ஒரு குறுந்தொகைப்பாட்டு நினைவுக்கு வருகிறது.
கடற்கரையோரத்தில் இரவு நேரத்தில் ஒரு புன்னைமரத்தடியில் இளம்பெண்ணொருத்தி நின்றிருக்கிறாள்.
அவள் கண்கள் அவ்விடத்துக்கு வந்து சேரும் பாதையில் படிந்திருக்கின்றன. காதலனைக் காண
அவள் நெஞ்சம் துடித்தபடி இருக்கிறது. அவன் வராததால் உருவாகும் ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே
முடியவில்லை. இதோ இந்த நொடி, இதோ இந்த நொடி என அவள் ஒவ்வொரு நொடியிலும் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளும்
எதிர்பார்ப்பு அலைபட்ட மணலென கரைந்துபோகிறது. தன்னிச்சையாக அவள் விழிகளில் கண்ணீர்
திரண்டு வழிகிறது. புன்னைமரத்தில் சாய்ந்தபடி கலங்கியழும் கோலத்துடன் அவள் நின்றிருக்கும்
காட்சியை இரண்டு மூன்று வரிகளில் சித்தரித்துவிடுகிறது அப்பாடல்.
