Home

Sunday 17 March 2024

நான்கு கணங்கள்

  

அதீதம் என்பதற்கான வரையறையை வகுத்துக்கொண்டால் ஸ்ரீராமின் குறுநாவலை வாசிப்பது எளிதாகிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டது என்பது அதீதத்தின் முதல் குணம். அரைக்கணமோ ஒரு கணமோ மட்டும் நீடித்து உச்சத்தைத் தொட்டு மறைந்துபோவது என்பது இரண்டாவது குணம். உண்மையிலேயே அப்படி ஒரு கணம் நிகழ்ந்ததா என எண்ணித் துணுக்குறும் அளவுக்கு கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நிகழ்ந்து முடிந்து இயல்பான நிலைக்குத் திரும்பி நிற்பது என்பது மூன்றாவது குணம். அதீதத்தால் நேர்ந்தது என சுட்டிக்காட்டிச் சொல்லத்தக்க வகையில் ஒரு விளைவை நம் கண் முன்னால் பார்க்கும்போது அதை நம்மால் முற்றிலும் மறுக்கவும் முடியாமல் முற்றிலும் ஏற்கவும் முடியாமல் தடுமாறி நின்றுவிடுகிறோம். அந்த மாயநிலை அதன் நான்காவது குணம். அத்தகு மாயத்தன்மை பொருந்திய ஒரு தருணமே மாயாதீதமான கணம். ஸ்ரீராம் தன் குறுநாவலில் அத்தகு ஒரு மாயாதீதமான கணத்தையும் அதன் தொடர்விளைவுகளையும் நிகழ்த்திக்காட்டுகிறார்.

2004ஆம் ஆண்டில் உருவான ஆழிப்பேரலையின் எழுச்சி நாம் அனைவரும் கண்ட ஒரு மாயாதீதமான கணம்.  அதற்கு முன்பும் நாம் அதைக் கண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைக் கண்டதில்லை. அந்த மாயாதீதம் அப்படியே காலத்தில் உறைந்துவிட்டது.  ஆழிப்பேரலையை இந்த உலகமே பார்த்து உறைந்து நின்ற காரணத்தால் அனைவருமே அப்படி ஒரு மாயாதீதம் நிகழ்வதற்குச் சாத்தியமான ஒன்றுதான் என்று  நம்பத் தொடங்கிவிட்டோம்.  நாம் நம் கண்களால் பார்த்த ஒரே மாயாதீதம் அதுதான். நம்மால் பார்க்கமுடியாத அத்தகு மாயாதீதங்கள் இக்கணத்தில் இந்த மண்ணில் எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்தபடி இருப்பதற்கு சாத்தியமுண்டு.

இயற்கையின் மாயாதீதங்கள் நிகழ்வது தொடர்பாக எளிய மனிதர்கள் கேள்வி கேட்டு காலமெல்லாம் உரையாடியபடியே இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞனின் வழி அதுவல்ல. அத்தகு சாத்தியத்துக்குப் பிறகு என்னென்ன நேரக்கூடும் என்பதை தன் கற்பனையின் துணையோடு அடுத்தடுத்த படிக்கட்டுகளில் இறங்கிச் செல்வதே அவன் வகுத்துக்கொண்ட வழி.

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் எழுதி வெளிவந்திருக்கும் மாயாதீதம் குறுநாவலில் இயற்கையின் மாயாதீதம் நிகழும் ஓர் அற்புதக்கணம் தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அக்கணத்தினால் நிகழும் விளைவுகள் என்னென்ன என்பதை தொகுத்துக்கொண்டே செல்வதுதான் நாவலின் பாதையாக இருக்கிறது.

ஊரையும் உறவுகளையும் உதறிவிட்டு வடக்கே அசாம் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் தன் பத்து வயது மகனோடு தங்கி ஓவியம் தீட்டியபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான் ஒருவன். அந்தச் சிறுவனின் பெயர் வேணு. அவன் கண்களில் விசித்திரமானதொரு பிரச்சினை. ஓயாத வலி அவனை வாட்டி வதைக்கிறது. மருத்துவர்கள் கொடுக்கும் சொட்டு மருந்துகள் பலனளிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கண்பார்வையை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சின்ன மருத்துவர்கள் முதல் பெரிய மருத்துவர்கள் வரை கைவிரித்துவிடுகிறார்கள். மிக விரைவில் தன் மகனின் பார்வை பறிபோய்விடப் போகிறது என்னும் உண்மை அந்த ஓவியரான அப்பாவை வாட்டி வதைக்கிறது.

எந்த மருந்தும் இனி பயனில்லை என்ற நிலைக்கு வந்த சமயத்தில்    அவர் தன் சொந்த ஊரை நினைத்துக்கொள்கிறார். தன் ஊருக்கு அருகிலேயே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலையும் நினைத்துக்கொள்கிறார். அந்த வட்டாரத்தில் பார்வைத்திறனை இழந்த பலருக்கு அந்த அம்மன் பார்வையை மீண்டும் அளித்திருக்கிறாள்.  பார்வைத்திறனை இழந்தவர்கள் பல திசைகளிலிருந்து அந்தக் கோவிலுக்கு வந்து மனமுருக அந்த மாரியம்மனை வேண்டிக்கொள்கிறார்கள்.  பிறகு அந்த வளாகத்திலேயே நாட்கணக்கில் தங்குகிறார்கள். தினமும் அருகிலிருக்கும் குளத்திலேயே குளித்து மூழ்கியெழுந்து, ஊரார் அளிக்கும் உணவை உட்கொண்டு விரதமிருக்கிறார்கள். அம்மனின் அருளால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு பார்வைத்திறன் திரும்பிவிடுகிறது. அந்த மாயாதீதத்தினால் பார்வைத்திறனை திரும்பப் பெற்றவர்கள் மாரியம்மனின் புகழைப் பாடி ஊரெங்கும் பரப்புகிறார்கள்.

ஊரில் அவருடைய தம்பியின் குடும்பத்தை அடைக்கலமாக நினைத்து வருகிறார். தம்பிக்கு மனைவியும் மனவளர்ச்சி குறைந்த ஒரு மகனும் இருக்கிறார்கள். அண்ணன் மகனை தன் மகனாகவே நினைத்து அவனை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார் தம்பி. அம்மனிடம் மனமுருக வேண்டிக்கொள்கிறார்கள். பூசாரி தீபாராதனை காட்டி அவன் கண்களில் தீர்த்தம் தெளிக்கிறார்.  கோவிலைச் சுற்றி பெரிய மண்ணாலான பிராகாரம் இருக்கிறது. ஒரு மூலையில் கோவிலுக்குச் சொந்தமான மடம் இருக்கிறது சித்தப்பாவும் வேணுவும் அங்கேயே தங்கிக்கொள்கின்றனர்.  கண்பார்வை கோளாறு கொண்டவர்கள் பலர் அங்கே தங்கியிருக்கின்றனர். பக்கத்திலேயே நடந்துசெல்லும் தொலைவில் ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் குளித்து மண்கலயமேந்தி ஊருக்குள் சென்று உணவு பெற்று வந்து உண்டுவிட்டு அங்கேயே காத்திருக்கிறார்கள்.

நாட்கள் கழிந்தபோதும் சிறுவனின் கண் பிரச்சினை அப்படியே நீடிக்கிறது. பொறுமை இழந்த அப்பா அறிவியல் வழியில் செல்ல முடிவெடுத்து அவனை கோவை அரவிந்தர் மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் செல்கிறார். ஆனால் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு அவனுக்குப் பார்வை திரும்ப சாத்தியமில்லை என்னும் பதிலையே அவர்கள் சொல்கிறார்கள். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் சிறுவனை கோவில் வளாகத்துக்கே அழைத்துவந்து விட்டுவிட்டுச் செல்கிறார். பல நாட்கள் அந்த வளாகத்திலேயே தங்கி மாரியம்மனை வழிபட்டு வருகின்றான் அச்சிறுவன். அவனோடு தங்கியிருந்த பலர் பார்வை சீரடைந்து ஊருக்குத் திரும்பிச் செல்ல, அவன் மட்டுமே ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறான்.

எதிர்பாராத விதமாக ஒருநாள் கந்தலணிந்த ஒரு நாடோடி அந்தக் கோவிலுக்கு வருகிறார். அவரோடு ஒரு கரிய நாயும் வருகிறது. ஆற்றங்கரையில் சிறுவனைப் பார்த்ததும் அவர் அவனுக்கு ஒரு பயிற்சியை அளிக்கிறார். அவனும் அதை ஆவலோடு செய்கிறான்.

நீண்ட நாட்களாகியும் குணமாகவில்லையே என்னும் ஏக்கத்தில் அவன் தந்தையார் சோதிடர் ஒருவரைச் சென்று சந்திக்கிறார். சிறுவனின் ஜாதகத்தைப் பார்த்த சோதிடர் அவனுக்கு ஆயுள் குறைவு என்று அறிவிக்கிறார். ஏற்கனவே பார்வைப் பிரச்சினையில் சிக்கியிருக்கும் சிறுவனுக்கு ஆயுள்காலமும் ஒரு பிரச்சினையாக அமையும் என அவர் எதிர்பார்க்கவில்லை. உடனே தன் மகனைப் பார்க்கும் ஆவலில் கோவிலுக்கு ஓடி வருகிறார் அவன் அப்பா. அந்த நாடோடி அவருடைய மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவன் ஆயுட் பிரச்சினை தான் கொடுத்திருக்கும் பயிற்சியால் உறுதியாகச் சரியாகிவிடும் என்றும் கண் பிரச்சினைக்கு பக்கத்து ஊரில் வசிக்கும் வைத்தியரிடம் காட்டி மூலிகைச்சாறு வைத்தியம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறார்.

தொடக்கத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பல தயக்கங்களுக்குப் பிறகு அந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வழி செய்கிறார் சிறுவனின் அப்பா. தொடர் பயிற்சிகளும் சிகிச்சைகளும் வியக்கத்தக்க அளவில் அவன் பார்வையில் முன்னேற்றத்தை அளிக்கின்றன. நவீன மருத்துவமும் பல மருத்துவர்களும் இனி பார்வை திரும்ப வழியே இல்லை என்று கைவிட்ட அவனுக்கு வெகுவிரைவிலேயே மூலிகைச்சாறு மருத்துவத்தாலும் அம்மனின் அருளாலும் பார்வை திரும்பிவிடுகிறது. வேணுவின் வாழ்வில் முதன்முதலாக மாயாதீதம் நிகழும் கணம் அது.

பார்வை திரும்பியதும் அவன் பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான். அப்பாவைப்போலவே அவனிடமும் ஓவியத்திறமை நிறைந்துள்ளது. அதை மேலும் வளர்த்துக்கொள்ள கும்பகோணம் ஓவியக்கல்லூரிக்குச் சென்று ஓவியம் படித்துத் தேர்ச்சி அடைகிறான். மூளை வளர்ச்சி இல்லாத சித்தப்பா மகனும் இளைஞனாக வளர்ந்து நிற்கிறான்.

விடுப்புக்காலத்தில் ஊருக்குத் திரும்பி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவனுடைய சித்தி கால்முறிவின் காரணமாக கட்டு கட்டிக்கொண்டு வீட்டிலேயே படுக்கையில் இருக்கிறாள். வீட்டு வேலைக்குத் துணையாக அவளுடைய அண்ணன் மகள் வந்து சேர்கிறாள். அவளுடைய வசீகரமான முகத்தைக் கண்டு அவள் மீது காதல் கொள்கிறான் வேணு. அவன் காதலை அவளும் ஏற்றுக்கொள்கிறாள். உள்ளத்தால் இணைந்த இருவரும் ஒருநாள் வீட்டுக்குள்ளேயே கிடைத்த தனிமைப்பொழுதில் உடலாலும் இணைந்துவிடுகிறார்கள்.

கல்லூரி சார்பாக வைக்கப்பட இருக்கும் கண்காட்சிக்காக ஓவியங்களைத் தீட்ட அவன் கல்லூரிக்குச் செல்கிறான். காதலியின் நினைவு அவனைத் துரத்தியபடியே இருக்கிறது. அவள் உருவத்தையே வெவ்வேறு நிலைகளில் அவன் ஓவியமாக வரைகிறான். அந்த ஓவியங்களையே அவன் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறான். அவன் தீட்டிய ஓவியத்துக்கு விருது கிடைக்கிறது. 

ஒரு கலை இயக்குநர் அவனுக்கு திரைப்பட வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து தன்னோடு கர்நாடகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். ஊருக்குச் சென்று காதலியைச் சந்தித்துவிட்டுத் திரும்புவதற்குக் கூட அவனுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. நிலைமையை விவரித்து அவளுக்கு தினந்தோறும் கடிதங்களை எழுதுகிறான்.

அவன் பணியாற்றிய திரைப்பட வேலைகள் முடிந்த கையோடு சில மாதங்களுக்குப் பிறகு அவன் கும்பகோணத்துக்குத் திரும்பி வருகிறான். அவள் எழுதிய கடிதங்கள் எல்லாம் அங்கே வந்திருக்கின்றன. அவற்றைப் படித்த பிறகு அவளைச் சந்திக்கும் ஆவலில் ஊருக்குத் திரும்பிச் செல்கிறான்.

இடைப்பட்ட காலத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அவள் கருவுற்றிருப்பதை அவளுடைய குடும்பம் அறிந்துகொண்டுவிடுகிறது. கருவுற காரணமானவனை அவள் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை. அவள் குடும்பத்துக்கு உதவுவதுபோல மனவளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு மணம் செய்துவைக்க சித்தியே முன்னின்று ஏற்பாடு செய்கிறாள். அவனுடைய எதிர்காலம் வளமாக அமைய அதுவே சிறந்த வழி என்பது அவள் திட்டம்.

காதலியைப் பார்க்கும் ஆவலோடு திரும்பி வந்தவனை எதார்த்தக் காட்சிகள் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எதிர்பாராத அவன் வருகையால் அவன் சித்தியும் தடுமாறி நிற்கிறாள். சூழலை தனக்குச் சாதமாக மாற்றிக்கொள்ள அவள் வகுத்த திட்டங்கள் கைகூடி வரும் கணத்தில் அவனுடைய வருகை அவளை நிலைகுலைய வைக்கிறது. பிள்ளைப்பாசம் அவள் கண்ணை மறைக்கிறது. தன்னை மீறி, தன் நிலை மறந்து, அவன் காலில் விழுந்து தன் மகனுக்காக மடிப்பிச்சை ஏந்துகிறாள் சித்தி. அதுவும் ஒருவகையில் மாயாதீதமான கணம். மனிதமனம் உருவாக்கிய மாயாதீதம்.

அந்த வீடுதான் அவனுக்கு புகலிடமாக இருந்தது. அந்த வீட்டில் அவர்களுடைய ஆதரவில் இருக்கும்போதுதான் அவனுக்கு பார்வை திரும்பக் கிடைத்தது. அவர்களுடைய உதவியால்தான் அவன் கல்வியும் கலைத்திறமையும் உள்ளவனாக மாறினான். அவர்களுக்கு அவன் ஒருவகையில் செஞ்சொற்றுக்கடன் பட்டவன். அவள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறான் அவன். ஒருபக்கம் காதலி. சொந்த வாழ்க்கை. குழந்தை. இனிய இல்லறக்கனவுகள். இன்னொரு பக்கம் செஞ்சொற்றுக்கடன். அவன் மனம் செஞ்சோற்றுக்கடனுக்காக காதலை உதறிவிட முடிவெடுத்து அக்கணமே ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறான்.

அவனுடைய கலை இயக்குநர் அவனுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார். இந்தியாவில் பல பெரிய நகரங்களுக்கு அவன் பறந்து பறந்து வேலை செய்கிறான். பத்தாண்டுகளில் கலைத்துறையில் மிகப்பெரிய இடத்தை அடைகிறான். ஆனால் அவன் உள்ளூர சுமந்துகொண்டிருக்கும் காதல் தோல்வியின் பாரம் அவனை அழுத்திக்கொண்டே இருக்கிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு வேகத்தில் சொந்த ஊருக்குச் செல்கிறான். அவன் மீது கொண்ட கோபம் அடங்காதவராகவே இருக்கிறார் அவனுடைய சித்தப்பா. அவனைக் கண்டதும் அவனை அடிப்பதற்கு ஓடி வருகிறார். தன் மருமகளின் கருவுக்கு அவனே காரணம் என்பதும்   அவளை ஏமாற்றிவிட்டு அவன் ஊரைவிட்டுச்  சென்றுவிட்டான் என்பதும் அவர் ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட நினைவுகளாக உள்ளன. தன் மனைவியின் தந்திரத்தை அவர் அறியவில்லை.

அவனை ஆவேசத்துடன் அம்மன் கோவில் சன்னதி முன்னால் இழுத்துச் சென்று நிற்கவைத்து “பார்கவியை நீ ஏமாற்றினாயா, இல்லையா?” என்று கேட்கிறார். கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யச் சொல்கிறார். “உனக்கு கண்ணு குடுத்த சாமி இது. பொய்ச் சத்தியம் செஞ்சா நீ விளங்காம போயிடுவ” என்று பொங்குகிறார். தன் நெஞ்சறிந்த உண்மையைச் சொல்லி சத்தியம் செய்வதா அல்லது தான் சித்திக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதா என்று ஒருகணம் வேணு மனம் தடுமாறுகிறான். அடுத்த கணம் தன்னை மீறி ”நான் அவளை ஏமாற்றவில்லை” என்று சொன்னபடி கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்கிறான். அவன் சித்தப்பா அக்கணமே பேச்சிழந்தவராக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அவனும் மனபாரம் குறையாதவனாக மும்பைக்கு வண்டியேறிவிடுகிறான்.

இரண்டு ஆண்டுகள் இடைவிடாத வேலை. சொந்த வாழ்க்கையின் துயரத்தை மறந்து வேலையில் மூழ்கிக்கிடக்கிறான். மீண்டும் கிடைத்த ஓய்வு அவனை தடுமாற்றத்தில் ஆழ்த்தி தவிக்கவைக்கிறது. குற்ற உணர்வில் அவன் தவிக்கிறான். அம்மனின் அருளால் தனக்குக் கிடைத்த நீடித்த ஆயுளும் பார்வைத்திறமும் இந்த வேதனையில் வாடுவதற்குத்தானோ என நினைத்து துயரத்தில் மூழ்கிவிடுகிறான். மீண்டும் அம்மனின் சன்னதிக்குச் சென்று தன் பொய்ச்சத்தியத்துக்கு ஈடாக தன் பார்வையையும் உயிரையும் அவளே எடுத்துக்கொள்ளும் வகையில் நின்றுவிடவேண்டும் என்று அவனுக்கு ஒரு வேகம் வருகிறது. மறு யோசனைக்கு இடம்கொடுக்காமல் அடுத்த நொடியே ஊருக்குப் புறப்பட்டுவிடுகிறான்.

இரவு நேரத்தில் அம்மன் குதிரையில் ஏறி கோயிலிலிருந்து புறப்பட்டு வேட்டைக்குச் செல்வதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதுதான் அவள் பலி வாங்கும் நேரம். அந்த நேரத்துக்குத் தோதாக அவன் கோவில் வளாகத்துக்குச் சென்று அவள் பார்வையிலேயே படும் வண்ணம் வாசலில் படுத்துக் கிடக்கிறான். அன்று இரவு தன் மரணம் நிச்சயம் என்றும் அன்னை தனக்கு வழங்கிய வரத்தை அவளே திரும்ப எடுத்துக்கொண்டு தன் கணக்கை முடித்துவிடப் போகிறாள் என்றும் நினைத்துக்கொள்கிறான். எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலேயே அவன் துயிலில் ஆழ்ந்துவிடுகிறான். கால் துயிலும் அரைத்துயிலுமாக அவன் புரண்டுபுரண்டு படுக்கும்போதே விடிந்துவிடுகிறது.

கண்விழித்ததும் தான் உயிர்த்திருப்பது அவனுக்கே ஆச்சரியமளிக்கிறது. தனக்கு தண்டனை ஏன் கிடைக்கவில்லை என்பது அவனுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. கோவில் வளாகத்தை விட்டிறங்கி ஆற்றங்கரையை நோக்கி மெதுவாக நடந்து செல்கிறான். அப்போது வயதான ஒரு பெரியவரும் பார்வையில்லாத ஒரு சிறுவனும் உரையாடியபடி வருவது தெரிகிறது. தனக்கு கண்பார்வை திரும்புமா என்பதைப்பற்றி அச்சிறுவன் கேட்பது அவன் காதில் விழுகிறது. அவர்கள் உரையாடலை ஊன்றிக் கேட்கும்போதுதான் அந்தத் தாத்தா தன் சித்தப்பா என்பதும் அச்சிறுவன் தன் மகன் என்பதும் அவனுக்குப் புரிகிறது. ஐயோ என திடுக்கிட்டு அலறியபடி அவர்களை நோக்கி ஓடுகிறான். அச்சிறுவனை அந்தப் பெரியவரிடமிருந்து வாங்கி தோளோடு அணைத்தபடி கோவிலை நோக்கி நடக்கத் தொடங்குகிறான்.

இதுவும் ஒரு மாயாதீதமான கணம். மரணம் ஒரு பெரிய தண்டனை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மரணத்தில் எல்லாத் துன்பங்களும் ஒரே கணத்தில்  முடிவடைந்துவிடுகின்றன. கண்முன்னால் ஒரு வேதனைக்காட்சியை ஒவ்வொரு கணமும் பார்த்தபடி நிற்பது பெருந்துன்பம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனாலும், அது மரணத்தைவிட பெரிய தண்டனை. மரணத்துக்காகக் காத்திருந்தவனுக்கு மரணத்தைவிட பெரிய தண்டனை கிடைத்துவிடுகிறது.

முதல் மாயாதீதக்கணம் அவனுக்கு ஆயுளையும் பார்வையையும் அளிக்கிறது. இரண்டாவது மாயாதீதக்கணம் செஞ்சோற்றுக்கடனில் சிக்கவைத்து வாய்பேச முடியாத ஊமையாக்கி வைக்கிறது. மூன்றாவது மாயாதீதக்கணம் அதே செஞ்சோற்றுக்கடனுக்காக பொய் பேச வைக்கிறது. நான்காவது மாயாதீதக்கணம் மாபெரும் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

ஒருவேளை, பார்வையில்லாதவனாகவே வேணு வாழ்ந்திருந்தால், அவன் வாழ்க்கை விதியின் கணக்குப்படி காலமெல்லாம் அப்படியே நீடித்திருக்கும். பார்வை இல்லை என்பதைத் தவிர வேறெந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் ஒரு வரம் போல அவனுக்குப் பார்வை கிடைக்கிறது. எனினும் அந்த வரம் வரமாக நீடிக்கவில்லை. ஒரு சாபமென மாறிவிடுகிறது. அவன் தன் காதலையே பலியென கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. ”நந்தனத்தில் ஓர் ஆண்டி  அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தானொரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” என்னும் சித்தரின் பாடலை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. செஞ்சொற்றுக்கடன் என்னும் பெயரில் தனக்கு வரமாக கிடைத்த ஒன்றை வேணுவே போட்டு உடைத்துவிடுகிறான். ஒரு காலத்தில் தன் சித்தப்பா தனக்குச் செய்ததையெல்லாம், தன் பிள்ளைக்கு தானே ஒரு பெரியப்பாவாக நின்று செய்யவேண்டியிருக்கிறது. ஒருவகையில் அது அவன் அச்சாபத்திலிருந்து மீள்வதற்கான கழுவாயாகவும் இருக்கலாம். வாழ்க்கையின் ரகசியத்தை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா, என்ன? 

 

(மாயாதீதம். என்.ஸ்ரீராம். குறுநாவல். தமிழ்வெளி பதிப்பகம், 1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை – 122. விலை. ரூ.120)

(உங்கள் நூலகம் – மார்ச் 2024)