ஒரு விடுமுறை நாளில் பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். செவ்வக வடிவில் பூங்காவைச் சுற்றி நடையாளர்களுக்காகவென ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையொன்றிருந்தது. மழைக்காலத்தில் அடிக்கடி நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறும்போது பாதையில் யாராலும் நடக்கமுடிவதில்லை. ஏராளமான பேர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுண்டு. திரும்பிச் சென்ற யாரோ ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அன்று பாதை சீர்ப்படுத்தப்பட்டு சதுரக்கற்கள் பதிக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. தொழிலாளர்களின் குழந்தைகள் அருகில் கொட்டப்பட்டிருந்த மணல்குவியலில் விளையாடிக்கொண்டிருந்தன.