Home

Sunday 13 August 2023

திறப்பு விழா - கட்டுரை

 

”அன்புள்ள மாணவர்களே. இந்தப் பிரார்த்தனை வேளையில் உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கினார் எங்கள் தலைமையாசிரியர்.

அடுத்த கணமே, வரிசையில் எனக்கு இடது பக்கமாக நின்றிருந்த சேகர் “நாளைக்கு லீவு விடுங்க சார். எங்க வாழ்க்கையில அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவுமே இல்லை” என்று சொன்ன சொற்கள் துல்லியமாகக் கேட்டன. துணுக்குற்று கண்களை மட்டும் சுழற்றி அவன் பக்கம் பார்த்தேன். அவன் உதடு அசையவே இல்லை. முகமும் சிற்பம்போலவே இருந்தது. குரல் மட்டும் எப்படிக் கேட்டது என்று புரியவில்லை. குழப்பத்தோடு பார்வையைத் திருப்பி தலைமையாசிரியரின் உரையில் கவனத்தைக் குவித்தேன். ஆனாலும் ஆழ்மனத்தில் ’எப்படி எப்படி?’ என்கிற கேள்வி மட்டும் குடைந்தபடி இருந்தது.

”நம் பள்ளிக்கூட வளாகத்தில் நடனராணி போக்குவரத்து நிர்வாகம் கட்டி முடித்திருக்கும் புதிய கட்டடத்தின் திறப்புவிழாவுக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் வாரத்தில் புதன்கிழமை அன்று திறப்புவிழா நடைபெறும். மாவட்ட ஆட்சியரும்  மாவட்டக் கல்வி அதிகாரியும் அந்த விழாவுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனர். அன்றைய தினம், நடனராணி நிர்வாகம் கட்டிடத்தை இந்தப் பள்ளியிடம் ஒப்படைக்க இருக்கிறது. நம் பாசத்துக்குரிய ஆசிரியர் சுப்பையா ஒருங்கிணைப்பாளராக இருந்து விழாவை நடத்துவார். விழா கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளையெல்லாம் அவரே கவனித்துக்கொள்வார். மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் அவருக்குத் துணையாக இருந்து விழா வெற்றிகரமாக நடைபெற உதவியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

தலைமையாசிரியர் அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரும் கைத்தட்டி ஓசையெழுப்பி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

வகுப்புக்குத் திரும்பியதும் சேகரை நிறுத்தி “டேய், எச்.எம். பேசும்போது லீவ் விட்டா மகிழ்ச்சியா இருக்கும்னு நீதான சொன்ன?” என்று கேட்டேன். அவன் ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்தியபடி ”என் மனசுக்குள்ளதான சொல்லிகிட்டேன். உனக்கு எப்படி கேட்டுது?” என்று சிரித்தான். நான் அவன் தோளில் அழுத்தமாகத் தட்டினேன். ”அது எப்படிடா உதட்டயே திறக்காம உன்னால பேச முடியுது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். “உனக்கு எதுக்குடா அதெல்லாம். நீயெல்லாம் நல்ல புள்ளை. அதையெல்லாம் கத்துகிட்டா கெட்டுப் போயிடுவ. போடா, போய் எதயாச்சும் படிக்கிற வேலை இருந்தா பாரு” என்று கிண்டல் செய்தான். “உன்னை….” என்று தொடங்கினாலும் தொடர்ந்து பேச்சு எதுவும் வராமல் அவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து வைத்துவிட்டு, எனது இடத்தில் அமர்ந்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் புதிய கட்டிடத்தை எந்த வகுப்புக்கு ஒதுக்கிக் கொடுப்பார்கள் என்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

“இதுல என்னடா சந்தேகம் ஒனக்கு? பதினோராம் வகுப்புக்குத்தான் கிடைக்கும். அவுங்கதான எல்லாரையும்விட பெரிய க்ளாஸ்?” என்றான் சுந்தரம்.

“இல்லடா, ஆறாவது, ஏழாவது மாதிரி சின்ன க்ளாஸ்காரங்களுக்குத்தான் கொடுப்பாங்க” என்றான் மனோகரன்.

“ஏன்டா அவுங்களுக்கு இவுங்களுக்குன்னு பேசறீங்க? நம்ம க்ளாஸ்க்குன்னு ஒதுக்கினா கூட நல்லாதான் இருக்கும்” என்றேன் நான்.

”ஆசை தோசை அப்பளம் வடை. மழை நாள்ல ஏழாம் கிளாஸ் கூரையில ஓட்டை விழுந்து ஒழுவுதே, நீ பார்த்ததே இல்லையா? எனக்கு என்னமோ, அந்த கிளாஸ்க்குத்தான் போவும்னு தோணுது” என்றான் செல்வகுமார்.

“இப்ப எதுக்குடா அதப்பத்தி வீண்பேச்சு? சுப்பையா சார்கிட்டயே கேட்டா முழு விவரமும் தெரிஞ்சிடும்” என்று தற்காலிகமாக அப்பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் முருகன்.

சுப்பையா சார் வகுப்புக்கு வந்ததும் எல்லோருமே அந்தக் கேள்வியைத்தான் அவரிடம் முதலில் கேட்டார்கள். ஆனால் அவர் புன்னகைத்தபடியே உதட்டைப் பிதுக்கினார்.

“இந்த விஷயத்துல உங்கள மாதிரித்தான் நானும். எனக்கும் எதுவும் தெரியாது. அது நிர்வாகம் எடுக்கிற முடிவு. அதுல தலையிட எனக்கு எந்த விருப்பமுமில்லை”.

அதற்கு மேல் அந்தப் பேச்சைத் தொடரமுடியவில்லை. சாரும் உடனடியாக பாடத்தைத் தொடங்கிவிட்டார். எல்லோரும் அவரையே கவனித்தோம்.

நேரம் கழிந்ததே தெரியவில்லை. கரும்பலகையில் எழுதியதையெல்லாம் அழித்துவிட்டு கையில் ஒட்டியிருந்த சாக்பீஸ் துகள்களை தட்டி உதறியபோதுதான் பாடம் முடிந்துவிட்டது என்பது புரிந்தது.

அப்போது ”இந்தக் கட்டிடத்தை நடனராணி நிர்வாகம் பள்ளிக்கூடத்திடம் ஒப்படைக்கப் போகுதுன்னு எச்.எம். சொன்னதுக்கு என்ன சார் அர்த்தம்? மாசாமாசம் நம்ம பள்ளிக்கூடம் அவுங்களுக்கு வாடகை கொடுக்கணுமா?” என்று கேட்டான் குமாரசாமி.

சார் உடனே “இல்லை இல்லை. அப்படி இல்லை” என்றபடி தலையசைத்தார். “இதுவரைக்கும் செலவு பண்ணி இந்தக் கட்டடத்தைக் கட்டியது அந்த நிர்வாகம்தான். ஆனா, அதை அவுங்க கட்டியது நம்ம பள்ளிக்கூடத்துக்காகத்தான். அதை முறையா அதிகாரிகள் முன்னிலையில நம்மிடம் ஒப்படைக்கிறாங்க” என்று விளக்கம் கொடுத்தார்.

“இனிமேல இந்தக் கட்டிடத்துமேல அவுங்களுக்கு எந்த உரிமையும் இருக்காதா?”

”இருக்காது. இனிமேல இது பள்ளிக்கூடத்துக்கு மட்டுமே உரிமையுள்ள சொத்தாயிடும்”

“பள்ளிக்கூடத்துக்கு அவுங்க ஏன் சார் செலவு செஞ்சி கட்டித் தரணும். அரசாங்க பள்ளிக்கூடத்துக்கு அரசாங்கம்தான கட்டித் தரணும்”

“ஆமாமாம். அரசாங்கம்தான் கட்டித் தரணும். அதுதான் நியாயம். ஆனால் நம்ம இந்தியா பெரிய நாடு. இதுல எத்தனையோ மாவட்டங்கள். எத்தனையோ கிராமங்கள். எல்லா இடங்கள்லயும் பள்ளிக்கூடம் கட்டியாகணும். அந்த அளவுக்கு செலவு செய்ய அரசாங்கத்துகிட்ட பணமில்லை. அதனால படிச்சா படிங்கடா, இல்லைன்னா போங்கடான்னு  இளைஞர் சமுதாயத்தை கைவிடமுடியுமா?”

முடியாது என்று உள்ளூர முணுமுணுத்தபடி எங்களுடைய தலை தானாகவே அசைந்தது.

”தற்காலிகமா குறைந்தபட்சமா ஒரு கூரையை கட்டி பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சிடுவோம். போகப்போக, சுத்துவட்டாரத்துல இருக்கிறவங்க உதவியோடு முடிஞ்ச வரைக்கும் ரெண்டு மூனு கட்டடங்கள கட்டிக்கிங்கன்னு  அரசாங்கத்துல சொல்லிட்டாங்க. அப்படித்தான் இந்த ஊருக்கு இந்த பள்ளிக்கூடம் வந்தது”

இப்படி ஒரு வரலாறு எங்கள் பள்ளிக்கூடத்தின் உருவாக்கத்தின் பின்னால் இருக்கும் என்பது அன்றுதான் எங்களுக்குப் புரிந்தது.

”கோவிந்தன்னு இங்க ஒரு எச்.எம். இதுக்கு முன்னால இருந்தாரு. அவருதான் நம்ம வட்டாரத்துல இருக்கிற பல முதலாளிகளைப் பார்த்து உதவி கேட்டாரு. நடனராணி பஸ் முதலாளியும் அதுல ஒருத்தரு. மத்தவங்க யாருக்கும் அந்த எச்.எம். பேச்சு ஒரு விஷயமாவே தெரியலை. ஆனா, நடனராணி பஸ் முதலாளிக்கு மட்டும் இது முக்கியமான கடமைன்னு தோணியிருக்குது. சொந்த செலவுல இந்தக் கட்டடத்தை கட்டி, இந்தாடா பசங்களா, வச்சிக்குங்கடா, நல்லா படிங்கடான்னு கொடுக்கறாரு”

பாடத்தில் எழும் சந்தேகங்களாக இருந்தாலும் சரி, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சந்தேகங்களாக இருந்தாலும் சரி, அதை முழுமையாகப் போக்கி புரிந்துகொள்ள வைப்பதில் சுப்பையா சாருக்கு இணையானவர் ஒருவரும் இல்லை என்று தோன்றியது.

வகுப்பைவிட்டு புறப்படுவதற்கு முன்பாக, “இன்னைக்கே நம்ம க்ளீனிங் வேலையை ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்டார். “சரி சார்” என்று நாங்கள் உற்சாகமாக தலையசைத்தோம்.

“கடைசி பீரியட் யாரு?”

“ராதாகிருஷ்ணன் சார்”

”தமிழ் சாரா? சரி, நான் அவருகிட்ட சொல்லிடறேன். எல்லாரும் தயாரா இருங்க” என்றபடி கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குது. பொதுவா ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு பதில் சொல்லுங்க. தானம்ன்னா என்ன அர்த்தம்? உங்களுக்கு என்னென்ன தானங்கள் தெரியும்? ஒவ்வொருத்தவங்களா எழுந்து சொல்லுங்க” என்றார்.

சுந்தரம் சட்டென ஒரு கையை உயர்த்தியபடி சாரின் முகத்தைப் பார்த்தான். சார் தலையசைத்ததும் எழுந்து நின்று “ஐயா, தானம் செய்யுங்கய்யான்னு பிச்சைக்காரங்க கேக்கும்போது, நம்மகிட்ட இருக்கிற சில்லறையை கொடுக்கறதுக்கு தானம்னு பேரு”  என்றான்.

சார் அமைதியாக தலையசைத்தபடி இன்னும் யாராவது சொல்லத் தயாராக இருக்கிறார்களா என்பதுபோலப் பார்த்தார். குமாரசாமி எழுந்து “பிச்சைக்காரங்களுக்கு பணம் கொடுக்கறது மட்டுமில்லை, ஏழைகளுக்கு அரிசி, பருப்புன்னு கொடுக்கிறதுவும் தானம்தான்” என்றான்.

அவன் சொன்னதுமே எல்லோருக்கும் ஒரு பிடி கிடைத்ததுபோல இருந்தது. ஒவ்வொருவருமே எழுந்து நின்று ஏதாவது ஒன்று சொன்னார்கள்.

“பசிக்கு சாப்பாடு போடறது”

“கந்தைத்துணி கட்டியிருக்கிறவங்களுக்கு துணி குடுக்கறது”

“உதவியா செய்யறது எல்லாமே தானம்தான் சார்”

“கர்ணன் மாதிரி அள்ளி அள்ளிக் கொடுக்கறதுதான் சார் தானம்”

“இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு எடுத்துக் கொடுக்கறது”

”நம்ம பள்ளிக்கூடத்துக்கு கட்டடம் கட்டிக் கொடுக்கிறது”

உற்சாகத்துடன் ஆளுக்கொரு விளக்கம் சொல்லிக்கொண்டே சென்றனர். எல்லோருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுத்த சுப்பையா சார் புன்னகையோடு எல்லாவற்றையும் தலையசைத்தபடி பார்த்தார். இறுதியில் “நீங்க சொன்ன எல்லா விளக்கங்களும் சரி. இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கிற எல்லாமே தானம்தான். அது ஒரு நூறு ரூபாயானாலும் சரி. ஒரு லட்ச ரூபாயா இருந்தாலும் சரி” என்று ஒருகணம் நிறுத்தினார். தொடர்ந்து “இதெல்லாம் ஒருவகையில பொருள்தானம். பொருள் இல்லாதவங்களும் கொடுக்கக்கூடிய ஒரு தானம் உலகத்துல இருக்குது, என்ன தெரியுமா?” என்று கேட்டார்.

எதுவும் இல்லாதவன் எதைத் தானமாக அளிக்கமுடியும் என்று புரியாமல் நாங்கள் குழப்பத்துடன் சார் முகத்தைப் பார்த்தோம். அவர் உடனே கையை உயர்த்தி மடக்கிக்காட்டி “உழைப்பு தானம். அன்பின் காரணமாக விருப்பத்தோடு  நாம் இன்னொருவருக்காக உழைக்கும் உழைப்புகூட ஒருவகையில் தானம்தான்” என்றார். தொடர்ந்து ”இன்று மாலை நாம் பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்த செலுத்தப்போகும் உழைப்புக்கும் அதுதான் பெயர். உழைப்பு தானம்” என்றார்.

அவர் ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்துச் சொல்லும் விதம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“இன்னொன்னும் இருக்குது. அதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தானம். கல்வி தானம். படிக்கறதுக்கு ஆசை இருந்தும் வாய்ப்பில்லாத பிள்ளைகளை யாராவது ஒருத்தர் கைக்காச போட்டு செலவு செஞ்சி ரொம்ப அக்கறையா படிக்க வைக்கிறார்னு வைங்க. அதுக்குப் பேரு கல்விதானம்”

அவர் சொல்லி முடித்த சமயத்தில் அடுத்த பாடவேளைக்கான மணி அடித்துவிட்டது. சார் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அடுத்து சில நிமிடங்களிலேயே அறிவியல் சார் உள்ளே வந்துவிட்டார்.

கடைசி பாடவேளைப் பிரிவு சமயத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதற்குத் தேர்ந்தெடுத்த இடத்துக்கு வந்துவிட்டோம். சுப்பையா சார் வேறு ஏதோ வகுப்பை முடித்துக்கொண்டு நேராக அங்கே வந்து சேர்ந்தார். முதலில் எங்களை அவர் நான்கு குழுக்களாகப் பிரித்துவிட்டார். ஒவ்வொரு குழுவும் ஒரு திசையில் சென்று மரத்தடிகளில் விழுந்து மக்கியிருந்த இலைகளையும் சருகுகளையும் கூடைகளில் வாரியெடுத்துச் சென்று குப்பைமேட்டில் கொட்டியது. அரை மணி நேரத்தில் அந்த இடமே மிகவும் அழகாகிவிட்டது.

குப்பைக்குழியின் ஓரமாக எளிதில் யார் பார்வையிலும் விழாதபடி சின்னஞ்சிறிய  மாஞ்செடி ஒன்று முளைத்திருப்பதைப் பார்த்துவிட்டு கூச்சல் போட்டு எல்லோரையும் அழைத்து சுட்டிக் காட்டினான் மனோகரன். “யாரோ எப்பவோ சப்பிப் போட்ட மாங்கொட்டை இப்படி செடியா நிக்குது” என்றபடி குனிந்து அச்செடியின் மென்மையான தளிர்களைத் தொட்டு வருடினான். “வழவழன்னு சில்க் துணி மாதிரி இருக்குதுடா” என்று சிரித்தான்.

ஓடி வந்தவர்கள் அனைவரும் ஆசையோடு ஒருமுறை அந்தச் செடியின் தளிரைத் தொட்டுப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தனர்.

அதற்குள் சுப்பையா சாரும் அங்கே வந்துவிட்டார். “சார், மாஞ்செடி சார்” என்று சுட்டிக் காட்டினான் மனோகரன். அதைப் பார்த்ததும் சார் முகம் கனிந்துவிட்டது. அச்செடிக்கு அருகில் உட்கார்ந்து அதையே ஒரு கணம் பார்த்தார். பிறகு மனோகரனைப் பார்த்து புன்னகைத்தார். அவன் முகம் உடனே பூரித்தது. “நான்தான் சார் முதல்ல கண்டுபிடிச்சேன்” என்றான்.

”புடுங்கி எடுத்துட்டு போய் வேற எங்கயாவது நடலாம். இங்கயே இருந்தா நிழல்ல வளராது” என்றார் சார்.

அவனும் “சரி சரி” என்று சொன்னபடி செடியை வேரோடும் வேரடி மண்ணோடும் தோண்டி எடுத்தான். “வா” என்று அவனை அழைத்துக்கொண்டு சார் பத்தாம் வகுப்பு வாசலையொட்டிய   தோட்டத்துக்குச் சென்றார். நாங்கள் அனைவரும் கூட்டமாக அவர்களுக்குப் பின்னாலேயே சென்றோம். அங்கே அவரே குனிந்து செடியை நடுவதற்குப் போதுமான அளவு சின்னதாகக் குழியைத் தோண்டினார். மனோகரன் குனிந்து மண்குவியலோடு தன் கையிலிருந்த செடியை நட்டு மண்ணை அழுத்தி மூடினான்.

அடுத்த நாள் மறுபடியும் கடைசி பாட வேளையில் ஒன்றாக வகுப்பைவிட்டு வெளியே வந்தோம். சார் ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்துவந்து எங்கள் முன்னால் வைத்தார்.

“உள்ள என்ன சார் இருக்குது? சாப்பிடறதுக்கு ஏதாச்சிம் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று ஆவலுடன் கேட்டான் சேகர். அந்தப் பெட்டியின் விளிம்புகளைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தான். சார் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி இல்லை என்று மறுத்துச் சொல்வதுபோலத் தலையாட்டின்னார்.

“ஆப்பிளா சார்?” என்று கேட்டான் குமாரசாமி.

சார் வாய்விட்டுச் சிரித்தே விட்டார். பிறகு மெதுவாக அட்டைப்பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த தாளைப் பிரித்துவிட்டு பெட்டியைத் திறந்தார்.

மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை என நான்கு  நிறங்களில் வண்ணத்தாட்கள் அடுக்கப்பட்டிருந்தன.

“கலர் பேப்பரா?” என்று எல்லோருமே ஒரு புன்னகையுடன் சொல்லிக்கொண்டோம்.

“ஆமாம். கலர் பேப்பர். அலங்காரத்துக்கு கொடி கட்டி தொங்கவிடணுமில்லையா? அதுக்காக” என்றபடி தாள்களையெல்லாம் எடுத்து வெளியே வைத்தார். பிறகு அனைத்தையும் ஒரு மேசையில் விரித்து வைத்து ஒரே அளவில் சதுரமாக எல்லாத் தாட்களையும் வெட்டி அடுக்கினார். பிறகு ஒவ்வொரு சதுரத்தையும் நடுவில் குறுக்காக வெட்டி இரு செங்கோண முக்கோணங்களாக மாற்றினார். எங்கள் பள்ளிச் சேவகர் காய்ச்சி எடுத்து வந்த பசை ஒரு சின்ன வாளியில் இருந்தது.

சணலைப் பிரித்தபடி “இந்த மரத்திலேருந்து அந்த மரம் வரைக்கும் கட்டிட்டு ஒட்டலாமா?” என்று கேட்டார். வேலை செய்யும் உற்சாகத்தில் நாங்கள் உடனே அவர் சொன்னதுக்கு “ம் சார்” என்று பதில் சொன்னோம்.

பசை எடுத்து வந்த சேவகர் “வெளிய மரத்தடியில வேணாம் சார்” என்று தடுத்தார்.

“ஏன், காயறதுக்கு இங்க வசதியா இருக்குமே”

“வசதியாத்தான் இருக்கும். இல்லைன்னு சொல்லலை. ராத்திரி முழுக்க இங்கயே விட்டுட்டு போவணும். ராத்திரியில காத்து வேகமா அடிச்சி கொடி பேப்பர் கிழிஞ்சிட்டா, செஞ்சதெல்லாம் வீணா போயிடும். எங்கயாச்சிம் ஆள் இல்லாத க்ளாஸ் ரூம்ல கட்டி ஒட்டி வச்சிட்டம்ன்னா, காலையில வந்து எடுத்துக்க வசதியா இருக்கும்”

சார் ஒரு கணம் யோசித்துவிட்டு “சரி, அப்படியே செய்யலாம்” என்றார். நாங்கள் துண்டுத்தாட்கள் வைக்கப்பட்டிருந்த மேசையையே தூக்கிக்கொண்டு எங்கள் வகுப்பறைக்கே சென்றோம். சணலை ஜன்னல் சட்டங்களிடையில் கட்டிவிட்டு, வண்ணத்தாளை ஒட்டத் தொடங்கினோம். எல்லா வேலைகளையும் முடித்த பிறகு குழாயடிக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டு திரும்பிவந்தோம்.

அடுத்த நாள் சார் என்னை எல்லா வகுப்புகளுக்கும் சென்று நன்றாகப் பாடத் தெரிந்த ஒரு பையனை பிரிவுக்கொருவராக அழைத்துவரச் சொன்னார். நான் அவர்களையெல்லாம் ஏற்கனவே பல போட்டிகளில் பார்த்திருந்ததால், எளிதாக அவர்களை அடையாளம் கண்டு, வகுப்பு ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்துவந்தேன்.

ஆறாம் வகுப்பு பையன் குண்டாக இருந்தான். அவனைப் பார்த்ததும் சாருக்கு சந்தேகம் வந்துவிட்டது. “பாடுவியாப்பா நீ?” என்று கேட்டார். “தெரியும் சார். ரெண்டு மாசத்துக்கு முன்னால நடந்த பாட்டுப்போட்டியில எனக்கு ரெண்டு ப்ரைஸ் கிடைச்சது சார்” என்று இரு விரல்களை உயர்த்திக் காட்டியபடி சொன்னான். அவன் குரலுக்கும் அவன் உருவத்துக்கும் தொடர்பே இல்லை. அவ்வளவு இனிமையாக இருந்தது அவன் குரல். சார் புன்னகைத்தபடி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு “ஆறாவது மூனு செக்‌ஷன் புள்ளைங்களும் இப்படி ஒன்னா வாங்கடா” என்றார்.

மூன்று மாணவர்களும் ஒரு குழுவாக அவருக்கு முன்னால் நின்றனர். சார் உடனே தன் பையிலிருந்து ஒரு தாளை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

“இதான் நீங்க பாடவேண்டிய பாட்டு. நல்லா மனப்பாடம் பண்ணிக்கணும். புரியுதா?”

“சரி சார்” மூன்று பேரும் தலையாட்டியபடி அந்தத் தாளை வாங்கிக்கொண்டனர்.

“பாட்டுத்தாளை பத்திரமா வச்சிக்கணும். தொலைச்சிடக் கூடாது.  வேணும்ன்னா இதைப் பார்த்து ரெண்டு மூனு தாள்ல எழுதி வச்சிக்குங்க”

அவர்கள் மூன்று பேரும் அப்போதே ஒரு மூலையில் உட்கார்ந்து அந்தப் பாடலை தமது நோட்டில் எழுதிக்கொள்ளத் தொடங்கினர்.

ஏழு முதல் பதினொன்று வரைக்கும் அழைத்துவந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் பாட்டுத்தாட்களைக் கொடுத்தார் சார், அவர்களும் கூட்டமாக அமர்ந்து தனித்தனியாக அந்தப் பாட்டைப் பார்த்து தன் நோட்டுகளில் எழுதிக் கொண்டனர். எங்கள் ஒன்பதாவது ஆ பிரிவில் மனோகரனுக்குத்தான் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

”தப்பில்லாம மனப்பாடம் பண்ணிட்டு வந்து எங்கிட்ட ஒப்பிக்கணும். புரியுதா? நாளைக்கு ஒரு பாட்டு வாத்தியாரை அழைச்சிட்டு வருவேன். அவர் வந்து ராகமா எப்படி பாடறதுன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுப்பாரு. புரியுதா?”

“சரி சார்”

கடைசியாக பையிலிருந்து ஒரு தாளை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்காமலேயே “சார், எனக்கு பாடத் தெரியாது” என்றபடி பின்வாங்கினேன்.

“உன்னை யாருடா பாடச் சொன்னா? இதப் புடி. இத நல்லா படிச்சி மனப்பாடம் பண்ணிட்டு வந்து நாளைக்கு சொல்லு. அது போதும்”

எனக்கு அவர் சொன்னது எதுவும் புரியவில்லை. வேகமாக தாளைப் புரட்டிப் பார்த்தேன். ஒளி படைத்த கண்ணினாய் பாட்டு. பாட்டுத்தாளைக் கொடுத்துவிட்டு பாடவேண்டாம் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்  என்று புரியவில்லை. நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“எதயும் நினைச்சி குழப்பிக்காத. நீதான் மனப்பாடப்புலியாச்சே. நாளைக்கு மனப்பாடமா வந்து சொல்லு. அது போதும்”

அப்போது எங்கள் பள்ளி வாசலுக்கு அருகில் ஒரு கார் வந்து நின்றதைப் பார்த்தோம். தலைமையாசிரியர் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த காவல்காரர் ஓடிச் சென்று கேட் கதவுகளைத் திறந்துவிட்டார். கார் உள்ளே வளைந்து நுழைந்து வேப்பமரத்துக்கு அடியில் நின்றது. கதவைத் திறந்துகொண்டு பெரியவர் ஒருவர் இறங்கினார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்தார். தோளில் ஒரு துண்டு இருந்தது. நெற்றியில் பட்டையாக திருநீறு பூசியிருந்தார். படியேறி நடந்து தலைமையாசிரியர் அறைக்குள் சென்றார்.

“யாரு சார்?”

மனோகரன் அடங்கிய குரலில் சாரிடம் கேட்டான். சார் அவன் தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தபடி “அவர்தான்டா நடனராணி பஸ் முதலாளி. நம்ம பள்ளிக்கூடத்துக்காக இந்தக் கட்டிடத்தைக் கட்டியவரு. விழாவுக்கு வரும்போது அவரைப் பத்தி இன்னும் கூடுதலா தெரிஞ்சிக்கலாம்” என்றார்.

பத்து நிமிடத்திலேயே அவர் வெளியே வந்து காரில் உட்கார்ந்தார். அக்கணமே கார் புறப்பட்டுச் சென்றது.

அடுத்த நாள் காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு தலைமையாசிரியர் உரையாடியபோது எல்லோருக்கும் பொதுவாக ஒரு  வேண்டுகோளை முன்வைத்தார். “விழா முடிந்ததும் எல்லா ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நடனராணி பஸ் முதலாளி நேற்று வந்து தெரிவித்துவிட்டு சென்றார். அன்றைய தினம் ஒருவரும் பகல் உணவு எடுத்துவர வேண்டாம். எல்லோருமே இங்கே பள்ளிக்கூடத்திலேயே சேர்ந்து சாப்பிடலாம்” என்று தெரிவித்தார்.

மறுநாள் பாடல்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து சாரிடம் ஒப்பித்தனர். ஒன்றிரண்டு உச்சரிப்புப் பிழைகளை மட்டும் சுட்டிக் காட்டி திருத்திக்கொள்ளும்படி சொன்னார்.

அந்த நேரத்தில் காவல்காரர் வெள்ளைவெளேரென வேட்டியும் ஜிப்பாவும் அணிந்துகொண்டு நெற்றியில் திருமண் தீட்டியிருந்த ஒருவரை அழைத்துவந்தார். அவரைப் பார்த்ததும் “ஓ. மகேந்திரனா, வா, வா” என்று எழுந்து நின்று வரவேற்றார். ”உனக்காகத்தான் காத்திட்டிருந்தேன். எல்லாப் பிள்ளைகளுக்கும் பாட்டு மனப்பாடமா தெரியும். அதுல ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா ராகமா பாட வைக்கணும். அது உன் வேலை” என்றார். ஒரு மாணவன் ஓடிச் சென்று ஒரு நாற்காலியை எடுத்துவந்து அவருக்கு அருகில் வைத்தான். “அதுக்கென்ன, தாராளமா பாட வச்சிடலாம்” என்றபடி மகேந்திரன் அதில் உட்கார்ந்துகொண்டார்.

பக்கத்திலேயே நின்றிருந்த ஆறாம் வகுப்புச் சிறுவனை அருகில் அழைத்தார். அவன் நெருங்கி வந்ததும் அவனிடம் இருந்த பாட்டுத்தாளை வாங்கிப் பார்த்துவிட்டு “ஓ, மன்னும் இமயமலை எங்கள் மலையே பாட்டா? நல்லது. நல்லது.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். பிறகு அவனிடம் “உன் பேரு என்னப்பா?” என்று கேட்டார். அவன் சொன்னதும் “இங்க பாரு தம்பி, இது யாரு எழுதிய பாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியும் சார். பாரதியார்” என்றான் அவன்.

“நல்லது நல்லது. எங்க, நீ ஒரு தரம் அந்தப் பாட்டை சொல்லு, கேப்போம்” என்று அவனைத் தூண்டினார்.

அவன் திரும்பி அருகில் நின்றிருந்த துணையாட்களைப் பார்த்தான். அவர்களும் அவனை நெருங்கி வந்து நின்றனர். சுப்பையா சார்  ”எல்லாருமே ஆறாங்கிளாஸ். ஆளுக்கொரு பாட்டுன்னா நேரம் போதாது. அதனால க்ளாஸ்க்கு ஒரு பாட்டுன்னு மாத்திட்டேன்” என்று விளக்கினார். “சரி சரி” என்றபடி சிறுவர்கள் பாடுவதைக் கேட்க மகேந்திரன் தயாரானார்.

மூன்று சிறுவர்களும் ஒரே நேரத்தில் மன்னும் இமயமலை என்று தொடங்கி தெளிவான குரலில் சொல்லி முடித்தனர்.  “இது போதும்டா சிங்கக்குட்டிகளா” என்று அச்சிறுவர்களைத் தட்டிக் கொடுத்தார் மகேந்திரன்.

“தடையில்லாம ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க. அற்புதம். இப்ப அதே வரிகளை நான் ராகத்தோடு பாடிக் காட்டறேன். கவனமா காது கொடுத்துக் கேக்கணும். பிறகு நீங்க தனியா அதே போல பாடிப் பழகினா போதும்.  அருமையா வந்துரும்” என்றபடி தன் தொண்டையைச் செருமி சரிப்படுத்திக்கொண்டார் மகேந்திரன்.

முதல் இரு வரிகளை மட்டும் பாடிவிட்டு நிறுத்தினார் மகேந்திரன். அவருடைய உச்சரிப்பு அந்த வரிகளுக்கு உயிரூட்டியதுபோல இருந்தது. அவரைத் தொடர்ந்து, சிறுவர்கள் மெதுவாக அந்த வரிகளை அவரைப்போலவே பாடிக் காட்டினார்கள். மகேந்திரன் மகிழ்ச்சியில் கைத்தட்டி அவர்களை உற்சாகமூட்டினார். பிறகு மெதுவாக ஒன்றிரண்டு திருத்தங்கள் சொன்னார். அதை உணர்ந்து மீண்டும் அவர்கள் பாடிக் காட்டினார்கள். அப்போது அந்த வரிகள் சரியாக அமைந்துவிட்டன.

அடுத்தடுத்த வரிகளையும் அதேபோல பாடிக்காட்டி, பாடவைத்து திருத்தித் திருத்தி அவர்களுடைய குரல்களை ராகக்கட்டுமானத்துக்குள் கொண்டுவந்துவிட்டார் மகேந்திரன்.

ஏழாம் வகுப்புக்கு ’எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ பாட்டு. எட்டாம் வகுப்புக்கு ’வந்தே மாதரம்’ என்போம் பாட்டு. ஒன்பதாம் வகுப்புக்கு ’தாயின் மணிக்கொடி பாரீர்’ பாட்டு. பத்தாம் வகுப்புக்கு ’பாரத சமுதாயம் வாழ்கவே’ பாட்டு. பதினொன்றாம் வகுப்புக்கு ’செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாட்டு.

அடுத்த நாளும் மகேந்திரன் வந்தார். எல்லோரும் அவரவருக்குரிய பாடலை ஒருமுறை அவர் முன்னிலையில் பாடிக் காட்டினார்கள். ஒன்றிரண்டு திருத்தங்கள் மட்டுமே தேவைப்பட்டன. மகேந்திரன் திருப்தியோடு தலையசைத்தார். “பசங்களுக்கு கற்பூரப்புத்தி சுப்பையா. சங்கதிகள் எல்லாம் மனசுல ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சிருக்கு” என்று சாரிடம் தெரிவித்தார்.

“இவனை ஒரு பாட்டு படிச்சிட்டு வாடான்னு சொன்னேன். இவன் குரல் மேடையில தேறுமான்னு ஒரு நிமிஷம் கேட்டுப் பாரு.”

பாட்டுத்தாளுடன் நின்றிருந்த என்னை மகேந்திரன் முன்னால் அனுப்பினார் சார்.

“என்ன பாட்டு தம்பி?”

“ஒளிபடைத்த கண்ணினாய்”

“சரி சொல்லு”

பாட்டுத்தாளை அவரிடம் கொடுத்துவிட்டு நான் பாடலை மனப்பாடமாகச் சொன்னேன். வா வரிசையில் இரண்டு பாட்டு. போ வரிசையில் இரண்டு பாட்டு.

“சரியா இருக்குது சுப்பையா. வார்த்தைகளை பிரிச்சி அழகா சொல்றான். அப்படியே இருக்கட்டும். இதுக்கும் ராகம் தாளம் சொல்லணுமா?” என்று கேட்டார் மகேந்திரன் .

“அதெல்லாம் வேணாம். ஆனா ஒரு சின்ன ஏற்ற இறக்கம் வேணும். சொல்லும்போது குரலை எந்த இடத்துல ஓங்கி ஒலிக்கணும், எந்த இடத்துல இறங்கி வரணும்ங்கற அடிப்படையை மட்டும் சொல்லிக் கொடு. அது போதும்” என்றார் சார்.

“இந்த பாட்டை வச்சி என்ன செய்யணும்னு நினைக்கறே. சரியா சொல்லு”

“இத பாட்டா வைக்காம, ஒரு சின்ன நாடகம் மாதிரி வச்சிக்கலாம்ங்கறது என் எண்ணம். ஏற்கனவே ஆறும் பாட்டாவே திட்டமிட்டிருக்கறதால, இத வேற மாதிரி செஞ்சாதான் நல்லா இருக்கும்.”

”அதான் எந்த மாதிரின்னு கேக்கறேன். விளக்கமா சொல்லு”

”மேடையில இந்தப் பக்கம் ஆறு பேரு. அந்தப் பக்கம் ஆறு பேருன்னு நிக்க வச்சிடலாம்.  இவன் நடுவுல நின்னு இந்தப் பாட்ட ஏற்ற இறக்கத்தோடு சொல்லணும். வா வா வா ன்னு வர இடத்துல ஒரு பக்கத்துல இருக்கிறவங்க எல்லாரும் வா வா வான்னு பின்னணிக்குரல் கொடுக்கணும். போ போ போன்னு வர இடத்துல அடுத்த பக்கத்துல இருக்கிறவங்க எல்லாரும் போ போ போன்னு பின்னணிக்குரல் கொடுக்கணும். குரல் கொடுக்கிறதுக்கு தகுந்த மாதிரி கையையும் அசைக்கணும். அப்ப பாக்கறதுக்கு அது ஒரு நாடகம் மாதிரி இருக்கும். அதுதான் நம்ம திட்டம்”

“இப்ப புரியுது சுப்பையா. ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏற்ற இறக்கம்  தெரிஞ்சிகிட்டா போதும்”

மகேந்திரன் என்னை மறுபடியும் ஒவ்வொரு வரியாகச் சொல்லும்படி சொன்னார். ஒவ்வொரு வரியையும் சொல்லி முடித்ததும், அந்த வரியில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், எந்தச் சொல்லை அழுத்தமில்லாமல் கடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்த பிறகு, அவர் எதிர்பார்த்த விளைவை என் குரல் வழியாக உணர்த்த முடிந்தது.

அடுத்த நாளும் வழக்கம்போல மகேந்திரன் வந்துவிட்டார். எங்கள் சுப்பையா சாரும் வந்து சேர்ந்தார். நாங்கள் அனைவரும் அடுத்தடுத்து எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாடலைப் பாடிக் காட்டினோம். மகேந்திரன் “தங்கமான பசங்க. நெருப்பு மாதிரி புடிச்சிகிட்டானுங்க” என்று பாராட்டினார். ஒவ்வொருவரிடமும் “எத்தனாவது படிக்கிறே?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். ”நல்லா படிச்சி நல்ல ஒசத்தியான வேலைக்குப் போங்கடா. இத்தனியூண்டு வெத்திலை மாதிரி இருக்கிற நம்ம வளவனூருக்கு எல்லாரும் சேர்ந்து நல்ல பேரை வாங்கிக் கொடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

திறப்பு விழா அன்று புதிய கட்டிடத்தின் முன்னால் கோலம் போடுவதற்கு காவல்காரர் இரண்டு பெரியம்மாக்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அழகாக வாசலில் படிக்கட்டுகளிலும் பூக்களும் இலைகளும் படர்ந்திருப்பதுபோல கோலம் போட்டு வண்ணப்பொடியை நிரப்பினர். அவர்களுடைய கைவண்ணத்தால் அந்தக் கூடத்துக்கே ஒரு அழகு வந்துவிட்டது. வாசல் தூண்களையொட்டி அவர்கள் போட்ட குத்துவிளக்கு கோலம், உண்மையான குத்துவிளக்கு இல்லாத குறையை நீக்கிவிட்டது. இன்னொரு பக்கத்தில் நிகழ்ச்சிக்கான பந்தலும் மேடையும் தயாராக இருந்தன. தோரணங்களும் வண்ணத்தாள் கொடிகளும் காற்றில் அசைந்தபடி இருந்தன.

பள்ளிக்கூடமே கலகலப்பாக இருந்தது. காலைமுதல் வழக்கம்போல வகுப்புகள் இயங்கிக்கொண்டிருக்கவேண்டுமென்றும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அடிக்கப்படும் அறிவிப்பு மணியைக் கேட்ட பிறகு ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவர்கள் வரிசையாக வெளியேறி வந்து நிகழ்ச்சியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தலைமையாசிரியர் பிரார்த்தனை நேரத்தில் தெரிவித்துவிட்டதால் ஒவ்வொரு வகுப்பிலும் பாடம் நடந்துகொண்டிருந்தது.

சுப்பையா சார் இன்னும் சில ஆசிரியர்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு மேடையமைப்பு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் என் நண்பர்களும் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சில  டெஸ்க்குகளை எடுத்துவந்து நிகழ்ச்சியிடத்தில் வைத்தோம். ஆசிரியர்கள் உட்கார்வதற்குத் தோதாக பக்கவாட்டில் நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டோம்.

இரண்டு பெரிய வேன்கள் உள்ளே நுழைந்து எட்டாம் வகுப்புக்கு முன்னால் நீண்டிருந்த பெரிய வராந்தாவின் ஓரமாக நின்றன. பந்திப்பாய்களின் உருளைகள். ஏராளமான சாப்பாட்டுப் பாத்திரங்கள். பெரிய பெரிய அண்டாக்கள். சோறு. குழம்பு. ரசம். பொறியல்கள். இலைக்கட்டுகள். குழம்பு மணமும் காய்கறி மணமும் பள்ளி முழுக்க பரவியது. ஒவ்வொருவரும் சுவாசத்தை ஆழமாக இழுத்து “என்ன குழம்பு? என்ன பொறியல்?” என்ற கேள்விகளுக்கு பந்தயம் போட்டு விடைகளைச் சொல்லிக்கொண்டிருந்தனர். மேடையில் ஓரமாக பொருத்தப்பட்டிருந்த மைக் முன்னால் ஒருவர் அடிக்கடி தோன்றி “அலோ மைக்டெஸ்டிங். ஒன் டூ த்ரீ” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

ஒரு கார் மெதுவாக பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து வலது பக்கமாகத் திரும்பியது. நடனராணி பஸ் முதலாளி இறங்கி தலைமையாசிரியர் அறைக்குச் சென்றார். தாட்களால் சுற்றப்பட்ட மாலைகளைச் சுமந்துகொண்டு அவருக்குப் பின்னால் சென்ற சேவகர் உள்ளே வைத்துவிட்டு மறுகணமே இறங்கி வந்து வண்டிக்கு அருகில் நின்றுகொண்டார்.

பாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாணவர்களும் நானும் ஒரு மரத்தடியில் நின்று கையிலிருந்த பாட்டுத்தாளைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“எந்த க்ளாஸ்டா நீ? என்னடா பண்ணிட்டிருக்க இங்க?” என்று அதட்டியபடி முத்துராமன் சார் வந்து நின்றார். மாணவர்கள் அவருக்கு மீசைராமன் என்று பட்டப்பெயர் வைத்திருந்தனர். அவர் கைவிரல் எப்போதும் தன்னிச்சையாக மீசையை முறுக்கியபடி இருக்கும். அவர் பத்தாவது, பதினோராவது வகுப்புக்கு மட்டும் கணக்கு பாடம் எடுப்பவர்.

“நைந்த் பி சார். திறப்பு விழா கலை நிகழ்ச்சிக்கு பாட்டு ப்ராக்டிஸ் செய்றோம் சார்”

“ம்” என்று அவர் ஒருகணம் உறுமியபடி மீசையை முறுக்கிக்கொண்டார். “உருப்படியா ஒரு வேலையையும் செய்யாதீங்கடா. பாட்டு, கூத்துன்னு அலைஞ்சிகிட்டே இருங்க” என்றபடி கசப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்.

இரண்டு கார்கள் கேட்டைக் கடந்து பள்ளிக்குள் நுழைவதைப் பார்த்தேன். பின்னால் வந்த காரின் முகப்பில் சிறிய அளவிலான தேசியக்கொடி பறந்தது. முன்னால் வந்த காரிலிருந்து இறங்கியவர் வேகமாகச் சென்று பின்னால் வந்த காரிலிருந்தவரை வரவேற்று தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர்களில் கலெக்டர் யார் என்று நானாக ஓர் ஊகம் செய்தேன்.

அவர்கள் அறைக்குள் சென்ற சில கணங்களிலேயே அறிவிப்பு மணியை அடித்தார் காவல்காரர். ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததால் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவர்கள் வரிசையில் வெளிவந்து நிகழ்ச்சி மேடையின் முன்னால் அமர்ந்தனர். பத்து நிமிடங்களில் அந்த இடம் நிறைந்துவிட்டது. அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களும் நெருங்கி வந்து ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர். நிலைகொள்ளாதவராக சிறிது நேரம் முத்துராமன் சார் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தார். பிறகு ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தலைமையாசிரியர் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கல்வி அதிகாரியும் நடனராணி பஸ் முதலாளியும் வந்தனர். ”வாங்க சார். வாங்க” என்றபடி அவர்களுக்கு வழிகாட்டியபடி புன்னகை படிந்த முகத்துடன் நிகழ்ச்சி மேடையை நோக்கி வந்தார் தலைமையாசிரியர்.

மேடையில் அமர வேண்டியவர்கள் அனைவரும் அமர்ந்ததும் தலைமையாசிரியர் அங்குமிங்கும் பார்வையைத் திருப்பி சுப்பையா சாரைத் தேடிக் கண்டுபிடித்து “ம்.ஆரம்பிக்கலாம்” என்பதுபோல தலையை அசைத்தார். சுப்பையா சார் மேடையில் ஏறி மைக் முன்னால் நின்று “இறைவணக்கம்” என்று அறிவித்தார். அனைவரும் அதைக் கேட்டு எழுந்து நின்றனர். அந்த அமைதிக்கிடையில் இரண்டு சிறுவர்கள் மைக் முன்னால் நின்று இறைவணக்கம் பாடினர்.

சுப்பையா சார் மீண்டும் மேடையில் தோன்றி வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரி, கட்டிடப்புரவலர் என ஒவ்வொருவரும் சிறிது நேரம் பேசி முடித்தனர். பிறகு அனைவரும் சூழ்ந்து வர மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று புதிய கட்டிடத்தின் வெளித்தூண்களிடையில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி திறந்துவைத்தார். ஒரு நிமிடம் உள்ளே சென்று அறைகளையெல்லாம் பார்த்துவிட்டு வந்து புரவலரைப் பார்த்து “உங்கள் சேவையை அரசாங்கம் ஒருபோதும் மறக்காது” என்று சொன்னபடி கைகளைக் குலுக்கினார். அவர் அந்தக் கட்டடம் தொடர்பான ஆவணங்கள் நிரபிய பையை ஆட்சியரிடம் ஒப்படைத்தார். ஆட்சியர் அதை வாங்கி கல்வி அதிகாரியிடம் கொடுத்தார்.

மேடைக்குத் திரும்பிய ஆட்சியர் மனம் திறந்து புரவலரைப் பாராட்டினார். கல்விக்கூடங்கள் அனைத்தும் ஒருவகையில் நவீன கோவில்கள் என்றும் கல்விக்காக ஒருவர் செய்யும் உதவி அனைத்தும் இறைவனுக்குச் செய்கிற வழிபாடு என்றும் குறிப்பிட்டார்.

எல்லோருடைய முகமும் மலர்ந்திருந்தது. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கி இருக்கைகளில் அமர்ந்ததும், எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த கலை நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் ஆறாவது வகுப்புப் பிள்ளைகள் மேடைக்குச் சென்று மன்னும் இமயமலை பாடினார்கள். அதைக் கேட்டதுமே அனைவரும் மேடையைக் கவனிக்கத் தொடங்கினர்.

முதல் பாட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டது. அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என எல்லா வகுப்பினரும் மேடையில் தோன்றிப் பாடினார்கள். அதற்குப் பிறகு நான் எனது குழுவினரோடு மேடைக்குச் சென்று ஒளிபடைத்த கண்ணினாய் பாடத் தொடங்கினேன். வா வா வா என்று ஒரு குழுவினர் அழைப்பதும் போ போ போ என இன்னொரு குழுவினர் உரைப்பதுமாக எங்கள் நிகழ்ச்சி ஒரு நாடகம் போல அமைந்துவிட்டது. கைத்தட்டல் ஓசை அடங்குவதற்கு வெகுநேரமானது. அதைக் கேட்டதும் வானத்தில் ஏறி மிதப்பதுபோல இருந்தது.

எல்லோரும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. மாவட்ட ஆட்சித்தலைவரும் கல்வி அதிகாரியும் உடனடியாகக் கிளம்பவேண்டும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தலைமையாசிரியரும் புரவலரும்  திரும்பினார்கள். இருவரும் பந்திப்பாயில் எங்களோடு ஒன்றாக வரிசையில் சாப்பிட விரும்பினார்கள். ஒரு கூடம் போதவில்லை. உடனே எல்லா வகுப்பறைகளும் திறந்துவிடப்பட்டன.  மாணவர்கள் எல்லா இடங்களிலும் சென்று நிறைந்தார்கள்.

பந்தியில் உட்கார்ந்ததும் பேச்சுச்சத்தம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. ஒருவர் இலையைப் போட்டுக்கொண்டே சென்றார். இன்னொருவர் தம்ளர் வைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டே சென்றார். மற்றொருவர் இலையைத் தூய்மை செய்ய தண்ணீரைத் தெளித்தபடி சென்றார். உப்பு, ஊறுகாயைத் தொடர்ந்து இனிப்பு வந்தது. சின்ன செவ்வகம் போன்ற மைசூர் பாக்கு. தட்டோடு நெருங்கி வரும்போதே நெய்மணம் வீசியது. ஒரு துண்டு கிள்ளி வாய்க்குள் வைத்தேன். அப்படியே கரைந்துவிட்டது.

“என்னய்யா இது? இதுதான் நீ பரிமாறக்கூடிய லட்சணமா?“

கூடமே அதிர்கிற மாதிரி ஒரு குரல் கேட்டு எனக்கு உடம்பே நடுங்கிவிட்டது. விருந்து நேரத்தில் என்ன சத்தம் என்று புரியவில்லை. ஒருகணம் அதிர்ச்சியில் உறந்துவிட்டேன். அப்போது சற்றே தொலைவில் முத்துராமன் சார் பரிமாறுகிறவரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியைப் பார்த்தேன். அக்கணமே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

சுப்பையா சார் எங்கிருந்தோ அவர் குரலைக் கேட்டுவிட்டு அவரை நோக்கி ஓடி வந்தார். அவரை நெருங்கி “முத்துராமன், இங்க பாரு. என்ன இது?” என்று சங்கடமான குரலில் கேட்டார். முத்துராமன் சார் அவரைச் சிறிதுகூட பொருட்படுத்தவில்லை. 

”குனிஞ்சி இலையில வைக்கத் தெரியாத ஆளு, நீ எதுக்கு பந்தி பரிமாறுற இடத்துக்கு வந்த? என்னை என்ன ஊறுகாய்க்கு வக்கத்த ஆளுன்னு நெனசிட்டியா? இப்படி வெள்ளைவேட்டி மேல கொட்டி பாழாக்கிட்டு போறியா? இதுக்கு பேர்தான் விருந்தா?”

தொடர்ந்து சத்தம் போட்டபடி இருந்தார். “முத்துராமன், அமைதியா இருங்க. முத்துராமன் அமைதியா இருங்க” என்றபடி அவர் தோளைத் தொடுவதற்குச் சென்றார் சுப்பையா சார். அக்கணமே அவருடைய கைகளைத் தட்டி விலக்கினார் முத்துராமன் சார்.

“எல்லாமே உன்னாலதான் சுப்பையா. பார்க்கிறதுக்கு சின்ன பையனா இருந்துகிட்டு தேவையில்லாத வேலையையெல்லாம் இழுத்துவிடற. உங்கள யாருய்யா கேட்டா விருந்து வேணும்னு”

அவருக்கு அப்படி ஒரு கோபம் ஏன் வந்தது என்றே புரியவில்லை. எல்லோரையும் வசைபாடியபடி எழுந்து வேகமாக நடந்து சென்றார்.

எச்.எம்.எழுந்து நின்று ஒருமுறை அவரை பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர் நடந்துவிட்டார். அதை அவரால் நம்பவே முடியவில்லை. புரவலர் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவரை திகைப்புடன் பார்த்தார். ஆயினும் அவரை அமைதிப்படுத்தும் விதமாக உரையாடுவதற்காக “சார் சார்” என்று அழைத்தார். அவர் யாரையுமே பொருட்படுத்தவில்லை. புரவலரின் முகமே மாறிவிட்டது.

எனக்குக் குழப்பமாக இருந்தது. இந்த  முத்துராமன் சார்  ஏன் இப்படி விஷம் மாதிரி சொற்களைக் கொட்டியபடி செல்கிறார் என்பது புரியாமல் சிலையைப்போல நின்றேன். 

“இந்த சோத்துக்காக நான் ஒன்னும் ஏங்கிகிட்டு கெடக்கலை.  மனசு வச்சா, இந்த மாதிரி நான் ஆயிரம் பேருக்கு போடுவேன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே  வேகமாக வெளியேறினார்.

அதற்குப் பிறகு பந்தி வேலை அமைதியாக நடந்தது. எல்லோரும் ஆழ்ந்த அமைதியுடன் சாப்பிட்டார்கள். எச்.எம். முகத்தையும் சுப்பையா சாரின் முகத்தையும் பார்த்தேன். களையிழந்து புழுதி படிந்த சிற்பம் போல இறுகியிருந்தது.