Home

Showing posts with label தானே புயல். Show all posts
Showing posts with label தானே புயல். Show all posts

Thursday, 1 January 2015

காற்றின் தாண்டவம்


தானே புயல் வீசிய நாளில் நான் புதுச்சேரியில் இருந்தேன். அது வீசப் போகிறது எனத் தெரியாமலேயே, அதற்கு முதல்நாள் மாலையில் சிலுசிலுவென்று வீசிய காற்று உடலைத் தழுவியபடி இருக்க வழக்கமான நடைப்பயிற்சிக்காக மூலகுளத்திலிருந்து பெரம்பையைநோக்கிச் செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தேன். வழிநெடுக ஏராளமான முருங்கைமரங்களும் வேப்பமரங்களும் பூவரசமரங்களும் நின்றிருந்தன. தாறுமாறாக கைகளை வீசி நடனமாடும் பெண்ணைப்போல காற்றின் வேகத்தில் மரக்கிளைகள் வளைந்துவளைந்து ஆடின. என்னைத் தொடர்ந்து குயிலோசை வருகிறதா அல்லது குயிலோசையைத் தொடர்ந்து நான் செல்கிறேனா எனப் பிரித்தறியமுடியாதபடி வழிமுழுதும் அந்த ஓசையைக் கேட்டு மனத்தை நிரப்பியபடி நடந்தேன்.
திரும்பும்போது ஐந்து அல்லது ஐந்தரை மணிதான் இருக்கும். ஆனால், அச்சமயத்தில் ஊரே இருளில் மூழ்குவதை ஆச்சரியத்தோடு கவனித்தேன். ஒருநாளும் பார்த்திராத அதிசயம். வேகமாக ஓடோடி வந்த ஒரு சிறுமி பளிச்சென்றிருந்த ஒரு வெள்ளைத்தாளில் கருப்புவண்ணத்தை எடுத்து பூசிவிட்டதுபோல வானம் ஒரே கணத்தில் மாறிவிட்டது தெரு. இரவு எட்டு ஒன்பதுமணிபோல ஊரே இருண்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, ம்ம் என்று ஒரு மேளத்தில் இழுப்பதுபோல காற்றின் ஒலி மாறியது. மறுகணமே அந்த ஓசை, சாமியாடும் பெண்கள் கூந்தலவிழ கண்கள் நிலைகுத்தியிருக்க நாக்கைக் கடித்தபடி ம்ம் என உறுமுவதுபோல மாற்றமுற்றது. பிறகு, கட்டுகளை அறுத்துக்கொள்ள தன் சக்தியையெல்லாம் திரட்டித் திமிறும் காளையின் சத்தமாக வீறுகொண்டெழுந்தது.  அதைத் தொடர்ந்து, எட்டுத்திசையிலும் பார்வையைச் சுழலவிட்டு, வெறிகொண்டு அலையும் ஒரு வனமிருகத்தின் சீற்றம் மிகுந்த குரலாக எதிரொலித்தது.
வானத்தில் கூட்டம்கூட்டமாகச் செல்கிற யானைகளைப்போலவும் கரிய நிறக்குதிரைகளைப்போலவும் அடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்த மேகங்களைப் பார்த்த பரவசத்தில் வாசலிலேயே நிற்க ஆசையாக இருந்தது. ஆனால் நிற்கவே முடியாதபடி காற்றி தள்ளியது. ஒரு காகிதப்பந்தைப்போல அது என்னை கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும்போல இருந்தது. அக்கணத்தில் எதிர்பாராமல் மழை தொடங்கியது. முதலில் சில கணங்கள் ஊசித் தூறலாகவே இருந்தது மழை. வேடிக்கையாக கையை நீட்டி உள்ளங்கையைக் குழித்து, மழை உதிர்த்த முத்துகளை ஏந்தினேன். கைக்குழி நிரம்புவதற்குள் மழை வலுத்துவிட்டது. சடசடவென எய்யப்பட்ட ஈட்டிகளைப்போல ஒவ்வொரு தாரையும் பாய்ந்து இறங்கியது. அதன் வலிமையும் அழுத்தமும் நம்பமுடியாதபடி இருந்தன. கூர்மையான வெட்டுக்கத்திபோல உடலைத் தாக்கியது மழை. அவசரமாக படியேறி வீட்டுக்குள் செல்வதற்குள் உடல்முழுதும் நனைந்துவிட்டது. உடலைத் துவட்டிக்கொண்டு உடைமாற்றிக்கொண்டு ஜன்னலருகே வந்து வேடிக்கை பார்ப்பதற்காக நின்றேன்.