Home

Thursday 25 August 2022

கு. அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 1


விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில்

எங்கள் ஊரான வளவனூர் ரயில்வே ஸ்டேஷன்

இருக்கிறது. இரண்டு நகரங்களுக்குமிடையே ரயில்

போக்குவரத்து செழிப்பான நிலையில் இருந்தபோது

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஒரு பெருமை

இருந்தது. மக்கள் ஆதரவு குறைந்து போக்குவரத்தில்

மந்தநிலை உருவானபோது எங்கள் ஸ்டேஷன்

கைவிடப்பட்ட கட்டடமாக உருக்குலைந்தது. ஏதோ

பழங்காலத்து நினைவுச்சின்னம்போலப் பல ஆண்டுகள்

அப்படியே நின்று சிதையத் தொடங்கியது.

குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சி நின்றிருந்தன.

ஸ்டேஷனை அகற்றிவிடலாம் என்று முடிவெடுத்த

நிர்வாகம் வேகவேகமாக ஒப்பந்த ஆட்களின் உதவியோடு

அந்தச் சுவர்களையும் இடித்து நிலத்தைச் சமப்படுத்தியது.

அந்த இடம் ஆடுமாடுகள் மேயும் இடமானது. புதர்புதராக

வேலிக்காத்தான் செடிகள் வளர்ந்தபோது, அவற்றின்

மறைவில் சாராயக்கடைகள் தாராளமாக இயங்கின.

நான்கு ஆண்டுகளில் ஸ்டேஷன் இருந்த சுவடே

இல்லாமல் போனது.

வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும்

முக்கியமான இருப்புப்பாதைத் தடங்கள்

அகலப்பாதையாக மாற்றமடைந்தபோது அப்பாதையின்

இணைப்புக்கண்ணிகளில் விழுப்புரமும் புதுச்சேரியும்

சேர்ந்துகொண்டன. விழுப்புரத்தோடு நிறுத்தப்பட்ட

பல ரயில்கள் புதுச்சேரிவரை நீட்டிக்கப்பட்டன. ஊர்மக்கள்

வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்ட நிர்வாகம் எங்கள்

சிற்றூரிலும் ஸ்டேஷனை இயக்க ஒப்புக்கொண்டது. இடித்த இடத்திலேயே

ஸ்டேஷன் மறுபடியும் சின்ன அளவில் கட்டப்பட்டது. கட்டடப் பாதுகாப்பு,

பயணச்சீட்டுகள் விற்பனை எல்லாவற்றையும் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்

ஒருவரிடம் ஒப்படைத்தது.

புதுச்சேரிக்குச் செல்ல அந்த ஸ்டேஷனில் ஒரு நாள் மாலை

நின்றிருந்தேன். வெயில் மறையும்நேரம். அனல் குறைந்து காற்று ஓரளவு

இதமாக வீசியது. வேப்பம்பூவின் மணம் அந்தக் காற்றில் மிதந்து

அலைந்தது. தரையில் உதிர்ந்து உலர்ந்த பூந்திட்டுகள் தினையரிசியைப்

பரப்பிவைத்ததுபோல இருந்தது. ஒரு கல்மேடையில் உட்கார்ந்து வேடிக்கை

பார்த்தபடி இருந்தேன். ஐயனார் சிலை இருந்த திசையிலிருந்து ஒரு

பெரியவர் இரண்டு சிறுமிகளோடு வந்து பக்கத்தில் இருந்த வேறொரு

கல்மேடையில் அமர்ந்தார். ஒரு கூடைக்கார அம்மா வந்து மணி

கேட்டுவிட்டுக் கீழே உட்கார்ந்தார். நான்கு நாய்கள் ஓடிப் பிடித்து

விளையாடிக்கொண்டிருந்தன. சீட்டு விற்ற ஆசிரியர் நெருங்கிவந்து என்னிடம்

ஊர்க்கதையைச் சொல்லிப் பகிர்ந்துகொண்டார். “அம்பது அறுபதுன்னு

சீட்டு வித்தாதான சார் அரசாங்கத்துக்கும் ஸ்டேஷன நடத்தணும்னு

ஒரு ஆச வரும். இப்பிடியே ஒரு டிரிப்புக்கு ஆறு, ஏழுன்னு வித்தா

என்ன செய்யமுடியும் சொல்லுங்க? இந்த தரம் இழுத்து மூடனா

இன்னொரு தரம் தெறக்கறது ரொம்ப கஷ்டம்தான்என்றார். ஒரு

தம்பதியினர் வந்து ஆசிரியரை நெருங்கிவந்து சீட்டு

வாங்கிக்கொண்டுசென்றார்கள்.

கால்மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு ரயில் வந்தது. மொத்தம்

ஏழு பேர். ஆளுக்கொரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தோம். கொடியசைந்ததும்

ரயில் கிளம்பியது. ஸ்டேஷன் மெல்லமெல்ல கண்பார்வையிலிருந்து

மறைந்தது. ஒரு சித்திரமாக நெஞ்சில் உறைந்துவிட்ட ஸ்டேஷனை

மனக்கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. நினைவுகள் கலைந்துகலைந்து

இணைந்த ஒரு கணத்தில் கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன்

சித்திரத்தை நினைத்துக்கொண்டேன். அந்த ஸ்டேஷன் சித்திரத்தைத்தான்

நான் அதுவரைக்கும் எங்கள் ஊர் ஸ்டேஷனில் தேடிக்கொண்டிருந்ததாகத்

தோன்றியது.

அழகிரிசாமியின் கதையுலக உச்ச சாதனைகளில் ஒன்று குமாரபுரம்

ஸ்டேஷன். அழகிரிசாமியின் மனமும் வாழ்க்கைப்பார்வையும் அக்கதையில்

ஒருங்கே வெளிப்படுகின்றன. ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்யும்

பால்யகால சிநேகிதனைப் பார்ப்பதற்காக குமாரபுரத்துக்கு வரும் சுப்புராம

ஐயருக்குத் தொடக்கத்தில் அந்த ஸ்டேஷனைப்பற்றி அவ்வளவு உயர்வான

எண்ணம் எழவில்லை. தண்ணீர்ப்பந்தல் கட்டவேண்டிய இடத்தில்

அரசாங்கம் ஒரு ஸ்டேஷனைக் கட்டிவிட்டது என்று மற்றவர்களைப்போல

அவரும் கேலியாகத்தான் நினைத்துக்கொள்கிறார். ஆனால் இரண்டு

நாட்கள் தங்கி இருபது நிமிஷம் அந்த ரயிலில் பிரயாணம் செய்த

பிறகு அவருடைய எண்ணம் மாறிவிடுகிறது. இருபது நிமிஷ ரயில்

பயணத்தில் இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ளமுடியாத

எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டதுபோன்ற

பரவசத்தில் அவர் மனம் ஆழ்ந்துவிடுகிறது. ஸ்டேஷன் மாஸ்டரின்

தர்க்கங்கள், ஒரு தந்தையைப்போல உயர்கல்விச் சேர்க்கைக்காகத் தன்

மாணவர்களைத் தயார் செய்து அனுப்பும் ஆசிரியர், தன் பிள்ளையோடு

ஊர்ப்பிள்ளைகளையும் பள்ளிச் சேர்க்கைக்காக அழைத்துச் செல்லும்

நடுவயதுத் தந்தை, ஏழை போர்ட்டரின் உபசரிப்பு, பிள்ளையில்லாத

ஓட்டல்காரர் எல்லாரையும் தன்னுடைய பிள்ளைகளாகச் சொல்வது

என எல்லாமே அவருக்குப் புது அனுபவமாகவே இருக்கிறது. புதிதாக

கண்பார்வை கிடைக்கப் பெற்றவர்களைப்போல ஒவ்வொன்றையும்

ஆச்சரியம் ததும்பப் பார்க்கிறார். அந்த ஸ்டேஷனையே பெரிய பள்ளிக்கூடம்

என்று பெருமையோடு எண்ணிக்கொள்கிறார். வாழ்க்கையைப் படிப்பது

பெரிய படிப்பு என்பதில் அவருக்குத் துளியும் ஐயமே கிடையாது.

சுப்புராம ஐயர் பரவசத்தோடு அடைந்த ஞானம் ஒருவகையில்

ஒட்டுமொத்த அழகிரிசாமியின் கதைகளின் மையத்தரிசனம் என்று

குறிப்பிடலாம். எளிய மனிதர்கள் வழியாகவும் எளிய காட்சிகள் வழியாகவும்

மானுட மேன்மையை உணரும் வாய்ப்பு சுப்புராம ஐயருக்கு குமாரபுரம்

ஸ்டேஷனில் கிடைத்ததால் அவருடைய பார்வை மாறிவிட்டது. இனி,

அவர் பார்வை படும் எல்லா இடங்களிலும் குமாரபுரம் ஸ்டேஷனைக்

கண்டடையக்கூடும். ஒரு கட்டத்தில், அவர் தன்னைச் சுற்றியுள்ள

இடங்களையெல்லாம் குமாரபுரம் ஸ்டேஷனாக மாற்றித்

தகவமைத்துக்கொள்ளவும்கூடும். வாழ்க்கையைப் படிப்பதுபோல ஒன்றைப்

பார்க்கவும் அறியவும் இந்த எண்ணம் உதவுகிறது. பார்க்க கண்களும்

கேட்க காதுகளும் இருந்தால் சுப்புராம ஐயர் பெற்ற ஞானத்தை எல்லாரும்

பெறமுடியும்.

ஒரு காட்சிக்குள் எழுத்தாளன் வாழ்க்கையைப் படிப்பது எப்படி?

பல வழிகள் அதற்கு உண்டு. காட்சி நிகழும் கணத்தில் அவன் மனம்

ஏதோ ஓர் எண்ணத்தை ஆழத்திலிருந்து மீட்டெடுக்கிறது. வெறும் எண்ணம்

மட்டும் அல்ல அது. ஒரு வாழ்க்கைத்துணுக்கு. அதை அவன் கண்கள்

தன் முன் நிகழும் காட்சியுடன் இணைக்கிறது. அப்போது எழும் புதிய

சுடரின் அசைவில் அவன் புத்தம்புதிய ஒன்றைக் கண்டடைகிறான்.

கண்டுபிடிக்கும் அனுபவத்துக்காகவும் அதில் திளைக்கும் பரவசத்துக்காகவும்

அவன் புதுப்புதுக் காட்சிகளை நோக்கித் தாவிக்கொண்டே இருக்கிறான்.

ஒருமுறை ரயில்வே ஸ்டேஷன். இன்னொருமுறை ஒரு வாடகை வீடு.

மற்றுமொருமுறை எந்த வசதிகளும் இல்லாத ஊரின் ஒதுக்குப்புறம்.

எல்லாக் காட்சிகளின் வழியாகவும் அவன் அறிய விழைவது வாழ்க்கையின்

பாடம்.

உத்தேசமாக இதை அழகிரிசாமியின் எழுத்துமுறை என்று

வரையறுத்துக்கொள்ளலாம். அவருடைய மொத்தப் படைப்புலகத்திலும்

முன்வைக்கப்படும் காட்சிகளையும் அவற்றில் வாசகன் கண்டடைகிற

ஒளிச்சுடர்களையும் எண்ணற்ற பாத்திரங்கள் வழியாகவும் அவர்களுடைய

உரையாடல்கள்வழியாகவும் நாம் தொகுத்துக்கொள்ளலாம். சுப்புராம

ஐயருக்குப் பரவசத்தின் வழியாகக் கிடைத்த ஞானம் தருணங்களுக்குத்

தகுந்தவாறு மாற்றமடைந்தபடி உள்ளது. சில சமயங்களில் அது

பெருமூச்சின் வழியாக. சில சமயங்களில் ஆற்றாமையின் வழியாக.

இன்னும் சில சமயங்களில் குற்ற உணர்ச்சியாக.

குமாரபுரம் ஸ்டேஷனில் நிகழ்பவை அனைத்தும் மிக எளிய சம்பவங்கள்.

எளிய உரையாடல்கள். இந்த எளிமை வழியாகத்தான் ஒரு பேருண்மை

கண்டடையப்படுகிறது. ஸ்டேஷன் என்ற ஒரு பௌதிக இருப்பிடத்தைக்

கடந்து உணவு விடுதி, வயல்காடு, கூத்துமேடை, சத்திரம், பாழடைந்த

மண்டபம் எனப் பல இடங்களையும் தாண்டி நீண்டுகொண்டே செல்கிறது.

நீளும் இக்கோடுகளின் சிக்கல்கள்வழியே உருவாவதுதான் அழகிரிசாமியின்

எழுத்துலகம். குழந்தைகள், பெண்கள், முரடர்கள், சாதிப்பித்தர்கள்,

கிழவிகள், வாடகைவீட்டுக்குச் சொந்தக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள்,

கதையாசிரியர்கள் என ஏராளமானவர்கள் இந்த உலகத்தில்

வாழ்ந்துவருகிறார்கள்.

சுப்புராம ஐயர் ஞானமடைவதற்குத் தூண்டுகோலாக இருந்த சில

சம்பவங்களைப்போல அன்பளிப்பு கதையில் சித்தரிக்கப்படும் சில

சம்பவங்கள் அந்த இளைஞன் பெறும் ஞானத்துக்குப் பின்னணியாக

உள்ளன. ஒரு வாடகை வீட்டில் தன் தாயுடன் தனியாக வசிக்கும்

இளைஞனொருவன் இடம்பெறுகிறான். அவன் பத்திரிகைத் துறையில்

வேலை செய்பவன். அக்கம்பக்கத்தில் வசிக்கிற பல பிள்ளைகள் அவனோடு

நெருக்கமாகப் பழகிவருகின்றார்கள். பிருந்தா, சுந்தரராஜன், கீதா, சித்ரா,

சாரங்கன் என ஒரு பெரிய பட்டளாமே அவனுடைய வீட்டில் உரிமையோடு

விளையாடுகிறார்கள். அவனுடைய புத்தகஅடுக்கைக் கலைத்துத்

தேவையானதை எடுத்துப் படிக்கிறார்கள். பிள்ளைகள் பட்டாளத்தில்

சித்ராவும் சுந்தரராஜனும் வயதில் சற்றே பெரியவர்கள். மற்றவர்கள்

சிறு பிள்ளைகள். பெரியவர்கள் என்பதாலேயே அவர்கள் மட்டும்

இளைஞனிடமிருந்து புத்தகங்களை அன்பளிப்பாகப் பெறுகிறார்கள்.

மற்றவர்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாரங்கன்

ஆழ்மனத்தில் அது ஓர் ஏக்கமாக உருவெடுக்கிறது. தான்

பொருட்படுத்தப்படவில்லை என்கிற ஏக்கம் ஆழமாக அவன் நெஞ்சில்

பதிந்துவிடுகிறது. எதையாவது ஒரு நூலைக் கேட்டுப் பெறவேண்டும்

என்ற ஆசையில் வால்ட் விட்மனின் கவிதைத்தொகுதியைப் படிக்கத்

தரும்படி கேட்டு தன் முயற்சியில் தோல்வியடைகிறான். அதற்குப் பிறகு,

அச்சிறுவன் இளைஞனிடம் எதையும் கேட்பதில்லை. அதே சமயத்தில்

ஆழ்மனத்தில் அந்தப் பொறி அப்படியே சுடர்விட்டு எரிந்தபடி உள்ளது.

கதையின் இறுதியில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. வழக்கம்போலப்

புத்தாண்டுக்குரிய டைரிகளைக் கொண்டுவந்து சித்ராவுக்கும்

சுந்தரராஜனுக்கும் மட்டும் தருகிறான் இளைஞன். வேறொரு தருணத்தில்

தன் வீடுவரைக்கும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் சாரங்கன்

ஒரு புத்தம்புது டைரியை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுஎன் பிரியமுள்ள

சாரங்கனுக்கு அன்பளிப்புஎன்று எழுதிக் கொடுக்கும்படி

கேட்டுக்கொள்கிறான்.

புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறுவன் தனக்குத் தேவையான மகிழ்ச்சியைத்

தானே கட்டியெழுப்பிக்கொள்ளும் உத்வேகம்தான் இந்தச் சிறுகதையின்

மையம். அன்பளிப்பு என்ற கதையின் தலைப்பு முதலில் இளைஞன்

குழந்தைகளுக்கு வழங்கும் புத்தாண்டு டைரிகளைக் குறிக்கும்

அடையாளமாகிறது. பிறகு, கிட்டாத அன்பளிப்பை கிடைத்ததுபோலத்

தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும் குழந்தையின் உத்வேகத்தைக்

குறிக்கும் அடையாளமாகிறது. இந்த உத்வேகத்தை ஒரு சிறுவன் எப்படிப்

பெற்றான்? அது இந்த வாழ்க்கை கொடுத்த அன்பளிப்பு. காலம் அல்லது

தெய்வம் வழங்கிய அன்பளிப்பு என்றும் விரிவாக்கிக்கொள்ளலாம்.

உலகத்தளம் நமக்கு ஒன்றை மறுக்கும்போது, அதை வேறொரு வடிவில்

வேறொரு தளம் நமக்குக் கொடுத்துச் சமன் செய்கிறது என்பது எவ்வளவு

பெரிய வெளிச்சம்.

குழந்தைகளோடு உரையாடுவதும் குழந்தைகளோடு விளையாடிக்

களிப்பதும் இந்தியக் குடும்பங்களில் மிக இயல்பாகக் காணக்கூடிய

ஒரு செய்தி. கூட்டுக்குடும்ப மரபில் மாமன்மார்களும் சித்தப்பாமார்களும்

சித்திமார்களும் குழந்தைகளின் நண்பர்களாக இருப்பது தொன்றுதொட்டு

வரக்கூடிய ஒரு வழக்கம். சித்தப்பாவோ மாமாவோ யாருமே சொந்தமெனச்

சொல்லிக்கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்த வீட்டில் வசிக்கிற யாராவது

ஒருவர் சொந்தமாக அமைந்துவிடுவார்கள். குழந்தைகள் முகம் சுணங்கும்படி

ஒருபோதும் பேதம் காட்டக்கூடாது என்பது ஒரு பண்பாடு. ஆனால்

நடைமுறையில் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. குழந்தைகளோடு

விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் ஏதாவது உணவுப்பொருளைப்

பங்கிட்டுத் தரும் சூழல் அமைந்துவிட்டால் சில பிள்ளைகளுக்குக்

கூடுதலாகவும் சில பிள்ளைகளுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படும்.

புள்ள ஒங்க அம்மா அங்க கோயில் வாசல்ல ஒன்ன தேடிட்டிருக்கா

போல. அவ கூப்புடறது ஒன் காதுல விழலையா?” என்ற கேள்வியோடு

சில குழந்தைகள் நாசுக்காக வெளியேற்றப்படுவார்கள். குழந்தைகள்

அந்தச் சூழலில் எவ்விதமான எதிர்வினையையும் வெளிப்படுத்துவதில்லை.

உடனடியாக ஓடிவிடுகிறார்கள். ஆனால் ஒரு சின்ன வடுவாக அது

அவர்கள் ஆழ்மனத்தில் பதிந்துவிடுகிறது. பிறகு, ஏதோ ஒரு கணத்தில்

அந்த ஆவல் தனக்குத்தானே தணித்துக்கொள்ளும் வழிமுறைகளைக்

கண்டடைந்துவிடுவார்கள். கூட்டத்தில் தனக்கு அல்வா கிடைக்காத ஒரு

குழந்தை கூட்டாஞ்சோறு ஆட்டத்தில் தானே மண்அல்வா சமைத்து

எல்லாருக்கும் தாராளமாக அள்ளிஅள்ளி வைத்து வயிறார உண்ணும்படி

கேட்டுக்கொள்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இந்த மனமும்

குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுத்த அன்பளிப்பு. “என் பிரியமுள்ள

சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்என்று புன்னகையுடன்

மன்றாடிக் கேட்கும் சாரங்கனை நினைக்கும்போது இவற்றையெல்லாம்

இணைத்து நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

மிகவும் கவனமாக அக்கணத்தில் அவன் செயல்படுகிறான். அக்கணம்

அவனுக்குக் கிடைத்திருக்கிற முக்கியமான வாய்ப்பு. அதனால்தான்

முகத்துக்கு எதிரில் நிற்காமல் முதுகுப்புறமாக வந்து நிற்கிறான். அங்கே

நின்றவாக்கிலேயே கையில் வைத்திருக்கிற புத்தகத்தை மெதுவாகப்

பிடித்து இழுத்துத் தூரத்தில் தள்ளிவைக்கிறான். தூங்கும் குழந்தையின்

கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு கவனமாகத் தனியே எடுத்து

அப்புறப்படுத்துகிறோமோ, அதுபோல அப்புறப்படுத்துகிறான். பிறகு

மெதுவாகத் தன் கால்சட்டைப் பையில் கையைவிட்டு அந்த டைரியை

எடுத்து மேசையின்மீது வைக்கிறான். பிறகுதான் இப்படி ஒரு கோரிக்கையை

முன்வைக்கிறான். டைரி அன்பளிப்பு தனக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

வயதை மீறிய ஒன்றாக அவன் நெஞ்சில் முளைவிட்டிருக்கிறது. அது

அக்கணத்தில் தெரியவில்லை. இறுதிக்கணத்தில்தான் அவன் எதிர்பார்த்து,

ஏமாற்றமடைந்து புண்பட்டிருக்கிறான் என்பது புரிகிறது. ஆனால்

சமயோசிதமாக அவன் மனம் போடும் திட்டத்தால் அந்தப் புண்ணை

அவனே ஆற்றிக்கொள்கிறான்.

சமயோசிதமாக நடந்து புண்களையும் ஏமாற்றங்களையும் கடந்துபோகும்

சிறுவர்களைச் சித்தரித்துக் காட்டும் அழகிரிசாமியின் இன்னொரு சிறுகதை

ராஜா வந்திருக்கிறார். ஒரு பள்ளிக்கூடக் காட்சியில் தொடங்கி மறுநாள்

தீபாவளியின் காலை நேரத்தோடு முடியும் இச்சிறுகதையில் குழந்தைகள்

உலகத்துக்கு முக்கியமான இடமுண்டு. செல்லையா, தம்பையா, மங்கம்மா

எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். இவர்கள் ஒரு

தரப்பு. பண்ணையார் வீட்டுச் சிறுவன் ராமசாமி. அவன் இன்னொரு

தரப்பு. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும்போது, இந்த இரண்டு

தரப்பினரிடையேயும் போட்டி நிகழ்கிறது. படத்துக்குப் படம் காட்டும்

போட்டி. அந்த எளிய போட்டியில்கூட தானோ தன் சகோதரர்களோ

தோற்றுவிடக்கூடாது என்று நினைக்கிறாள் சிறுமி மங்கம்மா. தெருமுனை

நெருங்குகிறவரைக்கும் ஆடிக்கொண்டே வந்து, பிறகு தத்தம்

வீடுகளைநோக்கி ஓடுகிறார்கள் அவர்கள். விடிந்தால் தீபாவளி.

தலைதீபாவளிக் கொண்டாட்டத்துக்காகப் பண்ணையார் வீட்டு மருமகன்

ராஜா வருகிறார். விளாத்திகுளத்திலிருந்து கழுகுமலைக்குச் செல்லும்

அனாதைச் சிறுவன் ராஜா தன் குடிசைக்கு எதிரே மரத்தடியில் இருட்டுக்குள்

நின்றிருப்பதைத் தற்செயலாகப் பார்த்து உள்ளே அழைத்துத் தூங்கச்

செய்கிறாள் மங்கம்மாவின் தாய். விடிந்ததும் பிள்ளைகளோடு பிள்ளையாக

அவனையும் குளிக்கவைக்கிறாள். புத்தாடையாக அவனுக்கு ஒரு துண்டு

கிடைக்கிறது. அதிகாலையில் பேச்சுவாக்கில் பண்ணையார் வீட்டுப் பையன்

ஒரு தகவலாக தம் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார் என்று சொல்கிறான்.

ஆனால் அதை நேற்றைய ஆட்டத்தின் தொடர்ச்சியாக பிழையாக

எண்ணிக்கொண்டு எங்கள் வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்காரு என்று

வேகமாகச் சொல்லி வெற்றியை நிறுவ முயற்சி செய்கிறாள் மங்கம்மா.

இக்கதையில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்றை இன்னொன்றால்

சமப்படுத்தி விளையாடும் குழந்தைகள் உலகம் ஒரு தளம். தன் வீட்டை

நாடிவந்த அனாதைச் சிறுவனைக் குளிக்கவைத்து, புத்தாடை கொடுத்து,

பிள்ளைகளோடு பிள்ளையாக உட்காரவைத்து உணவு கொடுத்து

தாய்மையுணர்வோடு உபசரிக்கும் தாயம்மாவின் உலகம் இன்னொரு

தளம். ஒன்றிலிருந்து இன்னொன்று விலகிச் செல்லாத வகையில்

இரண்டையும் கச்சிதமாக இணைக்கிறார் அழகிரிசாமி. ஒரு உலகின்

மையம் மங்கம்மா. இன்னொரு உலகின் மையம் தாயம்மா. ஒன்றில்

விளையாட்டு. இன்னொன்றில் அசலான வாழ்க்கை. சமப்படுத்தி மனநிறைவு

காணும் போக்கு இரு தரப்பிலும் உள்ளது.

மங்கம்மாவைப்போலத் துடிப்பும் வேகமும் ஆற்றலும்

கொண்டவர்களாகவே உலகில் எல்லாக் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

காலமும் வறுமையும் மெல்லமெல்ல அந்தத் துடிப்பையும் வேகத்தையும்

கூர்மழுங்கச் செய்துவிடுகின்றன. நெருக்கடியான அத்தகு தருணங்களில்கூட

தாயம்மா போன்றவர்கள் தன் தாய்மையுணர்வை இழப்பதில்லை. வாசலில்

வந்து நின்ற அனாதைச் சிறுவனைத் தன் பிள்ளையாகவே எண்ணிக்

குளிப்பாட்டித் தலைதுடைத்துவிடுகிறாள். போர்வைக்குப் பதிலாக ஒரு

சாக்குப்பையைக் கொடுப்பதுபோலச் சட்டைக்குப் பதிலாக ஒரு துண்டைக்

கொடுத்து அணிந்துகொள்ளவைக்கிறாள்.

தாய்மையுணர்வு குன்றாத தாயம்மாவின் சித்திரம் அழகிரிசாமியின்

சாதனை. ஒரு கோயில் வளாகத்தில் பொருத்தமான இடத்தில் நிறுவப்பட்டு,

எல்லாருடைய பார்வையையும் ஈர்த்தபடி உள்ள ஒரு சிற்பம்போல அந்தத்

தாயின் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. அழகிரிசாமியின் பால்யகால நண்பரும்

கரிசல் காட்டுப் படைப்பாளியுமான கி. ராஜநாராயணன் ஒரு கட்டுரையில்

அழகிரிசாமி தன் தாயாரின் சித்திரத்தையே அக்கதையில் தீட்டியிருப்பதாகச்

சொல்லியிருக்கிறார். தீபாவளி போன்ற நல்ல நாளில் உடுத்திக்கொள்ள

ஒரு நல்ல புடவை இல்லை. சீனிவெடி வாங்கித் தர அழுகிற மகளை

அமைதிப்படுத்த வழி தெரியவில்லை. ஒரு நல்ல சாப்பாடு இல்லை.

எல்லா இல்லாமைகளுக்கு இடையிலும் அளவற்ற அன்புக்குக் குறைவில்லை.

அது ஊற்றெனச் சுரந்துகொண்டிருக்கிறது.

அழகிரிசாமியின் சிறுகதைகளில் மறக்கமுடியாத சில குணச்சித்திரங்கள்

உண்டு. புறநிகழ்ச்சிகளின் துணையோடு இச்சித்திரங்கள் தீட்டப்பட்டாலும்

அகம்சார்ந்த ஒரு நிராசை, கோபம், இயலாமை, வெறுப்பு என ஏதோ

ஒன்றை உள்ளீடாகக் கொண்டுள்ளன. அழகம்மாள் ஒரு முக்கியமான

சித்திரம். உறவு விட்டுப்போய்விடக்கூடாது என விரும்பும் பெற்றோர்களின்

வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு கண்ஊனமுள்ள கிருஷ்ணக்கோனாரை

மணந்துகொள்கிறாள் அழகம்மாள். அவருடைய சாமபேத தான

தண்டங்களுக்கும் அடங்காமல் தறிகெட்டுக் கூத்தாடிய அவர் நான்கு

தடவை வீட்டிலிருந்து பணத்தைத் திருடிக்கொண்டு சென்றவர். மதுரையில்

ஒரு தாசி வீட்டின் வாசலில் சூரியோதயம் ஆகி வெயிலடிப்பது தெரியாமல்

படுத்துக்கிடந்தவர். சொத்துச் சுகமிழந்த கூலிக்கார மனிதனாக அவர்

இருந்தாலும் அவரை மெல்லமெல்ல குடும்ப வாழ்வுக்குப்

பொருத்தமானவராக மாற்றி வழிநடத்திச் செல்கிறாள். மகன் பிறந்து

வளர்ந்து வெளியூரில் படிக்கச் செல்கிறவரை எல்லாமே அதனதன்

போக்கில் நடக்கிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் அவள் போக்கில்

ஒரு நுட்பமாக மாறுபாடு ஏற்படுகிறது. தன் இளமையெல்லாம் முற்றிலும்

வடிந்து நடுவயதைக் கடக்கும் புள்ளியில் இந்த வாழ்வில் பெற்றதையும்

இழந்ததையும் அவள் சீர்தூக்கிப் பார்த்திருக்கக்கூடும். வழக்கமாக

கணவன்மீது அக்கறையோடு இருக்கும் அழகம்மாள் மகன் ஊரிலிருந்து

திரும்பும்போது சிடுசிடுவென எரிந்து விழுகிறவளாக மாறிவிடுகிறாள்.

புதுப்புதுப் புடவைகளை வாங்கவும் ஆசை வருகிறது. சம்பாதிக்காத

பிள்ளையிடம் கடன் வாங்கித் தருமாறு தூண்டுகிறாள். நினைத்தது

எதுவுமே நடைபெறாதபோது தனிமை இரவில் யாருக்கும் கேட்காதபடி

ஒப்பாரிவைத்து அழுகிறாள். “சேனை தனத்தோட-உன்ன சேர்ந்திருக்கக்

கிட்டலையே . . .” என்னும் குரலைக் கேட்டு விழித்தெழுந்து திடுக்கிடுகிறான்

மகன். அழுகைக்கான காரணத்தை விசாரிக்கும் மகனிடம் தன் அப்பாவை

நினைத்து அழுவதாகச் சொல்லிச் சமாளிக்கிறாள்.

அழகம்மாளிடமிருந்து வெளிப்படும் ஒப்பாரிக்குரலை ஒருவகையில்

இந்த வாழ்க்கையைப்பற்றிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம். தன்

அழகுக்கும் தகுதிக்கும் பொருத்தமான ஆண் எங்கோ

இருந்தபோதிலும்கூடச் சமூகத்தின் விருப்பத்துக்கு தியாக உணர்வோடு

கட்டுப்பட்ட பெண் அழகம்மாள். ஆனால் அந்தத் தியாகம் எதிர்பார்த்த

விளைவுகளை உருவாக்கவில்லை. அந்த இயலாமையும் இல்லாமையும்

அவளை உறுத்தியிருக்கக்கூடும். இளமைக் கனவுகளில் நிறைந்திருந்து,

பிறகு சமூக விருப்பத்தோடு இரண்டறக் கலக்க இயலாமல்போன

தன்விருப்பம் நினைவில் மோதியிருக்கக்கூடும். வற்றிய குளத்தில் பழைய

செடிகளின் தடம் தெரிவது போல சுயவெறுப்பும் கோபமும் கலந்து

ஒப்பாரியாக வெடிக்கவைத்துவிட்டது.

ஆசைதீர கம்மலை ஒரு வருஷகாலம்கூடத் தொடர்ச்சியாகப்

போட்டுக்கொள்ள இயலாமல்போன பாலம்மாளும் அழகம்மாளைப்

போன்றவள். குடும்பத்துக்காக தன் விருப்பத்தைப் பலிகொடுத்தவள்.

காலம் முழுக்க அது அடகுக்கடையிலேயே இருக்கிறது. கம்மல் கைக்கு

வரும்போது அவள் இளமை கடந்துபோய்விடுகிறது. கம்மலணிந்த அவள்

தோற்றம் சிறிதும் பொருத்தமின்றிப் போக, ஊர்க்காரர்களின் விமர்சனத்துக்கு

வழிவகுத்துவிடுகிறது. இக்குரல்களைத் தொடர்ந்து சென்று, இவற்றுக்குப்

பின்னால் உள்ள மன இறுக்கத்தைக் கண்டடைந்தோமென்றால் பெண்கள்

அக உலகத்தின் இயங்கு விதிகளை நாம் கண்டறியமுடியும்.

அழகம்மாள், பாலம்மாள் வரிசையில் வைத்துக் கருதத்தக்கவகையில்

அழகிரிசாமியின் படைப்புகளில் நுட்பமாக உருவான இன்னொரு

பெண்பாத்திரம் சிரிக்கவில்லை சிறுகதையில் இடம்பெறும் பாப்பம்மாள்.

தினமும் நாலுதடவை ராஜாராமன் வீட்டுக்குசும்மாவருகிறவள் அவள்.

ராஜாராமன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுடைய தாயார்

சமையல் செய்யும்போது அக்கறையாக உட்கார்ந்து அவளுக்கு ஒத்தாசை

செய்பவள். அவள் கேட்டுக்கொள்ளாமலேயே காய்கறிகளை நறுக்கித்

தருவாள். புழக்கடையில் உலரும் ராஜாராமனுடைய வேட்டி சட்டைகளை

எடுத்துவந்து வீட்டுக்குள் போடுவாள். தன் எல்லை தெரியாமலேயே

ராஜாராமன்மீது அளவுகடந்த பிரியத்தோடு இருக்கிறாள் அவள். அவனுக்குத்

திருமணமாகி மனைவி வந்த பிறகும்கூட அந்தப் பிரியம் தொடர்கிறது.

பிரசவத்துக்காக பிறந்தகம் போனவள் திரும்பி வந்த பிறகுதான் நிலைமை

தலைகீழாகிவிடுகிறது. ராஜாராமனுடைய சாயலில் இருக்கும் குழந்தையின்

தோற்றம் அவளுக்கு எதையோ உணர்த்துகிறது. தனக்கும் ராஜாராமனுக்கும்

இடையே எந்த உறவும் இல்லை என்கிற உண்மை அப்போதுதான்

அவளுக்கு உறைக்கிறது. தன் மானசீகப் பற்றுவரவுக் கணக்கில் பற்று

என எழுதவேண்டியதை வரவு என்றும் வரவு என எழுதவேண்டியதைப்

பற்று எனவும் பதிவுசெய்துவிட்டதை முதன்முறையாக உணர்கிறாள்.

மறுநாள் முதல் ராஜாராமனைப் பார்த்தாலும் சிரிப்பு மறைந்துவிடுகிறது.

சிரிக்காமல் கடந்துபோன ஒரு தருணம் பாப்பம்மாள் வாழ்வில்

தொடக்கத்தில் உள்ளது. வீட்டுக்குள் தனியாக உறங்கும் ராஜாராமனை,

வாசலில் வெயிலுக்கு மறைப்பாகக் கட்டியிருந்த படுதாவுக்குப் பின்னால்

நின்று ஒரு நாள் பார்த்து ரசிக்கிறாள் அவள். குப்புறப்படுத்திருக்கும்

ராஜாராமனுடைய சட்டை போடாத முதுகையும் பிடரியின் மடிப்புகளையும்

திரண்டு உருண்ட புஜங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

பார்த்துப்பார்த்துக் கண்களையும் மனத்தையும் நிரப்பிக்கொள்கிறாள்.

பிறகு தள்ளிவந்து ஜன்னலருகே கண்ணாடியை உரிமையோடு எடுத்து

நேராக நிமிர்த்திவைத்துப் பக்கத்தில் கிடந்த ஒரு புதுசீப்பினால் ஏற்கெனவே

வாரப்பட்டிருக்கும் தலையில் பட்டும் படாமல் லேசாக இழுத்துக்கொள்கிறாள்.

எதிர்பாராத விதமாக கண்ணாடி விழுந்து டமார் என்று சத்தமெழுகிறது.

சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து எழுந்து வருகிறான் ராஜாராமன்.

கண்ணாடியைத் தான் தாராளமாக எடுத்துப் பயன்படுத்திய குற்றத்தை

நினைத்துஎன்ன சத்தம்?” என்று கேட்டால் சிரித்து மழுப்பவேண்டும்

என்றொரு எண்ணம் அவள் மனத்தில் தலைதூக்குகிறது. ஆனால்

ராஜாராமன் அப்படிக் கேட்கவில்லை. “எப்போ வந்தே?” என்று

இனிமையாகக் கேட்கிறான். மாற்றிக் கேட்கப்பட்ட கேள்வியால் அவள்

நிலைதடுமாறுகிறாள். சிரிக்க நினைத்தவள் சிரிக்கவில்லை. அப்பாவிப்

பெண்போல முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொல்கிறாள். அந்த

உரையாடலின் முடிவில் அவன் சிரிக்கிறான். அவள் சிரிக்கவில்லை.

சிரிக்காமல் கடந்துபோகும் இவ்விரண்டு தருணங்களிடையேதான்

எவ்வளவு வேறுபாடு? முதல் தருணத்தில் அவள் ஓர் அப்பாவிப் பெண்.

அன்பும் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்த பெண். இரண்டாவது தருணத்தில்

கனவுக் கோபுரம் சரிவதைத் தடுக்கமுடியாது என்னும் எதார்த்தத்தைப்

புரிந்துகொண்ட பெண். இரண்டு தருணங்களையும் கலை நுட்பத்தோடு

இணைத்துக்காட்டி மனவெளியில் நிகழும் அந்தரங்கமான மாற்றங்களை

உணர்த்தும் கு. அழகிரிசாமியின் படைப்பாற்றல் வியப்பளிக்கக்கூடிய

ஒன்று. பாப்பம்மாள் மனத்தில் வளர்ந்து பெருகும் கட்டற்ற பிரியத்தையும்

காற்றில் சரிந்து விழும் கண்ணாடியையும் இணைத்துணரக்கூடிய ஒரு

வாய்ப்பைக் கதையின் தொடக்கம் நமக்கு வழங்குகிறது. ஒரு நுட்பமான

வாசகனுக்கு இந்த வரியின்மூலம் கிடைக்கக்கூடிய அனுபவம் மகத்தானது.

காவேரிப்பாட்டி அழகிரிசாமியின் கைவண்ணத்தால் தீட்டப்பட்ட ஒரு

முக்கியமான பாத்திரம். ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இறந்துபோன

கணவனையும் காணாமல்போன பிள்ளையையும் நினைத்துக்கொண்டு

காலத்தைத் தள்ளுபவள் காவேரிப்பாட்டி. பத்து ஆண்டுகளாக ஊரூராகத்

திரிந்து வாழ்பவள். அவளுடைய ஊரைச்சுற்றி இருக்கிற இருபதுமைல்

வட்டாரத்தில் ஏழெட்டு ஊர்களில் அவளுடைய உறவுக்காரர்கள் இருந்தார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒருமாதமோ, இரண்டு மாதங்களோ இருப்பாள்.

வீட்டுவேலை செய்யமுடிந்த இடங்களில் வீட்டுவேலை செய்வது, கூலிவேலை செய்யும் குடும்பங்களாக இருந்தால் அவர்களோடு சேர்ந்து கூலிவேலை

செய்வது என்று காலத்தை ஓட்டுகிறாள் அவள். போகிற ஊரில் யாரும்

தன்னைப் பஞ்சம் பிழைக்கவந்த அனாதையாக நினைத்து இழிவாக

நடத்திவிடக் கூடாது என்பதற்காகவும் தன் கௌரவத்தைக்

காப்பாற்றிக்கொள்ளவும் சிங்கப்பூரில் தன் மகன் ஒரு பெரிய கடையில்

கணக்குப் பிள்ளையாகவும் கொள்ளையாகச் சம்பாதிப்பதாகவும் விடுப்பு

கிடைத்ததும் கிளம்பிவருவதாகவும் சொல்வதை வழக்கமாகக்

கொண்டிருக்கிறாள் அவள். இன்னும் ஒருபடி மேலே சென்று சிறுவர்

சிறுமிகளுக்கு நகைசெய்துகொண்டு வருவான் என்றும் வாழ்வதற்கு

ஒரு வழியை உண்டாக்கித் தருவான் என்றும் கட்டுக்கதை சொல்லி

நம்பிக்கை ஊட்டுவாள். இப்படி ஆசை வார்த்தை சொல்லிச்சொல்லியே

ஒவ்வொரு ஊராக முகாமிட்டுக் காலத்தைக் கடத்துகிறாள்.

மாசிமகத்தைக் காரணமாகக் காட்டி கழுகுமலை உறவுக்காரர் வீட்டுக்குச்

செல்கிறாள் காவேரிப்பாட்டி. அவ்வீட்டில் காலெடுத்துவைப்பதில் இருந்து

தொடங்குகிறது கதை. வழக்கமாக அங்கும் ஆசை வார்த்தைகளை

விதைக்கிறாள் பாட்டி. அதை யாரும் அங்கே பொருட்படுத்தவில்லை.

அந்த மௌனத்தால் அவள் சீண்டப்படுகிறாள். அவமானத்தோடு அன்றைய

இரவைக் கழிக்கிறாள். தன் மகன் வருவான் என்பதை அவர்கள் நம்பவில்லை

என்பதை அவள் உள்மனம் உணர்ந்துகொண்டது. நம்பாததற்குக் காரணம்

என்னவாக இருக்கும் என்று எதைஎதையோ நினைத்துத் தவியாய்த்

தவிக்கிறாள். தாயைத் தேடி வரும் அளவுக்கு நல்ல மகனல்ல அவன்

என எண்ணுகிஷீர்களோ என்று ஒருகணம் யோசிக்கிறது அவள் மனம்.

மறுகணம், இல்லையென்றால் . . . என்று மாற்றி யோசிக்கும்போது

அவள் இதயம் அடித்துக்கொள்கிறது. அடுத்த கணமே ஊரூராக அலைந்து

திரிவதுகூட உனக்குப் பொறுக்கவில்லையா முருகா என்று மன்றாடி

அழுகிறாள். அடுத்த நாள் கோயில் வளாகத்தில் அவள் சொன்ன

வார்த்தைகளை யாரும் பொருட்படுத்தவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு

முன்னாலேயே அவள் மகன் சிங்கப்பூரில் இறந்துபோன செய்தியை

அம்பலப்படுத்துகிறார்கள் அவர்கள். அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல்,

தன் சொல்லை நிறுவிக்காட்டும் வேகத்தில் பாட்டியும் அவர்களோடு

ஈடுகொடுத்து வாதாடுகிறாள். உயிரைக் கொடுத்தாவது தனக்கு ஏற்பட்டுள்ள

அவமானத்திலிருந்து மீண்டு தன் மகன் உயிரோடு இருப்பதாக நிரூபித்துவிட

வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனாலும் அது பயனளிக்கவில்லை.

அவளை நிலத்தில் சரியவிட்டு, ஊராருக்கும் உண்மையை உணர்த்திவிட்டு

அக்கணம் அப்படியே உறைந்துவிடுகிறது. மூன்று ஆண்டுகளாக அவள்

பாடுபட்டு நிறுவிய மணற்கோட்டை ஒரே கணத்தில் சிதைந்து

தரைமட்டமாகிவிடுகிறது. அவள் மகன் கொண்டுவந்து தரப்போகும்

சீருக்காக அவளை யாரும் தாங்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும்

அவளுக்குப் போடப்படும் உணவுக்கு விஞ்சிய உழைப்பைக் கொடுத்துத்தான்

அவள் வாழ்கிறாள். ஆதரவில்லாதவளாகத் தன்னை ஊரும் உறவும்

எண்ணிவிடக்கூடாது என்பதற்காக இல்லாத ஒரு கொழுக்கொம்பை

இருப்பதுபோல நிலைநாட்டப் பார்க்கிறாள் பாட்டி. அந்த எண்ணம்

இயல்பான ஒன்றுதான். பிழை எதுவும் இல்லை. அதை அழுத்தம்

திருத்தமாக நிறுவுவதற்காக அவள் எடுக்கும் அதிகப்படியான முயற்சிகளே

எதிர்விளைவை உருவாக்கி அந்தக் கொழுக்கொம்பு அற்றுப்போகக்

காரணமாகிறது.

(தொடரும் )