Home

Monday 1 January 2024

பன்னீர்ப்பூக்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

 

இத்தொகுதியில் இருபத்தைந்து கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அதை ஏன் எழுதினேன் என்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்தக் காரணத்தை இம்முன்னுரையில் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.



கடந்த சில ஆண்டுகளாக, காந்தியடிகள் வகுத்த நிர்மாணப்பணித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட வழிமுறைகளைப்பற்றி தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய வழியைப் பின்பற்றி, அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உழைத்த தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும் திரட்டி அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வருகிறேன்.

கதரின் மீது காந்தியடிகள் கொண்டிருந்த பற்று இந்த உலகமே அறிந்த செய்தி.  கதரை விடுதலைப் போராட்டத்தின் ஓர் அம்சமாகவே அந்தக் காலத்தில் பொதுமக்களும் தேசியவாதிகளும் கருதினார்கள். கதரின் மேன்மையை மக்களிடம் எடுத்துரைப்பதற்காகவும் கதர் நிதி திரட்டுவதற்காகவும் காந்தியடிகள் கடந்த நூற்றாண்டில் இருபதுகளையொட்டிய ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக நாடெங்கும் பயணம் செய்தார்.

அந்தப் பயணத்தின்போது ஒரு சமயம் ஒரிசாவில் ஒரு சிறிய நகரத்தில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.  அவர் உரையை முடித்ததும் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து கதர் நிதிக்காக தம்மால் இயன்ற தொகையைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். சிலர் தம் கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அன்பளிப்பாக அளித்தனர். எல்லோரும் நிதியளித்து மேடையிலிருந்து இறங்கும் வரைக்கும், கிழிசல் புடவையணிந்த ஒரு மூதாட்டி மேடையின் ஓரமாக காத்திருந்தாள்.

மூதாட்டியைக் கவனித்துவிட்ட காந்தியடிகள் தம் உதவிக்கு நின்றிருந்த தன்னார்வலத் தொண்டரிடம் அவரை மேடைக்கு அழைத்து வருமாறு சொன்னார். மேடைக்கு வந்த பிறகு அம்மூதாட்டி தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த அரையணா நாணயத்தை எடுத்து கதர் நிதிக்கு தன் பங்களிப்பாக அதை ஏற்றுக்கொள்ளும்படி காந்தியடிகளிடம் அளித்தார். அவருடைய வாழ்க்கைப்பின்னணியைப்பற்றி சுருக்கமாக அவரிடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொண்ட காந்தியடிகள் அவரை வணங்கி நன்றி சொல்லி அந்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரவு உணவை முடித்த பிறகு, அன்றைய தினம்  திரட்டிய நிதியை எண்ணிக் கணக்கிடுவதற்காக கணக்காளராகப் பொறுப்பேற்றிருந்த ஜமனாலால் பஜாஜும் நண்பர்களும் கூடினார்கள். மூட்டையாகக் கட்டிவைக்கப்பட்டிருந்த நோட்டுகளையும் நாணயங்களையும் ஆபரணங்களையும் அவர்கள் தனித்தனியாக எண்ணிக் கணக்கிட்டு வரவு வைத்தனர். இறுதியில் ஜமனாலால் காந்தியடிகளிடம் அந்த மூதாட்டி கொடுத்த அரையணாவை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டார். காந்தியடிகளோ அந்த நாணயத்தைக் கொடுக்க மறுத்தபடி புன்னகைத்தார். 

நிதியாகக் கொடுக்கப்பட்ட தொகையை துல்லியமாகக் கணக்கிட்டு ஒப்படைக்கும் குணமுள்ள காந்தியடிகள் நாணயத்தைக் கொடுக்க  மறுப்பதற்கான காரணத்தை ஜமனாலாலால் புரிந்துகொள்ள முடியவில்லை. “அரையணாதானே அது? அதைக் கொடுத்தால் என்ன?” என்று கேட்டார் ஜமனாலால். “உங்கள் கணக்குப்புத்தகத்தில் பதிவுசெய்துவிட்டால், அந்த அரையணாவின் மதிப்பு வெறும் அரையணாதான். ஆனால் அதே அரையணா என் கையிலிருக்கும் வரைக்கும் அதன் மதிப்பு கோடி ரூபாய்க்கும் மேலானது” என்று சொன்னார் காந்தியடிகள். அவருடைய வாதத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் ஜமனாலால் விழித்தார்.

“கதருக்காக நிதி கொடுத்தவர்கள் அனைவரும் தம்மிடம் இருக்கும் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். மூதாட்டியோ தன்னிடம் இருந்த செல்வத்தையே கொடுத்துவிட்டார். அதன் மதிப்பை கணக்கியலில் அமிழ்ந்திருக்கும் விழிகளால் பார்க்கமுடியாது” என்று சொன்னார் காந்தியடிகள்.

ஒரு நாணயத்துக்கு இருவிதமான மதிப்பை முன்வைக்கும் காந்தியடிகளின் பார்வை எனக்கு மிகமுக்கியமாகத் தோன்றியது. அதை இன்னும் சற்றே விரிவாக்கி, எளிய மனிதர்கள் சிற்சில தருணங்களில்  அபூர்வமாகவோ, இயல்பாகவோ நடந்துகொள்ளும் விதத்தையும் மதிப்பிடலாம் என்று தோன்றியது.

ஒருமுறை ஒரு பயணத்தின்போது பொழுதுபோக்காக நான் சந்தித்த பல எளிய மனிதர்களின் சித்திரங்களை மனத்துக்குள்ளேயே அடுக்கித் தொகுத்துக்கொண்டிருந்தேன். அவர்களோடு கழித்த பொழுதுகளை மீண்டும் மனத்துக்குள்ளேயே வாழ்ந்து பார்த்தேன். அவர்களெல்லாம் எத்தனை அபூர்வமான மனிதர்கள் என்ற எண்ணமே அப்போது எழுந்து வந்தது. இந்த வாழ்க்கை இப்படியெல்லாம் அரிய மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருப்பதை நினைத்து  நினைத்து மனம் பொங்கியது.

மாபெரும் சமூக வாழ்க்கைக்குள் அவர்களுடைய இடம் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய புள்ளியாக சுருங்கியதாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என்னும் சின்னஞ்சிறு வட்டத்துக்குள் அவர்களுடைய இடம் சூரியனைப்போல மகத்தானது. அவர்கள் வாழ்க்கையை முன்வைத்து யோசித்தபோது காந்தியடிகளின் மதிப்பீட்டுமுறையின் முக்கியத்துவத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. 

அவர்களைப்பற்றியெல்லாம் எழுதவேண்டும் என பல நேரங்களில் நினைத்துக்கொள்வேன். ஆனால் அப்போதெல்லாம் வேறொரு எழுத்து வேலையில் மூழ்கியிருப்பேன். அதனால், அதை முடித்துவிட்டு இதைத் தொடங்கலாம் என எனக்கு நானே ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு ஒத்திவைப்பேன். ஆனால், என் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஒரு வேளை கூடி வராமல் பல முறை ஒத்திவைத்துக்கொண்டே இருந்தேன்.

என் நண்பர் அக்களூர் இரவி நான் பணியாற்றிய தொலைபேசித் துறையில் வேலை செய்தவர். மொழிபெயர்ப்பில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.  அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த எலிஸா ஃபே என்பவரின் இந்தியப்பயணக் கடிதங்கள் என்னும் அனுபவக்கதை நூல் மிகமுக்கியமானது. பணிநிறைவு பெற்ற பிறகு அவர் முழுக்கமுழுக்க மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

கடந்த ஆண்டில் ஒருநாள் இரவி தொலைபேசியில் என்னை அழைத்தார். ’கிழக்கு டுடே’ இணையதளத்தைப் பார்ப்பதுண்டா என்று கேட்டார். ’தொடர்ந்து படித்து வருவதாகச் சொன்னேன். நான் அதுவரை படித்திராத ஆன்டன் செகாவின் சில சிறுகதைகளை வானதி என்பவரின் மொழிபெயர்ப்பில் அந்த இணையதளத்தில் படித்ததாகவும் சொன்னேன். அந்த இதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு அத்தியாயம் என ஒரு பயணநூலை மொழிபெயர்க்கப் போவதாகவும் விரைவில் முதல் அத்தியாயம் வெளிவரும் என்றும் இரவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உடனே என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தேன்.

மகாராஜாவின் பயணங்கள் என்னும் தலைப்பில் அத்தொடர் அழகான படங்களுடன் வெளிவரத் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும்  அத்தியாயம் வெளிவந்ததும் படித்துவிட்டு இரவியுடன் உரையாடுவதை அப்போது ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன். ஆறுமாத காலம் தொடராக வந்த பிறகு அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் அவரை அழைத்து வாழ்த்து சொன்னேன்.

வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட இரவி நானும் அதேபோல ஒரு தொடரைத் தொடங்கி இணையதளத்தில் எழுதவேண்டும் என்று தன் விருப்பத்தை முன்வைத்தார். தொடர் என்னும் பெரும்பொறுப்பை ஏற்றுக்கொள்ள அக்கணத்தில் என் மனம் தயங்கியது. தொடக்கத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஒத்திவைக்கவே நான் முற்பட்டேன். ஆனால் இரவி என்னுடன் உரையாட நேர்ந்த தருணங்களிலெல்லாம் அந்தத் தொடரைப்பற்றி சலிக்காமல் நினைவூட்டிக்கொண்டே இருந்தார். ஒருநாள் கிழக்கு டுடே ஆசிரியரான நண்பர் மருதனும் தொடரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஒரு வழியாக தொடர் எழுதும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். நீண்ட காலமாக எழுதாமலேயே ஒத்திவைத்த எளியவர்களின் வாழ்க்கைச்சித்திரங்களை முன்வைத்து எழுதுவதற்கு காலம் தானாகவே கனிந்துவந்ததாக நான் நினைத்துக்கொண்டேன். தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று மருதன் கேட்டார். உடனடியாக எதுவும் தோன்றவில்லை. யோசித்து தெரிவிப்பதாகச் சொல்லி உரையாடலை முடித்துக்கொண்டேன்.

அடுத்தநாள் மல்லேஸ்வரத்தில் உள்ள வங்கிக்குச் செல்லும் வேலை இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை செய்த அலுவலகம் அந்தத் தெருவில் இருந்தது. அதை வேடிக்கை பார்த்தபடி தெருவில் நடந்து வந்தேன். ஒரு வரிசையில் குறிப்பிட்ட இடத்தில் ஆறேழு பன்னீர்மரங்கள் நின்றிருந்தன. அடிமரத்தைச் சுற்றி வெள்ளைவெளேரென பன்னீர்ர்பூக்கள்  வட்டமாக விழுந்திருந்த கோலம் அழகாக இருந்தது.

நீண்ட நேரம் அங்கேயே நின்று அந்தப் பூக்களைப் பார்த்தபடி இருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒன்றிரண்டு பூக்கள் நீளமான தொங்கட்டான்போல காற்றில் மிதந்துவந்து தரையில் அமைதியாக விழுந்தன.

ஒரு மரத்தில் பூத்து, தன் அழகைக் காட்டி, காற்றில் அசைந்து குலுங்கி, கடைசியில் அதே மரத்தடியில் விழுந்து மறைந்துவிடும் பூக்கள். பலரும் ஒருகணம் கூட பொருட்படுத்திப் பார்க்காத பூக்கள். அந்த மரத்துக்கு மட்டுமே உரித்தான பூக்கள்.

பன்னீர்ப்பூக்களைப் பார்த்துவிட்டு நடந்துவந்த போதுதான் நான் மட்டுமே அறிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கைச்சித்திரங்களைக் கொண்ட ஒரு தொடருக்கு அதுவே பொருத்தமான தலைப்பு என்று தோன்றியது.  அக்கணமே நண்பர் மருதனுக்கு அந்தத் தலைப்பைக் குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பிவைத்தேன். அதைத் தொடர்ந்து அத்தியாயங்களை அனுப்பினேன்.

வாரத்துக்கு ஒரு அத்தியாயத்தை அனுப்பவேண்டும். ஆனால் சிற்சில சமயங்களில் சில இடர்களால் என்னால் அந்த நியதியைக் கடைபிடிக்க முடியாமல் தாமதமாக அனுப்ப நேர்ந்திருக்கிறது. ஆனால் நண்பர் மருதன் ஒருநாளும் அதைப் பொருட்படுத்தியதில்லை. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்.  எல்லாக் கட்டுரைகளும் இணைந்து இப்படி ஒரு தொகுதியாக வெளிவந்திருக்கும் இத்தருணத்தில் அவரை மிகுந்த அன்போடு நினைத்துக்கொள்கிறேன். அக்களூர் இரவி, மருதன் இருவருக்கும் என் நன்றி.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமே முதல் வாசகியாகப் படித்து வந்தவள் என் மனைவி அமுதா. இந்த மனிதர்களில் ஒரு சிலரை அவளுக்கு நான் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  ஒரு புனைகதையைப்போல தோற்றமளிக்கும் இக்கட்டுரைகளின் கட்டமைப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் ஊக்கமளித்து வரும் அமுதாவுக்கு என் அன்பு. 

என்னுடைய இளம்பருவத்துத் தோழன் பழனியும் இக்கட்டுரைகளை தொடர்ந்து வாசித்துவந்தான். எங்கள் இளமைக்கால அனுபவங்களை மீண்டும் மீண்டும் அசைபோட்டு, அக்காலத்து மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றிய நினைவுகளிலும் உரையாடல்களிலும் திளைத்திருப்பதற்கு இக்கட்டுரைகள் ஏதோ ஒருவகையில் எங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன. அவனுக்கும் என் அன்பு.

இணையதளத்தில் ஒவ்வொரு கட்டுரையும் வெளிவந்த சூட்டோடு உடனுக்குடன் படித்துவிட்டு தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மூத்த எழுத்தாளரும் என் இனிய நண்பருமான விட்டல்ராவ், அக்களூர் இரவி, கே.பி.நாகராஜன், கடலூர் ஜெயஸ்ரீ, வளவ.துரையன், எஸ்ஸார்சி ஆகியோர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இப்போது எல்லா அத்தியாயங்களையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவரும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.

’போக்கிடம்’ நாவல் வெளிவந்த காலத்திலிருந்து விட்டல்ராவின் எழுத்துகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் எப்போதும் அவருக்கு நிலையானதொரு இடமுண்டு. அவர் பெங்களூருக்கு வந்த பிறகு அவரும் நானும் நெருங்கிப் பழகத் தொடங்கினோம். ஓவியம், இலக்கியம், திரைப்படம், வரலாறு என பல துறைகள் சார்ந்த ஆழ்ந்த பயிற்சியும் தேர்ச்சியும் உள்ளவர் அவர். அவருடன் உரையாடுவது மிகச்சிறந்த அனுபவமாகும். தன் வாழ்க்கையில் சந்தித்துப் பழக நேர்ந்த பல எளிய மனிதர்களை முன்வைத்து அவரும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பல்வேறு வாழ்க்கைச்சித்திரங்களின் தொகுப்பாக அமைந்திருக்கும் இத்தொகுதியை விட்டல்ராவ் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.