Home

Saturday, 11 June 2016

ஒட்டகம் கேட்ட இசை - (கட்டுரை)



     அரிசி, புளி, உப்பு, காய்கறி வாங்கிவர அம்மா கடைக்கு அனுப்பும்போது நடைஅலுப்பை மறப்பதற்காக, ஒரு மனப்பாடச் செய்யுளைப்போல "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.." பாட்டை உற்சாகமுடன் பாடிக்கொண்டே ஓடுவேன். அப்போது என் வயது பத்திருக்கலாம். ஏரியில் குளித்துவிட்டு, துவைத்த வேட்டியை உதறி முதுகுப்பக்கமாக இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து உலர்த்தியபடி "ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே.." என்று பாடியபடி அப்பா நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூடவே நடந்துவந்த காலம் அது. பின்கட்டில் துணிதுவைக்கும்போதும் புளிஉரிக்கும்போதும் மெல்லிய குரலில் "பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ.." என்று அம்மா பாடுவதையும் கேட்டிருக்கிறேன். ஞாயிறு மதியநேரத்திலும் புதன்கிழமை இரவிலும் ஒளிபரப்பப்படும் நேயர் விருப்பப்பாடல்களை வானொலியில் நாங்கள் எல்லாருமே கேட்போம். பாடல் என்பதை வரிகள் என்பதாகப் புரிந்துகொண்ட காலம் அது. வரிகளில் தொனிக்கும் மகிழ்ச்சியும் துயரமும் கசப்பும் மாறிமாறி மனத்திலும் சிறிதுநேரம் தேங்கிநின்றுவிட்டு, மறைந்துபோகும். மணலில் ஊற்றப்பட்ட தண்ணீர்போல. பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முழுக்க இப்படித்தான். பெரிதும் மாற்றமில்லை.

     வேலைக்குச் சேர்ந்து நாலைந்துமாத சம்பளங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன கைக்கடக்கமான வானொலிப்பெட்டியை வாங்கினேன். பின்னிரவு நேரங்களில் இலங்கை, சென்னை நிலையங்களிலிருந்து ஒளிபரப்பாகும் பாடல்களால் என் நெஞ்சை நிரப்பிக்கொள்ள அது எனக்கு உற்ற துணையாக இருந்தது. என் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பூனைக்குட்டிபோல அதுவும் படுத்திருக்கும். அத்தைமடி மெத்தையடி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, கண்ணன் வருவான் கதைசொல்லுவான், மன்னவனே அழலாமா, நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதெல்லாம் உருகிக் கரைந்துபோவதுபோல இருக்கும். காற்றிலே ஒரு மெல்லிய ஆடை நழுவிப் பறந்துவந்து நமக்குத் தெரியாமலேயே நம்மீது படிந்ததுமூடியதுபோல ஆறுதலாக இருக்கும். கண்மூடிய நிலையில் பின்தொடரவைக்கிற குரல்வலிமை பி.சுசிலாவுக்கு உண்டு. அந்தக் குரல் அலையும் திசையிலெல்லாம் ஒரு பட்டாம்பூச்சியைப்போல மனம் பின்தொடர்ந்து பறப்பதை உணர்ந்திருக்கிறேன். வானத்தில் நீந்துவதுபோல ஒரு அனுபவம். அடர்ந்த காட்டில் வானம் பார்த்தபடி படுத்திருப்பதுபோல ஒரு அனுபவம். உச்சிமலையில் பனிசூழ்ந்த விளிம்பில் வெட்டவெளியைப் பார்த்த பரவசத்தில் திளைத்திருப்பதுபோல ஒரு அனுபவம்.
     ஆனால் பாடல்களில் அதிகநேரம் செலவழித்துவிடக்கூடாது என்றொரு எச்சரிக்கையை ஒரு கட்டத்தில் நானாகவே வகுத்துக்கொண்டேன். என் முதல் ஆர்வம் படிப்பதும் எழுதுவதும்மட்டுமே. எனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தை இதற்குமட்டுமே ஒதுக்கவேண்டும். சோர்விலிருந்து விடுபடவும் மனஅழுத்தம் மிகுந்த சமயங்களில் அந்த பாரத்தை இறக்கிவைக்கவும் சிறிதுநேரம் கேட்கலாம். இப்படி நானாகவே சில வரையறைகளை வைத்திருந்தேன்.  திருமணத்துக்குப் பிறகுதான் டேப்ரெக்கார்டரும் வானொலியும் இணைந்த செட் ஒன்றை வாங்கினேன். என் மனைவிக்கு ஓய்வுநேரத்தில் படிப்பதற்கும் பாடல் கேட்பதற்கும் பழக்கினேன். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் ஊருக்கு வந்து திரும்பும்போதெல்லாம் ஏராளமான பாடல் கேசெட்டுகளை வாங்கிச்சென்று கேட்டோம். வேலை நிமித்தமாக நான் வெளியூர் சென்றுவிடும் நாட்களில் என் மனைவிக்கு இந்த கேசட்டுகளும் புத்தகங்களும்மட்டுமே துணை.
     ஒருமுறை ஹுப்ளி சென்றிருந்த சமயத்தில் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கம்வரைக்கும் சென்று சீட்டு கிடைக்காததால், அப்படியே கால்போன திசையில் ஒரு மாலைநடை நடந்து, தற்செயலாக ஒரு அறிவிப்புப்பலலையைப் பார்த்துவிட்டு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் இசைக்கச்சேரி மண்டபத்துக்குச் சென்றேன். வாசலில் வைக்கப்பட்டிருந்த பலகையில் ஹானகல் கங்குபாய் பாடுகிறார் என்று எழுதியிருந்தது. கனிவும் அமைதியும் படிந்த அந்த முகம் தந்த ஈர்ப்பில் தயக்கமே இல்லாமல் நுழைந்தேன். பின்வரிசை இருக்கைதான் கிடைத்தது. மேடை தெரிந்தது. அது போதும் என்று அமர்ந்துவிட்டேன்.
குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது அந்த அரங்கில் இருந்திருப்பார்கள். அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெல்லிசை அலையலையாய் வளையவந்துகொண்டிருந்தது. அதற்குத் தகுந்தபடி தலையசைத்தபடி, எல்லாருடைய பார்வையும் மேடையிலேயே பதிந்திருந்தது. பத்து நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தார்கள். சிவப்புக்கரை படர்ந்த நீலவண்ணத்தில் பட்டுப்புடவையை அணிந்துகொண்டு அவையை வணங்கியபடி வந்து அமர்ந்தவரைக் கண்டு அரங்கமே கைதட்டி வரவேற்றது. கைத்தட்டல் அடங்க மூன்று நான்கு நிமிடங்கள் பிடித்தன. மென்மையான புன்னகை தவழ, அவர் மெதுவாக அமர்ந்து சில கணங்கள் தரையையே பார்த்தபடி இருந்தார். பக்கத்தில் இருந்தவர் அவரே ஹானகல் கங்குபாய் என்று சொன்னார்.
     சற்றே அகன்ற முகம். ஏறு நெற்றி. அழகான வட்டப்பொட்டு. பின்னணி இசையோடு சட்டென்று ஒரு புள்ளியில் இணைந்து உயர்ந்த அவர் குரல் கேட்ட கணத்திலேயே நெஞ்சில் பதிந்துவிட்டது. அன்று பெரும்பாலும் இந்தி வரிகளால் ஆன பாடல்களையே அவர் பாடினார். சில வரிகளுக்குமட்டுமே பொருளைப் புரிந்துகொள்ளமுடிந்தது. சில வரிகள் புரியவே இல்லை. ஆனால் அது ஒரு தடையாகவே இல்லை. எல்லாவற்றையும் இட்டு நிரப்பியபடி அவர் குரல் என்னை இழுத்துக்கொண்டுபோனது. அவர் குரல் ஒரு புதுவெள்ளம்போல நான்கு திசைகளிலும் பொங்கிப்பாய்ந்தது. முரிந்துவிழுந்த ஒரு கிளைபோல அதில் நான் மிதந்தேன். இடமும் வலமுமாக நொடிதோறும் மாறிமாறிப் புரண்டுகொண்டிருந்தேன். எனக்குள் புகுந்துகொண்ட விசையை என்னால் நம்பமுடியவே இல்லை. மகத்தான அனுபவம்.
     ஊர் திரும்பியபிறகு நண்பரொருவரிடம் என் அனுபவத்தைச் சொன்னபோது அவர் எனக்கு ஒரு கேசட்டை வாங்கித் தந்தார். மகாராஜபுரம் சந்தானம் பாடிய பாடல்கள். அன்று இரவு ஒரு கட்டுரையை முடிக்கவேண்டியிருந்தது. அதை முடிக்கும்போது நேரம் பதினொன்றரைக்கும் மேலாகிவிட்டது. உடனே உறக்கம் வரவில்லை. சிறிதுநேரம் கேட்கலாம் என்று புதிய கேசட்டை எடுத்துச் சுழலவிட்டேன். தாயே யசோதா பாடல். ஆதங்கமும் ஆனந்தமும் இணைந்தொலித்த குரல். மாறிமாறி நடிக்கும் அக்குரல் புதுமையாக இருந்தது. குரலில் தொனித்த ஏற்றஇறக்கத்தை நம்பவேமுடியவில்லை. திட்டமிட்ட அசைவுபோல ஒவ்வொரு எழுத்துக்கும் தரப்பட்ட அழுத்தவேறுபாடு கச்சிதமாகப் பொருந்திப்போனது. விக்கிரகத்துக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைபோல. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். அந்தக் குழைவு. அந்த நெளிவு. காதோடு ரகசியத்தைச் சொல்வதுபோன்ற அந்த முறையீடு. எல்லாம் சேர்ந்து என்னை அப்படியே அள்ளிக்கொண்டு போனது. ஒரே சமயத்தில் பல பெண்கள் முற்றத்தில் கூடி அன்னையிடம் முறையிடும் காட்சி சட்டென என் மனத்தில் விரிவடைந்தது. அந்தப் புகாரின் தொனியில், இனிமேலாவது கண்டித்துவை என்று சொல்கிற வேகமெதுவும் இல்லை. மாறாக, கண்ணன் தன் குழந்தைக்குறும்பால் எங்களையெல்லாம் யசோதையாக மாற்றுகிறான். ஆயர் குடியை யசோதைகளின் குடியாக்கிவிட்டான் அன்புக்குரிய கண்ணன்.  வரிகளால் புலப்படுத்த முடியாத ஒன்றை அவர் குரல் புலப்படுத்தியது. கதைகளிலும் பல திரைப்படங்களிலும் படித்தும் பார்த்தும் தெரிந்த காட்சிகளையெல்லாம் ஒருகணம் வேகவேகமாகத் தொகுத்துப்பார்த்தேன். அண்டைவீட்டுப் பெண்கள் தம் புகார்களால் யசோதையைச் சங்கடத்துக்கு ஆளாக்குவதையே அவை உணர்த்தியதால் அந்த உணர்வுக்கே என் மனமும் பழகிவிட்டிருந்தது. முதன்முறையாக அந்த எண்ணத்தை உடைத்தது சந்தானத்தின் குரல். வரிக்கு இசைவாக அவர் முன்வைக்கும் பாவங்கள், நம்மை எல்லையற்ற ஒரு பெருவெளியைநோக்கித் தள்ளுவதை ஆனந்தத்துடன் உணர்ந்தேன். ஒரு பெரிய பறவை தன் முதுகில் நம்மைச் சுமந்து விண்ணேறிப் பறப்பதுபோல. கங்குபாய் குரலைக் கேட்டபோது கிட்டிய அதே அனுபவம். அக்கணத்தை மறுபடியும் வாழ்வதுபோல உணர்ந்தேன்.
     சென்னைக்குச் சென்ற ஒரு நண்பரிடம் சொல்லிவைத்து சந்தானம் பாடிய இன்னும் இரண்டு கேசெட்டுகள் வாங்கிவரச் செய்து கேட்டேன். எல்லாப் பாடல்களிலும் தன் குரல் பாவத்தால் சட்டென்று ஒரு காட்சியை அவர் உருவாக்கிவிடுவதை உணரமுடிந்தது. அலைபாயுதே, திக்குத்தெரியாத காட்டில், என்ன தவம் செய்தனை, மோகத்தைக் கொன்றுவிடு ஒவ்வொன்றும் ஒரு காட்சியை கட்டியெழுப்பியது. தௌiந்த நிலவு பட்டப்பகல்போல் எரியுதே என்ற வரியை அவர் மீண்டும்மீண்டும் அழுத்தம்கொடுத்துப் பாடுவதைக் கேட்டபோது என் நெஞ்சே வெடித்துவிடும்போல உணர்ந்தேன். ஒரு பெண் வெளிப்படுத்தத்தக்க வேதனையையும் இயலாமையையும் தவிப்பையும் குமுறலையும் ஒருங்கே புலப்படுத்திய அந்தக் குரல் மீண்டும்மீண்டும் காதருகே கேட்பதுபோல இருந்தது. அதற்குப் பிறகு பேருந்துப்பயணங்களிலும் நடைநேரத்திலும் வானத்தில் நிலவு தெரியும்போதெல்லாம் அந்த வரியை நினைத்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. உடனே, காதருகே அந்தக் குமுறும் குரல் கேட்கும். இன்னும் சில கணங்கள் கேட்டபடியே நின்றிருந்தால் அந்த முகத்தையே என்னால் பார்த்துவிடமுடியும் என்கிற எண்ணம் ஆழ்ந்த ஒரு நம்பிக்கையாக உருவெடுக்கும். ஒரு கணம் என்னையறியாமல் என் உதடுகள் அவ்வரிகளை முணுமுணுத்து அடங்கும். 
     பிறகுதான் இசையின்மீது நாட்டம் உருவானது. நண்பர் குற்றாலம் தருமராஜனின் உரையாடல் அந்த நாட்டத்தை வளர்த்தது. சில ராகங்களின் சாயலைச் சொல்லித் தருவதற்கு அவர் முயற்சியெடுத்துக்கொண்டார். என்ன காரணத்தாலோ, அதை என் மனத்தால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.  எனக்கு இசையைக் கேட்பதுமட்டுமே போதுமாக இருந்தது. அது ஒரு மழைபோலப் பொழிய வேண்டும். அந்த வெட்டவெளியில் அப்படியே நனைந்திருக்கவேண்டும். அதுபோதும் எனக்கு.
     தற்செயலாக நண்பரொருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் இசைப்பாடல்களை வானொலிவழியாக ஒலிபரப்பக்கூடிய ஒரு தனியார் நிறுவனத்தின் உறுப்பினர் அவர். அந்த நிறுவனம் அவர் வீட்டு மாடியில் ஓர் ஒலிவாங்கியை நிறுத்தியிருந்தது. அதன் கம்பியிழைகள் வீட்டிலிருந்த வானொலியோடு இணைக்கப்பட்டிருந்தன. அந்தக் குறிப்பிட்ட அலைவரிசையை மீட்டும்போதெல்லாம் இசை பரவத் தொடங்கிவிடும். நான் சென்றிருந்த சமயம் பச்சைமாமலைபோல் மேனி என்னும் பிரபந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. பெண்குரல். எனக்கு ஆச்சரியம். டி.எம்.எஸ். குரலில்மட்டுமே கேட்டுக்கேட்டுப் பழகிய அந்தப் பாட்டை, ஒரு பெண்குரல்வழியாகக் கேட்பது புதிய அனுபவமாக இருந்தது. அரங்கன் உடலழகைச் சுட்டிக்காட்டி ஓர் ஆண்குரல் பாடுவதற்கும் பெண்குரல் பாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை சட்டென்று அக்கணத்தில் உணர்ந்தேன். ஓர் ஆணின் அழகை முழுஅளவில் மனத்தால் உள்வாங்கிச் சொல்லும் வல்லமை பெண்ணுக்கல்லவா உண்டு? அப்போதே அந்தக் குரல் எனக்குப் பிடித்துவிட்டது. "யார் இவர்?" என்று கேட்டேன். "இவரைத் தெரியவில்லையா உங்களுக்கு?" என்று ஆச்சரியப்பட்டார் நண்பர். நான் உதட்டைப் பிதுக்கினேன். "இவுங்கதான் பாம்பே ஜெயஸ்ரீ" என்றார்.
     அடுத்த வாரம் அவர் என் அலுவலகத்துக்கு வந்து இரண்டு கேசட்டுகளைப் பரிசாகக் கொடுத்தார். இரண்டுமே பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல்கள். அன்று இரவே அந்தப் பாடல்களைக் கேட்டேன். முதல் பாடலே என்னை உடைத்துவிட்டது. 
     அது "கண்ணே என் கண்மணியே கண்ணனே கண்வளராய்" என்னும் பாட்டு. ஒரு மாணிக்கத்தொட்டில் தொங்குகிறது. அடுக்கடுக்காக மெத்தென்ற பட்டுத்துணிகளின் மடிப்பு அதில் விரிக்கப்பட்டுள்ளது. அதன்மீது கிடத்தப்பட்டிருக்கிறான் குழந்தைக்கண்ணன். பிஞ்சுக்கைகளையும் கால்களையும் அசைக்கிறான். அருகில் நிற்கும் அன்னையைப் பார்த்து பொக்கைவாய் திறந்து சிரிக்கிறான். அவன் ஈர உதடுகள் மின்னுகின்றன. என்னடா கண்ணா என்று ஒரு குரல் கொடுத்ததுமே அவன் உற்சாகத்தால் உடல் முறுக்குகிறான்.  விதம்விதமாக குரல் எழுப்புகிறான். அவன் விழிகளில் களைப்பே தெரியவில்லை. உறக்கத்தின் சுவடே இல்லாத குழந்தையை உறங்கவைக்க படாத பாடு படுகிறாள் யசோதை. தொட்டிலை மெதுவாக அசைக்கிறாள். குழந்தையின் மார்பைத் தொட்டுத் தட்டிக்கொடுக்கிறாள். குழந்தைக்குத் தாயான பெருமையில் அந்தக் குழந்தை அவளுக்குத் தெய்வமாகத் தோன்றுகிறது. கண்மூடி உறங்கச் சொல்லும் குரலைக் கேட்காததுபோல கைகளை நீட்டித் தூக்குமாறு கேட்கிறது குழந்தை. அருந்திய பால் கடைவாயில் எச்சில் கோடாக இறங்கி வழிய புன்னகைக்கிறது. மெல்ல தலையைப் புரட்டி தொட்டில் கட்டைகளைப் பார்க்கிறது. விரலைநீட்டி அதைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்கிறது. குழந்தை ஒரு பேரதிசயம். குழந்தைக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் தெய்வத்திடம் மனிதன் முன்வைக்கும் நன்றிச்சொற்கள்.
     பின்னிரவுவரை ஜெயஸ்ரீயின் பாடல்களை மீண்டும்மீண்டும் கேட்டபடி இருந்தேன். பாதிப்பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போதே எங்கோ ஒரு புள்ளியில் என் மனம் இசையிலிருந்து விலகி அந்த வரிகளின் பின்னல் போகத் தொடங்கியது. கொட்டும் அருவியின்கீழே தலைகுனிந்து நிற்பதுபோல, இசையை மனம்முழுதும் தளும்பத்தளும்ப வாங்கியபடி இருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால் ஒருமுறையும் அது சாத்தியமானதில்லை. கட்டுகளை அறுத்துக்கொண்டு ஓடிவிடும் கன்றுக்குட்டியைப்போல மனம் சட்டென்று தாவிவிடும். கண்ணன் ஒருவன்மட்டும் குழந்தையல்ல. உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் கண்ணன்தான். கண்ணன் ஒரு பெயராகமட்டுமே பாடலில் இருக்கிறான். எல்லாக் குழந்தைகளுக்குமான பொதுப்பெயர் கண்ணன். கண்ணன் மிகநல்ல குழந்தை. தன் நல்ல நடவடிக்கைகளால் தாய்க்கு நற்பெயரைக் கொண்டுவந்து தருகிறான். கண்ணன் சரியான குறும்புக்காரன். தன் குறும்புகளால் தாய்க்கு அளவற்ற சங்கடங்களை உண்டாக்குகிறான். தாய் இரண்டையும் ஏற்றுக்கொள்கிறாள். ஒன்றை ஏற்றுக்கொண்டு இன்னொன்றை நிராகரிப்பது ஒரு தாய்க்கு ஒருபோதும் முடியாத செயல்.  இந்த உலகமே கண்ணன். இதை அமைதியாக்கி உறங்கவைப்பது தாயின் தாலாட்டு. இப்படி அலையும் மனத்தை, ஒவ்வொரு முறையும் மீண்டும் இழுத்துவந்து, அடுத்தடுத்த பாட்டின்மீது கவனத்தைத் திசைதிருப்பவேண்டியிருந்தது.
     அதே நண்பர் ஒருசில மாதங்களுக்குப் பிறகு மடம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இசைக்கச்சேரிக்கு அழைத்துச் சென்றார். "இன்னைக்கு அருணா சாய்ராம் பாடறாங்க.." என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் "வடநாட்டுக்காரங்களா? இந்திப்பாட்டு பாடுவாங்களா?" என்று கேட்டேன். அவர் என் தோளைத் தட்டினார். "என்ன, இப்படி அப்பாவியா இருக்கிங்க? தமிழ்லதான் பாடுவாங்க, வாங்க" என்றார். பிறகு "பேருதான் அப்படி. பம்பாய்ல பொறந்து வளர்ந்தவங்க. தாய்மொழி தமிழ்தான். பயிற்சி, கச்சேரிலாம் அங்கதான். மராத்தி, இந்தின்னு ஒரு பெரிய ரவுண்டு வந்துட்டாங்க. இப்ப தமிழ்நாட்டுலதான் வாசம்" என்று சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பையே தந்துவிட்டார். அதற்குள் கச்சேரி தொடங்கியதால் அமைதியானது அரங்கம்.
     சற்றே அழுத்தம் மிகுந்தது அவர் குரல். அதனாலேயே அவர் முழு சக்தியையும் கொடுத்துப் பாடும்போது ஆற்றாமையின் தவிப்பை அப்படியே உணர்த்த முடிந்தது. கேட்கக்கேட்க நெஞ்சும் அடிவயிறும் கலங்கின. வழக்கமான இரண்டு ஆரம்பப்பாடல்களுக்குப் பிறகு, அவர் என்ன கவி பாடினாலும் என்று வரியெடுத்ததும் மெல்லமெல்ல கதறியழவேண்டும்போல ஒரு வேகம் மனத்தில் பொங்கி நிரம்புவதை உணர்ந்தேன். மேடையில் எல்லாமே ஒரு கணத்தில் மறைந்துவிட்டது. ஆதரவில்லாத ஒரு உயிர் வெட்டவெளியின்முன் நின்று மன்றாடும் குரல் கேட்டது. எனக்கு யாருமே இல்லையே, நீயாவது எனக்குத் துணையாக இருக்கக்கூடாதா என்று ஏக்கத்துடன் கேட்கும் குரல். மனிதர்கள் கைவிடுவதற்கான காரணத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம், கடவுளே நீ கைவிட்ட காரணத்தை என்னால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கலங்கியழுது முறையிடும் குரல். பாதிப் பாடல் கடந்தபோது என் கண்களில் கண்ணீர் தளும்பத் தொடங்கியது. விழித்திரை மறைந்தது. ஒரு பெரிய கேவல் நெஞ்சை அடைத்தது. ஒருகணம் என்னையே அனாதையாக உணர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உலகில் பிறந்தவர்கள் எல்லாருமே அனாதைகளே என்று தோன்றியது. அன்பு கிடைக்காத அனாதைகள். ஆதரவை எதிர்பார்க்கும் அனாதைகள். செல்வமில்லாத அனாதைகள். உறவில்லாத அனாதைகள்.
     கேசட்டுகளை நானே வாங்கிச் சேகரிக்கத் தொடங்கினேன். பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், சௌம்யா, ரஞ்சனி காயத்ரி, ஜேசுதாஸ், சஞ்சய் சுப்பிரமணியம், அருண் எல்லாரையும் கேட்டேன். எல்லாருடைய பாடல் பட்டியலிலும் நெஞ்சை அசைக்கும் ஒருசில பாடல்கள் உண்டு. நம்மை அந்தரத்தில் ஒரு துளியாக நிறுத்தும் தருணங்கள் அவை.  முழுக்கமுழுக்க நாம் கரைந்து இல்லாமல்போகும் அல்லது நம்மையே இழந்துபோகும் பரவசமான கணங்கள். வாழ்வின் மிகப்பெரிய சேமிப்பு அத்தகைய மாபெரும் தருணங்கள்மட்டுமே.
     இலக்கிய நிகழ்ச்சியொன்றுக்காக வெளியூர் சென்று தங்கியிருந்த சமயத்தில் இலக்கிய அரட்டையாகச் சென்றுகொண்fடிருந்த உரையாடல் சட்டென்று இசையின் திசையில் திரும்பியது. மெல்லமெல்ல அது நகர்ந்து ஆனந்தபைரவிக்கும் சிந்துபைரவிக்கும் இடையிலுள்ள நுட்ப வேறுபாடுகளை அலசும் விதமாக மாறியது. நண்பர்களின் ஆழ்ந்த இசைஞானம் ஆச்சரியமாக இருந்தது. வேறுபாடுகளை நிரூபிக்கிற வரிகளை இருவருமே லயசுத்தத்தோடு பாடிக்காட்டியதால் விவாதம் விரிவடைந்தபடி சென்றது. பிறகு, ஒவ்வொரு ராகத்துக்கும் துணையாக உள்ள தோழமை ராகங்களை பட்டியலிட்டு, அவற்றின் தாக்கங்களை விரிவான எடுத்துக்காட்டுகள் வழியாகப் பகிர்ந்துகொண்டார்கள். நான் மலைப்போடு அவர்கள் உரையாடலைக் கேட்டபடி இருந்தேன்.
     ராகங்களைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது என்று சொன்னபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர்கள் சில அடிப்படைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். சில திரைப்பாடல்களின் மெட்டுகள்வழியாக ராகங்களின் தன்மைகளையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
     "போனதெல்லாம் போகட்டும், இன்று ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். மூன்று முக்கியமான ராகங்களின் தடங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், கேளுங்கள்" என்றபடி ஆலாபனை செய்துகாட்டினார் ஒருவர். பிறகு அவற்றுக்குப் பொருத்தமான பாடல்களையும் பாடி இணைத்துக் காட்டினார். உறங்கச் செல்வதுவரைக்கும் அவற்றை மீண்டும்மீண்டும் அசைபோட்டபடிதான் இருந்தேன். ஆனால் விழித்ததும் எல்லாமே மறந்துவிட்டது. பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரேஒரு எடுத்துக் காட்டுக்கூட நினைவுக்கு வரவில்லை. நண்பர் ஏமாற்றத்தோடு விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
     இப்போதும் இசை கேட்கிறேன். அலுவலகத்துக்கும் குடும்பத்துக்கும் செலவான நேரம்போக எஞ்சும் நேரங்களில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டவன் நான். ஆனால், எல்லா நேரங்களிலும் உத்வேகம் நிறைந்திருக்கும் என்று சொல்லமுடியாது. என் மனத்தை உத்வேகம் நிரம்பியதாக அமைத்துக்கொள்ள எனக்கு இசை தேவைப்படுகிறது. எனக்கு இசை ஒரு மகாநதி. பனிக்குன்று. கடல். காட்டருவி. அமைதி தவழும் கருவறை. சக்தி வேண்டும் தருணங்களில் அதன் காலடியில் பணிந்து நிற்கிறேன். காற்று வீசலில் அது என்னைத் தீண்டிச் செல்கிறது.
     கடந்த வாரம் பார்த்த ஒரு மங்கோலியத் திரைப்படத்தின் நினைவு வருகிறது. பாலைவனத்தில் ஒட்டகங்களையும் செம்மறியாடுகளையும் வளர்த்து, வளரவளர அவற்றின் உடலிலிருந்து கம்பளியை வெட்டியெடுத்து விற்பனை செய்து வாழும் குடும்பமொன்று அந்தத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. அவர்களுக்குச் சொந்தமான ஒட்டகமொன்று ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறது. இரண்டு நாட்கள் இடைவிடாத அவஸ்தை.  படுக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தடுமாறித்தடுமாறி விழுகிறது. வலியும் வேதனையும் கொண்ட பிரசவம். கருப்பைக்குள்ளேயே திசைமாறியதால் கால் முதலில் வெளிவந்து தலை இறுதியாக வெளிவருகிறது. கிட்டத்தட்ட மரணப்புள்ளிவரை சென்று தாயும் குட்டியும் பிழைக்கின்றன. வழக்கமான பழுப்புநிறத்துக்குமாறாக குட்டி வெள்ளைவண்ணத்தில் உள்ளது. வலியின் வேதனை ஒருபக்கம். புதிய வண்ணத்தால் உருவான மிரட்சி மற்றொரு பக்கம். குட்டி ஒட்டகத்துக்கு பாலூ\ட்ட மறுக்கிறது தாய் ஒட்டகம். பாலில்லாமல் கண்ணீர்மல்க அழுகிறது ஒட்டகம். குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே குட்டியை ஆதரவாகப் பிடித்துச் சென்று தாய்மடியின் அருகில் விடுகிறார்கள். ஆனால் தாய் ஒட்டகம் அதை நெருங்கவே விடுவதில்லை. காலால் உதைத்துத் தள்ளிவிடுகிறது. நெருங்கினாலேயே தலையால் முட்டுகிறது. குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுப்பதுபோல, ஒரு கொம்பில் பாலை நிரப்பி எடுத்துச் செல்கிறாள் குடும்பத்தலைவி. குட்டியின் வாயைத் திறந்து பாலைப் பருகவைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அதுவும் பலிக்கவில்லை.
     ஒருபுறம் பிடிவாதமான தாய்ஒட்டகம். மறுபுறம் பரிதாபமான நிலையில் குட்டிஒட்டகம். மனிதமுயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிவடைந்த நிலையில் வயதில் மூத்த பெரியவரொருவர் அருகில் உள்ள நகரிலிருந்து வயலின் இசைக்கலைஞன் யாரையாவது அழைத்துவந்து அந்த ஒட்டகத்தின் முன் இசைத்தால் தாய்ஒட்டகத்தின் மனபாரம் இளகி அமைதியுறக்கூடும் என்று ஆலோசனை வழங்குகிறார். உடனடியாக அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் இசைக்கலைஞர் உடனடியாக வருவதில்லை. ஓய்வு நாளில் வருவதாகச் சொல்லி அனுப்பிவிடுகிறார். அதுவரை பாலூட்டமறுக்கும் தாய்ஒட்டகமும் பட்டினிகிடக்கும் குட்டிஒட்டகமும் ஒன்றையொன்று வருத்திக்கொள்கின்றன. பொழுதுகள் நகரநகர, குட்டி மரணமடையக்கூடும் என்று எல்லாரும் முடிவுகட்டிவிடுகிறார்கள். கையறு நிலையில் அதைச்சூழ்ந்து நிற்கிற வேளையில் இசைக்கலைஞர் வருகிறார். அவர் இசைக்கும் வயலின் இசை அந்தப் பாலைவனவெளியையே நிரப்புகிறது. உருக்கமான அந்த இசையில் உள்ளம் உருகுகிறது தாய்ஒட்டகம். அதன் பிடிவாதம் மெல்லமெல்லத் தளர்கிறது. மடிஇறுக்கமும் தளர்கின்றது. மற்றவர்களால் சுமந்துவரப்பட்டு, தாய்மடிக்கருகே நிற்கவைக்கப்பட்ட குட்டி வாய்திறந்து மடியைக் கவ்வி, பாலை உறிஞ்சத்தொடங்குகிறது. அடக்கிவைக்கப்பட்டிருந்த பால் ஊற்றெனச் சுரந்துவழிகிறது.
     இசைகேட்டு மனபாரத்தைக் கரைத்துக்கொண்ட அந்த ஒட்டகத்துக்கும் எனக்கும் அதிக வித்தியாசமெதுவும் இல்லை.


(’உயிர் எழுத்து’ இதழில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை)