தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர்கள் என்னும் முதன்மைத்தலைப்பும் இலக்கியம், இதழ்கள், பதிப்பகம் என வழங்கப்பட்டிருந்த துணைத்தலைப்பும்தான் இப்புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தூண்டின. பொருளடக்கத்தில் முப்பத்தொன்று தமிழ்ச்சான்றோர்களின் பட்டியல் காணப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், புதுமைப்பித்தன், கல்கி போன்றோர் அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்பட்டியலின் இடையிடையே காணப்பட்ட ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், பேராசிரியர் பி.என்.சீனிவாசாச்சாரியார், இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, மோசூர் கந்தசாமி முதலியார், அரிராம் சேட், அப்பா நா.அருணாசலம், மேகலிங்கம் சுப்பிரமணியன் போன்ற பெயர்கள் அனைத்தும் இதுவரை அறியாத பெயர்களாக இருந்தன. அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே ஒரே மூச்சில் இப்புத்தகத்தைப் படித்துமுடித்தேன்.