Home

Monday, 27 June 2016

குழந்தையும் தெய்வமும் - (கட்டுரை)


     இந்திரா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்டு சாந்தி சாகர் உணவு விடுதியைக் கடந்து காவேரி பாடசாலையைநோக்கி அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி சீருடை அணிந்த பத்துப் பதினைந்து பிள்ளைகளை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு தினமும் வருவார்.  ரயில் விளையாட்டுபோல ஒரு சிறுவனின் இடுப்புப்பட்டையை அல்லது தோளை இன்னொரு சிறுவன் அல்லது சிறுமி பிடித்தபடி செல்வார்கள். சில சிறுவர்கள் குதித்துக்குதித்து உண்மையிலேயே சிக்குபுக்கு சிக்குபுக்கு என்று சொல்வது கேட்கும். மானசிகமாக அவர்களே ஒரு ரயிலாக மாறி அந்த சாலையைக் கடப்பார்கள்.  போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் காவலர் அந்த வரிசையைப் பார்த்ததுமே வாகனங்களை நிறுத்தி உதவி செய்வார்.
     ரயிலின் எஞ்சினைப்போல பாட்டி எல்லாரையும் வழிநடத்தியபடி முன்னால் செல்வார். அவர் தோள்களிலும் கழுத்திலும் கைகளிலும் எல்லாப் பிள்ளைகளுடைய புத்தகப்பைகளும் சாப்பாட்டுப்பைகளும் தொங்கிக்கொண்டிருக்கும். "பாத்து கண்ணுங்களா, பாத்து கண்ணுங்களா" என்று நொடிக்கொரு முறை சொன்னபடி மெதுவாகச் செல்வார். ஒரு சின்ன சைக்கிள் எதிரே வேகமாகக் கடந்துசென்றாலும்கூட பாட்டி உடனே வழிவிட்டு நின்றுவிடுவார். அது கடந்துபோன பிறகுதான் அடுத்த அடியை வைப்பார். அதற்குள் ரயில்பெட்டிகள் ஒன்றுடன்ஒன்று மோதி ஒரு கணம் குலுங்கிவிட்டு நிற்கும். பிறகு தொடரும். "என்ன பாட்டி நீ?" என்று பிள்ளைகள் அலுத்துக்கொள்வார்கள். "ஸ்கூலுக்கு நேரமாவுது பாட்டி, போய் சேரவேணாமா?" என்று ஒரு சிறுமி சொல்லும். "இருடி என் தங்கம். எந்தக் கடன்காரனாச்சிம் இடிச்சி தொலச்சிட்டான்னா உன்ன பெத்தவங்களுக்கு யாருடி பதில் சொல்றது? என்ன நம்பித்தான உங்களயெல்லாம் அனுப்பிருக்காங்க. ஜாக்கரதயா இருக்கணும்டி" என்று வெற்றிலைக் கறையேறிய பற்களைக் காட்டி சிரிப்பார் பாட்டி.
பள்ளிக்கூடம் வந்ததும் பாட்டி தன் தோள்களில் உள்ள பைகளை எல்லாம் இறக்கி நீட்டுவார். ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய புத்தகப்பையையும் சாப்பாட்டுப்பையையும் வாங்கிக்கொண்டு ஓடும். "பாக்கலாம் பாட்டி" "டாட்டா பாட்டி" ஹோகிபர்த்தனி ஹஜ்ஜி" "வெள்ளொஸ்தானவ்வா" எல்லாரும் உள்ளே செல்லும்வரை சிரித்துக்கொண்டே கையை அசைப்பார் பாட்டி. "உஷாரா போங்க கண்ணுங்களா" என்று பொதுவில் அவள் சொல்லும் சொற்கள் யாருடைய காதிலும் விழுவதில்லை.
     காவேரி பாடசாலையை அடுத்துள்ள பேருந்துநிறுத்தத்தை நோக்கிச் செல்லும்போது பெரும்பாலும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன். வட்டமான கருத்த முகமும் திருநீறு அணிந்த நெற்றியுமாக அவரைப் பார்க்கும்போது யாரோ சொந்தக்காரர் ஒருவரைப்போலவே தோன்றும். பஞ்சுபோல தலைமுடி வெளுத்திருப்பதால்தான் பாட்டி என்று குறிப்பிட வேண்டியிருக்கிறது.  இல்லையென்றால் நடுவயதுள்ள ஒரு பெண்மணி என்றுதான் சொல்லவேண்டும்.
     "ஸ்... அப்பாடா" என்று மூச்சு வாங்கியபடி ஒருநாள் பேருந்து நிறுத்தத்தின் பக்கம் வந்து நின்றார் பாட்டி. எனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் "சித்த உக்காந்துக்கட்டா தம்பி" என்று கேட்டார். உக்காருங்கம்மா என்று நான் கூறியதும் உட்கார்ந்து மறுபடியும் "ஸ்.... அப்பாடா" என்று மறுபடியும் மூச்சு வாங்கினார். புடவைத் தலைப்பை உதறியெடுத்து நெற்றியிலும் கழுத்திலும் படிந்திருந்த வேர்வையைத் துடைத்தார். "காலங்கார்த்தாலயே வெயிலு இந்தக் கொளுத்து கொளுத்துது, சாய்ங்காலமா மழ வந்தாலும் வரும் போல என்றார். பள்ளிக்கூடம் விடற நேரமா பாத்து வராம இருந்தா போதும். எல்லாரயும் ஊட்டுல சேத்த பிறகு வந்து பேயட்டும். யாரு வேணாம்னு சொன்னா" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். நாக்கை நீட்டி உலர்ந்திருந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டார்.
     இருக்கையில் பின்பக்கமாக சற்றே சாய்ந்தபடி இடுப்பு முந்தானையில் முடிச்சுபோட்டு வைத்திருந்த வெற்றிலைப்பையை பிரித்தார். துவண்டு மடிப்பு விழுந்த ஒரு வெற்றிலையை பிரித்தெடுத்து தொடையில் வைத்துத் தேய்த்துத்தேய்த்து நேராக்கினார். காம்பைக் கிள்ளிவிட்டு, அதன்மீது ஒரு சின்ன  மிளகாய் நீளத்துக்கு புகையிலைத் துண்டையும் பட்டாணி அளவுக்கு  ஒரு பாக்குத் துணுக்கையும் வைத்து மடித்து வாய்க்குள் அதக்கி மெதுவாக கண்களை மூடி மெல்லத் தொடங்கினார். சாறின் முதல் துளி தொண்டைக்குள் இறங்கியதும் அவர் முகம் மெல்லமெல்லத் தெளிவடையத் தொடங்கியது. சில கணங்களுக்குப் பிறகு உறக்கத்திலிருந்து விழிப்பதுபோல கண்களைத் திறந்து வாகனங்கள் பறக்கும் சாலையைப் புதுசாகப் பார்ப்பதுபோலப் பார்க்கத் தொடங்கினார். அவரையே நான் பார்ப்பதைக் கவனித்ததும் "என்ன பாக்கற தம்பி? ஒரு காலத்துல இந்த வெயிலுலாம் நெலாவுல காயறமாரி இருந்திச்சி. இப்ப இன்னாடான்னா புண்ணுல மொளகாசாந்த அப்பனாபபுல இருக்குது. ஒடம்புல சத்து கொறஞ்சதுமே, செல்லுபுடிச்ச சொவுருமாரி ஒன்னொன்னும் இத்துஇத்து உழும்போலக்குது" என்றார். வெற்றிலைச்சாறு படிந்த நாக்கால் உதட்டைநனைத்து ஒருமுறை ஆழ்ந்து சுவைத்தார்.
     "ஒடம்புக்கு எதாச்சிம் சொகமில்லயா?" மெதுவாக நான் பேச்சைத் தொடங்கினேன்.
     "ஒடம்பு என்ன மகாராஜா கட்டன கோட்டயா காலம்பூரா நிக்கறதுக்கு?  ஆத்தா சீட்ட கிழிச்சிப் போடறவரிக்கும் நல்லபடியா நடமாடிட்டு போயி சேரவேண்டிதுதான்.  சனியன்புடிச்ச வெயிலு பட்டாலே இப்பல்லாம் தலய வலிக்குது. சுத்தியால செங்கல்ல தட்டிகினே இருக்கறமாரி எப்ப பாத்தாலும் ஒரே வலி. விண்ணுவிண்ணு நரம்பு இழுக்குது. தாங்கமுடியலை. அதான் கஷ்டம்."
     "கஷ்டத்தோடயா புள்ளைங்கள ஸ்கூலுக்கு அழச்சிட்டு வந்திங்க? லீவு சொல்லிட்டு ஊட்டோட இருக்கவேண்டிதுதான?"
     "நம்ம கஷ்டம் நம்மோட போயிரணும். நம்மால மத்தவங்களுக்கு எதுக்கு கஷ்டம்? மாசம் பொறந்த சொளயா எரநூறு ரூபா குடுக்கறாங்க. அவுங்க மனசு கோணலாமா? எல்லாரும் வேலமேல போறவங்க. ஆயிரத்தெட்டு அரிபுரி இருக்கும். அதுங்கூட இதுவும் சேந்தா, நாளபின்ன நம்மள பாத்தாலே அவுங்க மனசுக்கு வெறுப்பா இருக்காதா? "
     "சொகமில்லாத நெலைமையில இப்படி அலஞ்சா இன்னும் கொஞ்சம் அதிகமாத்தானே ஆவும்? "
     "அதிகமாயி போயி சேந்தாலும் சந்தோஷம்தான் போ. நா நல்லா இருக்கணும்ன்னு நெனைக்க யாரு இருக்கறா? சலிப்போடு சிரித்துக்கொண்டார். நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை காதுப்பக்கமாக ஒதுக்கினார். இந்தப் புள்ளைங்க மூஞ்சிய ஒருநாளு பாக்கலைன்னாலும் எனக்கு தூக்கம் வராது தம்பி. பாசமான புள்ளைங்க. அஜ்ஜிஅஜ்ஜின்னு ஒன்னொன்னும் உயிரயே வச்சிருக்குதுங்க.  இந்த உலகத்துல எனக்கு ஒரேஒரு ஆசதான். இப்பிடி கொழந்தைங்க கைய புடிச்சி நடந்துக்கினு இருக்கும்போதே உயிர் பொட்டுனு போயிடணும். அவ்ளோதான். என்ன படச்ச ஆத்தா இத ஒன்ன நடத்திக்குடுத்தா போதும். நிம்மதியா போயி சேந்துருவன்" எழுந்துபோய் வெற்றிலைச்சக்கையை ஓரமாகத் துப்பிவிட்டு வந்து மறுபடியும் உட்கார்ந்தார்.
     "அவ்ளோ பாசமா அடுத்தவங்க புள்ளமேல? "
     "அது என்ன தம்பி சட்டுனு அப்படி கேட்டுட்ட? நம்ம புள்ள அடுத்தவங்க புள்ளன்னு பாத்துட்டா பாசம் வரும்? தோ பாரு, பாத்ததும் பழகனதும் இந்த நெஞ்சு அடியிலேருந்து ஊத்தெடுத்து பொங்கி வரணும், தெரிஞ்சிதா? அதுக்குப் பேருதான் பாசம். அது நம்ம புள்ளயா இருந்தா என்னா? அடுத்fதவங்க புள்ளயா இருந்தா இன்னா? எல்லாருமே மேல உள்ளவ புடிச்சி உருட்டிவிட்டதுதான? ஆசயா ஆயாஆயான்னு சொல்லுதுங்க.  கேக்கக் கேக்க அங்கமெல்லாம் குளுந்து போவுது. ஒன்னொன்னும் அழவா பேசறத கேக்கறதுக்கு இந்த ஒரு பொறப்பு போதாது தெரிஞ்சிக்கோ. "
     நிறுத்தத்தை நெருங்கி ஒண்டுவதற்கு இடம்பார்க்கும் ஒரு குட்டிநாயை சிறிதுநேரம் உற்றுப் பார்த்தார்.  பிறகு மெதுவாக என்னைப் பார்த்து "ஆசயா என்னப் பாத்து கத சொல்லுன்னு கேக்குது ஒன்னு. தொட்டுத்தொட்டு பேசுது இன்னொன்னு.  சண்ட போட்டுகிட்டா என்கிட்ட பஞ்சாயத்துக்கு சொல்லுது. இதுக்கு மேல என்னா ஓணும் சொல்லு. கேக்ககேக்க என் மனசும் ஒடம்பும் அப்படியே பூரிச்சிடுது தெரிமா?" என்றார்.
     "ஒங்க பேர புள்ளைங்க இங்க இல்லையா?"
     "புள்ளைங்களே எங்க இருக்குதுங்களோ எப்படி இருக்குதுங்களோ தெரியலை. பேரப்புள்ளைங்கள பத்தி நான் என்னான்னு சொல்றது?" கசப்பான புன்னகை அவரிடமிருந்து வெளிப்பட்டது. வெள்ளைத் தலைமுடியை ஒரு முறை நன்றாக பின்புறமாக உதறிவிட்டு கொண்டையாக சுருட்டி முடிந்தார்.
     "எங்க போயிட்டாங்க?" அதிர்ச்சியை புலப்படுத்தாமல் மெதுவாகக் கேட்டேன்.
     "யாருக்குப்பா தெரியும். றெக்க மொளச்சிடுச்சின்னா கூட்டவிட்டு போவ வேண்டிதுதான?” வெற்றிலைப்பையை மூடிச் சுருக்கு போட்டு  முந்தானையோடு சேர்த்துக் கட்டினார். ”மூணு புள்ளைங்கள பெத்தன். ஒரு ஆணு. ரெண்டு பொண்ணு. இந்த பூமிமேல என்னென்ன வேல உண்டோ எல்லாத்தயும் செஞ்சி வாத்தன் நானு. ஒன்னு பாக்கியில்ல. சித்தாளா இருந்தன். கல்லு ஒடச்சன். ரோட்டு வேல பாத்தன். மண்ணு வெட்டனன். ஊட்டுவேல செஞ்சன். கல்யாணமண்டபத்துல குப்ப வாரனன். எச்சிலு எலைங்க கூட எடுத்துப் போட்டன்.  ஆனா எந்தக் கஷ்டத்தயும் எந்தப் புள்ளைக்கும் குடுக்காமத்தான் கிளிமாரி வளத்தன். ஒன்னொன்னும் ஒரோரு திசையில போயிடுச்சிங்க. பெரியவன் ஒரு கன்னடாக்கார பொண்ண கட்டிக்கினு ஹிரியூரு பக்கம் போயிட்டான். மொதப்பொண்ணு ஒரு மெக்கானிக் பையன்கூட சேந்து இங்கதான் யஷ்வந்தபுரம் பக்கம் வாழுது. கடசிபொண்ணு ஒரு தெலுங்குக் காரனோட போயி வருஷம் ரெண்டாவப் போவுது. ஒன்னொன்னும் போனதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னுகூட வந்து எட்டிப் பாக்கலை."
     "இப்படியா செய்வாங்க புள்ளைங்க? நம்பவே முடியலையே. இவுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா?"
     "அதுங்க என்னப்பா செய்யும்? எனக்கு எழுதிவச்ச விதியோ, அதுங்களுக்கு எழுதிவச்ச விதியோ? எல்லாமே அதும்படிதான நடக்கும்?"
     "ஊட்டுக்காரு?"
     "அவரு மண்ணோடமண்ணா போனதாலதான இப்படி ஒரு பொழப்பு பொழைக்கறன் நானு? பொம்பளயா பொறந்தா புருசன்காரனுக்கு முன்னாலயே பூவோடயும் பொட்டோடயும் போயி சேந்துரணும்பா. இருந்து என்னமாரி இம்சப்படக்கூடாது. ஒரு தாய்க்காரி இருக்காளா செத்தாளான்னுகூட எட்டிப் பாக்காத புள்ளைங்கள நெனச்சிகிட்டு எதுக்கு உயிர் வாழணும் சொல்லு?"  சிறிதுநேரம் பேச்சை நிறுத்தினார் பாட்டி. பிறகு "ஆரங்கி தெரிமா?" என்ற கேள்வியோடு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.  முதலில் தெரியாது என்று சொல்லிவிட்டேன். அப்புறம் அவர் சொன்ன தகவலைக்கொண்டு அவர் குறிப்பிட்டது காவேரியின் கிளைநதியான ஹாரங்கி என்பது புரிந்தது.
     "அந்தக் காலத்துல அங்க ஒரு டேம் கட்டனாங்க. சீனிவாசன்னு எங்க ஊருக்காரரு ஒருத்தர்தான் அப்ப மேஸ்திரியா இருந்தாரு. எங்க ஊட்டுக்காருக்கும் அவருக்கும் நல்லா பழக்கம். திர்ணாமலயில இருக்கற சமயத்துல ரெண்டுபேரும் ஒன்னாதான் கொலுத்துவேல செஞ்சாங்க. தெகிரியமும் ஆள்பலமும் அவருக்கு அதிகம். அதனால இங்க வந்து மேஸ்திரியாயிட்டாரு. வாரம்பூரா வேல, சனிக்கெழமயானா சொளயா நூறு ரூபா கூலி, அது இதுன்னு சொல்லி அவருதான் எங்கள திர்ணாமலயிலேருந்து கூட்டியாந்தாரு. அவருக்கு கொலுத்துவேல. சாரம்கட்டி மேல ஏறி வேல செய்யணும். எனக்கு சட்டிதூக்கற சித்தாள் வேல. எங்களுக்கு என்ன தோப்பா, தொரவா? உட்டு வரணுமேன்னு யோசிச்சி கஷ்டப்படறதுக்கு? எங்க இருந்தாலும் ஆண்டவன் குடுத்த இந்த கையயும் காலயும் வச்சித்தான் பொழைக்கணும்னு வந்துட்டம். "
     திடீரென அவர் பேச்சில் வேகம் கூடியது. அவரைப் பேசவைக்க எந்தக் கேள்வியும் தேவைப்படவில்லை. அவராகவே பேசத்தொடங்கினார்.  காதுகொடுத்து கேட்பதுமட்டுமே என் கடமையாக இருந்தது.
     "ஒரு பத்து வருஷகாலம் அங்க இருந்தம். அங்கதான் புள்ளைங்கள்ளாம் பொறந்துதுங்க.  வேல முடிஞ்சதுக்கப்பறமாதான் பிரச்சன. என்ன செய்யறதுன்னு தெரியாம ஒரு கூட்டம் பெங்களூருபக்கமா கௌம்பிச்சி. நாங்களும் அவுங்ககூடவே வந்துட்டம். கன்டோன்மென்ட் பக்கத்துல கொஞ்ச காலம் பைப்பனஹள்ளிபக்கத்துல கொஞ்ச காலம், கெங்கணஹள்ளியில கொஞ்ச காலம்னு கெடச்ச எடத்துல ஒட்டிகினு காலத்த ஓட்டனோம்.  லாரில மண்ணலோடு அடிக்கறப்போ தூக்கக்கலக்கத்துல கீழ உழுந்துட்டாரு. பின்னால வந்தவ கமினாட்டி அடிச்சிட்டு ஓடிட்டான். அதுக்கப்புறம் நாலு ஊடுங்கள்ள வாசல் தௌiச்சி கோலம்போடறது, பாத்திரம் கழுவி துணிதொவச்சி குடுக்கறதுன்னு இதோ இந்த வயசுவரிக்கும் வாழ்ந்தாச்சி. போதும்டி ஆத்தா, என்ன கூப்ட்டுக்கக்கூடாதான்னு தெனமும் ராத்திரில ஒரு கும்புடு போட்டுதான் படுக்கப்வோவேன். என் கொரலு அவளுக்கும் கேக்கமாட்டுது. இன்னம் என்ன கண்காட்சிய பாக்கணும்ன்னு என்ன விட்டு வச்சிருக்காளோ?"
     தொடர்ந்து பாட்டி பேசிக்கொண்டே இருந்தார். ஓர் உழைக்கும் பெண்ணின் வாழ்வில் என்னென்ன சரிவுகளும் துக்கங்களும் இருக்குமோ, அத்தனையும் அவர் வாழ்வில் நிகழ்ந்திருந்தன. அத்தனை துயரங்களுக்கு நடுவிலும் பள்ளிச் சிறுவர்கள் மீது அவருக்கிருந்த ஆழ்ந்த உண்மையான பிரியம் என்னை ஆச்சரியப்படுத்தியது. சம்பளத்துக்காக செய்கிற வேலை என்கிற எண்ணம் துளிகூட அவருக்கு இல்லை.  தன் நெஞ்சில் வற்றாமல் சுரந்துகொண்டிருக்கிற பிரியத்தை வாரி வழங்க தெய்வம் வகுத்தளித்த வழியாக அதை எண்ணியிருப்பதுபோல தோன்றியது.
     "தேருமேல சாமிய வச்சி கோயில் வாசல்லேருந்து தெருத்தெருவா இழுத்தாந்துட்டு மறுபடியும் கோயில் வாசலுக்கே கொண்டும்போயி உடறமாரி இந்த கொழந்தைங்கள ஊட்டுலேருந்து இஸ்கோலுக்கும் இஸ்கோல்லேருந்து ஊட்டுக்கும் அழச்சிட்டும்போயி உடறேன். கொழந்தைங்க வேற தெய்வம் வேறயா? நீங்கள்ளாம் நல்லா படிச்சவங்க. நீங்களே சொல்லுங்க. இதவிட பெரிய குடுப்பன என்னா வேணும் எனக்கு?" அவர் முகமும் குரலும் கனிவில் குழைந்திருந்தன. நான் செல்லவேண்டிய பேருந்து நிறுத்தத்தைக் கடந்துசெல்வதைப் பார்த்தேன். எனக்கு அவருடைய உரையாடலைத் துண்டிக்க மனமில்லை.  அடுத்த வண்டியைப் பிடித்துக்கொள்ளலாம் என நினைத்தபடி எந்தப் பதற்றத்தையும் காட்டாமல் அவர் பேச்சுக்கு தலையசைத்துக்கொண்டிருந்தேன்.
     "கொழந்தைங்கமேல நீங்க பிரியமா இருக்கலாம் பாட்டி. ஆனா கொழந்தைங்களும் அந்தமாரி பிரியமா இருப்பாங்களா?"
     "ஏன் இருக்கமாட்டாங்க? ஒருதரம் ஒரு ஊட்டுல கொழந்தைக்கி ஒடம்பு முடியாம போயிடுச்சி. தெனமும் போயி நிக்கறமாரி நின்னு கொரல்குடுத்தா அம்மாக்காரி வந்து இப்பிடிஇப்பிடின்னு சொன்னா. எனக்கு மனசு தாங்கல. பாப்பாவுக்கு என்னா பண்ணுதுன்னு கிடுகிடுன்னு படியேறி உள்ள போயிட்டன். சோபாவுல படுத்துக்கெடந்த கொழந்த என் கொரல கேட்டதும் டக்குனு எழுந்து ஒக்காந்துட்டுது. கைகால மெதுவா புடிச்சி உட்டுக்னே என்னாச்சி என் செல்லத்துக்கு, குட்டிப்பொண்ணுக்கு ஏன் காய்ச்சல் வந்துதுன்னு அதயும் இதயும் சும்மா பத்து நிமிஷம் பேசி சிரிக்கவச்சேன். என்னமோ ஒரு சக்தி வந்தமாரி புள்ள ஒரு துள்ளுதுள்ளி லீவு போட்டா மிஸ் திட்டுவாங்கம்மா. நா இஸ்கோலுக்கு கௌம்பறேன்னு சட்டய மாத்திகிட்டு என் பின்னாலயே ஓடியாந்திட்டுது.  அவுங்க அம்மாகாரிக்கே ஒன்னும் புரியலை. இன்னாடி அதிசயம் இதுன்னு ஆச்சரியமா பாக்கது. நம்ம மேல பிரியம் இல்லாமயா ஒரு கொழந்த இப்படி நடக்கும்?"
     பதில் சொல்லாமல் புன்னகையோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
     "கண்ணும் மனசும் குளுரக்குளுர வாழ்க்கையில ரெண்டேரெண்டு எடங்கள்ளதான் திருப்தியா நின்னு பேசமுடியும்பா. ஒன்னு கொழந்தைங்க முன்னால. இன்னொன்னு தெய்வத்துமுன்னால. ரெண்டு எடத்துலயும் கள்ளம் கெடையாது தம்பி. வெள்ளமனசு. இந்த உலகமே கள்ளமில்லாம இருக்கணுமின்னுதான் கொழந்தைங்கள உற்பத்தி பண்ணிகிட்டே இருக்கறா மேல இருக்கற ஆத்தா. அவ கருண இல்லன்னா இந்த உலகமே ஓடாது. எங்க ஊட்டு பக்கத்துல ஒரு அம்மன் கோயில் இருக்குது. வாசல்ல ஒக்காந்து ராத்திரியெல்லாம் அவ முன்னால மனசுக்குள்ள பேசிக்கினே இருப்பன். அதுல ஒரு ஆறுதல்."
     நான் அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். தற்செயலாக ஊத்துக்காடின் ஒரு பாடல் வரி மனத்தில் ஓடியது. "பால்வடியும் முகம் நினைந்து நினைந்து மனம் பரவசம் மிகவாகுதே". அந்த வரியைப் பாடும்போது மகாராஜபுரம் சந்தானத்தின் குரலில் பொங்கிவழியும் பரவசம் ஒருபோதும் மறக்கவே முடியாத ஒன்று. பாட்டியின் முகத்திலும் சொற்களிலும் அத்தகைய பரவசத்தைப் பார்த்தேன்.
     "என்ன தம்பி பாக்கற? பைத்தியமாட்டம் ஒளறுதுன்னு நெனைக்கறியா? எல்லாத்தயும் தொலச்சிட்டு  நிக்கற நான் வேற எத நம்பமுடியும் நீயே சொல்லு. கொழந்தயயும் தெய்வத்தயும் தவுர வேற எதும்மேலயும் எனக்கு புடிப்பு கெடையாது. இந்த ரெண்டுல ஒன்னு கைஉட்டாலும் என் உசுரு இந்த ஒடம்புல தங்காது. அதுமட்டும் சத்தியம்" ஆழ்ந்து பெருமூச்சோடு என்மீதிருந்த பார்வையை விலக்கி அருகிலிருந்த மரத்தின்மீது பார்வையைப் பதித்தார். அவர் உதடுகள் துடிப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு முந்தானையில் முடிந்திருந்த சுருக்குப்பையை அவிழ்த்து மறுபடியும் வெற்றிலையை எடுத்தார். "தூப்பனஹள்ளி பஸ் வந்தா சொல்லு தம்பி. துணிதொவச்சி குடுக்கற ஊட்டுக்கு நேரத்தோட போவணும்" என்று என்னிடம் சொன்னபடி புகையிலைத் துணுக்கையும் பாக்கையும் வெற்றிலைக்குள் வைத்து மடித்தார்.

(’உயிர் எழுத்து’ இதழில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை)