Home

Saturday, 22 August 2026

போட்டிகளும் பரிசுகளும்

 

காலை நடைப்பயிற்சிக்குப் புறப்படும் நேரத்தில் வழக்கமாக என்னோடு சேர்ந்துகொள்ளும் நண்பர் இரண்டு நாட்களாக  வரவில்லை.  ஏதேனும் அவசர வேலையாக  அதிகாலையிலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருக்கக்கூடும் என முதல்நாள் நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது நாளும் அவர் வரவில்லை.  அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என  எதைஎதையோ நினைத்து மனம் குழப்பமடையத் தொடங்கியது. அதனால் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கைப்பேசி வழியாக அவரை அழைத்தேன்.

ஏழெட்டு மணியோசைகளுக்குப் பிறகு அவருடைய மகள் எடுத்து ”என்ன அங்கிள்?” என்று கேட்டாள். “ரெண்டு நாளா அப்பா வாக்கிங் வரலை. அதான் என்னாச்சின்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு கூப்பிட்டேன்மா” என்றேன். “அது ஒரு பெரிய கதை அங்கிள். வீட்டுல படிக்கட்டு எறங்கும்போது கால் வழுக்கி கீழ விழுந்துட்டாரு. கால் பொதபொதனு வீங்கிடுச்சி. டாக்டர்கிட்ட காட்டி கட்டு கட்டிட்டு வந்திருக்கோம். எக்ஸ்ரே பார்த்துட்டு மைல்ட் க்ராக் இருக்குதுன்னு சொன்னாரு டாக்டர். ஒழுங்கா நடக்க இன்னும் ரெண்டுமூனு வாரமாவது ஆகும்” என்றாள்.

அதைக் கேட்கும்போதே எனக்குப் பகீர் என்று இருந்தது. என்னை அறியாமல் “ஐயையோ” என்று சத்தமிட்டுவிட்டேன். என்னமோ நானே விழுந்துவிட்டதுபோல மனமெங்கும் ஒரு வேதனை படர்ந்தது. “சரிம்மா, அப்பாவை தைரியமா இருக்கச் சொல்லும்மா. ஒரு பத்து மணிக்கு மேல வீட்டுப் பக்கமா நான் வரேன்” என்று சொல்லிவிட்டு உரையாடலை முடித்துக்கொண்டேன்.

குளியல், சிற்றுண்டி எல்லாம் முடிந்தபிறகு பத்துமணிக்கு மேல் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவர் கூடத்தில் சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி கைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். முன்பக்கத் தோட்டத்தையொட்டி இருந்த கம்பிகதவைத் தள்ளும் சத்தத்தைக் கேட்டதுமே அவர் என்னைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க. பத்தரமா படியேறி வாங்க” என்று வரவேற்றார். ”விழுந்து எழுந்த அனுபவத்துல பேசறீங்க போல இருக்குது” என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றேன்.

அவருக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி கட்டு கட்டப்பட்ட அவருடைய காலையே பார்த்தேன். ”இப்படி நடந்திருக்குதுன்னு ஒரு தகவல் கூட எனக்குச் சொல்ல மாட்டிங்களா நீங்க?” என்று ரெண்டுமூனு நிமிஷம் திட்டித் தீர்த்தேன். அவர் என்னமோ நான் அவரைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதையெல்லாம் ரசித்துக் கேட்டார்.

“வீட்டுல யாரும் இல்லையா?” என்று நானே பேச்சை மாற்றினேன்.

“பொண்ணும் பையனும் ரெண்டு பேரும் வேலைக்குக் கெளம்பிப் போயிட்டாங்க. மனைவி காய்கறிக்கடை வரைக்கும் போயிருக்காங்க” என்று பதில் சொன்னார் நண்பர்.

தடுமாறி விழுந்த அனுபவத்தை அவர் சிறிது நேரம் விரிவாகச் சொல்லத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, வயதான காலத்தில் குளியலறையிலும் பிற இடங்களிலும் கால் தடுக்கி விழுந்து அடிபட்ட சொந்தக்காரர்களின் கதைகளையும் நினைவிலிருந்து சொன்னார். “உங்களுக்கும் என் வயசுதான? இனிமே நீங்களும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்று கடைசியாகச் சொல்லிமுடித்தார்.

நான் பேச்சை மாற்றும் விதமாக “மொபைல்ல என்னமோ ரொம்ப ஆர்வமா பார்த்திட்டிருந்தீங்க போல. என்ன அது?” என்று கேட்டேன்.

“அதுவா? நம்ம சிவஞானம் ஜல்லிக்கட்டு பார்க்கப் போயிருக்காரு. அங்க அவர் எடுத்த படங்களை அனுப்பி வச்சிருக்காரு. அதைத்தான் பார்த்துட்டிருந்தேன்” என்றபடி அவர் என்னிடம் அந்தக் கைப்பேசியை கொடுத்தார்.

அந்தப் படங்களை ஒவ்வொன்றாகத் தள்ளித்தள்ளிப் பார்க்கத் தொடங்கினேன். எல்லாமே கூர்மையான கொம்புகளோடும் உயர்ந்த திமிலைகளோடும் வெறிகொண்ட விழிகளோடும் பாயும் காளைகளின் படங்கள். ஒவ்வொரு காளையும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. அவற்றின் தோற்றம் அச்சமூட்டுவதாக இருந்தது.

எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு அவரிடம் கைப்பேசியைத் திருபிக் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக்கொண்டே “எனக்கு ஒரு கேள்வி இருக்குது. அதுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்” என்று தெரிவித்தார் நண்பர்.

“என்ன கேள்வி?” என்றபடி அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“காளைக்குப் பின்னால மனுஷங்க கூட்டமா ஓடி ஓடி விரட்டறதும் புடிக்கறதும் விழறதும் எழுந்திருக்கறதுமா இருக்கற இந்தக் கூத்துக்கு, சம்பந்தமே இல்லாம ஜல்லிக்கட்டுன்னு ஏன் பேரு வந்தது? அந்தப் பேருல காளையுடைய அடையாளமும் இல்லை. மனுஷனுடைய அடையாளமும் இல்லை.”

நான் அவர் முகத்தையே ஒரு கணம் பார்த்தேன். உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறெதுவும் அவர் கண்களில் தெரியவில்லை.

“அது ஜல்லிக்கட்டு கிடையாது. சல்லிக்கட்டு”

“நீங்க சொல்ற கதை புதுசா இருக்குதே. அது என்ன சல்லிக்கட்டு?”

“இப்ப நம்ம ஊரு திருவிழாவுல வழவழன்னு எண்ணெய் ஒழுகற கம்பத்து உச்சியில சில்லறை வச்சிருக்கிற பானையைக் கட்டிட்டு, கம்பத்துல வழுக்காம ஏறி எடுத்துக்கறவன் அந்தப் பணத்தை எடுத்துக்கலாம்ன்னு  ஒரு போட்டி வைக்கறாங்க இல்லையா? அந்த மாதிரி காளையை அடக்கற போட்டியில கட்டப்படறதுதான் இந்தச் சல்லிக்கட்டு.”

“என்ன சொல்றீங்க நீங்க? புரியலையே?”

“சல்லின்னு சொல்றது நீங்க நினைச்சிட்டிருக்கிற மாதிரி ஜல்லி கிடையாது. சல்லிங்கறது ஒரு நாணயம். பணம். சல்லிக்காசு கூட எங்கிட்ட கிடையாதுப்பான்னு சொல்றோமில்லையா, அந்தப் பேச்சுவழக்கு  அந்தச் சொல்லிலேர்ந்துதான் வந்தது. சல்லிக்காசுக்கு ஒரு சந்தைமதிப்பு உண்டு. அந்த மாதிரி சல்லி நாணயங்களையெல்லாம் ஒரு துண்டுல கைநிறைய அள்ளி வச்சி ஒரு சின்ன மூட்டையா கட்டிடுவாங்க. அப்புறம் அந்த மூட்டையை போட்டியில எறக்குற காளையுடைய கொம்போட சேத்து முடிச்சி போட்டு கட்டி வச்சிடுவாங்க. அந்தக் காளையை அடக்கி, அதும் கொம்பை வளைச்சி, கொம்புல இருக்கற சல்லிக் கட்ட யாரு எடுக்கறானோ, அவனுக்கே அந்தக் கட்டு சொந்தம். அதான் சல்லிக் கட்டு. அந்தச் சல்லிதான் கால ஓட்டத்துல அணா பைசாவா மாறி, இப்ப ரூபாயா மாறி இருக்குது”

நண்பரின் முகம் மலர்ந்துவிட்டது. “சல்லிக்குப் பின்னால இவ்ளோ பெரிய கதை இருக்குதா? நான் என்னமோ ஜல்லின்னு நெனைச்சி கொழம்பிட்டிருந்தேன்” என்று சிரித்தார்.

“இது சின்ன கதைதான். இன்னும் பெரிய கதைகள்லாம் இருக்குது” என்றேன்.

“அது என்ன கதை? சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கறேன்”

“இப்படி திருவிழா விளையாட்டு மாதிரி ஆரம்பிச்ச இந்தப் பழக்கம் ஏதோ ஒரு கட்டத்துல வீரத்துக்கு அடையாளமா மாறிடுச்சி. காளைகளை அடக்கறது ஆம்பளைக்கு வீரம்னு ஒரு நம்பிக்கை வந்திடுச்சி. அதுக்காகவே பலர் காளையை வளர்க்க ஆரம்பிச்சாங்க. சல்லிக்குப் பதிலா, காளையை அடக்கற வீரனுக்கு என் பொண்ணையோ அல்லது என் தங்கச்சியையோ கட்டிக் கொடுப்பேன்னு சொல்ற அளவுக்குப் போயிடுச்சி. பொண்ணுங்களும் அந்த மாதிரியான வீரர்களை விரும்ப ஆரம்பிச்சாங்க.”

“அடடா, இவ்ளோ மாற்றங்களா?”

“இன்னும் இருக்குது, கேளுங்க. ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’னு கலித்தொகையில ஒரு பாட்டு இருக்குது. காளையை அடக்கறதுக்குப் பயப்படறவன் அடுத்த பிறவியில கூட என்னை அடையமுடியாதுன்னு ஒரு பொண்ணு ஆவேசமா சொல்றமாதிரியான பாட்டு அது.”

“மாப்பிள்ளைத் தேர்வு இப்படியெல்லாம் நடந்திருக்குதுங்கறத என்னால கற்பனை கூட செஞ்சி பார்க்கமுடியலை”

“சாதாரண குடிமக்கள் மட்டுமில்லை. அரசவம்சத்துல கூட இந்தப் பழக்கம் இருந்திருக்குது. பல சிற்றரசர்கள் தன்னுடைய ஊருக்குள்ள வந்து காளையை  அடக்கறவனுக்கு தன்னுடைய மகளைக் கல்யாணம் செஞ்சிக் குடுத்து ராஜ்ஜியத்தையும் கொடுத்திருக்காங்க.”

 ”நல்ல வேளையா, இப்படிப்பட்ட பழக்கம் இந்த நூற்றாண்டு சல்லிக்கட்டுல இல்லைன்னு நெனைக்கறேன். வெள்ளிக்கோப்பை, தங்கச்சங்கிலி, பணமுடிப்புன்னு அந்த வடிவம் மாறிடுச்சி. தோராயமா இந்தப் பழக்கம் எப்ப நின்னிருக்கும்?”

“எப்ப நின்னுதுன்னு குறிப்பா சொல்லமுடியாதுன்னுதான் தோணுது. ஆனா நிச்சயமா பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் இருந்திருக்கும். இருபதாவது நூற்றாண்டு ஆரம்பம் வரைக்கும் கூட இருந்திருக்கலாம்னு தோணுது.”

“அப்படியா? எப்படி அந்த முடிவுக்கு வரீங்க?”

“நம்ம தமிழ்ல எழுதப்பட்ட கதைகளைத்தான் நான் ஆதாரமா எடுத்துக்கறேன். கதைகள்ல வெளிப்படறதெல்லாம் சமுதாயத்துல நடக்கிற சம்பவங்களுடைய தாக்கம்தானே? வீரம்மாளின் காளைன்னு ஒரு கதையை முப்பதுகள்ல வந்த மணிக்கொடி இதழ்ல எழுத்தாளர் கு.ப.ரா. எழுதியிருக்காரு. அதனுடைய உள்ளடக்கமே காளையை அடக்கறதுதான்.”

“அப்படியா?”

“ஆமாம். வீரம்மான்னு ஒரு பொண்ணு ஒரு காளையை வளர்க்கறா. ஊருலயே அதை அடக்கறதுக்கு ஆள் கிடையாதுன்னு எல்லாரும் நினைக்கறாங்க. வீரம்மாவுடைய அண்ணன்காரன் அதையே சொல்லிச்சொல்லி சந்தையில மீசையை முறுக்கறான். அதைக் கேட்டிட்டிருந்த காத்தன்ங்கற இளைஞன் அந்தக் காளையை தன்னால அடக்கமுடியும்னு சொல்றான். அந்தக் காளையை அடக்கிட்டா, தன்னுடைய தங்கச்சி வீரம்மாவை அவனுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கறதா  அந்த அண்ணன்காரனும் பதில்சவால் விடறான். ரெண்டு பேருமே ஆத்திரத்துல வார்த்தையை விட்டுடறாங்க.”

”ஐயையோ, அப்புறம்?”

“அவன் ஜெயிச்சிடறான். ஆனா போட்டி முடிஞ்ச பிறகு கவனக்குறைவா இருந்த நேரத்துல அதே காளை திரும்பி வந்து அவன் முதுகுல குத்திடுது. ஆஸ்பத்திரியில அவன் உயிரை விட்டுடறான். இந்தப் பக்கத்துல, தோத்துப் போன காளை வெக்கமில்லாம நிக்குதுன்னு ஆத்திரத்துல வீரம்மா அந்தக் காளையை வேல்கம்பால குத்தி சாகடிச்சிடறா. அதான் கதை.”

“காளையை அடக்கற சம்பவத்தை ஒரு கருவாக் கொண்ட கதையை நான் இப்பதான் கேக்கறேன். அற்புதமா இருக்குது”

“அப்படி ஒரு சம்பவத்தை கு.ப.ரா. நேரிடையா பார்த்திருக்கலாம். அல்லது யார்வழியாவது கேட்டிருக்கலாம். அல்லது எங்கயோ ஒரு தகவலா படிச்சிருக்கலாம். எப்படியோ, அந்த முடிச்சு அவருடைய கதைக்குள்ள விழுந்திடுச்சி. எதுவுமே இல்லாம அவர் அந்தக் கதையை எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதனாலதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிவரைக்கும் அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் ஏதோ ஒரு போட்டி, அதுல ஜெயிக்கறவங்களுக்கு பொண்ணைக் கல்யாணம் செஞ்சி வைக்கறதுங்கற பழக்கம் இருந்திருக்க வாய்ப்பிருக்குதுன்னு தோணுதுன்னு சொன்னேன்.”

“இருங்க. இருங்க. இப்பதான் எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. மகாபாரதத்துல கீழே வைக்கப்பட்ட எண்ணெய்த்தொட்டியில மேலே சுத்தற மீன்பொம்மையுடைய நிழலைப் பார்த்து மேல்நோக்கி அம்பு செலுத்தி ஜெயிக்கற வீரனுக்கு திரெளபதியைத் திருமணம் செஞ்சிவைக்கறதா துருபதன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யற காட்சியை நானும் படிச்சிருக்கேன்.  நீங்க சொல்றது உண்மைதான். காலம் காலமாவே, இந்த மண்ணுல போட்டியில ஜெயிக்கறவனுக்கு பொண்ணுங்கறது ஒரு பழக்கமா இருந்திருக்குது”

“ஆமாம். வில்லும் ஈட்டியும் வாளும் ஆயுதங்களா இருந்த காலத்துல, அந்த ஆயுதத்தை திறமையா யார் கையாள்றதுங்கற போட்டி நடந்தது. இன்னொரு காலத்துல குதிரை, யானை, காளைன்னு விலங்குகள்கூட பழகத் தொடங்கிய காலத்துல, அதை அடக்கி வசப்படுத்தறது யார்ங்கற போட்டி நடந்தது. அதுக்கப்புறம் நல்ல பாட்டு பாடறவன் யார், நல்ல நடனம் ஆடறவன் யார்னு போட்டியுடைய தன்மையும் காலத்துக்குத் தகுந்தமாதிரி மாறிட்டே இருந்திருக்குது.”

“சரியான புள்ளியைத் தொட்டுட்டீங்க நீங்க. நீங்க சொல்லச்சொல்ல எனக்கு பல புராணக்கதைகள்லாம் நினைவுக்கு வருது.”

“நம்ம நாட்டுல எங்கோ ஒரு மூலையில, ஏதோ ஒரு சமூகத்துல அந்தப் பழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரைக்கும் இருந்திருக்குதுங்கறதுதான் நாம கவனிக்கவேண்டிய விஷயம். இதைச் சொல்ற நேரத்துல எனக்கு இன்னொரு சிறுகதையும் ஞாபகத்துக்கு வருது.”

“யார் எழுதிய கதை?”

“கி.ரா.கோபாலன்னு ஒரு மணிக்கொடி எழுத்தாளர் இருந்தார். அவர் கல்நாயனம் என்கிற தலைப்புல அற்புதமான ஒரு கதையை எழுதியிருக்காரு.”

“கல்நாயனமா?”

“ஆமாம். போன நூற்றாண்டுல, கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்ல ரொம்ப நாளா தெறக்கப்படாம இருந்த ஒரு அறையைத் தெறந்து பார்க்கறாங்க. அப்ப அதுக்குள்ள கல்லைக் குடைஞ்சி செய்யப்பட்ட ஒரு நாதஸ்வரத்தைக் கண்டெடுக்கறாங்க. உண்மையான நாதஸ்வரத்தைப்போலவே யாரோ ஒரு சிற்பி அந்தக் காலத்துல அந்த நாயனத்தைச் செஞ்சி வச்சிட்டு போயிருக்காரு.”

“ஆச்சரியமா இருக்குதே”

“அந்தக் கல் நாயனத்தை ஊரே வந்து பார்க்குது. அதை எடுக்கலாம், பார்க்கலாமே தவிர அதைத் தொட்டு வாசிக்க முடியாதுன்னு அதைப் பார்த்த எல்லாருமே  சொல்றாங்க. கடைசியா இளைஞனான ஒரு சிற்பியும் அது வாசிக்கத்தக்க நாயனமில்லைன்னு சொல்றான். அந்தக் கூட்டத்துல ஒரு நாயனக்கார இளைஞனும் இருக்கறான். அவன் அந்த நாயனத்துடைய கட்டமைப்பை சோதிச்சி பார்த்துட்டு, இது வாசிக்கத்தக்க நாயனம்தான்னு சொல்றான். ரெண்டு பேரும் நண்பர்கள்தான். ஆனாலும் கருத்துவேறுபாடு வந்துடுது.”

“அதுக்கப்புறம்?”

“ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு கருத்துவேறுபாடு உருவாச்சின்னா, அடுத்து உருவாகறது போட்டிதான? அந்தப் போட்டிதான் அங்கயும் உருவாகுது. தான் சொன்னது உண்மைதான்னு நிரூபிக்கறதுக்காக தானே நவராத்திரி அன்னைக்கு அந்த நாயனத்தை வாசிச்சிக் காட்டறதா சொல்றான். ஒருவேளை வாசிக்க முடியாம போயிட்டா, வாழ்நாள் முழுக்க நாயனத்தையே தொடமாட்டேன்னு சத்தியம் செய்றான்.”

“அச்சச்சோ”

“உடனே சிற்பியான இளைஞனும் அதே ஆவேசத்தோடு ஒருவேளை அவன் அந்த நாயனத்தை வாசிச்சிட்டா தன்னுடைய தங்கையை அவனுக்குத் திருமணம் செஞ்சி வைக்கறதாவும் சிற்பம் செய்துக்கற வேலையையே விட்டுடறதாவும் சத்தியம் செய்யறான்.”

“கடைசியா என்னதான் முடிவு?”

“நவராத்திரி அன்னைக்கு ஊரே கோயில் முன்னால திரண்டுவந்து நிக்குது. நாயனக்காரன் எடைகொண்ட அந்தக் கல்நாயனத்தை மெதுவா தூக்கி எந்தக் கஷ்டமும் இல்லாம அருமையா வாசிக்கறான். சிற்பி இளைஞனும் தன் தங்கையை அவனுக்குத் திருமணம் செஞ்சி வச்சிடறான்.”

“கதை நல்லா இருக்குதே”

“காளையை அடக்கனவனுக்குப் பொண்ணுங்கற காலம் போய் இசைப்போட்டியில ஜெயிக்கறவனுக்குப் பொண்ணுங்கற அளவுக்கு காலத்துல ஒரு மாற்றம் வந்திருக்குது.”

“உண்மைதான்”

“இன்னும் ஒரு பந்தயக்கதையும் இருக்குது. கேளுங்க. அது சி.சு.செல்லப்பா எழுதிய கதை. கதையுடைய தலைப்பே பந்தயம்தான்.”

“அப்படியா? அது என்ன கதை? சொல்லுங்க”

“அந்தக் காலத்துல காபூல்காரங்க நாடுமுழுக்க நாடோடியா திரிஞ்சி அலைஞ்சி வியாபாரம் செஞ்சி வாழ்ந்திருக்காங்க.  காபூலிவாலான்னு தாகூர் கூட ஒரு கதை எழுதியிருக்காரு, ஞாபகம் இருக்குதா?”

“நல்லாவே ஞாபகம் இருக்குது. சொல்லுங்க.”

”அந்த மாதிரி ஒரு காபூல்காரங்க கூட்டத்தை வச்சித்தான் செல்லப்பா இந்தக் கதையை எழுதிருக்காரு. ஊருக்கு வெளியில ஒரு தென்னந்தோப்புல அந்தக் கூட்டத்து ஆளுங்க தங்கியிருக்காங்க. கடைத்தெருவுல ஆண்கள் ஆபரணக்கல் வியாபாரம் செய்றாங்க. பெண்கள் கத்தி, கத்தரிக்கோல்னு சின்னச்சின்ன பொருட்களை வச்சி வியாபாரம் செய்றாங்க. அந்த ஊருல குண்டான்னு ஒருத்தன் இருக்கான். வாட்டசாட்டமா இருக்கற ஆளு. அவன் அந்தக் கடைத்தெருவுக்குள்ள வந்து ஒவ்வொரு கடையா பார்த்துட்டே நடக்கறான். கடைசியா ஒரு சின்னப் பொண்ணு வச்சிருக்கற கடை முன்னால நின்னு ஒரு கத்தியை எடுத்துகிட்டு என்ன விலைன்னு கேக்கறான். அவள் சொல்ற விலை அவனுக்கு அதிகம்னு தோணுது. கத்தியையும் திருப்பிவைக்காம பணமும் தராம இழுத்தடிக்கறான். ஆத்திரத்துல அந்தப் பொண்ணு சட்டுனு கையை ஓங்கி அவன் கன்னத்துல்ல ஒரு அறை கொடுக்கறா. அவன் சட்டுனு அந்தக் கத்தியை கீழ போட்டுடறான்.”

“ஐயையோ, அப்புறம்?”

“எல்லாரும் திகைச்சி போய் ரெண்டு பேரயும் பார்க்கறாங்க.  குண்டான் சட்டுனு சுதாரிச்சிகிட்டு அந்தப் பொண்ணு கையை வளைச்சிப் புடிச்சிக்கறான். அந்த இரும்புப்பிடியிலேர்ந்து அவளால விடுபட முடியலை. கையை விடு விடுன்னு சத்தம் போடறா. அதைக் கேட்டதும், காபூல்காரங்க எல்லாரும் அங்க ஒன்னா சேந்ந்துடறாங்க.  ஆனா அந்தக் குண்டானை நெருங்கறதுக்கு எல்லாருமே பயப்படறாங்க. ஆனா பயத்தைக் காட்டிக்காம, அவனைப் பார்த்து பொம்பளைகிட்ட உன் தைரியத்தைக் காட்டறியே, வெக்கமா இல்லையான்னு கேட்டு அவனைப் பார்த்து சிரிக்கறாங்க. உடனே குண்டான் அந்தப் பொண்ணுடைய கையை விட்டுட்டு என்னடா செய்யணும் சொல்லுங்கடான்னு அவுங்களைப் பார்த்து கேக்கறான். நாளைக்கு இதே இடத்துக்கு வா, என்ன செய்யணுங்கறத அப்ப சொல்றோம்னு சொல்லிட்டு அங்கிருந்து வேகவேகமா கெளம்பிப் போயிடறாங்க காபூலிக்காரங்க.”

”சரி”

“அடுத்த நாள் அதே நேரத்துல கடைத்தெருவுல பெருங்கூட்டம்  கூடிடுது. காபூல்காரங்களைப் பார்த்து என்ன செய்யணும், சொல்லுங்கடான்னு சத்தமா கேக்கறான் குண்டான்.  அங்க பாதை ஓரமா ஒரு பெரிய பாறை இருக்குது. காபூல்காரங்க ரெண்டுமூனு ஆளுங்க சேர்ந்து அதை மெதுமெதுவா உருட்டி வந்து அவன் முன்னால வைக்கறாங்க. அந்தக் கல்லை தூக்கிக் காட்டுன்னு சொல்றாங்க. அதுதான் போட்டி. என்ன பந்தயம்னு கேக்கறான் குண்டான். நீ கையைத் தொட்டு இழுத்த பொண்ணை உனக்கே கல்யாணம் செஞ்சி வைக்கறோம்னு காபூல்காரங்க சொல்றாங்க. குண்டான் சிரிச்சிகிட்டே ஒருதரம் அந்தப் பொண்ண பார்த்தான். அப்புறம் மெதுவா குனிஞ்சி அந்தப் பாறையைத் தொட்டு கண்ணைமூடி கண்ணைத் திறக்கற நேரத்துக்குள்ள தலைக்கு மேல தூக்கி வச்சிக்கறான். ஒரு பந்தைத் தூக்கிப் போட்டு புடிக்கறமாதிரி அந்தப் பாறையைத் தூக்கித்தூக்கிப் போட்டு புடிக்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் தோள்லயே சுமந்தபடி எல்லாரையும் ஒரு சுத்து சுத்திப் பார்த்துட்டு. கடைசியா கீழ பொத்துன்னு போடறான்.

“கடைசியா என்னாச்சி?”

“பந்தயத்து விதிப்படி அந்தப் பொண்ண குண்டானுக்குக் கட்டி வச்சிட்டு காபூல்காரங்க அந்த ஊரைவிட்டே போயிடறாங்க.”

“நல்ல கதைதான்”

“இந்த மாதிரி பல கதைகள் இருக்கலாம். தற்சமயத்துக்கு ஞாபகத்துல இருக்கறதை உங்களுக்குச் சொன்னேன். அவ்ளோதான். துளி உண்மையாவது இந்தக் கதைகளுக்குப் பின்னால இருக்கும்ங்கறதுதான் என்னுடைய எண்ணம். எப்படியோ, ஒரு போட்டியில ஜெயிச்சி வந்தவனுக்குப் பொண்ணைத் திருமணம் செஞ்சி வைக்கறதுங்கறது இந்த மண்ணுல ஒரு மரபா இருந்திருக்குது. அதனுடைய சாட்சிகள்தான் இந்தக் கதைகள்.”

“சரிதான். நீங்க சொல்றதுல நிச்சயம் ஏதோ  ஒரு உண்மை இருக்குதுன்னுதான் எனக்கும் தோணுது” என்றார் நண்பர்.

அப்போது வாசல் பக்கத்திலிருந்து கம்பிக்கதவைத் தள்ளித் திறக்கும் சத்தம் எழுந்ததால் எங்கள் உரையாடல் நின்றது. திரும்பிப் பார்த்தேன். நண்பரின் மனைவி வந்துகொண்டிருந்தார். படியேறி மேலே வந்ததும் “வாங்கண்ணே, எப்படி இருக்கீங்க? பார்த்தீங்களா உங்க நண்பரை? வயசான காலத்துல இப்படி ஒரு நிலைமையை இவரே வரவழைச்சிக்கலாமா?” என்று தன் ஆற்றாமையைக் கொட்டத் தொடங்கினார். 

 

(சங்கு – மும்மாத இலக்கியச் சிற்றிதழ் – ஜூலை- செப்டம்பர் 2026)