Home

Thursday, 29 October 2015

தாமரை இலையின் தத்துவம் - கட்டுரை



    கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள்  கடந்துவிட்டன. தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும் பிறகு ஆந்திரத்தில் இரண்டு ஆண்டுகளையும் அதைத் தொடர்ந்து இருபத்திநான்கு ஆண்டுகளைக் கர்நாடகத்திலும் கழித்திருக்கிறேன். இந்த இடைவெளியில் பல ஊர்களில் பலவிதமான அதிகாரிகளிடம் வேலைபார்த்த அனுபவமுண்டு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. சில அனுபவங்கள் மேன்மையானவை. சில அனுபவங்கள் மறக்கமுடியாத வடுக்களையும் வலியையும் தந்தவை. இன்னும் சிற்சில அனுபவங்கள் கசப்பையே பரிசாக வழங்கியவை. எழுதத் தொடங்கினால் ஒவ்வொன்றையும் ஒரு கதையாகச் சொல்லலாம்.

    எல்லா அதிகாரிகளும் ஒரேவிதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும்.  சிலரிடம் பிறந்ததிலிருந்தே அதிகாரியாக இருப்பதுபோன்ற அருவருப்பான அலட்டல் இருக்கும். தன்னுடைய ஒவ்வொரு சொல்லின் வழியாகவும் செயலின் வழியாகவும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார்கள். தன் கைக்கு வந்துள்ள அதிகாரத்தை எல்லாரையும் அதட்டி, மிரட்டி, சத்தம்போட்டு பதற்றமடையவைத்துத்தான் செயல்படுத்திக் காட்டவேண்டும் என்கிற எண்ணத்தில் சிலர் மிதப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை மனிதப்பிறவிகளாகவே சிலர் பார்ப்பதில்லை.  ஏதோ சிலர்மட்டுமே தன்னிடம் வேலை செய்யும் அனைவரிடமும் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்கிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடமையில் அக்கறையும் ஒழுங்கும் நேர்மையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான அதிகாரிகளில் ஒருவராக இருந்தார் ஸ்ரீதரன். அவரிடம் வேலை செய்த ஐந்தாண்டுக்காலம்  பசுமையான நினைவுகளுக்குச் சொந்தமான காலம். எங்கள் பிரிவுக்கு அவர் துணைப்பொது மேலாளர். அவருடைய எல்லாச் செயல்களிலும் துணையாக இருக்கவேண்டிய தலைமையகப் பொறுப்பு எனக்கு. முதல் நாளிலிருந்தே எங்களுக்கிடையே இசைவான உறவு அரும்பிவிட்டது.
    அவருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம்.  சிறிய வயதிலேயே தகப்பனார் மறைந்ததால் தாயாரின் அரவணைப்பிலும் தாய்மாமன் ஆதரவிலும் வளர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். அதிக மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேறியிருந்ததால் தொலைபேசித் துறையில் இளம்பொறியாளராக தாமதமின்றி வேலை கிடைத்துவிட்டது. அவருக்கு இலக்கியத்திலும் நல்ல ஆர்வம் இருந்தது.  புத்தகங்கள் படிப்பது, கையெழுத்துப் பத்திரிகை நடத்துவது, நண்பர்களுடன் புத்தகங்கள்பற்றி விவாதிப்பது என அவருடைய இளமைக்காலம் இனிமையாகவே கழிந்தது. எழுபதுகளில் வெளிவந்திருந்த முக்கியமான தமிழ்ப்படைப்புகளை ஒன்றுவிடாமல் படித்தார். ஆறாண்டுக்காலம் கடந்ததே தெரியவில்லை. தன் வாழ்வின் பொற்காலமாக அதைத்தான் அவர் அடிக்கடி சொல்வார்.
    அவருடன் பணிசெய்த வேறொரு இளம்பொறியாளர் அப்போது தில்லியில் நடைபெற்ற முதல் பிரிவு உயர் அதிகாரிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு அதற்கான தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாராம். ஏதோ ஒரு தருணத்தில் அவரிடம் இருந்த புத்தகத்தைப் பார்த்து என்ன ஏது என்ற விவரங்களைக் கேட்டபோது, அந்த நண்பர் மிகவும் ஏளனமாக "இதெல்லாம் படிப்பு சம்பந்தமான விஷயம்பா, நீ சும்மா இலக்கியம் கதை கிதைன்னு கிடக்கற ஆளு. உனக்கெதுக்கு இதெல்லாம், விடு" என்று சொல்லிச் சிரித்தாராம்.  அந்த ஏளனச் சிரிப்பு இளைஞரான ஸ்ரீதரை உசுப்பிவிட அடுத்தநாளே இன்னொரு விண்ணப்பத்தை வாங்கி முழுமைசெய்து அனுப்பிவிட்டு அவரும் அதே தேர்வுக்குப் படிக்க உட்கார்ந்துவிட்டாராம். அன்று மூண்டெழுந்த உத்வேகம் இறுதிவரை குறையவே இல்லையாம். ஆறு மாத கால இடைவிடாத படிப்பு மற்றும் பயிற்சியின் விளைவாக அதே ஆண்டில் உயர் அதிகாரித் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்காக தில்லி சென்றுவிட்டாராம். இரண்டு ஆண்டுக்கால பயிற்சிக்குப் பிறகு அவர் வேலைக்கு வந்த இடம் கர்நாடகம்.  இதெல்லாம் எங்களுக்கிடையே நட்பு நெருக்கமான பிறகு அவர் சொன்னவை.
    எங்கள் எண்ணப்போக்கும் அணுகுமுறையும் கடமைகள் பற்றிய பார்வையும் ஒன்றாகவே இருந்ததால் எங்களிடையே நட்பு முகிழ்த்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. புதிதாக வந்த புத்தகங்களை ஆர்வமாகக் கேட்டு வாங்கிப் படித்தார் அவர். அவரைப்போலவே அவருடைய தாயாருக்கும் மனைவிக்கும் படிக்கும் ஆர்வம் உண்டு. தீபாவளி, பொங்கல் சமயங்களில் வெளிவரும் இலக்கிய மலர்கள் அனைத்தையும் நாங்கள் இருவரும் வாங்கி மாறிமாறிப் படிப்போம்.  என் கதைகள்மீது அவருக்கு மிகவும் உயர்வான மதிப்பிருந்தது. அயோத்தியாவில் பாபர்மசூதி இடிபட்ட சந்தர்ப்பத்திலும் ஒரிசாவில் கிறித்துவப் பாதிரியார் தம் பிள்ளைகளுடன் வாகனமொன்றில் கொளுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் மிகவும் மனமுடைந்து கலங்கி நின்றபோது என்னைத் தேற்றி ஆறுதல் சொன்னதோடுமட்டுமின்றி அன்று என்னைத் தன்னுடைய வாகனத்திலேயே ஏற்றிவந்து வீடுவரை விட்டுச் சென்றார். கொந்தளிப்பான சந்தர்ப்பங்களில் சமூகவிரோதிகளால் நிகழ்த்தப்படும் இத்தகு செயல்களுக்கு ஏதோ பரவலான மக்கள் ஆதரவு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை அவர்களே போலியாக உருவாக்குகிறார்கள். ஆனால் அடிப்படையில் எல்லாக் காலத்திலும் மானுடமனம் இரக்கத்தின் இருப்பிடமாகவே இருந்துவந்திருக்கிறது. மனத்தின் ஈரத்தை எந்தச் சக்தியாலும் வற்றவைக்கமுடியாது என்று வண்டியில் வரும்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
    அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் நாம் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள துணையாக இருக்கும். ஒரு பிரச்சனையை அவர் அணுகும் கோணமும் அதைப் பொருத்தமான தர்க்கங்களுடன் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து கோப்புகளில் எழுதும் விதமும் மிகமுக்கியமானவை. விதிகளை மனப்பாடமாகவும் தெளிவாகவும் புரிந்துவைத்திருப்பார். மனத்துக்கு நேர்மை என்று பட்டதை துணிவுடன் செயல்படுத்துவார். ஒரு வேலையில் இறங்கும் முன்பாக அதைப்பற்றி முழுஅளவில் தெரிந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்துவார். அரசு வழங்கிய வாகனத்தை குடும்பத்தார் பயன்படுத்தக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பார்.  மாதச்செலவில் ஆட்டோவுக்கு என்று ஒரு தொகையை ஒதுக்கி மனைவியிடம் கொடுத்துவிடுவார். என் எதிரிலேயே பலமுறை அவர் தன் மனைவியிடம் ஆட்டோவுக்கு நிற்கவேண்டிய இடம், இறங்கவேண்டிய நிறுத்தத்தின் பெயர் என வழிவிளக்கங்களைத் தொலைபேசியில் சொன்னதுண்டு.
    திருவானைக்காவல் அருகே ஒரு தொகுப்புவீடு தயாராகிக்கொண்டிருப்பதாகவும் அதில் ஒரு வீட்டைப் பதிவுசெய்யவேண்டும் என்றும் அவருடைய தாய்மாமன் தொடர்ந்து தொலைபேசியில் நினைவு ட்டியபடியே இருந்தார். கடன்பட்டுத்தான் வாங்கவேண்டும் என்பதால் அவருக்கு அதில் உடன்பாடில்லை. முதலில் மறுத்துக்கொண்டே வந்தார்.  தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளின் காரணமாக ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டார். ஒரு வாரம் விடுப்பெடுத்துச் சென்று வங்கிக்கடன், வீட்டுப்பதிவு எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு திரும்பினார். சரியாக ஓராண்டுக்குப் பிறகு வீடு தயாரானது. புதுமனை புகுவிழாவுக்கான அழைப்பிதழை எல்லாருக்கும் கொடுத்துவிட்டு சிலநாட்கள் முன்னதாகவே விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக ஊருக்குச் சென்றுவிட்டார்.
    ஒருநாள் முன்பாகவே நான் திருச்சியை அடைந்தேன்.   கல்லணையையும் காவிரியையும் பார்க்கும் ஆசையில் உடனேயே  கிளம்பிவிட்டேன். மழை இன்னும் தொடங்காத காலம். அணையில் அவ்வளவாக தண்ணீர் இல்லை. நடுப்பகுதியில் வெண்மணற்பரப்பைக் கீறிக்கொண்டு ஒரு வாய்க்காலைப்போல காவிரி ஓடிக்கொண்டிருந்தது.  நுரையடர்ந்த கரையையும் பொங்கிப்பொங்கித் தாழ்கிற அலைகளையும் முரட்டுத்தனமாக பாய்ந்துசெல்கிற அதன் வேகத்தையும் ஓசையையும் கனவுகண்ட வந்த எனக்கு ஒரு சிற்றோடையைப்போல ஓடிக்கொண்டிருந்த அந்தக் காவிரி சற்றே ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் அதை ஒரு சில கணங்களிலேயே மறந்துவிட்டேன். தண்ணீரில் இறங்கி குளிர்ச்சியான மணலில் உடல்நனைய உட்கார்ந்து இரண்டு கைகளாலும் அள்ளிஅள்ளி தண்ணீரை இறைக்கத் தொடங்கியதும் மனத்தில் ஒருவித மகிழ்ச்சி படரத் தொடங்கியது. ஏறத்தாழ இரண்டுமணிநேரம் தண்ணீரிலேயே கிடந்தேன். எழுந்துவரவே மனமில்லை. கரைபுரள ஓடும் காவிரியாக இருந்திருப்பின் ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்திருக்கமுடியுமே தவிர இப்படி குளித்திருக்கமுடியாதல்லவா என்று சொல்லிக்கொண்டேன். பசி உறைக்கத் தொடங்கியபிறகுதான் தண்ணீரிலிருந்து வெளியேறினேன்.  கரையோர விடுதியொன்றில் எலுமிச்சை சாதம் வாங்கிக்கொண்டு கரிகாலனுக்கு எழுப்பப்பட்டிருந்த சிலைக்கருகே உட்கார்ந்து சாப்பிட்டேன்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னராக அந்த அரசனுக்கு உதித்த அணைக்கட்டுச் சிந்தனை வரலாற்றில் எவ்விதமான முன்மாதிரியும் இல்லாத ஒன்று. கருணையும் கனிவும் மக்கள் நல்வாழ்வின்பால் ஈடுபாடும் கொண்ட நெஞ்சில்மட்டுமே அப்படி ஒரு யோசனை உதிக்கமுடியும். கரிகாலனைச்சுற்றி ஏராளமான புனைகதைகள் காலநகர்வில் எழுந்து அடர்ந்து நிற்கின்றன. அவையனைத்தையும் முக்கியமற்றதாக்கி அமைதியாக உயர்ந்து நின்றுகொண்டிருந்தது கல்லணை.
    அன்று நகருக்குத் திரும்புவதற்குள் இரவு கவியத்தொடங்கிவிட்டது. அறையில் இன்னொரு குளியல். அவசரமாக உடைமாற்றிக்கொண்டு மலைக்கோட்டைக்குச் சென்றேன். போகிற வழியில் தொலைபேசியில் ஒருமுறை திருவானைக்காவல் எண்ணைத் தொடர்புகொண்டு வந்து சேர்ந்துவிட்ட தகவலைச் சொன்னேன். "எப்ப வந்திங்க, இப்பதான் பேசறிங்க? நீங்க இங்கயே வருவிங்கன்னுதானே காத்துகிட்டிருக்கோம்" என்றார் ஸ்ரீதரன் . "வந்து இறங்கனதும் கல்லணையைப் பாத்துடணும்னு ஒரு ஆசை. அதனால உடனே வண்டிய புடிச்சி ஓடிட்டேன்" என்றேன்.  மறுமுனையில் அவர் சிரிப்பது கேட்டது. "சரி, இப்பவாவது வந்துருங்க" என்றார்.  "இப்ப மலைக்கோட்டை வாசல்ல நிக்கறேன். ஏறி இறங்க ராத்திரியாயிடும். காலையில நேரா விசேஷத்துக்கே வந்துடறேனே சார்" என்றேன். மீண்டும் ஒரு சிரிப்பொலி மறுமுனையில் எழுந்தடங்கியது.  "சரி, புது இடம், ஜாக்கிரதையா இருங்க. காலையிலயாவது சீக்கிரம் வந்துருங்க"  என்று சொன்னார். முடிப்பதற்கு முன்பாக "ஞாபகமாக சரியா இடத்த கண்டுபிடிச்சி வந்துருவிங்க இல்லயா?" என்று சந்தேகமாகக் கேட்டார்.  "அதெல்லாம் கவலப்படாதிங்க சார், நீங்கதான் படம் போட்டு காட்டியிருக்கிங்களே" என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
    படிகளில் ஏறஏற மனத்தில் உற்சாகம் நிரம்பத்தொடங்கியது. உச்சியில் நின்று கருநீல வண்ணத்தில் விரிந்திருக்கும் வானத்தையும் அங்கங்கே இறைந்துகிடக்கும் நட்சத்திரங்களையும் பார்த்தபோது ஆனந்தமாக இருந்தது. விரித்துவைத்த வரைபடமாக நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. வானத்தையும் தரையையும் விசித்திரமாக மாறிமாறிப் பார்த்தபடி நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.  நான் உட்கார்ந்திருந்த ஒரு கல்மேடை வேடிக்கை பார்க்க மிகவும் வசதியாக இருந்தது. யாரோ ஒரு குடும்பத்தினர் உட்கார்ந்திருந்தவர்களுக்கெல்லாம் கொழுக்கட்டையும் சுண்டலும் நிரம்பிய தொன்னையை எடுத்துக்கொடுத்தார்கள். என் கைக்கும் ஒரு தொன்னை கிடைத்தது. வேடிக்கை பார்த்தபடி சுவைத்துச் சாப்பிட்டேன். அக்கணம் என்னையே நான் மறந்துவிட்டேன். கோவில் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஒரு நாடோடியாக என்னை நானே நினைத்துக்கொண்டேன். காவலர்கள் வந்து எழுந்துபோகச் சொல்லும்வரை அந்த எண்ணமே நீடித்திருந்தது. மெதுவாக கீழே இறங்கி அறையை அடைந்தேன். மனம் நிறைந்திருந்தது. இரண்டு பழங்கள்மட்டுமே வாங்கிச் சாப்பிட்டுவிட்டு உறங்கப் போனேன்.  
    திடீரென சித்தன்னவாசல் ஞாபகத்துக்கு வந்தது. கல்லணைக்கு நிகரான தொன்மை வாய்ந்த இடம். அதைப் பார்க்காமல் செல்ல மனமில்லை. அடுத்தநாள் மாலை ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். புதுமனை விழாவுக்குச் சென்றபிறகு நேரம் எப்படிப் போகும் என்பதைச் சொல்லமுடியாது. எதைச் செய்தாலும் அங்கே செல்வதற்கு முன்பாகவே செய்யவேண்டும். அது ஒன்றுதான் வழி. விழாநேரம் ஏழரையிலிருந்து ஒன்பதுவரை என்று குறிப்பிட்டிருந்தது. ஒன்பதுக்குள் திரும்பும்படி திட்டத்தை வகுத்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அப்படித் திரும்புவது சாத்தியமானதுதானா என்ற சந்தேகத்தையும் நானே எழுப்பிக்கொண்டேன். எழுந்து அறையைப் பூட்டிக்கொண்டு விடுதி நிர்வாகியிடம் சென்று என் திட்டத்தையும் சந்தேகத்தையும் அசான்னேன்.
    "தாராளமா போய் வந்துரலாம் சார். புதுக்கோட்டை வண்டிய புடிங்க சார். ஏரோப்ளேன் மாதிரி ஒருமணிநேரத்துல பறந்துபோயிடும் பாருங்க. நேரா வாசல்லயே எறக்குவாங்க. அரமணிநேரம் பாருங்க. டக்குன்னு அடுத்தவண்டிய புடிச்சி வந்துட்டே இருங்க சார்....."
    அவர் குரலில் ஒலித்த தன்னம்பிக்கை என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தது. நன்றியைச் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.  காலை நான்கு மணிக்கு எழும்படி கடிகாரத்தைத் திருத்திக்கொண்டு உறங்கச் சென்றேன். கண்ணைமூடியதும் காவிரியின் கோலம் ஒரு சித்திரமாக மனத்தில் எழுந்தது. அந்தக் குளுமையை நினைத்தபடி எப்போது உறங்கத் தொடங்கினேன் என்று தெரியாமலேயே ஏதோ ஒரு நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். காலையில் கடிகாரம் ஒலித்தபிறகுதான் விழத்தெழுந்தேன்.
வேகவேகமாக குளித்து உடைமாற்றிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினேன். பேருந்து நிலையத்தில் அப்போதுதான் கிளம்பத் தொடங்கிய புதுக்கோட்டை வண்டிக்குள் உட்கார்ந்ததும் எனக்கே சிறகுமுளைத்துப் பறப்பதுபோல இருந்தது. அதிகாலைப் பனிச்சாரலை அனுபவித்தபடி பயணம் தொடங்கியது.
    சித்தன்னவாசலில் இறங்கியபோது நேரம் ஏழேகால் இருக்கும். அது ஊரின் தொடக்கம். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும் என்று அங்கிருந்த அறிவிப்புப்பலகை சொன்னது. விடுதிக்காரர் சொன்ன வாசல் என்னும் வாசகத்தை நான் குகையின் வாசலாக நினைத்துக்கொண்டது எவ்வளவு பெரிய பிழை என்பதை உணர்ந்துகொண்டேன். வேகவேகமாக அறிவிப்புப்பலகை காட்டிய திசையில் நடந்தேன்.  முதுமக்கள் தாழி என்றும் சணமர் குகை என்றும் அம்புக்குறிகள் காட்டிய இடங்களை நடந்துகொண்டே திரும்பிப்பார்த்தேன். செலவழிக்க போதிய நேரம் இல்லாததால் ஒரு கணப் பார்வைக்குமேல் அந்த இடங்களில் நிற்கமுடியவில்லை.  
குகையின் வாசலில் யாரும் இல்லை. அங்கிருந்த பலகையின் அறிவிப்புப்படி பார்வையாளர் நேரம் இன்னும் தொடங்கவே இல்லை. என் தயக்கத்தையும் அச்சத்தையும் அதே இடத்தில் துறந்துவிட்டு சட்டென உள்ளே புகுந்துவிட்டேன். பார்ப்பதற்கென்று அதிக இடங்கள் இல்லை. மண்டபங்கள். மாடங்கள்.  தூண்கள். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அவற்றின்மீது இன்னும் உயிர்ப்போடு வாழும் ஓவியங்கள். அவ்வளவுதான். ஆனால் அந்த ஓவியங்கள் என்னை இன்னொரு உலகுக்கு அழைத்துச் சென்றன.  சிதிலமடைந்த ஓவியங்களிலிருந்து மூல உருவங்களை நாம்தான் கற்பனை செய்து நிரப்பவேண்டியிருந்தது.     எங்கெங்கும் தாமரை இலைகள். தாமரை மொக்குகள். இன்னும் சில இடங்களில் மீன்கள், முதலைகள், யானைகள், பறவைகள். அவற்றையும் மீறி தாமரை இலையின் இருப்பு தூக்கலாக இருப்பதுபோலப் பட்டது. ஒயிலாகச் சாய்ந்தபடி இருந்த ஒரு நங்கையின் விரல்களில்கூட தாமரைமொக்கு காணப்பட்டது. ஒரு சமுக்காளத்தை விரித்துவைத்ததுபோல மண்டபத்தின் உட்கூரையில் அந்த ஓவியங்கள் நளினமான முறையில் தீட்டப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தக் குகைக்குள் புகுந்து தன்னந்தனிமையில் மல்லாந்தவாக்கில் படுத்தபடி பாறைக்குடைவில் மாதக்கணக்கில் ஓவியம் தீட்டிய கலைஞனை  மனத்துக்குள் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ஒருகணம் உடல் சிலிர்த்தடங்கியதைப்போல இருந்தது.
    ஏறத்தாழ எட்டரைக்கு வெளியே வந்தேன். எங்கிருந்தோ வந்த ஒருவர் என்னை வழிமறித்து கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்கத் தொடங்கினார். தன்னை சித்தன்னவாசல் மண்டபத்துக்குப் பொறுப்பாளர் என்று சொல்லிக்கொண்டார். நான் பொறுமையாக அவருடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னபடி என் ஆவலையும் அவசரத்தையும் சொன்னேன். இரட்டைக் கட்டணமாக தந்துவிடுகிறேன் என்று சொல்லி பணத்தைக் கொடுத்தேன். பிறகுதான் அவர் குரல் அடங்கியது. முணுமுணுத்தபடி என்னைச் செல்ல அனுமதித்தார். வழியில் சென்ற ஒரு டி.வி.எஸ்.ஸை நிறுத்தி சாலைவரை அவசரமாகச் செல்லவேண்டும் என்று சொல்லி ஏறிக்கொண்டேன். புதுக்கோட்டையிலிருந்து திருச்சியைநோக்கி விரைந்து சென்ற இரண்டு மூன்று பேருந்துகள் நிற்காமலேயே பறந்ததைப் பார்த்து என் மனம் பீதியில் உறைந்தது. ஊருக்கு வந்த நோக்கத்தை சரியாக நிறைவேற்றவில்லையே என்கிற குற்ற உணர்வு பெருகத் தொடங்கியது. மிகவும் தாமதமாக வந்த வாகனமொன்று கையைக் காட்டியதும் நின்றதும் ஏறிக்கொண்டேன். என் உடல்தான் வாகனத்தில் உட்கார்ந்திருந்ததே தவிர மனம் அங்கில்லை. புதுவீட்டில் இந்நேரம் இது நடக்கும், இந்நேரத்துக்கு இவர் வந்திருப்பார் என ஒவ்வொரு காட்சியாக நகர்த்திநகர்த்தி அசைபோட்டுக் கொண்டிருந்தது. வெளியே சொல்லமுடியாத அளவுக்கு மனம் கூச்சத்தில் அமிழ்ந்தது. அதிலிருந்து விடுபட எண்ணங்களை சித்தன்னவாசல் ஓவியத்தின்பால் மெல்லத் திருப்பினேன். தாமரை இலைகள்தான் உடனடியாக நினைவில் விரிந்தன. என்ன பொருளில் அல்லது எதை உணர்த்த இந்த இலைகள் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று அசைபோடத் தொடங்கினேன். அதன் அழகு, பசுமை, ஈர்ப்பு என ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்தபடி இருந்தபோதுதான் சட்டென அதன் ஒட்டாமை நினைவுக்கு வந்தது. கூடவே இருப்பினும் தண்ணீரோடு எவ்விதமான பற்றுமின்றி இருக்கின்றன அந்த இலைகள். பற்றின்மையை உணர்த்துவதற்காகத்தான் அந்தத் தாமரை இலைகள் அந்த ஓவியங்களில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று நானாகவே முடிவுகட்டிக்கொண்டேன்.  
    திருச்சியை அடைந்தபோது பத்தரையைத் தொட்டுவிட்டது நேரம். செலவைப்பற்றிக் கவலைப்படாமல் பேருந்துநிலையத்திலிருந்தே திருவானைக்காவலுக்கு ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொண்டேன். அவர்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற யோசனையோடு ஒவ்வொரு கணத்தையும் சங்கடத்தோடு கழித்தேன். திருவானைக்காவல் பாதை பள்ளமும் மேடுமாக இருந்தது. அகல ரயில்பாதைக்காக எல்லா இடங்களிலும் தோண்டிப் போட்டிருப்பதாகச் சொன்னார் ஆட்டோக்காரர். சுற்றி வளைத்துக்கொண்டு ஏதோ ஒரு மாற்றுப் பாதையில் என்னை அழைத்துச் சென்று குறிப்பிட்ட தொகுப்பு வீட்டின்முன்னால் நிறுத்தினார்.
    மதிய உணவை முடித்துக்கொண்டு தாம்பூலப்பையோடு வாசலில் எல்லாரும் விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த கணமே என்னை ஸ்ரீதரன் பார்த்துவிட்டார். பின்னாலேயே அவர் மனைவியும் நின்றிருந்தார். "என்னங்க, இதுதான் விசேஷத்துக்கு வர நேரமா?" என்று முகம்நிறைந்த சிரிப்போடு வரவேற்றார். "என்னாச்சி, மலைக்கோட்டை ஏறி இறங்கினதுல காலையில நல்லா தூங்கிட்டீங்களா?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
    "ஆளயும் காணோம், போனயும் காணோமேன்னு ரொம்ப கவலையா போயிடுச்சி. நீங்க சொன்ன லாட்ஜ் பேர்ல ஏதாவது போன் நெம்பர் இருக்குதான்னுகூட தேடிப் பாத்துட்டேன். ஒன்னையும் கண்டுபிடிக்க முடியலை. வாஸ்கோடகாமா மாதிரி எங்கயோ கெளம்பிட்டிங்கன்னு மட்டும் புரிஞ்சகிட்டேன். எங்கன்னு தெரியாமதான் ஒரே குழப்பம்."
    ஸ்ரீதரன் அங்கிருந்த தன் குடும்பத்தினர், மனைவி வழி சொந்தக்காரர்கள் அனைவரிடமும் பொறுமையாக என்னை அறிமுகப்படுத்தினார்.
    "சித்தன்னவாசல பாக்கலாம்னு ஒரு ஆச வந்தது. அதான் கெளம்பிப் போயிட்டேன்."
    "காலையிலிருந்து எதாச்சிம் சாப்பிட்டிங்களா?"
    இல்லை என்பதுபோல தலையசைத்தேன்.
    "வெறும் வயித்தோடயா சித்தன்னவாசல் அது இதுன்னு சுத்திட்டு வந்திங்க. சமணர்கள் ஓவியத்த பாக்கப்போனா சமணர்கள்மாதிரியே பட்டினி கெடக்கணுமா என்ன? நல்ல வேளை, சமணர் குகைய பாத்தேன்னு சமணர்மாதிரி அங்கயே உக்கார்ந்துடாம கெளம்பி வந்திங்களே, ரொம்ப சந்தோஷம்."
    ஸ்ரீதரனும் அவர் மனைவியும் அவர்கள் கையாலேயே எனக்குத் தனியாக இலைபோட்டுப் பரிமாறினார்கள். நான் மிகவும் மனநிறைவோடு சாப்பிட்ட விருந்து அது. அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அங்கேயே அவருடைய உறவினர்களோடு பேசிவிட்டுத் திரும்பினேன்.
    பல விதங்களில் என் மனத்துக்கு நிறைவைத் தந்த பயணம் அது. அதைத் தொடர்ந்து என் தங்கையின் திருமணம் கடலு¡ரில் நடைபெற்றது. ஸ்ரீதரன் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு என் தாயாரோடும் தம்பிகளோடும் பேசிப்பழகியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எங்கள் உறவும் நெருக்கமும் மெள்ளமெள்ள வலுப்பட்டுக்கொண்டே வந்தது. நட்பார்ந்த ஒரு நல்ல அதிகாரியின்கீழ் வேலை செய்வதை நினைத்து மகிழ்ச்சியடையாத நாளே இல்லை. துரதிருஷ்டவசமாக காலம் அந்த மகிழ்ச்சியை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. வயிற்றுவலி என தொடங்கிய சின்னப் பிரச்சனை ஒருமாத காலத்துக்குள் புற்றுநோயாக மாறி அவரை அள்ளிக்கொண்டுபோய்விட்டது மரணம்.
    மின்தகன உலைக்குள் அவர் உடல் தள்ளப்படும்வரை அருகிலேயே இருந்து மனத்துயரத்தைக் கரைப்பதற்கு நடப்பதொன்றே வழியென நினைத்து வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன்.  வழிமுழுக்க ஏதேதோ சிந்தனைகள். ஏதேதோ சம்பவங்கள். சிரிப்பது தெரியாத அவருடைய களையான முகம். உறுதியான குரல். மாறிமாறி எழுந்த காட்சிகளிடையே அவருடைய புதுமனை புகுவிழாவுக்குச் சென்ற பயணமும் அப்போது நான் தன்னந்தனியாக மேற்கொண்ட சித்தன்னவாசல் பயணமும் நினைவுக்கு வந்தன. அந்தத் தாமரை இலைகள் நினைவில் மீண்டும் மிதக்கத் தொடங்கின. மனத்துக்குள் சட்டென ஒரு பொறி தட்டியது. தாமரை இலைகள் பற்றின்மையை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம். ஆனால் அவை சுட்டும் உண்மை நிலையாமைதான் என்று தோன்றியது. குளம் வற்றியதும் தாமரை இலைகளும் மாண்டுபோகின்றன. மானுடக் கண்களுக்கு அந்த இலைகளின் மினுமினுப்பும் அழகும்தான் தெரிகின்றன. எக்கணத்திலும் அந்த இலைகளின்மீது கவிய இருக்கிற மரணத்தைத் தெரிந்துகொள்ள இயல்வதில்லை. ஸ்ரீதரன் வாழ்வும் கிட்டத்தட்ட ஒரு தாமரை இலையின் வாழ்வாகவே மலர்ந்து மடிந்துவிட்டது.