Home

Sunday 5 December 2021

ஒரே ஒரு ஊரிலே - சிறுவர் கதைப்பாடல்

 

ஒரே ஒரு ஊரிலே

ஒரே ஒரு தோட்டம்

ஒரே ஒரு தோட்டத்திலே

ஒரே ஒரு மாமரம்

 

ஒரே ஒரு மாமரத்தில்

ஒரே ஒரு பிஞ்சு

பிஞ்சு வளர்ந்து காயாகி

காயும் கனிந்து வந்ததம்மா

 

காலை மாலை பொழுதெல்லாம்

பழத்தைக் காணும் கனிமொழிக்கு

ஆசை பெருகிப் பொங்கியது

அதுவே மனசில் தங்கியது

 

பேச்சு முழுக்க மாம்பழமாம்

பிதற்றிப் பிதற்றித் திரிந்தாளே

கனவு முழுக்க மாம்பழமாம்

கண்களை மூடிச் சிரித்தாளே

 

ஆசை மகளின் விருப்பத்தை

அம்மா தெரிந்து வைத்திருந்தாள்

பழத்தைக் கடித்து மகள்சுவைக்கும்

கனவில் அவளும் திளைத்திருந்தாள்

  

மடியில் மகளைச் சாய்த்தபடி

ஏழு நாட்கள் போகட்டும்

இன்னும் கனியும், காத்திருப்பாய்

என்றாள் அம்மா மெதுவாக

 

ஒன்று இரண்டு மூன்றாக

ஆறு நாட்கள் கடந்தனவே

பழத்தைச் சுவைக்கும் ஆசையினால்

கனிமொழி நெஞ்சம் ஏங்கியதே

 

ஏழாம் நாளில் அதிகாலை

தாயும் மகளும் எழுந்தார்கள்

தோளைத் தொட்டு அணைத்தார்கள்

தோட்டத்துக்கு வந்தார்கள்

 

மரத்தில் பழத்தைக் காணவில்லை

பழத்தின் சுவடே தெரியவில்லை

சுற்றிச் சுற்றி வந்தார்கள்

அதிர்ச்சியில் திகைத்து நின்றார்கள்

 

நின்று பார்த்த கனிமொழியின்

நெஞ்சக் கனவு சிதறியது

தின்று முடித்த அணிற்பிள்ளை

திரும்பிப் பார்த்து ஓடியது

(தும்பி - 2019)