”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும் பானைய தூக்கி இடுப்புல வச்சிகினு ஊட்டுக்கு நடந்து வந்துகினே இருந்தன். ஏரியத் தாண்டி, தோப்பத் தாண்டி, கருமாதி கொட்டாயயும் தாண்டி நடந்துவந்துட்டன். கால்வாய் பக்கமா திரும்பி நடந்துவர சமயத்துல எதுத்தாப்புல திடீர்னு ரெண்டு கோழிங்க ஓடியாந்துதுங்க. கெக்கெக்கேனு ஒன்ன ஒன்னு துரத்திகினு என் கால் மேல மோதறமாதிரி வந்துட்டுதுங்க. எங்க மோதிடப் போவுதுங்கன்னு பீச்சாங்கை பக்கமா கால தூக்கி வச்சி நவுந்த நேரத்துல எப்படியோ கால் சறுக்கி கீழ உழுந்துட்டன். உழுந்த வேகத்துல இடுப்புல இருந்த பானை கால்வாய்க்கரை ஓரமா கெடந்த கல்லுல மோதி துண்டுதுண்டா ஒடைஞ்சிட்டுது. கண்ண மூடி கண்ண தெறக்கற நேரத்துல எல்லாமே நடந்துட்டுது. நாலு பக்கமும் மீனுங்க தரையில துள்ளித் துள்ளி துடிக்குதுங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. சட்டுனு சுதாரிச்சிகினு எழுந்து எல்லா மீனயும் புடிச்சி புடிச்சி பொழச்சிக்கோ போ பொழச்சிக்கோ போன்னு ஒன்னொன்னா கால்வாய்க்குள்ள வீசினேன். கனவுன்னு தெரியாம கொஞ்சம் சத்தமாவே போபோன்னு சொல்லிட்டேன்போல. பசங்க ரெண்டும் உலுக்கி எழுப்பன பிறகுதான் கண்ண தெறந்து பார்த்தன். அப்புறம்தான் நடந்ததெல்லாம் கனவுன்னு எனக்கே தெரிஞ்சது. பசங்கதான் பயத்துல என்னம்மா என்னம்மான்னு கேட்டுகினே கெடந்துதுங்க. நல்ல கனவோ கெட்ட கனவோ தெரியலை. வெடியற நேரத்துல வந்தது. காலையிலேந்து அதயே நெனச்சி பயந்துகிட்டு கெடக்கறேன்”