தனித்துத் திரியும் காலத்தின் வெவ்வேறு கோலங்களை கவிதைச் சித்திரங்களாக இத்தொகுதியில் வடித்திருக்கிறார் மலர்ச்செல்வன். தனித்துத்திரிதல் என்னும் சொல்லே கவித்துவம் நிறைந்ததாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிற சூழலில் உலகத்திலிருந்து விலகி தனித்துத் திரியும் விருப்பம் ஒருவனுடைய மனத்தில் எப்படி முளைவிடுகிறது என்பது முக்கியமான கேள்வி. சுற்றியிருக்கிற உலகத்திலிருந்து அவனால் வாழும் விருப்பத்தையோ அன்பையோ பெறமுடியாமல் போனது ஏன் என்பதும் முக்கியமான கேள்வி. மறுகணம் உயிர்த்திருப்போமா என்பதே உறுதியாகத் தெரியாத இன்றைய இலங்கைச்சூழல் நம்பிக்கைக்குப் பதிலாக பீதியையும், வேகத்துக்குப் பதிலாக விரக்தியையும் மனத்தில் கவியவைத்துவிட்டன. ஒரே ஒரு மணிநேரம் கூட நிம்மதியாக உறங்கமுடியாததாக மாறிவிடுகிறது இரவு. பீதியிலிருந்தும் விரக்தியிலிருந்தும் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்ள தங்குமிடத்திலிருந்து கிளம்பித் திரிய வேண்டியிருக்கிறது. திரியும் தருணத்தில் குலைந்துபோய் கண்ணில் படும் காட்சிகள் பழைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றன. மரணக்காட்சிகளும் மரணச்செய்திகளும் நிலைகுலையவைக்கின்றன. தனித்துத் திரிவது தாங்கமுடியாத பதற்றத்தைத் தரத்தொடங்கியதும் அறையை நாடி ஓடிவருகிறது மனம். அறையின் தனிமை அதைவிட கூடுதலான பதற்றத்தைத் தரும்போது வெட்டவெளியையே தன் உலகாகக் கொண்டு தனித்தலைய மீண்டும் ஓடுகிறது. நிலைகொள்ளமுடியாத இக்கொடுமையை தொடர்ச்சியாக சந்தித்துவரும் மனம் தீட்டிய சித்திரங்களே இக்கவிதைகள். மரணம் மையமாக உள்ள ஒரு பொதுஉண்மை. அதை வாழ்வின் வட்டப்பாதையின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் தம் கோணத்தில் தரிசிக்கின்றன மலர்ச்செல்வனின் கவிதைகள்.