என் கையில் அபிஷேகக்கூடை இருந்தது. கடையிலிருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித்திருப்பி ரசித்துக்கொண்டிருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வரும்போதெல்லாம் பொம்மைக்கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலைகேட்பாள். பிறகு ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ, அதெல்லாம் வேணாம், வா” என்று வேகமாக தலையாட்டி மறுத்துவிடுவாள். ”இதுக்கெல்லாம் செலவாச்சின்னு கணக்கெழுதனேன்னு வை, ஒங்கண்ணன் அப்படியே உரிச்சி தொங்கபோட்டுட்டுதான் மறுவேல பாப்பாரு” என்று சொல்லும்போது பதற்றத்தில் அவள் தலை இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடும்.