பூமிக்குக் கீழே உள்ளதாக நாம் நம்பும் ஏழு உலகங்களில் ஒன்று பாதாளம். அந்தப் பாதாளத்தில் இரக்கம் இல்லை. கருணை இல்லை. யாரோடும் ஒட்டுதலோ உறவோ இல்லை. யாரும் அங்கே மனிதர்களே இல்லை. மனித உருவில் விலங்குகளே வாழ்கின்றன. ஒவ்வொருவரும் அடுத்தவரின் உயிரையே உண்ணுபவர்கள். வக்கிரம் கொண்டவர்கள். நம்மிடையில் உலவும் பாதாளத்தைப்பற்றிய கற்பனைகள் இப்படித்தான் உள்ளன. ஆனால், உண்மையில் பாதாளம் பூமிக்கு அடியில் இல்லை. பூமியின் மேற்புறத்திலேயே உள்ளது. கருணையும் இரக்கமும் இல்லாத இடமெல்லாம் பாதாளமே. மக்களின் மதிப்பைப் பெறமுடியாமல் ஒதுங்கியிருக்கும் இடமனைத்தும் பாதாளமே. பாதாளம் இல்லாத ஊரே இல்லை.