ரவி
சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’
ஒரு குறிப்பிட்ட துறையில் காலம்
முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான
இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல
திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.
ஒரு பண்பாட்டுச்சூழலில் துறைதோறும் வாழும் அனைத்து ஆளுமைகளுக்கும் முதல் மரியாதை கிடைத்தல்
வேண்டும். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ்வதில்லை. எனினும் அந்த அமைதியை
அல்லது புறக்கணிப்பை ஆளுமைகள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய கவனம் எல்லாத்
தருணங்களிலும் தத்தம் துறைசார்ந்தே இயங்கும் தன்மையுடையதாகவே செயல்படுகிறது. நம் தமிழ்ச்சூழலில்
இன்றுவரை இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற எல்லாத் துறைகளிலும் வாழ்ந்து
மறைந்த ஆளுமைகளும் வாழும் ஆளுமைகளும் பலருண்டு. அவர்களைப்பற்றிய வாழ்க்கைப்பதிவுகளும்
நினைவுக்குறிப்புகளும் மிகமிக முக்கியமானவை. ஒரு சூழலில் வரலாற்றை எழுதும் தருணத்தில்
இத்தகு நினைவுக்குறிப்புகளுக்கு முக்கியமானதொரு இடம் உருவாகும்.
ரவி சுப்பிரமணியன் ஒரு கவிஞர்.
தன் கவிதைகள் வழியாகவே அவர் வளர்ந்து மேலெழுந்தவர். அவர் கொண்டிருந்த இசைநாட்டமும்
நாடக ஆர்வமும் ஆவணப்பட ஈடுபாடும் திரையுலகச் செயல்பாடுகளும் அதற்குப் பிறகு தெரியவந்த
அம்சங்கள். அவருக்குச் சொந்த ஊர் கும்பகோணம். வாழ்வதற்காக அவர் சென்று சேர்ந்த ஊர்
சென்னை. இரண்டு இடங்களிலும் அவர் தம் இயல்புப்படி தமக்குப் பிரியமான ஆளுமைகளோடு பழகி,
நட்போடு வாழ்பவர். அந்த ஆளுமைகளின் பட்டியல் மிகப் பெரியது. அந்தப் பெரிய பட்டியலிலிருந்து
உருவான சின்னப் பட்டியல்தான் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, கவிஞர் அபி, மதுரை
சோமு, பி.பி.சீனிவாஸ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே.. பாலு மகேந்திரா,
தேனுகா, ருத்ரய்யா ஆகிய பதினோரு பேரைக் கொண்ட பட்டியல். பதினோரு பேரையும் பற்றிய பதினோரு
கட்டுரைகள் ‘ஆளுமைகள் தருணங்கள்’ என்னும் இத்தொகுதியில் உள்ளன. அஞ்சலிக்குறிப்பாக எழுதப்பட்ட
சில கட்டுரைகளும் மதிப்பீட்டுக் குறிப்பாக எழுதப்பட்ட சில கட்டுரைகளும் கலந்த கலவையாக
இத்தொகுதி அமைந்துள்ளது. எல்லோரோடும் ரவி சுப்பிரமணியம்
அவர்களுக்கு நல்ல அறிமுகம் இருந்திருக்கிறது. அந்த நெருக்கத்தால் கிட்டிய அனுபவங்களை
நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் ரவி. அபி மற்றும் சகஸ்ரநாமம் ஆகியோரைப்பற்றிய
கட்டுரைகள் கவிதைச்சூழல் மற்றும் நாடகசூழலை முன்வைத்து அவர்களை மதிப்பிடும் தன்மையைக்
கொண்டவையாக உள்ளன.
எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்
குஞ்சு ஆகிய இருவருடைய பல படைப்புகளும் மறுபதிப்பாக வெளிவர துணைநின்றவர் ரவி சுப்பிரமணியன்.
பட்டு வியாபாரம் செய்தபடி ’தேனீ’ என்னும் இலக்கியச் சிற்றிதழை தொடர்ந்து நடத்தியவர்
எம்.வி.வெங்கட்ராம். ந.பிச்சமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, கரிச்சான் குஞ்சு, வல்லிக்கண்ணன்,
சாலிவாகனன், ச.து.சு.யோகியார் என பல ஆளுமைகளை தேனீ இதழுக்காக எழுதவைத்தவர் அவர். பத்திரிகை
வெளிவந்த ஆண்டு 1949. அந்த ஓராண்டில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் இழந்துவிடுகிறார்.
இன்றைய மதிப்பில் அது பல லட்சங்களுக்கு இணையான தொகை. அதே நேரத்தில் தொழிலிலும் இழப்பு
நேர்கிறது. நாளடைவில் பத்திரிகை, வணிகம் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அதற்குப்
பிறகு வறுமையும் மனக்கொந்தளிப்புகளும் காலம் முழுக்க அவரைத் தொடர்கின்றன. ஏறத்தாழ முப்பது
ஆண்டுகள். தொடக்க காலத்தில் ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதிய அவரால் இறுதிக்காலத்தில்
தன் பெயரையே எழுத முடியாத நிலைமை. மனம் படுத்தும் பாடு போதாதென்று, உடலும் படாத பாடு
படுத்துகிறது. காதுகளில் விசித்திரமான ஒலிகள் தொடர்ந்து கேட்டபடி இருக்கும் நோய். காதுக்குள்
யாரோ அமர்ந்திருப்பதுபோலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான
அமானுஷ்யமான குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கின்றன. அந்த அனுபவங்களை எழுதிக் கடந்து
செல்ல அவர் எடுத்த முயற்சி மிகமுக்கியமானது. அவருடைய ‘காதுகள்’ நாவல் இன்றளவும் ஒரு
முக்கியமான படைப்பாகவே நிலைத்து நிற்கிறது.
’பசித்த மானுடம்’ நாவலின் ஆசிரியரான
கரிச்சான் குஞ்சுவைப்பற்றிய ரவியின் நினைவுக்குறிப்புகளில் கரிச்சான் குஞ்சுவுக்கும்
அவருடைய அம்மாவுக்கும் இடையில் நிகழ்ந்ததாக ஓர் உரையாடலைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.
அதை ஒரு முக்கியமான ஆவணம் என்றே சொல்லவேண்டும். பெண்கல்வியைப்பற்றிய பேச்சை கடந்த நூற்றாண்டின்
தொடக்கத்தில் பாரதியார், அ.மாதவையா போன்ற படைப்பாளிகள் தொடங்கிவைத்தார்கள். அடுப்பூதும்
பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சமூகம் பெண்கல்வியைக் கேலி செய்த காலகட்டம் அது.
அத்தகு தடைகளையெல்லாம் மீறியே தமிழ்ச்சூழலில் பெண்கல்வி சாத்தியமானது. ஐம்பதுகளிலும்
அறுபதுகளிலும் தம் பெண்களைப் படிக்க அனுப்புவதில் கரிச்சான் குஞ்சுவுக்கும் சில தடைகள்
உருவாகின்றன. அவருடைய அம்மாவே அதைத் தடுத்திருக்கிறார். ”என்னத்துக்குடா பொண்குழந்தைகளைப்
படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. வேண்டாம். இவாள்ளாம் படிச்சிட்டு இப்ப
என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிப்புடு” என்று எதிர்த்திருக்கிறார்.
கரிச்சான் குஞ்சுவுக்கு அப்படிச் செய்ய மனம் இடம்கொடுக்கவில்லை. படிக்கவைத்தே தீருவது
என்கிற முடிவோடு பட்டம் படிக்கவைக்கிறார். தாய்க்கும் மகனுக்குமிடையே மிகப்பெரிய கருத்துவேறுபாடாக
வளர்ந்து நிற்கும் அளவுக்கு பெண்கல்வியைப்பற்றிய எதிர்ப்பு வலுத்திருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக நம் தமிழ்ச்சமூகம் கல்வியைப்பற்றிக்
கொண்டிருந்த பார்வைக்கு இந்த உரையாடல் மிகப்பெரிய சான்று.
கரிச்சான் குஞ்சுவின் இயற்பெயர்
நாராயணசாமி. அவர் சமஸ்கிருதம், தமிழ் இருமொழிகளிலும் புலமை மிக்கவர். ஆனால் குறைந்தபட்ச
லெளகிக வெற்றிகளைக்கூட அவரால் நெருங்கமுடியாமல் போய்விட்டது. அவருக்கு இலக்கியப்பித்து
இருந்திருக்கிறது. கு.ப.ரா.வின் எழுத்துகளில் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். கு.ப.ரா.வின்
தொடர்கண்ணியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் விதமாக கரிச்சான் குஞ்சு என்று தனக்கொரு புனைபெயரைத்
தேடிக்கொண்டார். (எழுதுவதற்காக கு.ப.ராஜகோபாலன் சிற்சில தருணங்களில் பயன்படுத்திய புனைபெயர்களில்
ஒன்று கரிச்சான் என்பதாகும்) ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கும் கரிச்சான் குஞ்சுவுக்கும்
இடையில் மடல்தொடர்பு இருந்ததை உணரமுடிகிறது. அக்கடிதங்களில் சில பகுதிகளை ரவி தன் கட்டுரைகளில்
இடையிடையே பயன்படுத்துகிறார். அவருடைய கடிதங்கள் திரட்டப்படுவது ஒரு நல்ல ஆவணமாக இருக்கக்கூடும்
என்று தோன்றுகிறது. ஒரு பெருந்தொகுப்பென திரட்டும் அளவுக்கு அவை இல்லாமல் போகலாம். கிடைக்கும் அளவுக்கு அவை
சேகரிக்கப்பட்டு ஆவணமாவது நல்லது.
மதுரை மணி என்றதுமே எனக்கு நினைவிலெழுவது
‘மருதமலை மாமணியே முருகையா’ என்னும் பாடல். என் இளமையில் ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டுக்கேட்டுப்
பழகிய பாடல். முற்றிலும் எதிர்பாரத தருணமொன்றில் நாம் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த
நெருக்கமான நண்பரொருவர் சட்டென எதிரில் வந்து நிற்பதைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு
ஆனந்தக் கூத்தாடி என்ன சொல்வது என்றுகூட புரியாத பித்து நிலையில் எதைஎதையோ சொல்லி கூச்சலிட்டு
மகிழ்வதுபோன்ற ஒரு சித்திரத்தை சோமுவின் ஓங்கிய குரலில் அமைந்த அந்தப் பாடல் வழங்கியதும்
நினைவுக்கு வருகிறது. பின்பு வளர்ந்து இலக்கியமும் இசையும் பழகிய பிறகு நானாகவே அவருடைய
பிற பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டேன். கேட்டுக்கேட்டுப் பழகிய ஓங்கிய அக்குரலுக்கு
நேர்மாறாக அடங்கிய குரலில் இனிமை குழையக்குழைய பாடிய பாடல்களைக் கேட்பது ஒரு மகத்தான
அனுபவம். சில நொடிகளிலேயே நம்மைக் கிறங்கவைத்துவிடும் அந்த அனுபவங்களுக்கு ஈடு இணையே
இல்லை. அவர் பாடும் ‘மாடு மேய்க்கும் கண்ணா” ஒன்று போதும். ஆயிரம் முறை கேட்டாலும்
புதுசுபோலவே ஒலிக்கும் பாடல். சோமுவின் பாடலைக் கேட்கும் அனுபவத்தை ரசனையுடன் ரவி விவரிக்கும்
ஒவ்வொரு வரியும் நம்மை அத்துடன் ஒன்றவைத்துவிடுகிறது.
பி.பி.சீனிவாஸைப்பற்றிய குறிப்பில்
ரவி ஒரு சிறிய ஆய்வையே நிகழ்த்துகிறார். அதன் வழியாக, திரையிசையில் அவர் இடம் எத்தகையது
என்பதையும் வரையறுக்க முயற்சி செய்கிறார். ஓங்கிய குரலில் பாடி வசீகரிக்கும் டி.எம்.செளந்தரராஜன்,
சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், மலேசியா வாசுதேவன் போன்றோரை
ஒரு வகை. அதற்கு நேர்மாறாக மென்மையும் நளினமும் கலந்த கண்டசாலா, ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பி.,
யேசுதாஸ் போன்றோர் இரண்டாவது வகை. தியாகராஜ பாகவதர், தாராபுரம் சுந்தரராஜன் போன்றோர்
மூன்றாவது வகை. இவை எதிலும் இடம்பெறாத நான்காவது வகையிலான குரல் பி.பி.சீனிவாஸ் என்பது
ரவியின் முடிவு. அதற்காக ஏராளமான பாடல்களை அவர் பட்டியலிட்டு, அவற்றை அணுகும் முறையையும்
விரிவாக விவரிக்கிறார். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.செளந்தரராஜன் போன்ற மற்ற பாடகர்களுடன்
அவர் இணைந்து பாட நேர்ந்த தருணங்களில் பிற குரல்களுடன் இணைந்து செல்லும் தருணங்களையும்
மிகமிக இயல்பாக கடந்து செல்லும் தருணங்களையும் சுட்டிக் காட்டுகிறார் ரவி. ரவியின்
இசைப்புலமை இதற்குத் துணையாக இருப்பதை உணரமுடிகிறது. பி.பி.சீனிவாஸுக்கு எழுதப்பட்ட
மிகச்சிறந்த அஞ்சலிக்கட்டுரை இது.
வரலாற்று ஆவணம்போலத் தோற்றமளிக்கிற
சேவா ஸ்டேஜ் எஸ்.வி.சகஸ்ரநாமம் பற்றிய கட்டுரை தொகுப்பின் முக்கியமானதொரு கட்டுரை.
தமிழில் நாடகங்கள் வளர்ந்த விதத்தை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகக் காட்சிப்படுத்தியிருக்கும்
ரவியின் முயற்சி பாராட்டுக்குரியது. திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரோடும் நல்ல தொடர்புள்ளவர்
என்றபோதும் அவர்கள் எழுதிய ஒரு நாடகத்தைக்கூட எஸ்.வி.சகஸ்ரநாமம் தன் மேடையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை
என்பது ஒரு முக்கியமான அவதானிப்பு. ஒருபுறம் டி.கே.சண்முகம் அவர்களுடைய நாடகபாணி. இன்னொருபுறம்
சுயமரியாதைக்காரர்களின் பிரச்சார நாடகப்பாணி. இவ்விரண்டு புள்ளிகளிலிருந்தும் விலகி
மூன்றாவதாக ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறது சகஸ்ரநாமத்தின் நாடகபாணி. பி.எஸ்.ராமையா,
தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, சிதம்பர சுப்பிரமணியன் போன்ற எழுத்தாளர்களிடம் தனக்காக
நாடகங்கள் எழுதித் தரும்படி கேட்டு வாங்கி நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார் அவர்.
தாகூர், இப்சன் போன்றோரின் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்தும் மேடையேற்றியிருக்கிறார்.
இத்தகு முயற்சிகளின் தொடர்ச்சிதான் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற
படைப்புகளை மேடையேற்றும் முயற்சி. துரதிருஷ்டவசமாக
அவருடைய மரணத்தின் காரணமாக, இந்த மூன்றாவது திசையிலான முயற்சி, தொடர ஆளின்றி முடிவடைந்துவிடுகிறது.
அத்தகைய பாணிக்கு அவரே தொடக்கப்புள்ளியாகவும் இறுதிப்புள்ளியாகவும் அமைந்துவிடுகிறார்.
தொகுப்பின் முக்கியமான இன்னொரு
கட்டுரை கலை விமர்சகரான தேனுகாவைப்பற்றிய கட்டுரை. கும்பகோணத்தில் வாழ்ந்திருந்த காலத்தில்
திக்குதிசை தெரியாமல் கவிதை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மனம் நோகாதபடி அவை எதுவுமே
கவிதையல்ல என்பதை எடுத்துச் சொல்லி தனக்கு நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தி, அந்தத் திசையில்
ஆற்றுப்படுத்திய ஆளுமையாக தேனுகாவைக் குறிப்பிடுகிறார் ரவி. பல ஆண்டு காலம் தொடர்ச்சியாக
தினமும் பார்த்து உரையாடிய பசுமையான நினைவுகளை உயிர்ப்போடு சித்தரித்திருக்கிறார் ரவி.
ரவியின் இடமாற்றத்தைத் தொடர்ந்து, அவருக்கு அதேபோல இன்னொருவர் கிடைக்காமல் போனது ஊழ்
என்றே சொல்லவேண்டும். கோவில்கள், சிற்பங்கள், தலவரலாறுகள், எழுத்தாளர்கள், இலக்கியம்
மற்றும் ஊர் பற்றிய செய்திகளுக்காக பலரும் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்துக்கொண்டே இருந்தார்கள்
என்பது உண்மை. ஆனால் அவர்களில் பெரும்பாலோரிடம் கலைபற்றிய எவ்விதமான ஞானமும் இல்லை
என்பதை உணர்ந்தபோது அவர் பெரிதும் சோர்வில் ஆழ்ந்தார். அவர்களுக்குப் புரியவைப்பதற்காக
எடுக்கும் முயற்சிகள் சிறிதும் பயனின்றி குலைந்துபோவதை அறியும்போது அவர் சோர்வு மேலும்
கூடுதலானது. ஒத்த அலைவரிசையில் உரையாடலுக்கு ஆளற்ற ஏக்கம் அவருக்குள் ஒரு மூட்டம்போல
தேனுகாவின் இறுதிக்காலத்தில் கவிந்திருந்தது. ஒரு நாடகத்தின் இறுதிக்காட்சிபோல அமைந்துவிட்ட
அவருடைய இறுதிக்கட்டம் விசித்திரமும் துயரமும் இணைந்த ஒன்றாக இருக்கிறது. யாரோ ஒருவர்
பி.பி.சி. நேர்காணலுக்காக அவரைச் சந்திக்க வந்திருக்கிறார். நாதஸ்வரத்தைப்பற்றி அன்றைய
உரையாடல் அமைந்திருக்கிறது. அந்த உரையாடல் கொடுத்த உற்சாகத்தில் அந்த இசையின் மேன்மையைப்பற்றியும்
இன்பத்தைப்பற்றியும் அவ்விசையின் மகத்தான ஆளுமைகளைப்பற்றியும் மனம் கரைந்துபோய் பேசத்
தொடங்கியிருக்கிறார் தேனுகா. பேசும்போதே உடல் வேர்த்து வழிந்திருக்கிறது. பரவசத்தில்
வரும் வேர்வை என அதை அலட்சியப்படுத்திவிட்டு, மீண்டும் இசைபற்றியே பேசத் தொடங்கியிருக்கிறார்
அவர். தனக்கு வந்தது நெஞ்சுவலி என அவர் உணரவே இல்லை. உரையாட முடியாமல் சரிந்து விழும்
தருணத்தில்தான் அவருக்கு அது உறைத்திருக்கிறது. ஆனால் அதற்குள் காலம் கைமீறிப் போய்விட்டது.
காலம் முழுதும் கலையைப்பற்றி பேசியும் எழுதியும் விமர்சித்தும் வந்த ஓர் ஆளுமைக்கு,
அ்ப்படிப்பட்ட ஓர் உரையாடலில் ஈடுபட்டிருக்கும்போதே உயிர் பிரிந்துவிட்டது. அது காலம்
நிகழ்த்திய கொடுமை என எடுத்துக்கொள்வதா அல்லது காலம் வழங்கிய கொடை என எடுத்துக்கொள்வதா
என்று தெரியவில்லை. ஒரு புனைவெழுத்துக்கே உரிய
வேகத்துடனும் சீரான வீச்சோடும் அமைந்திருக்கிறது ரவியின் அஞ்சலிக்கட்டுரை.
ரவியின் எல்லாக் கட்டுரைகளிலும்
தென்படும் முக்கியமானதொரு அம்சம், அவை அனைத்திலும் அவர் கரைந்திருக்கிறார் என்பதுதான்.
ஒவ்வொரு எழுத்தையும் தன் நெஞ்சிலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார் ரவி. அவருக்கு தமிழுலகம்
மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.
(ஆளுமைகள் தருணங்கள். கட்டுரைகள். ரவி சுப்பிரமணியன்.
காலச்சுவடு வெளியீடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில். விலை. ரூ.100 )