Home

Sunday, 8 October 2017

ஞானியின் சொல்


அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம். ஒரு கன்னடக்கவிதையோடு இந்த உரையைத் தொடங்குகிறேன். வேகவேகமாக ஒருவரைத் தேடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்லும் ஒரு பெண்ணை ஒருகணம் கற்பனை செய்துகொள்ளுங்கள். தேடல் ஒன்றையே அவள் இலக்காகக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் முழுக்க அப்புள்ளியிலேயே குவிந்திருக்கிறது. நாலடி எடுத்துவைப்பதற்குள் அவள் முன் பசி எழுந்துவந்து அவளைத் தடுத்து நிறுத்துகிறது. அந்தப் பசியிடம் அவள் சற்றுப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறாள். இன்னும் சில அடிகள் கடப்பதற்குள் தாகம் அவளை வாட்டத் தொடங்குகிறது. அவள் தாகத்திடமும் பொறுத்துக்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாள். மேலும் சில அடிகள் எடுத்துவைப்பதற்குள் உறக்கம் அவள் முன்னால் வந்து நின்று தடுக்கிறது. அவள் அதனிடமும் தன் இலக்கைப்பற்றி எடுத்துச் சொல்லி கெஞ்சி ஒதுக்கிவிட்டு பரபரப்பாக நடந்துபோகத் தொடங்குகிறாள்.


ஒவ்வொரு நாலைந்து அடிகள் கடக்கும்தோறும் இப்படி ஏதேனும் ஒன்று முளைத்து அவளைத் தடுக்கிறது. காமம் வந்து நிற்கிறது. குரோதம் வந்து முறைக்கிறது. மோகம் முளைத்தெழுந்து வந்து ஆடுகிறது. பேராசை, கர்வம், பொறாமை என அனைத்தும் வரிசையாக வந்து அவள் பயணத்தைத் தடுக்க முனைகின்றன. அவள் அனைத்துத் தடைகளிடமும் ஒரே ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் சொல்லி மன்றாடியபடி தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறாள். சென்னமல்லிகார்ஜுனன் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். அவசரமாக வரச்சொல்லியிருக்கிறான். எனக்கு அடைக்கலம் தரும்படி அவனிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன். நெடுங்காலமாக என் கோரிக்கையை அவனிடம் இடைவிடாமல் முறையிட்டபடி இருந்தேன். அவனுக்கு இப்போதுதான் இரக்கம் சுரந்திருக்கிறது. என்னை வரச்சொல்லி இருக்கிறான். இதோ, நான் கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறேன். எனக்கு தயவுசெய்து வழிவிடுங்கள். சென்னமல்லிகார்ஜுனனோடு என்னைச் சேரவிடுங்கள். நண்பர்களே, இதுதான் அக்கவிதையின் பொருள். இதை எழுதியவர் அக்கமகாதேவி. கன்னடத்தில் அனைவராலும் அக்கா என அழைக்கப்படும் பக்திக்கவிஞர். மானுடக்காதலின் சாயலில் ஆன்மிகக்காதலின் தரிசனத்தை சொற்களில் வடிக்கத் தெரிந்த பெருங்கவிஞர். மறைஞானத்துக்கும் இறைஞானத்துக்குமான வழியாக நம்பிக்கையையும் தீராத காதலையும் தூய்மையையும் முன்வைத்தவர்.

அழைப்பு விடுத்திருக்கிறார், செல்லவேண்டும் என்று சொல்லி மன்றாடும் அக்கமகாதேவியின் இன்னொரு கவிதையில் அவரைப் பார்த்தீர்களா, அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கண்களில் படுகிற உயிரனங்களிடமெல்லாம் பதில் கேட்டபடி செல்கிறார். மகத்தான கவிதை அது.

கீகீ என்றுகூவும் கிளிகளே
நீங்கள் கண்டீரோ, நீங்கள் கண்டீரோ
நீர்நிலைகளில் நீந்தும் அன்னங்களே
நீங்கள் கண்டீரோ, நீங்கள் கண்டீரோ
குரலெடுத்துக் கூவும் குயில்களே
நீங்கள் கண்டீரோ, நீங்கள் கண்டீரோ
தாழ்ந்து பறக்கும் தும்பிகளே
நீங்கள் கண்டீரோ, நீங்கள் கண்டீரோ
மலைப்புறத்தில் ஆடும் மயில்களே
நீங்கள் கண்டீரோ, நீங்கள் கண்டீரோ
சென்னமல்லிகார்ஜுனனின் இருப்பிடம் எதுவெனத் தெரிந்தால்
நீங்கள் சொல்லுங்கள்

கிட்டத்தட்ட ஒரு காதலியின் தவிப்பைப்போலவே ஆன்மிகத்தவிப்பை முன்வைக்கிறார் அக்கமகாதேவி. வானம், மண், நீர், காடு, மலை எல்லா இடங்களிலும் எங்கிருக்கிறான் எங்கிருக்கிறான் என அவனைத் தேடித் தவிக்கிறாள். ஞானத்தைத் தேடும் பயணம் ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக முடிவடைகிறது. அவள் தேடிய சென்னமல்லிகார்ஜுனனை அவள் அடைந்துவிடுகிறாள். அவனை சதாகாலமும் தன் உள்ளங்கையில் ஏந்திக்கொள்கிறாள். அக்கணத்திலிருந்து அவளுக்குப் பிரிவென்பதே இல்லை. உள்ளங்கையே உலகம். அவளுடைய இன்னொரு கவிதை இது

ஐயா, பாதாளம் இப்பக்கம் ஸ்ரீபாதம் அப்பக்கம்
பிரும்மாண்டம் இப்பக்கம், மணிமகுடம் அப்பக்கம்
பத்துத் திசைகள் இப்பக்கம் பத்துத் தோள்கள் அப்பக்கம்
சென்னமல்லிகார்ஜுனனே
நீ என் அங்கைக்குள் குடியேறி அகலாதிரு ஐயா

இந்த மூன்று கவிதைகளும் அக்காவுடைய கவிதையுலகில் மூன்று முக்கிய குவிமையங்கள். அவள் தேடல், அவள் பயணம், அவள் அடைந்த ஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அவள் இயற்றிய நானூற்றுச்சொச்ச வசனங்களுக்கு இவை ஒரு வாசல். வெறும் முப்பது ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த அக்காவின் ஞானவழி வீரசைவத் தத்துவ உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கைவிளக்கு.

ஒரு பாரசிகக் கவிஞரை அறிமுகப்படுத்தும் ஒரு புத்தகத்தை முன்வைத்துப் பேசும் தருணத்தில் இப்படி ஒரு கன்னடக்கவிஞரைப்பற்றிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வசனங்கள் வழியாக அவரும் அவரைப்போன்ற கவிஞர்களும் முன்னெடுத்த சிவனை அறியும் ஞானவழி இயக்கம் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இந்த மண்ணில் நிகழ்ந்தது. மரபான மதம் தன் சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் ஆழ்ந்து மனிதர்களைவிட்டு விலகிவிலகிச் சென்றபோது, அச்சட்டகங்களை உதறிக் கடந்துவந்து ஞானத்தையே இறைவனை அடையும் வழியென உரைத்து வலிமையோடு எழுந்தது இவ்வியக்கம். ஞானவழிக்கான இத்தகு இயக்கங்கள் இந்தியா முழுதும் வெவ்வேறு மண்ணில் தோன்றி வேரூன்ற வெவ்வேறு மகான்களும் கவிஞர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பதே ஞானவழிப்பயணத்தை முன்னெடுத்த காலம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இது ஒரு முக்கியமான காலகட்டம். 1207 இல் பிறந்து 1285 இல் மறைந்த பாரசிகக் கவிஞர் கவிஞர் ரூமியின் பங்களிப்பை இத்தகு விரிவான ஒரு வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட முன்னுரை.

சம்பிரதாயங்களும் சடங்குகளும் இஸ்லாத்தை ஆக்கிரமித்தபோது, இறுகிவிட்ட மதச்சட்டகங்களை எதிருக்கும் கலகக்குரலாக சூஃபித்துவம் உருமாறியது. மரபான இஸ்லாம் அதிகாரத்தை நாடிச் சென்றபோது, சூஃபிகளின் இஸ்லாம் மக்களை நோக்கி வந்தது. தத்துவக் கோட்பாடுகளையும் அறிவுசார்ந்த தருக்கங்களையும் தாண்டி ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வலியுறுத்தும் அம்சமாக சூஃபித்துவம் விளங்கியது. இஸ்லாத்தின் மெய்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மிக உட்பரிமாணத்தையும் அடையாளப்படுத்துவதே  சூஃபித்துவத்தின் அடிப்படையாகும். ரூமியின் கவிதைகள் அந்த ஞானவழியில் பயணிப்பவை. பாரசிக மொழியில் எழுதப்பட்ட ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கோல்மன் பார்க்ஸின்  மொழிபெயர்ப்புத்தொகையிலிருந்து ஐம்பது கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நண்பர் சத்தியமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எண்ணிக்கையில் கொஞ்சமாக இருந்தாலும் ரூமியின் ஆர்வத்தையும் தேடலையும் கண்டடைதலையும் புரிந்துகொள்ளப் போதுமானவையாகவே உள்ளன.   

ரூமியின் கண்டடைதலை உணர்த்தும் ஒரு முக்கியமான கவிதை பாறையும் மதுக்கிண்ணமும்.

நீயொரு பாறை
நானொரு வெற்று மதுக்கிண்ணம்

நாம் ஒருவரையொருவர்
தொடும்போது என்ன நிகழுமென
உனக்குத் தெரியும்
உதயத்தில் தனக்குள்
கரைந்துபோகும்\
விண்மீனைக் கண்டு
சூரியன் சிரிப்பதைப்போலச்
சிரிக்கிறாய் நீ

காதல் எனது
நெஞ்சைத் திறக்கிறது
சித்தம் தனது
குகைக்கே திரும்புகிறது

பொறுமையும் தர்க்கங்களும்
விலகிச் செல்கின்றன
தீராத காதல் மட்டுமே
தங்கி நிற்கிறது
பித்தமும் விசும்பலுமாய்

பாறை, மதுக்கிண்ணம் என எதிரெதிர் பண்புகளைக் கொண்ட பொருட்களை முன்னிருத்தி, அவற்றை அழகான படிமங்களாக மாற்றும் ரூமியின் கவித்துவம் மிகச்சிறப்பானது. பாறையில் மதுக்கிண்ணம் மோதினாலும் மதுக்கிண்ணம் பாறையில் மோதினாலும் மதுக்கிண்ணம் சிதறித் தூள்தூளாகப் போய்விடுவது உறுதி. அது தெள்ளத்தெளிவாகத் தெரிந்த நிலையிலும் ஞானத்தைப் பாறையாகவும் தன்னை மதுக்கிண்ணமாகவும் முன்வைத்து நகர்கிறது கவிதை. ஒன்றையொன்று நெருங்கிய கணத்தில் எதிர்பார்த்திருந்த விபரீதம் எதுவும் நிகழவில்லை. மாறாக ஆச்சரியமே நிகழ்கிறது. உதயத்தில் காணாமல்போகும் விண்மீன்களைப்போல அனைத்தும் விலகிச்சென்றுவிட, காலைக்கதிரென அது மாறிவிடுகிறது. நெஞ்சுக்குள்ளே இறங்குகிறது. காதலாக உருமாறி எங்கும் நிறைந்து தளும்புகிறது. ஏற்கனவே அடைத்துக்கொண்டிருந்தவை அனைத்தும் விலகிக் கரைந்துவிடுகின்றன. பாறையே பனிக்கட்டியாக மாறி மதுக்கிண்ணத்தை நிறைத்துவிடுகிறது. அது மதுக்கிண்ணத்தை நிறைத்த பிறகுதான் அந்தப் பாறை ஒருபோதும் பாறையாக இல்லை, பனிக்கட்டியாகவே இருந்திருக்கிறது என்னும் உண்மையை தாமதமாகப் புரிந்துகொள்கிறான் பாறை என்றால் பாறை. பனிக்கட்டி என்றால் பனிக்கட்டி. மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தின் மறைந்தது மாமத யானை என்பதுபோல.

சூரியோதத்து மாணிக்கக்கல் இன்னொரு அழகான கவிதை.

சூரியோதயத்துக்கு சற்று முந்தைய
புலரியில்
காதலனும் காதலியும் கண்விழித்து
ஒரு மிடறு நீர்
பருகுகின்றனர்

அவள் கேட்கிறாள்
நீ என்னை நேசிக்கின்றாயா
அல்லது உன்னையே அதிகம்
நேசித்துக்கொள்கின்றாயா
மறைக்காமல் உண்மையைச் சொல்

அவன் சொல்கிறான்
நானென எதுவுமில்லை
உதயகாலத்துச் சூரியனை நோக்கி
ஏந்தப்படும் மாணிக்கக்கல்லைப்போல நான்
இப்போது அது
வெறுமொரு கல்லா
அல்லது செந்நிறம் படைத்த
ஓர் உலகமா
அதற்குச் சூரிய ஒளியிடம்
தடை எதுவுமில்லை

மாணிக்கக்கல்லை சூரியன் தொட்டெழுப்பி, அந்தக் கல்லையும் தன்னைப் போன்றதாகவே ஆக்கும் ரசாயன மாற்றம் ஒரு கலைச்சாதனை.. எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த மாணிக்கக்கல் சூரியன் முன் கிடந்தாலேயே போதும். வேறெதுவும் வேண்டாம். தன் பொன்னொளியால் அம்மாணிக்கக்கல்லையும் பொன்மயமானதாக ஆக்கிவிடும்.

’பொன்னார் மேனியனே புலித்தோலை அரைத்தசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே’

என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளாமல் கடந்துசெல்ல இயலவில்லை. நாயனாரும் மாணிக்கத்தைச் சொல்வதும், ரூமியும் மாணிக்கத்தைச் சொல்வதும் தற்செயலான ஒற்றுமை.

அந்தவொரு முத்துக்காக என்னும் இன்னொரு கவிதையும் மிகமுக்கியமான கவிதை. 

வாழ்வெல்லாம்
வேண்டிக் காத்திருக்கிறோம்
மெய்தீண்டி ஊன் உருகும்
அந்தவொரு முத்துக்காக

கடல் அலை
யாசிக்கிறது முத்திடம்
சிப்பியை உடைத்து வெளிவர

எவ்வளவு தீவிர உத்வேகத்துடன்
தேடுகிறது அல்லிமலர்
கட்டுக்கடங்காத காதலன் ஒருவனை\

இரவில்
சாளரத்தைத் திறந்து
நிலவை அழைப்பேன்
அதன் முகத்தை
என் முகத்தோடு
நெருக்கமாகப் பொருத்த
உயிர்மூச்சை எனக்கு வழங்க

மொழியென்னும் வாசல் அடைபட்டு
காதலின் சாளரம் திறக்கட்டும்

நிலவுக்கு வழி
வாசல் அல்ல
சாளரமே

மூன்று முக்கியக்காட்சிகளை அழகாக ஒருங்கிணைக்கிறார் ரூமி. முதலில் கடலலை – கடல்முத்து காட்சி. அடுத்து மலர் – தேன் காட்சி. பிறாகு நிலவு – சாளரம் காட்சி. கணத்துக்குக்கணம் ஆயிரமாயிரம் முறைகள் அலைகள் எழுந்தெழுந்து கரையைத் தொட்டுத்தொட்டுச் சென்றபடி உள்ளன. அலையால் கரையொதுக்கப்படும் முத்துக்காக நம் கண்கள் காத்திருக்கின்றன. ஆயிரம் முறையல்ல, ஒரு லட்சம் முறையல்ல, ஒரு கோடி முறை அலைகள் எழுந்தெழுந்து பின்வாங்கிப் போகும் பயணத்துக்கிடையே ஏதோ ஒரு அலை அந்த முத்தை கரையில் ஒதுக்கிவிட்டுச் செல்கிறது. முத்துக்காக பரபரப்பதல்ல, முத்துக்காக ஏங்குவதுமல்ல, முத்துவையே தியானித்துக் காத்திருப்பதே வாழ்க்கை. காத்திருப்பவனே கண்டடைவான். மலர்- தேன் காட்சியிலும் இதே காத்திருப்பு. நிலா-சாளரம் காட்சியிலும் இதே காத்திருப்பு. ஒர் அற்புதம் நிகழும் கணத்துக்காக தன்னையே ஒப்படைத்துவிட்டுக் காத்திருக்கும் காத்திருப்பு. ஞானம் என்பதும் அவ்வாறே. அது ஓர் அணிகலனோ, மலரோ, ஆடைகளோ அல்ல. எடுத்துச் சூடிக்கொள்ள. அது ஒரு வெளிச்சம். அது ஒரு சுடர்.

துயிலச் சென்றுவிடாதே மீண்டும் கவிதையில் அந்தக் காத்திருப்பை இன்னும் மென்மையான குரலில் காதருகில் சொல்வதுபோலச் சொல்கிறார் ரூமி.

உனக்கென ரகசியங்களை
பொதித்து வைத்திருக்கிறது
காலைத்தென்றல்
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்

எதை உண்மையாக நீ விரும்புகிறாயோ
அதைக் கேட்டுப் பெற்றுவிடு
எப்படியும்
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்

அவ்வுலகும் இவ்வுலகும்
தொட்டுறவாடும்
வாயிலின் வழியாக
மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்
வட்டவடிவான அவ்வாயிலோ
திறந்து கிடக்கிறது இப்போது\
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்

உன்னோடு
நானிருக்கும்போது
கண்விழித்தவண்ணம்
கழிகிறது இரவு

நீ
இங்கில்லை என்னும்போதோ துயிலுற இய்லவில்லை
ஒருபோதும் என்னால்

இவ்விரு துயிலொழிவுகளுக்காகவும்
அவற்றின் வேற்றுமைக்காகவும்
நாம் போற்றுவோம் கடவுளை

தாகம் கொண்ட மீனொன்று கவிதை, வாசித்ததுமே ஒரு சலனப்படம்போல மனத்தில் விரிவடையும் நேர்த்தியான கவிதை.

சலிக்கவில்லை நீ எனக்கு
என்மீது பரிவுகாட்டி பரிவுகாட்டி
நீயும் அலுத்துப் போகாதே

நீர்க்குடுவை
நீர்க்கலயம்
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்துபோயிருக்கும் நிச்சயம் என்னால்

தாகம்கொண்ட மீனொன்று
எனக்குள் இருக்கிறது
ஒருபோதும் கூடவில்லை அதற்கு
முழுத்தாகமும் தணிக்க

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள்: அதை எனக்கு
உடைத்தெறியுங்கள்
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை

மனமயக்கத்தையும்
பெருந்துக்கத்தையும்கூட

நெஞ்சின் மையத்தில்
யாருமறியா முற்றத்திலிருந்து

கடலுக்கு வழி கேட்கும் மீன் எத்தனை அற்புதமான படிமம். அது நீந்திக் களிக்கும் மீனல்ல. கடலென விரிந்த மானுடத்தைத் தழுவிக்கொள்ள ஆவல் கொண்ட மீன்.

ஒருகணம் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்த மீன் ஏன் ஒரு குளத்துக்கு வழியைக் கேட்கவில்லை ? ஏரிக்கும் ஆற்றுக்குமான வழிகளை அது ஏன் புறக்கணித்தது ? அது ஏன் எடுத்த எடுப்பில் கடலுக்கு வழி கேட்கிறது? கடலுக்கும் அந்த மீனுக்கும் என்ன தொடர்பு? செடியை, கொடியை, கிளையை, மரத்தை என சதாகாலமும் இளைப்பாறத் தேடும் பறவை காலமெல்லாம் விரும்புவது வானத்தை அல்லவா? ஒருவேளை அதேபோன்ற விருப்பம் கடலைத் தேடும் மீனுக்கும் இருந்திருக்கலாம்.

அந்த யோசனையின் தொடர்ச்சியாக ஒரு கன்னட வசனத்தின் வரிகள் நெஞ்சில் ஓடின.

எங்கே மாமரம் எங்கே குயில்
எங்கிருந்தெங்கோ சம்பந்தம் ஐயா?
மலையுச்சியில் நெல்லிக்காய்
கடலிலிருக்கும் உப்பு
எங்கிருந்தெங்கோ சம்பந்தம் ஐயா?
குகேஸ்வர லிங்கத்துக்கும்
எனக்கும்
எங்கிருந்தெங்கோ சம்பந்தம் ஐயா?

குயிலையும் மாமரத்தையும் இணைத்திருக்கும் இயற்கையே கடலையும் மீனையும் இணைத்திருக்கிறது.

ஒரு ஞானியின் சொல் பல கதவுகளைத் திறக்கும் ஆற்றல் நிரம்பியது. மதம் என்னும் அமைப்பு தம்மைச் சுற்றியிருக்கும் மானுடருடன் உரையாட வாய்ப்பின்றி, எல்லாக் கதவுகளையும் இழுத்து இறுக்கமாக மூடி  அடைத்துக்கொள்ளும்போதெல்லாம் இந்த உலகத்தில் ஞானியர் தோன்றுகின்றனர். தம் சொற்களால் அக்கதவுகளைத் திறந்து காற்றுக்கு வழிவகுக்கின்றனர். காற்றுக்காக உலகெங்கும் மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரூமியின் சொற்களை சத்யமூர்த்தியின் வழியாகப் படிப்பது பெரும் ஆறுதலாக இருக்கிறது. தாகம் கொண்ட இன்னொரு மீனாக இந்த மண்ணில் மிகச்சிறு காலமே வாழ்ந்து மறைந்த கவிஞர் ஆத்மாநாமின் பெயரால் வழங்கப்படும் இவ்விருதைப் பெற நண்பர் சத்யமூர்த்தி முற்றிலும் தகுதியானவர். அவருக்கு என் நல்வாழ்த்துகள். அவரை இந்த அவையில் முன்னிருத்திக் கொண்டாடியிருக்கும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். 

(30.09.2017 அன்று சென்னையில் நடைபெற்ற ஆத்மாநாம் விருதுவிழாவில் மொழிபெயர்ப்பாளர் சத்தியமூர்த்திக்கு விருதை வழங்கி நிகழ்த்திய உரையில் எழுத்துவடிவம்)