Home

Tuesday, 13 October 2015

சந்திப்பு

பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது. அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங்கின் முன்னால் சந்தித்துக்கொள்ளும். அந்தப் பாதைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தால் ஏறத்தாழ ஒரு முக்கோணத்தைப்போல இருக்கும். சென்னைச்சாலையிலிருந்து நினைத்த பாதையில் வாகனங்கள் பிரிந்து நினைத்த திசையில் பறந்துபோகும். சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் வசதிகள் அதிகமாக உள்ள இடம்தான் நாளடைவில்  நெரிசலில் பிதுங்கிக் குழம்பித் தடுமாறும் இடமாக மாறும் என்ற எழுதாத விதிக்கு ஆதர்ஷா சாலைகளும் ஒருநாள் பலியாகின. உடனடியாக அக்கிளைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டன.

ஒரு கிளைப்பாதையின் வழியாக வரும் வாகனங்கள் பயணிகளை ஆதர்ஷா திரையரங்கின் அருகே இறக்கிவிட்டு மற்றொரு கிளைப்பாதைவழியாக புறப்பட்டுப் போகத் தொடங்கின.           ஒருசில வாரங்கள்வரை இந்த மாற்றத்தால் ஏதோ பயன் விளைந்ததைப்போன்ற தோற்றமே இருந்தது. அந்த மாற்றம் நிலைக்காமல் போனதுதான் துரதிருஷ்டம்.  மறுபடியும் தொடர்ந்த வாகனநெரிசல் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகமானது. ஆதர்ஷா சந்திப்பில் பேருந்துகள் நிற்கும்போதெல்லாம் அதற்குப் பின்னால் மடமடவென ஐம்பது அறுபது வாகனங்கள் வரிசையில் தேங்கிவிடும். விடாமல் அடிக்கப்படும் ஒலியெழுப்பிகளின் கடுமையான ஓசை பெருங்கூட்டமொன்று கோஷமெழுப்புவதைப்போல இருக்கும். தலைமீது சம்மட்டி அடிகளாக விழும் அந்த ஓசையைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. மொழிமறந்தவர்களின் அலறல்களைப்போல இருக்கும் அந்த ஓசை.
நெரிசலிலிருந்து தப்பிக்க சில பேருந்துஓட்டிகள் தற்செயலாக ஒரு தந்திரத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். கிளைப்பாதையில் இறங்காமல் பிரதான சாலையிலேயே ஓரமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுப் போவதுதான் அந்தத் தந்திரம். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது. முணுமுணுப்புகள், வாய்ச்சண்டைகள், மோதல்கள்  என எதன்வழியாகவும் அவர்கள் முடிவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பைப்போல இந்த உலகில் மாற்றமுடியாத இன்னொரு விஷயம் பேருந்துஓட்டிகளின் முடிவு.
நெரிசல் மிகுதியான ஒரு நாளில் ஒரு பேருந்திலிருந்து நான் இறக்கிவிடப்பட்டேன். வாகனப்புகையின் கடுமை எல்லாத் திசைகளிலும் சூழ்ந்திருந்தது. மெதுவாக சாலையைக் கடந்து கிளைப்பாதையில் நடக்கத் தொடங்கினேன். பலரும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தார்கள். தற்செயலாக என் பார்வை தடுமாறித்தடுமாறி நடந்த ஒரு அம்மாவின்மீது படிந்தது. கிட்டத்தட்ட என் அம்மாவின் வயதுதான் இருக்கும். நெஞ்சைக் கையால் அழுத்தியபடி வேகவேகமாக மூச்சை இழுத்தார் . குனியமுடியாதபடி கழுத்தை அண்ணாந்தவாக்கில் வாயால் சுவாசித்தார். அவருக்கருகே இரண்டு பைகள் இருந்தன.  அந்தத் தோற்றம் ஏதோ ஒரு கலவர உணர்ச்சியை எனக்குள் எழுப்பியது. வேகமாக அருகில் சென்று விசாரித்தேன். உடனடியாக அவரால் எந்தப் பதிலையும் சொல்ல இயலவில்லை. இயல்பான நிலைக்கு மூச்சு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அதற்குள் அவர் உடல் வேர்வையில் நனைந்து தெப்பமாகிவிட்டது.
"பாவிப்பசங்க சொல்லச்சொல்ல இங்கயே எறக்கிட்டானுங்கப்பா. எங்கயோ இருக்கற ஸ்டாப்புக்கு இங்கயே எறக்கிட்டு போ போன்னா நடந்து போவறதுக்கு நாம என்ன சின்னப் பொண்ணா? நம்ம கைகாலு உறுதியாவா இருக்குது?"
அவர் அடங்கிய குரலில் ஆற்றாமையோடு சொன்னார். நாலு வார்த்தைகள் பேசுவதற்குள் இருமல் வந்துவிட்டது. இடைவிடாத இருமல். என் தோள்பையில் இருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்தேன். பருகிமுடித்த பிறகுதான் அவர் முகம் தெளிவானது.
இயல்பான நிலைக்குத் திரும்பியபிறகு தன்னைப்பற்றிய விவரங்களைச் சொன்னார் அவர். பெயர் குப்பம்மாள். ஜோக்பாளையத்தில் வாசம். அல்சூரில் இருந்த பள்ளிக்கூடமொன்றில் அந்தக் காலத்தில் காவலராகப் பணியாற்றி ஓய்வடைந்தவர் குப்பம்மாளின் கணவர். இப்போது உயிருடன் இல்லை. குப்பம்மாளுக்கு சர்க்கரைநோய், ஆஸ்துமா. அதிக ரத்த அழுத்தம் என எல்லாமே இருக்கின்றன. வேளை தவறாமல் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்பது மருத்துவர் அறிவுரை. மாதாமாதம் வரும் ஓய்வுப்பணத்தில் செலவுகளைச் சமாளிக்கமுடியவில்லை. காலையில் இரண்டு வீடுகளிலும் மாலையில் இரண்டு வீடுகளிலும் பாத்திரம் கழுவி துணிதுவைத்துக்கொடுக்கிறார். வீட்டுவாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை எப்படியோ சமாளிக்கிறார். எவ்வளவு உடல்சிரமம் என்றாலும் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கு வேலைசெய்யச் சென்றுவிடுவார். நேரம்தவறாமைதான் அவருக்குத் தொடர்ந்து வேலைகள் கிடைப்பதற்கான காரணம்.
குப்பம்மாளின் மூத்தமகளை ஊத்தங்கரைப்பக்கம் கொடுத்திருக்கிறார். இரண்டாவது மகள் கண்டோன்மென்ட் பக்கத்தில் வசிக்கிறாள். திருமணம் நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பிள்ளை பெற்றிருக்கிறாள் அவள். அழைத்துவந்து வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க வசதியில்லை. வீட்டுவேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு வேகவேகமாக பேருந்துபிடித்து மகள் வீட்டுக்குச் செல்கிறாள். முடிந்த அளவு அந்த வீட்டு வேலைகளிலும் உதவி செய்கிறாள்.  மகளுடைய துணிகளையும் குழந்தையுடைய துணிகளையும் துவைத்துத் தருகிறாள். கொஞ்ச நேரம் பேரப்பிள்ளையைத் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சுகிறாள். ஒரு பிஞ்சுக் குழந்தையை கைகளால் ஏந்தி மார்போடு அணைத்துக்கொள்ளும் தருணம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்.  மாலை நெருங்கும் வேளையில் மறுபடியும் வண்டிபிடித்து வீட்டுக்கு ஓடிவந்துவிடுகிறாள்.
தன்னோடேயே இருந்து அம்மா  தனக்கு உதவி செய்யவில்லை என்பதில் மகளுக்கு மனவருத்தம் அதிகம். குப்பம்மாளுக்கும் வருத்தம் இருக்கிறது. "அவ கஷ்டத்த அவ சொல்றா? நம்ம கஷ்டத்த எந்த தெய்வத்துகிட்ட சொல்றது?"  சொல்லும்போது அவரிடமிருந்து கசப்பான சிரிப்பு வெளிப்படுகிறது.
"ஆஸ்துமாத் தொல்லையால மூச்சுவிடறதே பெருங்கஷ்டமா போயிடுச்சி. இந்த லட்சணத்துல இந்தப் பொக நாத்தம் உள்ள போனா உயிரே போனமாதிரிதான். இருமிஇருமி கொடலே வெளிய வந்துரும்."
அவர் பைகளை நானே எடுத்துக்கொண்டேன். அவர் பக்கத்திலேயே மெதுவாக நடந்துவந்தார். நான் இலட்சுமிபுரத்தில் வசிப்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவருக்கு ஏழெட்டுத் தெரு தள்ளித்தான் எங்கள் வீடு இருக்கிறது என்பதை அறிந்து ஏதோ காரணம் புரியாத சந்தோஷத்தை அவர் முகம் புலப்படுத்தியது.
"நான் கல்யாணம் கட்டிகிட்டு இங்க வரும்போது இந்த இடமெல்லாம் ஒரே காடுதான் தம்பி. எங்க பாரு ஒரே பலாமரமா இருக்கும். சாயங்காலமானாவே இந்தப் பக்கம் வர பயமா இருக்கும். ரெண்டு நூறு ரூபா இருந்தா அந்த காலத்துல லட்சுமிபுரத்துல ஊடு வாங்கிரலாம். அப்பிடி இருந்திச்சி காலம். எங்க ஊட்டுக்காரனுக்கு ஒரே பயம். இந்தக் காட்டுல புள்ளகுட்டிய வச்சிகிட்டு எப்பிடிடி இருக்கறதுன்னு வேணாம்னுட்டாரு. இங்கயும் வாங்கல. அப்பறம் எங்கயும் வாங்கல. அப்படியே பேசிப்பேசியே அவர் காலம் போயிடுச்சி. இம்சய அனுபவிக்கறது யாரு? நாமதான். ஒரே ஒரு ரூமுதான் நாங்க இருக்கற ஊடு. மாசம் பொறந்த சொளயா எட்டு  நூறு வச்சாவணும்."
ஆற்றாமையில் அவர் குரல் தளர்ந்தது. அமைதியாக நடந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு என் பக்கம் திரும்பி "சொந்த வீடுதானே உங்களுக்கு?"  என்று கேட்டார். புன்னகையோடு "வாடகை வீடுதாம்மா" என்றபோது அவர் நாக்கு சப்புகொட்டினார். அப்புறம் மெதுவாக "எத்தன வருஷமா இங்க இருக்கிங்க?" என்று கேட்டார். "அது இருக்கும்மா, பதினாறு பதினேழு வருஷம்" என்றேன். "என்ன தம்பி, இவ்வளவு காலமாவா சும்மா இருந்த? உலகம் புரியாத ஆளா இருக்கியேப்பா?"  என்று வருத்தம் தொனிக்கும் குரலில் ஆதங்கப்பட்டார். "என்ன செய்றதும்மா? ஜான் ஏறனா முழம் சறுக்கற மாதிரி இருக்குது வாழ்க்கை? தலைக்குமேல நூறு நெருக்கடிங்க நமக்கு. அதை கவனிக்கறதா, இதை கவனிக்கறதா சொல்லுங்க?"  என்ற என் பதிலைக் கேட்டு அவர் எதுவும் சொல்லவில்லை. சிறிதுநேரம் பேசாமல் இருந்தார். "சீக்கிரமா பாத்து சின்னதாவாவது ஒரு வீடு பண்ணிக்கணும்பா. வாடகை வீட்டுல இருக்கற மாதிரி ஒரு பெரிய நரகம் வேற ஒன்னுமே இல்ல"  என்று பொதுவாகச் சொன்னார்.
அவர் குறிப்பிட்ட கோயில் சந்து வந்தது. குறுகலான தெரு. பக்கவாட்டில் கழிவுவாய்க்கால் ஓடியது. இன்னொரு பக்கத்தில் பிள்ளைகள் கூச்சலோடு ஆடிக்கொண்டிருந்தார்கள். பத்து பதினைந்து வீடுகளைக் கடந்தபிறகு குப்பம்மாள் ஒரு வீட்டின்முன் நின்றார். உண்மையில் அது வீடு அல்ல. ஏராளமான வத்திப்பெட்டிகளை வரிசையாக அடுக்கியதைப்போல ஒற்றையறை வீடுகளின் தொகுப்பு. ஓரமாக ஒரு பொதுக்கிணறு இருந்தது. அருகில் நிறைய பெண்கள் நின்று துணிதுவைத்தார்கள். சிலர் குளித்தார்கள். சிலர் பாத்திரங்கள் கழுவினார்கள். சிலர் கதைபேசிக்கொண்டிருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்ட துணிக்கொடிகளில் ஈரத்துணிகள் உலர்ந்துகொண்டிருந்தன. யாருடைய உலகத்திலும் யாரும் இல்லை. அதே சமயத்தில் ஒவ்வொருவருடைய உலகத்திலும் ஒவ்வொருவரும் நுட்பமாகவும் மெளனமாவும் இடம்பெற்றிருந்தார்கள்.
ஆறேழு கதவுகளைக் கடந்த பிறகு பூட்டியிருந்த ஒரு கதவின்முன் நின்றார் குப்பம்மாள்.  முந்தானையின் முடிச்சிலிருந்து திறவுகோலை எடுப்பதில் அவர் ஈடுபட்டிருந்த சில கணங்களில் வீட்டுக்குள்ளிருந்து வகைப்படுத்தமுடியாத விசித்திரமான ஒரு முணகல் ஒலி வருவதைக் கேட்டேன். ஏதாவது வளர்ப்பு மிருகமாக இருக்குமோ என்று தோன்றியது. அப்படியே இருந்தாலும் அதை உள்ளே வைத்து பூட்டிக்கொண்டு வரவேண்டிய அவசியமென்ன என்றும் கேள்வி எழுந்தது. என் கேள்விகள் வளர்வதற்குள் குப்பம்மாள் கதவைத் திறந்துவிட்டார். வெளிச்சம் உள்ளே பாய்ந்த கணத்தில் விசித்திர முணகல் அலறலாக உயர்ந்தது. இருளையும் வெளிச்சத்தையும் பிரித்தறியமுடியாத குழப்பத்தில் கண்கள் தடுமாறிய அத்தருணத்தில் என் நெஞ்சம் அளவற்ற பீதியால் நிரம்பியது. ஒருவித மலநாற்றம் முகத்தில் அறைந்தது. அங்கிருந்து சட்டென நகர்ந்துவிடவேண்டும் என்று கால்கள் பரபரத்தன. இடைவிடாத அலறலொலியால் அடிவயிறு நடுங்கியது. ஆனாலும் நகரவிடாமல் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது. பைகளைக் கீழே வைத்தேன். அறையின் சூழல் கண்ணுக்குப் பழகியதும் அந்த அலறலுக்குரிய மனிதனைப் பார்த்தேன். இளைஞன்தான். கால்களும் கைகளும் கட்டப்பட்டிருந்தன. அவனைச்சுற்றித்தான் மலமும் சிறுநீரும் கரைந்துகிடந்தன. அவன் குப்பம்மாளைப் பார்த்து மொழியற்ற ஒரு மொழியில் கதறினான். அழுகையோடு எதையோ சொல்லி முன்வைத்தான்.
குப்பம்மாள் வேகமாக அவனருகில் சென்றார். "இருடா இருடா" என்று அவன் தலையைத் தடவினார். அவன் விலங்கைப்போல வாயைத் திறந்து அவளைக் கடிப்பதற்கு தலையைத் திருப்பினான்.  "கோபத்த பாரு தொரைக்கு. பக்கத்திலயே இருந்தா கெடக்கற வேலையையெல்லாம் யாருடா பாக்கறது?"  என்று செல்லமாக அவன் தலையில் தட்டினார். அவன் குரலின் தொனியே திடீரென மாறிவிட்டதைப்போல இருந்தது.
அக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கமுடியாதபடி மனம் ஒருவித தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் தவித்தது. பார்வையைத் திருப்பி கிளம்பிச் செல்வதைப் புலப்படுத்தும் வகையில் சற்றே செருமினேன்.
"ஐயோ தப்பா எடுத்துக்காத தம்பி. இவன பாத்ததுமே ஒரு நிமிஷம் எல்லாமே மறந்துபோச்சி. பெத்த புள்ள மாதிரி இவ்வளவு து¡ரம் இந்தப் பைங்கள து¡க்கியாந்து கொடுத்திருக்க. ஒனக்கு குடிக்கறதுக்குக் குடுக்க ஒரு வாய் டீ கூட இந்த பாவி வீட்டுல இல்லயேப்பா" குப்பம்மாள் மன்னிப்பை யாசிப்பதைப்போல சொன்னார்.
"இருக்கட்டும்மா, இன்னொரு நாளைக்குப் பாக்கலாம். வரட்டுங்களா?"
நான் புறப்படத் தயாரானேன். என் உடலில் சின்ன நடுக்கம் பரவியது.
"என் புள்ளதான். பொறந்ததிலிருந்தே புத்திவளர்ச்சி இல்லாம போயிடுச்சி. வெளியில கெளம்பற ஒவ்வொரு தடவயும் கட்டிப் போட்டுட்டு பூட்டிட்டுதான் போவவேண்டிதா இருக்குது. இதுக்கே அக்கம்பக்கத்துக்காரங்க ஒரே சத்தம். திட்டு. இப்படி ஒரு புள்ளய குடுத்து சோதிக்கற கடவுள என்னன்னு சொல்லறது?"
என்னால் தொடர்ந்து அச்சூழலில் அவரோடு உரையாடமுடியவில்லை. "சரிம்மா, அப்பறமா பாக்கலாம்.." என்று சொன்னபடி வெளியே வந்துவிட்டேன்.
"எனக்கு முன்னால நீ போயிடணும்டா. வாரிப் போட்டுட்டு நிம்மதியா போயிடுவேன். வேற எதுவும் வேணாம், அந்த சாமி எனக்கு இந்த ஒரு வரத்த குடுத்தா போதும்."
அவர் குரல் நான் வெளியேறும் கணத்தில் என் காதில் விழுந்தது.  அந்தக் குடியிருப்பையும் தெருவையும் அவசரமாகக் கடந்த பிறகுதான் என்னால் நிதானமாக மூச்சுவிடமுடிந்தது. தொடர்ந்து என்னால் நடக்கமுடியாதுபோல இருந்தது. அருகில் தென்பட்ட ஒரு தேநீர்க்கடைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டேன். சூடான தேநீரின் மிடறுகள் உள்ளே இறங்கிய பிறகுதான் சற்றே ஆசுவாசமாக உணரமுடிந்தது.
இதற்கும் முன்னால் சந்தித்த அல்லது பார்க்கநேர்ந்த மனச்சமநிலை பிறழ்ந்தவர்களைப்பற்றிய நினைவுகளை அசைபோட்டது மனம். ஒருசிலரோடு பேசிய அனுபவமும் இருந்தது. அதுகூட ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் அன்று நான் கண்ட கோலத்தில் யாரையும் எப்போதும் பார்த்ததில்லை. என்னை உள்ளூர பீதிக்குள்ளாக்கியது, மொழியால் வகுக்கமுடியாத அந்தக் குரலா அல்லது அந்த அசுத்தமான தோற்றமா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அளவு நடுக்கத்தை என் மனம் அதற்கு முன்னர் எப்போதும் உணர்ந்ததே இல்லை என்பதுமட்டும் உண்மை. என் மனம் சமநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அதே கணத்தில் என்னை நானே அருவருப்பாகவும் உணர்ந்தேன். அவன் எத்தகையவனாக இருந்தாலும், அவனைக் கண்டதும் அப்படி ஒரு உணர்வை நான் அடைந்திருக்கக்கூடாது என்று தோன்றியது. என் படிப்பும் அனுபவமும் பழக்கவழக்கமும் அக்கணத்தில் ஏன் எனக்குத் துணையாக இருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு மனிதனைக் கண்டு நடுங்கும் அளவுக்கு என்னை எது கோழையாக்கியது என்கிற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. ஒரேஒரு கணம் அருகில் நிற்க நேர்ந்ததற்கே என் மனம் இப்படி உணர்கிறதென்றால் காலம் முழுக்க இதைச் சகித்துக்கொண்டு அருகிலேயே நின்று சேவைகளைச் செய்கிற குப்பம்மாளின் மனமும் இப்படி உணர்ந்திருக்கத்தானே வேண்டும். ஆனால் அந்த உணர்வுகளையெல்லாம் அவர் விலக்கிவிட்டு இயல்பாக இருப்பதற்குக் காரணம் அவருடைய தாய்மைதானா? கேள்விகள் ஒன்றையடுத்து ஒன்றாக என் முன் எழுந்தபடி இருந்தன. திடீரென குப்பம்மாளை மறுபடியும் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அன்று அதற்கான தைரியம் கொஞ்சமும் இல்லை. பேசாமல் வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன்.
ஜோக்பாளையத்துப் பக்கமாக செல்லும்போதெல்லாம் குப்பம்மாளின் நினைவும் அவர் மகனுடைய குரலும் மனத்திலெழும். ஒரு கணம் சென்று பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றும். குறுக்குத் தெருவுக்குள் புகுந்து அந்தக் குடியிருப்புவரைக்கும்கூட பலமுறைகள் சென்றதுண்டு. அன்று நான் கேட்ட ஓசை மீண்டும் கேட்கிறதா என்று தெருவில் நின்றபடி காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டபடி நின்றதுண்டு. சட்டென்று கதவைத் திறந்துகொண்டு குப்பம்மாளிடம் ஒரே ஒரு வார்த்தை பேசினால் கூட அவருக்கு அது பெரிய நிம்மதியைத் தரும் என்று சொல்லிக்கொள்வேன். ஆனால் செல்லத்தான் மனம் இடம் தந்ததில்லை. தேநீர்க்கடைக்குள் சென்று ஒரு கோப்பை தேநீரை வாங்கிச் சுவைத்தபடி அந்தக் குடியிருப்பின்பக்கம் பார்வையைப் பதித்திருந்துவிட்டு திரும்பிவிடுவேன்.
இரண்டு மூன்றாண்டுகளாகவே இந்த ஒத்திகை மனஅளவில் நிகழ்ந்து கொண்டிருந்தது. திடீரென மனஎழுச்சி மிகுந்த ஒருநாள் மாலையில் அந்தக் குடியிருப்புக்குள் சென்றேன். குப்பம்மாளைப் பார்த்துப் பேச அன்று எந்தத் தடையும் மனத்தில் எழவில்லை.  கதவுகளை எண்ணிக்கொண்டே சென்றதில் குழப்பமாக இருந்தது. குப்பம்மாளின் வீடு எது என்பதை என்னால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தயங்கித்தயங்கி நிற்கும் என்னைப் பார்த்து அருகில்  துணிதுவைத்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண் அதட்டும் குரலில் "என்ன வேணும்? யாரப் பாக்கணும்?" என்றாள்.
"இங்க குப்பம்மான்னு ஒருத்தவங்க இருந்தாங்களே? வீட்டு வேலைங்கள்ளாம்கூட செய்வாங்களே? அவுங்க வீடு..?"
"அப்படியெல்லாம் யாரும் இங்க இல்லயே" நான் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே அந்தப் பெண் வேகமாகப் பதில் சொன்னாள். அவள் பார்வையில் ஒருவித நம்பிக்கையின்மையும் சந்தேகமும் தெரிந்தன.
அவளுக்கு விளக்கிச் சொல்லும்வகையில் "இல்ல, நான்கூட ஒருதரம் அவுங்ககூட வந்திருக்கேன். இங்கதான் இருந்தாங்க. எந்த போர்ஷன்ங்கறதுதான் ஞாபகமில்லை. இதுவா அதுவான்னு தெரியலை..." நான் விரலால் சுட்டிக்காட்டிச் சொன்னேன்.
"அப்படியெல்லாம் யாரும் இங்க இல்லைன்னு சொல்றனே புரியலையா?" அவள் மறுபடியும் சூடாகவே பேசினாள்.
"அவுங்களுக்குக்கூட மனசு சரியில்லாத ஒரு புள்ள இருந்திச்சி. பூட்டிவச்சிட்டுதான் வேலைக்கெல்லாம் போவாங்க" இதை ஒரு அடையாளமாகச் சொல்லக்கூடாது என்று தொடக்கத்தில் நான் கொண்டிருந்த தீர்மானத்தை அவசரத்துக்காக சற்றே நெகிழ்த்துக்கொள்ளவேண்டியதாக இருந்தது. அந்தத் தகவல் உடனடியாக வேலை செய்தது. இதுவரை நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்ததைப்போல உள்ளேயிருந்து ஒருவர் வெளிப்பட்டார்.
"அவுங்க ஒரு வருஷத்துக்கு முன்னாலயே காலி பண்ணிட்டு போயிட்டாங்களே."
"எங்க போனாங்க?"
"தெரியாது."
தலையசைத்துக்கொண்டே நான் தற்செயலாக அந்தக் கதவின்பக்கம் திரும்பினேன். ஏதோ ஒரு முணகலோசை  உள்ளிருந்து கேட்பதைப்போல இருந்தது. ஆனால் முதன்முறையாகக் கேட்டபோது மனம் உணர்ந்த அச்சம் அப்போது எழவில்லை.