கேரளத்துக்கு
வருகை தந்த விவேகாநாந்தர் அப்பிரதேசத்தை மனநோயாளிகளின் இல்லம் என்று சொன்னதாகச்
சொல்வதுண்டு. அந்த அளவுக்கு கேரளத்தில் சாதிப் பிரிவினைகளும் தீண்டாமைக்
கொடுமைகளும் கடுமையான அளவில் காணப்பட்டிருந்தன. பிராமணர்களிடமிருந்து நாயர்
பதினாறு அடி துாரமும் ஈழவன் முப்பத்திரண்டு அடி துாரமும் விலகி நிற்க வேண்டும்.
நாயரிடமிருந்து ஈழவன் பதினாறு அடி துாரமும் புலையன் 32 அடி துாரமும்
விலகி நிற்க வேண்டும். ஈழவனிடமிருந்து புலையன் ஆறடி துாரமாவது தள்ளி நிற்க
வேண்டும். உள்ளாடன் என்று அழைக்கப்பட்ட மலைச் சாதியினர் பிராமணன் பார்வையில்
பட்டாலே பிராமணன் அசுத்தமாகி விடுவான். இப்படியெல்லாம் விதிகள் இருந்த காலம் அது.
அத்தகு சூழலில் புலையர்கள் வாழ்வுக்காவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்
அய்யன்காளி. அவருடைய வாழ்க்கை வரலாறு ஒரு புராண பாத்திரத்தின் சாகச வரலாற்றுக்கு
நிகராக விளங்குகிறது. அவர் வீரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிப்புணர்வையும் முழு
வீச்சுடன் உள்வாங்கி நம் மனத்தை நிறைத்துக் கொள்ளும் விதமாக இந்த நுாலை
உருவாக்கியுள்ளார் நிர்மால்யா.