Home

Monday 13 December 2021

காத்திருப்பவள் - சிறுகதை

  

நிறுத்தத்தில் இறங்கியதுமே கைக்கடிகாரத்தில் மணி

பார்த்தாள் தேவகி. ஆறே முக்கால். அச்சத்தாலும்

கவலையாலும் அந்தக் காலை நேரத்திலும் அவளுக்கு

வியர்த்துக்கொட்டியது. அடிவயிற்றில் மின்னலைப்போல

ஒருநொடி வலி எழுந்து மறைந்தது. காற்றில் ஒதுங்கியிருந்த

தலைமுடி கலைந்தது. நாலாக மடித்து உள்ளங்கைக்குள்

வைத்திருந்த கைக்குட்டையால் கழுத்தில் படிந்திருந்த

வேர்வையைத் துடைத்தபடி ஏரிக்கரையைநோக்கி நடந்தாள்.

நகரத்தின் நடுவே அமைதியாகப் படர்ந்திருந்தது அந்த ஏரி.

ஒரு ராட்சச உடல் படுத்துக்கிடப்பதுபோல. பாதையோரத்

தள்ளுவண்டிக் கடைகளில் சூடுபறக்க தேநீர் வியாபாரம்

மும்முரமாக இருந்தது. செய்தித்தாள் படிப்பவர்களும்

வானொலி கேட்பவர்களும் அங்கங்கே நின்றிருந்தார்கள்.

எல்லாச் சத்தங்களையும் அழுத்தியபடி திரைப்படப்

பாடலொன்றை ஒலிபரப்பியது ஒரு கடையிலிருந்த

ஒலிநாடாப்பெட்டி. ராணுவப் பயிற்சி முகாமிலிருந்து கிளம்பி

ஏரிக்கரையைச் சுற்றிக்கொண்டு கிளம்பிச்செல்லும்

பயிற்சிவீரர்களின் பூட்ஸ்கள் தார்ச்சாலையில் ஒரே சீராக

தாளலயத்துடன் அழுந்தி ஓசையெழுப்பின. ஒருகணம் மிதிபடும்

உடலாக தன்னையே நி¬த்துக் கொண்டாள் தேவகி. பதற்றத்தில்

மூச்சிறைத்தது. ஒவ்வொரு அடியாக பாதங்கள் நெருங்கிவந்து

மார்பில் ஒரு மிதி. வயிற்றில் ஒரு மிதி. மறுகணம் சாலையில்

பதிந்தன. நூற்றுக்கணக்கான பாதங்கள் லயம் பிசகாமல்

நெருங்கி மிதித்துக் கடந்துசென்றன. கண்களின் ஓரம்

திரண்டுவந்த கண்ணீர்த்துளிகளைத் துடைத்துக்கொண்டு

நெருங்கிவிட்ட ஏரியைப் பார்த்தாள். சூரிய ஒளியில் மின்னிக்

கொண்டிருந்தது நீர்ப்பரப்பு. நடு ஏரியில் நின்றிருந்த

மரத்தின்மீது ஏராளமான காக்கைகள் தெரிந்தன. அரை

நினைவுடன் நடப்பவளைப் போல எல்லாவற்றையும்

கவனித்தும் கவனிக்காதவளாக வழக்கமான சந்திப்பு இடத்தை

நெருங்கினான். அனிச்சையாக கைக்கடிகாரத்தில் மறுபடியும்

மணிபார்த்தாள். ஆறு ஐம்பத்தியைந்து.

ஏழிலிருந்து ஏழரைக்குள் பணத்தோடு வந்துவிடுவதாகச்

சொல்லியிருந்தான் செல்வம். அரைமணிநேர இடைவெளி

என்பது எதிர்பாராத சமயங்களில் போக்குவரத்தில்

ஏற்பட்டுவிடுகிற நெருக்கடிகளால் தற்செயலாக உண்டாகும்

தாமதத்துக்காக உருவாக்கப்படும் கணக்கு. நகரின் வேறொரு

முனையிலிருந்து வந்தாலும் நிறுத்தத்திலிருந்து அவனும் பத்து

நிமிடதூரம் நடந்துதான் வரவேண்டும். இரண்டு வருடப்

பழக்கத்தில் அவன் இந்தக் கணக்கிலிருந்து ஒருநாளும் தப்பியதே

இல்லை. நிச்சயம் வந்துவிடுவான் என்றே தோன்றியது.

ஒருவேளை இந்த இடைவெளிக்குள் வரவில்லையென்றால்

தொடர்ந்து காத்திருக்கவேண்டாமென்றும் சாயங்காலமாக

ஐந்தரையிலிருந்து ஆறுக்குள் கண்டிப்பாக வந்துவிடுவதாகவும்

இதே இடத்தில் மீண்டும் காத்திருக்குமாறும் சொல்லியிருந்தான்.

வழக்கத்துக்கு விரோதமாக அவனிடமிருந்து அதிசயமாக

வெளிப்பட்ட மாற்றுச் சிந்தனையால் ஒருவேளை வராமல்

போய்விடுவானோ என்று குழப்பமாகவும் அச்சமாகவும்

இருந்தது.

நாள்கணக்கு தப்பிப்போனதிலிருந்து அவளுடைய அச்சம்

பலமடங்காகிவிட்டது. அநேகமாக அதற்குப் பிந்ததைய

ஒவ்வொரு இரவும் தூக்கமற்றதாகவே அமைந்துபோனது.

பலவிதமான கனவுகள். எல்லாமே மாறிமாறி அவளைக்

கலவரத்துக்கு ஆளாக்கியபடி இருந்தன. வயிற்றுத்தசை

எந்நேரமும் முறுக்கியபடியும் துடித்தபடியும் இருப்பதுபோன்ற

கற்பனை அடிக்கடி எழுந்தது. அக்கற்பனைகளின் முடிவு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வயிற்றிலிருக்கும் கரு

கலைந்து கரைவதிலேயே முடியும். இன்று காலையிலிருந்து

அவள் தெளிவான முடிவிலிருந்தாள். எல்லாவற்றையுமே

இன்னொருத்திக்காக யோசித்து தீர்வுகளை வகைப்படுத்தி

வைத்திருப்பதைப்போல. பணத்துடன் அவன் வந்ததும்

கருச்சிதைவுக்காக மருத்துவரிடம் செல்வது என்பது ஒரு திட்டம்.

வராமல்போகிற நிலையில் இதே ஏரியில் மூழ்கி தற்கொலை

செய்துகொள்வது என்பது இரண்டாவது திட்டம். இரண்டு

திட்டங்களில் ஒன்று நடந்தே ஆகவேண்டும். வாழ்வதையும்

சாவதையும் அவன் வருகையே தீர்மானிக்கவேண்டும்.

தேவகி நின்றிருந்த இடத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது.

பின்னங்கழுத்தில் அரும்பி வேர்வை கோடாக இறங்கி

முதுகிலும் இடுப்பிலும் பரவி ஒருவித எரிச்சலை உருவாக்கியது.

கைப்பையின் நாடாவை விரல்களில் சுற்றியும் விடுவித்தும்

பதற்றத்தை தணித்துக்கொள்ள முயற்சிசெய்த தேவகி சிறிது

தொலைவிலிருந்த மரத்தடிக்குச் சென்றாள். நாலைந்து மணல்

லாரிகள் சத்தமுடன் உறுமிக்கொண்டு சித்தூர்ச்சாலையின்

பக்கம் சென்றன. சாலை ஓரமாக நாயுடன் பிணைக்கப்பட்ட

சங்கிலியை மிகவும் எச்சரிக்கையுடன் பிடித்தபடி வேகவேகமாக

நடந்துகொண்டிருந்தார் ஒரு கிழவர். இரண்டு பெண்கள்

ஆங்கிலத்தில் உரையாடியபடி ஓட்டம் பழகினர். ஏரியைச்

சுற்றிக்கொண்டு சென்ற ஏராளமான வாகனங்கள்.

எத்திசையிலும் செல்வத்தின் முகம் காணப்படவில்லை.

படபடப்போடும் கவலையோடும் முகம் திருப்பியவளின்

பார்வை கரைச்சரிவில் ஒருகணம் நிலைத்தது. நீண்ட

தலைமுடியுடன் முகம்மட்டும் வெளியே தெரியும்படி ஒரு

பெண்ணின் உடல் ஒதுங்கியிருந்தது.

ஐயோ என்று அலறுவதற்காக வாயைத் திறந்தவள்

அச்சத்தில் பேச்செழும்பாதவளாக அவசரமாக நாலுபுறமும்

பார்த்தபிறகு கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டு

மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டாள். வாந்தியெடுக்க

வேண்டும்போல புரட்டிக்கொண்டு வந்தது. அந்த

முகத்தைக்கண்ட அதிர்ச்சியில் உறைந்து தடுமாறிப்போன

கண்களை அத்திசையிலிருந்து அவளால் அகற்றமுடியவில்லை.

கண்ணுக்குப் புலப்படும் காட்சி உண்மையா பொய்யா என்று

முடிவுக்கு வர இயலாததாக இருந்தது. தொண்டை வறண்டது.

உடனடியாக செல்வத்தைப் பார்க்கவேண்டும்போல

தோன்றியது. சாலையின் பக்கம் மாறிமாறித் தொடர்ந்து

பார்த்தாள். அவளுடைய இதயம் அளவுமீறிப் படபடத்தது.

உலர்ந்த நாக்கையும் உதடுகளையும் எச்சிலால் ஈரப்படுத்திக்

கொண்டாள். முந்தானையை இழுத்து விரலால் சுற்றினாள்.

தற்செயலாக இன்னொரு கை வயிறுவரை நீண்டு நின்றது.

சரிவில் ஒதுங்கியிருந்த அந்த முகத்தின்மீது மறுபடியும்

பார்வையைப் பதித்தாள் தேவகி. சிவந்த முகத்தில்

நொடிக்கொரு முறை நீரலை படர்ந்து தாழ்ந்தது. தூய்மையாகக்

கழுவப்பட்ட வெள்ளைப் பாத்திரத்தைப்போல

மின்னிக்கொண்டிருந்தது அந்த முகம். படர்ந்த நெற்றி. ஏதோ

கனவில் திளைந்து மயங்கிக் கிடப்பதைப்போன்ற கண்கள்.

இமைகளின் கரிய கோட்டைத் தொட்டு புருவம் வரைக்கும்

எகிறியது நீரலை. கூர்மையான மூக்கு. சதைப்பற்று மிகுந்த

கன்னங்கள். செதுக்கியதைப் போன்ற உதடுகள். இளமையின்

முறுக்கேறி திரண்டு இறங்கிய தோள்கள்.

அந்த இடத்திலிருந்து உடனடியாக நகர்ந்துவிட நினைத்தாள்

தேவகி. சந்தடி பெருகியதும் உருவாகக்கூடிய சர்ச்சைகளில்

அகப்படாமல் தப்பித்துவிடவேண்டும் என்று தோன்றியது.

சந்திப்பு இடமாக அந்தப் புள்ளியைக் குறித்திருந்ததால்

அங்கிருந்து சட்டென நகர்ந்துவிடவும் இயலவில்லை.

சங்கடத்தோடு ஒவ்வொரு கணமும் செல்வத்தின் வருகையை

எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏரியிலிருந்து விலகி நீளும் அக்கிளைப்பாதையில்

குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடமாட்டம் தொடங்காததால்

யாருடைய பார்வையும் ஒதுங்கியிருந்த உடல்மீது படவில்லை

போலும் என்று சொல்லிக்கொண்டாள். திடீரென அந்த

உடலுக்குரியவள்மீது அவள் மனத்தில் கனிவு பிறந்தது. அந்த

முகத்தைப் பார்த்தபடி நிற்பதுகூட ஒருவகையில் ஆறுதலாக

இருந்தது. யாரோ ஒருவருடைய துணையோடு நின்றிருப்பதைப்

போல.

அவள் தன் தற்கொலையைப்பற்றி யோசித்தாள். அன்று

மாலை அவள் மரணம் நிச்சயம் என்று தோன்றியது. நீரில்

மிதக்கும் உடல் அதற்கொரு சாட்சியே என்கிற எண்ணம்

உருவானது. செல்வத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கை

சட்டென மண்ணோடு மண்ணாகப் போனது. தையல்

கம்பெனியில்கூட வேலை செய்யும் தோழி ஒருத்தியின்

திருமணத்துக்காக சென்னப்பட்டணா சென்றிருந்தபோது

இருள்கவிந்த தென்னந்தோப்பில் நிகழ்ந்த உறவுக்காட்சி மன

ஆழத்திலிருந்து மேலே மிதந்துவந்தது. பழகியதைப்போல

அவனை அவளுடைய உடல் ஏற்றுக்கொண்டதையும்

பனிக்கட்டியைப்போல உடைந்து ஒரே கணத்தில் அவள்

உடல்முழுதும் படர்ந்து ஊறிய இன்பத்தையும் நினைத்துக்

கொண்டாள். விலக்கவிலக்க அந்தக் கனவுகள் அவளைநோக்கி

தொடர்ந்து மிதந்துவந்தன.

கிளைப்பாதையின் மறுவிளிம்பிலிருந்து ஆறேழு பேர்கள்

வருவது தெரிந்தது. ஆரவாரமாக பேசிக்கொண்டே வந்தவர்கள்

சரியாக அந்த இடத்தில் நின்றார்கள். ஒருவனுடைய கைவிரல்

அந்தப் பெண்ணின் பக்கம் நீண்டு சுட்டிக்காட்டியது.

ஆவேசத்தில் அந்தச் சரிவில் வேகமாக இறங்கி அவளை

இழுத்து மேலே கொண்டுவந்துவிடுவான் என்றே தோன்றியது.

மற்ற கூட்டாளிகள்தான் அவனைத் தடுத்து நிறுத்தி

அமைதியூட்டினார்கள்.

‘‘எந்த ஊரு பொண்ணோ, இங்க வந்து பொணமா

மெதக்கறா. இதப்பாத்தன் அதப்பாத்தன்னு எங்கயும் போயி

டமாரம் அடிக்காத, தெரியுதா? போலீஸ் கோர்ட்டுன்னு

இழுத்தா வீண்வம்பு.’’

‘‘குத்து வௌக்காட்டம் இருக்கறா. நாமளும் அக்கா

தங்கச்சிகூட பொறந்தவங்கதான.’’

‘‘நகைங்களுக்காக அடிச்சி தூக்கிப் போட்டுட்டானுங்களோ

என்னமோ தெரியலியே.’’

‘‘லவ் கேஸாகூட இருக்கலாம்.’’

‘‘இந்தக் காலத்தில யார நம்பமுடியுது? கட்டிக்கறேன்னு

எவனாவுது சத்தியம் பண்ணதும் செய்யக்கூடாதத

செஞ்சிருக்கும்ங்க. வயித்துல புள்ள தங்கனதும் பார்ட்டி

எஸ்கேப் ஆயிருப்பான்போல. ஏரிலதான் இதுக்கு முடிவுன்னு

ஆயிடுச்சி.’’

‘‘சாவறதுல காட்டற தைரியத்த வாழறதுல காட்டக்கூடாதா?’’

‘‘இவ எதுக்கு சாவப்ணும்? கூடப் படுத்தானே, அவன

தைரியமாக போட்டுத்தள்ளியிருக்மீணும்.’’

அந்த உடலை இடதுகைவிரலால் சுட்டிக்காட்டியபடி

ஒருவன் வேகமாகப் பேசினான். மற்ற ஆள்களை இன்னொரு

மரத்தோரமாக அழைத்துச் சென்றான். ஆவேசமாகத்

தொடங்கிய அவன் குரல் மெள்ளமெள்ள கசப்புணர்வையும்

ஆற்றாமையையும் வெளிப்படுத்தி ஓய்ந்தது. பைக்குள் கைவிட்டு

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். அவனிடமிருந்த

பாக்கெட்டிலிருந்து இன்னொரு சிகரெட்டை உரிமையோடு

எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான் மற்றொருவன்.

எல்லாருடைய பார்வையும் அலைதழுவும் அந்த உடலிலேயே

படிந்திருந்தது.

சில நிமிடங்களில் அந்தக் கிளைப்பாதையில் மேலும் சிலர்

சேர்ந்துவிட்டனர். பீதியோடும் ஆர்வத்தோடும். கரையின்

சரிவுவரை நெருங்கி அந்த உடலைப் பார்த்தார்கள். துடுக்கான

ஒரு இளைஞன் மரத்திலிருந்து கிளையொன்றை

ஒடித்துக்கொண்டுபோய் அக்கிளையால் அவள் உடலை மேலும்

கரையைநோக்கி இழுத்துவிட முயன்றான். புரட்டப்படுவதில்

அந்த உடல் படும் இம்சையை சகித்துக்கொள்ள இயலாதவர்கள்

கடுமையான குரலில் அந்த இளைஞனை மேலே வருமாறு

சத்தமெழுப்பினார்கள். ஒவ்வொருவர் மனமும் உடனடியாக

அந்த வயதில் தனக்குத் தெரிந்த பெண்களின் முகங்களை

பொருத்திப் பார்த்தது. இறந்து கிடப்பவள் தனக்குத்

தெரிந்தவளல்ல என்பது உறுதியானதும் ஆரம்பப் பதற்றம் விலக

சகஜமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். ஏரியிலிருந்து

சற்றே தள்ளியிருந்த குடிசைப்பகுதிகளிலிருந்து பெருங்கூட்ட

மொன்று வேகவேகமாக ஓடிவந்தது. கும்பலைப் பார்த்த வாகன

ஓட்டிகள் ஒருகணம் தம் வாகனங்களை கரையோரமாக நிறுத்தி

ஜன்னல் வழியாக அந்த முகத்தைப் பார்த்தபிறகே நகர்ந்தார்கள்.

‘‘சினிமா நடிகையாட்டமா எவ்ளோ அழகா இருக்கா.

கண்ணுவப் ஒத்திக்கலாம் போல. பாவி முண்டைக்கு இப்படி

உழுந்து சாவ எப்படித்தான் மனசு வந்திச்சோ.’’

‘‘இந்த அழகுக்கு ஒலகத்துல ஒரோருத்தன் கோயிலே கட்டத்

தயாரா இருக்கான். ரசனையே இல்லாத எந்த முண்டத்துகிட்ட

படுத்து சீரழிஞ்சாளோ, இன்னிக்கு இப்பிடி மெதக்கறா?’’

‘‘ஒருவகையில போயி சேர்ந்தது ரொம்ப நல்லதுன்னே

நெனைக்மீணும். உசுரோட இருந்து ஒவ்வொன்னும் நாக்குல

நரம்பில்லாம பேசறதயெல்லாம் காதுகுடுத்து கேட்டுகேட்டு

உள்ளுக்குள்ளயே குமுறுறதவிட ஒரேவடியா ஆவிய விட்டது

பெரிய விடுதலைன்னே சொல்வப்ணும்.’’

‘‘ஒரு சாவுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஒழுக்கம்

கெட்டுத்தான் செத்தான்னு நாமளா ஏன் தப்பா எடுக்மீணும்?

யாரோ எதுக்கோ கோவிச்சிகிட்டதுக்காககூட தாங்கமுடியாம

மனசு ஒடைஞ்சி தற்கொலை பண்ணியிருக்கலாமில்லயா?’’

‘‘கோபமா? இந்த மொகத்த இன்னொரு தரம் பாத்துட்டு

சொல்லுய்யா? பூமாரி இருக்கற இந்த முகத்தப்பாத்தா, எந்தக்

கோபமும் வந்த தெசை தெரியாம போயிடுமே. இவ்ளோ

அழகயும் அம்சத்தையும் குடுத்த ஆண்டவன் இதுக்கு ஆயுச

குடுக்கலையே.’’

‘‘அதான்யா விதி. விதிய மீறி எதயும் செய்யமுடியாது

தெரிஞ்சிக்கோ.’’

நம்பமுடியாத அளவுக்கு அச்சூழல் மாறிக்கொண்டிருந்தது.

காதில் வந்து விழும் உரையாடல்களின் வருத்தத்தையும்

கசப்பையும் கண்ணீரையும் அவளால் தாங்கவேமுடியவில்லை.

எல்லாமே ஏதோ ஒருவகையில் தன்னைநோக்கிச்

சொல்லப்பட்டவையாகவே உணர்ந்து உள்ளூர நொறுங்கினாள்.

அக்கணத்தில் செல்வம் அருகில் இருக்கவேண்டும் என்று

பெரிதும் ஆசைப்பட்டாள். ஒவ்வொருநொடி தாமதமும்

அவன்மீதான எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஒரே

சமயத்தில் அதிகரித்தன. நேரம் ஏழேகாலைத் தொட்டு

நகர்ந்தது. கவனம் முழுக்க கரையோரம் நிகழும்

உரையாடல்களை உள்வாங்கியபடி இருந்தாலும் அவள் பார்வை

செல்வம் வந்து இறங்கக்கூடிய வாகன நிறுத்தத்தின்

திசையின்பக்கம் பதிந்திருந்தது.

சுற்றிநின்ற கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சின்

தீவிரம் கூடிக்கொண்டே போனது. மாதந்தோறும் இப்படி ஒரு

உடல் ஒதுங்கிவிடுகிறது என்றும் அப்படிப்பட்ட நேரங்களில்

காவலர்கள் அக்கம்பக்கம் வசிக்கிற அப்பாவிகளை இழுத்துச்

சென்று மிரட்டி கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லி

அங்கலாய்த்துக்கொண்டார்கள்.

‘‘ரொம்ப சின்ன வயசாதான் தெரியுது. பதினேழு

பதினெட்டுக்குள்ளதான் இருக்கும். இதுந் தலையெழுத்து

இதுக்குள்ள இப்படி முடிஞ்சிபோச்சே.’’

கலங்கியிருந்த ஒருவர் தொண்டையிலிருந்து வார்த்தைகள்

கவலைதோய பரிதாபமுடன் வெளிப்பட்டன. அந்த மரணத்தை

தன் சொந்த இழப்பாக எடுத்துக்கொண்ட தவிப்பையும்

சோகத்தையும் ஒவ்வொரு சொல்லிலும் அவர்

வெளிப்படுத்தினார். சுற்றி நிற்பவர்களின் முகங்களையெல்லாம்

மாறிமாறி சங்கடத்தோடு பார்த்துவிட்டு குரல் கமறச்

சொன்னார்.

‘‘இந்தப் பூமில சுதந்திரமா வாழறதுக்குக்கூட நம்ம நாட்டுப்

பொம்பளைங்களுக்கு குடுத்து வய்க்கல பாருங்க.’’

கூட்டம் மேலும்மேலும் பெருகியபடி இருந்தது.

கிளைப்பாதைகள் வழியாக மட்டுமின்றி நேர்ப்பாதைகள்

வழியாகவும் ஏரியைநோக்கி ஒவ்வொருவரும்

வந்துகொண்டிருந்தனர். ஒதுங்கி அலைகளில் அசையும்

உடலைப் பார்த்தவர்கள் நெடுநேரம் நிற்கத் தயங்கி

வெளியேறினார்கள். காலை நடைக்காகவும் பால்

பக்கெட்டுக்காகவும் வந்து சேர்ந்தவர்கள் தம் அடுத்த

வேலைக்கான நேரம் தாமதமாவதை நினைத்து மனமில்லாத

மனத்தோடு கரைந்துபோனார்கள். சில சிறுவர்கள் அருகிலிருந்த

மரங்களில் ஏறி வசதியான கிளைகளில் உட்கார்ந்து உற்சாகமாக

வேடிக்கை பார்த்தார்கள். ஒருபக்கம் கும்பல் கரையக்கரைய

மற்ற பக்கங்களிலிருந்து கும்பல் கும்பலாக ஆள்கள் வந்தபடி

இருந்தார்கள். திடீரென எதிர்பாராத வகையில் செல்வம் வந்து

அக்கூட்டத்தோடு கலந்திருக்கக்கூடுமோ என்கிற எண்ணத்தில்

எல்லா இடங்களிம் பார்வையைப் படரவிட்டாள் தேவகி.

‘‘எங்கயோ பார்த்த பொண்ணுஸீரித்தான் இருக்குது

தெரிஞ்சிக்கோ. இதுங்கூட கருப்பா ஒரு பையன் சுத்துவான்.

சாயங்காலமா இந்த பக்கமா செவுத்த கலர்ல

ஸ்ப்லென்டர்லதான் ரெண்டுபேரும் வந்து எறங்குவாங்க. நல்லா

அரிசியும் கடுகும் கலந்தமாரி இருக்கும். இப்படிகூட ஜோடி

சேக்கறானே கடவுள்னு நொந்துக்குவேன். இதோ இந்த

மரத்துக்கு பின்னாலதான் மணிக்கணக்கா உக்காந்து

பேசுவாங்க. என்ன பேச்சு, என்ன சிரிப்புங்கற? போறவங்க

வர்றவங்க ஒருநிமிடம் வெக்கத்தவிட்டு நின்னு கேட்டுட்டுத்தான்

போவப்ணும். அவ குரலுக்கு அப்படி ஒரு வசிய சக்தி உண்டு

பாத்துக்கோ. அஞ்சுமணிக்கு லைப்ரரில பேப்பர் பாக்கறதுக்காக

இந்த வழியாத்தான் நான் போவேன். அப்ப இதுங்க ரெண்டும்

ஒக்காந்திருக்கறத பலமொற பாத்திருக்கேன். ஏதோ பொதையல

எடுக்கறமாரி இதுங் கைய புடிச்சிபுடிச்சி அவன்

உள்ளங்கைக்குள்ள வச்சிக்குவான். பேசுவாங்க, பேசுவாங்க,

பேசிகிட்டே இருப்பாங்க. ராத்திரி ஏழரமணிக்கு லைப்ரரி

சாத்தனப்புறம் திரும்பும்போதும் உக்காந்திருப்பாங்க. யாரு

பெத்த புள்ளைங்களோ, நல்லா இருந்தா சரின்னு நெனச்சிகிட்டு

போயிடுவேன். பாவிப்பொண்ணு, அப்படி பேசனதெல்லாம்

இப்படி தண்ணில கெடந்து மெதக்கறதுக்குன்னு ஆயிடுச்சே?’’

‘‘நல்லா மொகத்த பாத்துச் சரியா சொல்லுங்க ஐயா. நீங்க

வழக்கமா பாக்கற பொண்ணுவீனா இது?’’

‘‘இந்த அறுபது வயசுல என் கண்ணுங்மீ என்ன ஒருதரம்

கூட ஏமாத்தனதில்ல. ஒருதரம் பாத்தா அப்படியே போட்டா

புடிச்சாப்பல மனசுல பதிஞ்சிபோயிடும். எக்ஸ்ரே கண்ணன்னு

தான் என்ன கூப்புடுவாங்க தெரியுமா?’’

‘‘சரிசரி, இங்க சொன்னத வேற எங்கயும் சொல்லி

வைக்காதிங்க. ஊரு ஒலகம் ரொம்ப கெட்டுக் கெடக்குது.

அப்புறம் எல்லா பாவமும் நம்மமேல திரும்பிடும்.’’

அதே நேரத்தில் நடமாடும் காவலர் வாகனம் அருகில்

நெருங்கிவரும் ஓசையைக்கேட்டு எல்லாரும் ஒதுங்கி

வழிவிட்டனர். பிளந்த மக்கள் கூட்டத்துக்கு நடுவே வேகமாக

வந்த வாகனம் நின்றது. அவசரமாக இறங்கிய காவலர்கள்

‘‘என்னய்யா இங்க கூட்டம்?’’ என்றபடி எல்லாரையும் ஏறிட்டுப்

பார்த்தார். அவர்கள் பார்வை பதிந்திருந்த திசையிலேயே

தற்செயலாக திரும்பி காவலர்களின் கண்கள் கரைச்சரிவில்

ஒதுங்கியிருந்த உடலில் படிந்து மீண்டன. மறுகணமே அவர்கள்

பார்வையிலும் உடலசைவிலும் மிடுக்கு குடிபுகுந்தது.

‘‘யாருய்யா அது?’’

‘‘தெரியலிங்க.’’

‘‘சொந்தக்காரங்க யாராவது இங்கே இருக்காங்களா?’’

‘‘தெரியலிங்க.’’

‘‘யாருய்யா மொதல்ல பார்த்தது?’’

ஒரு காவலர் கும்பலைப் பார்த்து அதட்டிக்கொண்டிருந்த

போதே இன்னொருவர் ஒயர்லெஸில் யாரையோ அழைத்து

தகவலைச் சொன்னார். கேட்கப்பட்ட கேள்வி தன்னைநோக்கி

அல்ல என்பதைப்போல கும்பல் வேறு எங்கேயோ

பார்வையைப் பதித்திருந்தார்கள்.

‘‘ஒழுங்கு மரியாதையா சொல்லிடுங்க. இல்லன்னா

எல்லாரயும் உள்ளதள்ளி முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்க

வேண்டிதாயிடும். புரிஞ்சிதா?’’

அப்போதும் ஒரு பதிலும் எழவில்லை. உடனே அருகில்

நின்றிருந்த ஒரு கிழவரிடம் ‘‘என்ன தாத்தா, நீதான் மொதல்ல

பாத்தியா?’’ என்று தேட்டினார் காவலர்.

‘‘ஐயோ நான் இல்ல சாமி. எனக்கு எதுவும் தெரியாது,

சும்மா பீடி கட்டு வாங்கலாம்ன்னுதான் நான் வந்தன்’’ தாத்தா

பதற்றத்துடன் ஒதுங்கினார்.

‘‘அப்ப நீதான் பாத்தியா சொல்லு’’

தோராயமாக லத்தித்தடியால் ஒருவனைச்

சுட்டிக்காட்டியபடி கேட்டார் காவலர். அவனும் அவசரமாக

தலையை அசைத்து மறுத்துச் சொன்னான். எதிர்பாராதவிதமாக

தொலைவில் ஒதுங்கி நின்றிருந்த தேவகியின்பக்கம் கைநீட்டிய

காவலர் ‘‘என்னம்மா, நீதான் பாத்தியா?’’ என்று கேட்டார்.

அக்கணமே அவள் உடல் வியர்க்கத் தொடங்கியது. அச்சத்தில்

ஆமாம் என்று முதலில் தலையசைத்தாள். பிறகு உடனே

இல்லையென்று வார்த்தையை விழுங்கினாள்.

‘‘என்னம்மா மென்னு முழுங்கற? ஒன்னு ஆமாம்னு சொல்லு.

இல்லன்னா இல்லன்னு சொல்லு. ரெண்டுங்கெட்டானா

எதுக்கு தடுமாறற? என்ன கேட்டன்னு ஒன் உடம்பு இப்படி

நடுங்குது? நீயே அடிச்சிபோட்டுட்டு நிக்கறமாரி நடுங்கற?’’

காவலர் கேட்டுக்கொண்டே போனார்.

‘‘இல்லங்க.’’

‘‘என்ன இல்ல?’’

‘‘நான் பாக்கலைங்க.’’

‘‘இங்க எதுக்கு நிக்கற?’’

‘‘ஒருத்தர் வப்வப்ணும். வேலைக்கு வந்து கூட்டிட்டு போவாங்க.

அதுக்காக எதிர்பார்த்து நிக்கறேன்.’’

இந்தத் தற்கொலையெல்லாம் பெரிய விஷயமேயில்லை

என்பதைப்போல எல்லாரையும் துச்சமாக ஏறிட்டுப் பார்த்தார்

இரண்டாவது காவலர். எந்த ரகசியமாக இருந்தாலும் நெஞ்சின்

ஆழத்துக்குள் கைவிட்டுத் துழாவி எடுக்கும் திறமை தனக்குண்டு

என்று பறைசாற்றியபடி நின்றார். அதற்குள் அடுத்த காவலர்

‘‘சரி வா தொர, போவலாம். நூறடி ரோடுகிட்ட ஐயா

காத்திட்டிருப்பாரு. பாத்துட்டு வந்து கச்சேரிய வச்சிக்கலாம்.

அதுக்குள்ள நியூஸ் கெடைச்சி உடையவங்களே வந்தாலும்

வந்துடுவாங்க. வந்து விசாரிச்சிக்கலாம் வா’’ என்று தோளைத்

தொட்டு அழைத்தார்.

சில நொடிகளில் வாகனம் எல்லாரையும் கடந்துபோனது.

கூட்டத்தின் பேச்சு மீண்டும் ஒதுங்கியிருந்த பெண்ணைப்

பற்றியதாக மாறியது. தொடர்ச்சியாக அந்தப் பெண்ணையே

பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பாரா விதமாக

அவள்மீது இரக்கம் பொங்கி வழியத்தொடங்கியது. கருணையில்

நனைந்த வார்த்தைகள் ஒவ்வொருவரிடமிருந்தும்

வெளிப்பட்டன. ஆதரிக்கவேண்டிய ஓர் உயிரை

அனாதையாக்கி மரணத்தை நோக்கித் தள்ளியவனுக்கு

மன்னிப்பே கிடையாது என்று திட்டித் தீர்த்தார்கள்.

அப்படிப்பட்ட கொடுமைக்காரனை ஒரு தாய் எப்படித்தான்

பெற்றாளோ என்று உள்ளூர நொந்துகொண்டார்கள்.

நேரம் எட்டுமணியை நெருங்கிக்கொண்டிருந்தது.

செல்வத்தின்மீதான நம்பிக்கை சிறுகச்சிறுக குறைவதைப் போல

இருந்தது. நெஞ்சிலும் வயிற்றிலும் சுமக்கமுடியாத பாரமொன்று

ஏற்றப்பட்டதைப்போல உணர்ந்தாள். பெருமூச்சுடன்

அவ்விடத்தைவிட்டு நகரத் தொடங்கினாள். தற்செயலாக அவள்

பார்வை தண்ணீர்ப்பரப்புக்கு மேலே தெரிந்த அந்த முகத்தில்

படிந்தது. தன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தங்கை, தம்பி,

தோழி, ஸ்கூல் டீச்சர், சூப்பர்வைசர் மேடம் ஆகியோர்

அனைவருடைய முகங்களும் ஒரேகணத்தில் ஞாபகத்துக்கு

வந்தன. எல்லா முகங்களும் இவளையே உற்றுக்

கவனிப்பதைப்போலத் தோன்றியது. ஒரு சிற்பத்தைப்போல

உறைந்து மிதக்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் சொல்ல

நினைத்தும் சொல்ல முடியாமல் போன ஒரு வேதனையின்

கோடு அழுத்தமாகப் பதிந்திருப்பதைக் கண்டாள். கிட்டத்தட்ட

அதற்கு இணையான ஒரு வேதனையே தன் நெஞ்சிலும்

நிறைந்திருப்பதை துக்கத்துடன் ஒப்பிட்டுக் கொண்டாள்.

சாயங்காலம் மறுபடியும் இதேபோல வந்து

காத்திருக்கவேண்டுமே என்கிற எண்ணம் சோர்வையும்

பீதியையும் அளித்தது. செல்வம் தன் வார்த்தையைக்

காப்பாற்றாத ஒரு நிலை நேரும் சூழலில் அன்றிரவு தன் உடலும்

இதேபோல மிதப்பது நிச்சயம் என்றெழுந்த எண்ணம்

அவளைப் பெரிதும் தடுமாற்றத்துக்கு ஆளாக்கியது.

சொல்லவியலாத சங்கடத்துடனும் தவிப்புடனும் கைப்பையை

இறுகப் பற்றியபடி நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.

(புதியபார்வை, நவம்பர் 2004)