Home

Saturday 16 July 2016

தங்க மாலை - சிறுகதை


-1-

            பொம்மையப்பாளையம் ஓடைக்கரையை நெருங்கும்வரை வீரமுத்துவின் மனத்தில் இருந்த திட்டமே வேறுஇருட்டும்வரை கரைக்குப் பக்கத்தில் காட்டுக்குள் சுற்றித் திரிவது, அதற்குப் பிறகு சுற்றுவழியாகவே முத்தியால்பேட்டை சென்று சாவடியில் தங்குவது, நள்ளிரவுக்குப் பிறகு ஒதியஞ்சாலை வழியாக தங்கசாலைக்குள் நுழைவதுஅதுதான் அவன் மனசிலிருந்த திட்டம்ஓடைக்கரையைத் தொட்டதுமே மனம் மாறியதுசெங்கேணியின் முகமும் சிரிப்பும் நினைவுக்கு வந்து திசைதிருப்பிவிட்டனஈர மினுமினுப்போடு சுழலும் அவள் கண்கள் மனத்தில் மீண்டும்மீண்டும் தோன்றிச் சிமிட்டடினஆசையும் அழைப்பும் வசீகரமும் கொப்பளிக்கும் கண்கள்அக்கணமே அவன் நடந்துவந்த திசையை மாற்றினான்.

            ஆனந்தரங்கம் பிள்ளை நியமித்த காவலாட்கள் சுற்றிச்சுற்றி எல்லாச் சாலைகளிலும் முக்கியச் சந்திப்புகளிலும் இரவும் பகலும் குதிரைகளிலும் கால்நடையாகவும் திரிந்து கண்காணிக்கிற செய்தி பத்து நாட்களுக்கு முன்னதாகவே அவனுக்குக் கிடைத்திருந்தது. ஊர் எல்லைச் சத்திரங்கள் எப்போதுமே கண்காணிப்பில் இருந்தன.   கவர்னர் மாளிகை இருந்த தோட்டத்தைச் சுற்றி நானூறு காவலர்கள் காவல் காப்பதாகவும் செய்தி கிடைத்திருந்தது. அவர்கள் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வை மீறி, எப்படியாவது செங்கேணியைச் சந்தித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி அவனைச் செலுத்தத் தொடங்கியது.
            செங்கேணியைப்பற்றிய நினைவுகள் படரத் தொடங்கியதும் அவள் மனம் சிலிர்க்கத் தொடங்கிவிடும். அவளுடைய நெருக்கம் அவனை ஒரு படகுபோல மிதக்கவைக்கும் தன்மையுடையதுஅவள் இறுக்கமாகத் தழுவும் ஒவ்வொரு முறையும் அவன் மனம் வானத்தில் பறக்கத் தொடங்கிவிடும்மேகங்களைக் கடந்து குன்றுகளைக் கடந்து, நிலவைக் கடந்து நட்சத்திரக்கூட்டத்தைக் கடந்து பறந்துகொண்டே இருக்கும்அவனை ஒரு மனிதனாக உணரவைக்கும் கணங்கள் அவைஅவன் வாழ்வதே அவளுக்காகத்தான் என்று தோன்றும்அவளைத் தவிர அவன் உலகத்தில் எல்லாவற்றையும் வெறுத்தான்ஊரையும் மனிதர்களையும் கட்டோடு பிடிக்கவே இல்லைநடமாட்டமே அற்ற ஒதுக்குப்புறத்தில் தன்னந்தனியே வாழ்வதுகூட பிடிக்கவில்லைஎதைப் பார்த்தாலும் ஒரு தீவிரமான வெறுப்பு பொங்கிப்பொங்கி வந்தது. மனிதர்களின் உரையாடல்களிலும் பார்வையிலும்வெளிப்படும் அற்பத்தனங்களைக் கண்டு எரிச்சல் படராத சமயமே இல்லை. ஆதரவில்லாமல் நாடோடியாக கிளம்பிய பிறகு அலைந்து பட்ட அனுபவங்களின் கசப்பு அவன் நெஞ்சில் மிதந்தபடி இருந்தது. பிரித்தறிய முடியாத அந்த சின்ன வயசிலேயே வெறுப்பின் விதை அவன் நெஞ்சில் ஆழமாக விழுந்துவிட்டதுஇளமைத் தினவுக்கான வடிகாலாத்தான் அவன் தொடக்கத்தில் செங்கேணியை நாடிச் சென்றான்நீண்ட தலைமுடியும் ஒரு சிற்பம்போன்ற உடலழகும் கருத்த பெரிய விழிகளும் அவனை இன்பத் தடுமாற்றத்தில் ஆழ்த்தின. அவள் தழுவிய  கணங்களில் அவள் உடலும் மனமும் உணர்ந்த பரவசமும் அவனால் நம்பமுடியாததாக இருந்ததுஅந்த அமைதியிலும் நிம்மதியிலும் மீண்டும்மீண்டும் தோய்கிற விருப்பம் ஒரு ஏக்கமாக அவன் நெஞ்சில் சுடர்விடத் தொடங்கியது. அதே சமயத்தில் ஏதோ ஒரு நெகிழ்ச்சியின் காரணமாக அது தனக்குத்தானே இட்டு நிரப்பிக்கொள்கிற கற்பனைதானோ என்கிற சந்தேகமும் அவனை வாட்டியெடுத்தது. யோசித்து யோசித்து குழப்பத்தில் தலை வெடித்துவிடுவதுபோல தோன்றும். மறுவாரமே மீண்டும் அவளை நாடிச் சென்றுவிடுவான்அவள் சிரித்துப் பேசி, இறுக்கித் தழுவத் தொடங்கிய கணத்தில் மீண்டும் அவன் மனம் ஆழ்ந்த அமைதியை உணரும்பறவையைப்போல மேலே மேலே பறந்து செல்லும் அனுபவத்தை அப்போதுதான் அவன் புரிந்துகொண்டான்.
            கொய்யாத் தோப்பைக் கடந்தபோது மொட்டைப்பாறையொன்றின் மீது இரண்டு பூனைகள் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டும் விரட்டியோடிக்கொண்டும் கவ்விக்கொண்டும் விளையாடுவதைப் பார்த்தான்வெள்ளைவெளேரென்ற பஞ்சுப்பொதி மாதிரி முடியடர்ந்த பூனையொன்று. நெற்றியில் திலகிமிட்டதுபோல வெள்ளைவட்டத்தோடு உடல்முழுக்க கருத்து பருத்த பூனை மற்றொன்றுஅவை ஆடிக்கொண்டிருந்த இடத்திலிருந்தே அவன் காலடிச் சத்தத்தைக் கேட்டு எச்சரிக்கையடைந்து ஒருகணம் நின்று உற்றுநோக்கினகாதுமடல்களைக் குவித்து நெருங்கிவரும்  ஓசையைக் கவனித்தபடி வேறு பக்கம் திரும்பி ஓடுவதற்கு தயாரான நிலையில் இரண்டும் நின்றிருந்தனவேறு ஏதோ கவனத்துடன் அவன் வேகவேகமாகக் கடந்துசெல்வதைக் கண்டதும் அவன் செல்லும் வரையில் அசையாமல் அவனையே பார்த்திருந்தனகூடடையவந்த பறவைகளின் இரைச்சல் காடு முழுக்கவும் நிறைந்திருந்தது.
            இடைவிடாது ஓசையிடும் பறவையென முதல் சந்திப்பில் தொடர்ச்சியாக அவள் கேட்ட கேள்விகளை நினைத்துக்கொண்டான் வீரமுத்துஅவன் கண்களைப் பார்த்து நேருக்குநேராகவே கேட்டாள். அவன் தன்னை ஒரு திருடன் என்று சொன்னதைக் கேட்டு ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்ததுபோல நடுங்கி விலகினாலும் மறுகணமே இயலபுநிலைக்குத் திரும்பி புன்னகை சிந்தினான்.  "என்ன திருடுவ? பணமா, நகையா, பொருளா?" என்று அவன் முகம்பார்த்துக் கேட்டாள். "எது கெடைக்குமோ அது" என்று சிரித்தான். அவள் கையை வாங்கி உள்ளங்கையில் முத்தமிட்டான் அவன்மருதாணிவட்டம் அவள் உள்ளங்கையிலும் விரல்நுனிகளிலும் சிவந்திருந்தது. "சில சமயங்கள்ள சும்மா ஒரு வெளயாட்டுக்கு ஆடு கோழிகூட திருடியிருக்கேன்" என்றான். அவள் அவனுடைய கழுத்தை வளைத்து தன்னைநோக்கி இழுத்தபடி "சத்தியமா சொல்றியா?" என்று கேட்டாள்அவனும் அவள் முகத்தை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு கூந்தலுக்குள் விரல்களால் அளைந்தபடி "ஆமாம், ஏன் ஒனக்குப் புடிக்கலையா?" என்று மெதுவாகக் கேட்டான். செங்கேணி நெருங்கிவந்து அவன் தோளில் கைவைத்தாள்.  "எந்தத் தொழிலா இருந்தா என்ன? அததுக்கு ஒரு ஞாயம் தர்மம் இருக்கும் மனஷனா இருந்தா சரி" என்றாள்
ஞாபகங்களை அசைபோட்டபடி காட்டைக் கடந்தான் வீரமுத்து. பூமியின்மீது முற்றிலுமாக இருள் படர்ந்துவிட்டதுதிருட்டை அவனால் துறக்கவே முடியவில்லைஊர்க்கடைசியில் அவனுக்குச் சொந்தமாக ஒரு துண்டு நிலம் இருந்தது. ஆனால் விவசாயத்தில் அவன் மனம் பதியவே இல்லை. விவசாயம் வெறுக்கும்போது திருட்டிலும் திருட்டு அலுக்கும்போது விவசாயத்திலுமாக மாறிமாறி ஈடுபட்டான்பணத்துக்குக் குறையெதுவும் இல்லை. தட்டிக்கேட்க யாருமில்லாத சூழல் போகம், கொண்டாட்டம் என்று வேறொரு திசையில் வெகுதொலைவு இழுத்துச் சென்றுவிட்டது.
            ஆயிரம்கால் மண்டபத் தூண்களைப்போல ஏராளமான விழுதுகள் மரமாகிப் படர்ந்து விரிந்திருந்த ஆலமரத்துக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தான்அதன் ஒருபக்கம் சரிவில் குளம் தேங்கியிருந்ததுஒரு வெண்மேகத்துண்டின் நிழல் குளத்துக்குள் அசையாத துணிமூட்டைபோல காணப்பட்டதுஎல்லா இடங்களிலும் இருள் கனத்திருந்ததுசின்னச்சின்ன பூச்சிகள் கூட்டமாகப் பறந்துவந்து முகத்தில் மோதிவிட்டு கடந்துபோனதுஒரு விழுதுக்கருகே மாட்டுச் சாணத்தின் மணம் வீசியது. வழிதெரியாமல் தொலைந்துபோன ஒரு மாட்டின் குரல் காட்டின் நடுவே கேட்டதுஆலமரத்துக்குப் பக்கத்தில் இருந்த பாறை மீது உட்கார்ந்தான்களைப்பு நீங்கியதும் துணிகளைக் கழற்றி விழுதுகளின்மீது வைத்துவிட்டு குளத்தில் மெதுவாக இறங்கி இடுப்பளவு அழத்தில் அமர்ந்தான்தொடைகளை உரசிக்கொண்டு அயிரைமீன் கூட்டம் சென்றது.
            தண்ணீரின் குளுமையும் சிலிர்ப்பும் செங்கேணியின் ஞாபகத்தை இன்னும் அதிகப்படுத்தினஅவளைத் தழுவும் கணத்துக்காக மார்பு துடிப்பதை அவளால் உணரமுடிந்தது. உடலில் ஒருவித முறுக்கம் படர்ந்து ரத்தம் ஓட்டம் பெருகியதுகாட்டுக்கு அந்தப் பக்கம் ஒருபுறம் நெல்வயல்களும் இன்னொரு புறம் முந்திரித் தோப்புமாகக் விரிந்திருக்க, இடையில் நீண்டுசெல்லும் ஒற்றையடிப்பாதையில் அவன் மனம் குவிந்திருந்தது
            உரையாடலின் நடுவே அவனைத் தூண்டிவிடும் சந்தர்ப்பங்களை மிக இயற்கையாக உருவாக்குவதில் செங்கேணி மிகப்பெரிய கெட்டிக்காரி. அவளுடைய மனஉணர்வுகளை ஒருபோதும் கண்டறிய முடிந்ததில்லைஅந்தரங்கமான உறவுக்குப் பிறகு, அவன் அவளுக்காக கொண்டுவந்திருக்கும் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், வளையல்கள் என எடுத்துக்கொடுப்பான். அவற்றை ஆசையோடு வாங்கியதும் வன் மார்பில் புதைந்தபடி ஒரு முத்தம் கொடுப்பாள்நல்லா அழகா இருக்குதே என்றபடி கைவிரலால் அவற்றை உருட்டியபடி நிமிர்ந்து கன்னத்தில் இன்னொரு முத்தம் தருவாள்மனம் இளகி அவள் சொல்வதையெல்லாம் கேட்டபடி மயங்கிக்கிடக்கிற ஆனந்தத்துக்கு இணையாகச் சொல்ல உலகில் எதுவுமே இல்லை. சீண்டியபடியே அவனைச் சாய்த்து, அவன்மீது அழுந்திப் புரண்டு படுக்கையின் மறுபுறம் இருக்கும் ஒரு பெட்டிக்கருகே சென்று, திறந்து ஒரு தங்க அட்டிகையைக் காட்டி "இது நல்லா இருக்குதா?" என்று அப்பாவியாகக் கேட்டாள்அதன் ஒவ்வொரு வேலைப்பாடும் மறுத்துச் சொல்லமுடியாதபடி அழகாக இருந்தது. அந்த அட்டிகையை அவள் கழுத்தருகில் வைத்துப் பார்த்து "ரொம்ப அழகா இருக்குது" என்றான். அவள் உடனே "துப்பாக்கி நாய்க்கரு குடுத்தாரு" என்றாள். ஒருகணம் அவன் துணுக்குற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். "யாரு?" என்றான் மீண்டும்.  "துப்பாக்கி நாய்க்கரு" என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.
            "அவரு செஞ்சிப்பக்கம்னுதானே சொல்வாங்கபெரிய கொள்ளக்காரராச்சே, இங்க எப்பீடி?" என்று இழுத்தான்.
            "நீ இங்க எப்பிடியோ, அவரும் அப்பிடி"
            வார்த்தை வராமல் அவன் அவளையே ஒருகணம் உற்றுப் பார்த்தான்.
            "வேட்டைக்கு இந்தப் பக்கமா வரும்போது இங்கயும் ஒரு நட வந்துட்டு போவாரு."
            அவன் அதைக் காதிலேயே வாங்காதவன்போல, "இதவிட பெரிசா ஒனக்கு நான் தருவேன்.."  என்று வேகமாகச் சொன்னான் அவன்.
            "தங்கத்திலயா?" அவள் தயங்கி குரலெழாதபடி கேட்டாள்.
            "ஆமாம்" அவள் உதடுகள்மீது அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு சொன்னான். அதைக் கேட்டு அவள் கண்களில் படரத் தொடங்கிய  வெளிச்சத்தைக் கண்டு அவன் மனத்தில் பித்தேறி நிலைகுலையவைத்தது. மனம் பதற அவளைப் பார்த்தபோது உடல்முழுக்க ஒரு வெப்பம் பரவியதுஉடனே அங்கிருந்து எழுந்து கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தான்ஒவ்வொரு நொடியும் ஒருவித இயலாமை அவன் உடல் நரம்புகளில் துடிக்கத் தொடங்கியதுஇலக்கில்லாத எரிச்சலும் கோபமும் சுயவெறுப்பும் நெஞ்சில் நிரப்பியது. படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து துணிக்கொடியின் பக்கமாக ஆடையை எடுக்க கையை நீட்டினாள்.
            "ஏன் எழுந்திட்ட? இது புடிக்கலையா?" என்று குழம்பியவனை தடுமாறிய சொற்களோடு நகர்ந்து படுக்கையின் விளிம்புக்கு வந்து கேட்டாள் செங்கேணி. வேகவேகமாக சேலையைச் சுற்றிக்கொண்டபடி அவனைத் தொட்டு இழுத்தாள்அவன் மெதுவாக "இதைவிட பெரிசா உனக்கு நான் தரேன்" என்று தொடர்பில்லாமல் சொன்னான். அவள் உற்சாகமான புன்னகையோடு அவளைத் தாவித் தழுவி மீண்டும் படுக்கையில் தள்ளினாள். உத்வேகம் தணிந்த நிலையில் எதுவும் செய்யத் தோன்றாதவனாக அவள் முத்தங்களைப் பெற்றுக்கொண்டு கூரையைப் பார்த்தபடி கிடந்தான் அவன்பிறகு அவள் கேட்காமலேயே இதவிடவும் பெரிசா நான் ஒனக்கு தரேன் என்று அழுத்தமாகச் சொன்னான்.
            அதற்குப் பிறகு, செங்கேணியைப் பார்க்கச் சென்ற ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏராளமான பணம் கொடுக்கமட்டுமே முடிந்ததே தவிர அவளுக்குத் தர பிரியப்பட்ட  தங்க நகையைக் கொடுக்கமுடியவில்லை. அவன் மேற்கொண்ட திருட்டுகளில் கிடைத்தவை அனைத்தும் சின்னச்சின்ன வளையல்கள். கம்மல்கள், மூக்குத்தி, தோடுகள்செங்கேணிக்கு தர நினைத்தது ஒரு பெரிய தங்கமாலை. அது கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் அவள் வீட்டில் நுழைந்ததுமே தன் முயற்சி பலிக்காததைப்பற்றி எப்படியாவது ஒரு குறிப்பை அவளுக்கு முதலிலேயே உணர்த்திவிடுவான். மெல்ல குரலை தாழ்த்தி, "என்னைக்கு கெடைக்குதோ, அன்னைக்கு எடுத்தாந்து தந்தா போதாதா? அதயே மனசுல வச்சிகினு ஏன் கொமஞ்சிங்கெடக்கற? நான் சும்மா அன்னிக்கு வெளயாட்டுக்குத்தான் சொன்னன் தெரியுமா?" என்பாள். அந்தக் கொஞ்சும் குரலை கேட்ட பிறகுதான் அவன் மனத்தின் பாரம் விலகும்மனசுக்குள் புகுந்து அடங்கிக் கிடந்த ரகசியத்தைப் பார்த்து அவள் சொல்லிவிட்டதைப்போல ஒரு கூச்சம் அவனைக் குறுகுறுக்கவைக்கும். என்ன செய்ய, என்னபேச என்று அவன் தடுமாறித் தயங்கும் நேரத்தில் அவள் அவனை இறுக்கமாக அணைத்துத் தழுவிக்கொள்வாள்.
            தழுவும்போது மூடியிருக்கும் செங்கேணியின் கண்கள் ஒருபோதும் அவன் நினைவைவிட்டு அகலாத சித்திரம்அந்தக் கண்களிலும் மிருதுவான கன்னங்களிலும் அவனுக்காகவே காத்திருந்ததுபோன்ற ஏக்கமும் மகிழ்fச்சியும் துளிர்த்திருப்பதைக் கண்டான் அவன்அந்த ஏக்கத்தில் ஒரு சிறு பங்காவது தங்கமாலைக்கானதாக இருக்குமோ என்ற எண்ணம் முள்ளாக நெருடித் தவிக்கவைக்கும். தங்க மாலையை ஏன் கேட்டாள்? ஆசைக்காகவா? இயலாமை கலந்த தவிப்பை ஆழ்மனத்தில் ஏற்படுத்தவா? துப்பாக்கி நாயக்கரின் பெயரை மீண்டும்மீண்டும் இழுத்து கலங்கவைப்பது எதற்காக? போட்டியுணர்வை நெஞ்சில் விதைக்கும் முயற்சியா? என்ன நினைக்கிறாள் அவள்? எதுவாக இருந்தாலும் சரி, எல்லா விதங்களிலும் இணக்கமாக வளைந்துகொடுத்து இன்பத்தை உணரவைப்பவள் செங்கேணி என்பதில் ஒருதுளியும் ஐயமில்லை என்று நினைத்துக்கொள்வான்.
            ஒருமுறை செங்கேணி தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்ட விவரம் நினைவில் உதித்ததுஒரு புராணக்கதையைப்போல அவள் அதை தன் ஞாபகத்திலிருந்து விவரித்துச் சொன்னபோது கனிந்து உருகிய அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது
            புதுச்சேரித் துறைமுகத்தில் அரிசி மூட்டைகளும் சர்க்கரை மூட்டைகளும் திருடப்படுவதை கண்டுபிடிக்க கவர்னரால் நியமிக்கபட்ட சிறப்புக் காவல்படை எல்லா மூலைகளிலும் காவலிருந்ததுஆனந்தரங்கம்பிள்ளை பொறுப்பேற்றிருந்த தொடக்க காலகட்டம் அது. ஆறு நாட்கள் யாரும் அகப்படவில்லை. ஏழாம் நாள் நள்ளிரவில் ஒரு கும்பல் பதுங்கிப்பதுங்கிச் செல்லும் காட்சியைப் பார்த்துவிட்டார் ஒரு காவலர். அதட்டியபடி அவர்களைப் பிடிக்க ஓடினார் அவர். அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள் இருந்தன. தப்பித்து திசைக்கொருவராக ஓடினார்கள். சத்தம் கேட்டு ஓடிவந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டபடி விரட்டினார்கள். திருட்டுக்கும்பலும் சுட்டது. தவறிப் பாய்ந்த ஒரு துப்பாக்கிக்குண்டு, காவலுக்காக நின்றிருந்த ஆறுமுகத்தின்  நெஞ்சில் பாய்ந்து உயிரைக் குடித்தது. புருஷன் இறந்த சோகத்தில் அவள் மனைவி அரளிவிதையை அரைத்துக் குடித்துவிட்டு உயிரைத் தானாகவே மாய்த்துக்கொண்டாள். ஆதரவில்லாத மூன்று வயது செங்கேணியை மீனவர்குடிக்குப் பக்கத்தில் இருந்த கணிகை இன்பவல்லி எடுத்து வளர்த்தாள். அவள் சொல்லித்தான் அம்மா அப்பா காதயையே அவள் முழுமையாகத் தெரிந்துகொண்டாள்இன்பவல்லி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோணத்திலிருந்து அந்தக் கதையைத் திரும்பத்திரும்பச் சொல்லி, அதை ஒரு புராணச் சம்பவம்போல அவள் மனத்தில் பதியவைத்திருந்தாள்பருவ வயதில் அவள் கொடுத்த பாதுகாப்பு மறக்க முடியாதது. கருக்கலைப்பின்போது பிழையாக நிகழ்ந்துவிட்ட வைத்தியமுறை அவள் உயிரையே பலிவாங்கிவிட்டதுஅந்தக் கூட்டத்திலிருந்து அவளைப் பிரித்து வெளியே அழைத்துச் சென்ற ஒரு நாடோடிப் பாட்டுக்காரன் நகரத்தைத் தாண்டி ஓடைக்கரையில் அவளைக் குலைத்துவிட்டுச் சென்றான். அதன்பிறகு, காமத்தை ஒரு தொழிலாக நடத்தினாலும் அவள் எல்லாரையும் அனுமதிப்பதில்லைஅவளுக்கென்று ஒரு கணக்கு இருக்கிறது. அதன்படிதான் நடக்கும். அதைமீறி வேறு யாரும் நெருங்காதபடி அவளுடைய ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள்.
            நினைவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலைந்தனமனத்திலும் உடலிலும் ஒருவித முறுக்கம் சிறுகச்சிறுகப் படர்வதை உணர்ந்தான்வயல்வெளிகளிலிருந்து விலகி தரிசாகக் கிடந்த ஒரு மொட்டைக் குன்fறின்மீது ஏறி ஒருகணம் நின்றான்காற்று அப்படியே அள்ளிச்சென்று மிதப்பதுபோல வீசியது. அவன் மார்பில் அந்தக் காற்று மோதியபோது செங்கேணி விரல்நீட்டி தீண்டுவதுபோல உணர்ந்தான்அந்தக் கனவை அசைபோட்டபடி அவசரம்அவசரம் என அவன் மனம் துடித்தாலும் குன்றின் மறுபக்கமாக மெதுவாகவே இறங்கினான். பழகிய தடமென்றாலும் அடர்ந்திருந்த இருள் தடுமாறவைத்தது. இலுப்பைமரத்தடியில் மக்கிக்கிடந்த சருகுகள் மணம் குப்பென்று வீசியதுஅவள் வீட்டை நெருங்கியபோது மனம் ஏதோ ஊஞ்சலில் ஆடுவதுபோல இருந்ததுநெஞ்சில் சிறகசைத்தபடி இருந்த பட்டாம்பூச்சிகள் ஒரே கணத்தில் அடங்கி அமைதியடைந்ததுபோலவும் இருந்தது.
            பின்கதவை வழக்கமான குறிப்புப்படி தட்டி மெதுவாக ஓசையெழுப்பிவிட்டு காத்திருந்தான்தோட்டத்தில் வாழைமரங்கள் அசைந்தனநித்யமல்லியின் மணம் நெஞ்சைத் துளைத்ததுசில கணங்கள் இடைவெளிக்குப் பிறகு கதவைத் திறந்து செங்கேணி வந்தாள்நுனியில் முடிச்சிடப்பட்ட தலைமுடி தோளிலும் முதுகிலும் புரண்டிருந்தது. அகல்விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பல மடங்கு வசீகரமாகத் தெரிந்ததுஅழகான தோள்கள்அளவான இடுப்பு. ஒரு கையில் விளக்கும் இன்னொரு கையில் முந்தானைத்துணியுமாக அவள் நின்ற கோலம் பித்துக்கொள்ளவைத்ததுஆச்சரியத்தோடு கண்மலர தகவலே இல்லாம திடுதிப்புனு வந்து நிக்கறியே வாவா என்று உள்ளே அழைத்தாள்.
            வீரமுத்து தன் உடலில் ஒரு வேகம் பரவி தவிக்கவைப்பதையும் மார்புத் தசையில் ஒரு முறுக்கம் படர்வதையும் அடிவயிற்றில் ஒரு நெருப்பு பொங்கி நெஞ்சுவரை சுடரவிட்டு எரிவதையும் உணர்ந்தான்.  "தங்கவாசலுக்கு கௌம்பனேன். நடுவுல ஒன் ஞாபகம் வந்திச்சி. கொஞ்ச நேரம் தங்கிட்டு போவலாம்ன்னு இங்க திரும்பிட்டேன்" என்றான்.
            "சரி, உள்ள வா" என்றவள் கதவைத் தாளிட்டுவிட்டு அகல்விளக்கோடு முன்னால் நடந்தாள். "யாரும் இல்லாத வேளயா போனது நல்லதா போச்சி. இல்லன்னா எனக்குத்தான் கேவலம்..." என்று சிரித்தாள். அகல்விளக்கை ஒரு கட்டையின்மீது வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
            வீரமுத்து எதிரில் உட்கார்ந்தான். அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தான்அவன் உடம்பில் ஒருவித வேகம் தொற்றி அலைக்கழித்தது. அவள் கண்களை ஆழமாகக் கவனித்தான்புருவங்களை உயர்த்தி அவனைப பார்த்து ரகசியமான குரலில் "என்ன இன்னைக்கு ரொம்ப வேகமா இருக்கறாப்புல தெரியுது..." என்றாள்.
            வீரமுத்து அவளை நெருங்கி இழுத்துத் தழுவினான். "மெதுவா.. மெதுவா.." என்று முனகியபடி சிரித்தாள் செங்கேணி. உண்மையில்  அவள்தான் அவனை இறுக்கித் தழுவியிருந்தாள். அந்த நெருக்கமும் முத்தமும் அவனைக் கிளர்ச்சியுறவைத்தனஅவளது வேர்வை மணமும் கூந்தல் மணமும் அவனைத் தாக்கின.
            "பிரான்சிலேருந்து தங்கம் வந்து எறங்கியிருக்குது. ராணிக்கும் ராணி குடும்பத்துக்கும்  தங்கசாலையில விதவிதமா அட்டிகைங்களும் மாலைங்களும் செய்றாங்களாம்..."
            அவள் மார்பில் குனிந்து முத்தமிட்டான்கட்டுப்படுத்த முடியாத ஒரு வேகம் அவனைச் செலுத்தியது. ஆசை மின்னும் கண்களுடன் அவள் உடல்முழுக்க மாறிமாறி முத்தங்களைப் பதித்தான்.
            "நாளைக்கி காலையில ஒரு தங்கமாலை உன் மார்ல கெடக்கும்..."
            ரகசியம்போல கொஞ்சியபடியே பஞ்சுபோல அழுந்திய அவள் வயிற்றில் முத்தமிட்டான். அவள் வளைந்து எழுந்து அவன் தலையைத் திருப்பி மெதுவாகச் சொன்னாள் "முடியுமா உன்னால? ஊரு முழுக்க காவல்னு பேசிக்கறாங்களே? ஆனந்தரங்கம்புள்ள சாதாரணமா நெனச்சிராத."
            அவன் பதிலே சொல்லாமல் அவள் உச்சந்தலையில் தொடங்கி நெற்றி, புருவங்கள், இமைகள், கண்கள், மூக்கு, கன்னம், உதடுகள் என எங்கெங்கும் முத்தமிடத் தொடங்கினான்
            "ரொம்ப கவனமா போசரியான விவரம் தெரியாம பெரிய எடத்துல கைவச்சிட்டு பிரச்சனயில மாட்டிக்காத. மொரட்டுக்கார சிப்பாய்ங்க. சுட்டாலும் சுட்டுருவானுங்க.."
            அவள் சொன்னதை அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லைஅவள் மார்பில் சரிந்தான்.
"துப்பாக்கி நாய்க்கராலயே அங்க நெருங்கமுடியலை. ஒன்னால எப்பிடி நெருங்கமுடியும்?"
            அந்த வார்த்தை அவனைக் குத்திவிட்டது. ஒருகணம் அவளை உதறிவிட்டு அவள் கண்களையே நேருக்குநேர் பார்த்தான்.  "முடியும் என்னால முடியும், நா யார்னு நீ தெரிஞ்சிக்கவேணாமா? ஒரு துப்பாக்கி நாய்க்கரில்ல, பத்து துப்பாக்கி நாய்க்கருக்கு சமம் நான் தெரிஞ்சிதா?" நிதானமாக குரலில் சொல்லி முடித்த பிறகு அவள் கண்களையே ஒருகணம் உற்றுப் பார்த்தான். அவளுக்குள் இனம்புரியாத ஒருவித தன்னிரக்கம் சுரந்தது. ஆற்றாமை பொங்கி அவள் தொண்டையை அடைத்தது. எதிர்பாராத கணத்தில் கண்ணீர் திரண்டுவிட கண்கள் தளும்பினசட்டென்று தாவி அவனைத் தன் பக்கமா இழுத்துச் சாய்த்தாள். ஏதோ பேச முயற்சி செய்தவனை "சரி விடு... சரி விடு..." என்று நிறுத்தி தன் உதடுகளைக் குவித்து ஈரமான அவன் கண்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டாள். முத்தத்தின் இறுதியில் மெதுவாகக் கடித்தாள். அவன் ஸ்ஸ் என்றபோது அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவளை இறுக்கமாகத் தழுவியபடி படுக்கையில் சாய்ந்தான் வீரமுத்து.
           
- 2 -

            நள்ளிரவு நேரம். பின்வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் வீரமுத்துகுளிர்க்காற்று சில்லென்று உடலைக் கூசவைத்தது. வெறும் மேங்கள்மட்டுமே படர்ந்திருந்த வானத்தைப் பார்த்தபடி சோம்பல் முரித்தான். கதவையொட்டி இருளில் நின்றிருந்த செங்கேணி அடங்கிய குரலில் ஐயனாரு சாமிதான் ஒனக்கு தொணயா நிக்கணும். கவனமா நடந்துக்க என்றாள். அவன் பேசாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். "துப்பாக்கி நாய்க்கரு கதய இழுத்தது என் தப்புத்தான்இவ்ளோ தூரத்துக்கு ஒன்ன அது தூண்டிஉடும்னு நான் அப்ப நெனைக்கவே இல்ல..." அவள் நெருங்கி வந்து அவன் கையைப் பற்றினாள். "சரி, பாக்கலாம்..." அவளை இழுத்து வேகமாக நெஞ்சோடு சாய்த்து இறுக்கமாகத் தழுவிய வீரமுத்து பிறகு வேகமாக நடந்து காட்டுக்குள் சென்றான்.
            முந்திரித் தோப்பைக் கடந்துசெல்லும்போது ஒரு புதருக்கருகே கருமையாக ஓர் உருவம் அசைவதைக் கண்டான். சட்டென இருளில் பின்வாங்கி சில கணங்கள் நின்று கூர்ந்து கவனித்தபோது அது எருமை என்பது புரிந்தது. குளத்தைக் கடந்து ஓடைப்பக்கமாகச் செல்கிற பாதையில் வேகவேகமாக நடந்தான். அருகில் ஒரு புதரிலிருந்து அஞ்சுமல்லியின் மணம் வீசுவதை உணர்ந்தான்அவன் வேகத்தை சற்றே குறைத்தது அந்த மணம். நெஞ்சில் காட்சிகள் வேகவேகமாகக் கலைந்து சரிந்தனசெங்கேணியின் கழுத்திலும் அக்குள் தசையிலும் உணர்ந்த மணம். ஒரு கோயில் சிற்பமென அவள் உருவம் பூத்து மறைந்தது. புன்னகையோடு நடையின் வேகத்தைக் கூட்டினான்.
            சீக்கிரமாகவே ஓடை நெருங்கியது. துண்டான பாதி வளையலைப்போல புதுச்சேரியைச் சுற்றி ஓடியது அந்த ஓடை. அதையொட்டி அடர்த்தியான நாணல் புதர்கள். உயரமான செம்மண் குன்றுஏறி இறங்கிய பிறகு, தெற்குநோக்கி இறங்கும் சாலையில் நடந்தான். தொலைவில் காவல் கோபுரம் ஒரு பொம்மையைப்போலத் தெரிந்தது.
            காலையில் இறங்கும் முன்பாக இருவரும் மரநிழலில் நின்றபடி வெகுதொலைவுவரை பார்வையை ஓட்டி நடமாட்டம் தென்படுகிறதா என்று பார்த்தான். ஆனந்தரங்கம் பிள்ளையின் காவல் வீரர்கள் எல்லாவிதமான பயிற்சிகளையும் கற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள். துளியும் இரக்கமில்லாதவர்கள். சந்தேகத்துக்குரிய ஆட்களைக் கொன்று பிடிப்பதற்குக்கூட அனுமதி இருந்தது. தவளகுப்பம், வீராம்பட்டினம் எனக் கடற்பகுதிகள் சார்ந்துமட்டுமே அதிகபட்ச கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேருக்குநேர் அவர்களை எதிர்கொள்வது ஆபத்தான சங்கதிஓடைவழியான சாலையைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம்.
முடிந்தவரையில் மரங்களின் நிழல்படிந்த இருட்பகுதியில்மட்டுமே நடந்து வேகமாக சாலையைக் கடந்தான். காரணமில்லாமல் பல எண்ணங்கள் குறுக்கிட்டுக் கடந்தன. எதிர்பாராதவிதமாக அம்மாவின் ஞாபகமும் சிறுவயதில் வாழ்ந்த கோர்க்காட்டு ஞாபகமும் மோதினகன்னியக்கோயில் சந்தைக்குப் போன அப்பாவுக்கு போதையூட்டி, அடங்காமல் அங்கே திரிந்துகொண்fடிருந்த காளையை அடக்கும் ஆசையைத் தூண்டிவிட்டார்கள் அவர் கூட்டாளிகள். வெற்றி பெற்றால் ஒரு புட்டி சீமைச் சாராயம். உசுப்பேற்றப்பட்ட அப்பா காளையை அடக்கச் சென்று அதன் கொம்புகளுக்குப் பலியாகி, கிழிந்துபோன துணியைப்போல விழுந்துவிட்டார். ரெட்டியாருக்குச் சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் சாணம் வாரிப் பிழைத்தாள் அம்மாதொழுவத்தை ஒட்டி ஒரு குடிசையைக் கட்டித் தந்து அங்கேயே வசிக்கும் ஏற்பாட்டுக்கு அம்மாவை உடன்படவைத்தார் ரெட்டியார். அவனை நெட்டைக்குதிரை என்று அழைத்துக் கொஞ்சினார் அவர். அப்போதிருந்த அவன் உயரம் ஒரு காரணம்எவ்வளவு தொலைவான இடமென்றாலும் காற்று வேகத்தில் ஓடிச் சென்று திரும்பும் நடத்தை இன்னொரு காரணம்.
            கழுத்துச் சங்கிலி தொலைந்துபோன தினம் "அந்த நெட்டக்குதிரதான் எடுத்திருப்பான், எனக்குத் தெரியாதா?" என்று ஆர்ப்பாட்டமாக சத்தம் போட்டார் ரெட்டியார்அம்மாவின் கெஞ்சுதலும் கண்ணீரும் அவரைக் கரைக்கவில்லை. "உண்மய அவன் வாயாலயே கக்கவைக்கறன் பாருடி" என்று சவுக்கமிளாரால் அடித்தார். இன்னொரு நாள் தூங்கப்போகும் முன்பாக கழற்றிவைத்திருந்த பாம்பு மோதிரத்தைக் காணவில்லை என்று துணிகளையெல்லாம் உருவி அம்மணக் கோலத்தில் தொழுவத்து உத்திரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, கீழே சோளத்தட்டைகளைக் குவித்து கொளுத்தி "உண்மய சொல்லுடா, சொல்லுடா..." என்று அடித்தார். "ஐயோ நான் இல்ல... ஐயோ நான் இல்ல..." என்று அவன் அழுத குரல் யாருடைய காதிலும் விழவில்லை. அந்த அவமானமோ, ரெட்டியாரின் வாரிசை வயிற்றுச்சுமையாக வாங்கிக்கொண்ட அவமானமோ கிணற்றில் விழுந்து உயிரைப் போக்கிக்கொண்டாள் அம்மாஅம்மாவுக்கு கொள்ளிபோட்ட பிறகு, ரெட்டியார் வீட்டிலிருந்து நாலு வெள்ளித்தட்டுகளையும் தம்ளர்களையும் உண்மையிலேயே திருடிக்கொண்டு கோர்க்காட்டைவிட்டு வெளியேறினான் வீரமுத்து. எங்கெங்கோ காடுகளிலும் மேடுகளிலும் அலைந்தான். இருபது வருஷங்கள். புதுச்சேரியின் அக்கம்பக்கத்தில் அவன் கால் படாத இடமே இல்லைஇளமைத்துடிப்பில் ஒரு முறை கப்பலேறி கொழும்புவரைக்கும் போய் வந்ததும் உண்டு. கஷ்டங்களுக்கு அஞ்சாமல் எந்த வேலையையும் செய்தான். அரைக்காணி நிலமென்றாலும் குனிந்த முதுகு நிமிராமல் வரப்பு முழுக்க அண்டை கழித்துவிட்டுத்தான் நிமிர்வான். எப்போதாவது தலைகீழாக அம்மணமாகத் தொங்கிய கோலம் நினைவின் ஆழத்திலிருந்து திமிறிக்கொண்டு மேலெழுந்து வரும்அன்று அவனால் தூங்கமுடியாதுபசித்த புலியைப்போல உறுமும் அவன் மனம்அது தூண்டிச் செலுத்தும் திசையில் சென்று கண்ணில் தென்பட்டதையெல்லாம் திருடிக்கொண்டு திரும்பியபிறகுதான் அடங்கும்.
            காற்றில் குளிர்த்தன்மை கூடிக்கொண்டே போனது. தொலைவில் கடலின் இருப்பை உணரமுடிந்தது. அடங்க மறுத்த ஒரு மிருகம்போல சதா உறுமிக்கொண்டே இருந்ததுசிறிதுநேரம் நின்று, அதன் இரைச்சலைக் கேட்டான்ஒரு சீறல்போல எழுந்து மெதுவாக உலர்ந்து, பிறகு பின்வாங்கும் அலையின் சத்தம்காவலர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தபடி இருட்டின் தடத்திலேயே எச்சரிக்கையோடு நடந்தான். தொலைவில் துறைமுகத்துக்கு அப்பால் விளக்குகள் சின்னச்சின்ன நட்சத்திரங்களென மின்னின. கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் சுழன்று செல்லும் கடிகார முள்ளாகப் படர்ந்து நீங்கியது. அடுத்தடுத்து குவிக்கப்பட்ட வைக்கோல்போர்கள்போல வீடுகள் இருட்டுக்குள் நின்றன. ஒரு நாவல் மரத்தடியில் நின்று சிறிதுநேரம் மூச்சு வாங்கியபடி அடுத்துச் செல்லவிருக்கும் திசையின் தடத்தை மனத்துக்குள் தீர்மானித்தான். பகல் வேளைகளில் பலமுறை நடந்துநடந்து பழகிய பாதை நெஞ்சில் விரிந்தது.
            குளம்புச்சத்தம் அருகில் கேட்டது. இருளில் மரத்தோடு மரமாக ஒட்டி நின்று பார்வையைச் சுழலவிட்டான். பாதங்களின் அழுத்தத்தில் நாவல் பழங்கள் நசுங்குவதை உணர்ந்தான். ஒரு பழத்தை எடுத்துத் தின்னவேண்டும்போல ஆவல் முட்டியது. என்ன முட்டாள்தனம் என்று தோன்றாமல் இல்லைபாதையின்மீது குவிந்த கண்கள் கவனம் கவனம் என்று பதற்றத்துடன் துடித்தன. ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல் நின்ற நிலையிலேயே அமர்ந்து விரலால் தடவி ஒரு பழத்தை எடுத்தான்ஒரு சிறிய குண்டுபோல உருண்ட பழத்தை உதடுகளிடையே வைத்து பல்லால் கடித்து சாற்றை உறிஞ்சிய பிறகு, மெதுவாக நாக்கால் உள்ளிழுத்தான். சுவையின் கிளர்ச்சி ஒருகணம் செங்கேணியின் மார்புக்காம்புகளை நினைவில் புரட்டித் தள்ளியது. அப்போது தன் நெஞ்சு வேகவேகமாகத் துடிப்பதை உணர்ந்தான். முட்டாள் முட்டாள் என்று தன்னைத்தானே கேலி செய்தபடி கண்முன்னால் மிடுக்காகக் கடந்துபோன குதிரைக்காவலனைப் பார்த்தான். அவன் தோளில் துப்பாக்கி தொங்கியது. அவன் கடந்துபோன சிறிதுநேரத்துக்கெல்லாம் இன்னொரு திசையிலிருந்து குளம்பச்சத்தம் நெருங்கி வந்தது. அந்தக் காவலன்f வேறொரு வீதிக்குள் குதிரையை நடத்திச் சென்றான்காவலின் கடுமையை அவன் மனம் துல்லியமாக உணர்ந்ததுஉடல்முழுதும் பரபரப்பின் வேகம் அதிகரிப்பது தெரிந்ததுநாவல் பழத்தின் கொட்டையை நாக்கின் நுனிவரை உருட்டிவந்து துப்பினான். பிறகு அந்த இடத்திலிருந்து கிளம்பி முற்றிலும் குறுக்குத் தெருக்கள் வழியாகவே நடந்துநடந்து தங்கசாலையின் சுற்றுச்சுவரை அடைந்தான்.
            சுற்றுச்சுவரின் சித்திரம் ஒரு வரைபடம்போல அவன் நெஞ்சில் பதிந்திருந்தது. அரசமரங்களும் இலவமரங்களும் அடர்ந்திருக்கும் சுற்றுச்சுவரோரமாக மதிலோடு ஒட்டியதுபோல ஒரே ஒரு ஆள்மட்டும் குனிந்து செல்லத்தக்க கல்பிளவைத் தேடி அடிமேல் அடிவைத்து அவன் நடந்தான். வேளைதோறும் வந்து கழிப்பறைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் ஆட்களின் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட வழி. பல நாட்களாக அலைந்துஅலைந்து அதைக் கண்டுபிடித்த தினத்தில்தான் தங்கமாலைக் கனவு அவனுக்குள் நெருப்புப் பிடித்ததுபோல சுடர்விட்டு எரியத் தொடங்கியது.
            சுவரோடு ஒட்டி நடந்து பிளவு வழியாக ஒடுங்கி உள்ளே நடந்தான். அரைக்கணம் நின்று இருபுறங்களிலும் பார்வையைப் படரவிட்டு நடமாட்டமின்மையை உறுதி செய்துகொண்டான். மெத்தென்ற புல்வெளியில் பனிமுத்துகளின் குளிர்மை படிந்திருந்தது. மல்லிகைப் பந்தல் ஆள் உயரத்துக்கு நின்றிருந்தது. அதற்குப் பக்கத்தில் நந்தியாவட்டை. செம்பருத்தி. ஒரே கணத்தில் அம்புபோலப் பாய்ந்து அந்தப் பந்தலுக்குக் கீழே சென்றானபந்தலுக்கு மறுபக்கம் மெத்தைக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெரிந்தன. மெத்தையில் இருக்கிற அறைதான் பொற்கொல்லர்களின் வேலைக்கூடம். ஒரு பூனையென படிமீது தாவி ஏறி ஓசையெழுப்பாமல் மேலே போனான். தங்கசாலையின் முகப்பில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதுஅசைவே இல்லாமல் சுவரோடு சுவராக ஒட்டியபடி ஒருகணம் உட்கார்ந்தான்.
            நாய் வெகுநேரம் குரைத்தபடியே இருந்தது. முழங்கால் மடித்து உட்கார்ந்திருந்தவனின் காதருகே கொசுக்கள் கும்பலாகப் பறந்து ஓசையெழுப்பின. இடைவிடாத ரீங்காரம் மூளைக்குள் ஊடுருவிச் சென்றது. அவன் மனம் தங்க மாலைகளையும் துப்பாக்கி நாய்க்கரையும் மாற்றிமாற்றி நினைத்தது. ஒருநாளும் நேருக்குநேர் பார்க்காத நாய்க்கர் கசப்பூட்டும் ஆகிருதியாக அவன் முன் தோற்றமளித்தார். திருட்டுத்தொழில் செய்பவராக இருந்தாலும் அவர் ஈட்டி வைத்திருந்த பெயரும் புகழும் ஆச்சரியமான விஷயங்கள். திருடன் என்னும் அவமானப் பெயரையே புகழுக்குரிய ஒன்றாக அவர் வாழ்க்கை மாற்றிவைத்திருந்தது. அவரைப்பற்றிய கதைகள் செஞ்சியிலிருந்து தொடங்கி புதுச்சேரிவரைக்கும் புராணக்கதைகளைப்போல பரவிக்கிடந்தன. மலையனூர்க் கோயிலுக்கு கல்யாணப் பெண்ணையும் பாத்திரங்களையும் நகைகளையும் ஏற்றிச் சென்ற வண்டிக்குக் காவலாக காட்டுப்பாதையில் இருபதுமைல் தூரம் பாதுகாப்பாக நடந்துசென்றது ஒரு கதை. கார்த்திகை அடைமழையில் பயிர்களெல்லாம் நாசமாகி சோற்றுக்கு வழியில்லாமல் பட்டினியால் அவதிப்பட்டது கிளியனூர் கிராமம். அதைப் பார்க்கச் சகிக்காத துப்பாக்கி நாய்க்கர் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான தானியக்கிடங்குக் கதவுகளை உடைத்து ஏராளமான நெல்மூட்டைகளையும் கேழ்வரகு மூட்டைகளையும் கொள்ளையடித்து வந்து கொடுத்தது இன்னொரு புராணம். குலதெய்வக் கோயில் கருவறைக்குள் யாருக்கும் தெரியாத சமயத்தில் புகுந்து காணிக்கை உண்டியலை உடைத்துத் திருடியவர்களை, ஓடஓட விரட்டிச் சென்று பிடித்து, திருடியதை மீட்டு கிராமத்துக்காரர்களிடம் ஒப்படைத்தது இன்னொரு புராணம். திருடனாகவே வாழ்ந்தாலும் சிறிதும் கௌரவத்துக்கு குறைவில்லாமல் சமூகமதிப்புள்ளவராகவே இருந்தார் துப்பாக்கி நாய்க்கர். அதுபோல ஆகமுடியாத ஏக்கம்  சிறுகச்சிறுக வெறுப்பாகவும் கசப்பாகவும் மாறி நெஞ்சிலேயே தேங்கிவிட்டது.
            பூனைபோல நகர்ந்துநகர்ந்து அறையின் அருகில் நின்றான். கதவில் தொங்கிய பூட்டைக் கையால் பிடித்து விரலாலேயே தடவிப் பார்த்தான். கையில் இருந்த கம்பியை எடுத்து கவனமாக நுழைந்து விரலை ஒரு பக்கமாகத் திருப்பி அழுத்தினான். ப்ளக் என்று மெலிதாக சத்தம்  வந்ததே தவிர திறக்கவில்லைஇடைவிடாமல் மீண்டும் மீண்டும் அப்படியே செய்தான். ஆறாவது முயற்சியில் பூட்டு விடுவித்துக்கொண்டதுஅதை அசையாமல் அப்படியே நிறுத்தி, தாழ்ப்பாளிலிருந்து விலக்கி சத்தமின்றி கீழே வைத்தான். கதவு உறுதியாக மரம்போல நின்றது. ஒருபக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டு மிகமிக மெதுவாக மறுபக்கக்கதவை அழுத்தித் தள்ளினான். மெல்லிய முனகலோடு கதவு திறந்தது. இரு பக்கங்களிலும் பார்வையை ஓட்டிவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்டான். அறை வெப்பமாக இருந்தது. இருள் பழகிய பிறகு, பெட்டிகளின் இடத்தைநோக்கி நடந்தான். முதுகில் வேர்வை சூடாக இறங்குவதை உணர்ந்தான்.
            ஏராளமான பெட்டிகளின் அடுக்கு குழப்பத்தைத் தந்தது. வறண்டுபோன உதடுகள்மீது நாக்கைப் புரளவிட்டு ஈரமாக்கிக்கொண்டான். குத்துமதிப்பாக ஒரு பெட்டியின்மீது கைவைத்து பூட்டைத் தடவினான். நெற்றியில் நரம்பு துடித்தது. பைக்குள் இருந்த கம்பியை எடுத்து பதற்றத்தோடு நுழைத்துவிட்டு ஒரு பக்கமாக இழுத்தான். ஒரே திருகலில் திறந்ததைக் குறித்து நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டான். வேகமாக பெட்டியைத் திறந்து கைவிட்டுத் துழாவினான். குறடா, திருப்புளிகள், சுத்தியல்கள், ஊதுகுழல்கள் என எல்லாமே சாமான்களின் குவியலாக இருந்தது. ஏமாற்றத்துடன் மூடினான்.
            அடுத்த பெட்டியை நோக்கி நகர்ந்தான். மேலும் மூன்று பெட்டிகளிலும் ஏமாற்றமே எஞ்சியது. முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுமோ என்னும் கலவரம் நெஞ்சை அழுத்தியது. காதுக்கு வந்த செய்திகளை அவசரமாக நம்பித் திட்டமிட்டுவிட்டோமோ என்னும் குழப்பத்தால் தடுமாறினான். உடல்முழுதும் வேர்வையில் நனைந்துவிட்டது. அகப்பட்டால் மரணமே தண்டனை. ஆனந்தரங்கம் பிள்ளை இரக்கமே இல்லாமல் தூக்கில் போட உத்தரவிட்டுவிடுவார். கால்கள் துடிக்க, கைகள் விலுக்விலுக்கென்று இழுத்துக்கொள்ள கழுத்தை இறுக்கும் கயிற்றில் துடித்துத்துடித்து அடங்கி இறுதியாக ஒரு சுரைக்காயைப்போல ஒரு உடல் கண்முன்னால்  தொடங்கி அசைவதுபோல உணர்ந்தான்சின்ன வயதில் தலைகீழ் கோலத்தில் அம்மணமாக உத்திரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மாட்டுத் தொழுவத்தின் சித்திரம் சத்தமில்லாமல்  தோன்றி மறைந்தது. அச்சத்தை உணர்ந்த கணத்தில் ஒரு கொடி அசைவதுபோல செங்கேணி நடந்துவரும் காட்சி தோன்றியது. அந்தச் சிரிப்பு. அந்த உடல். அந்தக் கழுத்து. அடுத்த நொடியிலேயே ஆபரணங்களுக்கான எல்லா நம்பிக்கைகளையும் அவன் மனம் மீண்டும் அடைந்தது. உற்சாகத்தோடு அதை விரல்களால் தடவிப் பார்த்தான். சந்தேகமே இல்லை. தங்கமாலைகள். எடுத்து உள்ளங்கைமீது பரப்பி கண்களால் ஊடுருவிப் பார்த்தான். நீருக்கடியில் விழுந்த மஞ்சள் கம்பிகளைப்போல இருந்தன. பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்தான். எல்லாமே தங்க மாலைகள். வெவ்வேறு அளவுகளில். வாரி வேகமாக பைக்குள் வைத்துக்கொண்டதும் அவன் மனம் நிறைந்துவிட்டது. இனிமேல் எது கிடைத்தாலும் தேவையில்லை என்கிற அளவுக்கு.
            அடிமேல் அடிவைத்து பின்வாங்கி கதவருகே வந்தான்கணநேரம் நின்று மெதுவாக ஒருபுறமாகத் திறந்துகொண்டு வெளியே கால்வைத்தான். பெருமூச்சுவிட்டான். அளவுகடந்த ஆனந்தம் அவன் நெஞ்சில் ததும்பி நின்றது. எங்கோ வானிலேறிப் பறப்பதுபோன்ற கற்பனை வளர்ந்தது. உல்லாசததின் உச்சத்தில் சுழன்றுவரும் கோபுர விளக்கின் ஒளிக்கற்றை தன் திசையைநோக்கி நகர்ந்து வருவதை ஒரு கணம் அவன் கண்கள் கவனிக்கத் தவறின. ஒளிக்கற்றை அவன் உருவத்தை முழுக்க அடையாளப்படுத்திவிட்டு ஒருநொடி கடந்துபோனது. தாண்டிச் சென்ற ஒளிக்கற்றை தயங்கி மாற்றுத்திசையில் பின்னகர்ந்து அவன்மீது மறுபடியும் பாய்ந்து நின்றது. அக்கணமே அவன் ஆபத்தை உணர்ந்தான். தாவித்தாவி ஓடினான். முற்றிலும் எதிர்பாராதபடி அபாயச்சங்கு ஒலித்தது. படிவழியாக இறங்காது மெத்தையைநோக்கி கைநீட்டியபடி நிற்கும் அரசமரத்தின் கிளையைத் தாவிப் பற்றி சரசரவென்று கீழே இறங்கினான். துப்பாக்கிக் குண்டுகள் அந்த மரத்தைநோக்கி ஒரே சமயத்தில் பாய்ந்ததும் மரத்தில் அடைந்திருந்த பறவைகள் ஒரே சமயத்தில் கலவரத்தில் கூச்சலிடத் தொடங்கின. குதிரைவீரர்களும் காவல்வீரர்களும் அந்தத் திசையைநோக்கிப் பறந்துவந்தார்கள். "திருடன்.. திருடன்... புடி... ஓடறான் பாரு... உடாதே..." என்று ஏராளமானவர்கள் கூவியபடி விரட்டிக்கொண்டு ஓடிவந்தார்கள்அவன் தங்கசாலையை விட்டு வேறொரு திசையில் ஓட ஆரம்பித்தான். கடற்கரைச்சாலையைத் தவிர்த்து உருளையன்பேட்டையைநோக்கி ஓடினான். காடுபோல அடர்ந்த மாபெரும் தோப்பு அது. அதற்குள் நுழைந்துவிட்டால் போதும். உயிர் தப்பிவிடலாம். தோப்புக்குப் பின்னால் ஏரி. ஏரியை ஒட்டியபடியே மறைந்துசென்றால் மீண்டும் பாக்கமுடையான்பட்டு தோப்பு. தப்பித்து ஓட பொருத்தமான வழி அதுவே என அவன் மனம் தேர்ந்தெடுத்ததுவெறி பிடித்தவன்போல நிற்காமல் ஓடினான். தங்கமாலைகளின் பையை அவன் கைகள் அழுத்தமாகப் பற்றியிருந்தனஅவன் ஓடிய திசைதெரியாமல் முதலில் குழம்பிய காவல் வீரர்கள் கடைசியில் நாய்கள் குரைத்தோடும் திசையிலேயே, சின்னச் சின்ன குழுக்களாகப் பிரிந்து ஆவேசமாகத் துரத்தினார்கள். துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் காட்டையே அதிரவைத்தது.
            பழகிய காட்டின் தடத்தில் அவன் ஒரு விலங்கைப்போல தாவித்தாவி ஓடினான்முட்புதர்களில் சிக்கி அவன் உடை கிழிந்தது. அவன் உதட்டின்மீது ஒரு கிளை மோதி தசை கிழிந்து ரத்தம் கசிந்தது. எங்கெங்கோ சரிவுகள். மரங்கள். புதர்கள். விழுந்து கிடந்த மரங்களில் தடுமாறிப் புரண்டான். ஒரு பள்ளத்தில் காலைவிட்டு நிலைகுலைந்து ஐயோ என்று அலறியபோது அவன்கைகள் பையை நெகிழவிட்டது. மறுகணமே அவன் புலன்கள் விழித்துக்கொண்டன. உதடு கிழிந்து வாய்க்குள் இறங்கிய ரத்தத்தைத் துப்பிவிட்டு விழுந்த பையை எடுத்து உறுதியாகப் பற்றிக்கொண்டான்.
            பின்னால் ஓடிவருகிறவர்களின் சத்தம் குறைந்துவிட்டது. இருட்டின் திசைதெரியாமல் குழம்புகிறார்கள் என்று தோன்றியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வெகுதொலைவு கடந்துபோகவேண்டும் என்று ஆவேசத்தில் எங்கும் நிற்காமல் ஓடினன். வெகுநேரத்துக்குப் பிறகு மிகவும் களைத்து ஒரு கொன்றைமரத்தின்மீது சாய்ந்தான். மூச்சு வாங்கியது. செங்கேணியின் சிரித்த முகும் அவன் கண்முன் நிழலாடி நின்றது. மெல்லிய அவள் உதடுகளையும் ஈரம் மின்னும் அகன்ற விழிகளையும் இமைக்காமல் பார்த்தான்அவள் கழுத்தில் சூட்டுவதற்காகவே இந்தத் தங்கமாலைகள். அவளருகே அமர்ந்து ஒவ்வொரு மாலையாக அணிவிக்கவேண்டும். துப்பாக்கி நாய்க்கருக்குமட்டும்தான் எல்லாம் தெரியும்னு நெனச்சிக்காத. என்னாலயும் முடியும் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொன்றையும் சூட்டவேண்டும்மாலைகளின் பதக்கங்கள் ஒன்றையடுத்து ஒன்றாக அவள் மார்புகளிடையே மின்னுவதை ஆசைதீரப் பார்க்கவேண்டும். தங்கமாலைகள்மட்டுமே அவள் உடலில் ஆபரணங்களெனத் தொங்க ஒரு சிலையென ஒயிலாக அவள் நிற்கும் தோற்றம் கண்களை நிறைத்தது.
            தெம்புவந்து அடியெடுத்து வைத்த கணத்தில் என்றுமில்லாத வகையில் உடல் பாரமாக இருப்பதை உணர்ந்தான். ஓடு ஓடு என்று மனம் உள்ளே கூவிக்கொண்டிருந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி ஏரிக்கரையைநோக்கி ஓடத் தொடங்கினான். விடிவதற்குள் காட்டைக் கடந்துவிடுவதுதான் பாதுகாப்பு. துரத்துகிறவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்போதே எல்லாவற்றையும் கடந்துபோய்விடவேண்டும் எனத் திட்டமிட்டது மனம். ஒரு பெரிய பாறை வழியைமறைத்ததுபற்றி ஏறி மறுபுறம் இறங்கி அடுத்தடுத்து ஓங்கி வளர்ந்திருந்த தேக்கு மரங்களைக் கடந்து ஓடியபோது அவன் இடதுதோளில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. காதருகே ஒரு எரிமலையே வெடித்துச் சிதறுகிற அளவுக்கு சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அஞ்சிய பறவைகளின் இரைச்சலால் காடு அதிர்ந்தது.
            அகப்படக்கூடாது என்று மனம் எச்சரித்தபடி இருந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு காட்டுவா மரத்தின் திருப்பத்தில் இறங்கி நிற்காமல் ஓடினான்முதுகெங்கும் ரத்தம் நனைந்து பெருகுவதை உணரமுடிந்தது. கவனத்தைக் குவிக்கிற திசையிலெல்லாம் நாய்களின் ஊளை கேட்டது. உயிர் பிழைக்கும் வெறியுடன் திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தான் அவன்.

- 3 -

            உடல் ரத்தம் முழுதும் வற்றிவிட்டதுபோல இருந்தது. ஓடிஓடி அவன் கால்கள் களைத்தன. களைப்பாற சாய்ந்திருந்த வேங்கை மரத்தில் சதுரமாகப் படிந்துவிட்ட ரத்தக்கறையை தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். ரத்தச்சுவடுகளைத் தேடிக்கொண்டு வருகிறவர்களுக்கு எளிதாக தடம்காட்டிவிடும் என்று பதறினான். அவசரத்தில் அந்தக் கறையைத் துடைக்கமுடியாதபடி அவன் கைவிரல்களிலும் ரத்தம் படிந்திருந்தது. சட்டென்று முடிவெடுத்து, எல்லாரும் எதிர்பார்க்கக்கூடிய திசைக்கு நேர்மாறான திசையில் ஓடினான். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து நெருங்குவதை அவன் மனம் உணர்ந்fதிருந்தது. ஏரியைத் தாண்டி தப்பித்துப் போகும்வரை விடியக்கூடாது என்று சொல்லிக்கொண்டான்.
            குன்றைநோக்கிச் செல்கிற ஒரு குறுக்குவழி தெரிந்தது. வேகமாக அந்தத் திசையில் மாறி நடந்தான். புதர்களின் முள் கீறியது. சட்டென்று தரையில் கைகளை ஊன்றி விலங்குபோல நகர்ந்து கடந்தான்காயத்தில் கிளைகள் குத்தும்போது வலி தலையையே பிளப்பதுபோல இருந்தது. பாறைகள் நடுவே சில கணங்கள் உட்கார்ந்து மூச்சுவாங்கினான்.   தங்கமாலைகள் கிட்டிய பரபரப்பில் ஒளிக்கற்றையை பொருட்படுத்த மறந்துபோன கவனப்பிசகை எண்ணி தன்னையே நொந்துகொண்டான். ஒரே ஒரு கணம்உயிருக்காக போராடும்படி வைத்துவிட்டது. பாறையைவிட்டு வெளியே வந்து, பாறைக்குன்றின் மீதேறி மறுபக்கத்தில் இறங்கினான். ஒருகணம் கால்கள் இடற கற்பாறைகள் சத்தத்தோடு சரிந்தன. அடுத்தடுத்து நேர்ந்த பிசகுகளை அவன் மனம் கெட்ட சகுனமாக நினைத்தது. முதல்முறையாக அவன் மனம் சோர்வில் ஆழ்ந்தது. கணநேரம் அசையாமல் அப்படியே உறைந்து நின்று எல்லாத் திசைகளிலும் பார்வையை ஓட்டினான்எங்கும் விபரீதமாகத் தெரியவில்லை என்பதை மனம் உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, பெருமூச்சோடு குன்றின் மறுபக்கத்தில் இறங்கினான். ஒவ்வொரு அடியையும் கனவமாக வைத்தான். அது பெரிய பள்ளமாக இருந்தது. முடிவே இல்லாமல் இறங்கிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. பல இடங்களில் கொடிகளில் அவன் கால்கள் இடறின. கிளைகளின் இடைவெளியில் மேகங்களில் நிழல் தெரியும் ஏரியின் நீர்ப்பரப்பைப் பார்த்த பிறகுதான் அச்சத்திலிருந்து மீண்டது அவன் மனம். தோற்றத்தைவைத்து ஏரிக்கும் அந்தப் பள்ளத்துக்கும் இடைப்பட்ட தொலைவைக் கணக்குப் போட்டது அவன் மனம்மிகக் கவனமாக கால்களை ஊன்றி பக்கவாட்டில் மாறி இறங்கினான்.
            சமதரைக்கு வந்ததும் ஏரியின் திசையைநோக்கி ஓடத் தொடங்கிய கணத்தில் எதிர்த்திசையிலிருந்து கூட்டம்கூட்டமாக காவலர்கள் ஆவேசமாக அவனைநோக்கி ஓடிவரும் காட்சியைப் பார்த்தான். ஒருகணம் திகைத்து உறைந்து, மறுகணமே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வேகமாக இறங்கிவந்த சரிவிலேயே ஏறிவிடத் தாவினான். வேகவேகமாக ஆறேழு அடிகள் கடப்பதற்குள் ஒரு பாறை தடுக்கிவிட கீழே தடுமாறிவிழுந்தான். அதே தருணத்தில் காவலர்களின் துப்பாக்கிக் குண்டுகள் காடுமுழுதும் எதிரொலித்தபடி அவனைநோக்கி வெடித்தன. குண்டோசையின் அதிர்ச்சியால் காடே குழம்பி, பறவைகள் கூடுவிட்டு வெளியேறி கலவரத்தோடு இரைச்சலிட்டபடி வானில் வட்டமிட்டனஅம்மா என்று அலறியபடி ஒரு மரத்தில் மோதி விழுந்தான் அவன்பதற்றத்தில் விரிந்த அவன் கையிலிருந்து நழுவிய பை அவன் அருகிலேயே விழுந்து பிரிந்து தங்கமாலைகள் தரையில் சிதறி உருண்டன. வற்றிப்போன மூச்சையெல்லம் திரட்டி அந்த மாலையை எடுக்க நகர்ந்தபோது பக்கவாட்டிலிருந்து வந்த மேலும் சில குண்டுகள் அவனைத் தாக்கின. விலாப்புறம் கிழிய மீண்டும் அம்மா என்ற அழுத்தமான முனகலோடு வயிறு தரையிலழுந்த கீழே கவிழ்ந்தான். கால்கள் வெட்டி இழுத்தன. மாலையின்மீது பதிந்த அவன் விழியில் செங்கேணியின் உருவம் நிரம்புவதை உணர்ந்த கணத்தில் இதயத்தின் துடிப்பு அடங்கியது.

(உயிர் எழுத்து - மாத இதழில் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதை)