Home

Showing posts with label கரையும் உருவங்கள். Show all posts
Showing posts with label கரையும் உருவங்கள். Show all posts

Sunday, 25 December 2022

வண்ணநிலவன் : காலத்தைத் தெய்வமாக்கும் கலைஞன்

 

வண்ணநிலவனின் கதைகளைப்பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய  முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு வந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்து தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக்கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப்படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.