கர்நாடகத்தின்
ஹோஸ்பெட் அழகான ஊர். தண்ணீருக்குப் பஞ்சமில்லாத ஊர். எங்கெங்கும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும்.
தோப்புகளும் நிறைந்திருக்கும். துங்கபத்திரை
அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் ஊர் எல்லையிலேயே இருபெரும் பிரிவுகளாக
இரு திசைகளில் சுழித்தோடும். பெரிய கால்வாயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சின்னஞ்சிறு
கால்வாய்கள் உடல்நரம்புகளென ஊரெங்கும் புகுந்தோடி எங்கோ ஒரு புள்ளியில் மீண்டும் பெரிய
கால்வாயோடு இணைந்துவிடும்படி கட்டமைக்கப்பட்டிருந்தன. நகரமக்களின் நீர்த்தேவையை அந்தச்
சிறுகால்வாய்கள் தீர்த்துவைத்தன. குளிக்க, துணிதுவைக்க, கால்நடைகளை நீராட்ட என எல்லாத்
திசைகளிலும் தனித்தனி துறைகள் உண்டு. அவை மேலும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்தோடி
வயல்வெளிகளுக்கும் தோப்புக்கும் பாய்ந்து செல்லும். கால்வாய் ஓரமாக அமைதி தவழும் ஓரிடத்தில்
நாங்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தோம்.