ஜெய்ப்பூரிலிருந்து தொடர்வண்டியில்
திரும்பிக்கொண்டிருந்தேன். ஐந்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்த ராஜஸ்தானத்தின்
இடங்களனைத்தும் சின்னச்சின்னக்
காட்சிகளாக மனத்துக்குள் நகரத் தொடங்கின. அரண்மனைகள், இடிந்த கோட்டைகள், பசுமை அடர்ந்த மலைச்சிகரங்கள், ஏரிகள், சமண ஆலயங்கள், பாலைவனம் என அனைத்துமே பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக மனத்தில் பதிந்துகிடந்தன. அடுத்தடுத்து மலைச்சிகரத்தையும் பாலைவனத்தையும்
பார்த்த அனுபவம் ஒரு கனவுக்காட்சியைப்போல இருந்தது. சிகரத்தை நினைத்தபோது அதன்மீது நெளிந்தலையும் துண்டுத்துண்டு
வெண்மேகங்களும் அவற்றையொட்டிப்
பரவி நீண்டு விரிவடையும் நீலவானமும் அவற்றின் ஆழமான பின்னணியும் மிதந்துவந்தன. பாலைவனத்தை நினைத்தபோது மஞ்சளும் வெண்மையும் கலந்த மினுமினுப்பான நீண்ட மணற்பரப்பும் எங்கெங்கும் படர்ந்திருக்கும் வெறுமையும் மிதந்துவந்தன. ஆழமான வானமும் வெறுமையான மணற்பரப்பும் ஒரேவிதமான பரவசத்தையும் பீதியையும் ஒருங்கே ஊட்டுவதை அக்கணத்திலும் என்னால் உணரமுடிந்தது. என்னவென்று சொற்களால் வடிக்கமுடியாத ஒருவித வலியும் நெகிழ்ச்சியும் வேதனையும் கவிந்தன. கண்களை மூடியபடி வெகுநேரம் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தக் கலவையான உணர்வுக்கு மிகவும் பொருத்தமான வகையில் இசைப்படலமொன்று
என் நெஞ்சில் பொங்கிப் படர்வதை உணர்ந்தேன். அது மெல்லமெல்ல என்னை உருக்கிக் கரைப்பதையும் உணர்ந்தேன். என் இதயத்துடிப்புகள் அந்த இசையின் தாளக்கட்டுக்குத்
தகுந்தபடி அமைந்த விசித்திரம் ஆச்சரியமாக இருந்தது. என்னை முழுக்கமுழுக்க அந்த இசையின்வசம் ஒப்படைத்துவிட்டேன். ஒரு சின்ன ஏக்கம். மன்றாடுதல். தொழுதல். கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள். புரிந்துகொள்ளமுடியாத ஒரு தவிப்பு. யாரிடமோ சொல்லி முறையிட்டு கெஞ்சிக் கேட்பதுபோன்ற கோலம். பொங்கியெழுந்து கரைபுரண்டோடி வந்த மாபெரும் வெள்ளத்தைப்போல அந்த இசையும் என்னை இழுத்துச் சென்றது. அந்த இசையை என் மனம் எங்கிருந்து கண்டுபிடித்தது
என்று வெகுநேரத்துக்குப்
புரியவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அந்த இசையின் வேரைக் கண்டுபிடித்தேன். அது ருடாலி என்னும் திரைப்படத்தில்
பாலைவனத்தைக் காட்டும்போதெல்லாம் எழுந்துவந்து ஆக்கிரமித்துக்கொள்ளும் இசை. குறிப்பாக அப்படத்தின் நாயகி பாடும் ஒரு பாடலின் பின்னணியாக அமைந்த இசை.
அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக
வேறொரு இசைக்கட்டமைப்பும்
நினைவுக்கு வந்தது. அது நந்தனார் திரைப்படத்தில் இடம்பெறும் இசை. சிதம்பரம் சென்று நடராஜ தரிசனம் காண்பதற்காக ஆண்டையிடம் அனுமதி கேட்டு நந்தன் பாடும் பாட்டின் இசை. அதைப்போல நெஞ்சை உருக்குகிற ஒரு கெஞ்சுதலை எப்போதும் கேட்டதே இல்லை. கல்லைக்கூட உருக்கிவிடும் அந்தக் குரல் ஆண்டையை உருக்காமல் போனாலும் கேட்பவர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சத்தையும் உருக்கத் தவறியதில்லை.
நந்தனாருக்காக மன்றாடி உருகிய தண்டபானி தேசிகரின் குரலை என் மனம் அசைபோடத்தொடங்கியது. அந்த இசை ஏதோ ஒரு கணத்தில் என்னையும் எதற்கோ மன்றாடுபவனாக மாற்றியது. யார்முன்னிலையிலோ நின்று அரற்றுவதைப்போல நெஞ்சம் பொங்கியது. எதற்காக இந்த அரற்றல்? அமைதி, அன்பு, அணைப்பு, ஆதரவு, கருணை, கனிவான ஒரு வழிகாட்டல் என எதைவேண்டி இந்த முறையீடு? தெளிவாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆயினும் என்னையறியாமல் கண்கள் கசிவதை உணர்ந்தேன்.
வெளியே மழைமேகங்களால் சூழப்பட்ட வானத்தில் பார்வை பதிந்திருந்தது.
எங்கிருந்தோ எழுந்துவந்த ஒரு குரல் என்னை ஒருகணம் நிமிர்ந்து உட்காரச் செய்தது. என்னால் அக்குரலை நம்பவே முடியவில்லை. என் மனத்தில் அக்கணம்வரைக்கும்
பொங்கிக்கொண்டிருந்த மன்றாடும் இசையை அப்படியே எதிரொலித்துக்கொண்டிருந்தது அக்குரல். சில கணங்களுக்குப் பிறகுதான் அது ஒரு கன்னடப்பாடல் என்பது புரிந்தது. ஆனாலும் இது என்ன விசித்திரம். எப்போதோ கேட்ட ஒரு இந்திப் பாடல், என்றோ நெஞ்சில் பதிந்துபோன ஒரு தமிழ்ப்பாடல் ஆகியவற்றின் தொடர்ச்சி கன்னடப்பாடலில் கேட்கிறது. இதன் தொடர்ச்சி வேறு எந்த மொழியிலோ ஒலித்துக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. மொழிவேறுபாடு இல்லாமல் பிரதேசவேறுபாடு இல்லாமல் உலகெங்கும் மண்மீது எல்லாக் காலங்களிலும் ஒரு மன்றாடும் குரல் ஒலித்தபடியே இருப்பதாக நினைத்துக்கொண்டேன். ஒட்டுமொத்தமாக மானுடத்துக்காக
அக்குரல் எப்போதும் மன்றாடியபடியே இருப்பதாகத் தோன்றியது. வியப்பு மாறாமலேயே அப்பாடலில் கவனத்தைப் பதித்தேன். எங்கள் பெட்டியிலேயே கதவோரமாக நின்று வானத்தைப் பார்த்தபடி முதியவர் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.
மெலிந்த தோற்றம். நிறைய தலைமுடி. அடர்ந்த புருவம். கனிவான கண்கள். உள்ளொடுங்கிய கன்னங்கள். இடுப்பில் அரைவேட்டிமட்டுமே
அணிந்திருந்தார். தோள்மீது ஒரு வெள்ளைத் துண்டு கிடந்தது. இந்த உலகத்தையே மறந்தவரைப்போல லயிப்போடு பாடிக்கொண்டிருந்தார் முதியவர். பெட்டியிலிருந்தவர்கள் அனைவருடைய கவனமும் அவர்மீது ஒரே கணத்தில் திரும்பிவிட்டது.
எல்லாருமே ஏதோ ஒரு தெய்வீகத்துறவியைப் பார்ப்பதைப்போல அவரைப் பார்த்தார்கள்.
"அம்பிகா, நா நின்ன நம்பிதே...." என்று தொடங்கி பல சரணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது அப்பாடல். ஒவ்வொரு சரணமும் முடிந்தபிறகு இந்தப் பல்லவியின் வரியையும் குழைவோடு சொன்னார் முதியவர். முதலில் சிறிதுநேரம் அந்த வரிகளுக்கு உடனடியாகப் பொருளைக் கண்டடையும் ஆர்வத்தில்தான் பாடலைப் பின்தொடர்ந்தேன். நாலைந்து வரிகளுக்குப் பிறகு அம்முயற்சியைக் கைவிட்டேன். அந்தத் தாளக்கட்டில் மனத்தைப் பறிகொடுத்து நிற்பதே எனக்குப் பேரானந்தமாக இருந்தது. அதற்குப் பிறகு அந்த வார்த்தைகளோ, பொருளோ எதுவுமே எனக்கு முக்கியமாகப் படவில்லை. ஆளை அப்படியே அள்ளிக்கொண்டு போகும் அந்த இசை. அது ஒன்றே போதும் என்று தோன்றியது. அதைத் தொடர்ந்து அந்த முதியவர் இன்னும் ஆறேழு பாடல்கள் பாடினார். வேறு ஏதோ உலகத்தில் உலா வருவதைப்போல இருந்தது.
பாடியபிறகு அவர் அப்படியே கதவருகே உட்கார்ந்துகொண்டார். பயணியர்கள் அனைவரும் அவரவர் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். நான் வெகுநேரம் அந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். தயக்கத்தோடு நடந்து சென்று அவரருகில் நின்று அவருக்கு வணக்கம் சொன்னேன். கண்களைத் தாழ்த்தி என் வணக்கத்தை ஏற்றுச் சிரித்தபடி என்னைப் பார்த்தார். நான் அந்தப் பாடல்களின் விவரங்களைக் கேட்கத் தொடங்கினேன். அவையனைத்தும் புரந்தர தாசரின் பாடல்கள் என்றார் முதியவர்.
புரந்தர தாசர் பதினைந்தாம் நு¡ற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான கவிஞர். இசைவடிவம் பொருந்திய பாடல்களாக அவர் படைப்புகள் அமைந்தன. ஊரே மதித்துப் போற்றத்தக்கவண்ணம் வாழ்ந்துவந்த நகைவணிகரான அவர் ஒரேகணத்தில் எல்லாவற்றையும்
உதறிவிட்டு நாடோடியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த வாழ்க்கைதான் அவரைக் கவிஞராக மாற்றியது. வைணவச் சிந்தனைகளைக் கொண்ட பாடல்கள் என்றாலும் அவை மானுடம் தழுவிய பாடல்கள். போலி வேஷத்தோடு ஒதுங்கி நிற்க ஒரு நல்ல இடமாகப் பக்தியை நினைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவர் செய்யும் ஏளனங்கள் கடுமையானவை. தன்னோடு அக்கம்பக்கத்தில்
வாழ்பவர்களின் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுத்து கோயிலுக்குள் ஓடோடிவருகிற பக்தர்களைப் பார்த்தாலும் அவருக்குச் சிரிப்புதான் வருகிறது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே இருந்தார். அன்றைய இரவு உணவை நாங்கள் இருவரும் சேர்ந்து உண்டோம். எனக்கு எழுந்து இருப்பிடத்துக்குச் செல்லவே மனமில்லை. பல ஐயங்களைக் கேட்டபடி இருந்தேன். ஒரு சிறுவனுக்குச் சொல்கிறமாதிரி பொறுமையோடு என் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே
வந்தார் அவர். எங்களைத் தவிர பயணியர்கள் அனைவருமே உறங்கப் போய்விட்டார்கள். நான் மெதுவாக அவரிடம் எனக்காக ஒருமுறை மறுபடியும் புரந்தரதாசரின் "அம்பிகா நா நின்ன நம்பிதே....."
பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டேன். அவர் தலையசைத்து அடங்கிய குரலில் அந்தப் பாடலை மறுபடியும் பாடினார். அந்த முறையும் நான் வார்த்தைகளைப் பின்தொடரவில்லை. தாளத்தைமட்டுமே
பின்தொடர்ந்தேன். என் நெஞ்சம் குழைந்து உருகத் தொடங்கியது. கண்களை மூடி அக்குரலை எனக்குள் நிரப்பிக்கொண்டேன். பாடி முடித்ததும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு படுக்கச் சென்றுவிட்டேன். என் மனம் ஆனந்த நிறைவில் தளும்பியது. எப்போது து¡ங்கினேன் என்று அறியாமலேயே ஏதோ ஒரு கணத்தில் என் கண்கள் தூக்கத்தில் அமிழ்ந்தன.
விடிந்ததும் அந்த முதியவரைத் தேடினேன். என் கண்களில் தென்படவில்லை. வேறு ஏதாவது ஒரு பெட்டிக்குச் சென்றிருக்கக்கூடும், இன்னும் சில கணங்களுக்குள் வந்துவிடக்கூடும் என்றுதான் நினைத்திருந்தேன். வெகுநேரத்துக்குப் பிறகும் அவர் வரவே இல்லை. பல இடங்களில் வண்டி நின்றுநின்று பயணத்தைத் தொடர்ந்தது. அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ வண்டி நின்ற ஏதோ ஒரு ஊரில் அவர் இறங்கியிருக்கலாம்
என்று தோன்றியது. இரவில் எனக்குள் பொங்கிய பரவசநிலையில் அவருடைய ஊர் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லையே என்று வருத்தமாக இருந்தது.
சில மாதங்களுக்குப்
பிறகு அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஒரு சின்னக் கலைநிகழ்ச்சியில் மீண்டும் அந்தப் புரந்தரதாசரின்
பாடலைக் கேட்கும் வாய்ப்பு தானாக ஏற்பட்டது. நடுத்தரவயதுப் பெண் ஒருவர் உருக்கமாக அந்தப் பாடலைப் பாடினார். அக்கணம் ஏதேதோ எண்ணங்களை எழுப்ப அந்தப் பாடலை மனம்பறிகொடுத்துக்
கேட்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் நான் அவரை நெருங்கி அந்தப் பாடலை ஒரு தாளில் எழுதித் தருமாறு கேட்டேன். சிரித்துக்கொண்டே அவர் ஒரு சில மணத்துளிகளில் எழுதிக்கொடுத்தார்.
நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் கலைந்து சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அக்கூடத்தில் தனிமையில் உட்கார்ந்தேன். வேறொரு தாளை எடுத்து அந்தப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கன்னடத்தில் பயன்படுத்திய அதே தாளத்தைத் தமிழ்வரிகளுக்குப் பயன்படுத்துவது
சிரமம் என்பதை முதல் வரியிலேயே புரிந்துகொண்டேன். எதுகை, மோனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கும்
பாடலை, அதே தாளத்தில் பாடவேண்டும் என்ற நோக்கத்துக்காக
மாற்றிக் கட்டமைப்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. அந்த வடிவத்தைமட்டுமே தக்கவைத்துக் கொண்டால் போதும் என்று நினைத்துக்கொண்டேன்.
தோணிக்காரா, நான் உன்னை நம்பினேன்-
அகிலநாயகிமணாளனே, உன்னை நம்பினேன்.....
தோணி நிறைந்துள்ளது தோணிக்காரா- அதில்
ஒன்பது ஓட்டைகள் பார் தோணிக்காரா
உற்சாகம் மிகவே தோணிக்காரா- அதன்
இன்பமுணர்ந்து செலுத்து தோணிக்காரா..........
ஆற்றின் போக்கைப் பார் தோணிக்காரா-அது
இழுக்கும் வேகம் மிகஅதிகம் தோணிக்காரா
சுழலில் மூழ்கிவிடாதே தோணிக்காரா- என்னை
நீயே அழைத்துச் செல்லய்யா தோணிக்காரா.......
ஆறு அலைகள் பார் தோணிக்காரா- அவை
சீறி வருகின்றன தோணிக்காரா
யாராலும் முடியாது தோணிக்காரா- அதை
சமாளித்து ஓட்டிச்செல் தோணிக்காரா.......
பொழுது போய்விட்டதய்யா
தோணிக்காரா- அங்கே
மேலும் ஐந்தாறுபேர் ஏறக்கூடும் தோணிக்காரா
வேகம் கூட்டிச் செலுத்தய்யா தோணிக்காரா- என்னை
சத்திய உலகுக்கு அழைத்துச் செல்லய்யா தோணிக்காரா.....
பக்தியென்பதோர் துடுப்பய்யா தோணிக்காரா- நீ
அவ்வுலக நாட்டத்தை ஏற்படுத்து தோணிக்காரா
முக்திவழங்கும் நம் புரந்தரவிட்டலரின்
முக்திமண்டபத்துக்கு அழைத்துச்செல் தோணிக்காரா.....
மொழிபெயர்த்த பாடலையே மீண்டும்மீண்டும் படித்தபடி இருந்தேன். கன்னடத்தின் இசையையும் தாளக்கட்டையும்
துறந்திருந்தாலும் மன்றாடும் குரல் அந்த வரிகளிலும் ஒலிப்பதையுணர்ந்தேன். என் மனம் முதலில் பாடலில் இடம்பெறும் தோணிக்காரனை இறைவனாகவே நினைத்தது. இறுதிப்பகுதியை அசைபோட்டபோதுதான்
அவர் வேறொருவர் என்பதை அறிந்துகொண்டேன்.
அவர் விட்டலர் அல்லர், விட்டலரின் அருகே அழைத்துச் செல்பவர். புரந்தரதாசர் நம்பிய துவைதக்கொள்கைக்கு
அதுவே ஏற்ற கருத்தாகத் தோன்றியது. தோணிக்காரர் வழிகாட்டி அல்லது குரு. நல்ல குருவே நல்ல வழியைக் காட்டமுடியும்.
வேறொரு சந்தர்ப்பத்தில்
ஒரு நாடகத்தில் புரந்தர தாசரின் வேறொரு பாடலைக் கேட்டேன். போலியாக பக்தியைச் செலுத்துகிறவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்யும் அப்பாடலை அவர்கள் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி ஒரு சமூக விமர்சனப்பாடலாகப்
பயன்படுத்தியிருந்தார்கள். அதுவும் தாளக்கட்டு நிறைந்த பாடல். அன்று இரவு முழுக்க அந்தப் பாடல் மனத்தில் அலைமோதிக்கொண்டே இருந்தது. மறுநாள் நு¡லகத்தில் அப்பாடலைக் கண்டெடுத்து அதை மொழிபெயர்த்தேன்.
எல்லாரும் செய்வதெல்லாம் வயிற்றுக்காக-
ஒருமுழம் துணிக்காக...........
பல்லக்கைச் சுமப்பது வயிற்றுக்காக -பெரிய
மல்லர்களுடன் மோதுவது வயிற்றுக்காக
பொய்பொய்யாய் பேசுவது வயிற்றுக்காக
லட்சுமிமணாளனைத் துதிப்பதுவோ முக்திக்காக.......
சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது வயிற்றுக்காக
யானை,குதிரை ஏறுவது வயிற்றுக்காக
தீச்செயல்கள் புரிவது வயிற்றுக்காக
லட்சுமிமணாளனைத் துதிப்பதுவோ முக்திக்காக.........
மலைமீது ஏறுவது வயிற்றுக்காக
ஓசைபட கூவுவதும் வயிற்றுக்காக
உறுதியாப் பற்றி புரந்தர விட்டலரை
தியானித்தல் என்பதுவோ முக்திக்காக..........
ஒருமுறை வேலையின் நிமித்தமாக வெளியூர்ப்பயணம்
சென்றிருந்தேன். வேலைகளை முடித்துக்கொண்டு
தங்குமிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். களைப்பாக இருந்தது. ஒரு தேநீர் அருந்தலாம் என வழியில் தென்பட்ட ஒரு சின்னத் தேநீர்க்கடையில்
வாகனத்தை நிறுத்திவிட்டுச்
சென்றேன். தேநீருக்குச் சொல்லிவிட்டு காத்திருந்தபோதுதான் கடையில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலைக் கேட்டேன். ஒருவித கேலியின் குரலும் வழிகாட்டும் குரலும் அந்த வரிகளில் பொதிந்திருந்ததை
உணரமுடிந்தது. தேநீரைப் பருகி முடிப்பதற்குள்
இரண்டு பாடல்கள் முடிந்துவிட்டன. நான் லயித்துக் கேட்பதை அறிந்ததும் அருகே தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேறொருவர் அவை புரந்தர தாசரின் பாடல்கள் என்று சொன்னார். அக்கணமே என் ஆவல் பலமடங்காகப் பெருகியது. தேநீர் வழங்கிய உற்சாகத்தைவிட அப்பாடல் வழங்கிய உற்சாகம் என் மனத்தில் நிரம்பத் தொடங்கியது. இன்னொருமுறையும் அப்பாடல்களைக் கேட்பதற்காக இன்னொரு தேநீர் வேண்டுமெனச் சொல்லிவிட்டு உட்கார்ந்தேன். என் விருப்பத்தை கடைக்காரரிடம் சொன்னேன். அவர் மீண்டும் அந்தப் பாடல்களை எனக்காக ஓடவிட்டார். அவர் பார்வை என்மீது விசித்திரமான முறையில் படிந்தது. நான் கண்களை மூடி அந்த வரிகளை மனத்துக்குள் வாங்கினேன். அந்த இசையும் குரலும் தாளமும் என்னை வேறு ஏதோ ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்வதுபோல இருந்தன. பாடல்கள் முடிந்ததும் கடைக்காரர் என்னருகில் வந்து நின்றார். புன்னகையோடு அவரை ஏறிட்டு "இன்னொருமுறை போடமுடியுமா?"
என்று மெதுவாகக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சென்று அதே பாடல்களை மறுபடியும் ஓடவிட்டார். வேகவேகமாக என் கையிலிருந்த குறிப்பேட்டில்
அந்த வரிகளை மொழிபெயர்த்து எழுதத் தொடங்கினேன்.
முதல் பாடல்:
கற்கண்டு வாங்குங்களய்யா-
நீங்களனைவரும்
கற்கண்டு வாங்குங்களய்யா
கற்கண்டின் சுவையை அறிந்தவர்களே அறிவார்கள்
கிருஷ்ணனென்னும் நறுஞ்சுவைப் பெயரின் சுவையை......
எடுத்துவந்து கொடுப்பதுமல்ல, சுமந்துசென்று விற்பதுமல்ல
சாக்குப்பைக்குள் அமுக்கிஅமுக்கி
நிரப்பத்தக்கதுமல்ல
எப்பக்கம் சென்றாலும் சுங்கம் செலுத்தத்தக்கதுமல்ல
பத்துப்பதினைந்தாயிரம் என விலைகட்டத்தக்கதுமல்ல.........
நஷ்டம் வருவதுமில்லை வீணாக அழிவதுமில்லை
கட்டிவைத்தாலும் பாழாயப் போவதுமில்லை
எத்தனைநாள் வைத்திருந்தாலும்
கெட்டுப்போவதுமில்லை
பட்டணத்தில் அதன்மூலம் ஆதாயம் மட்டுமுண்டு......
சந்தைக்குச் சென்று சிரமத்துக்கு ஆளாக்குவதில்லை
எவ்வகையிலும் விற்பனையென்பது
சாத்தியமில்லை
ஆனந்த புரந்தர விட்டரின் பெயரை
எவ்வகையில் நினைப்பினும் பாவத்துக்குப் பரிகாரமாகும்......
இரண்டாவது பாடல்:
வயிற்றுக்கான வேஷம் இது- நம்
பத்மநாபன்மீது சிறிதளவும் பக்தியில்லை...........
கருக்கலில் எழுந்து கடகடவென நடுங்கியபடி
ஆற்றிலிறங்கிக் குளித்தேனென பெருமிதமடைவதும்
வெறுப்பு வன்மம் சீற்றமெல்லாம் நெஞ்சில் நிறைந்திருக்க
பார்ப்பவர்களுக்கு வியப்பூட்டும்வண்ணம் காட்சியளிப்பது........
கையில் ஜபமாலை வாய்நிறைய மந்திரங்கள்
உச்சந்தலை மறைக்க போர்த்திய ஆடை
அடுத்தவன் மனைவயின் வடிவழகை உள்ளிருத்தி
பற்றற்றவனாகக் காட்டிக்கொள்வது.........
வெண்கலப் பாத்திரங்கள் நிறைந்த கடையில்
வெண்கலச் சிலைகளை எங்கெங்கும் நிரப்பி
ஒளிரவேண்டுமென கணக்கற்ற தீபங்களை ஏற்றி
வஞ்சத் திட்டமுடன் பூசையைச் செய்வது..........
இறுதிப்பகுதியில் இடம்பெற்ற காட்சியை என்னால் மிக எளிதாக மனத்துக்குள் எழுதிப்பார்க்கமுடிந்தது. பக்தி ஒரு காட்சிப் பொருளாகவும் ஒரு முதலீடாக அதை மாற்றும் தந்திரமாகவும் மாற்றமடையும் அவலம் அவருடைய காலத்திலும் இருந்திருக்கும் போலும். அந்த அவலம் புரந்தரதாசருக்குள் எழுப்பிய வேதனையைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அப்படிப்பட்ட அவலம் பலமடங்காகப் பெருகி வளர்ந்து நிறைந்துவிட்ட இன்றைய சூழலுக்கு ஆறு நு¡ற்றாண்டுகள் முன்னால் எழுதிய தாசரின் வரிகள் எவ்வளவு பொருத்தமாக உள்ளன என்பதை வேதனையோடு நினைத்துக்கொண்டேன்.