அதிகாலை நடைப்பயிற்சிக்கென வழக்கமாக நான் செல்லும் பூங்கா ஐந்து
மணிக்கே திறந்துவிடும். நான் ஆறுமணிக்குச் செல்வேன். சரியாக அதே நேரத்தில் பயிற்சியை
முடித்துவிட்டு வெளியேறுவார் ஒரு பெரியவர். தோற்றத்தை வைத்துத்தான் அவரை முதியவர் என்று
சொல்லலாமே தவிர, அவருடைய நடைவேகம் ஆச்சரியமூட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்திரா
நகரில் உள்ள அபூர்வா கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர் அவர். இரண்டுமூன்று முறை
அவரிடம் உடல்நிலைப் பரிசோதனைக்காகச் சென்றிருந்ததால், அவரை எனக்குத் தெரியும். நல்ல
உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவார். வணக்கம் சொன்னதும் புன்னகையோடு தலையை அசைத்தபடி கைகளை
உயர்த்தி வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியேறுவார். அவருடைய வேகத்தை மனத்துக்குள் வியந்தபடி
என் நடையைத் தொடங்குவேன்.
ஒரு நாள் சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் அவரைச் சந்திக்க
முடியவில்லை. அவரை நினைத்தபடியே அவர்போலவே நாலைந்து அடி துள்ளலோடு நடந்து பார்த்துவிட்டு
என் வழக்கமான நடையோடு நடக்கத் தொடங்கினேன். வட்டப்பாதையில் மூங்கில் புதர்கள் நிறைந்த
திருப்பத்தில் திரும்பியபோது நான் பார்த்த
ஒரு காட்சி மறக்கமுடியாத ஒரு சித்திரமாக என் நெஞ்சில் பதிந்துவிட்டது. அறுபது அல்லது
அறுபத்தைந்து வயதுள்ள ஒரு பெண்மணி அங்கிருந்த ஓர் ஊஞ்சலில் கண்களை மூடியபடி தன்னை மறந்து
ஆடிக்கொண்டிருந்தார். வழக்கமாக அந்த ஊஞ்சலில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆடுவதைத்தான்
நான் பார்த்திருக்கிறேன். பெரியவர்கள் ஆடுவதற்கு அங்கு அனுமதியே இல்லை. அதனால்தான்
அந்தப் பெண்மணி ஊஞ்சலாடிய காட்சி ஆச்சரியம் ஊட்டுவதாக இருந்தது. உயர்ந்த மூங்கில்களையும்
பாதாம் மரக்கிளைகளையும் ஊடுருவிக்கொண்டு நுழைந்த இளஞ்சூரியனின் கதிர்கள் அந்த அம்மாவின்
கருஞ்சாயமிட்ட கூந்தலிலும் கன்னத்திலும் பட்டுச் சிதறியபடி இருந்தன. நின்று கவனிக்க
கூச்சப்பட்டபடி ஓரப்பார்வையால் பார்த்தபடி சில நொடிகளில் அவரைக் கடந்துவிட்டேன். அந்த
முகம், அந்தப் பரவசம், அந்த வெளிச்சம் அனைத்தும் மீண்டும் மீண்டும் அலைமோதியபடி இருந்தன.
இரண்டாவது சுற்றிலும் அவர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார். மூன்றாவது சுற்றின்போது அவர்
ஊஞ்சலிலிருந்து இறங்கி பக்கத்தில் இருந்த ஒரு கல்பெஞ்சில் காலை நீட்டி உட்கார்ந்தபடி
ஏதோ சில பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பல முறைகள் பூங்காவில் அவரைத் தொடர்ந்து
பார்த்தேன். ஒவ்வொரு தருணத்திலும் அவர் ஊஞ்சலாடும் காட்சியை ஏதேனும் ஒரு சுற்றில் பார்த்துவிடுவேன்.
அவரைக் காணாத சில நாட்களில் அவரைத் தேடும் அளவுக்கு என் எதிர்பார்ப்பு அதிகமானது. அவரோடு
பேசவேண்டும் என்று தோன்றினாலும் எப்படித் தொடங்குவது என்கிற தயக்கம் தடுத்தபடி இருந்தது.
அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. ஒருநாள் காதுகளை மறைத்தபடி அவர் கட்டியிருந்த காற்றுத்
தடுப்புப் பட்டி, ஊஞ்சலாடும் வேகத்தில் முடிச்சு தளர்ந்து காற்றில் பறந்துவந்து என்னருகில்
விழுந்தபோது, அந்த வாய்ப்பு தானாக கைகூடி வந்தது. அந்தப் பட்டியை எடுத்து தூசு போக
ஊதி உதறிவிட்டு அவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் ஊஞ்சலைவிட்டு இறங்கியிருந்தார்.
நாணத்தில் அவர் முகம் கனிந்திருந்தது. ஆளற்ற ஊஞ்சல் முகமற்ற யாரோ ஒருவருடைய நீளமான
கைகள்போல அசைந்தபடி இருந்தன. புன்னகையோடு நன்றி சொன்னபடி அந்தப் பட்டியை வாங்கி அணிந்துகொண்டார்
அந்தப் பெண்மணி.
அப்படித்தான் எங்கள் நட்பும் உரையாடலும் தொடங்கின. அதற்குப்
பிறகான நாட்களில் அவரைப்பற்றிய தகவல்களை நானும் என்னைப்பற்றிய தகவல்களை அவரும் ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொண்டோம். அவருக்குச் சொந்த ஊர் வேலூர். வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றுவிட்டார்
கணவர். ஒரே மகன் பெங்களூரில் இருப்பதால் அவன் குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் விருப்பத்தில்
வந்திருக்கிறார்கள். மகனுடைய வீட்டில் அவருக்குச்
சில சங்கடங்கள் இருந்தன. யாரும் அதைச் சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நாக்குச்
சப்புக்கொட்டினார் அவர். “இத்தனை வருஷங்கள் என்னோடு வாழ்கிற என் கணவராலேயே அதைப் புரிந்துகொள்ள
முடியாதபோது, மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று எப்படி நான் எதிர்பார்க்கமுடியும்?”
என்றபோது அவர் உதடுகளைப் பிதுக்கி கசப்போடு புன்னகைத்த விதத்தைப் பார்க்க எனக்கும்
சங்கடமாக இருந்தது. ”என்னன்னு சொல்லுங்களேன். என்னால புரிஞ்சிக்கமுடியுமான்னு பார்க்கறேன்”
என்றேன். ஒரே ஒரு கணம் அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். பிறகு ஒரு திறப்புக்காகக்
காத்திருந்தவர்போல சொல்லத் தொடங்கினார்.
வேலூரில் அவருடைய வீட்டுக் கூடத்தில் தேக்குப்பலகையால் செய்யப்பட்ட
ஊஞ்சல் ஒன்று இருந்தது. அந்த வீட்டிலேயே அவருக்கு மிகவும் பிடித்த இடம் அந்த ஊஞ்சல்தான்.
அதில் அமர்ந்து பாட்டு கேட்பதும் தொலைக்காட்சி பார்ப்பதும் வேலை இல்லாத நேரங்களில்
ஊஞ்சலில் ஆடியபடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
மகன் வீட்டுக்கு வந்த பிறகு, அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. மகன் வீட்டிலும் ஓர்
ஊஞ்சல் இருக்கிறது. ஆனால் அதில் அவள் அமர்வதுகூட அங்கே யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லா
நேரங்களிலும் மருமகளும் பேத்தியும் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள். அவளுக்கென ஒரு ஐந்து
மணித்துளிகள்கூட கிடைப்பதில்லை. அவள் உட்காரச் செல்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டதுமே,
ஒரு போட்டிபோல மருமகள் உடனடியாக ஊஞ்சலருகில் சென்று உட்கார்ந்துவிடுகிறாள். ஊஞ்சலை
அண்டவிடாமல் தடுப்பதில் மருமகளைவிட பேத்தி கெட்டிக்காரியாக இருக்கிறாள். முப்பதாண்டுகளுக்கும்
மேல் ஊஞ்சலில் ஆடிப் பழகிய மனத்தை, அதன் பாதையிலிருந்து திருப்புவது சிரமமாக இருக்கிறது.
தற்செயலாக இந்தப் பூங்காவுக்குள் வந்த ஒருநாளில் இந்த ஊஞ்சலைக் கண்டுபிடித்த பிறகு,
நடை என்கிற பெயரில் கிளம்பி பூங்காவுக்குள் வந்து அதிகாலையில் யாருமில்லாத சமயத்தில்
மனம்குளிர ஆடிவிட்டுப் போவது சற்றே ஆறுதலாக இருக்கிறது. ஐந்து நிமிடம் ஆடும்போது கிடைக்கிற
உற்சாகத்தில் ஒரு முழு நாளை வெல்வதற்குப் போதுமான சக்தி அடங்கியிருக்கிறது.
அவர் சொல்லி முடித்தபோது எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும்
இருந்தது. இப்படியும் நிகழுமா என்பதை நினைத்து ஆச்சரியம். இப்படியெல்லாம் நிகழ்கிறதே
என நினைத்து வருத்தம். ஊஞ்சலில் ஆடும்போது, அந்த இன்பத்தில் விழிமூடி அவர் லயித்த தருணத்தை
ஒருகணம் நினைத்துக்கொண்டேன்.
அதற்குப் பிறகு, உரையாடத் தொடங்கிய ஒவ்வொரு நாளும் அவர் தன்
மனத்தில் இருப்பதையெல்லாம் கொட்டத் தொடங்கினார். அவருக்கு நான் ஒரு வடிகாலாக மாறியிருப்பதை
தாமதமாகத்தான் உணர்ந்தேன். அப்படி இருப்பதில் எனக்கும் எவ்விதமான மனத்தடையும் இல்லை.
ஒருவருக்கு ஆறுதலாக இருக்கிறோமே, அதுவே போதும் என்றுதான் தோன்றியது.
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு திடீரென அவர் வருகை நின்றுவிட்டது.
ஏதேதோ எண்ணங்கள் நெஞ்சில் மாறிமாறி ஓடின. ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார் போலும்
என நானாகவே அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். சில நேரங்களில் தன்னிச்சையாக
அவரைப் பார்த்த முதல் கணத்திலிருந்து கடைசிக்கணம் வரைக்குமான நினைவுகள் நிழற்பட வரிசைபோல
எழும். பிறகு மெல்ல மறையும். நாளடைவில் என் மன அடுக்கில் அவருக்கும் ஓர் இடம் உருவானது. என்றைக்காவது ஒருநாள் அவருடைய கதையை எழுதிவைக்க
வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அந்த எண்ணம்கூட அப்படியே ஆழ்மனத்தில் புதைந்துவிட்டது.
இந்த ஆண்டு மே மாதத்தில் இடைவிடாமல் மூன்று நாட்கள் மழை பொழிந்தது.
அந்த மழையில் பூங்காவின் நடைப்பயிற்சித்தடத்தில் குளம்போல தண்ணீர் தேங்கிவிட்டது. விளையாட்டுப்
பகுதிகளிலும் தொட்டிகளில் குருத்துச்செடிகளைப் பராமரிக்கும் பகுதிகளிலும் கூட தண்ணீர்க்குட்டைகள்.
ஊஞ்சல்களின் கீழே பெரிய குளம். எல்லாவற்றையும் மராமத்து செய்யும் வேலைகள் ஒரு வாரம்
வரைக்கும் நடந்தன. மோட்டார் வைத்து தண்ணீரை அகற்றிவிட்டு வண்டிவண்டியாக மணலைக் கொண்டு
வந்து கொட்டினார்கள். வேலை செய்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அப்போது ஊஞ்சல்களைக் கழற்றி எடுத்துப் போய்விட்டார்கள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, எல்லாம் உலர்ந்து கெட்டியான பிறகுதான் ஊஞ்சல்கள் மறுபடியும்
பொருத்தப்பட்டன. ஊஞ்சலற்ற அந்த வெட்டவெளியைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு அந்த வேலூர்
அம்மாவின் முகத்தை நினைவுக்கு வந்தது. விழிமூடி பரவசத்தில் லயித்திருந்த அந்தக் கணத்தை
எழுதவேண்டும் என்று மறுபடியும் தோன்றியது.
மனம் முழுதும் ஒரு பதற்றம். ஒரு வேகம். எழுதத் தொடங்கிய சிறிது
நேரத்துக்குப் பிறகுதான் கதை அந்த அம்மாவிடமிருந்து விலகி, இதே பூங்காவில் எப்போதோ
ஒருமுறை நான் சந்தித்த வேறொரு பெரியவரைப்பற்றி எழுதிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். எழுத்தின்
போக்கில் எங்கோ ஒரு தருணத்தில் அவர் முகம் தானாகவே எழுந்து வந்த விதம் எனக்கு ஆச்சரியமாக
இருந்தது. எப்படியோ கதையின் தடம் மாறிவிட்டது. பிறகு, அதன் போக்கிலேயே சென்று, அக்கதையை
எழுதி முடித்தேன். அந்தத் தற்செயல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அடிக்கடி
அவர் உச்சரிக்கும் ஒரு வாக்கியம் கதையின் அடிநாதமாக அமைந்து உயிரூட்டியிருப்பதை என்னால்
உணரமுடிந்தது.
சாமிநாதனைத் தொடர்ந்து பலருடைய முகங்கள் ஆழ்மனத்திலிருந்து மிதந்தெழுந்து
வந்தன. மிகச்சிறிய வயதில் பார்த்த அந்த முகங்களையும் நினைவுகளையும் என்னமோ நேற்றோ முந்தாநாளோ
பார்த்ததுபோல நினைத்துக்கொள்ளமுடிந்தது. ராமாயி பெரியம்மா, மாயாண்டி பெரியப்பா, குப்பாண்டித்
தாத்தா என முகங்கள் பொங்கிப்பொங்கி எழுந்தன. என் நெஞ்சில் அவர்களைப்பற்றிய நினைவுகள்
பதிந்திருந்த விதத்திலேயே இந்தக் கதைகளின் பாத்திரங்களாக மாறினார்கள். எல்லோரைப்பற்றியும்
எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த ஊஞ்சல் பெண்மணியின்
சித்திரத்தை உள்ளடக்கிய சிறுகதையை எழுதாமலேயே, இக்கதைகளின் தொகுப்பு வெளிவருவது ஒரு
மனக்குறையாகவே இருக்கிறது. அது ஓரளவாவது தீரட்டும்
என்பதற்காகவே, அவரைப்பற்றிய குறிப்பை இந்த முன்னுரையில் பதிவுசெய்திருக்கிறேன்.
வெவ்வேறு வாழ்வியல் தருணங்களை முன்வைத்திருக்கும் இச்சிறுகதைகளை
ஒரே தொகுப்பாக வாசிக்கும்போது, அவற்றைப் பற்றிய தம் எண்ணங்களை கடிதங்கள் வழியாகவும்
தொலைபேசி வழியாகவும் பகிர்ந்துகொண்ட அனைவரையும் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவர்களுடைய
சொற்களும் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. அவர்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகளை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
லா.ச.ரா.வுடன் நெருங்கிப் பழகியவரும் அவரைத் தன் குருவாக நினைத்திருப்பவருமான
மூத்த வாசகர் ஏ.கே.பாலு என் சிறுகதைகளுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாசகர்களில் ஒருவர்.
ஒவ்வொரு சிறுகதை வெளிவரும்போதும், தன் வாசிப்பனுபவத்தை அழகான ஒரு கடிதமாக எழுதி அனுப்புவதை
அவர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். வீணைத்தந்திகளை மீட்டி மீட்டி இசையில் தோய்வதுபோல,
ஒரு படைப்பின் சின்னச்சின்ன நுட்பங்களையெல்லாம் அவர் மீண்டும் மீண்டும் படித்து ரசித்திருக்கிறார்
என்று தோன்றும். அவர் ஒரு நல்ல ரசிகர். என்
படைப்புகளை மட்டுமில்லாமல் புதிய புதிய படைப்பாளர்களின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடிப்
படித்துவிட்டு, அவற்றின் அழகுகளையெல்லாம் எழுதி அனுப்புவார். அப்படி எழுதுவதற்கும்
சரி, காய்தல் உவத்தல் இல்லாமல் ஒரு படைப்பின் அழகுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் சரி,
உண்மையிலேயே ஒரு பெரிய மனம் வேண்டும். அப்படிப்பட்ட மனம் பாலுவுக்கு வாய்த்திருக்கிறது.
’அன்னபூரணி மெஸ்’ சிறுகதையில் காற்றில் படபடக்கும் அப்பளத்தின் மீது ஒரு கை சோற்றை
உருட்டி வைத்துவிட்டு சாப்பிடும் கதாபாத்திரத்தை, பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல ரசித்து
ரசித்து அவர் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அந்தக் கணத்தையே ஒரு சிற்பமாக்கி,
எனக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தின் வரிசையில் வைத்துக்கொண்டேன்.
தமிழ்ச்சிறுகதை உலகில் புதுமைப்பித்தனைத் தொடர்ந்து எழுதவந்த
தலைமுறையில் முக்கியமான படைப்பாளி கு.அழகிரிசாமி. அவருடைய சிறுகதைகளின் ஒட்டுமொத்தப்
பெருந்தொகுதியை காலச்சுவடு பிரசுரித்த தருணத்தில் அதற்கு நீண்டதொரு முன்னுரையை எழுதும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மானுட உள்ளத்தில் மேன்மை வெளிப்படும் தருணங்களை காவிய
அமைதியோடு நல்ல சிறுகதைகளாக படைத்தவர் அவர். மிக எளிய மனிதர்கள் வாழும் பகுதிகளையே
தன் படைப்புகளுக்கான களமாகக் கொண்டிருந்தாலும் மனித மனம் இயங்கும் விதத்துக்கு அழுத்தம்
கொடுத்து அவற்றை வெளிச்சமிட்டுக் காட்டும் படைப்புகளாக ஆக்கிய மாபெரும் ஆளுமை. அந்த
ஆளுமையின் நினைவுகளுக்கு இத்தொகுதியை வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
இச்சிறுகதைகளை வெளியிட்ட தளம், அம்ருதா, அந்திமழை, ஆனந்தவிகடன்,
தினகரன் தீபாவளி மலர் ஆகிய இதழ்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியையும்
வணக்கத்தையும் இம்முன்னுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். என் ஊக்கசக்தியாக விளங்கும்
என் அன்புக்குரிய அமுதாவின் உறுதுணையை நான் ஒருபோதும் மறக்கமுடியாது. அவர் முகமும்
இக்கணத்தில் என் ஆழ்மனத்தில் அசைந்தெழுகிறது. இத்தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வெளிக்கொண்டு
வரும் சந்தியா பதிப்பகத்தினருக்கும் என் அன்பார்ந்த நன்றி.