்றும் வாசிக்கமுடியும். வறுமைக்கோலத்தாலும் வசதியின்மையாலும் பெற்ற பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் செய்யவேண்டிய திருமணத்தைக்கூட செய்ய வழியில்லாமல் தவித்துத் தடுமாறுகிற தரப்பின் சார்பில் அவர் குரல் கடைக்காரப்பிள்ளையின் முன்னால் ஒலிக்கிறது. ஆபத்தில் துணையாக நிற்கமுடியாத தர்மத்தைப் பொருட்படுத்தாமல் மனசாட்சிப்படி நடப்பதை ஒரு புதிய தர்மமாக நிறுவுவதை அவர் குரலில் உணரமுடிகிறது. வாழும் வலியை ஒவ்வொரு கணமும் உணர்கிற ஒருவரால்மட்டுமே அப்படி பொங்கியெழமுடியும்.
ஒரு தரப்பின் குரலாக ஒரு பாத்திரம் பேசும்போது பொதுவாக கலையழகு குலைந்துபோவதுதான் வழக்கம். தமிழில் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கதைகள் இப்படி குலைந்துபோனவை. ஆனால், வாசகர்கள் மனமொன்றிப் படிக்கும்படியும் கலையழகில் குறைவைக்காமலும் எழுதியவர் வண்ணநிலவன். கதைத்தருணங்களை அவர் மனம் கண்டடையும் சமயத்திலேயே அதற்குரிய சட்டகமும் மிகச்சிறந்த முறையில் பொருத்தமாக உருவாக்கிவிடுகிறது. அந்தத் தேர்ச்சி, மிகச்சிறந்த சிறுகதையாசிரியராக வண்ணநிலவன் விளங்குவதற்கான காரணங்களில் ஒன்று.
"சாரதா" சிறுகதையில் வெளிப்படும் அழகம்மை பாத்திரம்கூட பாதிக்கப்பட்ட ஒரு தரப்பின் அடையாளம் என்றே சொல்லவேண்டும். இரண்டாம்தாரமாக மணந்துகொண்ட தன் மனைவி, மூத்த மனைவியின் மகளுக்கு இழைக்கும் கொடுமையைப் பார்க்கமுடியாதவராக, தந்தையே அவளுடைய தோழி புவனேஸ்வரி வீட்டுக்கு பஸ் ஏற்றிவிடுகிறார். சான்றிதழ்களையெல்லாம் எடுத்துக்கொண்டு உருவாகப் போகும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கனவு கண்டபடிதான் அவளும் பயணமாகிறாள். துரதிருஷ்டவசமாக அந்தத் தோழி, அவள் எடுத்துச் சென்றிருந்த முகவரியில் வசிக்கவில்லை. வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டதாகச் செய்தி கிடைக்கிறது. இருட்டு நேரத்தில் பேருந்து நிலையத்தில் போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவளை. காவலர்கள் அழைத்துவந்து விபச்சார வழக்கைப் பதிவுசெய்து, காவல்நிலையத்தில் சிறைவைக்கிறார்கள். மறுநாள் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து சாட்சிக்கூண்டில் நிறுத்துகிறார்கள். அவளோடு விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு அழைத்துவந்த பல பெண்களும் நிற்கிறார்கள். அவளுடைய அழுகையையும் பதில்களையும் சிறிதுகூட பொருட்படுத்திக் கேட்காமல் விரசமாகக் கிண்டல் பேசியபடியே இருக்கிறார்கள் காவலர்கள். எல்லைமீறிப் போகும் ஒரு கட்டத்தில் கைதாகி வந்திருக்கும் அழகம்மை, "என்ன ஒரேடியாத்தான் பேசிகக்கிட்டே போறீய?..." என்று ஏட்டய்யாவைப் பார்த்துச் சத்தமாக அதட்டிப் பேசத் தொடங்குகிறாள். தன்னோடு தொழில் செய்கிற ஒருத்தியே கிண்டலாகப் பேசும்போது "பொத்திகிட்டு போ தூர..." என்று விரட்டியடிக்கிறாள். அவளுக்காக அபராதம் செலுத்தி, கேண்டினில் சிற்றுண்டி வாங்கிக்கொடுத்து, ஊருக்குச் செல்ல பஸ் சார்ஜ் கொடுத்து அனுப்பிவைக்கிறாள்.
ஒரு கதையில் பல பாத்திரங்கள் இடம்பெறுகிறார்கள். எல்லாரும் இப்படி ஒரு தரப்பின் குரலாக வெளிப்படுவதில்லை. அப்படிப் பொங்கிக் குமுறும் பாத்திரங்களுக்குக்கூட, அப்படி இயங்குவது இயல்பான ஒரு விஷயமல்ல. தற்செயலாக அக்கணம் வெடிக்கிறது. எளிய மனிதர்களுக்குள் இயங்கும் இந்த அறச்சீற்றத்தின் கணத்தைக் கண்டடைந்தவர் வண்ணநிலவன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் பாவப்பட்டவர்கள். தினசரி வாழ்க்கைப்பாட்டுக்கு தாளம் போடுகிறவர்கள். அவர்கள் நெஞ்சில்தான் இந்தச் சுடர் ஒளிவிட்டபடி இருக்கிறது. சீற்றத்தின் உச்சத்தில் ஆப்தவாக்கியத்தைப்போல அவர்கள் வெடித்துப் பேசுகிற சாதாரண சொற்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இடர்ப்பாடுகளில் தத்தளிக்கும் மனிதர்களின் சித்திரங்களை பலவிதங்களில் தீட்டிக்காட்டுகிறார் வண்ணநிலவன். அவற்றில் துன்பங்களால் துவண்டு வாடி ஒடுங்காத உத்வேகம் மிகுந்த பாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். "துன்பக்கேணி" சிறுகதையில் இடம்பெறும் வண்டிமலைச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "எஸ்தர்" கதையில் இடம்பெம் எஸ்தர் மற்றொரு எடுத்துக்காட்டு. அலைகளைப் பொருட்படுத்தாமல் எதிர்நீச்சல் போட்டு கடந்துவிட முயற்சி செய்யும் வேகம் அவர்களிடம் வெளிப்படுகிறது. மறுகரையை அடையமுடியாதவர்களாகவே அவர்கள் வாழ்ந்து மறைந்துபோனாலும், அவர்களுடைய வேகத்தின் காரணமாகவே, நம் நெஞ்சைத் தொட்டவர்களாகவும் நெஞ்சில் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
இடர்ப்பாடுகளில் தத்தளிக்கும் மனிதர்களின் சித்திரங்களை பலவிதங்களில் தீட்டிக்காட்டுகிறார் வண்ணநிலவன். அவற்றில் துன்பங்களால் துவண்டு வாடி ஒடுங்காத உத்வேகம் மிகுந்த பாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். "துன்பக்கேணி" சிறுகதையில் இடம்பெறும் வண்டிமலைச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "எஸ்தர்" கதையில் இடம்பெம் எஸ்தர் மற்றொரு எடுத்துக்காட்டு. அலைகளைப் பொருட்படுத்தாமல் எதிர்நீச்சல் போட்டு கடந்துவிட முயற்சி செய்யும் வேகம் அவர்களிடம் வெளிப்படுகிறது. மறுகரையை அடையமுடியாதவர்களாகவே அவர்கள் வாழ்ந்து மறைந்துபோனாலும், அவர்களுடைய வேகத்தின் காரணமாகவே, நம் நெஞ்சைத் தொட்டவர்களாகவும் நெஞ்சில் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
வண்டிமலைச்சி கருவுற்றிருக்கிறாள். கொலைக்குற்றத்துக்காக அவள் கணவன் சிறைக்குப் போயிருக்கிறான். வாழ்க்கைத்தேவைக்கான பணத்தை அவளே தேடிச் சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி. சாராயக் கேன்களை இரவோடு இரவாக சுமந்துபோய் நாசரேத்தில் சேர்க்கவேண்டும். துணைக்கு ஆண் ஆள்களோடு தேரிக்காட்டுக்குள் கேன்களைச் சுமந்து செல்கிறாள். துரதிருஷ்டவசமாக, காவலர்களிடம் பிடிபட்டு, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறாள். தொடக்கத்தில் கணவனின் முரட்டுத்தனமான கொலைவெறியால் அவள் ஆதரவில்லாமல் நிற்கவேண்டிய சூழல் உருவானது. எடுத்த வேலையை முடிக்கும் முன்பாகவே, களைப்பின் காரணமாக, துணைஆட்களின் சாராயம் அருந்தும் இச்சையால், நீதிமன்றத்தின் வாசலில் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இரண்டு தருணங்களிலும் அவள் தரப்பில் எவ்விதமான பிழையும் இல்லை. ஆனால் சூழலின் காரணமாக, அந்த வேதனையை அவள் எதிர்கொள்fளவேண்டியிருக்கிறது. வண்டிமலைச்சியைப்போலவே வாழும் வேகம் கொண்டவள் எஸ்தர். ஒரு நெருப்புக்குச்சிக்குக்கூட வழியில்லாமல் போய்விட்ட அவலநிலையில் தத்தளிக்கிறது அவள் குடும்பம். ஊரில் பிழைக்க வழியே இல்லை. உடல்உழைப்பாளர்களாக வெளியூரில் சென்றுதான் பிழைக்கவேண்டும். உந்துசக்தியாக இருந்து அவர்களுக்கு உழைக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறாள் எஸ்தர். முதுமையாலும் வியாதியாலும் படுத்தபடுக்கையாகித் தவிக்கிற பாட்டியை தம்முடன் எப்படி அழைத்துச் செல்வது என்கிற கேள்விக்கு விடைகண்டறிவது யாருக்கும் எளிதாக இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு, நள்ளிரவில் ஒரு வழியைக் கண்டடைகிறாள் எஸ்தர். மறுநாள் காலை பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நிற்கின்றன. அவளை நல்லடக்கம் செய்ய மலிவுவிலையில் மரணப்பெட்டி வாங்கிவரப்படுகிறது. வாழும் உத்வேகம் எல்லையற்ற புள்ளிவரைக்கும் நீண்டுசெல்லும் அற்புதத்தை வண்ணநிலவன் நுட்பமாகக் கண்டடைகிறார்.
"ஆடிய கால்கள்" சிறுகதையில் இடம்பெறும் ரஞ்சிதம் வாழ்வை எதிர்கொள்ளும் விதத்தில் வேகமும் விவேகமும் இணைந்திருக்கின்றன. கொடைக்கு சலங்கை கட்டி ஆடுகிறவள் ரஞ்சிதம். மேடையில் அவளுக்குப் பொருத்தமான ஜோடியாக நின்று ஆடுபவன் சிதம்பரம். இருவருடைய ஆட்டத்தையும் கண்ட கண்கள் அவர்களைப் பொருத்தமான ஜோடி என்று சொல்லாமல் நகர்ந்ததில்லை. ஆனால் வாழ்க்கை அவர்களை ஒன்று சேர அனுமதிக்கவில்லை. வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அவள் கூடை முடையத் தொடங்குகிறாள். கூடை முடையும் படிமம் கிட்டத்தட்ட தன் வாழ்வை தானே முடைந்துகொள்கிற படிமமாக விரிவடையும் ஆற்றல் உள்ளது. இதற்கு நேர்மாறாக, சிதம்பரம் தன் வாழ்வை சரியாக முடைந்துகொள்ளும் ஆற்றல் அற்றவனாக இருக்கிறான். ஓட்டலில் தண்ணீர் மொண்டு ஊற்றுகிறான். ஒரு தேநீர் வாங்கித் தரும்படி சின்னப்பிள்ளைகளிடம் கையேந்துகிறான். சின்னப்பிள்ளைகள் அவனை புதிய பாட்டுக்கு நடனமாடச் சொல்லி அலைக்கழிக்கிறார்கள். முடைந்த கூடைகளைச் சுமந்துகொண்டு விற்பனைக்காக கடைத்தெருப் பக்கம் வந்தவளுடைய பார்வையில் இக்காட்சி தென்படுகிறது. சட்டென்று, அங்கே சென்று எல்லாரையும் விரட்டிவிட்டு அவனை அழைத்துச் சென்று ஓட்டலில் இட்லி வாங்கித் தருகிறாள். வாழும் ஆர்வத்தைத் தவிர, வேறெந்த வேகமும் இல்லாத அவள் மனத்தில் நிறைந்திருக்கும் இந்தக் கனிவும் கருணையும் முக்கியமானது.
இலக்கியத்தின் சாரம் என்ன என்கிற கேள்வி எழும்போதெல்லாம் இந்தக் கதையை நினைத்துக்கொள்வதுண்டு. அந்த நினைவு "தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி"
என்னும் வள்ளலாரின் நெறியை உணர்த்தும் வரிவரைக்கும் அழைத்துச் செல்லும். கனிவும் கருணையும் வாழ்க்கைக்கு ஒளிகாட்டி நிற்கும் சுடர்கள். "எங்கே கருணை இயற்கையில் உள்ளன, அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே, யாரே என்னினும் இரங்குகின்றோர்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே" என்னும் அருட்பா வரிகளும் தொடர்ந்து நினைவில் நகரும். ரஞ்சிதம் போன்ற பெண்கள் துறவிகள் அல்ல. படிப்பாளிகளும் அல்ல. பெரியபெரிய இலட்சியங்களை மனத்தில் கொண்டு, அவற்றை அடைய உழைப்பவர்களும் அல்ல. மிகமிகச் சாதாரணமானவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பான வகையில் அவர்கள் கருணை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
"திருடன்" கதையில் இடம்பெறும் அமலியிடம் வெளிப்படும் கருணையுணர்வு இன்னும் விசேஷமானது. ஆடிய கால்கள் சிறுகதைக்குள் சிதம்பரம் யார் என்கிற அறிமுகம் ரஞ்சிதத்துக்கு இருக்கிறது. சிதம்பரத்தின் உயர்வையும் தாழ்வையும் பார்த்தவளாக சித்தரிக்கப்படுகிறாள் ரஞ்சிதம். ஆனால் அந்தத் திருடனுக்கும் அமலிக்கும் இடையே அப்படி எந்த அறிமுகமும் இல்லை. காலையில் பாத்திரம் தேய்க்க வந்த பவுன் கிணற்றுக்குள் முனகும் சத்தம் கேட்டு, கிணற்றில் ஒளிந்திருக்கும் திருடனைப்பற்றிய தகவலை சர்ச்சுக்குள் பரப்புகிறாள். கூட்டம் கூடிவிடுகிறது. கிணற்றிலிருந்து வெளியேறவைத்து, அடித்து அறையில் அடைக்கிறார்கள். இரவு முழுதும் கிணற்றில் இருந்ததால் குளிர் தாள முடியாதவனாக குடிப்பதற்கு சூடாக ஏதாவது கேட்கிறான் திருடன். "திருட வந்த பயலுக்கு சூடா வேற கேக்குதாக்கும்..."
என்று கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கிறார்கள். இருண்ட அறைக்குள் எங்கோ போய் விழுகிறான் அவன். கிராம முன்சீப்பிடம் தாக்கல் சொல்ல அனைவரும் கலைந்துபோகிறார்கள். வீட்டிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி இருந்த அமலி யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அறைக்கதவைத் திறந்து அவன் கட்டுகளை அவிழ்த்து விடுதலை செய்கிறாள். "இந்தா.. காப்பிய குடி.. குடிச்சிட்டு வயக்காட்டு வழியாக ஓடிப் போயிரு...." என்கிறாள். அவன் கையெடுத்துக் கும்பிடுவதையோ அல்லது "நீங்க நல்ல இருக்கணும்.." என்று கண்கலங்கியதையோ அவள் கவனிக்கவே இல்லை. "சரி சரி, நீ போயிரு யாராவது வந்திரப் போறாங்க..." என்று அவசரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறாள். நன்றியை எதிர்பார்க்காத அக்கருணை அல்லவா இலக்கியத்தின் சாரம்.
"ஞானமானது வெளியில் நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் நின்று சத்தமிடுகிறது" என்னும் பைபிள் வரியொன்றை கதையின் போக்கில் எழுதிச் செல்கிறார் வண்ணநிலவன். அகக்காதை திறந்துவைத்திருப்பவர்களுக்கு அந்தக் குரல் கேட்கிறது.
அமலியிடம் வெளிப்படும் கருணைக்கும் இவ்வரிக்கும் உள்ள தொடர்பு தற்செயலானது. ஞானம் மிகப்பெரிய செல்வம் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் கருணையில்லாத ஞானம் மிகப்பெரிய பாரம். கருணையில்லாத கண்ணும் இயைபில்லாத பாட்டும் பயனற்றவை என்பது வள்ளுவரின் வாக்கு. மிக இயல்பாகவே நம் நெஞ்சில் படிந்திருக்கிற உணர்வு கருணை. ஆனால் செத்தைகளும் பாசியும் ஆகாயத்தாமரையும் அடர்ந்து குளத்துநீரை மறைத்திருப்பதுபோல, நம் சமூகத்தகுதிகளும் செல்வமும் அகங்காரமும் அடர்ந்து, கருணையின் ஊற்றுக்கண்ணை மறைத்திருக்கின்றன. அவற்றை விலக்கி கருணையை அடையாளம் காட்டுகின்றன இப்படிப்பட்ட கதைத்தருணங்கள்.
அமலியிடம் வெளிப்படும் கருணையையும் அவள் கருவுற்றிருப்பதையும் இணைத்துப் பார்க்கலாம். மற்றவர்கள் எல்லாரும் அடிபடுபவனை ஒரு திருடனாகப் பார்த்து உதைக்கும்போது அவள்மட்டுமே ஒரு தாயாக நின்று அவனைக் கவனிக்கிறாள். அவள் தாய்மையின் காரணமாகவே அவன் குரல் அவள் நெஞ்சைத் தொட்டு அசைக்கிறது.
பெண்ணின் மனத்தில் இயங்கும் கருணையைச் சித்தரிக்கும் இன்னொரு சிறுகதை "அவன் அவள் அது". ஒரு சின்னக் குடும்பச்சித்திரமாகவே அக்கதை முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவன் தாமஸ் குடிகாரனாக இருக்கிறான். இளையவன் யோசுவா குடும்பத்துக்காகச் சம்பாதிப்பவன். இளையவனுக்காக வாழ்க்கைப்பட்டு வந்தவள் பரிமளா. தன் மனைவி தனக்குரிய சேவைகளில் கவனம் செலுத்தினால்மட்டும் போதும் என்று நினைக்கிறது ஆண் மனம். அவனுக்குரிய சேவைகளில் எந்தக் குறையும் நேராதபடி பார்த்துக்கொள்கிறாள் பரிமளா. அத சமயத்தில் அகாலத்தில் வீடு திரும்பும் மூத்தவனுக்காகக் காத்திருந்து, கதவைத் திறந்துவிட்டு, சாப்பாடு போட்டு, பேசி அறைக்கு அனுப்புவதையும் அக்கறையோடு செய்கிறாள். அந்த அக்கறையும் கருணையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவள் வரும்வரைக்கும் நெடுநேரம் காத்திருந்து அவனுக்கு செய்யவேண்டிய பணிவிடயயெல்லாம் செஞ்சாச்சி இல்லே, பிறகு இன்னும் எதுக்கு உட்கார்ந்திருக்கே. பேசாம படு என்று குத்திக்காட்டுகிறான். ஆதரவில்லாத தன் அண்ணன்மீது அவள் காட்டும் கருணையைக் கண்டு உண்மையில் அவன் மகிழ்ச்சியடைவதே இயல்பாக இருக்கமுடியும். மாறாக, அவன் சீறிவிழுகிறான். உடைமையுணர்வு அவன் மனத்தைக் கல்லாக்கிவிடுகிறது. உடைமையாக ஆட்பட்டபோதும் அவள் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது.
வண்ணநிலவனுடைய பாத்திரங்கள் வாழ்க்கைக்கான தேவைகளை நாடி நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். வாழ வழியில்லாத ஊரில், பத்து ரூபாய் பணத்துக்காக தரகனை நம்பி பட்டணத்துக்கு பிள்ளைகளை அனுப்பிவைக்கிற பெற்றோர்கள் முதல் (நரகமும் சொர்க்கமும்) எட்டுமாத வாடகைப்பாக்கியை கொடுக்கவும் முடியாமல் வீட்டைக் காலி செய்து தரவும் முடியாமல் தவிக்கிற பெற்றோர்கள்வரை (பிழைப்பு) ஏராளமானவர்கள் அந்தப் பாதையில் நடந்து செல்கிறார்கள். இளைப்பாற ஒரு மரத்தடியன் நிழலோ, தாகம் தீர்க்க ஒரு நீர்நிலையோகூட இல்லாத வறுமையின் ஒற்றையடிப்பாதையில் கொளுத்தும் வெயிலில் நடந்துகொண்டே இருக்கிறார்கள் அவர்கள். வலிமிகுந்த அவர்களுடைய வாழ்க்கைத் தருணங்களைக் கதையாக்கியதற்காக மட்டுமல்லாமல், நெகிழ்ச்சியின் உச்சகட்டக் கணங்கள்வழியாக வெளிப்படும் மானுடஉணர்வை காட்சியனுபவமாக்கியதற்காகவும் வண்ணநிலவன் நம் பாராட்டுதல்களுக்கு உரியவராகிறார்.
"பிணந்தூக்கி" சிறுகதையில் இடம்பெறும் ரங்கன் பலவிதமான நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பவன். ஆனால் தன் பிள்ளை குப்புறப் புரண்டு படுத்தபோது போட்டோ எடுத்துக்கொடுத்துவிட்டு, அதற்குரிய பணத்தை வாங்காமலேயே அனுப்பிய பாப்புப்பிள்ளை மரணமடைந்தபோது, பிணந்தூக்கி வேலை செய்துவிட்டு, கண்களில் கண்ணீரைத் தேக்கிக்கொண்டு காசு வாங்காமலேயே போகிறான். அவன் கடைப்பிடிக்கும் மௌனம் மிகவும் முக்கியமானது. மேலோட்டமான பார்வையில், காசு வாங்காமல் பாப்புப்பிள்ளை செய்ததற்கும் பிணத்தைத் தூக்கிவிட்டு காசு வாங்காமல் இவன் திரும்பியதற்கும் சரிசெய்து சமப்படுத்தியதுபோல ஒரு தோற்றம் தந்தாலும் அது உண்மையல்ல. சரிப்படுத்துவதுதான் அவன் எண்ணமென்றால் அவன் கண்ணீருக்கு என்ன பொருள்? ஒரு பிணந்தூக்கியாக, நாள்முழுக்க சுடுகாட்டில் உழல்கிறவனாக, அவ்வளவாக சமூககௌரவமில்லாத தொழிலைச் செய்பவனாக, ஊர்க்காரர்கள் அனைவரும் பார்த்த ஒரு தருணத்தில், அவனை ஒரு மனிதனாகப் பார்த்துப் பேசி படமெடுத்துக் கொடுத்தவர் அவர். தன்னை சகமனிதனாக நடத்தியவர் மறைந்துபோனதுதான் தாங்கமுடியாத பெருந்துயரமாக அவனை வாட்டியெடுக்கிறது. அந்த மரணவீட்டில் சிந்தப்பட்ட ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் ஏராளமான பொருளிருக்கும். கணவன், தந்தை, சகோதரன், நண்பன், கடைக்காரர் என பல உறவுநிலைகளில் அவரை வைத்துப் பார்த்தவர்கள், அந்த இழப்பை நினைத்து கண்ணீர்விட்டு அழுதிருக்கக்கூடும். அதைவிட, தன்னை சகமனிதனாக நடத்திய ஒருவரின் மறைவுக்காக அவன் சிந்திய கண்ணீர் மிகமுக்கியமானது.
வாழ்க்கைத் தருணங்களைக் கடந்து மனநுட்பங்கள் சிலவற்றையும் கலைப்படைப்புகளாக மாற்றியிருக்கிறார் வண்ணநிலவன். உடனடியாக நினைவுக்கு வருவது உள்ளும் புறமும் சிறுகதை. உள்ளே அன்பைத் தேக்கிவைத்தபடி, புறத்தில் வெறுப்புற்றவர்கள்போல சதாநேரமும் சண்டையிடும் நீலா- சங்கரன் தம்பதியின் சித்திரத்தை அக்கதையில் தீட்டிக் காட்டுகிறார் வண்ணநிலவன். ஒரு நிமிடம் ஆளைக் காணவில்லை என்றதும் எங்கே எங்கே என்று பதற்றத்தோடு தேடத் தொடங்குகிறான் சங்கரன். என்னதான் சண்டைபோட்டாலும் தன் கணவன் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்பதற்காக, இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எண்ணெய் வாங்க தனியாக கடைக்கு ஓடுகிறாள் நீலா. இப்படி உள்ளும் புறமும் மாறுபடும் உணர்வுகளில் எது உண்மை, எது போலியானது என்பதை அறிவது சிரமம். உண்மையில் இருவருமே ஒருவர்மீது ஒருவர் கட்டற்ற அன்புள்ளவர்கள். சண்டையிட்டு வாதிக்கும்போது வெளிப்படும் வார்த்தைகளின் அடியோட்டமாக உள்ள அன்பின் ஈரம் மிகநுட்பமாகத் தொட்டுக் காட்டப்படுகிறது.
மனத்தின் ஒளிந்திருக்கும் வன்மத்தை அடையாளம் காட்டும் படைப்பு "மிருகம்". எல்லாரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்ட தெருவில் தனியாக இருக்கிறார் சிவனுநாடார். எல்லா வீடுகளும் பூட்டிக் கிடக்கின்றன. நார்ப்பெட்டியில் சுள்ளிவிறகுகளைச் சேகரித்துக்கொண்டு தெருவுக்குள் நுழையும்போது, தற்செயலாக சாத்திக்கிடக்கிற ஒரு கதவை தலையால் முட்டித் திறக்க முயற்சிசெய்கிற ஒரு நாயைப் பார்க்கிறார். அவசரமாக, அந்த வீட்டையடைந்து நாயைத் தொடர்ந்து அவரும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார். அடுப்பங்கரை, நெல்குதிர் என ஒவ்வொரு இடமாகப் பார்க்கும் அவர் கண்களில் ஒரு ஓவல் டின் தென்படுகிறது. ஆசையோடு திறந்து பார்க்கிறார். அடியில் கொஞ்சம் கருப்புக்கட்டித்தூள் கிடக்கிறது. இரண்டுவேளை காப்பிக்கு அது உதவக்கூடும் என்கிற எண்ணத்தில் டின்னில் மொய்த்திருக்கிற எறும்புகளை அப்புறப்படுத்துகிறார். அவ்வப்போது திறந்துமூடும் அடுப்படிக்கதவுக்குப் பின்னால் இருந்து நாய் எட்டிப் பார்ப்பது தெரிகிறது. அதன் பார்வை அவருக்கு உள்ளூர ஒருவித கூச்சத்தைக் கொடுத்திருக்கலாம். மெல்ல அதுவே வன்மமாக மாறுகிறது. கதவிடுக்கில் அது தலையைக் கொடுத்திருக்கும் சமயத்தில் சட்டென செயல்பட்டு கதவுகளை இறுக்கி அதைக் கொல்ல முயற்சி செய்கிறார். அசைவில்லாமல் விழுந்து கிடக்கும் கோலத்தையும் சிந்திய ரத்தத்துளிகளையும் பார்த்த பிறகு, அது இறந்துபோயிருக்கலாம் என்ற முடிவோடு அந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறார். வீட்டுக்குள் நுழையும்போது இல்லாத வன்மம், எதிர்பாராத கணத்தில் அவனுக்குள் பொங்கியெழுந்ததை எப்படிப் புரிந்துகொள்வது? தனிமையும் வெறுமையும் மனிதனிடம் உள்ள மனிதஉணர்வை சிறுகச்சிறுக அப்புறப்படுத்தி மிருகமாக்கிவிடுகிறதா? சமூகமாக வாழும்போதுமட்டுமே, அவன் மனிதனாக வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாமா? சிவனுநாடார் தன் வீட்டைநோக்கி வேகவேகமாக நடந்துவந்து, வீட்டுக்குள் நுழைந்து கதவை அவசரமாகச் சாத்திக்கொள்ளும் சித்தரிப்பு வேட்டையாடிய ஒரு மிருகம் தன் குகையைநோக்கி திரும்பிவரும் காட்சிக்கு நிகரானதாக உள்ளது.
"அயோத்தி" வண்ணநிலவனுடைய நுட்பம் மிகுந்த மற்றுமொரு படைப்பு. பால்டின் வாங்கிவரச் சென்ற கணவன் வெறுங்கையோடு வருவதைக் கண்டு எரிப்பதுபோலப் பார்க்கிற சந்திரா டீச்சரின் தோற்றத்தோடு கதை தொடங்குகிறது. அவள் எதிர்பார்ப்பதும் நடைபெறுவதும் ஏறுக்குமாறாகவே அமைந்துபோவதற்கு அக்காட்சி ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அதன் வழியாக நாம் நிறைய ஊகித்துக்கொள்ளலாம். அந்த ஊகங்களின் பின்னலை பாஸ் அத்தானைத்தான் கைப்பிடிக்கப்போகிறோம் என அவள் பருவவயதில் எதிர்பார்த்ததையும் சூழலின் காரணமாக பாஸ் அத்தானுக்குப் பதிலாக அவனைக் கைப்பிடித்ததையும் கொண்ட இறந்தகாலப் புள்ளிவரைக்கும் கொண்டுசெல்லமுடியும். தற்சமயம் பாஸ் அத்தான் ஊருக்கு வந்திருக்கிறான், அவனைச் சென்று பார்க்கவேண்டும் என்பது அவள் விருப்பம். வெளியே காற்றும் மழையுமாக இருக்கிறது. அந்த விருப்பம் கைகூடுமோ இல்லையோ என்கிற பதற்றம்தான் அவளை ஆத்திரம் கொள்ளவைக்கிறது. கடைக்கார நாயுடு இல்லை என்று திரும்பிவந்ததை ஒரு முகாந்திரமாகக்கொண்டு அவள் வெடித்துவிடுகிறாள். "சண்டாளப் பாவியோ.. இப்பிடி என்னய கொண்டுபோயி பாழுங்கெணத்துல தள்ளுனமாதிரி பண்ணிட்டாங்களே..." என்று மனம்குமுறி அழுகிறாள். அவள் அழுகையைக் காணப் பொறுத்துக்கொள்ள இயலாத அவன் அவளை நெருங்கி அமைதிப்படுத்துகிறான். "எந்திரி சந்திரா, பால் டின் வாங்கிகிட்டு, அப்பிடியே பாஸ் அத்தானையும் பாத்துட்டு வந்துரலாம்..." என்று அழைக்கிறான். அயோத்தி என்னும் தலைப்பு மனநுட்பத்தை உணர்வதற்கு ஒரு கூடுதல் உபகரணமாக விளங்குகிறது. பாஸ் அத்தானின் அன்புக்காக உள்ளூர ஏங்குகிறாள் சந்திரா. கைநழுவிப் போன அவனுடைய உறவுக்காக நெஞ்சுக்குள் கண்ணீர் வடிக்கிறாள். ஆனால் அந்த அன்பை ஓர் எல்லைக்குமேல் அவளால் வெளிக்காட்டமுடியாதபடி மரபின் தடை தடுக்கிறது. அயோத்தி என்ற சொல்லுக்கடியே அசோகவனமும் மறைந்திருக்கிறது. இரண்டோடும் தொடர்புடையவள் சீதை. அயோத்தியை நினைத்தபடி அசோகவனத்துத் துயரங்களை மறக்க முயற்சி செய்தவள் அவள். சந்திராவின் மனநெருக்கடியை உணர்த்த தலைப்பு ஒரு படிமமாக கையாளப்படுகிறது.
"பலாப்பழம்" சிறுகதை மென்மையான மனஉணர்வுகளின் சித்திரம். கர்ப்பிணிப்பெண்ணான செல்லப்பாப்பாவின் மனம் பலாப்பழத்துக்கு ஏங்குகிறது. அடுத்தவீட்டில் பழம் அறுக்கும் மணம் தடுப்பைத்தாண்டி அவள் பக்கத்துக்கும் வீசுகிறது. சுளைகளை உரிப்பதையும் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் உண்பதையும் காதில் விழுகிற உரையாடல்கள் உணர்த்துகின்றன. சாயங்காலம் கிடைக்க இருக்கிற கடன்தொகையிலிருந்துதான் சில முக்கியச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். பலாப்பழம் வாங்கிவந்து உண்ண வழியில்லை. கவனத்தை வேறெந்தப் பொருளின்மீதும் செலுத்த இயலாதபடி பக்கத்துவீட்டிலிருந்து பழவாடை வந்தபடி இருக்கிறது. பக்கத்துவீட்டுக்கார அம்மா அறிமுகம் உள்ளவர்தான். தனக்கும் சில சுளைகளைக் கொடுத்தனுப்பக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கிறாள். நேரம் கழிகிறதே தவிர, யாரும் வந்தபாடில்லை. வெகுநேரத்துக்குப் பிறகு, பக்கத்துவீட்டுச் சிறுமி வாசலில் வந்து நிற்கிறாள். சுளைகளைத்தாம் கொண்டுவந்திருக்கிறாள் என ஆவலுடன் பார்ப்பவள் கண்கள் ஏமாற்றத்தில் உறைகின்றன. வந்த சிறுமி, புட்டாரத்தி அம்மன் கோயிலுக்கு போலாமான்னு அம்மா கேட்டாங்க என்று கேட்டுவிட்டுச் செல்கிறாள். அவள் ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் காட்டிவிட்டு முடிகிறது கதை. வாசிப்பனுவபம் உள்ள வாசகன் ஒருவனால் அந்தத் திரியைத் தொடர்ந்து வெகுதொலைவு செல்லமுடியும். ஒரு பழத்தையே அறுத்துச் சாப்பிடுகிற குடும்பம் ஒரேஒரு சுளையைக்கூட ஏன் தன்னோடு நட்புகொண்ட பக்கத்துவீட்டுக்காரர்களோடு பகிர்ந்துகொள்வதில்லை என்பது முக்கியமான கேள்வி. இன்னொருவர் மனத்தில் தான் இல்லை என்பதை உணர்வதுபோன்ற வலி வேறெதுவும் இல்லை. புறக்கணிப்பின் துயரத்தை எவ்வளவுதான் அடக்கிஅடக்கி வைத்தாலும் அது பெருமூச்சாக, கண்ணீர்த்துளியாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு தளங்களில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. உலகஅரங்கில் ஒரு நாடு செல்வச்செழிப்பில் திளைக்கிறது. இன்னொரு நாடு பட்டினியில் மடிகிறது. எல்லாவற்றையும் உணர்ந்திருந்தும் செல்வத்தில் திளைக்கும் நாடு, இல்லாத நாட்டுக்கு எதையும் பங்கிட்டுத் தரமுன்வருவதில்லை. கிட்டாத பலாப்பழம் அழகான குறியீடு. கிட்டாத செல்வம், கிட்டாத வெற்றி, கிட்டாத அன்பு என அதைப் பல தளங்களில் விரிவுசெய்துகொள்ளமுடியும்.
வண்ணநிலவன் எழுதத்தொடங்கி நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் பலவிதமான தத்துவப்பார்வைகள் அறிமுகமாகி இலக்கியத்துடன் உறவாடி மறைந்துவிட்டன. அனைத்தையும் கடந்து, இன்றளவும் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை நம் மனம் நெருக்கமாகவே உணர்கிறது. அவருடைய சிறுகதைகளை தமிழின் முக்கியப்பங்களிப்பாக கருதவைக்கும் முக்கியமான அம்சம் மனிதர்கள்மீது அவர் வைத்திருக்கும் பார்வை. மிக எளிய மனிதர்களிடம் அபூர்வமான வெளிப்படும் ஒளிப்புள்ளிகளை அவர் கண்கள் இயற்கையாகக் கண்டடைகின்றன. பறத்தலின் ஊடே, அபூர்வமான உயரத்தைத் தொட்டு இறங்கும் பறவையின் பயணப்பாதையை, பறவை நோக்கர்கள் கண்டறிவதுபோல. அவர் படைப்புகள்வழியாக, அவற்றை நாம் மீண்டும் கண்டடைகிறோம்.
(பவுத்த அய்யனார் ஆசிரியராக இருந்து பிரசுரித்து வந்த
‘நேர்காணல்’ இதழுக்காக 2010 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை)