நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பாரதி மணி அவர்கள் நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தில்லிக்குச் சென்று பணிபுரிந்தவர். தன் திறமையால் நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று, மெல்லமெல்ல தன்னை ஒரு முக்கிய ஆளுமையாக வளர்த்துக்கொண்டவர். புதியவர்களானாலும் பழகியவர்களானாலும் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடம்தராமல், நம்பிக்கையோடும் அன்போடும் தாராளமாக ஒட்டி உறவாடி நட்பை உருவாக்கிப் பழகுவதிலும் அன்பைப் பொழிவதிலும் தலைசிறந்தவர். அந்த அன்புக்காக மற்றவர்களுக்காக அவரும் அவருக்காக மற்றவர்களும் எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அபூர்வமான அன்பின் ஆளுமையால் கட்டுண்ட ஒன்றாகவே அவருடைய வாழ்வு இன்றுவரை அமைந்திருக்கிறது.