Home

Tuesday 20 November 2018

இளம்பருவத்துச் சித்திரங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயரின் தன்வரலாற்றிலிருந்து சில பகுதிகள்




நகரத்தில் விடுதியில் தங்கிப் படிக்கிறான் ஒரு கிராமத்து ஏழைச் சிறுவன். சில பணக்காரப்பிள்ளைகளும் அவனோடு சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களைப்போல புத்தாடைகள் உடுத்திக்கொண்டு நடப்பதையோ, விடுதிக்கு வெளியே சென்று செலவு செய்து சாப்பிடுவதையோ அவனால் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடிவதில்லை. கிராமத்தில் அவனுடைய அம்மா மட்டும் வசிக்கிறார். அவனுடைய அப்பா சிலோனில் ஏதோ வேலை செய்கிறார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நெருக்கமான பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது. ஊருக்கு வரும் சமயங்களில் கூட அப்பா வேறொரு வீட்டில் தங்கிக்கொள்கிறார். ஆனால் சிறுவனுடைய படிப்புச்செலவுக்கு அவர்தான் பணம் அனுப்புகிறார். அக்காலத்தில் சிலோனிலிருந்து பணம் அனுப்பவதற்கு ஏராளமான அரசுக்கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு மாதத்துக்கு அறுபது ரூபாய் மட்டும் அனுப்புவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதனால் சிறுவனுக்கு அறுபது ரூபாய்மட்டும் அனுப்பிவைக்கிறார். பள்ளிக்கட்டணம் நாற்பது ரூபாய். எஞ்சிய இருபது ரூபாயைக் கொண்டு அவன் மற்ற செலவுகளைச் சமாளித்துக்கொள்கிறான்.

ஒருமுறை அவனுடைய ஆசிரியர் ஒருவருடைய ஆலோசனையின் பேரில் வறுமைச்சூழலில் கல்வி கற்போருக்கான உதவித்தொகை பெறுவதற்குரிய தகுதித்தேர்வொன்றை அச்சிறுவன் எழுதித் தேர்ச்சியடைகிறான். அதனால் அரசாங்கத்திடமிருந்து அவனுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. அப்பணத்தில் அவன் நல்லதாக இரண்டு சட்டைகளும் வேட்டிகளும் எடுத்துக்கொள்கிறான். அம்மாவுக்குக் கொடுப்பதற்கு புத்தாடை வாங்கிக்கொண்டு ஊருக்குச் செல்கிறான்.
புத்தாடைகளைப் பார்த்து அவனுடைய அம்மா மகிழ்ச்சியடைந்தாலும், இத்தனையும் வாங்குவதற்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்று திகைக்கிறாள். சிலோனிலிருந்து அவன் அப்பா கூடுதலாகப் பணம் அனுப்பிவைத்திருப்பாரோ என்று சிந்தனை ஓடுகிறது அவளுக்கு. அவன் அதை உடனே மறுக்கிறான். பிறகு தான் எழுதிய தேர்வைப்பற்றியும் தனக்குக் கிடைத்த உதவித்தொகையைப்பற்றியும் மெல்ல எடுத்துச் சொல்கிறான். அதைக் கேட்டு அமைதியடைந்த அவனுடைய அம்மா, எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிடுகிறாள்.
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருடைய தன்வரலாறு இப்படித்தான் தொடங்குகிறது. அவருடைய தன்வரலாறு மலையாளத்தில் ஐந்து பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. காசு, கஞ்சி. குப்பாயம், கள்ளு, காமம் என்பவையே அவை. அப்பிரிவுகளில் ஆர்வமூட்டும் ஒருசில பகுதிகளைமட்டும் டி.எம்.ரகுராம் தமிழில் மொழிபெயர்த்துநினைவுகளின் ஊர்வலம்என்னும் தலைப்பில் நூலாக்கி அளித்துள்ளார்.  அத்துடன் பின்னிணைப்பாக மும்மூர்த்திகளின் சங்கமம்  என்னும் தலைப்பில் ஒரு உரையாடலும் இடம்பெற்றுள்ளது. மகாபாரத பீமனை முக்கியப்பாத்திரமாக வைத்து இரண்டாம் இடம்என்னும் நாவலை எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயரும் அந்த நாவலை வாரந்தோறும் தொடர்கதையாகப் பிரசுரித்த ஜெயச்சந்திரன் நாயரும் ஒவ்வொரு வாரமும் அத்தொடருக்கு ஓவியம் தீட்டியளித்த நம்பூதிரியும் ஒன்றிணைந்து நிகழ்த்திய உரையாடல் அது.
பள்ளிப்படிப்பிலும் கல்லூரிப்படிப்பிலும் வாசுதேவன் நாயருக்கிருந்த ஆர்வமும் ஈடுபாடும் மிகமுக்கியமானவை. படிக்கும் காலத்திலேயே அவர் வளர்த்துக்கொண்ட இலக்கிய ஆர்வம் அவரை எழுதும் முயற்சிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. கல்லூரிக்காலத்திலேயே சிறுகதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கிறார். வெளிவரும் கதைகளுக்குக் கிட்டும் உதவித்தொகையைக்கொண்டு அவ்வப்போது தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார். பள்ளிகளில் நான்கு மாதங்கள், ஆறு மாதங்கள் என நீண்ட கால விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுடைய இடங்களில் பணியாற்றக் கிட்டும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறார். சிறிது காலம் ஒரு டுட்டோரியல் கல்லூரியிலும் வேலை செய்கிறார். அரசு வேலைக்கான பயிற்சி நிலையத்தில் இணைந்தாலும், அங்கு தான் நடத்தப்படும் விதம்  மரியாதைக்குரியதாக இல்லாததைக் கண்டு அக்கணமே அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அவர் மனத்துக்குப் பிடித்தமான பத்திரிகைத்துறையில் மட்டுமே அவர் நீண்ட காலம் பணிபுரிந்தார்.
பணத்தின் மீது பெரிய நாட்டமெதுவும் இல்லாதவராகவே வாழ்பவராக உள்ளார் வாசுதேவன் நாயர். சுயசரிதையின் பல தருணங்களில் இது வெளிப்படுகிறது. டுட்டோரியல் கல்லூரியில் வேலை செய்துகொண்டிருந்த சமயத்தில் சிற்றுண்டியையும் சாப்பாட்டையும் வெளியேயிருந்து வரவழைத்து சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். நண்பர் தங்கப்பன் கூடவே தங்கியிருந்து தேவையான உதவிகளைச் செய்கிறார். உணவுவிடுதியில் பணபாக்கி நீண்டநாட்களாக தேங்கிவிடுகிறது. அதைச் சுட்டிக்காட்டி குத்திப் பேசும் கடைக்காரனுடைய சொற்களை விவரிக்கும் தங்கப்பன் மீண்டும் கடைக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்.
தற்செயலாக அவரைத் தேடிக்கொண்டு சில புதியவர்கள் வருகிறார்கள். அவர் தன் அறையில் தங்கியிருக்கும் மூஸாத் சாரைத் தேடிக்கொண்டு வந்தவர்கள் என நினைத்து உபசரிக்கிறார். அவர்களோ அவரையே தேடிக்கொண்டு வந்ததாகச் சொல்லி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஜெயகேரளம் இதழில் அவர் தொடர்ந்து எழுதும் கதைகளை அவர்கள் படித்துவருவதாகவும் அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து ஒரு தொகுதியாகக் கொண்டுவர விரும்புவதாகவும் சொல்கிறார்கள். அன்றைய உரையாடலிலேயே ஒளவும் தீரவும்என புத்தகத்துக்குத் தலைப்பையும் சூட்டிவிடுகிறார்கள். வணக்கம் சொல்லிவிட்டு புறப்படும் சமயத்தில் இருநூறு ரூபாய் கொண்ட உறையை அவரிடம் முன்பணமாக வைத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். அவர் அந்தப் பணத்தில் ஓட்டல்காரரின் கடனை அடைத்துவிட்டு வரும்படி சொல்கிறார்.  நகரத்துக்குச் சென்று விடுதியில் தங்கி சில திரைப்படங்களைப் பார்க்கிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் உறவுக்காரப்பெண்ணைப் பார்க்கச் சென்று அவருடைய மருத்துவத்துக்குப் பணம் கொடுக்கிறார். அவருடைய வாழ்க்கை முழுதும் இப்படிப்பட்ட தற்செயல்களால் நிறைந்தனவாக உள்ளது.
வாசுதேவன் நாயர் தன் கிராமத்தில் நம்பிக்கையோடு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் ஒரு வாய்மொழிக்கதை மிகவும் சுவாரசியம் நிறைந்தது. ஒரு காலத்தில் ஒரு வீட்டில் ஒரு பெண்ணும் மூன்று குழந்தைகளும் மட்டும் வசித்துவருகிறார்கள். அந்தக் கிராமத்தில் வசித்த பெரியவர் ஒருவர் அவர்களை ஆதரித்து வருகிறார். வேளை தவறாது அவர்களுக்கு உணவு கொடுத்துவருகிறார். ஒருமுறை காவடி எடுத்துக்கொண்டு பழனிக்குச் செல்கிறார். ஆனால் திரும்பிவரவில்லை. அந்த வீட்டில் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்தப் பெண் அந்தப் பசுக்களின் பாலைக் கறந்து பக்கத்தில் இருந்த கோயிலுக்குச் சென்று கொடுக்கிறார். அவர் சாமிக்குப் படைத்த பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொடுக்கிறார். அவளும் குழந்தைகளும் அதைச் சாப்பிட்டு உயிர்வாழ்கிறார்கள்.
ஒரு ஆடிமாதத்தில் பெருமழை பொழிகிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோவிலுக்குக் கொடுப்பதற்காக பால்குடத்தோடு ஆற்றங்கரைக்கு வந்து நிற்கிறாள் அவள். படித்துறையில் உட்கார்ந்திருக்கும் தோணிக்காரன் வெள்ளத்தில் தோணியை எடுக்கமுடியாது என்று சொல்கிறான். மாலை மங்கி இருட்டியபோதும் மழை நிற்கவில்லை. “இன்று உங்களுக்குச் சாப்பாடு இல்லை பிள்ளைகளேஎன்றபடி வீட்டுக்குத் திரும்பி பாலைக் காய்ச்சி பருகவைத்து படுக்கவைக்கிறாள். மழை தொடர்ந்து பெய்தபடி இருக்கிறது.
இரவு நேரத்தில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அவள் மண்ணெண்ணெய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு மெதுவாக வந்து கதவைத் திறக்கிறாள். இருட்டில் யாரோ நிற்பதுபோலத் தெரிகிறது. வாழை இலையால் மூடிய பித்தளைப் பாத்திரத்தோடு ஒருவர் நிற்கிறார். பிள்ளைகளை எழுப்பி இதைக் கொடு என்று சொல்கிறார். அவள் உள்ளே திரும்பி குழந்தைகளை எழுப்புகிறாள்.  சோற்றை எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றிவைத்துவிட்டு காலியான பாத்திரத்தோடு வாசலுக்கு வந்தபோது அங்கு யாரையும் காணவில்லை. அடுத்தநாள் கோவிலுக்குச் சென்றபோதுதான் அப்பாத்திரம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதை அவள் புரிந்துகொள்கிறாள். “சோறு கொண்டு வந்து கொடுத்தது பகவதி தேவிதான். அவள் நித்தமும் நம் வீட்டுக்கூரையில் வசிக்கிறாள்என்னும் நம்பிக்கை அவள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அதுமுதல் அந்தத் தேவிக்கு ஒவ்வொரு ஆண்டும் பூசை செய்து வழிபடுவது பழக்கமாகிவிடுகிறது.
வயதான பெண்மணிகள் பங்கேற்கும் புவனேஸ்வரி பூஜை பற்றிய சித்தரிப்பும் ஒரு கதைபோல வாசிக்கக்கூடியதாக இருக்கிறது. 
நினைவுகளின் ஊர்வலத்தில் வாசுதேவன் நாயரின் இளமைக்காலத்துச் சித்திரங்களே பெரிதும் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு முழு சுயசரிதையையும் படிக்கும் ஆர்வம் எழுவது இயற்கை. இப்போதைக்கு இல்லையென்றாலும் இன்னும் சிறிது காலத்துக்குப் பிறகாவது டி.எம்.ரகுராம்  எம்.டி.வி.யுடைய சுயசரிதையின் முழுவடிவத்தையும் தமிழில் மொழிபெயர்த்தளிக்கவேண்டும்.

(நினைவுகளின் ஊர்வலம்எம்.டி.வாசுதேவன் நாயரின் சுயசரிதையின் சில பகுதிகள். தமிழில் :டி.எம்.ரகுராம், சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, அசோக்நகர், சென்னை -83.)