Home

Tuesday, 22 December 2015

மழைமரம் - கட்டுரை

பெங்களூருக்கு நான் குடிவந்த நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த மரங்கள். ஒரு மாபெரும் தோப்புக்கு இடையே உருவான ஊராக இதை நினைத்துக்கொள்வேன். மரங்கள் இல்லாத தெருவே இருக்கமுடியாது. எத்தனை கடுமையான கோடையாக இருப்பினும் அதன் கடுமையை சற்றும் உணராத வகையில் இம்மரங்கள் காப்பாற்றின. கோடைச் சூரியனின்  ஒளிக்கற்றைகள் பூமியை நேரிடையாக தொட்டுவிடாதபடி எல்லா மரங்களும் தம் கைகளால் முதலில் அவற்றை வாங்கிக்கொள்ளும்.  அவற்றின் விரல்களிலிருந்து கசிகிற வெப்பம்மட்டுமே மெதுவாக நிலத்தைத் தொடும். அந்த வெப்பம் உடலுக்கு இதமாக இருக்கும். வியர்வையைக் கசியவைக்காத வெப்பம். அதெல்லாம் ஒரு காலம். இந்த ஊரை ஒரு பெருநகரமாக மாற்றிவிடத் துடித்த மானுடரின் அவசரம் இன்று எல்லாவற்றையும் சின்னாபின்னமாகச் சிதைத்துவிட்டது. குளிர்காலத்தில்கூட குளிர்ச்சியற்ற காற்று வீசும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மரங்களைப் பார்க்கும் ஆசையை என்னால் எப்போதும் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. கம்பீரமான அதன் தோற்றமும் எல்லாத் திசைகளையும் நோக்கி விரிந்த அதன் கிளைகளும் விதம்விதமான இலைகளும் காய்களும் பூக்களும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது யாரோ ஒரு முப்பாட்டனைப் பார்ப்பதைப்போலத் தோன்றும். எல்லாமே எப்போதோ தோன்றி வளர்ந்தவை. எனக்குப் பின்னாலும் உயிர்த்திருக்கும் வாழ்க்கை அமைப்பை உடையவை.  அதன் நீண்ட ஆயுளின் முன்னால் மானுட ஆயுள் அற்பமானதாகும். எல்லாம் தனக்காக என்று மார்தட்டுகிற மானுட அகங்காரம் அவற்றின்முன் மெளனமாக கரைந்துபோகும்.
தொட்ட ஆலதமர ஒன்று இருக்கிறது, பார்க்க வருகிறீர்களா?” என்று நண்பரொருவர் ஒருமுறை கேட்டார். உடனே அவர் வகுத்த திட்டத்துக்கு உடன்பட்டேன் நான். ஆனால் திட்டமிட்டபடி அவரால் கிளம்பமுடியவில்லை. வேறு ஏதோ வேலை வந்து அவரைத் தடுத்துவிட்டது. ஆனால் என்னால் ஆசையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. பேருந்து விவரங்கள் தெரிந்துகொண்டு புறப்பட்டுவிட்டேன். நகருக்கு வெளியே தள்ளியிருந்தது அந்த இடம். பேருந்திலிருந்து இறங்கி நான்கு மைல்கள் நடக்கும்படி நேர்ந்தது. ஆசையின் வலிமைதான் என்னை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது என்று சொல்லவேண்டும்.
மிகப்பெரிய ஆலமரம் அது. ஏறத்தாழ அடையாறு ஆலமரம்போல. தாய்மரம் நடுவில் நிற்கிறது. மரங்களாகிவிட்ட விழுதுகள் அதைச்சுற்றி இருபது, இருபத்தைந்தாவது இருக்கும். மரங்களாகத் தொடங்கிவிட்ட அவற்றின் விழுதுகள் இன்னொரு வட்டமாக விரிந்து போகிறது. ஒவ்வொரு விழுதாக தொட்டுத்தொட்டுப் பார்த்துப் பரவசம் கொண்டேன். எங்கள் கிராமத்து ரயில்வே ஸ்டேஷனையொட்டி வானைநோக்கி கம்பீரமாக நிற்கிற ஆலமரத்தை நினைத்துக்கொண்டேன். அவற்றின் விழுதுகளைப் பிடித்து ஊஞ்சலாடியதையும் நினைத்துக்கொண்டேன். அந்த நினைவின் மிதந்தபடி விழுதைப் பற்றி சிறிதுநேரம் ஊஞ்சலாடினேன். மனம் அளவற்ற இன்பத்தில் மூழ்கியது.  சாயங்காலம்வரை அந்த மரத்தையே சுற்றிச்சுற்றி வந்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டுமொருமுறை அந்த மரத்தைக் காண மனைவியோடும் மகனோடும் சென்றுவந்தேன்.
இந்த ஆலமரத்தைப்பற்றிய பேச்சு வந்தபோது தற்செயலாகக் குறுக்கிட்ட இன்னொரு நண்பர் வித்யாரண்யபுர என்னும் இன்னொரு புறநகரிலும் மிகப்பெரிய ஆலமரமொன்று இருப்பதாகச் சொன்னார். அதுமட்டுமில்லாமல் அந்த நகருக்கு அருகேயுள்ள வேளாண்மைக் கழக ஆய்வு நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய தோப்புக்குள்ளேயும் பல ஆலமரங்கள் இருப்பதாகச் சொன்னார். தன் அதிகாலைநடை என்பது இந்த ஆலமரங்களைச் சுற்றிவருவதுதான் என்றும் குறிப்பிட்டார். அவற்றை உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை முளைவிட்டது. எப்போதாவது ஒரு மாலையில் தன்னோடு அழைத்துச் செல்வதாக சொன்ன நண்பர் ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு சனிக்கிழமை மாலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே பின்னால் உட்காரவைத்துக்கொண்டு அழைத்துச் சென்றார். அவர் சொன்னதில் எள்ளளவும் மிகையில்லை. அழகான ஆலமரங்கள். முறுக்கிக்கொண்டும் நிகுநிகுவென்று நேராகவும் வளைகோடுபோலவும் விதம்விதமாக இறங்குகிற விழுதுகளை இமைக்காமல் பார்த்தவாறே இருக்கலாம் என்று தோன்றியது. எப்போதாவது இப்பகுதி ஒரு வனமாக இருந்திருக்கலாம் என்றும் அந்த வனப்பகுதி ஒரு குருகுலம்போல விளங்கியிருக்கலாம் என்றும் பலவேறு இடங்களிலிருந்து வந்த மாணவர்கள் அங்கே தங்கியிருந்து கல்விகற்றுச் சென்றிருக்கலாம் என்றும் அதனாலேயே அப்பகுதிக்கு வித்யாரண்யபுரம் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டேன். நான் நினைத்ததைச் சொன்னபோது நண்பரும் "இருக்கலாம்.... இருக்கலாம்" என்று தலையை அசைத்துக்கொண்டார். அவருடைய அதிகாலை நடைவழியைக் காட்டியபோது உண்மையிலேயே ஏதோ ஒரு வனத்துக்குள் நடப்பதுபோல உடல் சிலிர்த்தது.
புறப்படும்போது, ”மகாலட்சுமி லே அவுட் பஸ் ஸ்டான்ட் பக்கமா இதேபோல அழகான ஒரு ஆலமரம் இருக்குது பாக்கறிங்களா?” என்று கேட்டார் நண்பர். உடனே ஒப்புக்கொண்டேன் நான். வாகனம் அந்தப் பேருந்து நிறுத்தத்தைநோக்கி ஓடத் தொடங்கியது. தன்னந்தனியாக யாருக்காகவோ காத்திருக்கிற ஒரு முதியவரைப்போல அந்த ஒற்றை ஆலமரம் நின்றிருப்பதைப் பார்த்தபோது நெஞ்சம் கனத்தது.
இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக வேலைபுரியும் நண்பர் தன்னுடைய வளாகத்தில் இருக்கும் விதம்விதமான மரங்களைப்பற்றி தொலைபேசியில் சொன்னபோது அவற்றையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அதுவும் மிகப்பெரிய ஒரு வனம் என்றே சொல்லவேண்டும். வானமே தெரியாத அளவுக்கு விரிவான கிளைகள்கொண்ட உயரமான மரங்கள் ஒரு பந்தலைப்போல அந்த வளாகத்தையே மூடியிருந்தது. அந்த வளாகத்தில் என்னைக் கவர்ந்தவை விதம்விதமாகப் பூத்திருந்த குல்மொஹர் மரங்கள். ஆரஞ்சு நிறத்திலும் கருஞ்சிவப்பு நிறத்திலும் குலுங்கும் அப்பூக்களின் வசீகரம் யாரையும் மெய்மறந்து நிற்கவைத்துவிடும். இதற்கு முன் இப்படிப்பட்ட மரங்களை நான் எங்கேயும் பார்த்ததில்லை. ஊரிலே மகிழமரங்கள் பூத்து பார்த்திருக்கிறேன். மரமல்லி பார்த்திருக்கிறேன். சின்னஞ்சிறியனவாக இருப்பினும் வேப்பம்பூக்கள் பூத்து அடர்ந்திருக்கும்போது அம்மரங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். அந்தப் பூக்களுக்கெல்லாம் இல்லாத ஒரு கவர்ச்சியும் அழகும் மயக்கும் நிறமும் குல்மொஹர் பூக்களில் நிறைந்திருந்தன. ஆனால் அந்தப் பெயர்தான் மனத்தில் இடறிக்கொண்டே இருந்தது. நண்பருக்கும் சொல்லத் தெரியவில்லை. அவர் இன்னொரு நண்பரிடம் அழைத்துச் சென்றார். புன்னகை தவழ ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல அவர் எங்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
குல் என்றால் என்ன தெரியுமா?”
நாங்கள் உதட்டைப் பிதுக்கினோம்.
பூ என்று அர்த்தம். அது ஒரு முன்னொட்டுச்சொல். தமிழில பிச்சிப்பூ, மல்லிகைப்பூ, தாமரைப்பூ என்று சொல்லும்போது பூ என்கிற பொதுச்சொல் பின்னொட்டாக வருகிறமாதிரி, இந்திமொழியிலும் உருது மொழியிலும் குல் என்னும் பொதுச்சொல் முன்னொட்டாக வருகிறது. ரோஜாப்பூவுக்கு குலாபின்னு சொல்வாங்க தெரியுமில்லையா? அதுபோல இது குல்மொஹர். மொஹர்ன்னா தங்க நாணயம். தங்க நாணயம் பளபளக்கிற மாதிரி கோடை வெளிச்சத்தில் இந்தப் பூக்கள் பளபளத்துகிட்டே இருக்கும். அதனாலதான் இந்தப் பெயர். தமிழில் வேணுமின்னா தங்கநாணயப்பூன்னு சொல்லலாம்."
பொருள் புரிந்த கணமே தொலைவில் தெரிந்த அந்த மரத்தை திரும்பிப் பார்த்தேன். உண்மையில் கண்களைக் கூச வைக்கிறமாதிரி தங்கக்காசுகளைப்போல அவை மின்னிக்கொண்டிருந்தன. இந்தப் பூக்களுக்குப் பெயர் சூட்டியவன் நிச்சயம் மிகப்பெரிய ரசிகனாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. என் முகம் மலர்ந்ததைப் பார்த்து நண்பருக்கு உற்சாகம் கிளம்பிவிட்டது. தானாகவே நிறைய விவரங்களைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு விதமாகவும் இதைப்பற்றிச் சொல்வாங்க தெரியுமா?”
அது என்ன?”
மொஹர்னு சொல்றதுக்குப் பதிலா மோர்னு சில பேரு சொல்வாங்க. குல்மோர். மோர்ன்னா மயில்னு அர்த்தம். மயில் தன்னுடைய தோகையை விரித்தவாறு நிற்பதைப்போல இந்த மரம் பூத்துக்குலுங்குதுன்னு அர்த்தம்."
அப்படின்னா மயில்தோகைப்பூ. ஆஹா. அதுவும் பொருத்தமாதானே இருக்குது" நான் மீண்டும் ஒருமுறை பூக்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.
இன்னொரு விதமாகவும் இதுக்கொரு பெயர் உண்டு" நண்பர் மறுபடியும் புன்னகைத்தார்.
அது என்ன?”
ஆச்சரியம் தாங்காமல் நாங்கள் கேட்டோம்.
பெந்தெகொஸ்தே மரம்."
அது எப்படி?”
கோடை உச்சிக்கு ஏறியிருக்கிற சமயத்திலதான் இந்த மரம் பூக்கும். மற்ற மரங்களெல்லாம் உலர்ந்து சருகாகி இலைங்களை உதித்துகிட்டிருக்கும்போது இது பிரமாதமா பூத்துகிட்டு நிக்கும். ஈஸ்டர் முடிஞ்ச அம்பதாவது நாள் பெந்தெகொஸ்தேகாரங்க திருவிழா தொடங்கும். அப்பதான் அந்த மரமும் பூக்கும். அவுங்களுக்கும் அந்த மரம் தங்களுக்காக பூக்கிறமாதிரி ஒரு நம்பிக்கை. அதனால பெந்தெகொஸ்தே மரம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க"
ஒரு மரத்துக்கு மூணு பேரா?”
நம்பமுடியாதவனாக நான் கேட்டேன்.
இன்னும்கூட இருக்கலாம். ஊர்மக்கள் ஏதாவது ஒரு பொருத்தம் பார்த்து என்னென்ன பேர் சொல்லறாங்களோ அதுவெல்லாம் ஒரு மரத்துக்கு பேரா மாறிடுது."
மரங்களுக்கு பெயர் அமையும் விதம் எந்த அளவுக்கு சாதாரணமானதோ, அதே அளவுக்கு விசித்திரம் நிறைந்தது என்று தோன்றியது.
பெங்களூரில் காணப்படும் இன்னொரு விசித்திர மரம் மேமலர் மரம். நல்ல கோடையில் அது பூக்கத் தொடங்கும். பச்சைப் பசேலென்ற அதன் இலைகளுக்கு நடுவே சுருள்வடிவான செந்நிறப் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கும். சில நாட்களிலேயே கிளைமுழுக்கப் பரவும். திடீரென ஒருநாள் கிளைமுழுக்க பூக்கள்மட்டுமே இருக்கும். ஒரே ஒரு இலைகூடப் பார்க்கமுடியாது. பூரண அலரங்காரங்களோடு ஒரு தெய்வச்சிலை நிற்பதுபோல அம்மரங்கள் நிற்கும். உத்வேகம் ஊட்டக்கூடிய அந்தத் தோற்றத்திற்கு நெஞ்சைப் பறிகொடுக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. 
தொடக்கத்தில் எங்கள் அலுவலகம் இருந்த சாலையில் நாவல் மரங்கள் அதிகம். தரையெங்கும் நாவல் பழங்கள் சிதறிக் கிடக்கும். எடுத்துத் தின்ன ஆளில்லாமல் மனிதர்களின் காலடி பட்டு நசுங்கி திட்டுத்திட்டாக நீலக்கறை படிந்திருப்பதைப் பார்க்கும்போது எழும் வருத்தத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன். நசுங்காமல் எங்காவது ஒரு மூலையில் உருண்டோடிக் கிடக்கிற நாவல்பழத்தை எடுத்து ஊதிவிட்டு தின்னும்போது என் இளமைக்காலம் மீண்டும் என்னோடு வந்து சேர்ந்துவிட்டதைப்போல இருக்கும்.
மல்லேஸ்வரம் பகுதியில் மரமல்லி மரங்கள் அதிகம். குளிர்காலம் தொடங்கியதுமே அவை பூக்கத் தொடங்கவிடும். காதுகளில் தொங்கட்டான் அணிந்துகொண்டதைப்போல அவை பூத்துத் தொங்கும் கோலம் கண்கொள்ளாக் காட்சி. மனிதர்களுக்கு உதவுவதுபோல அவை கீழே ஒவ்வொன்றாக உதிர்ந்துவிழுவதை நம்பவே முடிவதில்லை. பூக்களுக்குத்தான் மனிதர்கள்மீது எவ்வளவு கருணை என்று நினைத்துக்கொள்வேன். ஒருமுறை மரமல்லி மரத்தடியில் என்னை நிற்கவைத்துவிட்டு கடைக்குச் சென்ற நண்பர் வெகுநேரம் கழித்துவிட்டுத் திரும்பினார். அந்த மலரின் அழகிலும் மணத்திலும் மனம் பறிகொடுத்து நின்றதில் அந்தத் தாமதத்தை நான்  உணரவே இல்லை. ஆனால் அவர் மறுபடியும் மறுபடியும் மன்னிப்பு கேட்டபடி இருந்தார். "மன்னிப்பு வேணாம். இந்த மரமல்லிக்கு நன்றி சொல்லுங்க" என்றபடி கீழே குனிந்து ஒரு மலரை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
நன்றியா? ஏன்?” அவர் புரியாமல் சிரித்தார்.
தாமதத்தை கொஞ்சம்கூட நான் உணராம இருந்ததுக்கு இதுதான் காரணம்." சற்றும் தாமதிக்காமல் என் கையில் இருந்த மலரை வாங்கிய நண்பர் புன்னகை படர "தும்ப தேங்க்ஸ் சுகந்த ராஜா" என்று சொன்னார். சட்டென்று அக்கணம் ஒரு நாடகக்காட்சியைப்போல அமைந்துவிட்டது. அவர் சொன்ன பெயர் மிகவும் விசித்திரமாக இருந்ததால் "என்ன பெயர் சொன்னீங்க?” என்று உடனடியாகக் கேட்டேன்.
சுகந்த ராஜா" அவர் அம்மலரை என்னிடம் நீட்டினார். அந்தப் புதிய பெயரை அறிந்துகொண்டபோது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
ரொம்ப உயரத்திலேருந்து விழறாரு, பாவம்" என்று நானும் சிரித்தபடி அம்மலரை வாங்கிக்கொண்டேன். பிறகு, எந்த இடத்தில் அந்தப் பூவைப் பார்த்தாலும் என் வாய் ஒரு முறை தானாகவே சுகந்த ராஜா என்று முணுமுணுத்து அடங்கும்.
இந்தப் புதிய பெயரை நாற்படி ஐம்பது தமிழ் நண்பர்களிடமாவது சொல்லி என் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டிருப்பேன். ஒருசிலர் அவர்கள் அறிந்த இதேபோன்ற விசித்திரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ஒரு கேள்வியை திடீரென கேட்டார்.
தூங்குமுஞ்சி மரம்னு சொல்றமே, நாம ஏன் அதுக்கு அப்படி ஒரு பெயரை வச்சோம்?”
அதன் இலைகளைப் பாத்திங்கன்னா உங்களுக்கு அதன் காரணம் புரியும். எப்பவுமே ஒரு களைப்பு. து¡க்கக் கலக்கத்துல தலையை தொங்கப்போட்டவனப்போலவே இருக்கும். இலையுறக்கம் அதிகம் உள்ள மரம் என்பதால் அப்படி. அதனால அந்த மரத்துக்கு அப்படி ஒரு பேர் நிலைச்சிபோச்சி."
ஆனால் அதுக்கு கன்னடத்துல வேற ஒரு பேரு உண்டு. ரொம்ப உற்சாகமான பேரு."
அது என்ன?”
மழைமரம்."
நான் ஒருமுறை வாய்க்குள்ளேயே சொல்லிப் பார்த்துக்கொண்டேன். "அழகாகத்தான் இருக்குது. நல்லாதான் இருக்குது. ஆனா, அப்படியே ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பைப்போல இருக்குதே."
உண்மைதான். ஆனா இங்க அந்த மரத்த பார்த்தவங்களுக்கு அது ரொம்ப பொருத்தமா பட்டிருக்கலாம். என்ன கடுமையா மழை பேஞ்சாலும் இந்த மரத்துங்கீழ ஒதுங்கி நிக்கறவங்க உடம்புல ஒரு துளி மழைகூட படாது. மழையிலேருந்து காப்பாத்தறதனால மழைமரம்னு சொல்லியிருக்கலாம்."
"என்ன காரணமா இருந்தாலும் பேர் ரொம்ப நல்லா இருக்குது."
எங்காவது பேருந்துகளில் செல்லும்போதும் பேருந்து கிடைக்காமல் நடக்கும்போதும் யாரையாவது தேடிக்கொண்டு புதிய இடங்களில் அலையும்போதும் அந்த மரம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் மழைமரம் என்னும் பெயரும் மனசில் மிதந்துவரும்.  ஒரு நண்பருக்கு பெண் பார்ப்பதற்காக ஒருமுறை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இருக்கக்கூடிய பக்கமாகச் செல்லவேண்டியிருந்தது. அந்த வட்டாரத்தை நெருங்குவதற்கு முன்பாகவே கண்களில்  படத்தொடங்கிய தூங்குமூஞ்சி மரங்களின் வரிசை அதைக் கடந்தபின்னரும் அங்கங்கே நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு மரமும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் முதல் நு¡று ஆண்டுகள் வரை பழைமை உடையதாக இருக்கும் என்று தோன்றியது. சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த தலைமுறை அமைதியாக உருவாக்கிவைத்துவிட்டுப்போன மாபெரும் சாதனை அந்த மழைமரங்கள். அந்த மரங்களின் நிழலைக் நிற்கும்போது அந்த மூத்த தலைமுறையினரின் மடியில் இருப்பதுபோல ஒருவித பரவசமும் நிம்மதியும் அரும்பின.
அன்று பார்த்த பெண்ணையே நண்பர் பிறகு திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் நடக்கும்வரை கிட்டத்தட்ட ஆறேழுமுறைகளாவது அந்தப் பாதையில் சென்று திரும்பினேன். ஒவ்வொரு முறையும் ஒரு சில கணங்களாவது வண்டியை நிறுத்தச் சொல்லி மழைமரங்களில் நிழலில் நிற்பேன். அப்படி நிற்பதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே சாலையோரமாக இயங்கிக்கொண்டிருந்த தள்ளுவண்டிக் கடையொன்றில் வடை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்துவேன். திருமணத்துக்குப் பிறகு பெண் வீட்டில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. அன்றைய பயணத்தில் அந்த இடங்களையும் மரங்களையும் என் மனைவி அமுதாவுக்கும் சுட்டிக்காட்டினேன்.
ஒருநாள் மாலை அலுவலகத்தில் இருந்தபோது அந்த நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பயத்தோடும் பதற்றத்தோடும் பேசினார் அவர். கோர்வையாகவே அவரால் பேசமுடியவில்லை. துண்டுதுண்டாக வார்த் தைகள் விழுந்தன. நானாகவே ஒன்றிணைத்துப் புரிந்துகொண்டேன். வளைகாப்புக்குப் பின்னர் தாய்வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிற மனைவியைப் பார்ப்பதற்காக தன் அலுவலகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் அவர். மழைமரங்கள் அடர்ந்த அந்தத் தெருவை நெருங்கும்போது ஆவேசம் மிகுந்த மிகப்பெரிய கூட்டத்தைப் பார்த்திருக்கிறார். பத்து நிமிடங்களுக்கு முன்னால்தான் ஒரு விபத்து அங்கே நடந்திருக்கிறது. பயணிகளுடன் வேகமாக வந்து திரும்பிய அரசுப் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியிருக்கிறது. தற்செயலாகக் குறுக்கிட்ட ஒரு ஸ்கூட்டரின்மீது மோதி, பிறகு ஒரு ஆட்டோவை நசுக்கிவிட்டு ஒரு மிருகத்தைப்போல திரும்பியிருக்கிறது. காலைமுறை வேலைக்குச் சென்ற பல தொழிலாளர்கள் அப்போதுதான் ஆலைவாசலைக் கடந்து தத்தம் பேருந்துகளுக்காக நிறுத்தத்துக்கு வந்திருக்கிறார்கள். பள்ளி முடிந்து திரும்பிய சிறுவர் சிறுமிகளும் அந்த நிறுத்தத்துக்கு அருகே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாட்டை இழந்து திரும்பிய பேருந்து குறுக்கில் நின்றிருந்த ஒரு மழைமரத்தில் மோதிய பிறகு சற்றே நிதானத்துக்குத் திரும்பியிருக்கிறது. வேரோடு சாய்ந்த மரம் வாகனத்தை மேலும் நகராமல் தடுத்திருக்கிறது. ஆனாலும் மீண்டும் முன்னகர்ந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையை மோதிச் சாய்த்தபிறகுதான் இறுதியாக நின்றிருக்கிறது. மழைமரத்தின் வாகனம் மோதிய இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு நிழற்குடையில் நின்றிருந்த நு¡ற்றுக்கும் மேற்பட்டவர்கள் திசைக்கொருவராக ஓடிவிட்டார்கள். ஆத்திரம் தாளாத சிலர் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தைத் தீவைத்துக்கொளுத்தியிருக்கிறார்கள். ரத்தத்தையும் ஓலங்களையும் ஆவேசங்களையும் ஒருசேரப் பார்த்த நண்பர் மிகவும் பீதிக்குள்ளாகிவிட்டார். மனைவி வீட்டுக்குச் செல்லாமல் தனது வீட்டுக்கே திரும்பிவிட்டார்.
விபத்துச் செய்தியைக் கேட்டதிலிருந்து மனமே சரியில்லை. அதற்குள் நகரெங்கும் செய்தி பரவிட்டது. இறப்பு எண்ணிக்கை எண்பதுக்கும் மேல் இருக்கும் என்றார்கள் சிலர். சிலர் எழுபது என்றார்கள். ஒருசிலர் நு¡றுகூட இருக்கும் என்றார்கள்.  பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிவரும்போது, பயணிகளிடையே இதுவே பேச்சாக இருந்தது.
அந்த டிரைவரை அடிச்சியே தொவட்டிங்களாம்."
எத்தன பேரு உயிருக்கு வேட்டு வச்சிருக்கான். அடிக்காம கொஞ்சச் சொல்றியா? எல்லாரும் மகாத்மாவா இருக்கமுடியாதுப்பா."
முப்பது ஸ்கூல் புள்ளைங்களாம். இருபது வொர்க்கர்ஸாம். மத்தவங்கள்ளாம் பொது ஆளுங்களாம். சக்கரத்துல சட்னிமாதிரி நசுங்கிட்டாங்களாம்." வண்டியில போவும்போதுதான் சாவுன்னா பாத்தா நிக்கும்போதுகூட சாவா? கலிகாலம்டா சாமி."
அன்று இரவு தொலைக்காட்சிச் செய்தியிலும் சரியான தகவல் இல்லை. விபத்து என்றும் மரணம் என்றும்மட்டுமே சொன்னார்கள். அச்செய்தியில் ஆறுபேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லப்பட்டது. வீட்டில் இரவுமுழுக்க இதுவே பேச்சாக இருந்தது. அச்சத்தில் உறைந்திருந்த நண்பரை தொலைபேசியில் அழைத்து அமைதிப்படுத்தினேன்.
மறுநாள் காலையில் செய்தித்தாளில் மேலும் விரிவான செய்தி காணப்பட்டது. மரணமடைந்தவர்கள் நான்கு பேர் என்றும் காயமடைந்தவர்கள் முப்பது பேர்கள் என்றும் எழுதியிருந்தார்கள். மரண எண்ணிக்கை அதிகமாகாதபடி காப்பாற்றிய பெருமை அங்கே நின்றிருந்த மழைமரம்தான் என்றும், தன்மீது மோதப்பட்ட வண்டியின் வேகத்தையும் சீற்றத்தையும் முழுஅளவில் அம்மரமே ஏற்றுக்கொண்டு மனிதர்களைக் காப்பாற்றியது என்றும் எழுதப்பட்டிருந்தது. கீழே சடலமாக விழுந்து வாகனம் முன்னகர்ந்துவிடாதவாறும் தடுத்துவிட்டது அந்த மழைமரம். தன் குடிபடையைக் காப்பாற்றுவதற்காக முன்னின்று போராடிச் சாய்கிற ஒரு மாபெரும் வீரனின்  உருவத்தை மனத்துக்குள் கட்டியெழுப்பக்கொண்டேன். அந்த மரத்தின் தியாகம் அன்றுமுழுக்க நெஞ்சில் அலைமோதியபடி இருந்தது.
அடுத்த நாள் விடுப்பாக இருந்ததால் அந்த மரத்தைப் பார்க்கச் சென்றேன். மரத்தைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம் நின்றிருந்தது. ஒருகணம் என் மனம் துணுக்குற்றது. பதற்றமும் நடுக்கமும் உடலெங்கும் பரவியது. ஆனால் எந்தக் கூச்சலும் இல்லை. மாபெரும் அமைதியில் மூழ்கியிருந்தது அந்த இடம். வேகவேகமாக நெருங்கிநின்று கூட்டத்தோடு ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்தேன்.
நேற்று பல பேருடைய உயிரைக் காப்பாற்றிய மரம் கீழே உருண்டிருந்தது. அதன் கிளைகளையெல்லாம் வனத்துறை ஊழியர்கள் மின்ரம்பத்தால் அறுத்துக் குவித்துக்கொண்டிருந்தார்கள். அகற்றப்பட்ட கிளைகள் துண்டுதுண்டாக அருகிலிருந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தன. அதைத்தான் அத்தனைபேரும் ஆழ்ந்த துக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சிறுகிளைகள் அனைத்தையும் அறுத்த பிறகு மரத்தை நெருங்கினர் ஊழியர்கள். சட்டென்று கும்பலிலிருந்து வெளிப்பட்ட ஒருவர் அந்த ஊழியரை நெருங்கி ஏதோ பேசுவது தெரிந்தது. அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு அந்த ஊழியர்கள் அனைவரும் விலகி நின்றார்கள். அவர் தாளால் சுற்றி தன்னோடு வைத்திருந்த  பூமாலையை அந்த மரத்தின் பாதத்தில் வைத்துவிட்டு ஒருகணம் கண்கலங்க நின்றார். அவரையறியாமல் அவர் கைகள் குவிந்து வணங்கின. அவரைத் தொடர்ந்து இன்னொரு சிறுமியும் நெருங்கி தன் கையிலிருந்த மாலையை மரத்தடியில் வைத்துவிட்டு வணங்கியது. தன் பிஞ்சு விரல்களால் அம்மரத்தின் பட்டைகளை அது தடவிப் பார்த்தது. பள்ளிவிட்டு வந்த அந்தச் சிறுமிதான் வாகனத்துக்கு வெகு அருகில் விளையாடிக்கொண்டிருந்ததாகச் அசான்னார்கள். அவ்விருவரையும் தொடர்ந்து மற்றவர்களும் தம்மிடமிருந்த பூமாலைகளை வைத்து அந்த மழைமரத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிறகு எல்லாரும் ஓரமாக ஒதுங்கிநின்று ஊழியர்களுக்கு வழிவிட்டனர். மழைமரம் மின்ரம்பத்தால் அறுபட்டு துண்டுகளாகின. மரத்தின் பச்சைமணம் எங்கும் படரத் தொடங்கியது. கண்களில் ஒருவித இயலாமையும் கண்ணீர்த்துளிகளும் தேங்க மக்கள் அமைதியாக எல்லாக் காட்சிகளையும் பார்த்தபடி நின்றார்கள். அந்த அஞ்சலியின் மெளன சாட்சியாக ஒரு ஓரத்தில் நானும் நின்றேன். மழைமரம் மனிதர்களை மழையிலிருந்துமட்டுமல்ல, மரணத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டேன்.