Home

Saturday 20 August 2022

கனவைப் பின்னும் கலை


     ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களின் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுக்கு இடையில் அவர்கள்ஒரு நல்ல கதை சொல்லுங்க பெரியப்பாஎன்றனர். சில கணங்கள் யோசித்துவிட்டு ஒரு ஊருல ஒரு ராஜாஎன்று தொடங்கினேன். உடனே ஒரு சிறுமி என்னைத் தடுத்து ராஜா கதையெல்லாம் வேணாம். வேற சொல்லுங்கஎன்று தடுத்துவிட்டாள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஒரு ஊருல ஒரு மந்திரவாதிஎன்று தொடங்கினேன். “ஐயையோ, மந்திரவாதி கதை, பூதம் கதைலாம் வேணாம்என்று வேறொரு சிறுமி தடுத்தாள். இப்படி நான் தொடங்கிய விலங்கு கதை, பறவை கதை, இளவரசி கதை, பாட்டி கதை எல்லாவற்றையும் முதல் வரியிலேயே வேணாம் வேணாம்என்று தடுத்துவிட்டனர். “இதெல்லாம் எங்களுக்கே தெரியும், ஏதாச்சும் புது மாதிரி சொல்லுங்கஎன்றனர்.

புதுசாவா?” என்று கன்னத்தைத் தடவியபடி சுவரில் மாட்டப்பட்டிருந்த அரிச்சுவடி சுவரொட்டியைப் பார்த்தேன். உடனே என் மனத்தில் ஒரு கதை உதித்தது. உயிரெழுத்தான பன்னிரண்டு எழுத்துகளையும் பன்னிரண்டு நாடுகளாக மாற்றி, அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கதையைத் தொடங்கினேன். அவர்கள் வாய்பிளந்து கேட்கத் தொடங்கினார்கள்.

அந்த யுத்தம் நீண்ட காலம் நடைபெற்றது. முதலில் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக மோதிக்கொண்டது. பிறகு இரு எழுத்துகள்  கொண்ட ஆறு அணிகள் உருவாகின. அதைத்தொடர்ந்து நான்கு எழுத்துகள் அடங்கிய மூன்று அணிகள் பிறந்தன. அதற்குப் பின் ஆறு எழுத்துகள் கூட்டணி வந்தது. நீண்ட கால போரின் விளைவாக வீரர்கள் களைத்துப்போனதால் இரு அணிகளுக்கு நடுவில் ஓர் உடன்படிக்கை உருவானது. அதற்குப் பிறகே பன்னிரண்டு எழுத்துகளும் ஒரே அணியாக சேர்ந்து வாழத் தொடங்கின.

அந்தக் கதை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். அங்கே தங்கியிருந்த ஒவ்வொரு நாளும்  விதவிதமான கற்பனைக்கதைகளை அவர்களுக்காக உருவாக்கிச் சொன்னேன்.

ஊரிலிருந்து திரும்பும்போது எவ்விதமான தர்க்கமும் இல்லாத அந்தக் கதைகள் அவர்களுக்கு ஏன் பிடித்தது என்று யோசித்தபோது ஒரு செய்தியைப் புரிந்துகொண்டேன். மரபான வடிவத்தில் உள்ள கதைகளைக் கேட்டுக்கேட்டு அவர்கள் சலிப்படைந்திருந்ததால், ஒரு புதிய வடிவம் அவர்களை உடனடியாக ஈர்த்துவிட்டது என்பது முதல் காரணம். தர்க்கத்தைவிடவும் நீதியைவிடவும் குழந்தைமை படிந்த மனத்துக்கு புதுமையே முதன்மையாக இருந்தது என்பது இன்னொரு காரணம். 

அபியின் கவிதைகளை ஒருசேரப் படித்துமுடித்த கணத்தில் குழந்தைகளுக்கு கதைசொன்ன நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது. குழந்தைகளைப்போலவே அவரும் புதுமையை விரும்பும் கவிஞராக இருக்கிறார். மரபான அடுக்குமுறை, மரபான சொல்முறை எதையும் அவர் பின்பற்றவில்லை. மரபான உருவகம், படிமம் போன்ற கவசங்களைக் கூட அவர் உதறிவிட்டார். அவர் கவிதைகள் அனைத்தையும் அகவயமானவை என்றும் அருவமானவை என்றும் குறிப்பிடலாம். இன்னும் கூர்மையாகச் சொல்லவேண்டுமென்றால் அகவயமாகத் தொடங்கி அகவயமாகவே முடிவடைந்துவிடுபவை என்று சொல்லலாம். அகவயமான உணர்வை திட்டவட்டமான புறவயமான காட்சிகள் வழியே சித்தரிக்கும் போக்கு தமிழில் சங்கப்பாடல்களிலிருந்தே காணக்கூடிய ஒரு வழிமுறை. ஆனால் அப்படி ஒரு இணைப்பையே அபியின் கவிதைகள் ரத்து செய்துவிடுவதையே பார்க்கலாம். தீபத்தின் துணையின்றி இருளுக்குள்  அழைத்துச்செல்லும் வழிகாட்டியைப்போல அவர் நடந்துபோகிறார். இருள் பழகப்பழக இருளே ஒளியாக மாறித் தெரியும் மாயத்தைப்போல  அபியின் கவிதைகளும் படிக்கப்படிக்க பழகிவிடுகின்றன. இருள் வழியாக காணும் ஒளி அல்லது இருளோடு இணைபிரியாமல் ஒட்டியிருக்கும் ஒளி என்று கூட அவர் கவிதைகளின் மையத்தை வகுத்துக்கொள்ள முடியும்.

அபியின் கவிதைகள் அடிப்படையில் ஒரு கற்பனையைப் பின்னணியாக அமைத்துக்கொள்கின்றன. பிறகு அந்தக் கற்பனையான சட்டகத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கனவைப் பின்னுகின்றன. எதார்த்த வாழ்க்கையின் தருக்கத்துக்குள் அடங்காத கனவு அது. எந்தப் பொருளையும் சுமக்க விரும்பாத மாயக்கனவு. கர்ப்பிணிப்பெண்கள் ஆசையோடு பின்னும் சால்வையைப்போல அபி தன் கவிதையை சிறுகச்சிறுகப் பின்னுகிறார்.

அபி எழுபதுகளின் தொடக்கத்தில் கோவையிலிருந்து வெளிவந்த கவிதைச் சிற்றிதழான வானம்பாடியில் எழுதத் தொடங்கியவர். அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா, புவியரசு, கங்கைகொண்டான் போன்ற கவிஞர்களின் அணியோடு அபியும் வானம்பாடியில் எழுதினார். 1974இல் அவருடைய முதல் தொகுதி மெளனத்தின் நாவுகள்வெளிவந்தது. பிறகு 1978இல் அந்தரநடையும் 1987இல் என்ற ஒன்றும் வெளிவந்தன. கவிதையை ஒரு பொறுப்புள்ள உறுப்பாக மாற்றும் எண்ணத்துடன் மற்ற எல்லாக் கவிஞர்களும்  எழுதிய கணத்தில் மனவானில் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கும் பறவையாக தன் கவிதைகளை எழுதி வந்தவர் அபி.

     அபியின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று அந்தரநடை. அவருடைய புதுமைநாட்டம் அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. சங்ககாலம் தொட்டு நூற்றுக்கணக்கான கவிஞர்கள் எழுதிய விடைபெறல் காட்சியே இக்கவிதையின் மையம். ஒருவர் விடைபெறுகிறார். ஒருவர் வழியனுப்புகிறார். அவ்வளவுதான். புன்சிரிப்பு, பெருமூச்சு, பார்வைப் பரிமாற்றம் என எல்லாமே அக்கணத்தில் நிகழ்கின்றன. இதுதான் கவிதைக்குரிய சித்திரம். இந்தச் சித்திரத்தைத் தீட்டும்போதே, அபியின் தூரிகை இன்னொரு சிறியதொரு சித்திரத்தையும் தீட்டிவிடுகிறது. சித்திரத்துக்குள்ளே ஒரு சித்திரம். இந்தச் சித்திரத்தில் புன்னகையை மட்டுமே இடம்பெற வைக்கிறார் அபி. புன்னகை மானுட உருவம் கொள்கிறது. ஒயிலாக ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்தைநோக்கி அந்தரத்திலேயே அடியெடுத்து வைத்து நடந்து செல்கிறது. காதலைச் சுமந்து செல்லும் அந்த அந்தரநடையை ஓர் உயிருள்ள பாத்திரமாகவே மாற்றிவிடுகிறார் அபி.

வழியனுப்ப நீ
வந்தாலும்
வாசல் இருட்டில்
உன்முகம் தெரிவதில்லை

உன்
நிழல்குரலும்
வெறும் அசைவன்றி
வேறொன்றும் உணர்த்துவதில்லை

உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டுமுன்
உருமாறும்
ஓயாமாறிகள்

பிரபஞ்சத் தூசிகளை
மூச்சிடை உள்ளிழுத்து
வெளியை
ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த
சூன்யத்தில்
நீ நான் நம்மிடை
விறைத்தோடிய மெல்லிய கோடு.

கணத்தின் சிறுதுகள்.

பிரமிப்பில்
பிரமிக்கவும் மறந்து
உன்னுடன் கைகோத்து
இடைக்கோட்டில்
அந்தர நடை பயின்றது

உண்மைதான்

எனினும்
நம்பச் செய்வது --
இல்லை --
நம்புவது எப்படி

 

     காதலர்கள் அல்லது யாரோ இருவர் விடைபெறும் கணத்தை முன்வைக்கும் கவிதை என்று அறிந்துகொண்டதுமே இயல்பாக ஒரு வாசகர் எதிர்பார்க்கக்கூடிய எதையுமே அபி அளிக்கவில்லை. ஆனால் முற்றிலும் புதிய ஒன்றை வழங்கிவிட்டுச் செல்கிறார். சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்ற குறிப்பே இல்லை. அவர்களிடையில் என்ன நடைபெற்றது என்கிற குறிப்பும் இல்லை. பின்னோக்கிய குறிப்புகள் எதுவுமே இல்லை. முற்றிலும் புதிய வகையில் அக்கணத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் புன்னகைக்கு உயிரூட்டி உலவவைக்கிறார். அந்தரத்திலேயே நடந்துசெல்கிறது அந்தப் புன்னகை. மனம் மிதப்பதுபோல புன்னகை மிதக்கிறது. இது அபி ஒரு சித்திரத்துக்குள் தீட்டியிருக்கும் இன்னொரு சித்திரம்.

     நடந்துபோகும் புன்னகை போல அபி இன்னொரு கவிதையில் உறக்கமும் விழிப்பும் குழந்தைகளென ஒருவரையொருவர் துரத்திப் பிடித்து விளையாடும் களத்தைச் சித்திரமாக்கியிருக்கிறார். கனவு அன்று கனவு என்னும் கவிதையில் அந்தச் சித்திரம் இடம்பெற்றிருக்கிறது.

எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்று
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்

ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடி நிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்

 

     கனவில் கண்ட ஒரு காட்சியைப் பகிர்ந்துகொள்வதுபோலவே கவிதை தொடங்குகிறது. கனவில் அவன் பார்த்ததெல்லாம் விரிந்ததொரு நிலம். கனவு என நினைத்தாலும், தான் கண்டதெல்லாம் கனவில்லையோ என்ற மயக்கமும் விவரணையாளனுக்கு இருக்கிறது. ஆனால் அது ஓர் அபூர்வமான நிலம் என்பதை மட்டும் அவன் மனம் உறுதியாக உணர்ந்திருக்கிறது. கிழக்கு, மேற்கு என வேறுபாடற்று ஒன்றென விரிந்திருந்தது அந்த அபூர்வ நிலம். அங்கே அபூர்வமாக ஒரு மனிதன் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி நடந்துசெல்கிறான். ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஒரு பறவையும் அபூர்வமாக பறந்து செல்கிறது. அங்கே ஆணையிடுகிறவர்களும் இல்லை. தடுப்பவர்களும் இல்லை. சுதந்திரமாக நடமாடலாம். நடமாட்டமின்றி அமைதியாகவும் இருக்கலாம்.

     அது அபூர்வமான நிலம் என்பதற்கு இவை மட்டும் காரணங்களல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அங்கு உறக்கமும் விழிப்பும் ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. அபூர்வமான நிலம் என்பதற்கு பொதுவான ஒரு விளக்கத்தைக் கொடுப்பதுபோல முதலில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து  ஒரு தனி விளக்கத்தைப்போல அது ஒரு விளையாட்டுத்திடலாக மாறி நிற்கும் குறிப்பும் இடம்பெறுகிறது. ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் திண்ணையிலோ வாசலிலோ ஓடிப் பிடித்து விளையாடுகின்றன என்பதுபோல உறக்கமும் விழிப்பும் விளையாடுவதை சித்தரிக்கிறார் கவிஞர். ’புன்னகையின் நடையைப் பார்க்கத் தெரிந்த கண்களுக்கு, உறக்கமும் விழிப்பும் ஓடிப் பிடித்து ஆடும் ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் போய்விடுமா, என்ன?

     இடைவெளிகள் இன்னொரு சிறப்பான கவிதை. ஒரு பூங்கா. ஆண்களும் பெண்களுமாக பலர் அங்கே நடந்து செல்கிறார்கள். ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடைவெளி இருக்கிறது. சிலருக்கு நடுவில் இடைவெளியின் அளவு கூடுதலாக இருக்கிறது. சிலருக்கு நடுவில் இடைவெளியின் அளவு குறைவாக இருக்கிறது. அங்கே மரங்களுக்கு நடுவில் இடைவெளி இருக்கிறது. பெஞ்சுகளுக்கு நடுவில் இடைவெளி இருக்கிறது. பாதையோர வீடுகளுக்கு நடுவிலும் இடைவெளி இருக்கிறது. இவையனைத்தும் பூமியின் மீது பார்க்கத்தக்க இடைவெளிகள். வானத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவிலும் மேகங்களுக்கு நடுவிலும் கூட இடைவெளிகள் இருக்கின்றன. அபியின் கவிதைமனம் இந்த இடத்தில் ஒரு விளையாட்டை விளையாடுகிறது. அனைத்தையும் ஒரே கணத்தில் உறையவைத்துவிட்டு இடைவெளிகளின் மீது கவனத்தைக் குவிக்கிறது. உடனே இடைவெளிகளை உயிருள்ளவையாக மாற்றுகின்றன. அவை தம்மை விரிவாக்கிக்கொள்கின்றன. வேறு வழியில்லாமல் உறைந்திருந்தவை அனைத்தும் சுருங்கி நிலையழிகின்றன. விரிந்த இடைவெளிகள் மேலும் விரிந்து ஒருங்கிணைந்து வட்டமாகின்றன. பம்பரம் சுற்றுவதுபோல வட்டம் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. அதன் சுழற்சியின் நடுவில் பேரொளி  சுடர்விட்டு பிரகாசிக்கிறது. அதற்கு அசைவோ, மொழியோ இல்லை. சுடர்விட்டபடி இருந்த இடத்திலேயே வீற்றிருக்கிறது. அது யாரையும் அழைக்கவில்லை. யாரிடமும் உரையாடவில்லை. அந்த இருப்பின் வசீகரமே பார்வையாளர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. மகத்துவமான ஒன்றைப் பார்த்தோம் என்பதே அவர்களுக்கு நிறைவாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுதந்திரமாக மகத்துவம் மிக்க பேரொளியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். மகத்துவத்துக்கும் எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்பார்ப்பில்லாத விழிகள் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதைப்போல இரு துருவங்களும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்கின்றன.

 

,

யாரும் கவனியாதிருந்த போது

இடைவெளிகள்

விழித்துக் கொண்டு

விரிவடைந்தன.

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்

அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்

உனக்கும் உனக்கும்

விநாடிக்கும் விநாடிக்கும்

இடைவெளிக்கும் இடைவெளிக்கும்..

என்று

 

இடைவெளிகள் விரிவடைந்தன.

வெறியூரி வியாபித்தன.

 

 

வியாபகத்தின் உச்சத்தில்

மற்றதெல்லாம் சுருங்கிப் போயின.

 

ஆங்காங்கிருந்து

இடைவெளிகள் ஒருங்கு திரண்டு

அண்ட வட்டமாயின.

 

வட்டத்தின் சுழற்சியில்

நடுவே தோன்றி வளர்ந்தது

பேரொளி

 

அதற்குப் பேச்சு வரவில்லை

சைகைகளும் இல்லை

எனினும் அதனிடம்

அடக்கமாய் வீற்றிருந்தது

நோக்கமற்று ஒரு மகத்துவம்.

 

     சுடர்விடும் பேரொளியில் குடிகொண்டிருக்கிற மகத்துவம் ஒரு தரிசனம். எவ்விதமான முக்கியத்துவமும் இல்லாத இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி மகத்துவம் கொண்ட பேரொளியாக சுடர்விடும் புள்ளி வரையிலான பயணத்தை கவனிக்கும் குழந்தையின் கண்கள் நற்பேறு கொண்டவை.

     சித்திரத்துக்குள் சித்திரம் என்னும் வகைப்பாட்டில் அடங்கிய மற்றொரு கவிதை நீலாம்பரி. உறக்கம்தான் இக்கவிதையின் பின்புலம். உறக்கத்தை நாடி படுக்கைக்குச் செல்லும் ஒருவன் மெல்ல மெல்ல தன் நினைவுகளிலிருந்து மயக்கத்தில் மூழ்கி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் பிடிக்குள் மூழ்கி உறங்கத் தொடங்கும் தருணமே முதன்மைச்சித்திரம். உறக்கம் என்பதை ஓர் உயிருள்ள பறவையாக்கி, அதற்கு ஒரு கற்பனையான வாழ்க்கையை அளிக்கிறது துணைச்சித்திரம்.

 

பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

இமை ஊஞ்சலில் சற்றே
இளைப்பாற ஆடிவிட்டு,
மௌனத்தின் மிருதுவின்மேல்
சிறகு பரப்பி,
என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு
என் இதய அடியறைச் சேமிப்பை
எடுத்தூட்டி,
தன் உலகை
எனக்குள் விரிக்கவென
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது ..

நானும்,
வடிவமற்ற கிண்ணத்தில்
வந்த மதுவை உறிஞ்சியவனாய்,
சலனங்கள் அற்ற --
என் வேறுபகுதியை நோக்கி
என் சுமைகளின்மேல்
நடந்து போகிறேன்

மரண மயக்கம்
சுழித்துச் சுழித்து
உறக்கமாய் நுரைக்கையில்
அந்த நுரைகளிடையே

ஏதோ புதுப்புதுச் சாயைகள்
வண்ணம் கொள்ளும்
வனப்பைப் பார்க்க
மிதந்து போகிறேன்

உள் உலகின் வானத்தில்
சரிகைத் தூற்றலில் நனைந்துகொண்டே
என்னைத்தானோ,
அன்றி வேறு எதையோ தேடிப்
பறந்து போகிறேன்

அடிநினைவு ரேகைகள்
தடந்தெரியாது ஓடும் இடங்களில் ...
சோகத்தின் வீறல்கள்
உறைந்த மின்னலாய்க் கிடக்கும் இடங்களில் ..
கண்ணீரின் ரகசியங்கள் கருவாகும் இடங்களில்

நான் உலாவப் புறப்படுகிறென்

மூலமுத்திரையற்ற
அனாதைக் கனவுகளின்
ஆவேச அரவணைப்பில் --
உறக்கத்தின் பட்டுவிரல் மீட்டலுக்கு
நானே வீணையாகிடும் மயக்கத்தில் --

இருளின் திகைப்புகள்
அடர்ந்துவிட்ட
இரவின் மந்திர முணுமுணுப்பில் --

என்னைநான் இழந்துவிடப் போகிறேன் ...

இதோ --
உறக்கம் விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

 

     உறக்கத்தை ஓர் உயிருள்ள பறவையென உருமாற்றும் அபி, அதற்கு விழியையே கூடாக வழங்குகிறார். அந்தக் கூட்டில் அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் மெல்ல மெல்ல வளர்கின்றன. அந்தக் குஞ்சுக்காக இரைதேடி பறவை கூட்டைவிட்டு வெளியே பறந்துபோகிறது. எங்கெங்கோ அலைந்து இரையோடு திரும்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டி விடுகிறது. பசி தணிந்த குஞ்சுகள் அமைதியடைகின்றன. பறவை கூட்டிலிருந்து எழுந்து இமையென்னும் ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து ஆடி இளைப்பாறுகிறது. பிறகு மெல்ல உறங்கிவிடுகிறது.

     விழிக்குரியவனும் மயக்கத்தில்தான் இருக்கிறான். தன் மயக்கத்தில் அவன் வெவ்வேறு வனப்புகளைத் தேடிச் செல்கிறான். கனவுகள் அவனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கின்றன. அந்த அணைப்பின் கதகதப்பில் அவன் மயக்கத்தில் மூழ்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறான். ஒருபுறம் மனிதனின் உறக்கம். இன்னொரு புறம் உறக்கத்தின் உறக்கம். இரண்டையும் நேர்த்தியாக இணைக்கிறார் அபி.

     இக்கவிதையில் உறக்கத்தை ஒரு பாத்திரமாக நிலைநிறுத்தியதுபோல மாலை த்வனி என்னும் கவிதையில் ஒரு வெட்டவெளியை ஒரு பாத்திரமாக உருவாக்கி நிலைநிறுத்துகிறார் அபி.

 

நான் வெட்டவெளியாகுமுன்பே
என் தீர்மானங்கள்
கசிந்து வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும் நல்லது

அவசரமில்லாத ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின் மீது
என் வாழ்வை
மெல்லத் தவழவிட்டேன்

வீட்டு முற்றத்தில்
கூழங்கற்களின் நடுவே
ஓடைகளின் சிரிப்போடு
வெளி-உள் அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி

விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத் திரட்டி சுமந்து
வெற்றி உலா போகிறார்கள்
விளக்கு வரிசை மினுமினுக்க

உண்மையின்
அனைத்துச் சுற்றுவாசல்களிலும்
புகுந்து திரிந்து
திருப்தியில் திளைக்கும்
என் நண்பர்களுக்கு

கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு

என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்

வெறுமைப் பாங்கான
எனது வெளியில்
ஒளியும் இருளும் முரண்படாத
என் அந்தியின் த்வனி
த்வனியின் மீதில்
அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்.

     ஒருவர் தன் அகத்தில் உணரும் வெறுமையையே அபி இங்கு  வெட்டவெளியென முன்வைக்கிறார். அவரைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அவர் அந்த வெட்டவெளிக்குள்தான் வாழ்கிறார். அதுவே அவர் வாழும் வெளி. தன் கலையின் மகத்துவத்தால் அந்த வெட்டவெளியை ஒரு கதாபாத்திரத்தைப்போல காட்சிப்படுத்துகிறார் அபி. அந்த வெட்டவெளியை ஓடைக்கு நடுவில் சிறு திட்டாக நின்றிருக்கும் வெட்டவெளியாக சித்தரிக்கிறார். அந்த வெட்டவெளியைச் சுற்றி கூழாங்கற்கள் சிதறியிருக்கின்றன. ஓடைநீர் சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கூழாங்கற்களின் வருடலும் ஓடையின் இசையும் மட்டுமே போதுமென விரிந்திருக்கிறது அந்த வெட்டவெளி. உண்மையில் அந்த இசையாலேயே அது தன்னை நிறைத்துக்கொண்டிருக்கிறது. காட்சிக்குத்தான் அது வெட்டவெளியே தவிர, உண்மையில் அது இசைநிறைந்த வெளி.  எதையோ அடையும் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவர்களும் தத்தம்  விருப்பத்துக்குகந்த ஒன்றால் தம்மை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  அந்த ஓடைக்கரையோரமாக ஒருநாள் ஊர்வலமாகச் செல்கிறார்கள். 

     இரண்டும் இருவேறு சித்திரங்கள். இந்த வெட்டவெளிக்கு ஓடை சலசலக்கும் இசையே போதும். அந்த வெட்டவெளிக்கு கையிருப்புகள் போதும். இரண்டுமே இருவேறு தேவைகள். ஒரு மெல்லிய கோடு இருவேறு சித்திரங்களையும் கண்ணுக்குத் தெரியாத வகையில் பிரித்துவைக்கிறது.

     ஓடைநீர் தழுவ, வெட்டவெளியின் விளிம்பில் நிறைந்திருக்கும் கூழாங்கற்களை கற்பனைக்கண்கள் வழியாக நாம் பார்க்கமுடியும்.  கூழாங்கற்கள் தம்மை வெட்டவெளியின் கரைக்கும் ஓடைநீரின் தழுவலுக்கும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு காத்திருப்பதுதான் எவ்வளவு மகத்தான வாழ்க்கை. தன் கனவை, தன் வாழ்க்கையை முற்றிலுமாக ஒப்படைத்துவிட்டு அமைதியாகக் காத்திருக்கின்றன அக்கற்கள். அந்த உறுதியான பற்றை, கையிருப்பைத் தேடி ஓடும் பற்றாளர்களால் ஒருபோதும் உணரவே முடியாது. மாலை த்வனி என்பது ஒளியும் இருளும் முரண்படாத ஒரு புள்ளி. எதையும் பேதமாக உணராத ஒரு அற்புதக்கணம். காத்திருக்கும் கூழாங்கற்களின் தவம், அத்தகு அற்புதக்கணத்தை அடைவதற்கான தவம். குறுகிய காலத்துக்குள் கையிருப்புகளை ஈட்டி வெற்றி பெற்றவர்களைப்போல, அந்தத் தவத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பதை ஒருவராலும் உறுதியாக சொல்லமுடியாது. கிடைக்கலாம். கிட்டாமலும் போகலாம். ஆயினும் காத்திருப்பது மிகவும் முக்கியம். வெற்றியாளர்களின் முழக்கக்குரலின் சீண்டலுக்கு இரையாகாமல் இருப்பது மிகமிக முக்கியம்.

     அபி எழுதியிருக்கும் மாலை வரிசை கவிதைகள் அனைத்துமே ஒவ்வொரு உணர்வை எழுப்புகின்றன. மாலைதணிவு என்னும் கவிதை  திகைப்பையும் துக்கத்தையும் ஒருங்கே அளிக்கிறது.

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு.

     இக்கவிதையில் ஒரு பயணத்தை பாத்திரமாக  சித்தரிக்கிறார் அபி. இலக்கைத் தேடிச் செல்லும் பயணம். காடு, பாலை, முள்வேலி அனைத்தையும் கடந்த பிறகும் முடிவேயின்றி நீண்டு செல்கிறது பயணம். ஆனாலும் இலக்கு தென்படவில்லை. தொடர்ந்து எப்படி செல்வது என்று பாதை தெரியாத ஒரு புள்ளியில் பயணம் நின்றுவிடுகிறது.  நிகழும்போதே நின்றுவிட்ட என் கணம் என்னும் உறுதியான தளத்தின் மீது நிற்கிறது இக்கவிதை. என்ன அருமையான ஒரு தொடர். நிகழ்ந்துகொண்டே இருக்கிற ஒரு கணம் அப்படியே உறைந்துவிட்டது. அதுதான் அதன் பொருள். ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு தேர் நின்றுவிட்டது. பறந்துகொண்டே இருந்த ஒரு பறவை அப்படியே அந்தரத்தில் உறைந்து நின்றுவிட்டது. தாயை நோக்கி தத்தித்தத்தி நடந்த ஒரு குழந்தை சட்டென ஒரு சிற்பமென உறைந்து நின்றுவிட்டது. திகைப்புக்கும் துக்கத்துக்கும் அதுதான் காரணம். இலக்கை நோக்கி நடந்துவந்த பயணத்துக்கு அக்கணம் வரைக்கும் ஆழ்மனத்திலிருந்து திசைகாட்டி வந்த சமிக்ஞை சட்டென அறுந்துவிட்டது. அடுத்து எந்தத் திசையில் எப்படிச் செல்வதென தெரியவில்லை. பாதையில்லாத காட்டில் நடந்து சென்று திசை தெரியாமல் திகைத்து நின்றுவிடுவதுபோல உள்நோக்கிய பயணத்தில் திகைத்து நிற்க நேரும் ஒரு கணமே இக்கவிதை.

     விளையாட்டை முன்வைத்தபடி வளர்ந்துசென்று, சட்டென ஓர் உச்சத்தைத் தொட்டு ஒரு தத்துவக்கேள்வியாக மாறி திகைக்கவைக்கும் கவிதை கால்பந்து.

வெற்றியும் தோல்வியும்

எல்லாம் விளையாட்டு

அடிபடும் பந்துக்கோ

அத்தனையும் வினை

 

குதிக்கட்டும்

காற்றிருக்கும் வரை;

குதித்துக் குதித்து

வானை உரசத் தாவி

மண்ணிலேயே விழுந்து

குரலிட்டுக்

குதிக்கட்டும்

 

வெளிக்காற்றினலைகள் --

எதிலும் அடைபடாத ஜீவன்கள் --

இன்னும் பிறக்காதவை

இதை அலைத்து இழுத்து

உயர்த்திச் சரிக்கையில்

 

உள்ளிருப்பது,

அடைபட்டதற்கு ஏங்கித்

தன் தோல்சிறையை

உருட்டி உருட்டிப் பாரக்கும் ...

 

ஏதேதோ புழுதிக் கால்கள் ..

அத்தனையும்

ஒருகாலின்

இடம் வேறுபடும் சாயைகள் --

 

எட்டி எட்டி உதைக்க

இது

தப்பி ஓடும்; இன்றேல்

எதிர்த்துப் பாயும்

 

முடிவில்

கால் கொடுத்த

கண்ணைக்கொண்டு

கால் காட்டிய திசை நோக்கி

அழுதழுது ஓடும்

 

காலன்றி வேறறியாமல்

காலின் கடும் உதைகொண்டோ

காலின் மெல்லணைப்புக் கொண்டோ

காலுக்குரிய முகத்தைக்

கற்பனை செய்து கொள்ளும்

நிமிஷத்துக்கு நிமிஷம்

 

அதுவே ஜெயிக்க

அதுவே தோற்க,

பந்துக்கு என்ன கிடைக்கிறது?

 

பந்தும் ஆடும்

காலும் ஆடும்

யாரை யார் ஆட்டுவிப்பது?

 

     இரண்டு அணிகள் மோதிக்கொள்ள ஒரு மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளுமே தம் வெற்றி இலக்கை நோக்கி பந்தை உருட்டிச் செல்ல முயற்சி செய்கின்றன. ஒரு அணியினர் உருட்டிச் செல்லும் பந்தை வேகம் கொண்டு எழும் மற்றொரு அணி தடுத்து தனது திசைக்கு உருட்டிக்கொண்டு செல்கிறார்கள். இரு அணியினரின் கால்களும் எட்டி எட்டி உதைக்க பந்து தப்பித்து உருண்டோடுகிறது.

     பந்துக்கு கால்களே கண்களைக் கொடுக்கின்றன. பந்துக்கு  கால்களே திசையை அறிந்தோடவும் பழக்கப்படுத்துகின்றன. ஒரு விளையாட்டில் பந்தின் பங்கு பற்றி யாருக்கோ எடுத்துரைப்பதுபோல பகிர்ந்துகொள்ளப்படும் இக்குறிப்பு வந்ததுமே கவிதை விளையாட்டுத்தளத்திலிருந்து வேறொரு தளத்தை நோக்கி நகரத் தொடங்கிவிடுகிறது. காலுக்குரிய முகத்தை பந்து கற்பனை செய்து பார்ப்பது சுவாரசியமான குறிப்பு. பந்துக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றாக மாறி, ஒரு கணத்தில் பற்றற்ற துறவுமனப்பான்மையோடு ஓடத் தொடங்குகிறது. ஆடுவதால் அணிகளுக்கு பயன் கிடைக்கலாம். ஆனால் பந்துக்கு ஒரு பயனும் இல்லை. இவையனைத்தும் மாற்றுத்தளம் நோக்கி நகரும் அடுத்தடுத்த முயற்சிகள். பந்துக்கு என்ன கிடைக்கிறது என்ற இறுதிக்கேள்வி, கைவிடப்பட்ட ஓர் உயிரின் கேள்விபோல இருக்கிறது.

     ஒரு நடுவரின் ஆய்வறிக்கையைப்போல கவிதையின் இறுதியில் இடம்பெறும் யாரை யார் ஆட்டுவிப்பது என்ற வரி திகைக்கவைக்கிறது. இதுவரை நாம் ஆர்வத்துடன் கவனித்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கால்பந்தாட்டம், உண்மையில் இரு அணிகளுக்கு இடையில் நிகழ்ந்த ஆட்டமே அல்ல என்பது கன்னத்தில் விழுந்த அறைபோல இருக்கிறது. அது பந்துக்கும் கால்களுக்கும் நிகழ்ந்த ஆட்டம் என்ற உண்மை முன்வைக்கப்பட்டதும், இதை எப்படி கவனிக்கத் தவறினோம் என்ற எண்ணம் எழுகிறது. நம் காட்சி மதிப்பீடுகள் அனைத்தையும் அந்தக் கோணம் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. இந்தக் கணம் வரைக்கும், நாம் பார்க்கும் காட்சியில் நாம் விரும்பும் கோணத்தையே முதன்மையானது என நாம் நம்பிக்கொண்டிருந்ததெல்லாம் எவ்வளவு பெரிய பேதைமை என்ற எண்ணம் எழுகிறது. ஒரு சின்ன கோண வேறுபாடு எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடுகிறது.

     எலும்புகளின் நூலகம் மற்றொரு முக்கியமான கவிதை. வழக்கமாக எலும்புக்குவியல், எலும்புமேடு என்றுதான் அனைவரும் குறிப்பிடுவார்கள். ஆனால் அபி வித்தியாசமாக எலும்புகளின் நூலகம் என்று குறிப்பிடுகிறார். ஒரு மனிதனின் வாழ்வே, அவன் அடுத்த தலைமுறைக்கு விடுத்துச் செல்லும் செய்தி. நல்லவற்றையும் கெட்டவற்றையும் அவனுடைய அனுபவங்களை முன்வைத்தே அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்கிறார்கள். நல்ல விதைகளிலிருந்து நல்ல செடிகொடிகள் முளைத்தெழுகின்றன. நச்சு விதைகளிலிருந்து நச்சுச்செடிகள் முளைத்தெழுகின்றன. விதைப்பதே விளைகின்றன.

 

பாழடைந்த சிற்றூர் அது

விளையாட்டாய்
ஒரு கல்லைப் பெயர்க்க
அடியில் ஊர்ந்தன
நூறு வயது
விஷப்பூச்சிகள்

வெறும்
முள்செடி விரிப்பின்மீது
வெயில் கிழிந்துகொண்டிருந்தது

எரிந்த குழந்தைகளின்
உடல் விறைப்பைப்
பார்த்துக் கொண்டிருந்தன
கரிந்த சுவர்கள்

மொழிகளை மறந்துவிட்ட
மனசுக்குள்
தூர தூர தேசங்களின்
ரத்தம் வந்து
பாய்ந்துகொண்டிருந்தது

விளையாட்டாய்
வீதிகளைப் புரட்டியபோது
அடியில்
நரபலி தேவதைகளின்
நடன மண்டபம்
நீச்சல் குளம்
ஆமைமுதுகுபோல் சாலை
எலும்புகளின்
மிகப்பெரிய நூலகம் ...

 

     ஏற்கனவே தான் பார்த்த பாழடைந்த ஒரு சிற்றூர்க்காட்சியை விவரிப்பதுபோல அபி தன் கவிதையைத் தொடங்குகிறார். ஒரு கல்லுக்கடியில் நூற்றுக்கணக்கான விஷப்பூச்சிகள் வாழ்கின்றன. எந்த இடத்திலும் பச்சை என்பதே இல்லை. கண்ணில் பட்ட இடமெல்லாம் முட்செடிகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. வீடுகள் எரிந்து சாம்பல் குவியலாகக் கிடக்கின்றன. கரிந்துபோன குழந்தைகளின் உடல்கள் விறைத்திருக்கின்றன. எங்கெங்கும் ஒரே ரத்தச்சேறு. தகிக்கும் வெட்டவெளியைப் பார்த்து மனம் சோர்ந்து மறுபுறத்தைப் புரட்டிப் பார்த்தால் அங்கும் மனத்தைச் சோர்வுறச் செய்யும் காட்சிகளே நிறைந்திருக்கின்றன. எங்கெங்கும் நரபலி தேவதைகளின் நடன மண்டபங்களும் நீச்சல் குளங்களும்.  அருகிலேயே எலும்புகளின் நூலகம்.  இரு புறங்களிலும் தீமைகளே ஓங்கி நிற்கின்றன. ஒரு தாளில் இரு பக்கங்களைப் பார்ப்பதுபோல ஒரு சிற்றூரின் இருவேறு காலகட்டக் காட்சிகளைப் பார்க்கவைக்கிறார் கவிஞர். தொடக்கம் எந்தப் பக்கம், அதன் தொடர்ச்சி எந்தப் பக்கம் என்பதைப் பிரித்தறிய முடியாதபடி இரு புறங்களிலும் தீமைகளே பெருகி நிறைந்திருக்கின்றன. நரபலி தேவதைகளின் மண்டபங்களில் எலும்புகளின் நூலகம் நிறைந்திருப்பதில் வியப்பில்லை.

     எதன் முடிவிலும் மிகச்சிறந்த கவிதை. தின்னும்போது கசப்பதும், நினைக்கும்போது இனிப்பதும்  எது என்ற புதிருக்கான விடையே இக்கவிதையாக மலர்ந்திருக்கிறது.

 

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

, அதற்கே எவ்வளவு முயற்சி!
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட,
யார்யாரோ கொடுத்த
கண்களைக்கொண்டு வழிதேடி,
இடையிடையே காணாமல்போய்,
என்னைநானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒருவழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக்கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்தபோது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது.

 

     நினைக்க நினைக்க நாவில் இனிப்பு படர்வதன் பொருள் கசப்பு திடீரென இனிப்பாக மாறிவிட்டது என்பதல்ல. முதல்முதலாக நெஞ்சில் ஒரு புள்ளியென எழுந்த ஆசையை அடைவதற்காகவே ஒரு சாகசப்பயணத்தை மேற்கொள்கிறோம். சாத்தியமாகாததைக்கூட சாத்தியமானதாக மாற்றிக்கொண்டு அலைந்து திரிகிறோம். நம் எல்லைக்கு மீறிய உழைப்பை அர்ப்பணிக்கிறோம். இந்த அளவுக்கு தீவிரம் நம்மிடம் இருந்திருக்கிறதா என நமக்கே ஒரு கணம் வியப்பு ஏற்படுகிறது. அதை நினைத்து பெருமிதம் ஏற்படுகிறது. அந்த வியப்பும் பெருமிதமும்தான் இனிமை பரவுவதற்குக் காரணம். நம் எல்லைகளை நாமே உணர்ந்ததால் உருவான இனிமை. இலக்கை அடைவதைவிட, இலக்கை நோக்கி அடிஅடியாக நாம் நிகழ்த்திய பயணங்களின் அனுபவத்தொகை மிகப்பெரிய சொத்து. இறுதியில் கனி கசந்தபோதும், அனுபவத்தொகையின் இனிமை நெஞ்சில் நிறைகிறது.

     தன்னிடமிருக்கும் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்கி, பிறகு இன்னொன்றைக் கொடுத்து பிறிதொன்றை வாங்கிச் சேகரித்துக்கொண்டே போகும் ஒரு விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவதுண்டு. அந்த விளையாட்டிலிருந்து மாற்றிக்கொள்வது என்னும் அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உலகியலில் திளைத்திருக்கும் பெரியவர்கள் விளையாடினால் எப்படி இருக்கும் என்னும் கற்பனையை மாற்றல் கவிதையில் பார்க்கமுடிகிறது.

 

பின்னணி உண்டு

மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

மாற்றிக் கொண்ட இடைப் பொழுது
பின்னணி இல்லாதது

இடைப் பொழுதுகளையும்
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

பின்னணிக்குத் தளங்கள் உண்டு
மாற்றிக் கொண்டபின்
மற்றிக் கொள்வோம்
தளங்களை

தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
மற்றிக் கொள்வோம்
நடமாட்டங்களை

நடமாட்டங்களில்
பின்னணி
சூழலாக
மாறியிருக்கக் கூடும்

சூழலில்
எனது உனது சாயைகள்
நிர்ணயம் நோக்கி
வீண் முயற்சிகளில்
அலைந்து திரியக் கூடும்
மாற்றிக் கொள்வோம்
சாயைகளை

எனது உனது இன்றி
எதாவதாகவோ
இருக்க நேரிடும்
மாற்றிக் கொள்வோம்
எதாவதுகளை
வேகம் வேகமாக

மாற்றல் நிரந்தரப் படுகிறதா
உடனே
மாற்றிக் கொள்வோம்
மாற்றல்களை

 

     முதலில் பின்னணிகளை மாற்றிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு நிராசை. எதுவோ ஒன்று குறைந்திருப்பதுபோல ஓர் உணர்வு. உடனே  இடைப்பொழுதுகளை மாற்றிக்கொள்கிறார்கள். மீண்டும் ஒரு நிராசை. பெருமூச்சு. அதையடுத்து தளங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியே மாற்றல்கள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்தபடி இருக்கின்றன. நடமாட்டம், சூழல், சாயைகள் என அனைத்தையும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் மாற்றிக்கொள்கிறார்கள். அப்போதும் ஏதோ ஒரு குறை. ஏதேனும் ஒன்று நிரந்தரமாக மாறிவிட்டது என எப்போது தமக்குத் தோன்றுகிறதோ, அப்போதே அதை மாற்றிக்கொள்வோம் என ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். பிள்ளைவிளையாட்டு நிறைவில் நிறைவடைவதுபோல உலகியல் வாழ்வில் பெரியவர்கள் செயல்கள் நிறைவில் நிறைவு கொள்வதில்லை. அது மிகப்பெரிய துரதிருஷ்டம். அந்தத் துரதிருஷ்டத்தைத்தான் அபி சற்றே எள்ளலுடன் சித்தரிக்கிறார்.

     ஓடைக்கரையின் வெட்டவெளிக்கரையில் தொட்டுத்தொட்டு தழுவியோடும் அலைகளின் சலசலப்புக்கு இடையில் காத்திருக்கும் கூழாங்கற்களின் கனவுதான் அபியின் கனவு. அது நிறைவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கனவு. எடைபார்க்கும் எந்திரத்தில் ஏறி நின்று தன் எடையைப் பார்க்க விழையும் முதியவரைப்போல அந்தக் கனவைத்தான் அபி உண்மையிலேயே எழுதிப் பார்க்க விழைகிறார். ஆனால் எந்திரத்துக்கு அருகில் அவர் மட்டும் இல்லை. அவரைச் சுற்றி ’நான் நான்’ என்று ஆவலுடன் சிறுவர்களும் சிறுமிகளும் குதித்தபடியே இருக்கிறார்கள். அதனால் முதியவர் தன் கனவை ஒத்திவைத்துவிட்டு அவர்களை அள்ளியெடுத்து எந்திரத்தில் நிற்கவைத்து எடைபார்த்து இறக்கிவிடுகிறார். அபியும் எழுத நினைத்த கனவை விடுத்து, மீன்குஞ்சுகள் போல அவர் எண்ணங்களைச் சுற்றிச்சுற்றி வரும் சின்னச்சின்ன பிற கனவுகளை எழுதத் தொடங்கிவிடுகிறார்.  நிறைவுக்குக் காத்திருக்கும் கூழாங்கற்களைப்போல, அந்தக் கனவும் அவருக்காகக்  காத்திருக்கிறது.

 

(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்ட அபி – 80 மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை)