நிறுத்தத்தில் இறங்கியதுமே கைக்கடிகாரத்தில் மணி
பார்த்தாள் தேவகி. ஆறே முக்கால். அச்சத்தாலும்
கவலையாலும் அந்தக் காலை நேரத்திலும் அவளுக்கு
வியர்த்துக்கொட்டியது. அடிவயிற்றில் மின்னலைப்போல
ஒருநொடி வலி எழுந்து மறைந்தது. காற்றில் ஒதுங்கியிருந்த
தலைமுடி கலைந்தது. நாலாக மடித்து உள்ளங்கைக்குள்
வைத்திருந்த கைக்குட்டையால் கழுத்தில் படிந்திருந்த
வேர்வையைத் துடைத்தபடி ஏரிக்கரையைநோக்கி நடந்தாள்.