Home

Thursday 25 April 2019

மூன்று கவிதைகள்:




1.பிறந்த ஊர் நினைவு



நரம்புச் சுள்ளிகளில் பொறி விழுந்து
பற்றி எரிகிறது ஞாபகம்
ஆயிரம் முகம் கலங்க
அலையும் நெருப்பினிடையே
அசைகிறது அந்தச் சித்திரம்

ஒளிப்பிழம்பின் சரிவுகளில்
புகை வெளியில்
உள்ளொடுங்கி நீள்கிறது என் தெரு
கிளறிக் கிளறி மீளும் நெஞ்சு
கரிந்த சாம்பலில்
எதையோ தேடித் தவிக்கிறது
தாய் முதுகில்
ஆனை ஏறி ஆடிய தாழ்வாரம்
தட்டுப்படாமல் மறைந்துவிட
பறிகொடுத்த சோர்வோடு
பித்தாகித் திரிகின்றேன்
அந்நிய நகரில் படுத்துறங்கி
அலையும் வாழ்க்கை நகர்கிறது .

(கணையாழி, ஜூலை 1993)


2.வீடு

நண்பரின் வீட்டு வாசலில்
ஒரு தாய்போல நிற்கிறது தென்னை மரம்
கீற்றுகளின் அசைவில் உருவாகும் இசையில்
தன் ஆசியை வழங்குகிறது அது
அது செலுத்தும் காற்று
அது வழங்கும் குளுமை
அது சேமித்துத் தரும் நிழல்
தன் வாழ்வையே கொடுக்கிறது அதன் தாய்மை
வேரடியில் வீட்டுச் சிறுமிகள்
துள்ளி விளையாடி மகிழ்கிறார்கள்
மரத்தை அணைக்க முடியாமல் தவிக்கின்றன
குழந்தைகளின் பிஞ்சு விரல்கள்
தொட்டுவிட்டு ஓடும் ஒன்று
உடனே இன்னொன்றும் ஓடும்
மீண்டும் திரும்பிவந்து கூடுகிறார்கள்
உடனே சிரிப்பு கலகலக்கிறது
மரத்தோடு அவர்கள் பேசுகிறார்கள்
மரமும் பதில் சொல்லி ஊக்கமூட்டுகிறது
தடையற்ற ஆட்டம்
அளவற்ற மகிழ்ச்சி
உலகையே மறக்கிறார்கள் குழந்தைகள்
காலடியில் இன்னொரு குழந்தையைப் போல்
மரத்தடியில் தவழ்கிறது நண்பர் வீடு

(திணை , ஏப்ரல் - ஜூன் 1994)



3.கயிற்றில் நடக்கும் சிறுமி


அந்தரத்துக் கயிற்றில் நடக்கும் சிறுமியை
அண்ணாந்து பார்க்கிறாள் அந்தச் சிறுமி
அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது
அடிஅடியாய் நகரும் சிறு பாதங்களில்
பதிந்திருக்கிறது அவள் பார்வை
கையைப்பற்றி இறக்கிவிட வேண்டுமென்று
பரபரக்கின்றன அவள் கைகள்
இவ்வளவு பெருங்கூட்டம் நின்று பார்க்க
தனியே ஏன் அல்லாடுகிறாள் என்று
அந்தச் சிறுமிக்குப் புரியவில்லை
தொடர்ந்து அதிரும் மேளத்தையும்
கூடி நிற்பவர்களின் உற்சாகக் குரல்களையும்
எதுவும் புரியாமல்
மாறிமாறிப் பார்க்கிறாள் அந்தச் சிறுமி
இறங்கிவந்து கும்பிட்டவளின் சிரிப்புக்கு
என்ன பொருள் என்றும் விளங்கவில்லை
கைதட்டும் மக்களின் முன்
தட்டேந்தி நடப்பவளின்
பாதங்களில் மீண்டும் பதிகிறது அவள் பார்வை
அப்போதும் அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது

(கணையாழி, ஜூலை 1994)