தொட்டிப்பாட்டையில் பிணம் அறுக்கிற ஆஸ்பத்திரியைத்தாண்டி முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் செல்லம்மா ஆயாவின் குடிசை. ஒன்பது பிள்ளை பெற்றும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் போன மகாராணி கதைதான் ஆயாவின் கதையும். ஆயாவுக்கு ஆறு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சுற்று வட்டாரத்தில் உள்ள பதினெட்டு கிராமங்களுக்குள்ளேயே எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தார்கள். மனசு வைத்தால் பட்டத்து ராணி மாதிரி ஆயாவை உட்காரவைத்துச் சோறு போட முடியும். என்னமோ எல்லோருக்கும் ஒரு உதாசீனம். ஒரு அலட்சியம். ஒண்டிக்கட்டை ஜீவனம்தான் தனக்கு லபித்தது என்று ஆயாவும் அடங்கிக்கிடந்தாள். பிள்ளைகள்பற்றி யாராச்சும் பிரஸ்தாபித்தால் கூட ‘என்னமோ உடுங்கம்மா. மாரியாத்த புண்ணியத்துல எல்லோரும் சௌக்கியமா இருந்தா சரிதான். ஏதோ எங்கட்ட இருக்கிற வரிக்கும் இந்தத் தோட்டம் சோறு போடும்’ என்றாள்.