குறுந்தொகையைப்பற்றி நானும்
நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து
ஆளுக்கு சில வரிகளை நினைவிலிருந்து சொல்ல முயற்சி செய்வதில் வந்து முடிந்தது. கணநேர
யோசனைக்குப் பிறகு கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே, கன்றும் உண்ணாது கலத்திலும் படாது,
கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் என நண்பர் வேகவேகமாக ஒரு பத்து வரிகளைச்
சொன்னார். என் பங்குக்கு நானும் சிறுகோட்டுப் பெரும்பழம், செம்புலப்பெயல்நீர், யாருமில்லை
தானே கள்வன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியல், நோக்கிநோக்கி வாள்
இழந்தனவே என சில வரிகளை முன்வைத்தேன். அப்படிச் சொல்ல முடிந்ததில் இருவரும் மகிழ்ச்சியுற்றோம்.
படித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி அந்த வரிகள் மனத்தில் தங்கியிருக்கின்றன
என்றொரு கேள்வி எழுந்தது. சொற்கள் அடுக்கப்பட்டிருந்த முறையும் சொன்ன விதமுமே மிகமுக்கியக்
காரணங்கள் என்பதை அக்கணத்தில் கண்டடைந்தோம்.