Home

Sunday, 4 October 2026

நிலைத்து நின்ற முகம்

  

கடந்த இரு மாதங்களாக கிழக்கு டுடே இணையதளத்தில் ‘முப்பத்தாறு ரத்தினங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதிவருகிறேன். அதற்காக வாரத்துக்கு ஒரு கட்டுரையை அனுப்பவேண்டும். கடந்த நூற்றாண்டில் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டு, கவனத்திலிருந்து விலகிவிட்ட நல்ல நாவல்களை இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.

ஒரு கட்டுரையை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக, கட்டுரைக்காக நான் தீர்மானித்திருக்கும் நாவலைப்பற்றி ஒருமுறை நண்பர் விட்டல்ராவ் அவர்களிடம் உரையாடி அவருடைய கருத்தையும் தெரிந்துகொள்வது என் வழக்கம். பல சமயங்களில் குறிப்பிட்ட நாவலாசிரியரின் பிற படைப்புகளைப்பற்றியும் அவர் என்னிடம் பகிர்ந்துகொள்வார். அந்த நாவலாசிரியர் அவருக்கு நன்றாக அறிமுகமானவர் என்றால், அந்த அனுபவத்தையும் ஒரு தகவலாக அவர் சொல்வதுண்டு.

ஒரு முறை நான் துமிலன் எழுதிய ’கிராம மோகினி’ என்னும் நாவலைப்பற்றி எழுத முடிவு செய்திருந்தேன். எனக்குப் பிடித்த பழைய நாவலாசிரியர்களில் அவரும் ஒருவர். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் துமிலன் என்னும் பெயரைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். அவர் எழுதிய பல நூல்களை எங்கள் வளவனூர் கிளை நூலகத்தில் சிறுவர் நூல்கள் பிரிவிலிருந்து எடுத்துப் படித்திருக்கிறேன். சி.ஐ.டி. சிறுவர்கள், துப்பறியும் சந்தர் என சில புத்தகங்களின் தலைப்புகள் நினைவிலிருக்கின்றன.

பட்டப்படிப்பு படிப்பதற்காக புதுச்சேரியில் தங்கியிருந்தபோது, ஒருமுறை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த சமயத்தில் நூலகத்திலிருந்து எடுத்துவந்து கிராம மோகினி நாவலைப் படித்தேன். கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக கிராமத்தைத் துறந்து நகரத்துக்கு வரும் சூழலில் படித்த பட்டதாரி ஒருவன் விவசாயம் செய்து, கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபடும் இலட்சியத்தோடு நகரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்பவனைப்பற்றிய கதை அது.

கிராம மோகம் அவனை உந்தித் தள்ளுகிறது. கிராமத்துக்குச் சென்ற பிறகு அங்கு ஓர் இளம்பெண்ணைச் சந்திக்கிறான். அவள் மீதான மோகமும் அவன் மனத்தில் நிறைந்து தளும்புகிறது. இரு மோகங்களையும் சற்றே நகைச்சுவை உணர்வோடு மாறிமாறிச் சித்தரித்திருப்பார் துமிலன். படித்து பல ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் அந்த நாவலின் மையக்கதை என் நினைவில் தங்கிவிட்டதற்கு முக்கியமான காரணமே தலைப்பையே படிமமாக்கியிருக்கும் துமிலனின் எழுத்தாற்றல்தான்.

ஒரு சந்திப்பின்போது விட்டல்ராவிடம் கிராமமோகினி பற்றிக் கூறினேன். “நானும் அந்த நாவலைப் படிச்சிருக்கேன். நினைவூட்டப்படவேண்டிய நாவல்தான். எழுதுங்க” என்று உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து “இந்த நாவல் தினமணி கதிர்ல தொடர்கதையா வந்தது. நான் அப்ப மூணாங்கிளாஸோ நாலாங்கிளாஸோ படிச்சிட்டிருந்தேன்” என்று புன்னகையுடன் சொன்னார்.

அத்தகவலைக் கேட்டதும் என் மனம் துள்ளியது. துமிலன் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. “அப்பவே தொடர்கதை படிச்சீங்களா சார்?” என்று கேட்டேன்.

“அப்ப தொடர்கதையெல்லாம் படிக்கிற பழக்கமில்லை. சிறுவர் கதைகளைத்தான் விரும்பிப் படிப்பேன். அதுக்குப் பிறகு படங்களைப் பார்க்கறதுக்கும் நகைச்சுவைத் துணுக்குகளைப் படிக்கறதுக்கும் சும்மா பொரட்டிப்பொரட்டிப் பார்ப்பேன். அதனால அந்தப் பெயர்களெல்லாம் அப்படியே மனசுல தங்கிட்டுது” என்றார்.

”தினமணி கதிர் அப்பவே வரத் தொடங்கிடுச்சா?”

“தொடக்க காலத்துல இல்லை. தினமணிக்கு ஏ.என்.சிவராமன் ஆசிரியராக பொறுப்பெடுத்துகிட்ட நேரத்துல தமிழ்நாட்டுல பல வாரப்பத்திரிகைகள் கதைகளை வெளியிட்டு வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிட்டிருந்தாங்க. ஒரே சமயத்துல ரெண்டுமூனு தொடர்கதைகள் கூட வந்ததுண்டு. தினமணி வாசகர்களுக்கு அந்த மாதிரி கதைகளையும் சேர்த்துக் கொடுக்கணும்னு நெனைச்சி கதைகளுக்காக சிவராமன் ஒரு தனிப்பத்திரிகையை உருவாக்கினாரு. அதுக்கு விலையெல்லாம் கிடையாது. ஞாயித்துக்கெழமை பத்திரிகையோடு அது இலவசமாவே எல்லோருக்கும் கொடுத்தாங்க. அந்தப் பத்திரிகையிலதான் துமிலன் கதைகளெல்லாம் வந்தது”

நான் அந்தக் காலத்துப் பத்திரிகைகள் பற்றிய நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி, தெளிவான ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முனைந்தேன்.

“எங்க அப்பா எல்லா நாள்லயும் தினமணி வாங்க மாட்டாரு. அந்த அளவுக்கு அவரால பணம் செலவு செய்யமுடியாது. ஞாயித்துக்கெழம ஒருநாள்லதான் வாங்குவாரு.  பசுவோடு சேர்ந்து கன்னுக்குட்டியும் வரமாதிரி பத்திரிகையோடு சேர்ந்து தினமணி கதிரும் வரும்.”

பழைய நினைவுகளைச் சொல்லத் தொடங்கியதும் அவர் முகம் வழக்கம்போல சுடர்விடத் தொடங்கியது. நான் அந்தப் பிரகாசத்தையே பார்த்தபடி சொல்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அந்தக் காலத்துத் தினமணியில ஒவ்வொரு ஞாயித்துக்கெழமையிலும் ‘இந்தி கற்றுக்கொள்ளுங்கள்’னு ஒரு தொடர் அரைபக்கத்துக்கு வரும். வீட்டுல இருந்தபடியே சொந்தமா இந்தியைக் கத்துக்க நெனைக்கறவங்களுக்கான பாடங்கள்லாம் அதுல வரும். எங்க வசந்தா அக்காவுக்கு அதுல ஆர்வம் உண்டு. அதுக்காகவே எங்க அப்பா ஒவ்வொரு வாரமும் தினமணி வாங்கினாரு”

“அப்படியா? சொல்லிக் குடுக்கற ஆசிரியர் இல்லாம அப்படி ஒரு மொழியை நாமே கத்துக்கமுடியுமா?”

“அந்தத் தொடரே அதுக்காகத்தான். அதைப் படிச்சா சொந்த முயற்சியாலயே எழுதவும் படிக்கவும் கத்துக்கலாம். ப்ராத்மிக், மத்யமா மாதிரி ஆரம்பநிலை பரீட்சைகளையெல்லாம் தினமணியில படிச்ச பாடங்களை வச்சியே எழுதி பாஸ் பண்ணிட்டா எங்க அக்கா. பெரிய பரீட்சை எழுதற சமயத்துலதான் இந்தி மாஸ்டர்கிட்ட கத்துகிட்டா. ப்ரவீண் வரைக்கும் படிச்சிட்டு ஸ்கூல்ல இந்தி பண்டிட்டா ரொம்ப காலம் வேலை செஞ்சா”

“ஒருபக்கம் பாடம். இன்னொரு பக்கம் கதை. ஒரே பத்திரிகையால ரெண்டு லாபம்.”

“ஆமாம். சின்னச்சின்ன துணுக்குச்செய்திகள், நகைச்சுவைகள் எல்லாத்தையும் ஒன்னுவிடாம நான் படிப்பேன். மத்த பக்கங்கள சும்மா பொரட்டி படம் பார்ப்பேன்.”

“கிராம மோகினி தவிர துமிலன் வேற ஏதாவது கதை எழுதினாரா?”

“துமிலன் தினமணி கதிருக்கு ஆசிரியரா இருந்தவர். அவருடைய சொந்தப் பெயர் ராமசாமி.  அது இல்லாம வேறவேற புனைபெயர்கள்லயும் எழுதியிருக்காரு. பகவதி எம்.எல்.ஏ.ன்னு ஒரு நகைச்சுவைத் தொடர் எழுதியிருந்தாரு. கதைக்காக போடக்கூடிய படங்களைப் பார்த்ததுமே அது  சின்னப்பசங்க படிக்கறதுக்கான நகைச்சுவைக்கதையா அல்லது பெரியவங்க படிக்கிறதுக்கான கதையான்னு கண்டுபுடிச்சிடலாம். அந்த எம்.எல்.ஏ. கதைக்கு போடப்பட்டிருந்த படங்களைப் பார்த்ததுமே, இது நமக்கான கதைன்னு மனசுக்குள்ள தோணிடுச்சி. அந்தக் கதையை நான் ரொம்ப விரும்பிப் படிச்சேன்.”

“சரி”

“அப்புறம் துறைமுகக்காதலின்னு ஒரு தொடர்கதை எழுதியிருந்தாரு துமிலன். மெட்ராஸ் சிட்டியில நடக்கிற மாதிரியான கதை. ஏராளமான மெட்ராஸ் பேச்சு வழக்கு. அந்தப் பேச்சுவழக்கு பழகாததால எனக்கு ஒன்னும் புரியலை. அதனால என்னால தொடர்ந்து அந்தக் கதையைப் படிக்கமுடியலை. நாலைஞ்சி வாரங்கள் படிச்சிட்டு விட்டுட்டேன்.”

”அப்புறம்?” 

“அதுக்கப்புறம் ப்ரின்சிப்பால் கொலைவழக்குன்னு ஒரு தொடர்கதை வந்தது. அதுவும் துமிலன் எழுதனதுதான். அது நகைச்சுவைக்கதை. அது வரும்போது நான் அஞ்சாம் க்ளாஸ்க்கு வந்துட்டேன்.”

“ம்”

“அந்தக் கதையில ஒரு அத்தியாயத்துக்கு அப்பளக்குழவியின் மர்மம்னு தலைப்பு கொடுத்திருப்பாரு துமிலன். என்னால அந்தத் தலைப்பையும் மறக்கமுடியலை. அந்தக் கதையையும் மறக்கமுடியலை. இப்ப நெனச்சாக்கூட சிரிப்பு வருது”

“என்ன கதை?”

“இப்ப சாப்பாட்டுக்கு அப்பளம் வேணும்ன்னா, நாம கடைக்குப் போய் தேவையான அளவுக்கு ஒரு கட்டோ ரெண்டு கட்டோ அப்பளம் வாங்கிட்டு வரோம் இல்லையா? அந்தக் காலத்துல அப்படி கடைக்குப் போய் வாங்கற ஆட்கள் ரொம்ப குறைவு. ஒரு வீட்டுக்குத் தேவையான அப்பளத்தை அந்த வீட்டுல இருக்கறவங்களே உருட்டி வெயில்ல நல்லா காயவச்சி ஒரு பாத்திரத்துல அடுக்கிவச்சிக்குவாங்க. தேவைப்படற சமயத்துல தேவையான அளவுக்கு எடுத்து எண்ணெயில போட்டு பொரிச்சி சாப்புடுவாங்க.”

“சரி”

“அந்த மாதிரியான பழக்கமுள்ள ஒரு குடும்பத்துல நடக்கற கதை அது. அந்த வீட்டுல இருக்கற ஒரு பாட்டிக்கு அந்த வீட்டுக்கு வந்து போகற ஒரு ஆளப் புடிக்கலை. அவனைப் பார்த்தாலே அவளுக்கு வெறுப்பா இருக்குது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடம் கற்பிக்கணும்னு  நினைக்கறா.  அவன் ஒவ்வொரு நாளும் கீழே இருந்து படிக்கட்டு வழியா ஏறி மாடிக்கு வந்து போகக்கூடிய ஆளு. ஒருநாள் அவன் வர சமயத்துல கடைசி படியைத் தாண்டி மாடியில கால் வைக்கற எடத்துல அந்த அப்பளக்குழவியை ஆடாம அசையாம வச்சிட்டுப் போயிடறா. வழக்கம்போல உற்சாகமா படியேறி வந்த அந்த ஆளு கடைசிப் படிக்குப் பிறகு தெரியாத்தனமா அந்த அப்பளக்குழவி மேல கால வச்சிடறான். அது வழுக்கினதால கண்ணிமைக்கிற நேரத்துல படிக்கட்டுல விழுந்து உருண்டுட்டே போய் கீழ விழுந்துடறான். அடிபட்ட வேகத்துல அவன் உயிரும் போயிடுது.”

“ஐயையோ”

“அந்தப் பாட்டி உடனடியா அந்த அப்பளக் குழவியை எடுத்துட்டுப் போய் மறைச்சி வச்சிக்கறா. அந்த ஆளு எப்படி இறந்தான்னு யாருக்குமே தெரியலை. அதைத் துப்பறிஞ்சி கண்டுபிடிக்கறதுதான் அந்த அத்தியாயத்துடைய கதை.”

“ஐயோ, பாவம். கடைசியில கண்டுபுடிச்சாங்களா இல்லையா?”

“அந்த மர்மத்தை ஒருத்தராலும் கண்டுபுடிக்க முடியலை. கடைசியில அந்தப் பாட்டியே நடந்தது என்னன்னு விவரமா சொல்லி குற்றத்தை ஒத்துக்கறா. அதான் அந்த அத்தியாயம். நகைச்சுவைக்கு நகைச்சுவை. மர்மத்துக்கு மர்மம். துமிலனுடைய கதையில அப்படி ஒரு அழகான கட்டுமானத்தைப் பார்க்கலாம்.”

“ரொம்ப சுவாரசியமான கற்பனை சார்”

“அதனாலதான் இன்னைய வரைக்கும் அந்த அத்தியாயமும் தலைப்பும் என் ஞாபகத்துலயே இருக்குது. இன்னைக்கும் நான் சப்பாத்தி உருட்டற குழவியைத் தொடும்போதெல்லாம், ஒரு நொடி அந்தக் கதை ஞாபகத்துக்கு வந்துபோகும்”

“இனிமே சப்பாத்திக்குழவியைப் பார்க்கும்போது நானும் இந்த மர்மக்கதையை நினைச்சிக்குவேன் சார்.”

“அவர் எழுதுன இன்னொரு தொடர்கதைகூட இப்ப ஞாபகத்துக்கு வருது. அதனுடைய தலைப்பு என்ன தெரியுமா? டப்பாச்சி.”

“என்ன, டப்பாச்சியா? வேடிக்கைக்கதையா?”

“ஆமாம். மரப்பாச்சின்னு சொல்வோமில்லையா? அதுலேர்ந்து துமிலனே டப்பாச்சின்னு ஒரு பேர உருவாக்கிக்கிட்டாரு.”

“ஏன் அப்படி ஒரு தலைப்பு?”

“அந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல படிக்கிற பிள்ளைகளுக்கெல்லாம் ஃபேரி டேல்ஸ்னா ரொம்ப புடிக்கும். பாடப்புத்தகத்துலயும் ஒன்னு ரெண்டு ஃபேரி டேல்ஸ் இருக்கும். த அட்வெஞ்சர்ஸ் ஆஃப் பினாச்சியோன்னு கதையை அப்ப எல்லாரும் சொல்லிட்டே இருப்பாங்க. கார்லோ கொலோடின்னு ஒரு இத்தாலி எழுத்தாளர் எழுதன சிறுவர்கள் நாவல் அது. அதுல மரப்பாச்சி பொம்மையா ஒரு பையன் வருவான். அவன் பேருதான் பினாச்சியோ. அவன் மனசுக்குள்ள ஒரு நிஜமான பையனா மாறணும்னு ஆசை வச்சிருப்பான். கதைமுழுக்க அவன் ஏராளமான சின்னப் பையன்களையும் பெரிய ஆளுங்களையும் பார்த்துப் பழகுவான். அப்படி பழகிப்பழகி அவன் எல்லா நல்ல விஷயங்களையும் கத்துக்குவான். கடைசியா அவன் ஆசைப்பட்டபடியே உண்மையான பையனா மாறிடுவான். அதுதான் கதை. ஆனால் துமிலன் அந்த மாதிரியான  கதையை எழுதலை. ஒரு ஊருல மூனு மந்திரவாதிப் பெண்கள் இருப்பாங்க. அவுங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஒரு உருவத்தைச் செய்யறாங்க. பொம்மையா இருக்கும் அந்த உருவம் முதல்ல நடமாடக் கத்துக்கும். பிறகு பேசறதுக்குக் கத்துக்கும். பிறகு மனிதர்கள் செய்யக்கூடிய எல்லாத்தையும் அதுவும் செய்யக் கத்துக்கும். துன்பப்படறவங்களுக்கு ஓடிப் போய் உடனடியா உதவி செய்யும்.

“இதுவும் சுவாரசியாமாதான் இருக்குது சார்”

“இன்னும் கதை இருக்கு, கேளுங்க. உயிர்வந்த அந்தப் பொம்மையை ஒருநாள் வேற ஒரு மந்திரவாதி வந்து கடத்திட்டுப் போயிடறான். பொம்மையை பறிகொடுத்த மூனு மந்திரவாதியும் சேர்ந்து அந்தப் பொம்மையை எப்படி மீட்டு வராங்கங்கறதுதான் கதை. பொம்மைக்கதைங்கறதால மரப்பாச்சிங்கற பேர டப்பாச்சின்னு வச்சிட்டாரு துமிலன்.”

“இந்தக் கதையெல்லாம் புத்தகமா வந்ததா இல்லையான்னு தெரியலையே சார். எங்க ஊர் நூலகத்துல நான் இப்படிப்பட்ட தலைப்புகளைப் பார்த்ததே இல்லை.”

“ஒளவையாரைப் பகடி செய்யறமாதிரி டவ்வையார்னு கூட ஒரு கதை எழுதியிருக்காரு.”

”அவர் எழுதிய நகைச்சுவைப்படைப்புகள் ஒரு நீண்ட பட்டியலே போடலாம்னு தோணுது சார். நீங்க அவரை நேருல பார்த்திருக்கீங்களா?”

“படிச்சி முடிச்சி கொஞ்ச காலம் ஒரு எலெக்ட்ரிக்கல் கம்பெனியில வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் ஓராசிரியர் பள்ளியில வேலை பார்த்தேன். கொஞ்ச காலம் எக்ஸ்ரே டெக்னிசியனா வேலை பார்த்தேன்.   அதுக்கப்புறம்தான் டெலிபோன் டிப்பார்ட்மெண்ட்ல வேலைக்குச் சேர்ந்தேன். மெட்ராஸ்ல வேலை. வேலை பார்த்துக்கிட்டே ஓவியப்பள்ளியில ஓவியம் கத்துக்கணும்ங்கறதுக்காகத்தான் நான் மெட்ராஸ்க்கு வந்தேன். அப்ப என் கவனம் ஓவியத்துலதான் இருந்தது. இலக்கியத்துல இல்லை. ஆனாலும் அப்பப்ப சும்மா இருக்கற நேரத்துல சின்னச்சின்ன சுவாரசியமான அனுபவங்களையெல்லாம் ஒரு கட்டுரையா எழுதிப் பார்ப்பேன். நல்லா சொல்ல வருதா இல்லையான்னு எனக்கு நானே வச்சிக்கற டெஸ்ட் மாதிரி.”

“நல்ல பயிற்சிதான சார்? அப்படித்தானே எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியிலேர்ந்து தொடங்கறாங்க.”

“ஆமா. நீங்க சொல்றது உண்மைதான். அப்ப ஒருநாள் ஒரு கடையில டீ குடிக்கப் போனபோது, பக்கத்துலயே ஸ்டேன்ட் போட்டு வச்சிருந்த    பத்திரிகைகளை வேடிக்கை பார்த்தேன். அதுல சுதந்திரச்சங்குன்னு ஒரு பத்திரிகை தொங்கிட்டிருந்தது. அதனுடைய அட்டைப்படம்தான் என்னை அந்தப் பத்திரிகையை கவனிக்க வச்சிது. உடனே அதை சில்லறை கொடுத்து வாங்கிட்டேன். பொரட்டிப் பார்த்தபோது ஆசிரியர் துமிலன்னு போட்டிருந்தது.”

“நம்ம கிராம மோகினி துமிலன்.”

“ஆமாம். அவரேதான். அந்தப் பேரைப் பார்த்ததுமே எனக்கு பழைய கதைகள்லாம் ஞாபகத்துக்கு வந்துட்டுது. வீட்டுக்குப் போய் சுதந்திரச்சங்கு பத்திரிகையை ஒரே மூச்சில படிச்சி முடிச்சிட்டேன். ஒருபக்கம் நகைச்சுவையான கதைகள். இன்னொரு பக்கம் சுவாரசியமா படிக்கிறமாதிரியான கதைகள்னு ரெண்டு விதமாவும்  இருந்தது.”

“சரி”

“படிச்சி முடிச்சதும் அந்தப் பத்திரிகைக்கு ஏதாவது எழுதணும்னு தோணிச்சி. உடனே அன்னைக்கு ராத்திரியே ஒரு பக்கத்துல அனுபவக்கட்டுரை மாதிரி ஒரு நகைச்சுவைக்கட்டுரையை எழுதி ஒரு கவர்ல போட்டு மூடி வச்சிகிட்டேன்.”

“போஸ்ட் பண்ணிட்டீங்களா?”

“இல்லை. இல்லை. அடுத்த நாள் காலையில ஆபீஸ் போற வழியில துமிலனை நேரா சந்திச்சி கையிலயே கொடுக்கணும்னு நெனச்சி ஒரு பைக்குள்ள வச்சிகிட்டேன்”

“துமிலனைப் பார்த்தீங்களா?” என்று ஆவலோடு கேட்டேன்.

“ஆமாம். பார்த்தேன். மெளண்ட் ரோடுல காங்கிரஸ் ஆபீஸ் சத்தியமூர்த்தி பவன் தெரியுமில்லையா? அந்தக் கட்டடத்துக்குள்ள ஒரு மூலையில ஒரு அறை இருந்தது. அதுதான் சுதந்திரச்சங்கு ஆபீஸ். அக்கம்பக்கத்துல விசாரிச்சிகிட்டே அந்த அறை வாசலுக்கு முன்னால போய் நின்னேன்.”

“சரி. அங்க துமிலனைச் சந்திக்கமுடிஞ்சதா?”

“அந்த ஆபீஸ்ல துமிலன் ஒருத்தர்தான் இருந்தாரு. மேசை மேல எதையோ வச்சிகிட்டு திருத்தம் போட்டிட்டிருந்தாரு. கதர்வேட்டி. கதர் சட்டைதான் உடுத்தியிருந்தாரு. கதவுகிட்ட என்னைப் பார்த்ததும் கண்ணாடியை கழட்டிகிட்டே நிமுந்து  என்ன வேணும் யாரைப் பார்க்கணும்னு கேட்டாரு. உங்களைத்தான் பார்க்கவந்தேன் சார்னு உள்ள போய் என்னை அறிமுகப்படுத்திகிட்டேன். வாங்க, வந்து உக்காருங்கன்னு சொன்னாரு துமிலன்”

“சரி”

“சுதந்திரச்சங்கு பத்திரிகையை ஒரு டீக்கடையில பார்த்ததையும் அவருடைய பெயரைப் பார்த்து வாங்கியதையும் அவருகிட்ட சொன்னேன். அப்படியா தம்பி, அப்படியா தம்பின்னு ரொம்ப மகிழ்ச்சியோடு கேட்டுகிட்டாரு.”

”அப்புறம்?”

“என் பேரு எப்படித் தெரியும்னு கேட்டாரு. தினமணி கதிர்ல கிராம மோகினி தொடர்கதையைப் பார்த்ததுலேர்ந்து ஒவ்வொன்னா அவருகிட்ட சொன்னேன். எல்லாத்தையும் அவரு சந்தோஷமா கேட்டுகிட்டாரு. அந்த சந்தோஷத்தை நான் உண்மையிலயே அவருடைய முகத்துல பார்த்தேன்”

“இந்த உலகம் தன்னை ஒரு எழுத்தாளரா என்னென்னைக்கும் ஞாபகத்துல வச்சிக்கணும்ங்கறதுதான ஒரு எழுத்தாளருக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச ஆசை. துமிலனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கும் இல்லையா?”

“கட்டாயமா இருந்திருக்கும்.”

“உங்களப்பத்தி அவர் ஒன்னும் விசாரிக்கலையா?”

“எந்த ஊரு, எங்க படிச்சீங்க, என்ன செய்றீங்கன்னு எல்லா விஷயங்களையும் கேட்டாரு. சொந்த ஊரு நாமக்கல்னு சொன்னதைக் கேட்டதுமே அவருடைய முகத்துல ஒரு மலர்ச்சியைப் பார்த்தேன். உடனே அவரு உங்க ஊருல ராமலிங்கம் பிள்ளைன்னு ஒரு கவிஞர் உண்டே தெரியுமான்னு கேட்டாரு. நல்லா தெரியும்னு சொன்னேன். சுதந்திரப் போராட்ட காலத்துல கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுங்கற அவருடைய பாட்டைப் பாடியபடி தெருவுல ஊர்வலமா போவோம். அதெல்லாம் பெரிய அனுபவம்னு சொல்லிட்டு சிரிச்சாரு.”

“அப்புறம்?”

“கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தாரு. அந்தக் காலத்துல சுதந்திர விழிப்புணர்ச்சியை உருவாக்கறதுக்காகத்தான் சுதந்திரச்சங்குங்கற இந்தப்  பத்திரிகையை கொஞ்ச காலம் நடத்தினாங்க பெரியவங்க. அதுக்கப்புறம் நின்னுடிச்சி. அந்தப் பழைய பத்திரிகையைத்தான் இப்ப மறுபடியும் ஆரம்பிச்சி நடத்திட்டிருக்கோம். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த வண்டிக்கு ஓடற சக்தி இருக்குதோ, அதுவரைக்கும் ஓடும்னு சொல்லிட்டு சிரிச்சாரு.”

”சரி”

“அவர் பேச்ச நிறுத்தன சமயத்துல  நான்  அவர் எழுதிய கதைகளைப்பத்தி பேச்சத் தொடங்கிட்டேன். அந்தக் கதைகளுடைய பெயர்களைச் சொல்லச்சொல்ல அவர் முகம் மலர்ந்துகிட்டே இருந்தத நான் கவனிச்சேன்.  எல்லாத்தையும் கேட்டுட்ட பிறகு நீங்க ஏதாவது எழுதறீங்களான்னு கேட்டாரு. இன்னும் எழுத ஆரம்பிக்கலை சார். இப்பதான் உங்களை மாதிரி நகைச்சுவைக்கட்டுரை எழுதிப் பழகறேன் சார்னு கூச்சத்தோடு சொன்னேன். இப்ப ஏதாவது கட்டுரை வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. நான் ஏற்கனவே எழுதி ஓர் உறையில போட்டு வச்சிருந்ததை எடுத்து அவருகிட்ட கொடுத்தேன்.”

“சரி”

“அதை வாங்கி வச்சிகிட்டு அடுத்த வாரம் வந்து பாருன்னு சொல்வாருன்னுதான் எனக்கு ஆரம்பத்துல தோணிச்சி.   ஆனா துமிலன் அந்த உறையைத் தெறந்து உள்ள வச்சிருந்த கட்டுரையை எடுத்து என் முன்னாலயே படிச்சி பார்த்தாரு. அவருக்கு புடிச்சிருந்ததுபோல. அவரு முகத்துல என்னால ஒரு புன்சிரிப்பைப் பார்க்கமுடிஞ்சது. நல்லாவே எழுதியிருக்கீங்க தம்பி. வர ஒன்னாம் தேதி பத்திரிகையில வந்திடும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நான் கெளம்பிட்டேன்.

“அந்தக் கட்டுரை வெளிவந்திச்சா?”

“ஆமாம். புது மாசம் பொறந்து நாலைஞ்சி தேதிக்குப் பிறகு டீக்கடை வாசலுக்குப் போய் சுதந்திரச்சங்கு பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன்.  பக்குபக்குனுதான் இருந்திச்சி. ஒவ்வொரு பக்கமா பொரட்டிகிட்டே போனேன். சட்டுனு ஒரு பக்கத்துல என் கட்டுரையைப் பார்த்துட்டேன். மேலே ‘சினிமா X புட்பால் = குழப்பம்’னு பெரிய எழுத்துல தலைப்பையும் கீழ கே.விட்டல்னு என் பேரையும் போட்டிருந்தாங்க. ஒரு வரியைக்கூட அவர் எடுக்கலை. நான் எழுதிக் கொடுத்ததை அப்படியே போட்டிருந்தாரு.”

“பெரிய கட்டுரையா?”

“இல்லை. இல்லை. ஒரு பக்கக் கட்டுரைதான்”

“அதுக்கப்புறம் துமிலனைப் பார்த்தீங்களா?”

“அவரைப் பார்த்து உடனடியா நன்றி சொல்லணும்னுதான் ஆசையா இருந்தது. வேறவேற வேலைகள் இருந்ததால அந்த வாரம் போகமுடியலை. அடுத்த வாரம்தான் போக முடிஞ்சது. ஆனா அவரு அந்த ஆபீஸ்ல இல்லை. எங்க போனாரு எப்ப வருவாருன்னு பதில் சொல்லக்கூட அங்க ஒருத்தரும் இல்லை. ரொம்ப நேரம் நின்னு பார்த்துட்டு வந்துட்டேன். அடுத்த வாரமும் ஒருமுறையும் போயிருந்தேன். அப்பவும் அவரு இல்லை. அந்த ஆபீஸ் ரூமே காலியா கெடந்தது. ஏமாற்றத்தோடு திரும்பிட்டேன். அதுக்கடுத்த வாரத்துல ஒருநாள் மறுபடியும் போயிருந்தேன். அப்ப அந்த அறையைப் பூட்டி வச்சிருந்தாங்க. பக்கத்துல இருக்கறவங்ககிட்ட விசாரிச்சேன். அந்தப் பத்திரிகையை மூடிட்டாங்கப்பான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க.  துமிலன் சாருக்கு நன்றி சொல்லமுடியலையேங்கற வருத்தம் அப்படியே நெஞ்சில தங்கிப் போயிடுச்சி. த்ச்.”

“அதுக்கப்புறம் அவரைப் பார்க்கலையா?”

“பத்திரிகையில அப்பப்ப அவரு பேரப் போட்டு ஒன்னு ரெண்டு கதைகள் வரும். அதை உடனே  படிச்சிடுவேன். ஆனா எங்க இருக்காருங்கறத என்னால கண்டுபுடிக்க முடியாமலே போயிடுச்சி. கிட்டத்தட்ட மூனு நாலு வருஷங்கள் நான் அவரைப் பார்க்கவே இல்லை. அந்த இடைவெளியில துணுக்கு எழுதறது, நகைச்சுவை எழுதறது எல்லாத்தையும் விட்டுட்டு நானும் சிறுகதை எழுதத் தொடங்கினேன். ஆரம்பக்கட்ட கதைகளுக்குப் பிறகு என் கதைகளும் பத்திரிகையில வர ஆரம்பிச்சிது. ஒரு எழுத்தாளனா என்னாலயும் இந்த உலகத்துக்கு முன்னால நிக்க முடிஞ்சது.”

“சரி”

“அப்ப அமைச்சர் ப.சிதம்பரம் இருக்காரே, அவருடைய சகோதரர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து இலக்கியச்சிந்தனைன்னு ஒரு அமைப்பை தொடங்கினாங்க. அந்த அமைப்பு சார்பா ஒவ்வொரு மாதமும் சென்னையில இலக்கியக்கூட்டம் நடந்தது. எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் தி.க.சி. அவருடைய மூத்த மகனோடு தங்கியிருந்தாரு. பல சமயங்கள்ல அவரும் நானும் சேர்ந்து  அந்தக் கூட்டத்துக்குப் போவோம்.”

“சரி”

“ஒருமுறை அந்தக் கூட்டத்துக்கு எழுத்தாளர் துமிலன் சிறப்பு விருந்தினரா வரப் போறாருன்னு சொன்னாங்க.  அவரைச் சந்திக்கணும்னு எனக்கு ரொம்ப ஆவலா இருந்தது. அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். துமிலன் ஓர் எழுத்தாளனா தனக்குக் கிடைச்ச அனுபவங்களயெல்லாம் ரொம்ப சுவாரசியமா சொன்னாரு. கேக்க மகிழ்ச்சியா இருந்தது. கூட்டம் முடிஞ்சதும் நான் அவரைச் சந்திச்சி வணக்கம் சொல்லிட்டு பேசினேன். அவரும் ரொம்ப உற்சாகமா நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாரு. நான் எழுதுன கதைகளைப் பத்தியெல்லாம் கேட்டுட்டு நல்லா எழுதுங்க தம்பின்னு வாழ்த்தினாரு. சுதந்திரச்சங்கு பத்திரிகை ஆபீஸ்ல ஏற்கனவே உங்களைச் சந்திச்சி பேசியிருக்கேன்னு சொன்னேன்.  அப்படியா, ரொம்ப சந்தோஷம்னு சொல்லிட்டு, தோள்ல தட்டிக்கொடுத்துட்டு போயிட்டாரு. அவருக்கு என் முகம் ஞாபகத்துல இருந்திருக்குமா இல்லையான்னு என்னால உறுதியா புரிஞ்சிக்கமுடியலை. ஆனால் அவருடைய முகம் இன்னும் என் மனசுல நிலையா நின்னுட்டிருக்குது.”

“அதுக்கப்புறம் துமிலனைப் பார்க்கலையா?”.

“இல்லை. அந்தக் கூட்டத்துக்கப்புறம் அவரை நான் வேற எங்கயும் பார்க்கலை. அப்படி ஒரு வாய்ப்பு வரவே இல்லை. அவருடைய கதைகள் கூட பத்திரிகையில படிச்சமாதிரி ஞாபகம் இல்லை”

ஒருமுறை நாக்கைத் தட்டி சப்புக்கொட்டியபடி விட்டல்ராவ் எங்கோ பார்ப்பவர்போல ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார். விரல்கள் மட்டும் முகவாயைத் தடவியபடி இருந்தது. அந்த அமைதியை நான் குலைக்க விரும்பவில்லை. அவர் தன் நினைவின் ஆழத்துக்குள் மூழ்கி துமிலனின் உருவத்தைத் தேடுகிறார் என நினைத்துக்கொண்டேன்.  

 

(அம்ருதா  ஜூலை 2026)