Home

Saturday 18 June 2016

பழங்களைத் தேடி - (கட்டுரை)


      புளியம்பழம், கொய்யாப்பழம், நாவற்பழத்துக்கெல்லாம் ஒரு பருவம் இருப்பதைப்போல வேப்பம்பழத்துக்கும் ஒரு காலம் உண்டு. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும் காலம் என்பது வேப்பம்பழங்கள் சேகரிக்கும் காலம். காற்று வேகமாக வீசும்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள வேப்பமரங்களிலிருந்து பழங்களின் மணம் எங்கள் வீடுவரைக்கும் வரும். முதலில் நுகரும் கணத்தில் தித்திப்பாகப் படரத் தொடங்கும் மணம் நேரம் செல்லச்செல்ல கசப்பான குமட்டும் மணமாக மாறும். ஆரம்பத்தில் மட்டும்தான் அப்படிக் குமட்டும். பழகப்பழக அதை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

     பழங்கள் என்றாலேயே சேகரிக்கும் விருப்பம் நிறைந்த இளம்பருவத்து நாட்கள் அவை. அப்போதெல்லாம் இருள் பிரிவதற்கு முன்னரே எழுந்து பல் விளக்கி முகம் கழுவிக்கொண்டு தொட்டிப்பாட்டையிலிருந்து பிரியும் தோப்பைநோக்கி ஓடுவதுதான் முதல்வேலை. சிறிது தொலைவில் இருந்த ஆலரமங்கள் அடுத்தடுத்து நிற்கிற குன்றுகள்போலவும் அவற்றின் அருகிலிருந்த ரயில்வே ஸ்டேஷன் குன்றோரத்துக் கோட்டையைப்போலவும் காட்சியளிக்கும். இருட்டைத் துளைத்துக்கொண்டு மணற்பரப்பில் விழுந்து கிடக்கிற பழங்களை எங்கள் கண்கள் தேடத் தொடங்கிவிடும்.
     அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த சின்னப் பிள்ளைகளாக மொத்தத்தில் நாங்கள் எட்டுப் பேர்கள் இருந்தோம். எல்லாருமே ஒரே பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம். பேசுவது, விளையாடுவது, கிண்டல் செய்வது, அம்மாவுக்குத் துணையாக குழாயடிக்குச் சென்று தண்ணீர்க்குடம் தூக்கி வருவது, வீட்டுப்பாடங்களைப் பார்த்து எழுதுவது என பல வேலைகளை ஒன்றாகவே செய்வோம். ஆனாலும் வெளியே தெரியாதபடி நாங்கள் இரண்டு அணிகளாக இருந்தோம். அப்படி ஒரு நுட்பமான விரோதப்போக்கு அடியோட்டமாக எங்களிடையே ஓடிக்கொண்டிருந்தது. தேடல் வேட்டையில் யாரோ ஒருவனுக்கு ஒரு பழம் கிடைக்கும். மற்றவர்களுக்கு அச்சமயத்தில் எதுவுமே கிடைத்திருக்காது. உடனே நாக்கில் உமிழ்நீர் சுரக்க எல்லாரையும் வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு அவன் மட்டும் தனியாகவோ அல்லது அவனுக்குப் பிடித்த ஓரிருவருக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டோ அணுஅணுவாகச் சுவைத்துச் சாப்பிடுவான். நான்கு பக்கங்களையும் நாக்கால் தடவிவிட்டு, சின்னச்சின்ன துண்டாகக் கடித்துச் சாப்பிடுவான். அத்தோடு போனால் பரவாயில்லை. கண்ணசைவாலும் உதடுகளைச் சுழித்தும் பழித்துக் காட்டுவதைத்தான் தாங்கவே முடியாது. அந்த அவமானத்தில் உடலும் மனமும் பற்றியெரியும்.  துரதிருஷ்டத்தை நினைத்துநினைத்து உருவாகும் கசப்பு இன்னொருபக்கம் பிடுங்கித் தின்னும். விரோதத்துக்கு மூலகாரணம் அதுதான். அடுத்த வாரம் எங்கள் அணியில் யாருக்காவது பழம் கிடைக்கும்வரை அந்த விரோதம் தொடரும். அதற்குப் பிறகு சரியாகிவிடும். திரும்பும்போது எல்லாரும் ஒன்றாகவே திரும்பிவருவோம்.
     எந்த விரோதம் தீர்ந்தாலும் வேப்பம்பழங்களின் காலத்தில் உருவாகும் விரோதம் மட்டும் தீரவே தீராது. மரத்தடியில் உதிர்ந்து கிடக்கிற வேப்பம்பழங்களை ஆளுக்கொரு படியில் அல்லது குடுவையில் சேகரிப்பதில் பெரிய போட்டியே நடக்கும். மணலிலும் புதரிலும் தும்பைச்செடிகளுக்குக் கீழும் விழுந்திருக்கும் பழங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து எடுப்போம்.  சில சமயம் வேலிக்காத்தான் முட்செடிகளுக்குக் கீழே பழங்கள் உதிர்ந்துகிடக்கும்.  அவற்றை பக்குவமாக நீளமான குச்சியால் அருகில் இழுத்து எடுத்துக்கொள்வோம்.  அவசரத்தில் கையாலேயே எடுக்கக் குனிகிற ஜெயபாலனின் முதுகில் முள் கீறிவிடும். வலி தாங்காமல் ஐயோ என்று சத்தமெழுப்பியபடி அவன் நிமிர்ந்துநின்று துடைத்துக்கொள்வான். சட்டையில்லாத முதுகில் சிவப்புப் பென்சிலால் மெலிதாக ஒரு கோடு இழுத்ததைப்போல ரத்தம் தெரியும். நாராயாணன் அந்தக் காயத்தைத் துடைத்து எச்சில் வைத்து தேய்த்துவிட்டு குனிந்து ஆறேழுமுறை ஊதிவிடுவான்.  அவன் எடுக்க நினைத்திருந்த பழத்தைக் குச்சியால் இழுத்து அவனிடம் கொடுப்பேன். "நீதான இத மொதல்ல பாத்த. நீயே வச்சிக்கோ. இது ஒனக்குத்தான்டா.." அவன்  கையில் பிடித்திருக்கும் புட்டிக்குள் அந்தப் பழத்தைப் போட்டுவிட்டு ஓடிவிடுவேன்.
     ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டாலும் விரோதக் கணக்குக்கு குறைவு கிடையாது. யாருடைய படி நிறைய பழங்கள் சேகரிக்கிறார்கள் என்பதுதான் போட்டி. வீட்டுக்குத் திரும்பும்போது அல்லது குளத்தங்கரையில் உட்கார்ந்து பழங்களைப் பிதுக்கி கொட்டையை எடுத்துக் கழுவும்போது ஓரக்கண்ணால் ஒவ்வொருவரும் அடுத்தவன் படியைப் பார்த்துக்கொள்வோம்.
     எனக்கும் ராஜண்ணாவுக்கும் எப்போதும் படிநிறைய பழங்கள் கிடைத்துவிடும். பழம் சேகரிப்பதில் நாங்கள் ஒரு ரகசியமான தந்திரத்தைக் கடைப்பிடித்ததுதான் அதற்குக் காரணம். ஒரு மரத்தடியில் கிடக்கிற பழங்களை எடுக்க ஒருவர் அவசரமாகக் குனிகிற போது, அவனோடு போட்டி போடுவதாக நினைத்துக்கொண்டோ, அவனைவிட அதிகமாக சேகரித்துவிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டோ ஒருபோதும் அதே மரத்தடியில் குனிந்துவிடக்கூடாது. வேகமாக அவனைக் கடந்து அடுத்த மரத்துக்குச் சென்றுவிடவேண்டும். அப்போதுதான் சரியான வேட்டை கிடைக்கும். அப்படி சந்தர்ப்பங்களை உருவாக்கியபடி சென்றால் எல்லாருக்கும் முன்னால் படிகள் நிரம்பிவிடும்
     தாண்டித்தாண்டிச் செல்லும்போது நாராயணனுக்கும் ராஜண்ணாவுக்கும் காரணமில்லாலேயே வாக்குவாதம் வந்துவிடும். ஆனால் ராஜண்ணா அதற்கெல்லாம் பயந்து பின்வாங்கும் ஆள் கிடையாது.  அவனும் நெஞ்சை நிமிர்த்தி வாக்குவதம் செய்வான். பேச்சில் அவனை யாராலும் வெல்லவே முடியாது. பதில்வார்த்தை சொல்லத் தெரியாமல் நான் திணறிய பல தருணங்களில் எனக்காக வாதாடி என்னை அவன் காப்பாற்றியிருக்கிறான். அப்படிப்பட்ட வெற்றித் தருணங்களில் ஆங்கிலத்தில் உள்ள கோ என்கிற சொல்லை அடுத்தடுத்து சங்கிலிமாதிரி கோர்த்து "கோக்கோக்கோக்கோக்கோ......" என்று லயமுடன் இழுத்துப் பேசி அவசரமாக என்னைத் தள்ளிக்கொண்டு போய்விடுவான். இரண்டுபேரும் பழங்கள் சிதறிக் கிடக்கிற வேறொரு மரத்தைநோக்கி ஓடுவோம்.
     ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வேப்பம்பழங்களைச் சேகரித்ததற்கு ஒரு காரணம் இருந்தது.  பழங்களைப் பிதுக்கி கொட்டையெடுத்துக் கழுவி உலரவைத்து அளந்துகொடுத்தால் சின்ன படிக்கு இரண்டணா கிடைக்கும். பெரிய படியில் அளந்து கொடுத்தால் நாலணா கிடைக்கும்.
குளத்தங்கரையில் உட்கார்ந்து பழத்தைப் பிதுக்கி தோலையும் சதையையும் ஒதுக்கிவிட்டு கொட்டைகளைக் கழுவும் நேரத்தில் ராஜண்ணாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்துக் கிடந்தது. அவனுக்கு அன்று ஏராளமான பழங்கள் கிடைத்திருந்தன. படி நிரம்பி, அதற்கும் மேல் பழங்கள் கிடைத்து அவற்றைக் கால்சட்டையின் இரண்டு பக்கப்பைகளிலும் நிரப்பிவைக்கும் அளவுக்கு பெரிய வேட்டை.
     "இந்த தரம் கொட்டய வித்து என்னடா செய்வ ராஜண்ணா?" விரல்களில் ஒட்டி வழிந்த பழத்தின் சதையை உதறியபடி அவனிடம் கேட்டேன்.
     "நோட்டுதான்டா வாங்கணும். பூகோளத்துக்கு நோட்டே இல்ல. அந்த டீச்சர் மொறச்சிமொறச்சி பாக்கறத நெனச்சா ஒன்னுக்கே வந்துருது" சங்கடத்தில் முகம் இருள அடங்கிய குரலில் சொன்னான் ராஜண்ணா.
     "போன தரமும் கொட்டய போட்டுட்டு நோட்டுதான வாங்கன?"
     "அது சரித்திரத்துக்கு..."
     "கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ராஜண்ணா கேட்டான். "நீ என்னடா செய்யப் போற?"
     "போன தரமே நானு நோட்டு வாங்கிட்டன். முக்கியமா இப்ப ஒரு பேனாதான் வாங்கணும். இப்ப வச்சிருக்கற பேனா தொரதொரன்னு ஒழுவுதுடா. தெறந்தாலே போதும் கையும் தாளும் கறயாயிடுது."
அதைக் கேட்டு ராஜண்ணா சிரித்தான். சிரித்துச்சிரித்து அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.  எனக்கு பேச்சே எழவில்லை.  கொட்டைகளைக் கழுவிக்கழுவி படிக்குள் போட்டபடி என்னைப் பார்த்துக் கேட்டான். "ரெண்டணாவுக்கு எந்த ஊருலடா பேனா குடுக்கறாங்க? ஒன் கனவு பெரிய பகல்கனவா இருக்குது...."
     அதைக் கேட்டு எனக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. பேச்சே வரவில்லை. பக்கத்தில் இருந்த மணல்கட்டியை உருட்டி தண்ணீருக்குள் தள்ளினேன். ப்ளக்கென்று நீரில் நழுவி விழுந்ததும் வட்டவட்டமான அலைகள் எம்பியெழுந்தன. 
     "ஒரு பேனா என்ன  வெலயில கெடைக்கும்?" மெதுவாக அவனிடம் கேட்டேன்.
     "எட்டணா பத்தணா குடுத்தாதான் நல்லா எழுதற பேனா கெடைக்கும்..." ராஜண்ணா தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான். அந்த விலையைக் கேட்டதுமே எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
     "ஆத்துத் திருழாவுல எங்க அப்பா ரெண்டணாவுக்குத்தான வாங்கனாரு?.." அவன் சொல்வது பொய்யாக இருக்கக்கூடுமோ என்றொரு சந்தேகம் நெஞ்சை அடைத்தது.
     "அந்த வெலைக்குலாம் வாங்கனா, அது நாலு நாள்ளயே கழிய ஆரம்பிச்சிடும்..." அவன் முகத்தில் சிரிப்பின் சாயல் இன்னும் அப்படியே இருந்தது.
     "நாலணாவுலகூட கெடைக்காதா?"  கேட்கும்போது எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
     "கேட்டுப் பாக்கலாம்டா. செட்டியாரு கடையில கேட்டுப் பாத்தா தெரியும்..."
     "நாலு படி சேத்தாதான் எட்டணா கெடைக்கும். அத சேத்து முடிக்கறவரைக்கும் எங்க அம்மா சும்மா இருக்கமாட்டாங்கடா. ஏதாவது காய் ஓணும் பருப்பு ஓணும்னு அவசரத்துக்கு எடுத்து போட்டாலும் போட்டுடுவாங்க....." சொல்லும்போதே எனக்கு நெஞ்சு அடைத்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு தளும்பியது. ராஜண்ணாவின் முன்னால் அழுதுவிடக்கூடாது என்பதற்காக பல்லைக் கடித்துக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
பிதுக்கியெடுத்த எல்லாக் கொட்டைகளையும் தண்ணீர்விட்டு அலசி, ஒட்டிக்கொண்டிருந்த சதைத்துண்டுகளை அகற்றிக் குவித்தோம். ஒரு படி பழம் திடீரென்று  அரைப்படி கொட்டையாக மாறியிருந்தது.
     கழுவிய கைகளை ஒருதரம் முகர்ந்துபார்த்தபடி ராஜண்ணா அமைதியான குரலில் சொன்னான் "எதுக்கும் நீ கவலப்படாதடா. அடுத்த நோட்டுக்கு நான் சேக்கற கொட்டைங்களயெல்லாம் நான் ஒனக்கே குடுக்கறன். எல்லாத்தயும் சேத்து ஒனக்கு ஒரு நல்ல பேனா வாங்கலாம்...."
     அந்தச் சொற்கள் என்னை உருகவைத்தன. நன்றியோடு அவனை நிமிர்ந்து பார்த்தேன். தானாக உதவுவதற்கு முன்வருகிற அவனுடைய நல்ல மனத்தை நினைத்து நெகிழ்ச்சியாக இருந்தது. பதிலுக்கு அவனுக்காக எதையாவது செய்துதர வேண்டும் என நெஞ்சு விரும்பியது. "தெனமும் சாயங்காலமா கொஞ்ச நேரம் ஒனக்கு இங்கிலீஷ் சொல்லிக்குடுக்கட்டுமா?...."
     அவன் கண்கள் மின்னின. "உண்மையாவாடா?" என்றான்.
     "உண்மைதான்டா. சத்திமா."
     "சரி வா போவலாம்....." பேசிக்கொண்டே இருவரும் படிகளோடு வீட்டுக்குக் கிளம்பினோம்.
     "ஏன்டா கௌம்பிட்டிங்க? கொஞ்ச நேரம் இருந்தா நாங்களும் வந்துருவம்...." நாராயணன் சத்தம் போட்டான்.
     "போய் குளிச்சிட்டு பள்ளிக்கூடம் கௌம்ப வேணாமா? மேற்க போற ரயிலு நேரம் தாண்டிச்சின்னா அப்பறம் சட்டாம்புள்ள உள்ளயே சேக்கமாட்டாரு...." நடந்துகொண்டே சொன்னான் ராஜண்ணா.
     "அவருக்கு பெரம்ப எடுத்தும்போயி குடுத்ததே நான்தான்.  அதெல்லாம் அடிக்கமாட்டாரு. இரு வரோம்..." ஓட்டமாக ஓடிவந்து நாராயணனும் மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் படிகளில் நாங்கள் வைத்திருந்ததைவிட அதிக அளவில் கொட்டைகள் இருந்தன.
     "நல்ல வேட்டதான் போல. முக்கா படிக்கும் மேல சேத்துட்ட?...."
     நாராயணன் கண்களில் பெருமை சுடர்விட்டது. "நமம கததான் ஒனக்கு தெரியும்ல? எறங்கிட்டா உண்டு இல்லன்னு ஆக்கிட்டுதான் மறுவேல..."
     "ஏற்கனவே ரெண்டு படி சேத்துட்டேன்னு சொன்னியே, அத என்னடா செஞ்ச? "
     "போன வெள்ளிக்கெழமயே அம்மாவுக்குத் தெரியாம ஒரு படிய போட்டுட்டு ரெண்டணா வாங்கிட்டன்..." அவன் ரகசியமாகச் சொல்வதுபோல அடங்கிய குரலில் சொன்னான்.
     "வாங்கி..?"
     "இப்ப நம்ம மூலக்கடக்காரரு தேன்முட்டாய்னு ஒன்ன புதுசா வாங்கியாந்து போட்டிருக்காரு. ஒரணாவுக்கு ரெண்டு. ஒன்னொன்னும் நல்லா ஈச்சம் பழமாட்டம் இருக்குது. மேல எல்லாம் சக்கரத் தூளு. வாய வச்சி உறிஞ்சம்ன்னு வையி, அப்படியே தேன குடிக்கறமாதிரியே இருந்திச்சி....."
     "பேரு என்னடா சொன்ன?...." ஆவலாகக் கேட்டான் ராஜண்ணா.
     "தேன்முட்டாயி..."
     "ரெண்டணாவுக்கும் அதயே வாங்கித் துன்னிட்டியா?..." நம்பமுடியாமல் கேட்டேன் நான்.
     "மொதல்ல ஒரணாவுக்குத்தான்டா வாங்கனன். தின்னத்தின்ன ஆசயா இருந்திச்சா, அடுத்த நாளும் கையில  இருந்த காசிய குடுத்துட்டு அதயே வாங்கித் துன்னுட்டேன்...." சொல்லும்போதே அவன் நாக்கைக் குழைத்து எச்சிலைக் கூட்டி விழுங்கினான். கேட்கக்கேட்க எங்கள் நாக்கிலும் தேன்மிட்டாய் புரள்வதுபோல இருந்தது. ராஜண்ணாவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னைப் பார்த்து அவன் கண்ணசைத்தான். "பேனா கதயும் நோட்டு கதயும் முடியறவரைக்கும் பல்ல கடிச்சகினு பொறுமையா இருப்பம். அப்பறம், ஒவ்வொ படி சேர்ந்ததுமே தேன்முட்டாய்தான். பாத்துக்கோ...." என்று சொல்வதுபோல நானாகவே நினைத்துக்கொண்டேன். அந்த மாதிரியான நினைப்பு அப்போது மிகவும் ஆறுதல் அளிப்பதுபோல இருந்தது.
     எந்த வேலையை நிறுத்தினாலும் அதிகாலையில் வேப்பம்பழம் சேகரிக்கும் வேலையைமட்டும் தவறாமல் செய்துவந்தோம்.  எங்கள் கனவுகள் நிறைவேறும் என்பதில் எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. புதிய பேனாவை வாங்கும்போது நீலநிறத்தில் இருக்கும்படி தேர்ந்தெடுக்க வேண்டும். வெளிர்நீலம் அல்லது அடர்நீலம். சட்டைப்பையில் ஒருபோதும் அந்தப் பேனாவை செருகி வைக்கக்கூடாது. ஓடும்போதும் நடக்கும்போதும் குலுங்கிக்குலுங்கி மை சிதறிவிடும். பானுமதி டீச்சர் போல பேனாவுக்காகவே ஒரு சின்ன பெட்டியை வாங்கி அதற்குள் பாதுகாப்பாக வைக்கவேண்டும். ஒரு தங்கநகையைப்போல கண்ணும் கருத்துமாக அதைக் காலமெல்லாம் காப்பாற்றவேண்டும். பள்ளிக்கூடம் செல்லும் நேரங்களில்மட்டும் அந்தப் பெட்டியைப் புத்தகப்பைக்குள் வைக்கவேண்டும். மற்ற நேரங்களில் அதை சாமி படத்துக்குப் பின்னால் யார் கண்ணிலும் படாதபடி வைத்துவிடவேண்டும். மனத்துக்குள்ளே கற்பனைகள் அலைபோலப் புரண்டன.
     ஆனால் அப்படி ஒரு தருணம் வாழ்க்கையில் அமையாமலேயே போய்விட்டது. அந்த மாதத்தில் என் அப்பாவின் உடல்நிலை மிகவம் மோசமான நிலையைத் தொட்டுவிட்டது. உள்ளூரில் கொடுக்கப்பட்ட மருந்துக்கெல்லாம் அந்த நோய் மசியவில்லை. சென்னைக்குச் சென்று மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. ஏறத்தாழ மூன்று மாதங்கள். வீடு திரும்பிய பிறகு, ஓய்வெடுத்தபடி மேலும் மூன்று மாதங்கள். எங்கள் குடும்பமே திசைமாறிய கப்பலாகப் போய்விட்டது. வேப்பங்கொட்டையைச் சேகரித்துச் சேமித்த சில்லறைகளையெல்லாம் அம்மாவிடமே கொடுக்கும்படி நேர்ந்தது. ஒழுகும் பேனாவையே பக்குவமாக ஒரே நிலையில் பிடித்து நாளடைவில் எழுதப் பழகிக்கொண்டேன்.
     துரதிருஷ்டவசமாக ராஜண்ணாவின் குடும்பத்திலும் இடி விழுந்தது. மாடு வியாபாரத்துக்காக வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அளவுமீறி வேகமாக வந்த வாகனமொன்று மோதி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் அவர். ராஜண்ணாவின் அம்மா அவனை உடனடியாக பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். மாடுகளோடு பழகவைத்து பால் வியாபாரத்துக்குத் துணையாக வைத்துக்கொண்டார். ராஜண்ணாவால் எதுவுமே சொல்லமுடியவில்லை. சோகமான முகத்தோடு பல வாரங்கள் நடமாடினான். காலை நேரங்களை அவன் மாடுகளோடு கழிக்க வேண்டியிருந்ததால் பழம் சேகரிக்கக் கிளம்புவதையும் நிறுத்திவிட்டான்.
     எப்போதாவது பொழுதடைந்த வேளையில்தான் அவனைப் பார்த்துப் பேசமுடிந்தது. என் முகத்தைப் பார்த்ததுமே பெருமூச்சோடு அவன் கண்கள் கலங்கிவிடும். ஆறுதல் சொல்வதாக நினைத்துக்கொண்டு, அவன் கவனத்தைத் திசைதிருப்பி மந்திரவாதி கதை, வேதாளம் கதை, தேவதைக்கதை என எதைஎதையோ  சொல்லி நேரத்தைக் கடத்துவேன். இரண்டுபேரும் இலக்கில்லாமல் காலாற நடந்து எங்கெங்கோ திரிந்துவிட்டு தொட்டிப்பாட்டை தோப்பையும் கடந்து கடைசியில் குளத்தங்கரையில் வந்து நிற்போம். மரங்களின் நிழல்கள் தெளிவான ஒரு படத்தைப்போல குளத்தின் நீர்ப்பரப்பில் தெரிவதையும் காற்று வேகத்தில் மேலேயிருந்து விழுகிற ஒரு பழுத்த இலை அந்தப் படத்தைக் கலைத்துவிடுவதையும் மாறிமாறிப் பார்த்தபடி நிற்போம். அந்த ஆண்டின் இறுதியில் வியாபார வசதிக்காக ராஜண்ணாவின் குடும்பம் வேறொரு தெருவுக்குக் குடிமாறிப் போனது. பிறகு, எங்கள் தொடர்பு குறைந்துவிட்டது. அபூர்வமாக என்றாவது சாலையில் நேருக்குநேர் சந்திக்கும்போது மட்டுமே பேசிக்கொண்டோம். "ஒருநாளு வாடா வீட்டுக்கு..." என்று நான் அவனைக் கூப்பிட்டேன். அவனும் "நீயும் வாடா ஒரு நாளு நம்ம வீட்டுப்பக்கம்..." என்று அழைத்தான். என்ன காரணத்தாலோ எதுவுமே நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு ராஜண்ணாவின் பக்கத்தில் இருந்த நகரத்தைநோக்கி குடிபெயர்ந்துவிட்டது.
     அந்த ராஜண்ணாவை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. பொங்கலுக்காக போயிருந்தபோது திடீரென்று வாசலில் ஒரு டி.வி.எஸ். வாகனத்தில் வந்து இறங்கினான். அவனுக்குப் பின்னால் அரும்பு மீசையோடு இளைஞனொருவன் ஒட்டிக்கொண்டு நின்றான். அவனுடைய மகன் என்பது பார்த்த கணத்திலேயே புரிந்துவிட்டது.
     "டேய், எப்படிடா இருக்க?...." என்று பெயர் சொல்லி அழைத்தபடியே கூடத்துக்குள் வந்து தோளைத் தொட்டு இறுக்கிக்கொண்டான். என்னைப் போலவே அவனுக்கும் முன்வழுக்கை விழுந்திருந்தது. வெள்ளைச்சட்டை. வெள்ளை வேட்டி. கைவிரலில் ஒரு மோதிரம் மட்டும் போட்டிருந்தான். இறுக்கம் குறையாத சீரான உடற்கட்டு ஆச்சரியமாக இருந்தது. வாக்கியத்துக்கு இரண்டு தரம் வாய்ஓயாமல் என் பெயரை அவன் திரும்பத்திரும்பச் சொன்ன விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் பெயரைக் குறிப்பிட்டு பேசுகிறவர்களே குறைந்துபோன தருணத்தில் அவன் குரல் என்னை பழைய பசுமையான உலகைநோக்கி இழுத்தது.
     "என் பையன்டா இவன். மணக்குள விநாயகர்லதான் படிக்கறான். இஞ்சினீரிங் கடசி வருஷம். கத புஸ்தகம்லாம் விரும்பிப் படிப்பான். நம்மூரப் பத்தியெல்லாம் ஒருத்தரு கத எழுதியிருக்காருப்பான்னு ஒருநாளு கொண்டாந்து காட்டனான்டா. அட்டயில பாத்தா ஒன் படம் போட்டிருக்குது. டேய்  இவன் என் க்ளாஸ்மெட்னு சொன்னா சிரிக்கறான்டா.. இவன் சிரிச்சது போதாதுன்னு குடும்பமே சிரிப்பா சிரிக்குது. பேப்பர்ல ஒன் படம்லாம் போட்டு கட்டுர வந்தா இந்த பசங்களுக்கு என்ன கிண்டல் பண்றதே பெரிய வேலயா போயிடும. இருங்கடா வச்சிக்கறன்னு நானும் மனசுக்குள்ளயே நேரத்துக்காக எதிர்பார்த்துகினருந்தன். பொங்கலுக்கு எப்படியும் வருவேன்னு மனசுல ஒரு குருட்டு நம்பிக்க. அதான் ஒன்ன அவனுக்குக் காட்டிரலாம்ன்னு கையோட அழச்சிகினு கௌம்பி வந்துட்டன்...."
     நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்த ராஜண்ணாவைப் பார்த்தேன். அவன் முகத்தில் படர்ந்திருந்த வெளிச்சத்தைப் பார்க்கப்பார்க்க ஆனந்தமாக இருந்தது. ஆண்டுக்கணக்கில் அடைபட்டுக் கிடந்ததையெல்லாம் இழுத்துவந்து கண்முன்னால் நிறுத்துகிற வேகத்தை ஆர்வத்தோடு பார்த்தபடி இருந்தேன். ராஜண்ணாவின் மகனை அருகில் அழைத்து உட்காரவைத்து அவன் கல்வி விவரங்களை விசாரித்தேன். தொடக்கத்தில் இருந்த கூச்சம் மெல்லமெல்லத் தெளிந்ததும் "என்ன தம்பி, அப்பா வார்த்தைய இப்பவாவது நம்பறிங்களா?" என்று கேட்டேன்.
     அவன் முதலில் ஒருகணம் ராஜண்ணாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு என்னைப் பார்த்து "ஒங்க படத்த பாத்ததுமே என் க்ளாஸ்மேட்டுடான்னு குதிக்காத கொறயா ஆனந்தமா சொன்ன அன்னிக்கே நம்பிட்டேன் சார். ஒரு நூறு வாட்ஸ் வெளக்கு போட்டமாதிரி அப்படி ஒரு வெளிச்சத்த அன்னிக்கு அவரு மொகத்துல பாத்தேன். அந்தமாதிரி ஒரு ஆனந்தத்த அப்பா மொகத்துல நான் என்னைக்கும் பாத்ததே இல்ல சார். ஒங்க ரெண்டுபேருக்கும் நடுவுல எப்படி ஒரு நெருக்கம் இருந்தா இப்படி ஒரு வெளிச்சம் வரும்ன்னு நெனச்சிகிட்டேன். அவரு மொகத்துல அந்த ஆனந்தத்த திரும்பத்திரும்ப பாக்கணும்ங்கற ஆசயிலதான் சார் நம்பாதமாதிரி நடிச்சேன்....." குறுநகையோடு அவன் ராஜண்ணாவைப் பார்த்தபடி சொன்னான். நான் அவனுடைய தோளைத் தட்டிக்கொடுத்தேன். ராஜண்ணாவின் முகம் உணர்ச்சிமயமாக இருந்தது.
     "நான் கௌம்பறன்டா..." என்று சிறிதுநேரத்துக்குப் பிறகு எழுந்தான். "இங்கதான இருக்கற? சாயங்காலமா மறுபடியும் வரேன். அவசரமா ஒரு வசூலுக்குப் போவணும்" என்றான். "எங்கயும் போகலை. இங்கதான் இருப்பேன். கண்டிப்பா வரணும்..." என்று அவன் கைகளை வாங்கிக் குலுக்கினேன். அவன் சட்டென்று பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினான்.
     "ஒனக்கு என்ன வாங்கிவரதுன்னே தெரியலைடா.  ஒரே கொழப்பம். இவன்கூட அது இதுன்னு சொல்லி ரொம்ப அலய உட்டுட்டான். அப்பறமா நானாவே யோசிச்சிதான் இத வாங்கனன்...."

     அந்தப் பேனாவை வாங்கிய கணத்தில் என்னைச் சுற்றி திடீரென வேப்பம்பழங்களின் மணம் பரவித் தடுமாற வைத்தது. புன்னகையோடு என் தோளைத் தட்டிவிட்டு வாகனத்தைநோக்கி நடந்தான் என் ராஜண்ணா

(உயிர் எழுத்து இதழில் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை)