தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழிலக்கியச் சூழலில் தலித் இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. அதைப்பற்றிய உரையாடல்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன. 1991இல் கோமல் சுவாமிநாதனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான சுபமங்களா பல எழுத்தாளர்களுடைய விரிவான நேர்காணல்களைப் பிரசுரித்தது. எழுத்தாளர்களை ஒரு கருத்தியல் தரப்பாக தமிழ்ச்சூழலில் அந்த நேர்காணல்கள் முன்னிறுத்தின. வாசிப்புப்பழக்கம், எழுத்துக்கான களத்தேர்வு, மொழியின் பயன்பாடு, இளமைக்கால வாழ்க்கை, பிடித்த படைப்புகள், பிடித்த ஆளுமைகள் சார்ந்து ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்கப்பட்ட கேள்விப்பட்டியல் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தலித் இலக்கியம் பற்றிய ஒரு கேள்வி மட்டும் அந்த நேர்காணல்களில் பொதுவாக இருந்தது. தலித் இலக்கியம் பற்றிய எழுத்தாளர்களின் எண்ணங்களைத் தொகுத்தளிப்பதன் வழியாக அதைப்பற்றிய வரையறையை செழுமைப்படுத்த முடியும் என்று கோமல் நம்பினார். மராட்டிய மொழியில் தலித் இலக்கியம், கன்னட மொழியில் தலித் இலக்கியம் போன்ற கட்டுரைகளை, அம்மொழியுடன் தொடர்புடைய நண்பர்கள் வழியாகப் பெற்று அவ்வப்போது சுபமங்களாவில் வெளியிட்டார். நாளடைவில் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியது.