ராஜநாகத்தின் தலைவலியும்
இளவரசியின் புன்னகையும்
திடீரென அந்தப் பிரதேசத்தில் எலிகள் பெருகின. வீடுகள், தோப்புகள்,
வயல்வெளிகள் எங்கெங்கும் எலிகள் உலவத் தொடங்கின. பார்க்கிற இடங்களிலெல்லாம் எலிகள்
சுதந்திரமாக நடமாடின. அதனால் எரிச்சல் கொண்ட மக்கள் கைக்குக் கிடைத்த தடியை
எடுத்து எலிகளைக் கொன்றனர். சிலர் கல் வீசிக் கொன்றனர். அப்போதும் எலிகளின்
பெருக்கத்தைத் தடுக்கமுடியவில்லை.
ஒருநாள் அனைவரும் கூடி அரண்மனைக்குச் சென்று ராஜாவைச் சந்தித்து
எலித்தொல்லையைப்பற்றி எடுத்துரைத்தனர்.
அனைவருடைய புகார்களையும் பொறுமையாகக் கேட்ட ராஜா, எலித்தொல்லையிலிருந்து
கிராமங்களைக் காப்பாற்ற வெகுவிரைவிலேயே ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதாக வாக்குறுதி
கொடுத்து அனுப்பிவைத்தார்.
மக்கள் புறப்பட்டுச் சென்றபிறகு ராஜா, அவருடைய அமைச்சர்களை அழைத்து
எலிகளை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் அரண்மனையிலும் எலி
நடமாட்டம் இருப்பதாகவும் வேலைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் வேட்டையாடிக் கொன்று
வீசுவதாகவும் கூறினர். அப்படியென்றால் எலிப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவு
கட்டவேண்டும் என்று அவசரப்பட்டார் ராஜா.
எலிகளைத் தேடித்தேடி கொல்வதற்கு ஒரு தனிப்படை உருவாக்கலாம் என்று
ஆலோசனை வழங்கினார் ஒரு அமைச்சர். அதிக எலிகளைக் கொல்பவர்களுக்கு ஊக்கப்பரிசு
கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பைச் செய்தால், மக்களே எல்லா எலிகளையும்
கொன்றுவிடுவார்கள் என்று மற்றொரு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இப்படி ஆளாளுக்கு
ஒரு ஆலோசனை வழங்குவதும் அடுத்தவர்கள் உடனடியாக அத்திட்டத்தில் உள்ள குறையைக்
கண்டுபிடித்து சொல்லி நிராகரிப்பதுமாக நேரம் சென்றுகொண்டே இருந்தது.
இறுதியாக ஒரு பிராணியைக் கொல்ல இன்னொரு பிராணியை வளர்ப்பதுதான்
சிறந்த வழி என்று ஒருவர் தெரிவித்தார். எலிகளை அதிக அளவில் உண்ணும் உயிர்
பாம்புகள் என்பதால், எங்கெங்கும் பாம்புகள் நடமாட்டம் இருக்கும்வகையில்
பார்த்துக்கொண்டால், மிக விரைவிலேயே எலிகளை ஒழித்துவிடலாம் என்றும் தன் திட்டத்தை
விரிவாக உற்சாகத்துடன் தெரிவித்தார். அனைவருக்கும் அத்திட்டம் புதுமையாகத் தோன்றியதால்,
உடனடியாக அத்திட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். ராஜாவும் அத்திட்டத்தை
ஏற்றுக்கொண்டார்.
உடனடியாக வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் பாம்பாட்டிகளை அணுகி,
தம் பிரதேசத்துக்கு ஏராளமான பாம்புகளைக் கொண்டுவர ஏற்பாடு செய்யும்படி
உத்தரவிட்டார் ராஜா. ஒருசில நாட்களிலேயே ஏராளமான பொருட்செலவில் பாம்புகள் அந்தப்
பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.
எல்லோருடைய வீட்டுத் தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் புதர்களிலும்
தோப்புகளிலும் குளக்கரைகளிலும் பாம்புகள் உலவத் தொடங்கின. கண்ணுக்குத் தென்பட்ட
எல்லா எலிகளையும் தேடிக் கொன்று தின்றன. நெடுங்காலமாக எலித்தொல்லையால்
அவஸ்தைப்பட்டுவந்த கிராமத்தினர் ஒரே வாரத்தில் அந்தப் பிரச்சினையிலிருந்து
விடுபட்டு நிம்மதியாக நடமாடினர். தக்க நேரத்தில் புதுமையான திட்டத்தை வகுத்து
எலித்தொல்லையை ஒழித்த ராஜாவை எல்லோரும் பாராட்டினர்.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஊர்மக்கள் வேறொரு பிரச்சினையை
எதிர்கொண்டனர். எல்லா இடங்களிலும்
பாம்புகள் நடமாட்டம் பெருகத் தொடங்கியது. வீடுகளின் பின்கட்டுகளில், தோட்டங்களில்,
சாக்கடையோரங்களில், மரத்தடிப் பொந்துகளில், புதர்களில் என எங்கெங்கும் பார்க்கும்
இடங்களில் எல்லாம் பாம்புகள் ஊர்ந்து
செல்வதை அனைவரும் பார்த்தனர். பல நேரங்களில் வீட்டில் உள்ள சமையலறைகளிலும்
படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் பாம்புகள் நுழைந்து சுதந்திரமாகத் திரியத்
தொடங்கின. பல குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பெரியவர்களும் பாம்புக்கடியால்
உயிர் துறந்தனர்.
அனைவரும் கூட்டமாகச் சென்று ராஜாவைச் சந்தித்து பாம்புப்
பிரச்சினையைப்பற்றி எடுத்துரைத்தனர். பலர் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தனர் என்னும்
செய்தியைக் கேட்டு ராஜா மிகவும் வருத்தமடைந்தார். உடனே, பாம்புப் பிரச்சினையைத்
தீர்க்க அமைச்சர்களை அழைத்து ஓர் ஆலோசனைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினார்.
பாம்புகளை உடனடியாக அழிக்க, கீரிப்பிள்ளைகளை வளர்க்கலாம் என்று
ஒருவர் ஆலோசனை வழங்கினார். சிலர் அத்திட்டத்தை சரியான திட்டமென்று சொன்னாலும்,
சிலர் அத்திட்டத்தை மோசமான திட்டமென்று சொல்லி, நிராகரித்தனர். அதனால் ஒருநாள்
முழுதும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும் முடிவை எட்டாமலேயே கூட்டம் முடிவடைந்தது.
அடுத்தநாள் அதிகாலையில் ராஜா படுக்கையறையிலிருந்து எழுந்தபோது, தன்
படுக்கைக்குக் கீழேயும் குளியலறையிலும் பாம்புகள் உலவுவதைப் பார்த்து
திகைத்துவிட்டார். பாம்புகளை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் நேரிடையாகவே
உணர்ந்தார். பாம்புக் கூட்டத்தை ஒழிப்பது
தொடர்பான திட்டம் எந்த முடிவையும் எடுக்காமலேயே ஒவ்வொரு நாளும் கூடுவதும்
கலைவதுமாக இருந்தது.
நேருக்கு நேர் பாம்புகளைப் பார்த்துவிட்ட ராஜா, தன் படுக்கையறையில்
படுத்துறங்க மிகவும் அஞ்சினார். அதனால் உதவிக்கு சில ஆட்களை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு
அரண்மனையை விட்டு வெளியேறினார். புறப்படும்போது தன்னோடு தன் மகனையும்
அழைத்துக்கொண்டு சென்றார். ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதி பாதுகாப்பாக
இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே பணியாட்களிடம் சொல்லி, அங்கே ஒரு
கூடாரத்தை அமைக்கும்படி சொன்னார். இரவு
வேளையில் அவர் அங்கேயே உறங்கினார். கூடாரத்துக்கு வெளியே காவலர்கள் காவல்
காத்தனர்.
ராஜா தன் மகனிடம் மரத்தால் செய்யப்பட்ட ஒரு வாளைக் கொடுத்து,
ஓய்ந்திருக்கும் நேரங்களில் எல்லாம் பிற வீரர்களிடம் கற்றுக்கொண்டு பயிற்சி
செய்யும்படி சொன்னார். அவனும் தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தொடர்ந்து பயிற்சி செய்தான். ஒவ்வொரு நாளும்
அவனுடைய பயிற்சி நேரம் பெருகிக்கொண்டே போனது. அவனுக்கும் அப்பயிற்சியில் ஆர்வம்
இருந்ததால், மிக விரைவிலேயே அவன் வாள் பயிற்சியின் சூட்சுமங்களைக்
கற்றுக்கொண்டான். உண்மையான வாளை ஏந்தி சண்டையிடும் அளவுக்கு அவன் போதுமான திறமையை
வளர்த்துக்கொண்டான்.
ஒருநாள் ஒரு பெரிய மரத்தடியில் ஒரு கட்டிலில் ராஜா
படுத்திருந்தார். அப்போது அம்மரத்திலிருந்து ஒரு பெரிய நாகம் இறங்கி வந்தது. அது
ராஜநாகம். நாகங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கக்கூடிய நாகம். ஏழு தலைகளிலும் சிறிய
அளவிலான மகுடங்கள் காட்சியளித்தன. அம்மகுடமே பிற நாகங்களிடமிருந்து அந்த நாகத்தை
வேறுபடுத்திக் காட்டியது.
ராஜநாகம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று ராஜாவின் அருகில் சென்றது.
அக்கம்பக்கத்தில் ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ராஜாவை நெருங்கிச்
சென்றது. தன் ஏழு தலைகளிலும் இருக்கும் கண்களால் உறங்கிக்கொண்டிருந்த ராஜாவையே
உற்றுப் பார்த்தது.
அந்த நேரத்தில் எங்கிருந்தோ ராஜாவின் மகன் கத்தியை வீசியபடி வந்து
தன் அப்பாவுக்குப் பக்கத்தில் நின்றான். அந்த ராஜநாகத்தின் ஏழு முகங்களையும்
நோக்கி பளபளவென மின்னும் தன் கத்தியைத் திருப்பி ‘எதற்கும் தயார்’ என்பதுபோல
நின்றான். நடப்பது எதையும் அறியாமல் ராஜா
மரத்தடியில் நிம்மதியாக குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார்.
இளவரசனின் உறுதியைப் புரிந்துகொண்ட ராஜநாகம் “என்னைக்
கொல்லவேண்டாம்” என்று ஒரு கோரிக்கையை வைத்தது. உடனே இளவரசனும் “உன் கோரிக்கையை
நான் ஏற்கவேண்டும் என்றால் நீயும் என் கோரிக்கையை ஏற்கவேண்டும்” என்று சொன்னான்.
“உன் கோரிக்கை என்ன?” என்று கேட்டது ராஜநாகம்.
“உன் வம்சத்தைச் சேர்ந்தவர்களால்தான் நாங்கள் இப்படி
அரண்மனையைவிட்டு வெளியேறி இங்கே வந்து தங்கியிருக்கிறோம். என் தந்தைக்கும் எனக்கும் இங்கிருக்கும்
வீரர்களுக்கும் எங்கள் பிரதேசத்தில் வசிக்கும் எங்கள் மக்களுக்கும் நீயும் உன்
வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருநாளும் எவ்விதமான துன்பத்தையும் கொடுக்கக்கூடாது. யாரையும்
கடிக்கக்கூடாது. யாரையும் அச்சுறுத்தக்கூடாது” என்றான் இளவரசன்.
வெகுநேரம் யோசனையில் மூழ்கியிருந்த ராஜநாகம் மெல்லிய குரலில்
“என்னைப் பொறுத்தவரையில் நான் உன் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். மற்றவர்கள்
சார்பில் என்னால் அந்த உறுதியைக் கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை” என்று சொன்னது.
“ஏன்?”
“அவர்கள் எந்த அளவுக்கு என் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள் என்பதை
என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.”
“ஏன்? நீதானே அவர்களுக்கெல்லாம் ராஜா.”
“உண்மைதான். ஆனால் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும்
அவரவர்களுடைய சுதந்திரத்தைப் பொறுத்தது அல்லவா?”
“அந்தப் பாம்புகள்தான் எங்கள் பிரதேசத்தில் ஏராளமான பேர்களைக் கொன்றுவிட்டன. அவர்களைக்
கட்டுப்படுத்த முடியாதா?”
“அவர்களுடைய ராஜா என்கிற முறையில் அவர்களுக்கு எடுத்துரைக்க நான்
கடமைப்பட்டவன் என்னும் கருத்தில் மாற்றமில்லை. ஆனால் இதுவரையில் அவர்கள்
சுதந்திரமாகவே இயங்கிப் பழகியவர்கள். திடீரென ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக்
கொண்டுவருவது சிரமம். அதுதான் யோசனையாக உள்ளது. அது மட்டுமில்லாமல், அவர்களைக்
கட்டுப்படுத்தும் நிலையில் நான் இல்லை”
“என்ன சொல்கிறாய் நீ? நீ சொல்வதன் அர்த்தம் புரிந்துதான்
பேசுகிறாயா? நீதானே அவர்களின் ராஜா?”
“நீ சொல்வது உண்மைதான்.
நான்தான் அவர்களின் ராஜா. என் பிரச்சினையே அதுதான். இங்கே பார், இந்த ஏழு
தலைகளைச் சுமந்துகொண்டு என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. ஒருவரிடமும் பேசவும்
முடியவில்லை. ஏழு தலைகளிலும் கடுமையான வலி இருக்கிறது. தீராத அந்த வலியால் என்னால்
தூங்கக்கூட முடியவில்லை. யாரிடமும் பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில்
நான் இல்லை.”
“தலைவலியா? அப்படியென்றால் கஷ்டம்தான். தலைவலி இருக்கும்போது
பைத்தியம் பிடித்தமாதிரி இருக்கும் என்பதும் ஒருவரிடமும் மனம் திறந்து பேசவும்
முடியாது என்பதும் உண்மைதான். என்னால் அந்த வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தலைவலிக்கு எந்த வைத்தியமும் செய்துகொள்ளவில்லையா?”
“ஒரு வைத்தியரைப் பார்த்தேன். இங்கிருந்து ஏழு ராஜ்ஜியங்களுக்கு
அப்பால் இருக்கிற எட்டாவது ராஜ்ஜியத்தில் ஒரு இளவரசி இருக்கிறாளாம். அவளுடைய
வாய்க்குள் ஒரு மலர் இருக்கிறதாம். அந்த மலரை எடுத்துவந்து கொடுத்தால் அந்த நோயைக்
குணப்படுத்த முடியும் என்று சொன்னார்.
நான் இருக்கும் நிலையில் அந்த மலரைத் தேடி எப்படிச் செல்லமுடியும்?”
“உன்னால் செல்லமுடியாமல் இருக்கலாம். உனக்காக உன் கூட்டத்தில் இருக்கும்
வேறொருவர் முயற்சி செய்து எடுத்துவரலாமே”
“வரலாம்தான். ஆனால் அந்த அளவுக்கு எனக்காக உதவி செய்கிறவர்கள்
யாருமில்லை. யாரிடமும் கேட்பதற்கு
வழியில்லை”
“ஏன்?”
“ஒரு பேச்சுக்குத்தான் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டவர்களாக
தம்மைக் காட்டிக்கொள்வார்கள். உண்மையில் ஒவ்வொருவருமே தத்தம் எண்ணப்படி
நடப்பவர்கள். என் சொல்லைக் காது கொடுத்துக் கேட்பவர்கள் யாருமே இல்லை. என்
சொல்லால் அவர்களில் யாருக்காவது கொஞ்சமாவது ஆதாயம் இருக்கிறது என்று கருதினால்
காதுகொடுத்துக் கேட்பார்கள். இல்லையென்றால் தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்பதுபோல
சென்றுவிடுவார்கள். எல்லாமே ஒரு நடிப்புத்தான்”
ராஜநாகம் சொன்னதைக் கேட்டு இளவரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பரிதாபமாகவும் இருந்தது.
அவன் அமைதியில் மூழ்கியிருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட
ராஜநாகம் “நீ நினைத்தால் எனக்கு உதவி செய்யலாம்” என்று சொன்னது.
“என்னால் என்ன செய்யமுடியும்?” என்று குழப்பத்தோடு கேட்டான்
இளவரசன்.
”எனக்காக இங்கிருந்து எட்டாவதாக உள்ள பிரதேசத்தஏக்குச் சென்று அந்த
இளவரசியைச் சந்தித்து அந்த மலரைக் கொண்டுவரவேண்டும். அதனால் உனக்கும் ஒரு நன்மை
இருக்கிறது. அந்த இளவரசி மிகமிக அழகானவள். உனக்கு ஏற்றவளாக இருப்பாள். அவளுக்கும்
உன்னை மிகவும் பிடித்துவிடும். நீ அவளையே திருமணம் செய்துகொள்ளலாம். அந்த மலரினால்
என் தலைவலியும் நீங்கிவிடும்.”
“எல்லாம் சரி. அதனால் இந்தப் பிரதேசத்துக்கு என்ன பயன்?”
“பிற பாம்புகளிடம் நான் உனக்காக மன்றாடிக் கேட்டுக்கொள்வேன்.
எப்படியாவது அவர்களையெல்லாம் இந்தப் பிரதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு
வெளியேறிவிடுவேன்.”
“அந்தப் பாம்புகள்தான் உன் சொல்லுக்குக் கட்டுப்படாது என்று நீயே
சொன்னாயே?”
“உண்மைதான். ஆனால் என்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்வேன். என்னை
நம்பு. எலிகள் நிறைந்த இன்னொரு பிரதேசத்தைப்பற்றி எனக்குத் தெரியும். அதைப்பற்றி
எடுத்துரைத்து எப்படியாவது அவர்களுடைய மனத்தை மாற்றி இங்கிருந்து அழைத்துச்
சென்றுவிடுவேன். எப்படியாவது அந்த மலரைக் கொண்டுவந்து என்னுடைய தலைவலியைப் போக்கு”
ராஜநாகத்தின் குரல் இளவரசனின் நெஞ்சில் இரக்கத்தைத் தூண்டியது.
ஒருகணம் யோசித்த பிறகு “சரி, என்னால் ஆன முயற்சியைச் செய்து பார்க்கிறேன்”
என்றான்.
“ரொம்ப நன்றி. உன் உதவியை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்.”
“உனக்காகத்தான் நான் இங்கிருந்து செல்கிறேன். நான் திரும்பி
வரும்வரை இந்த இடத்தை நீதான் பாதுகாக்கவேண்டும். ஒரு பாம்பால் கூட இந்த இடத்துக்கோ
இங்குள்ள என் அப்பாவுக்கோ, மற்றவர்களுக்கோ எவ்விதமான துன்பமும் வராமல் நீ
பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“அந்த வாக்குறுதியை நான் உனக்கு அளிக்கிறேன். நீ நம்பிக்கையோடு
சென்று வா”
அந்தப் பிரதேசத்துக்குச் செல்லவேண்டிய திசைவிவரங்களையெல்லாம் ராஜநாகத்திடமிருந்து தெளிவாகக் கேட்டுத்
தெரிந்துகொண்டான் இளவரசன். பிறகு அந்தத் திசையை நோக்கி அக்கணமே புறப்பட்டுச்
சென்றான்.
அவன் பயணம் செய்த பாதை கடினமான பாதையாக இருந்தது. வழியில் கிடைத்த
கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, ஏரி குளங்களில் நீரருந்தி தாகத்தைப்
போக்கிக்கொண்டு கிடைத்த இடங்களில் உறங்கி எழுந்து மனம் சோர்வுறாமல் பல நாட்கள்
நடந்துகொண்டே இருந்தான்.
ஒருநாள் அவன் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றைக்
கடப்பதற்கு ஒரு படகுத்துறையும் இருந்தது. மறுகரைக்குச் சென்றால்தான் பயணத்தைத்
தொடரமுடியும். படகின் வரவுக்காக அவன் ஆற்றங்கரையில் காத்திருந்தான்.
அப்போது ஒரு இலை படகுபோல மிதந்துபோவதையும், அந்த இலை மீது ஏராளமான
எறும்புகள் இருப்பதையும் பார்த்து வியப்பில் மூழ்கினான். நீரோட்டத்தில் மிதந்தபடி
சென்ற இலை கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு பாறை மீது மோதவிருப்பதை அவன் பார்த்தான்.
பாறை மீது இலை மோதினால், அந்த வேகத்தில் இலை நிலைகுலைந்து கவிழும் என்பதையும் அதன்
மீது அதுவரை நம்பிக்கையோடு பயணம் செய்துவந்த எறும்புகள் நீருக்குள் மூழ்கிவிடும்
என்பதையும் அவன் மனம் உணர்ந்தது. அக்கணமே அவற்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்
என்று அவன் நினைத்தான். உடனே தாவி அடியெடுத்து வைத்து, பாறையில் இலை மோதுவதற்கு
முந்தைய கணத்தில் அதைத் தன் கையில் ஏந்திக்கொண்டான். மெதுவாக கரைக்குத் திரும்பி இலையைக் கீழே
வைத்தான். எல்லா எறும்புகளும் உயிர்பிழைத்தன.
”எங்களை உயிர்பிழைக்க வைத்ததற்கு மிகவும் நன்றி” என்று எல்லா
எறும்புகளும் ஒரே குரலில் கூறின.
கீச்சுக்கீச்சென்ற எறும்புகளின் பேச்சு அவனுக்கு மிகவும்
மகிழ்ச்சியை அளித்தது. “ரொம்ப மகிழ்ச்சி. சென்று வாருங்கள். நான் படகுக்காகக்
காத்திருக்கிறேன்” என்று சொன்னான் இளவரசன். “சென்று வாருங்கள். நீங்கள் செல்லும்
காரியம் வெற்றியடைய எங்கள் வாழ்த்துகள்” என்று ஒரே குரலில் எல்லா எறும்புகளும்
கூறின. அவனும் புன்னகை மாறாத முகத்துடன் எல்லா எறும்புகளையும் பார்த்து “நன்றி
நன்றி” என்று சொன்னான்.
“உங்களுக்கு வழியில் ஏதேனும் பிரச்சினை வந்தால் ஒருகணம் எங்களை
மனத்தில் நினைத்துக்கொள்ளுங்கள். உடனே நாங்கள் அங்கு வந்து எங்களால் ஆன உதவியைச்
செய்வோம்”
எறும்புகளின் கூற்று அவனுக்கு விசித்திரமாக இருந்தது. மிக்க
மகிழ்ச்சியோடு “தேவைப்படும்போது அவசியம் அழைக்கிறேன்” என்று சொல்லி விடை
கொடுத்தான். அவன் அதுவரை எதிர்பார்த்த படகு வந்ததும் ஏறி மறுகரைக்குச் சென்று
பயணத்தைத் தொடர்ந்தான்.
காட்டுவழியில் அவன் விசித்திரமான ஒரு காட்சியைக் கண்டான்.
உடல்பருத்த ஒருவன் குறுக்கில் மல்லாந்து படுத்திருந்தான். திறந்திருந்த அவன்
வாயில் ஒரு பெரிய மரம் வேர்விட்டு வளர்ந்திருந்தது. அவன் புரளவும் முடியாமல்
நகரவும் முடியாமல் படுத்த நிலையிலிருந்தே ஏதேதோ ஓசைகளை எழுப்பி கைகளை
அசைத்துக்கொண்டிருந்தான்.
அவன் எழுப்பிய ஓசையைக் கேட்டு இளவரசன் அவனுக்கு அருகில் சென்றான்.
அவன் தன் கண்ணசைவாலேயே தனக்கு உதவி செய்யும்படி இளவரசனிடம் கேட்டுக்கொண்டான்.
அவனுடைய அரைகுறையான சொற்கள் வழியாக அவனுடையை கதையைப்பற்றிக் கேட்டபோது அவன்மீது
இரக்கம் பிறந்தது.
வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் உறங்கும் பழக்கம் கொண்டவன்
என்றும் உறக்கத்தில் அவன் வாய் தன்னிச்சையாக திறந்து திறந்து மூடும் என்றும் அவன்
தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டான். அவ்விதமாக ஒருநாள் உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கும்போது வானத்தில் பறந்துசென்ற ஏதோ ஒரு பறவை வாய்க்குள்
எச்சமிட்டுவிட்டுச் சென்றுவிட்டது என்றும் அதன் விளைவாக ஒரு மரம் முளைத்து
வளர்ந்துவிட்டது என்றும் தன் உடலை அசைக்கமுடியாதபடி அது செய்துவிட்டது என்றும் சொல்லிப்
புலம்பினான். வேதனையின் துன்பத்திலிருந்து
தன்னை எப்படியாவது காப்பாற்றும்படியும் கேட்டுக்கொண்டான்.
அவனுடைய மன்றாடும் குரலைக் கேட்டதும் இளவரசனின் நெஞ்சில் கருணை
பிறந்தது. எந்த விதத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று யோசித்தான். மரத்தை வேரோடு
சாய்த்தால்தான் அவனைக் காப்பாற்றமுடியும் என்பதை அவன் புரிந்துகொண்டான். அதன்
தொடக்கமாக ஒவ்வொரு கிளையாக உடைத்து அகற்றவேண்டும் என்பதையும் புரிந்துகொண்டான்.
“பயப்படாதே, நான் உன்னைக் காப்பாற்ற என்னால் ஆன முயற்சியைச்
செய்கிறேன்” என்று அவனுக்கு வாக்குறுதி அளித்தான் இளவரசன். பிறகு உயர்ந்து வளர்ந்திருக்கும்
அம்மரத்தில் ஏறி உச்சிக்கிளைக்குச் சென்றான். ஒவ்வொரு கிளையாக ஒடித்து முரித்து
கீழே வீசத் தொடங்கினான். உச்சிக்கிளை, பிறகு அதை அடுத்து விரிந்திருக்கும்
கிளைகள், அதன் பிறகு அவற்றைத் தொடர்ந்து விரிந்திருக்கும் கிளைகள் என ஒவ்வொன்றாக
முரித்து முரித்துச் சாய்த்தான்.
பொழுது சாயும் வேளையில் எல்லாக் கிளைகளையும் சாய்த்துவிட்டான்.
இப்போது அடிமரம் மட்டுமே எஞ்சியிருந்தது. தன் மொத்த வலிமையையும் பயன்படுத்தி, அதையும்
அசைத்துப் பிடுங்கி கீழே வீழ்த்தினான். மரம் முழுவதும் அகற்றப்பட்டதும் தன் கை
கால்களை எளிதாக அசைத்தபடி புரண்டு எழுந்து நின்றான் அம்மனிதன். இளவரசன் முன்னால்
தலைவணங்கி நன்றி சொன்னான்.
”நல்லது. நான் ஒரு முக்கியமான வேலையைச் செய்துமுடிப்பதற்காக
சென்றுகொண்டிருக்கிறேன். இனியாவது கவனமாக இரு” என்று சொன்னான் இளவரசன்.
அவன் சொன்னதை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அம்மனிதன் இளவரசன் செய்த
உதவியை என்றென்றும் மறக்கமாட்டேன் என்றும் என்றாவது ஒருநாள் அவனுக்கு உதவி
தேவைப்படும் சமயத்தில் தன்னை நினைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அப்போது அவன்
எதிரில் தோன்றி வேண்டிய வேலைகளைச் செய்துகொடுப்பேன் என்றும் தெரிவித்தான். பிறகு
வணக்கம் சொல்லி இளவரசனுக்கு விடைகொடுத்தான்.
பல நாட்கள் தொடர்ச்சியாக நடந்த பிறகு, ஒருவழியாக இளவரசி வசிக்கும் எட்டாவது
பிரதேசத்தை அடைந்தான். அரண்மனையின் இருப்பிடம் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு
அரண்மனைக்குச் சென்றான்.
அப்போது அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கெங்கும்
பாடல்களும் நடனங்களும் அரங்கேறியபடி இருந்தன. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
என்ன காரணம் என்று புரியாமல் அவன் சில கணங்கள் திகைத்து நின்றான். பக்கத்தில்
நின்றிருந்தவர்களிடம் அதைக் குறித்து விசாரித்தான். அவர்கள் அன்று இளவரசிக்கு
சுயம்வரம் நிகழவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்வதற்காக பல நகரங்களிலிருந்து பல
இளவரசர்கள் வந்திருப்பதாகவும்
சொன்னார்கள்.
சரியான தருணத்தில்தான் தான் அங்கு வந்திருப்பதாக இளவரசன்
நினைத்துக்கொண்டான். அந்த சுயம்வரத்தில் தானும் கலந்துகொள்ளவேண்டும் என்று
தீர்மானித்துக்கொண்டான். ஒருவேளை அந்தச் சுயம்வரத்தில் அவள் தன்னைத்
தேர்ந்தெடுக்காமல் போனால் அந்த வலியும் வேதனையும் தாங்கமுடியாததாக இருக்கும்
என்றும் அவனுக்குத் தோன்றியது. அதுமட்டுமின்றி, இவ்வளவு தொலைவு பாடுபட்டு
வந்ததற்குப் பலன் இல்லாமலும் போகும் என்றும் தோன்றியது.
மனம் தளராத இளவரசன் அரண்மனைக்குள் சென்று அரசனைச் சந்தித்து தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டான். அந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகவும்
தெரிவித்தான். அவன் பெயர், பிரதேசம் போன்ற விவரங்களைக் குறித்துக்கொண்ட அரசனின்
ஆட்கள், சுயம்வரக் கூடத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
கூடத்தில் அவனைப்போலவே பலர் வந்து நிறைந்திருந்தனர். சுயம்வரத்தில்
மூன்று போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்த அரசன் முதல் போட்டிக்கான நிபந்தனையை
முதலில் தெரிவித்தான்.
மூடப்பட்டிருந்த ஒரு பெரிய கூடத்தின் முன்னால் எல்லாப்
போட்டியாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். கூடத்துக்குள் அரிசிமூட்டைகளும்
தானியமூட்டைகளும் கலந்து அடுக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றைத் திறந்து பார்க்காமல்
தனித்தனியாக பிரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அடுக்கவேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு இளவரசனுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு
இளவரசனாக உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வேலையைச்
செய்துமுடிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி வந்தனர்.
மலரைத் தேடி வந்த இளவரசன் மட்டுமே எஞ்சியிருந்தான். ”இப்படி ஒரே
கூடத்தில் எல்லா மூட்டைகளையும் கலந்து எதற்காக அடுக்கினீர்கள்? இந்தப் போட்டிக்காக
இப்படி அடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?” என்று தன்
முன்னால் நின்றிருந்த அமைச்சரிடம் கேட்டான்.
“அரிசிமூட்டைகளை அடுக்க ஒரு கூடமும் தானிய மூட்டைகளை அடுக்க
இன்னொரு கூடமும் இந்த அரண்மனையில் இருக்கின்றன. ஆனால் அறுவடை நிகழ்கிற
சமயத்தில்தான் ஒரு கூடத்தில் பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அதனால்
எல்லா மூட்டைகளையும் ஒரே கூடத்தில் அடுக்கிவைத்துவிட்டோம். மூட்டைகளைச்
சுமந்துவந்த வண்டிகள் மீண்டும் அறுவடைக்களத்துக்குச் செல்லவேண்டிய நெருக்கடி
இருந்ததால் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைத்துவிட்டு வேகவேகமாகச் சென்றுவிட்டனர்.
இதனால் இரண்டு விதமான மூட்டைகளும்
கலந்துவிட்டன” என்று விளக்கினார்.
எல்லோரும் தோற்றுவிட்டதால், அப்போட்டியில் வெற்றி பெறவேண்டியது
மிகமுக்கியம் என்று அவன் நினைத்தான். அவனைக் கூடத்துக்குள் அனுப்பிவைத்துவிட்டு
அமைச்சர் கதவுகளை மூடினார்.
கூடத்துக்குள் சென்ற இளவரசன் தன் முன்னால் குவிந்திருந்த
மூட்டைகளைப் பார்த்து ஒரு கணம் மலைத்து நின்றான். ஒவ்வொன்றையும் தொட்டுப்
பார்த்தான். எல்லாம் ஒன்றுபோலவே காட்சியளித்தன. இவற்றை எப்படிப் பிரித்தெடுப்பது
என்று நினைத்துக் குழம்பினான்.
திடீரென அவனுக்கு வழியின் சந்தித்த எறும்புகளின் நினைவு வந்தது.
இத்தருணத்தில் அவை உதவக்கூடும் என அவனுக்குத் தோன்றியது. உடனே அவற்றை நினைத்து
வேண்டினான். கண்மூடி கண் திறப்பதற்குள் அவன் முன்னால் எறும்புக்கூட்டம் தெரிந்தது.
மகிழ்ச்சியோடு போட்டி விவரத்தை அந்த எறும்புகளுக்குத் தெரிவித்தான்
இளவரசன். ஒவ்வொரு மூட்டையிலும் சின்னஞ்சிறிய ஓட்டைகளை உருவாக்குவதாகவும்
அவற்றிலிருந்து சிந்தும் பொருளை வைத்து நெல்லா, தானியமா என்று
தெரிந்துகொள்ளமுடியும் என்றும் எறும்புகள் கூறின. அவனுக்கும் அது நல்ல யோசனையாகவே
தோன்றியது. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் நேரக் கட்டுப்பாட்டை எறும்புகளிடம் அவன்
தெரிவித்தான். தலையாட்டிக்கொண்டே எறும்புகள் உற்சாகமாக தம் வேலையைத் தொடங்கின.
அவ்வெறும்புகளுக்கு உதவுவதற்காக பல மூலைகளிலிருந்து எறும்புகள் தோன்றி சாரைசாரையாக
வந்து மூட்டைகளை நெருங்கிச் சென்றன.
எறும்புகள் உருவாக்கிய பொத்தல் வழியாகச் சிதறிய ஒன்றிரண்டு மணிகளை
வைத்து இளவரசன் அரிசிமூட்டை எது, தானியமூட்டை எது என்பதை எளிதாகத்
தெரிந்துகொண்டான். ஒவ்வொன்றையும் தனித்தனி மூலைகளில் பிரித்து அடுக்கத்
தொடங்கினான். எறும்புகளின் உதவியால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவன் அந்த
வேலையைச் செய்துமுடித்தான்.
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த இளவரசனை, அங்கு கூடியிருந்த
அனைவரும் வியப்போடு பார்த்தனர். மலர்ந்திருந்த அவன் முகத்தைப் பார்த்ததுமே அவன்
வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். வேகவேகமாக உள்ளே சென்று பரிசோதித்த அமைச்சரின்
ஆட்கள் அனைத்தும் சரியாக வகைப்படுத்தப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டுள்ளன என்று
தெரிவித்தனர்.
உடனே அரசருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரும் கூடத்துக்கு
விரைந்துவந்து சோதித்துப் பார்த்தார். வெற்றி பெற்ற இளவரசனைப் பாராட்டிவிட்டு
அன்றிரவு அரண்மனையிலேயே தங்கி ஓய்வெடுக்குமாறும் இரண்டாவது போட்டியை அடுத்தநாள்
காலையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
விருந்தினர் மாளிகையின் அறையொன்றில் இளவரசன் தங்குவதற்கு
ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீண்ட
நாட்களுக்குப் பிறகு அவன் படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் இரண்டாவது போட்டிக்காக ஆட்கள் வந்து இளவரசனை அழைத்துச்
சென்றனர். அரண்மனையின் இன்னொரு திசையிலிருந்த வேறொரு கூடத்துக்கு அவனை அழைத்துச் சென்றனர்.
அதுவும் பூட்டப்பட்டிருந்தது. அங்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் இளவரசன்.
அங்கு நின்றிருந்த அமைச்சர் அந்தக் கூடத்தில் ஏராளமான உணவு வகைகளும் மோரும் உள்ளன
என்றும் ஒரே நாளில் அவை அனைத்தையும் உண்டுமுடிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கூடத்தைத் திறந்து இளவரசனை மட்டும் தனியாக உள்ளே அனுப்பிவிட்டு,
மீண்டும் கதவுகளைப் பூட்டிக்கொண்டனர் காவலர்கள். விதவிதமான உணவு வகைகளைப் பார்த்து
என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் இளவரசன். உணவின் மணம்
மயங்கவைத்தது.
திடீரென வரும் வழியில் சந்தித்த பருத்த மனிதனின் நினைவு வந்தது.
உடனே அவனை நினைத்து சில கணங்கள் கண்களை மூடினான். அடுத்த கணமே அவன் அங்கு தோன்றி
என்ன உதவி வேண்டும் என்று கேட்டான். அந்த மனிதனிடம் இளவரசன் நடந்த எல்லாச்
செய்திகளையும் தெரிவித்தான். கவலைப்படாதீர்கள் என இளவரசனை அமைதிப்படுத்திய அவன்
ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிடத் தொடங்கினான். வெகுவேகமாக
ஒவ்வொரு பாத்திரமாக காலியாகத் தொடங்கியது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவன்
எல்லா உணவுவகைகளையும் சாப்பிட்டு முடித்தான் அவன். பெரிய அண்டாவில்
நிரப்பிவைக்கப்பட்டிருந்த மோரையும் குடித்து முடித்து ஏப்பம் விட்டான். இளவரசன்
அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவைத்தான்.
குறிப்பிட்ட நேரம் முடிவடையும் வரையில் உள்ளேயே அமர்ந்திருந்தான்
இளவரசன். கதவைத் திறந்து வேலைக்காரர்கள்
உள்ளே வந்து அழைத்தபோதுதான், உண்ட களைப்பில் அடியெடுத்து நடக்கமுடியாதவனைப்போல அவர்களுடைய
தோள்களைப் பற்றி அடிமேல் அடிவைத்து வெளியே வந்தான் இளவரசன்.
உடனே அரசருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரும் கூடத்துக்கு
விரைந்துவந்து எங்கெங்கும் தலைகீழாக உருண்டு கிடந்த வெற்றுப் பாத்திரங்களைப்
பார்த்தார். பிறகு வெற்றி பெற்ற இளவரசனைப் பாராட்டிவிட்டு அறைக்குச் சென்று
அன்றிரவு நன்கு உறங்கி ஓய்வெடுக்குமாறும் இறுதிப்போட்டியை மறுநாள் காலையில்
வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
மறுநாள் விடிந்தது. காலை உணவை முடித்துக்கொண்ட பிறகு இளவரசனைச்
சந்திக்க அமைச்சர் வந்தார். ஊர் எல்லையில் ஆராய்ச்சி மணியைப்போல ஒரு பெரிய
மணி அமைக்கப்பட்டிருப்பதாகவும், தனியொரு
ஆளாக அங்கு நடந்து சென்று அதை அசைத்து
ஓசையெழுப்பவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்போட்டியில் தோற்றுவிட்டால், முதலில்
வென்ற இரு போட்டிகளிலும் அவன் தோற்றதாகவே அறிவிக்கப்படுவான் என்றும் அவர்
தெரிவித்தார். விதிக்கு உடன்பட்ட இளவரசன் ஊர் எல்லையை நோக்கி நடந்துசென்றான்.
நீண்ட நேரம் நடந்த பிறகு அவன் எல்லையை அடைந்தான். அங்கு
வடிவமைக்கப்பட்டிருந்த மணியின் உருவத்தைப் பார்த்து அவன் மலைத்து நின்றுவிட்டான்.
ஏறத்தாழ ஒரு சிறிய குன்றைப்போன்ற உயரத்தில் அந்த மணி வடிவமைக்கப்பட்டிருந்தது. சில
கணங்கள் அதையே கண்கொட்டாமல் பார்த்து நின்றான். அவ்வளவு உயரமான மணியின் நடுவில்
ஒரு பெரிய பனைமரத்தைப்போல அதன் நாக்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் நுனியில்
பிணைக்கப்பட்டிருந்த இரும்புக்கயிறு தொட்டுத் தூக்கமுடியாதபடி எடையோடு இருந்தது.
என்ன செய்வது என்று புரியாமல் நீண்ட நேரம் அந்த மணியைச்
சுற்றிச்சுற்றி வந்தான் இளவரசன். உணவை உண்டு உதவிய மாமனிதனை மீண்டும்
நினைத்துக்கொண்டான். அவனைத் தவிர அத்தருணத்தில் தனக்கு யாரும் உதவமுடியாது என்று
அவனுக்குத் தீர்மானமாகத் தெரிந்தது.
அவன் நினைத்ததுமே ஆஜானுபாகுவான தோற்றத்துடன் அந்த மனிதன் வந்து
நின்றான். தன் கண்முன்னே குன்றென எழுந்து
நின்றிருக்கும் மணியைக் காட்டி போட்டி விவரத்தை அவனிடம் சொன்னான் இளவரசன்.
“அதற்கென்ன, அடித்து ஓசையெழுப்பிவிடலாம்” என்று சொன்னபடி அசைந்து அசைந்து அந்த மணியின்
நாக்கு தொங்கும் இடத்துக்குச் சென்றான். ஒரு சாதாரண கயிற்றைத் தொட்டு எடுப்பதுபோல
அதை எடுத்து அசைத்தான். மணியின் சுவர்களின் அது முன்னும் பின்னுமாக மோதி
டண்டண்ணென்ற ஓசை அலையலையாக எழுந்தது. அவனுடைய வலிமையைப் பார்த்து வியந்தபடி
பேச்செழாமல் நின்றான் இளவரசன்.
எல்லாத் திசைகளிலும் ஓசை பரவத் தொடங்கியதும் பெரிய உடல்கொண்ட
மனிதன் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றான். மணியோசையைக் கேட்டதும்
அரண்மனையிலிருந்து வீரர்கள் புறப்பட்டு வந்து இளவரசனை அழைத்துச் சென்றனர்.
அமைச்சர் அவனைப் பாராட்டி அரசனிடம் அழைத்துச் சென்றார்.
இளவரசனை அரசர் தழுவி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த
அரங்கத்திலேயே அவனுக்கும் இளவரசிக்கும் திருமணம் செய்துவைத்தார். ஒன்றிரண்டு
நாட்கள் அங்கு தங்கி விருந்துண்ட பிறகு, இளவரசியை அழைத்துக்கொண்டு தன் சொந்த
பிரதேசத்துக்குப் பயணமானான் இளவரசன்.
அந்தப் பயணத்தில் இருவரும் உரையாடிக்கொண்டே சென்றபோதும், அதுவரை தன்னிடம் இளவரசி ஒருமுறை கூட சிரிக்கவே
இல்லை என்பதை உணர்ந்தான் இளவரசன். அது அவனுக்கு புரிந்துகொள்ள முடியாத புதிராக
இருந்தது. ஒரு பெண்ணால் சிரிப்பே இல்லாமல் எப்படிப் பேசமுடிகிறது என நினைத்து அவன்
குழப்பத்தில் மூழ்கினான். சிரிப்பே
இல்லாமல் பேசுகிற ஒருத்தி தன் வாய்க்குள் ஒரு மலரை எப்படி வைத்திருக்கமுடியும்
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அந்த மலர் இல்லாமல் ராஜநாகத்தை எப்படி
எதிர்கொள்வது என்றும் அதற்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்றும்
யோசித்தான்.
இறுதியாக எது நிகழ்ந்தாலும்
எதிர்கொள்ளும் மன உறுதியோடு தன் பயணத்தின் நோக்கத்தைப்பற்றி இளவரசியிடம்
மனம் திறந்து விரிவாகச் சொன்னான். தன் ராஜ்ஜியத்தில் எலித்தொல்லை அதிகரித்ததையும்
அது மாறி பாம்புத்தொல்லை அதிகரித்ததையும் அதனால் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்ததையும்
தானும் தன் தந்தையும் காட்டில் கூடாரம் எழுப்பித் தங்கியதையும் ஏழுதலை கொண்ட
ராஜநாகத்தைச் சந்தித்ததையும் அது தன் தலைவலியைப்பற்றி எடுத்துரைத்ததையும் அதைப்
போக்குவதற்கான மலரை எடுத்துச் செல்வதற்காக இளவரசியின் ராஜ்ஜியம் வரைக்கும்
வந்ததையும் விரிவாகவே எடுத்துரைத்தான்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட இளவரசி எந்த மலரும் தன்னிடம் இல்லை
என்று ஒரே வரியில் பதில் சொன்னாள். அந்தப் பதிலைக் கேட்டு இளவரசன் ஏமாற்றத்தில்
ஆழ்ந்தான்.
“ஒருவேளை ராஜநாகம் உங்களை ஏமாற்றித் திசைதிருப்பி
ராஜ்ஜியத்தைவிட்டு வெளியேற்றுவதற்காக இந்தக் கட்டுக்கதையைக் கிளப்பியிருக்கும்
என்று தோன்றுகிறது” என்றாள் இளவரசி.
இளவரசியின் கூற்று அவனைக் குழப்பியது. “என்ன சொல்கிறாய் நீ?
ராஜநாகம் என்னை ஏமாற்றிவிட்டது என்றா சொல்கிறாய்?” என்று கேட்டான்.
“நீங்கள் மட்டுமே அந்த நாகத்தை துணிவோடு எதிர்த்து நின்றீர்கள்.
அதனால் உங்களை அச்சூழலிலிருந்து அகற்றிவிட்டால் ராஜ்ஜியத்தில்
இருப்பவர்களையெல்லாம் அழித்துவிடலாம் என அது திட்டமிட்டிருக்கலாம் அல்லவா?”
இளவரசியின் கூற்றை அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல்
இருக்கவும் முடியவில்லை. ஒரு கணம் அமைதியாக இருந்தான்.
“அப்படிச் செய்வதன் மூலம் அது எதைச் சாதிக்க நினைத்திருக்கும்?”
“ஒருவேளை உங்கள் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி நாகங்களின் ராஜ்ஜியமாக
மாற்றிக்கொள்ளக்கூடத் திட்டமிட்டிருக்கலாம்”
அதைக் கேட்டு ஐயோ என்று தலையில் கை வைத்துக்கொண்டான் இளவரசன்.
அதைக் கண்டு இளவரசியும் துயரம் கொண்டாள்.
“நான் சொல்வதுபோல நிகழ்ந்திருக்கும் என நினைக்கவேண்டாம். அப்படி
ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது என்பதால் நான் அப்படிச் சொன்னேன். தவறாக
நினைக்கவேண்டாம்” என்று பேச்சைத் திசைதிருப்பினாள்.
அதைக் கேட்டு சற்றே அமைதி கொண்டான் இளவரசன். ஆயினும் அவனால்
தொடர்ந்து உரையாட முடியவில்லை. மெளனமாகவே இருந்தான்.
அவனைப் பார்க்கப் பார்க்க இளவரசிக்குப் பரிதாபமாக இருந்தது.
இவ்வளவு அப்பாவியாக இருக்கிறானே என நினைத்தாள். அவன் கவனத்தைத் திசைதிருப்பும்
வகையில் எதைஎதையோ பேசத் தொடங்கினாள். அவள் சொல்வதையெல்லாம் அவன் உம் கொட்டி
கேட்டுக்கொண்டு வந்தானே தவிர, அவன் முகம் மலரவில்லை.
அவனை உரையாடவைக்கும் விதமாக “உங்களிடம் ஒன்று கேட்பேன். உண்மையைச்
சொல்வீர்களா?” என்று கேட்டாள் இளவரசி. என்ன என்பதுபோல இளவரசியின் கண்களை
நோக்கினான் இளவரசன்.
“கூடத்தில் கலந்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சரியாக
இனம்கண்டு எப்படிப் பிரித்தீர்கள்? கூடம் நிறைய வைக்கப்பட்டிருந்த உண்வுவகைகளை
எப்படி ஒரே ஆளாகச் சாப்பிட்டு முடித்தீர்கள்? பனைமரம் போல நீண்டிருந்த மணியின்
நாக்கை அசைத்து எப்படி ஓசையெழுப்பினீர்கள்?” என்று கேட்டாள்.
அந்தக் கேள்விகளைக் கேட்ட பிறகு, அவளிடம் உண்மையைச் சொல்ல அவன்
விரும்பினான். அப்போதாவது தன் மனபாரம் குறையாதா பார்க்கலாம் என அவன் நினைத்தான்.
உடனே தொண்டையைச் செருமிக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் துணை
நின்றவர்களைப்பற்றியும் அவர்களுக்கு தான் உதவியதைப்பற்றியும் விரிவாக ஒரு கதை
சொல்வதுபோலச் சொன்னான். அவன் சொல்லச்சொல்ல அனைத்தையும் பொறுமையாகக் கேட்டாள்
இளவரசி. அவன் கதையை விவரித்த விதம் அவளுக்குள் ஒருவித கிளர்ச்சியையும்
மகிழ்ச்சியையும் ஊட்டியது. மகிழ்ச்சியில் அவன் தோளோடு தோள் உரச நெருங்கி
உட்கார்ந்தாள்.
இறுதிக்கதையை அவன் சொல்லி முடித்த தருணத்தில் அவள் மிகவும் இயல்பாக
கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். அந்தச் சிரிப்பைக் கேட்டு அவன் ஆனந்தம் கொண்டான்.
அவள் மேலும் மேலும் வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் கதையை இழுத்துச் சொன்னான்.
அவள் மனம்விட்டுச் சிரித்த கணத்தில் எதிர்பாராத வகையில் அவள் வாய்க்குள்ளிருந்து
பளிச்சென்ற நிறத்துடன் மூன்று மலர்கள் விழுந்தன. அவற்றை தன் கைகளில் ஏந்திப்
பெற்றுக்கொண்டான் இளவரசன். “பார்த்தாயா, மலர்” என்று அவளிடம் காட்டிப்
புன்னகைத்தான். அவளும் அந்த மலர்களை நம்பமுடியாத வியப்புடன் தொட்டுப் பார்த்தாள்.
“உன் சிரிப்பில் அந்த மலர் ஒளிந்திருக்கிறது என்பது அந்த
ராஜநாகத்துக்குத் தெரிந்திருக்கிறது” என்றான் இளவரசன். அவன் சொற்களைக் கேட்டதும்
இளவரசி மீண்டும் சிரித்தாள்.
ஒருவழியாக இளவரசன் தன் ராஜ்ஜியத்தை அடைந்தான். காட்டில் தன்
கூடாரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தான். கூடாரத்துக்கு வெளியே
கட்டிலில் ராஜா உட்கார்ந்திருந்தார். காவலர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
“மகனே, எங்கே போய்விட்டாய் நீ? உன்னைக் காணாமல் நான்
தவித்துப்போய்விட்டேன்” என்று கண் கலங்கினார் ராஜா. இளவரசன் நடந்த
விஷயங்களையெல்லாம் சொல்லி இளவரசியை அறிமுகப்படுத்தினான். இருவரும் ராஜாவின் காலில்
விழுந்து ஆசி பெற்றனர்.
இளவரசன் கூடாரத்துக்கு வெளியே இருந்த மரத்துக்கருகில் சென்று
ராஜநாகத்தை அழைத்தான். “ராஜநாகமே, வெளியே வா. உன் தலைவலியை நீக்கும் மலரைக்
கொண்டுவந்துள்ளேன்” என்றான். அடுத்த கணமே மரத்திலிருந்து ராஜநாகம் இறங்கிவந்தது.
அவன் தன் கையிலிருந்த மலர்களை ராஜநாகத்தின் முன் வைத்தான். ராஜநாகம் தன் ஏழு
தலைகளும் அந்த மலர்கள் மீது படும் வகையில் குனிந்து புரண்டது.
“ஆகா, என் தலைவலி போய்விட்டது. பெரிய பாரம் இறங்கியதுபோல
இருக்கிறது” என்றது ராஜநாகம். “மிக்க நன்றி இளவரசே. மிக்க நன்றி” என்று உடலை
நெளித்து வணங்கியது.
இளவரசன் புன்னகையோடு அந்த நன்றியை ஏற்றுக்கொண்டான். ஒருகணம்
இளவரசியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா?” என்பதுபோல புன்னகைத்தான்.
பிறகு ராஜநாகத்தின் பக்கம் திரும்பி “நான் உனது கோரிக்கையை
நிறைவேற்றிவிட்டேன். இப்போது நீ உனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உன் கூட்டத்தாரை
அழைத்துக்கொண்டு இந்த ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்” என்றான்.
“இப்போதே செல்கிறேன்” என்று சொன்னபடி தன் ஏழு தலைகளும் நிலத்தில்
பதிய ஒருமுறை குனிந்து இளவரசனை வணங்கியது ராஜநாகம். பிறகு உடலை வளைத்துத் திரும்பி
ஊரில் வசிக்கும் பிற பாம்புகளுடன் உரையாடி அழைத்துச் செல்ல வேகவேகமாக ஊர்ந்து
சென்றது.
(கிழக்கு டுடே
– இணைய இதழ், 12.04.2025)