Home

Showing posts with label புதுச்சேர. Show all posts
Showing posts with label புதுச்சேர. Show all posts

Monday, 2 November 2020

மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)

 


பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு எழுதியவை. பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் அவருடைய படைப்பாளி என்கிற முகத்தை அறிய உதவுகின்றன. அவருடைய கடிதங்கள் பாரதியார் என்கிற மனிதரைப்பற்றி அறிய உதவுகின்றன. எல்லா மனிதர்களுக்கும் இருப்பதுபோலவே அவருள்ளும் ஏராளமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. எதிர்பார்த்தது கிட்டாத தருணங்களில் மற்றவர்கள் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய சலிப்பும் கசப்பும் தோல்வியுணர்வும் கிஞ்சித்தும் அவரிடம் இல்லை. வாழ்வின் எக்கணத்திலும் கனிவையும் கனவையும் கைவிடாத அபூர்வ மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். சங்கடங்களும் தோல்விகளும் நிறைந்ததாகவே சொந்த வாழ்க்கை அமைந்துபோனாலும் அவற்றால் ஆக்கிரமிக்கப்படமுடியாத ஓர் ஆளுமையாக உயர்ந்து காணப்படுகிறார். 39 வயதுமட்டுமே வாழ்ந்த ஒருவரிடம் வெளிப்பட்டுள்ள இப்பண்புகள் மிகமுக்கியமானவை. கனிவு என்பதை வாழ்வின் சாரமாக புரிந்துகொண்டு வெளிப்படுத்திய அவரை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. இக்கடிதங்களின் தொகுப்புநூல் அதற்குத் துணையாக இருக்கிறது.