ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சலை என்றொரு நாவல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எழுதியவர் கண்மணி குணசேகரன். அஞ்சலை என்னும் இளம்பெண்ணை அவளுடைய அக்காள் கணவனே இரண்டாம்தாரமாக மணந்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அஞ்சலையின் தாயாருக்கு அதில் உடன்பாடில்லை. அவளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு புதிய இடத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க அழைத்து வருகிறான் மருமகன். திருமணத்துக்குத் தேதி குறித்துவிடுகிறார்கள். மணமேடையில் அமரும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகன், பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை என தனக்குச் சுட்டிக் காட்டப்பட்ட ஆளல்ல என்பதை அவள் உணர்கிறாள். அண்ணன் கட்டழகன். ஏற்கனவே திருமணமானவன். அவனைக் காட்டி நம்பவைத்து நோஞ்சானான தம்பிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த இல்வாழ்க்கையில் அவள் எப்படி சிக்கிச் சீரழிந்தாள் என்பதுதான் நாவலின் களம். இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நாவல்வரிசையில் அஞ்சலையும் ஒன்றாக இருக்கிறது.