Home

Showing posts with label மதார். Show all posts
Showing posts with label மதார். Show all posts

Monday, 29 March 2021

புன்னகையின் தரிசனம் - கட்டுரை

 

துறவிகளுக்கென ஒரு நெறி உண்டு. அவர்கள் தம் பயணத்தில் அடுத்த வேளைக்கென எதையும் சேமித்துக்கொண்டு சுமந்து செல்வதில்லை. கிட்டுமோ கிடைக்காதோ என நினைத்து அச்சம் கொள்வதுமில்லை. அந்தந்த வேளையில் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்குரிய உணவு. அதற்கு சற்றும் குறைவில்லாத நெறிகளைக் கொண்டவர்கள் கவிஞர்கள். அவர்களும் தம் எழுத்துப் பயணத்தில் எதையும் சுமந்துகொண்டு செல்வதில்லை. தம் கண்ணில் தென்படும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகப் பார்க்கமுடிகிறது. அவர்கள் காதில் விழும் ஒவ்வொரு ஓசைத்துணுக்கிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகக் கேட்கமுடிகிறது. அந்தத் தரிசனங்களே அவர்களுடைய ஆக்கங்கள். காற்றைப்போல, வெளிச்சத்தைப்போல அவர்கள் அத்தரிசனங்களை உணர்ந்துகொள்கிறார்கள். அந்தத் தரிசனம்  என்பது பயிற்சியின் வழியாக அடையும் வெறும் திறமையல்ல. அது அவர்களிடம் தானாகவே நிகழ்கிறது. அப்படி தானாக நிகழும் வகையில் ஏதோ ஒன்று அவர்களுடைய ஆளுமையில் படிந்துள்ளது. அந்த ஆளுமையைக் கொண்டிருப்பதால்தான் அவர்கள் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள்.