பள்ளியிறுதி
நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் ஒருவித வேடிக்கையுணர்வும் ஆச்சரியமும்
படர்ந்து மலைக்கவைத்துவிடும். ஆளை வெளியே தள்ளுகிற மலைப்பு அல்ல அது. உத்வேகமூட்டி
தன்னைநோக்கி ஈர்த்துக்கொள்கிற மலைப்பு. ஒருவகையில் காந்தம்போல. இன்னொருவகையில் விதவிதமாக
கதைகளை விதவிதமான கோணங்களில் புனைந்து சொல்கிற ஒரு மூதாட்டியைப்போல. குறுந்தொகையின்
பாடல்களை அப்போது பாதியளவில்கூட உள்வாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது. ஆனாலும் மூதாட்டியின்
கைவிரல்களைப்போல அந்த வரிகள் மனத்தைத் தொட்டு வருடிக்கொண்டே இருப்பதில் ஒருவித மகிழ்ச்சியும்
பரவசமும் கிட்டின.