Home

Sunday 2 October 2022

பற்றுதல் - சிறுகதை

 

போய்வரட்டா தாத்தாஎன்று கேட்ட மாணிக்கத்தின் குரல் காதிலேயே விழாததைப்போல ஒயர் கண்டுகளை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார் தாத்தா. சிறுவனுடைய குரலில் கெஞ்சுதலும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றன. நாலைந்துதரம் கேட்டு பதில் வராததால் அவரை நெருங்கி மணிக்கட்டுகளைத் தொட்டு மீண்டும்போய் வரட்டா தாத்தாஎன்றான். தாத்தா அவன் விரல்களை உடனே தட்டிவிட்டார்.

போற கழுத அப்படியே போய்கினே இருக்க வேண்டிது தான்டா, எதுக்காக எங்கிட்ட வந்து நிக்கணும்? தலையில் கிறுக்கு புடிச்சி ஆட்டும் போது மத்தவங்க சொல்றதல்லாம் ஏறுமா? ஏதோ சின்னப்புள்ள ஆசப்படறானேன்னு ஒரு நாளு அனுச்சிவச்ச குத்தம் இந்த அளவுக்கு வந்துட்ட, றெக்க மொளச்சிருச்சி ஒனக்கு, இனிமே நா யாரு தடுக்கறதுக்கு? ஙொப்பன் போன தெசையிலேயே போவணுங்கறது தான் ஒன் தலயெழுத்து போல, போய் எக்கேடாவது கெட்டொழி, போடா.” வார்த்தைகளின் வேகம் அவரே எதிர்பாராததாக இருந்தது.

நா செல்றத ஒரு நிமிஷம் கேளு தாத்தாமாணிக்கம் அவர் தோளைத் தொட்டான்.

நீ ஒன்னும் சொல்ல வேணாம் தம்பி, ஒன் வழிய பாத்து போய்கினே இருக்கலாம், போ.”

மறுபடியும் அவன் கையைத் தட்டிவிட்டார். பதற்றத்தில் அவர் கையிலிருந்த ஒயர் கண்டு நழுவி அவனைத் தாண்டி விழுந்தது. கையை நீட்டி தடவித்தடவி முன்னகர்த்தி அந்தக் கண்டை எடுத்து பைக்குள் போட்டார் தாத்தா. நழுவிப் போனதை எடுக்கத் தடுமாறித் தவித்த அவர் கையையும் பார்வையற்று படபடக்கும் அவர் கண்களையும் மாறிமாறிப் பார்த்த மாணிக்கத்துக்கு துக்கமாக இருந்தது. ஒரு கணம் போகாமலேயே விட்டுவிடலாமா என்று சலிப்புற்றது அவன் மனம். அடுத்த கணமே அவனுடைய புல்லாங்குழல் வாசிப்பை உற்சாகப்படுத்தும் ராகவேந்திர சாஸ்திரியின் குரல் நெஞ்சில் நிறைவதையும் உணர்ந்தான். அன்று அவன் முதன்முதலாக மேடையில் ஏறி குழல் வாசிக்கப் போகும் நாள். சாஸ்திரியின்  மகன் விஸ்வநாதனின் பாடல்களுக்கு அவன் குழலோசைதான் பின்னணி. கல்வே காலேஜ் அரங்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீம்போடு திரும்பி உட்கார்ந்திருந்த தாத்தாவை சிறிது நேரம் பேசாமலேயே பார்த்திருந்துவிட்டு வெளியேறினான் மாணிக்கம். சாஸ்திரியின் வீட்டை நோக்கி மெதுவாக நடந்தான். அங்கிருந்து அனைவரும் ஒன்றாகச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

வெளியேறிச் செல்லும் அவன் காலடியோசையை தாத்தாவின் செவிகள் பதிவுசெய்து கொண்டன. மூன்று வயதான குழந்தையை ஒண்டிக்கட்டையாக்கி விட்டு மஞ்சள் காமாலையில் மறைந்துபோன பேத்தியுடைய ஞாபகம் வந்தது. பிள்ளையைப் பற்றிய அக்கறை துளிகூட இல்லாமல் ஒரு நாடகக் காரியோடு மனசாட்சியே இல்லாமல் ஊரைவிட்டே ஓடிப்போன அவள் புருஷனின் ஞாபகம் வந்தது. நாற்காலி பின்னுவதற்காக செல்லும் இடங்களிலெல்லாம் தோளில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கைத்தடியை தட்டித்தட்டித் தடுமாறி நடந்துசென்ற நாட்கள் ஞாபகம் வந்தன. அவன் பிஞ்சு விரல்களைப் பற்றியபடி சிரமமேயில்லாமல் பாதையைக் கடந்த நாட்களும் ஞாபகம் வந்தன. எல்லாமே சிதைந்து சின்னாபின்னமாகிவிடுமோ என்ற குழப்பமும் பதற்றமும் அவரை ஆட்டிப்படைப்பதையும் நினைத்துக்கொண்டார். சங்கிலிக் கண்ணிகளாகத் தொடரும் நினைவுகளை அவரால் தடுக்கமுடியவில்லை. ஒரு பெரிய பாரம் தனது தலையை அழுத்தி நசுக்குவதைப்போல உணர்ந்தார்.

வெகு நாட்களாக பயன்படுத்தாமல் வீட்டு மூலையில் சாய்த்துவைத்திருந்த கைத்தடியும் ஒயர் கண்டுகள் வைக்கப்பட்டிருந்த பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் தாத்தா. கதவை இழுத்து பூட்டி சாவியை பையில் போட்டுக்கொண்டார். நடேசன் நகரில் கல்யாணப் பதிவு அலுவலகத்தில் நாற்காலி பின்னும் வேலை பாக்கியிருந்தது. வேலையில் மூழ்கினால் மட்டுமே அந்த மனப்பாரம் குறையும் என்று தோன்றியது.

நடக்கும் போது கூட தடுமாறி அலைபாயும் நினைவுகளை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. துறுதுறுப்பான பையன் மாணிக்கம். கண் பார்ப்பதை கை செய்து முடிக்கும். தடவித் தடவி தாத்தா ஒரு நாற்காலி செய்து முடிக்கும் நேரத்துக்குள் அவன் இரண்டு நாற்காலிகள் பின்னி முடித்திருப்பான். அளவான இறுக்கம், நேர்க்கோடு இழுத்ததுபோல நீளும் பின்னல்.  பெருமைபடர அவன் தலையை பாசத்தோடு தடவித்தருவார் தாத்தா.

ஆறேழு மாதங்களுக்கு முன்னால் ஜெயநகரில் சங்கத்துக்காரர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் ராகவேந்திர சாஸ்திரியின் வீட்டுக்கு நாற்காலிகள் பின்னுவதற்காக செல்ல நேர்ந்தது. பன்னிரண்டு நாற்காலிகள். சில உள்வாங்கித் தொய்ந்திருந்தன. ஓரமெங்கும் நைந்து இற்றுப் போயிருந்தன சில. “எல்லாத்துக்கும் புது ஒயர போட்டே பின்னிடலாங்களா?” என தாத்தா முன்வைத்த யோசனையை சாஸ்திரி தயக்கமின்றி ஏற்றுக்கொண்டார்.

துணைக்கு வந்த மாணிக்கம் பொழுதுபோக்குக்காக கையோடு வைத்திருக்கும் புல்லாங்குழலை ஊதியதை தற்செயலாக அங்குவந்த சாஸ்திரி சிறிது நேரம் காது கொடுத்துக் கேட்டார். ஏதோ அதிசயத்தைக் கேட்கிறமாதிரி அவனை இரண்டு மூன்று தரம் திரும்பத்திரும்ப வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். “பார்வதி, இங்க சித்த வாடிஎன்று உள்ளிருந்த மனைவியை அழைத்து அவளுக்காக ஒரு முறை வாசித்துக் காட்டும்படி சொன்னார். அவர்கள் பின்னாலேயே சத்தமில்லாமல் வந்து நின்று கேட்ட அவர்கள் மகன் விஸ்வநாதன்ரொம்ப அம்சமா வாசிக்கறான் இல்லப்பா?” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

ஒன் பேரு என்னடா பொடியா?” சாஸ்திரி அவனைப் பார்த்து கேட்டதும் அவன் ஓடிச் சென்று தாத்தாவின் முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டான்.

மாணிக்கம் ஐயாதாத்தா அவனை தம்மீது சாய்த்துக் கொண்டு சொன்னார்.

கிருஷ்ணபகவான் கடாட்சம் பொடியனுக்கு பரிபூரணமா இருக்குது தாத்தா. அமோகமா வருவான் எதிர்காலத்துலவீட்டுக்குள் சென்ற சாஸ்திரி ஒரு பைநிறைய இனிப்புகளைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தார். இனிப்பைச் சாப்பிட்ட ஆனந்தத்தில் அன்று முழுக்க உற்சாகமாக இருந்தான் மாணிக்கம்.

மறுநாள் நாற்காலி பின்னப்போனதும் சாஸ்திரி திண்ணைக்கு வந்துவிட்டார். மாணிக்கத்தை மீண்டும்மீண்டும் வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.

தாத்தா, ஒங்ககிட்ட ஒன்னு சொல்லணும். தப்பா எடுத்துக்க  மாட்டீங்களே?” சாஸ்திரி அவரைப் பார்த்துத் தன் பேச்சைத் தொடங்கினார்.

சொல்லுங்க ஐயா.”

பொடியனுக்கு குழல் ஞானம் அபாரமா இருக்குது. இந்த புல்லாங்குழல்லயே இந்த போடு போட்டான்னா இன்னும் மொறயா படிச்சி வாசிச்சா பகவானே வாசிக்கமாதிரி இருக்கும் போல. வித்தை உள்ள புள்ள வீணா போயிடக்கூடாது. தினம் சாயங்காலம் இங்க அனுப்புங்க. இங்க நிறைய புள்ளைங்க வாசிக்கவும் பாடவும் கத்துக்கறாங்க. இவனும் முறையா கத்துக்கிடலாம்.

தாத்தாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கண்கள் தளும்ப சில நொடிகள் பேசாமல் நின்றார்.

ஆத்தா அப்பன் இல்லாத புள்ளைங்க இது. ஆத்துத் திருநாவுல வாங்கித் தின்ன குடுத்த பணத்துல இவன் இத வாங்கி வச்சிகிட்டு ஊதிட்டு கெடக்கறான். குருட்டு ஜன்மம்யா நானு. எனக்கு என்னங்க தெரியும்? நீங்களா பாத்து இவனுக்கு நல்லது செஞ்சா சரிதாங்கய்யா.”

குழல் பயிற்சியை அவர் தொடங்கியபோது கூட தாத்தாவுக்கு எவ்விதமான சங்கடமும் இல்லை. இரண்டு தெரு தள்ளிய வீடு என்பதால் நடைப்பிரச்சனையும் இல்லை. அவனாகவே நடந்து திரும்பி வந்தான். அல்லது யாராவது அவனுக்குத் துணையாக வந்தார்கள்.

மாணிக்கத்தின் துணை இல்லாமல் வேலைக்குக் கிளம்பும் நாட்களில்தான் அவருடைய மனபாரம் சிறுகச் சிறுகப் பெருகத் தொடங்கியது. பாட்டிலோ அல்லது நடனத்திலோ மனம்பறி கொடுத்து நாடகக்காரியின் பின்னால் போன அவனுடைய அப்பாவின் ஞாபகம் அவருடைய மனபாரத்தை இன்னும் கூடுதலாக்கியது. அவர் குரலில் மெல்லமெல்ல கண்டிக்கும் தொனி படியத் தொடங்கியது.

என்னடா பொழப்பு இது? எந்த நேரம் பாத்தாலும் அத வச்சிகினு ஊதிட்டு கெடக்கற?”

ஊதற வேலையெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுடா மாணிக்கம். மூணுவேளயும் மூக்கு புடிக்க தின்னுட்டு சாஞ்சிங்கெடக்கற ஆளுங்களுக்குத்தான்டா இது ஒத்துவரும். பேசாம  பொழப்ப பாருடா.”

ஏதாவது ஆசகாட்டி மோசம் பண்ற வேலயா இருந்தாலும் இருக்கும்டா மாணிக்கம். பெரிய ஊட்டு சங்காத்தமே வேணாம் விட்டுடுடா தம்பி.”

தாத்தா, ஓரமா நடக்க மாட்டியா? வண்டிப் பாதையில எதுக்கு வந்து மாட்டிக்கிற? நீ உழுந்து சாவறதுக்கு என் வண்டிதானா கெடைச்சிது?”

அவசரமாக வண்டியை பிரேக் போட்டு நிறுத்திய ஒருவன் அதட்டியபோதுதான் தாத்தாவுக்கு சுய உணர்வு திரும்பியது. தடியைத் தட்டியபடி ஓரமாக வந்தார். ஹாரன் எழுப்பிய சத்தத்தில் அவர் இதயம் வேகமாக துடித்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்றார்.

குழப்பத்திலிருந்து மீண்டபோது அருகில் யாரோ ஹார்மோனியம் வாசிக்கும் சத்தம் கேட்டது. கூடவே ஒரு திரைப்படப் பாட்டின் குரல். அவற்றுக்குப் பின்னால் ஒரு புல்லாங்குழலின் இசை. கும்பலில் சேராமல் ஒரு பசுமட்டும் தனியே நடந்துவருவதுபோல அந்தப் புல்லாங்குழலின் இசை இருந்தது. யாரே நாலைந்து பேர் மரத்தடியில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அநேகமாக அவர்களும் பார்வையற்றவர்களாக இருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டார் தாத்தா.

மாணிக்கத்தின் குழலிலிருந்து எழும் இசை இதைவிட பலமடங்கு இனிமையானது என்ற எண்ணம் வந்தது தாத்தாவுக்கு. அக்கணம்வரை அவன்மீது பொங்கிவந்த கோபமெல்லாம் கரைந்து ஆவியானதுபோல தோன்றியது. அளவு கடந்த பாசமும் ஏக்கமும் அவன்மீது பொங்கின. காரணமற்ற தனது பயத்தையும் வெறுப்பையும் நினைத்தபோது அவருக்குக் கூச்சமாகக்கூட இருந்தது. சின்னப் பிள்ளையின் மனம் சங்கடப்படும்படி நடந்துவிட்டதை நினைத்து வருத்தம் படர்ந்தது. அப்போதே அவனை அருகில் இழுத்து தலையைத் தடவித் தரவேண்டும்போல இருந்தது. அவர் மனம் நடேசன் நகருக்குச் செல்லும் எண்ணத்தை கைவிட்டது.

தம்பி, கல்வே காலேஜ்க்கு போவணும். ஒரு ஆட்டோ பாத்து ஏத்திவிடமுடியுங்களா?”

கும்பலருகே பொதுவாக நின்று கேட்ட தாத்தாவுக்கு உதவ யாரோ ஒருவன் முன்வந்தான். அவரை கையைப் பிடித்து  அழைத்துச் சென்று ஆட்டோ பேசி அமர்த்தி அனுப்பினான்.

கல்வே காலேஜ்ல என்ன தாத்தா விசேஷம்?” ஆட்டோக்காரர் அப்போதுதான் பிரித்த பாக்குப் பொட்டலத்தை வாய்க்குள் கொட்டிக்கொண்டு கேட்டார்.

அங்க பாட்டுக்கச்சேரில என் பேத்தி புள்ள குழல் வாசிக்கறாம்பா.”

ஒருகணம் ஆட்டோக்காரர் ஆச்சரியத்தோடு திரும்பி விசித்திரமாக தாத்தாவைப் பார்த்தார்.

காலேஜ்ல கச்சேரி எங்க நடக்கும்னு தெரியல. எனக்காக வாசல்ல விசாரிச்சி உள்ள கொண்டும்போயி விடறியா தம்பி?-” தாத்தா ஆர்வத்தோடு ஆட்டோக்காரரைக் கேட்டார்.

ஆவட்டும் தாத்தா, அங்க போனப்பறமா பார்க்கலாம்.”

கால் மணிநேரப் பயணத்துக்குப் பிறகு காலேஜ் வாசலில் நின்றது வண்டி. ஆவலை அடக்கமுடியாமல் அதற்குள் மாணிக்கத்தின் புராணத்தை சொல்லிமுடித்தார் தாத்தா. கையைப்பற்றி அவரை கீழே இறக்கிய ஆட்டோக்காரர் தாத்தா கொடுத்த நோட்டை வாங்கிக்கொண்டு சில்லறை கொடுத்தார். பின்பு மெதுவாக படியேறி உள்ளே அழைத்துச் சென்றார். யாரையும் வழி கேட்கவேண்டிய அவசியமே இல்லாமல் குழலோசையின் சத்தம் கேட்டது. அதையே பின்தொடர்ந்து அரங்கத்தை நெருங்கினார்கள்.

யாரோ ரெண்டு சின்னப் பசங்கதான் மேடையில் உக்காந்திருக்காங்க.”

குரலைத் தாழ்த்தி தாத்தாவிடம் சொல்லிவிட்டு முகத்தைப் பார்த்தார் ஆட்டோக்காரர். “அவுங்கதான் அவுங்கதான்என்று அவசரமாகச் சொன்னார் தாத்தா. “அப்ப நா வரட்டா?” என்றபடி தாத்தாவை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினார் ஆட்டோக்காரர்.

குழலோசையைக் கேட்டதும் விசித்திரமான பரபரப்பு உடலிலும் மனத்திலும் நிரம்பத் தொடங்கியதை வேடிக்கையாக உண்£ந்தார் தாத்தா. மாணிக்கம் மாணிக்கம் என்று பலமுறை வாய்க்குள் உச்சரித்தார். உதடு பிரியாமல் நெஞ்சுக்குள் ஒருமுறை கூவிப் பார்த்தார்.

அரங்கம் அமைதியாக இருந்தது. ஒரு குழந்தை தவழ்ந்து  சுற்றிச்சுற்றி விளையாடுவதைப்போல இனிமையான குரலில் எழுந்த பாடல் வரிகள் அரங்கம் முழுக்கத் தவழ்ந்தன. குழந்தையின் பின்னாலேயே பின்தொடர்ந்து கவனமாக நடந்துவரும் தாயாரைப்போல தொடர்ந்து வந்தது ஒரு புல்லாங்குழலின் ஓசை. தாத்தா அதை உடனடியாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். மாணிக்கத்தின் வாசிப்புதான். சந்தேகமே இல்லை. தன் இதயத்தின் துடிப்புகள் அதிகமாவதை உணர்ந்தார் அவர்.

சிறிது இடைவெளிக்கு பிறகு இரண்டாவது பாடல் தொடங்கியது. வேறு விதமான வார்த்தைச் செட்டு. ஒரு கன்றுக் குட்டி துள்ளித்துள்ளி ஓடுவதைப் போன்ற வேகம். சிறிது நேரத்தில் அந்த வார்த்தைகளுக்கு இணையாக தொடர்ந்து வந்தது புல்லாங்குழலின் இசை. கொஞ்சலோடு கன்றின் பின்னால் ஓடிவந்து நிற்கும் சிறுமியைப்போல.

தாத்தா அருகிலிருந்த சுவரை அழுத்தமாகப் பற்றி சாய்ந்து கொண்டார். அடுத்த பாடலும் குழலோசையும் ஒன்றோடு ஒன்று இணைந்து இரட்டையரின் நடனத்தைப்போல இருந்தது. ஒரே இலக்கு. ஒரே வேகம்.

கச்சேரி முடிந்ததும் அரங்கத்தில் எழுந்த கைதட்டல் அடங்குவதற்கு வெகுநேரம் பிடித்தது. அந்தச் சத்தத்தின் அடர்த்தியைவைத்து கூட்டத்தின் அளவை ஊகித்துக் கொண்டார் தாத்தா. பொங்கிவரும் கண்ணீரை அவரால் கட்டுப்படுத்தமுடியவில்லை. காலையில் படர்ந்த வெறுப்பையும் கோபத்தையும் நினைத்துக் கூச்சமுற்றார். கும்பல் எழுத்து கரையத் தொடங்கியதும் ஓரமாக ஒதுங்கி சுவரைப் பற்றியபடி பின்வாங்கினார்.

வெளியேறிய கூட்டத்தினரின் உரையாடல்களில் சிறுவர்களின் திறமையை மெச்சிப் பாராட்டும் வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்டார் தாத்தா. அந்த வார்த்தைகளை அவர் மனம் மீண்டும்மீண்டும் அசைபோட்டுப் பார்த்தது. யார் கண்ணிலும் படாமல் அப்படியே ஒதுங்கியிருந்துவிட்டு பிறகு, சத்தம் காட்டாமல் வெளியேறி விடவேண்டும் என்று நினைத்தபடி தரையில் உட்கார்ந்து விட்டார்.

சந்தடியெல்லாம் அடங்கிய வேளையில் அவர் மெதுவாக எழுந்து நிற்கவும்தாத்தாஎன்று மாணிக்கம் அவரை அடையாளம் கண்டு அழைக்கவும் சரியாக இருந்தது. அதற்குள் அவன் குரல் ஏழெட்டு முறை அழைத்துவிட்டது. சாஸ்திரியின் அருகில் நடந்த  மாணிக்கம் வேகமாக ஓடிவந்து தாத்தாவைத் தொட்டான். “எப்ப வந்த தாத்தா? ஏன் இங்கேய ஒக்காந்துட்ட? உள்ள வரலாமில்ல? பாட்ட கேட்டியா?” ஒரு நொடியில் பல கேள்விகளை அடுக்கினான் அவன். தாத்தாவால் எதுவும் பேசமுடியவில்லை. அவர் கண்கள் கலங்கின. நழுவிவிடாதபடி ஒயர் கண்டு பையை ஒரு கையால் பற்றியபடி, இன்னொரு கையால் அவனை இழுத்து தன்னோடு சோத்துக்கொண்டார். அவன் கைவிரல்களை வாங்கி தன் சுருங்கித் தளர்ந்த உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினார். கண்கள் தளும்புவது போல் இருந்தது.

நானே தாத்தாவ அழச்சிட்டு போறன் ஐயா. நீங்க கௌம்புங்க. சாய்ங்காலமா, வீட்டுல வந்து பாக்கறேன்.” மாணிக்கம் சாஸ்திரியைப் பார்த்துச் சொன்னான். பிள்ளையையும் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார் சாஸ்திரி.

பையை எங்கிட்ட குடு தாத்தா. வா போவலாம்தாத்தாவின் விரல்களை வழக்கம்போல் பற்றிக்கொண்டு நடக்கத் தொடங்கினான் மாணிக்கம்.

(குங்குமம் - 2007)