வாழ்க்கையில் நமக்குள்ள விருப்பங்கள் ஏராளம். நம் எல்லா விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று
உண்மையிலேயே நாம் ஆசைப்படுகிறோம். விருப்பங்கள்
நிறைவேறுவதால் உண்டாகும் மகிழ்ச்சியும் மனநிறைவும் முக்கியம் என்பது நம் எண்ணம். மகிழ்ச்சியால் நம் மனத்தை நிறைவு செய்வது ஓர் இலக்காக
இருந்து நம்மை இயக்குகிறது. இலக்கை அடைந்துவிட்ட
நிலையில் நம் ஆனந்தத்துக்குக் குறைவெதுவுமில்லை.
ஏதோ சிற்சில காரணங்களால் இலக்குப் புள்ளியை அடையமுடியாமல் போனால், அது வழங்கும்
துயரம் நம்மைச் சிதைத்துத் தூள்தூளாக்கிவிடுகிறது. வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒவ்வொன்றையும் அனுபவமாக
எதிர்கொள்ளாமல் மகிழ்ச்சி தரக்கூடிய விளைவுகள் என்றும் மகிழ்ச்சியைத் தராத விளைவுகள்
என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம். மகிழ்ச்சியின் பின்னால் செல்லும் பயணமாக வாழ்க்கை சுருங்கிவிடுகிறது.