Home

Showing posts with label ரவி சுப்பிரமணியன். Show all posts
Showing posts with label ரவி சுப்பிரமணியன். Show all posts

Saturday, 16 July 2016

நெஞ்சிலிருந்து ஒரு சொல் - (கட்டுரை )


ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ 

ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள். ஒரு பண்பாட்டுச்சூழலில் துறைதோறும் வாழும்  அனைத்து ஆளுமைகளுக்கும் முதல் மரியாதை கிடைத்தல் வேண்டும். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ்வதில்லை. எனினும் அந்த அமைதியை அல்லது புறக்கணிப்பை ஆளுமைகள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய கவனம் எல்லாத் தருணங்களிலும் தத்தம் துறைசார்ந்தே இயங்கும் தன்மையுடையதாகவே செயல்படுகிறது. நம் தமிழ்ச்சூழலில் இன்றுவரை இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற எல்லாத் துறைகளிலும் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளும் வாழும் ஆளுமைகளும் பலருண்டு. அவர்களைப்பற்றிய வாழ்க்கைப்பதிவுகளும் நினைவுக்குறிப்புகளும் மிகமிக முக்கியமானவை. ஒரு சூழலில் வரலாற்றை எழுதும் தருணத்தில் இத்தகு நினைவுக்குறிப்புகளுக்கு முக்கியமானதொரு இடம் உருவாகும்.