Home

Showing posts with label திசைகளின் நடுவே. Show all posts
Showing posts with label திசைகளின் நடுவே. Show all posts

Sunday, 6 November 2022

ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்

  

மூடியிருக்கும் பெட்டியென மனத்தை உருவகித்துக்கொண்டால், அப்பெட்டிக்குள் என்ன இருக்குமென ஒருவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆபரணங்கள் நிறைந்திருக்கலாம். அல்லது ஆடைகளாகவும் இருக்கலாம். கூழாங்கற்கள்  மணல்கட்டிகள், கரித்துண்டுகள், கொலைக்கருவிகள் என ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். பாம்புக்கூடைகள், பூந்தொட்டிகள், அமுதம், நஞ்சு என எதுவும் இருக்கலாம். எல்லாச் சாத்தியங்களும் உண்டு. எதையும் முழுக்க ஏற்கவும் இயலாது. நிராகரிக்கவும் இயலாது. மனித இயல்பே ஏற்கவும் இயலாத, நிராகரிக்கவும் இயலாத கலவையாக இருக்கும் சூழலில் மனமும் அப்படித்தானே இருக்கமுடியும். மனம் என்பது எது என்னும் புதிரான ஒற்றைக் கேள்விக்கு எதார்த்த வாழ்வில் ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் கலைஞனால் அப்படி எளிதாக நகர்ந்துவிட முடிவதில்லை. அவன் தன் கலையின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைத்தருணங்களை அலசி ஆராய்ந்து ஆயிரம் பதில்களைக் கண்டறிகிறான்.