1914ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏறத்தாழ பதினைந்து லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்களில் 74000 பேர் மரணமடைந்தனர். மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள, இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சியை வழங்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டது. அதற்காக தலைமைச்செயலாளர் மாண்டேகுவும் வைசிராயான செம்ஸ்போர்டும் இணைந்து சுதந்திரப்போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹோலி ஹட்சின்சன், வில்லியம் டியூக், சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி 1917இல் அறிக்கையொன்றைத் தயாரித்து ஒப்புதலுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சியை வலியுறுத்தும் அந்த அறிக்கையை காந்தியடிகளும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.